கடல்வழி வணிகம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

கடல்வழி வணிகம்

வெங்கட் சாமிநாதன்

பா.ஜெயக்குமாரின் தமிழகத் துறைமுகங்கள், முனைவர் ப.சண்முகத்தின் சங்க கால காசு இயல், தமிழ் நாட்டு வரலாற்றுக் குழுவினரின் தமிழ் நாட்டு தொல் பழங்கால வரலாறு போன்ற புத்தகங்கள் முன்னர் வணிக, கல்வி நிறுவனங்களால் வெளியிடப்பட்டனவே ஆனாலும், இத் தகவல் கூட பரவலான பொதுப் பார்வைக்கு வந்துள்ள கடல் வழி வணிகம் புத்தகம் மூலமே நமக்குத் தெரிய வருகிறது. நரசய்யாவின் இப்புத்தகத்தைப் படிக்கும்போது அவர் மேற்சொன்ன புத்தகங்களிலிருந்து தான் பெற்ற தகவல்களைச் சொல்லும்போது, அப்புத்தகங்களும் கூட, கவனிக்கப்படாவிட்டாலும், தமிழின் பல்துறை அறிவார்த்த விஸ்தரிப்பிற்கு நல்ல வரவுகள் என்று தான் சொல்லவேண்டும். அவற்றையும், அவை போன்ற, சரித்திரம், இலக்கியம், கல்வெட்டு, நாணயவியல், தொல்பொருள் ஆய்வு, அகழ்வாராய்வு என்று பல துறைகளிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள அத்தனையையும் உள்ளடக்கியது நரசய்யாவின் இப்புத்தகம். இதை ஏதோ தகவல் தொகுப்பு என்று இப்போது சொன்னதைப் புரிந்து கொண்டால்,அது பெரும் பிழையாகும். holistic ஆங்கிலத்தில் சொல்வார்கள், எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒருமையும் முழுமையும் கொண்ட இன்னொரு பார்வை என்று சொல்லவேண்டும். இதில், நரசய்யாவின் வாழ்வும், ஆளுமையும் உள்ளடங்கியது என்பது முக்கியமும் விசேஷமுமானது, ஏனெனில், இந்த holistic பார்வையைத் தந்துள்ளது, அவரது வாழ்வும், ஆளுமையும் தான். கடற் படைப் பொறியாளராகவும், மாலுமியாகவும் பணிபுரிந்தவர், பங்களாதேஷ் போரிலும் தன் கடமையாற்றி, பின் துறைமுகங்களைப் பற்றிய ஆராய்வு எல்லாம் இது சார்ந்த பல துறைகளைப் பற்றிய புத்தகங்களையும் ஆராய்வுகளையும் தன் இயல்பில் தன் சுயமாகத் தேர்ந்த அக்கறையிலும் தேடல் தாகத்திலும் சேர்ந்தவையெல்லாம், இப்புத்தகமாக வடிவெடுத்துள்ளன. நான் மிக விசேஷமாகக் குறிப்பிட விரும்புவது, இயல்பான அக்கறைகள், இயல்பாக வளர்ந்த ஆளுமை, தன்னிச்சையாகப் பிறந்த தேடல், எல்லாம் ஆளுமையின் அனுபவத்தின் வழி விளைபவை. அத்தகைய ஆளுமையிடமிருந்துதான் முதலில், நாற்பது வருடங்களுக்கு முன் கடலோடி வந்திருக்கமுடியும்.


