பாசுர மடல் 070 : முல்லை திரிந்து பாலையாகுதல் போல........

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முல்லை திரிந்து பாலையாகுதல் போல............



 தொன்மையான பண்பாட்டின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்வது ஒரு மலையின் மீதிரிந்து உலகைக் காண்பது போன்றது. பல நூற்றாண்டுகளாக செம்மைப் படுத்தப் பட்ட ஒரு சிந்தனை மரபின் ஊடாக உலகைக் காண்பதில் ஒரு தெளிவு இருக்கும். பண்பாட்டுச் செழுமை என்பது நொடிப் பொழுதில் நிகழ்வதன்று. அது ஒரு தொடர் நிகழ்ச்சி. செழுமை அடைவதற்கு முன் ஒவ்வொரு சமூகமும் பல்வேறு சோதனைகளுக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்ட பின்தான், முதிர்ச்சி வாய்க்கிறது. இவ்வகையில் தமிழ் சமூகம் எதிர் கொள்ளும்/கொண்ட முக்கிய சமூக முரண் தமிழ் மக்களின் சாதீயப்
Branch.jpg
பிரிவு ஆகும்."குலந்தாங்கு சாதிகள் நான்கு" என்று இதைப் பதிவு செய்கிறார் நம்மாழ்வார். ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் நான்கு வருணங்களைக் கூறியிருக்கிறார். "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே" என்கின்றது புறநானூறு. தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டு விட்ட இப்பகுப்பின் தோற்றுவாய் ஆய்விற்குரியது. திராவிட இயக்கங்களின் சிந்தனை வழியில் இம்முறை ஆசியா மைனரிலிருந்து இந்திய துணைக் கண்டத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்களால் கொண்டுவரப் பட்டது என்பதாகும். இது உண்மையாகவே இருந்தாலும் கூட, இது வர்ணாசிரும முறையின் தோற்றத்திற்கு இட்டுச் செல்லவில்லை. பிரச்சனையை ஒரு இடத்திலிருந்து இன்றொரு இடத்திற்கு தள்ளி வைத்துள்ளது அவ்வளவே.


எந்தச் சமூகமும், எக்காலத்திலும் தனிப்பட்டு இருந்ததில்லை. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து பாரிய உலகின் பல்வேறு மூலைகளுக்கு மனிதன் போய் வந்த வண்ணமே உள்ளான். பனியில் உறையும் வட துருவத்தின் அருகாமையில் கூட மனிதர்கள் வாழ்வது இதைக் காட்டுகிறது. இந்த இடப் பெயர்ச்சியினால் மனித இரத்தக் கலப்பு என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. சுத்தமான இனம் என்ற ஒரு இனம் உலகில் கிடையாது என்பது உயிரியல் உண்மை.


பரிணாம வளர்ச்சியின் அடிப்படை அலகு species என்பதாகும். மனித இனம் ஒரு species. இப்படி இனங்கள் உருவாவதற்கு அடிப்படைத் தேவை, பெளதீக ரீதியில் இனக் கலப்பை தடுப்பதாகும். ஒரே பிரதேசத்தில் ஒரே இனமாக இருந்த உயிரினங்கள், அப்பிரதேசங்கள் இயற்கை செயற்பாடுகளால் பிரிவுறும் போது இனக் கலப்பிற்கு வகையின்றி வெவ்வேறு இனங்களாக பிரிந்திருப்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. இப்படி
Nat.selection.jpg
பல்வேறு இனங்களாக உயிரிகளை தக்க வைப்பது இயற்கையின் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு உயிரியல் திட்டம் (the agency of natural selection). இத்திட்டத்தின் அடிப்படை, உயிரினங்களை பல்வேறு வகைகளாய் பரிமளிக்க வைப்பதாகும். பல்வேறு வகைகள் இருக்கும் போதுதான் சோதனைக் காலங்களில் (ஊழிப் பேரலை, வெள்ளப் பெருக்கு போன்றவை) ஒரு இனம் அழிந்தாலும் மற்றவை தப்பி உயிர் வாழ்வதற்கு சாத்தியமாகிறது. (a strategy of life to counter (at least temporarily) the eternal and unavoidable second law of thermodynamics) இந்த சாத்தியப்பாடு உண்மை என்பதால் உயிரினங்கள் வகை, தொகையாய் பிரிவது ஒரு இயற்கை நிகழ்வென்று உயிரியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர் (variation is the basis of evolution.)


