அற்புதத் திருவந்தாதி: ஒர் நூலிய அறிவியல் ஆய்வு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக


அற்புதத் திருவந்தாதி: ஒர் நூலிய அறிவியல் ஆய்வு
( An Hermeneutic Analysis of aRputhath Thiruvanthaathi)

கி.லோகநாதன் 2003

அன்பர்களே,
காரைக்கால் அம்மையாரின் "அற்புதத் திருவந்தாதி" அற்புதமான ஓர் நூல். வரலாற்று சிறப்புமிக்க ஒன்றுமாகும். பெண்களும் தத்துவ விசாரணையில் மேம்பட்டு நிற்கலாம் என்பதற்கு நல்லவொரு சான்றாக அமைவதோடு, இறையருள் துணை செய்ய சமுதாயத்தையே மாற்றி நல்வழி படுத்தலாம், புரட்சி வீராங்கணைகளாக எழலாம் என்பதற்கும் நல்லவொரு சான்றாக அமைகின்றது.
அற்புதத்திருவந்தாதிப் பற்றிய இவ்வாய்வு, எவ்வித இலக்கணக் கூறுகளைக் கொண்டது, எத்தகைய சொல்லணிகளை பொருளணிகளைப் பெற்றுச் சிறக்கின்றது என்றெல்லாம் ஆயும் இலக்கிய ஆய்வல்ல. மாறாக எல்லா வகை கிளவி ஆக்கங்களுக்கும் எழு நிலனாக இருக்கும் அகநிலத்தைக் கண்டு தேரும் ஒர் முயற்சியாகும். எவ்வாறு ஒவ்வொரு வகை மரஞ் செடிகொடிகட்கும் தோன்று நிலம் இவ்வகைத்தென கூற வருமாப்போல், அற்புதத் திருவந்தாதி எனும் இலக்கியம் தோன்றக் கூடிய அகந்நிலத்தைக் கண்டு தேரும் முயற்சியாகும் இது. இதுவே திரு பாலாப் பிள்ளை ஏதோவோர் வகையில் வற்புறுத்தி வரும் eco-system thinking என்றும் நினைக்கின்றேன். இத்தகைய சிந்தனையே தொல்காப்பியரின் பொருளதிகாரத்தின் அடிப்படை. இதனை செவ்வே செய்யவேதான் சொல்லையும் எழுத்தையும் ஆய்ந்து சொல்லதிகாரம் எழுத்ததிகாரம் என்றும் எழுதியுள்ளார். பாணினீயத்திலும் வேறு வடமொழி இலக்கண நூற்களிலும் பொருளதிகாரம் இல்லையென்றும் அதனின் தொல்காப்பியங் கூறும் சொல்லதிகாரமும் எழுத்ததிகாரமும் இல்லையென்றும் தெரிகின்றது. வேறு வகையிலேயே சொல்லாராய்ச்சியும் எழுத்தாராய்ச்சியும் அங்கு. இன்று நான் அறிந்த வகையில் வெள்ளையர்கள் நடுவிலும் தொல்காப்பியம் போன்ற மொழிநூல் இன்னும் எழவில்லை என்றே நினைக்கின்றேன்.
அதற்கு முன் தொல்காப்பியத்திற்கு அடிப்படையாகவும் அதனின் தமிழப்பண்பாட்டிற்கே அடிப்படையாகவும் இருக்கின்ற 'நூலிய அறிவியல்" எனும் முறையியலைப் பற்றி சில வார்த்தைகள்.
இந்த அறிவியல் துறைக்கு தெரியங்கள்(theoria) இருக்கவேண்டும். காட்டாக கனாவியல் ஆய்வுகட்கு அடிப்படையாக கனாத்தெரியம்(DreamTheories), அதன் கூறாக கற்றளிகள், கற்றகளிகட்குத் தக வேறுபடும் எண்புத்திகள் எண்சித்திகள் என்பன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஓர் கனா இத்தன்மையது என்று தெரிந்துகொள்கிறோம், இது மாமரம் , இது தென்னைமரம் என்று தெரிந்துகொள்வது போல. இவ்வாறு கனவுகளை தெரிந்துகொள்ள உதவுவதின் இக்கோட்பாடுகள் தெரியம் ஆகின்றது. இந்த தெரியங்கள் ஓர் தெரிவினை பயப்பிக்க (an understanding) அதன்வழி அகத்தே நிற்கின்ற ஒர் அறியாமை நீங்கிட ஞானத் தெளிவு உண்டாகின்றது. இத்தகைய அஞ்ஞான நீக்கங்களைக் கருதியே நூலிய அறிவியல் ஆய்வுகள் செல்கின்றன.