ஆசிரியர் கூற்றுப்படி, 'முன்னரே வெளிவந்துள்ள சிறந்த நூலகளிலிருந்து முக்கியமான பகுதிகளைத் தொகுத்து எளிமையான முறையில் தமிழில் சாதாரண மக்கள் படிப்பதற்குத் தக்கவாறு அளிப்பதும், 'தொடர்ந்து அகழ்வாராய்வு, சாசனங்கள் மற்றும் மண்பாண்டச் சான்றுகளுடனும், நணயவியல் குறிப்புகளுடனும், அப்போதிருந்த வணிக முறைகள், செயல்பட்டு வந்துள்ள வணிகக் குழுக்கள் ஆகிய சான்றுகளுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது" Periplus of the Erythrean Sea, Plini, Xinru Liu, என்றெல்லாம் தொடங்கி, வின்செண்ட் ஸ்மித், நொபொரு கரஷிமா டெலோச் போன்றோரை யெல்லாம் கடந்து, நீலகண்ட சாஸ்த்ரி, நாகசாமி, ஜெயகுமார் என்று சுமார் 50 மூலாசிரியர்கள், நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கம் முழுதையும் ஒரு வாசிப்பில் உள்வாங்கிக்கொள்ள முடியும், ஜீரணித்து விட முடியும் என்பது என்னால் ஆகாதது. அதை இங்கு எடுத்துரைப்பது, சுருக்கமாகவேணும் என்பதும், நரசய்யாவுக்கு நியாயம் செய்யும் முறையில் என்பது என்னால் ஆகாது. ஆக, ஒவ்வொரு அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதை ஒரிரு வாக்கியங்களில் சொல்வது தான் சாத்தியம். படிக்கும் ஆவலைத் தூண்ட அது போதும். அத்தோடு ஆங்காங்கே எனக்கு மிகவும் புதியதாக, ஆசிரியர் நமக்குத் தரும் முழுச்சித்திரத்தின் ஒரு சுவாரஸ்யமான காட்சியாக, செய்தியாக, அந்த ஒன்றே சற்றே திறக்கும் ஒரு ஜன்னல் கதவாக, நுழைவாயிலாக இருக்கும் சாத்தியத்தை நம்புவதால் அவற்றையும் சொல்லிச் செல்வேன்.

-மே.2006


முனைவர் தே. கலியாணசுந்தரம்.


"மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம்" என்ற மகா கவியின் வரியோடு "கடல்வழி வணிகம்" என்ற இந்த நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர் நரசய்யா. இது இரண்டு பாகமாக அமைந்துள்ளது.


முதல் பாகத்தில் நான்கு அத்தியாயங்கள் தமிழகத்தில் சங்க காலத்திலும், இடைக்காலத்திலும் நிகழ்ந்த கடற்பயணங்கள், கடல் வணிகங்கள் பற்றிச் சிறப்பாகவும், இந்திய தீபகற்ப முழுமை நிலையில் அவை பற்றிப் பொதுவாகவும் விளக்குகின்றன. அடுத்து வரும் ஐந்து அத்தியாயங்களும் ஐரோப்பியர் வருகையாலும், ஆட்டியாலும் நம் நாட்டுக் கப்பற்கலை, கடல்வணிக நிலை ஆகியவை அடைந்த பாதிப்புக்களைத் தெளிவாகப் பேசுகின்றன.


இரண்டாம் பாகம் நம்நாட்டுத் துறைமுகங்கள் ஒவ்வொன்று பற்றியும் கூறும் விளக்க அறிக்கைகளாகவும் நவீன கடற்படையின் விவரணங்களாகவும் 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.


மேற்சொன்ன செய்திகளெல்லாம் வரிசையாக, முறையாக தொகுக்கப் பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் இந்தியக் கடற்படையில் பல ஆண்டுகள் பணி செய்தவர்; கப்பல் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்; வணிகக் கப்பல்களிலும் பணியாற்றியவர்; தன் கப்பல் பயணங்களின் போது உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் சென்று அனுபவம் பெற்றவர்.. இந்நத் தகுதிகளின் அடிப்படையில் இவர் எழுதியது இந்த நூல்.


இந்த நூலின் நடை எளிமையாகவும் புரிந்து சுவைக்கத் தக்கதாகவும் அமைந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.


"உலகில் எல்லாச் சமுத்திரங்களையும்விட, மத்திய தரைக்கடலும் செங்கடலுந்தாம் சரித்திரத்தில் குறிப்பிட்டுப் புழங்கப்படும் இடங்கள். கடல்வழி வணிகத்தின் ஆரம்பமே இங்குதான் நிகழ்ந்துள்ளது. இக்கடலைச் சுற்றித்தான் உலகின் சிறந்த நாகரிகங்கள் வளர்ந்தன. மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் மேம்பட்ட இவ்விடங்கள் சரித்திர ஆசிரியர்களை மிகவும் ஈர்த்தன். அதற்குப் பிறகு கடல்வழிச் சரித்திரத்தை எழுதியதே அரபிக்கடலும் இந்து மகா சமுத்திரமுந்தாம்" (பக்.27)


"முதலில் கரைவழியாக ஆபிரிக்காவின் கிழக்குக் கரையிலேயே வணிகம் வணிகம் செய்துகொண்டிருந்த ரோமர்கள், சிறிது சிறிதாய் முன்னேறிக் கரை வழியாய் இந்தியத் துணைக் கண்டத்தில் சிந்து முகத்துவாரம் வரை வந்து, பிறகு தமது வணிகத்தை குஜராத் கடற்கரையிலும் தொடர்ந்தனர்." (பக்.28)