தனது ஓயாத இடப்பெயர்ச்சியாலும், சிந்தனை வளர்ச்சியாலும் மனிதன் இந்த இயற்கையின் நியதியை வெகுவாக புறந் தள்ளினாலும், ஏதோ ஒரு வகையில் இயற்கையின் உந்துதலாக மனித இனம் இனக் கலப்பைத் தடுத்து மற்றொரு இனமாக உருமாற விழைவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தமிழ் மண்ணில் ஆதியில் ஏற்பட்ட சமுதாயப் பகுப்பு இத்தகைய ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. அறிவின் வளர்ச்சியாலும், பகுத்தறிவுச் சிந்தனையாலும் சமூகப் பகுப்புகள் உடையும் போதும், புதிய வகைகள் தோன்றிய வண்ணமே உள்ளன. உதாரணமாக, சாதியப் பிரிவை மனிதன் முறியடிக்கும் பொது, மதப் பிரிவு தலையெடுக்கிறது. மதப் பிரிவையும் எதிர் கொள்ளும் போது வர்க்கப் பிரிவு (ஏழை-பணக்காரன்) வந்து நிற்கிறது. அதை சமாளித்த பின்பு கற்றவன்-கல்லாதவன் என்ற பிரிவு வந்து நிற்கிறது. இப்படி, ஒன்று இல்லாவிடில் மற்றொன்று என்று மனித உயிரியை பிரித்து வேறுபடுத்தும் இயற்கை உந்துதல் காலம் காலமாக நடந்து கொண்டே இருக்கிறது. இயற்கையின் இந்தச் சவாலை எதிர் கொள்ள மனிதனிடம் உள்ள ஒரே சாதனம் அவனது அறிவுதான் (இதை ஞானம் என்று ஆன்மீகம் சொல்லும்).


குறிஞ்சித் திணையின் அங்கமாக, விலங்குகளை வேட்டையாடி வந்த மனிதன், இயற்கை அழிவுகளின் காரணமாக முல்லைத் திணைக்கு வந்த போது கால் நடைகள் மேய்ப்பதை வாழ்தலின் இருப்பிற்கு சாத்தியப் படுத்திக் கொண்டான். பின், கால் நடைகளின் உணவுகளை பயிர்த் தொழில் செய்வதன் மூலம் தனது மூல உணவாக மாற்றிக் கொள்ளக் கற்றான் (நெல் என்பது ஒருவகை புல் என்பது கண்கூடு). இப்படி வேடுவனாக இருந்த மனிதக் கூட்டம், விவசாயியாக மாறிய பின்பும், பண்டைய குறிச்சித் திணையின் தொழில்களால் ஏற்பட்ட பகுப்பை தக்க வைத்துக் கொண்டான் என்று சொல்கிறார் சொல்லாய்வாளர் திரு.இராம கிருஷ்ணன்.

                                                                                              
Finches.jpg


இவரது ஆய்வின் படி, வனவிலங்குகளை வேட்டையாடித் திரிந்த ஆதித் தமிழனின் குறிச்சித் திணையிலிருந்து ஆரம்பமாகிறது வர்ணாசிரமம். வேடுவர்கள் கூட்டமாக வேட்டை ஆடும் போது தற்காலிக தலைவர்கள் தோன்றிக் கொண்டு இருப்பர் (விலங்குகளில் இதை "ஆல்பா ஆண்-alpha male" என்பார்கள்). ஆனால், முல்லை/மருத நிலத்திற்கு மனிதன் இடம் பெயர்ந்த பின், தற்காலிக தலைவனுக்கு மாற்றாக இறையாள்மை செய்யும் அரச பரம்பரை தேவைப் பட்டது. (உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் - என்று சொல்லி இறையாள்மையை முன் நிறுத்தி அரசன் என்பானை "இறைவன்" என்ற சொல்லால் பயில்கிறார் வள்ளுவர் (குறள் 778). முன்பு "அரம்" என்னும் ஆயுதம் கொண்டு வேட்டையாடிய மனிதன் ஒரு காலக் கட்டத்தில் "அரசன்" ஆகிறான். அவனுக்கு போர்/அரசு நடத்த உத்திகள் சொல்லும் முகமாக அறிவர்கள் (strategist) தோன்றுகின்றனர். முன்னவன் (போராளிக்கு முன் போர்த் தந்திரம் சொல்பவன்) என்ற பொருள்படும் "பரமன்" என்பது இவர்களுக்கான பெயரானது. அரசு என்ற நிறுவனம் உருவான பின் அரசுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த diplomats என்பார் தேவைப் படுகின்றனர். குறிச்சியில், வில்லாளனாக இருந்த "விசியன்" என்பார் முல்லை/மருதத் திணையில் வியாபாரிகளாக, அரசுத் தொடர்பாளர்களாக மாறுகின்றனர். அதே போல், குறிஞ்சியின் "வேலாளன்" மருதத்தில் "வேளாளன்" ஆகிறான். இவன் முன்பு சூல் கொண்டு காவல் செய்தவன்.