அற்புததிருவந்தாதி ஓர் கனவல்ல, கனவுகளோடு ஒப்பத்தக்க உள்ளுவமங்களில் ஒன்றுமல்ல. ஆயினும் கனாக்களைப் போன்றே தோன்றி வெளிப்பட்டு ஒர் இலக்கியமாய் நிற்கின்றவொன்று என்ற ஒற்றுமையின், அதன் காரணமாக எல்லாவற்றையும் உள்ளடக்கிய முறையில் 'ஆகமம் " என்று அழைப்போம். மெய்கண்டார் வற்புறுத்தும் "தோற்றியத் திதி" என்ற கருத்தையே எடுத்துக்கொண்டு, யாது யாது தோற்றியத் திதியோ, கனவுகள் போல , அவையெல்லாமே ஆகமங்கள் என்று இங்கு ஆடப்படும்.
இவ்வகையில் அற்புதத் திருவந்தாதி ஓர் ஆகமம். ஆயினும் இங்கு கனாத்தெரியம் போல 'ஆகமத்தெரியம்' என்றவொன்று இருக்கவேண்டுமே? இருக்கின்றது. அதனை சிறிது விளக்குவம். கற்றளிகளையும் ஏனையவற்றையும் பொதுவாக்க(generalise) நாம் பெறுவது , ஆகமக்கற்றளிகள், ஆகமபுத்திகள், ஆகமசித்திகள் என்பன. இவையே ஆகமத்தெரியம் ஆகும். இதனையே சுருக்கமாக "ஆகமீயம்" என்ற அழைத்திருக்கின்றேன். இதன் வழியேதான் திராவிட மெய்யறிவு வரலாறு எழுத்தப்பட்டு வருகின்றது. இன்னும் ஆழஞ் செல்ல, இக்கற்றளியாதிகள் தோன்றும் பொது நிலமாக தில்லையம்பலம் இருப்பதைக் காண்போம். "தில்" என்றால் 'வாழ்வது' 'இருப்பது' என்ற பொருள் உடையது. ஓர் பொருள், அது யாதாகவாயினும் அஞ்ஞான இருளில் கிடப்பதன்றி ஒன்றென உலகில் இருப்பதற்கு காரணமாய் இத்தில்லையே இருக்கின்றது. ஞானமயமாகிய ஒன்று என்பதின் அதுவே சித்-அம்பரம் >சிதம்பரம் என்றும் சித்-அம்பலம்> சிற்றம்பலம் என்றும் நவிலப்படுகின்றது. மெய்கண்டார் "சொன்ன சிவன் சந்நிதியில் மற்றுலகம் சேட்டித்தது" எனும்போது, இந்த தில்லை அம்பலத்தையே "சிவன் சந்நிதி" என்று உள்ளுவமம் படுத்துகின்றார்.
இதன்வழி சைவ சித்தாந்தத்திற்கும் ஆகமீயத்திற்கும் உள்ளத் தொடர்பு தெளிவாகின்றது. இந்த eco-system thinking என்பதின் முடிந்த முடிவே, ஆழத்தின் ஆழமே சைவ சித்தாந்தம் என்பது, தொல்காப்பியர் வழி பிழையாது சென்றமையின் வந்துள்ள ஞானத் தெளிவு.
இனி அற்புதத் திருவந்தாதி ஓர் இலக்கியம் என்பதின், இங்கு இன்னும் நுட்பமாக விளங்கும் தெரியம் உளநிலைத் தெரியம் என்றாகும். அதற்கேற்ப புத்தி சித்திகளும் உளநிலைபுத்திகள் உளநிலைசித்திகள் என்றாகும். இது எவ்வாறு சங்காலத்துப் புலவர்கள் ஓர் பாடலின் பொருளை உணர்ந்த ஞான்று, இது குறிஞ்சிக்குரியது, பாலைக்குரியது என்றவாறு உளநிலையை புணர்தல் கருத்தது, பிரிதல் கருத்தது என்றவாறு கண்டார்களோ அதேப் போன்றுதான் இங்கு. பாடலின் பொருளை உணர்ந்து அத்தகைய பொருள் எழுநிலங்களைக் கண்டறிய இக்கற்றளிக்குரியது இது என்றும் , இந்த புத்தி வகைகளில் எழுந்தது, இதனை பயப்பது என்றும் வகுப்பதாகும். இதுவே தமிழர்கள் உலகிற்கு அளிக்கக்கூடிய அறிவியல் கொடையாகும்.
இனி விசயத்திற்கு வருவோம். இதனை அறிவியல் சான்ற முறையில் இங்கு விளக்குவோம். மேற்கோள் ஏது எடுத்துக்காட்டு என்ற முறையில் ஏரணஞ் சார்ந்த வகையில் இது விளக்கப்படும்

