அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


* அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில்

                                                                                    
T 500 649.jpg

                                                                                                 

மூலவர் : ஸ்தலசயனப்பெருமாள்
உற்சவர் : உலகுய்ய நின்றான்
அம்மன்/தாயார் : நிலமங்கைத் தாயார்
தல விருட்சம் : புன்னை மரம்
தீர்த்தம் : புண்டரீக புஷ்கரணி
-பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கடல் மல்லை
ஊர் : மகாபலிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:


மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்

பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை படுகடலில் அமுதத்தைப் பர்வாய்க்கீண்ட

சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை

போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புனர் மருதமிற நடந்த பொற்குன்றினை

காரானை யிடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.

-திருமங்கையாழ்வார்


தல சிறப்பு

பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார்.இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது. இங்கு மூலவர் சன்னதியின் கீழ் உள்ள விமானம் கனகாகிருதி விமானம் எனப்படுகிறது. புண்டரீக மகரிஷி இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

தலபெருமை:
பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார். 108 திருப்பதியில் கையில் தாமரை மொட்டுடன் நிற்கும் உற்சவர் இவர் மட்டும் தான். தன் கையில் உள்ள தாமரையை மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம்.

கோயில் தோன்றிய விதம்: ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்தன. அப்போது இத்தலத்திற்கு "ஏழு கோயில் நகரம்' என்ற பெயர் இருந்தது. இவை கடல் சீற்றத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன. அதன் பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் 3 கோயில் கட்டினான். அதில் இரண்டு கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சிய ஒன்று தான் தற்போதுள்ள கோயில். இதுவும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது.இதை மனதில் கொண்டோ என்னவோ, 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகமவிதிப்படி கோயில் கட்டி, இங்கிருந்த பெருமாளை பிரதிஷ்டை செய்தார். இவருக்கே தற்போது வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இத்தல பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்டநாதனை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


தல வரலாறு:


இன்றைய மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியில் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன. இதில் புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்து வந்தார். இவர் அருகிலுள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை பறித்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்தார். பறித்த பூக்களை கூடையில் கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் இருந்தது. பக்திபெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைக்க ஆரம்பித்தார். பல ஆண்டுகளாக இதை செய்தார். ""பரந்தாமா! நான் கொண்ட பக்தி உண்மையானால், இந்த கடல் நீர் வற்றட்டும். எனக்கு பாதை கிடைக்கட்டும். இந்தப்பூக்கள் அதுவரை வாடாமல் இருக்கட்டும்,என்றார். கடல் நீரை இறைப்பதென்ன சாத்தியமா? ஒரே இரவில் கைசோர்ந்தார். ஒரே மனதோடு இறைவனை நினைத்தபடியே நீரை இறைத்த முனிவர் முன்பு ஒரு முதியவர் வடிவில் பெருமாள் வந்தார்.முனிவரை மேலும் சோதிக்கும் வகையில், ""கடல்நீரை இறைக்கிறீரே! இது சாத்தியமா? உருப்படியாக ஏதாவது செய்யலாம் இல்லையா? எனக்கு பசிக்கிறது. சோறு கொடும்,என்றார். ""முதியவரே! உமக்கு சோறு அளிக்கிறேன். அப்பணி முடிந்ததும், இப்பணியை தொடர்வேன். பெருமாளை நான் பார்த்தே தீர வேண்டும். என் பெருமாள், இந்தக்கடல் வற்றியே தீரும்,என்றார். மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்து,"" இதை வைத்திருங்கள். நான் சென்று உணவு கொண்டு வருகிறேன்என்று கூறி சென்றார். மகரிஷி வருவதற்குள் அவர் கொடுத்து சென்ற பூக்களையெல்லாம் சூடி இந்த கடலிலேயே "ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில்' காட்சியளித்தார். இதைக்கண்டு ஆனந்தமடைந்த மகரிஷி, ""பெருமாளே! இந்த சிறியேனின் பக்திக்காக தாங்களே நேரில் வந்தீர்களா! உங்களையா பூக்கூடையை சுமக்கச்செய்தேன். என்னை மன்னித்து, நான் என்றென்றும் தங்கள் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும்என வேண்டினார். பெருமாளும் அவ்வாறே வரம் தந்தார். சயன திருக்கோலத்தில் காட்சி தந்ததால் "தலசயனப்பெருமாள்' என அழைக்கப்படுகிறார்


திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை மலர்:


* திருப்தி விலைக்கு கிடைக்காது - குரு நானக்.


  • நம் மனம் மதம் பிடித்த யானையைப் போன்றது. பந்த பாசங்களினாலும், மரண பயத்தினாலும் உயிர் அலைந்து திரிகிறது. இதிலிருந்து விடுபட இறையருள் ஒன்றே நமக்குத் துணை செய்யும்.
  • சாம்ராஜ்யம், செல்வம், அழகு, பெருமை, இளமை இவை ஐந்தும் உயிர் இறை ஞானம் பெற விடமால் தடுக்கும் திருடர்கள் ஆவர்.


* உலகத்தின் செல்வம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது.


பவள சங்கரி திருநாவுக்கரசு.

தேதி - 10 - 02 - 2011.

நன்றி - தின மலர்பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 10 மே 2011, 14:07 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,471 முறைகள் அணுகப்பட்டது.