இப்படித் தொழில் அடிப்படையில் தோன்றிய பரமன், பிராமணனானகவும், அரையர்/கத்தியர் என்பார் க்ஷத்ரியராகவும், விசியர் என்பார் வைசியராகவும், வில்லாளர் என்பார் சூல் கொண்டவன் ஆதலால் பின்பு சூத்திரனாக பெயர் கொள்கின்றனர். ஏரணவியலின் அடிப்படையில், தமிழில் இருந்தே இவ்வருணாசிரம பெயர்கள் வடமொழிக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கிறார் முனைவர்.இராம.கிருஷ்ணன்.


தொழிலின் அடிப்படையில் மனித குழுக்களுக்கு பெயர் சூட்டுவது எல்லாக் காலக் கட்டங்களிலும், எல்லா சமூகங்களிலும் நடந்திருக்கிறது. ஜெர்மன் மொழியில் Goldschmied, Kaufmann, Koehler என்பது முறையே பொற் கொல்லர், வியாபாரி, கரி அள்ளுபவர் என்ற குடும்ப(குழு) பெயர்களாயின.


தொழில் அடிப்படையில் பிரிந்த ஆதி மனித குழுக்கள், முன்பு சொன்ன இயற்கையின் உந்துதலின் படி இனக் கலப்பின் சாத்தியப் பாடுகளை குறைக்கத் தொடங்கினர் (reproductive isolation). தங்களுக்குள் உயர்வு, தாழ்வு சொல்லிக் கொண்டு திருமண உறவுகளை சுருக்கிக் கொண்டனர். உதாரணமாக, அநுலோம விவாகம் என்பது மேல் சாதியினன், தனக்குக் கீழ்பட்ட சாதியில் செய்து கொள்ளும் மணம், பிரதிலோம விவாகமானது, கீழ்ச் சாதியினன் தனக்கு மேற்பட்ட சாதிகளில் செய்து கொள்ளும் மணம் என்று ஆடவர் வகையைப் பிரித்துக் கூறுகிறது பிங்கலத்தை.


உயர்ந்த ஆணினும் இழிந்த பெண்ணினும் வியந்த கூட்டத் தவர்அநு லோமர்.
உயர்ந்த பெண்ணினும் இழிந்த ஆணினும் வியந்த கூட்டத் தவர்பிரதி லோமர்
(ஆடவர் வகை 242, 243).

                                                                                                  
0.jpg


இதுவரை பரிணாமவியல் வழியாக பிரிவுகளின் காரணங்களைப் பார்த்தோம். உளவியல் ரீதியாக இதன் காரணங்களை ஜே.கிருஷ்ணமூர்த்தி மிக அழகாக விளக்குகிறார். மனித சிந்தனையின் மிகப் பெருஞ்சாதனைகள் அவனது பகுத்தாயும் மனத்தால் விளைந்தவையே. பகுத்தாய்வதற்கு பொருள்களை அளவிட வேண்டும். அளவிடுவதற்கு அலகுகள் வேண்டும். மனித சிந்தனை காலம் என்ற முழுமையான ஒன்றை நொடிகளாக, நிமிடங்களாக, மணியாக, தினங்களாக, வருடங்களாக பிரித்து, காலத்தின் பருவ மாற்றங்களை கணித்து வேளாண்மை செய்து இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளது. முழுமையான உலகை பல்வேறு நாடுகளாகப் பிரித்து இன்று வாழ்ந்து வருகிறது. கல்வியின் அலகாக மதிப்பெண்கள் இட்டு மாணவர்களை பிரித்து அளவிடுகிறது. இப்படி அளவிடுதல், பிரித்தல் என்பது சிந்தனையின் அடிப்படை குணங்களில் ஒன்றாகவே இருக்கிறது. எப்போது சிந்தனை, தனது பிரித்தாயும் குணத்தை வேண்டிய தருணங்களுக்கு மட்டும் தக்க வைத்துக் கொள்கிறதோ அப்போது மானுடம் மேன்மையுறும். அதை விடுத்து, காணும் அனைத்தையும் பிரித்துப் பார்த்தால் கேடுதான் விளையும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் ஜே.கே. இதனால்தான் இன்று வெண்ணிலவில் கால் வைக்கும் அளவிற்கு அறிவியல் முன்னேற்றம் கண்டாலும், சாதியாலும், மொழியாலும், வர்க்கத்தாலும், தேசியத்தாலும் மானுடம் பிரிந்து போர், வன்முறை, பசி, பட்டினி என்று சீரழிந்து கொண்டிருக்கிறது என்று மேற்கோள் காட்டுகிறார் ஜே.கே.


இதை மேலும் அறிந்து கொள்ள இந்திய ஆன்மீகப் பகுப்பாவை கொஞ்சம் நோக்க வேண்டும். அது, அடுத்த மடலில்.



நா.கண்ணன்.

Date - Sat., Wed., 19 Jan ., 2000 14.46.15 +0200 15.22.05 +0200

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2010, 20:32 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,901 முறைகள் அணுகப்பட்டது.