ப்டிமெய் 1:
மேற்கோள்: அம்மையார் விசுத்திக் கற்றளி எய்தினார் என்பது.
ஏது: மேலான அகச்சுத்தத்து அருளாவத்தை படுவதினும், சமயப் பொது பகர்வதினும்

எடுத்துக்காட்டு:
அருளாவத்தை:
அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பு அறுப்பது அதனால்-- அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்று
மெய்ப்பொருளும் ஆவதெனக்கு
சமயப்பொது:
நூலறிவு பேசி நுழைவிலார் திரிக
நீலமணிமிடற்றான் நீர்மையே -- மேலுலந்தது
எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவேயாம்

ப்டிமெய் 2:
மேற்கோள்: அம்மையாரின் உளநிலைபுத்திகள் வித்வேசனமாகிய அருள்வீழ்ச்சி பட்டதென்பது
ஏது: இறையருளாலேயே தான் இறைதரிசனம் பெற்று உய்ந்தார் என்று உணர்ந்து மொழிவதின்.
எடுத்துக்காட்டு
1. இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டு இறக்கஞ் செய்வான் -- இறைவனே
எந்தாயென இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் மாற்றுவான்
2. காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலான் காதலாற் --- காண்பார்க்குச்
சோதியாய் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
ஆதியாய் நின்ற அரன்
படிமெய் 3:
மேற்கோள்: இனி அம்மையாரின் உளநிலைசித்திகள் ஈசத்துவம் சார்ந்தது என்பது
ஏது: உயர்ந்த தெய்வீகப் பண்பு பாடல்களில் வெளிப்படுவதின்
எடுத்துக்காட்டு:
1. அறிவானுந்தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே -- அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்
2. பிரானை நோக்கும் பெருநெறியேப் பேணிப்
பிரானவன் தன் பேரருளே வேண்டிப் -- பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வர் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க்கு எளிது

இது அற்புதத் திருவந்தாதியின் முழுமையான ஆய்வு அல்ல. இன்னும் ஆயஆய ஆக்ஞா கற்றளி பட்டதும் தெரிய வரலாம். ஆயினும் இதுவரை கூறியவற்றால், நூலிய அறிவியல் (Hermeneutic Science ) என்பதின் ஒரு சில கூறுகள் தெளிவாகி இருக்கும் என்று நினைக்கின்றேன். ஓர் சிறிய குறிப்போடு, இக்கட்டுரையை முடிப்போம்.
இங்கு எடுத்துகாட்டுகளை ஆய அவற்றின் புதையுருவாய் ஏது எனப்படுவது இருக்கின்றது. பயிலும் செய்யுள் தனது படிக்கவரும் புறவுருவின்வழி ஊய்ந்துணரத் தரும் புதையுரு கிட்டுகின்றது, அதுவே ஏதுவாய் அமைந்து மேற்கோளை உண்மை என்று உடன்பட வைக்கின்றது. இங்கு ஏது எனப்படுவதும் புறவுருவாய் நின்று அதன் புதைருவாய் மேற்கோளை ஊய்த்தறிய உதவுகின்றது என்பதையும் காண்க. இவ்வாறு ஓர் செய்யுளின் புறவுருவிலிருந்து அதன் மெய்யான புதையுருவிற்குச் செல்வதே மெய்நெறித்தாகிய மெய்யறிவுச் சிந்தனை என்கிறார் தொல்காப்பியர். உண்மைகளை காணத்தருவதே அறிவியல் துறைகளின் இயல்பு என்பதின் இவ்வாறு ஆய்ந்து உணமைகளை அறியத்தந்து அதன்வழி அகத்து இருளை, அஞ்ஞானத்தைக் கடிவதே நூலிய அறிவியல் திறமாகும். வெள்ளையர்கள் இதுவரை அவ்வளவு தெளிவாக கண்டறியாத அறிவியல் கோட்பாடுமாகும்.
ஓர் ஆகமத்தை எடுத்துக்கொண்டு அதன் புறவுருவிலிருந்து புதையுருவிற்குச் செல்வதும், பிறகு அதனையே மறித்துநோக்கி செய்யுளாக்கி இன்னும் ஆழமாய புதையுருவிக்குச் செல்வதுமாக இங்கு சிந்தனை இயங்குகின்றது. இதுவே தமிழச் சிந்தனா பாரம்பரியத்தின் அடிப்படை சிந்தனை போக்கு, the metaphysical thinking ( Bala's meta-thinking) என்பது. இதனை வளர்த்து வளர்த்து சென்றுள்ள தமிழப் பண்பாட்டின் மிக அரிய படைப்பே மெய்கண்டாரின் சிவஞானபோதமாகும். அதுவோர் அறிவியல் பனுவல், நூலிய அறிவியல் பனுவல் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாய் நிற்பது.பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2013, 11:10 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,420 முறைகள் அணுகப்பட்டது.