தனது நூலின் செய்திகளுக்கு ஆசிரியர் இலக்கியச் சான்றுகளை மிகுதியாகத் திரட்டித் தந்துள்ளார். இவை ரிக்வேதம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, பெருங்கதை, சிலப்பதிகாரம், மணிமேகலை, வால்மீகி ராமாயணம், கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம், மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, கம்பராமாயணம் முதலிய நூல்களில் உள்ள குறிப்புக்களும் செய்திகளும் ஆகும்.


தொல்பொருள் சான்றுகளுக்கும் பல நூல்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவற்றுள் 1975ல் தமிழ்நாடு அரசு வெளியீடாக வந்த "தமிழ்நாட்டுத் தொல் பழங்கால வரலாறு" Garnet Publications வெளியீடாக வந்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் பல நூல்கள் குறிப்பிடத்தக்கன.


இந்நூலைப் படித்து படித்து முடித்த பிறகு, ஆசிரியர் ஆசிரியர் தனது அணுகுமுறையிலும் நோக்கத்திலும் வெற்றி பெற்றுள்ளார் என்ற ஆணித்தரமான கருத்து ஏற்படுகிறது. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் "Foreign Notices of South India" நூலின் பாணியில் இங்கு தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன என்று எண்ணத் தோன்றுகிறது.


இலக்கியப் பெரும்புகழ் பெற்ற 97 வயது "மணிக்கொடி"ச் சிற்பி "சிட்டி" நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரை பற்றி இங்கு குறிப்பிடுவது மிக அவசியம்.

இந்த நூலை ஒரு புதிய முறையிலான வரலாற்றுப் படைப்பு என்று மதிப்பிடும் அவர் "கடல்வழி வணிகம்" என்பது இப்புத்தகத்தின் தலைப்பாய் அமைந்தாலும், இதில் வரலாற்றின் பல்வேறு துறைகள் சேர்ந்து நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு படிப்படியாய் உயர்த்தின என்பதும் சொல்லப்படுகிறது. நூலின் ஒவ்வொரு வரியும் பலப்பல செய்திகளைக் கொண்டிருப்பதால் இது கலைக்களஞ்சியம் போல் தோன்றுகிறது.


"ஒரு முழுமையான பொருளியல் பங்களிப்பாக இந்நூலை ஏற்கலாம்" என்று நூலின் உள்ளீட்டுச் சிறப்பை எடுத்துரைக்கிறார்.


மேலும் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்ற நரசய்யாவின் மொழிநடையும் அவருடைய கப்பற்படை அனுபவமும், வணிகக் கப்பல் வாழ்வு நாட்களின் அனுபவமும் இந்தப் புத்தகத்தை ஒரு வசீகரமான வாசகமாய் தோற்றுவிக்கிறது." என இவர் கூறியிருப்பது உண்மை.


நூல் தரமானதாளில் மிக அழகான அச்சமைப்புக் கொண்டுள்ளது. இதன் கடைசி 12 பக்கங்களில் தர்பபட்டுள்ள வண்ண ஒளிப்படங்கள் அருமையாக உள்ளன. இவை நூலின் செய்திகளுக்குத் தக்க ஆதாரங்களாகச் சந்தேகத்திற்கு இடமின்றித் திகழ்கின்றன.


தினமலர்.

19.02.2006சா. கந்தசாமி

தமிழ்நாடு ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்குக் கடற்கரையைக் கொண்டது. தமிழ் மக்கள் பண்டைய காலத்தில் தாங்கள் வாழ்கிற பகுதியை ஐந்து திணைகளாகப் பிரித்திருந்தார்கள். அதில் கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் எனப்பட்டது. தமிழ் மக்கள் கடலோடிகள். கடல் காற்றையும், அலையையும், நீரோட்டத்தையும், பருவ காலங்களைப் பற்றியும் நட்சத்திர மண்டலங்களைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். அதனால் பயமின்றி நாவாய் கலம், தோலை, தமரி என்று பலதரப்பட்ட படகுகளில் பொர்ட்களை ஏற்றிக் கொண்டு மேற்கு நாடுகளுக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் சென்று விற்றார்கள். அங்கே கிடைத்த பொருட்களை வாங்கி வந்தார்கள் என்று கி.மு. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூற்களில் இருந்தும் - தமிழ்ச் சங்க இலக்கியத்தின் வாயிலாகவும் தெரிகிறது. அதுதான் கடல் வாணிகம்.

புகார் என்னும் காவேரிப்பட்டினம், அரிக்கமேடு கொற்கை, முசிறி, மாமல்லபுரம், நாகப்பட்டினம் ஆகியவற்றில் முன் துறைகள் இருந்தன. அதாவது துறைமுகங்கள் இருந்தன. பல முன் துறைகள் கடல் கொந்தளிப்பால் அழிந்து விட்டன. அவற்றின் வழியாக நடைபெற்ற சிறப்பான வணிகத்தை அகழ்வாராய்ச்சி, கலவெட்டு, இலக்கியம், சரித்திர சான்றுகளை கொண்டு நிலை நிறுத்தி வருகிறார்கள். அது தமிழ் மக்களின், 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்ற பழமொழியின் அசல் தன்மையை நிலை நிறுத்துவதுதான். அதன் ஓர் அம்சமாக வெளிவந்துள்ளது நரசய்யாவின் கடல்வழி வாணிகம். முதுபெரும் எழுத்தாளர் சிட்டி சுந்தரராஜன் நமது கடல்வழி வணிகம் பற்றியும் அது ஆங்கிலேயர்கள் காலத்தில் வீழ்ச்சியுற்றது பற்றியும் - அதற்கு எதிராக வ.உ. சிதம்பரம் பிள்ளை கப்பல் விட்டது பற்றியும் அதன் அணிந்துரையில் சிறப்பாக எழுதி உள்ளார்.


நரசய்யா அடிப்படையில் எஞ்சீனியர், எழுத்தாளர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தன் கடல்படை அனுபவம் பற்றி கடலோடி என்ற நூலை எழுதியவர். கடலையும் இலக்கியத்தையும் அறிந்தவர். தமிழர்களின் கடல் வணிகத்தை - செங்கடல் வழியாக எகிப்து, ரோம் என்று அரிசி, மிளகு, மயிலிறகு, புலி - விற்று விட்டு தேறல் என்ற மதுவை வாங்கி வந்தது பற்றி இலக்கிய சரித்திரச் சான்றுகளோடு நிலை நிறுத்துகிறார்.


கடல்வழி வணிகம் என்பது ஒரு காலத்தில் மட்டும் நிகழ்வதில்லை. தொடர்ந்து நடைபெறுவது கடல்வழி எத்தனை தான் ஆபத்து நிறைந்ததாக இருந்தாலும் அதுவே வணிகம் நடைபெற ஆதாரமாக உள்ளது. கடலை ஆள்கிறவன் உலகத்தை ஆள்கிறான் என்று அதனாலேயே சொல்லப்பட்டது.


கடல்வழி வணிகம் - என்ற நரசய்யாவின் நூல் பண்டைய கடல் வணிகத்திற்கு இருந்து தொடங்கி தற்காலம் வரையில் வருகிறது. முன் துறை - துறைமுகமாக மாறி நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதையும் - புதிய நவீன துறைமுகங்கள் அடிப்படை வசதிகளோடு முதல் தரமான துறைமுகங்களாக மாறி உள்ளதையும் எடுத்துக் காட்டி உள்ளார்.


கடல் வணிகத்தில் முக்கியமானது, கப்பல். அது பலவிதமான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும். அதுபோல கடல்வழி வணிகம் என்ற நூலானது கடலில், விற்ற - வாங்கிய பொருட்களோடு சரித்திரம் சமூகம், பொருளாதாரம், அதையொட்டி நகரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்பதைப் பல தளங்களில் சொல்கிறது. அது ஆசிரியரின் பல நோக்குப் பார்வையின் வழியாகச் சாத்தியமாகி உள்ளது மிகவும் சிறப்பானது. பழனியப்பா பிரதர்ஸ் - நல்ல தரமான தாளில் உயர்வான கட்டமைப்புடன் நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறார்கள்.


2005-ம் ஆண்டில் தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான நூல்களில் ஒன்று கடல் வழி வணிகம்.

அமுதசுரபி

பிப்ரவரி 2006

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=கடல்வழி_வணிகம்&oldid=2625" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 14 செப்டெம்பர் 2010, 03:28 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,172 முறைகள் அணுகப்பட்டது.