முனைவர் சோ.முத்தமிழ்ச்செல்வன்
நன்றி:- தினமணி
குறியல்லாத குறியில் மயங்குதல் அல்லகுறியாகும்.
இதற்கு, "இரவுக்குறியிடத்துத் தலைவன் செய்யும் ஒலிக்குறி மாற்றம்" என்றும், "இந்த இடத்தில், இந்த நேரத்தில் சந்திப்பது எனத் திட்டமிட்டபடி சந்திக்க இயலாமற்போதல்; தலைவன் வந்ததற்கு அடையாளமாக ஏதாவது "குறி" செய்வான். சில சமயம் அவன் செய்த அடையாளம் போல், ஒலிகேட்டுத் தலைவி வந்து ஏமாந்து திரும்புவாள். பிறகு அவனே வந்து ஒலி செய்தபோது அது வேறு ஏதோ ஒலி என்று தலைவி வரமாட்டாள். இதனால் தலைவன் அவளைச் சந்திக்கப் பெறாமலேயே திரும்ப நேரும். இத்தகைய நிலை அல்லகுறியாகும்" என்றும் அறிஞர்கள் விளக்கம் கூறுவர்.
இத்துறையில் கூற்று நிகழ்த்தும் தலைவன் தன் நெஞ்சிடம், சங்க இலக்கியங்களில் பதினொரு பாடல்களில் பேசுகிறான்.
இதனை,
உதவி செய்து பெற நினைத்தல்
வாழ்த்தியல் முறையில் கூறுதல்
நட்பு முறையில் கூறுதல்
வருந்திக் கூறுதல்
சாபமிடல்
என இதை வகைப்படுத்தலாம்.
அவைகளில், ஒன்றிரண்டை மட்டும் காண்போம்.
உதவி செய்து பெற நினைத்தல் என்பது, தலைவியைச் சந்திப்பதற்குத் தலைவன் சென்றான். ஆனால், அல்லகுறி ஏற்பட்டதன் காரணமாக அவளைச் சந்திக்க இயலவில்லை. அவளைப் பெறுவது அரிது என்ற நிலை வருமானால், என்ன செய்வது என்று ஆராய்ந்தான். ஆதலால், அதனை அல்லகுறிப்பட்ட அகநானூற்றுத் தலைவன் தன் நெஞ்சிடம்,
"நெஞ்சே, நம் தலைவி செருந்திப் பூக்களை நிறையச் சூடிக் கொள்பவள். ஒரு சிறுமிபோல கடற்கரையில் திரியும் நண்டுகளை விரட்டி விளையாடும் இயல்பினைக் கொண்டவள். அவளைப் பெறுவது அரிது என்ற நிலை வருமாயின், கடற்கரையில் தன்னோடு உழைத்த பணியாளர்களுக்குப் பகுத்துக் கொடுக்கும் நேரிய பண்பைப் பெற்றவன் இவள் தந்தை. நாம் நம் ஊரை விட்டுவிட்டு இக்கடற்கரைக்கு வந்து, இவள் தந்தையோடு உப்பங்கழிகளை அடுத்து உள்ள களர் நிலங்களில் விளையும் உப்பினை வண்டியில் ஏற்றுதல் முதலிய பணிகளைச் செய்தும், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றும், அவன் மனமறிந்து நடந்தும், பணிவு காட்டியும், சார்ந்தும் இருந்தால், அவன் நம் நேர்மைப் பண்பைக் கண்டு நமக்கு அவளைத் திருமணம் செய்து தருவானா?" (அக - 280) எனக் கூறுகிறான்.
இங்கு தலைவியின் தந்தைக்குச் சிறு சிறு உதவிகளைச் செய்தாவது தலைவியைப் பெறவேண்டும் என்ற தலைவனின் மனம் புலனாகிறது.
வருந்திக் கூறல் என்பது, அல்லகுறிப்பட்ட தலைவன் ஒருவன், தலைவியைப் பார்க்க முடியாமல் ஏற்பட்ட வருத்த மிகுதியைத் தன் நெஞ்சிடம்,
"நெஞ்சே, வல்வில் ஓரிக்கு உரிமையான கொல்லி மலையில் உள்ள பாவை போன்ற நம் தலைவியால் நீ மயங்கித் துன்புற்று வருந்துகிறாய். அவள் பருத்த தோள்கள் உன் அணைப்பிற்கு அரியவையாகும்" (குறு - 100) அதுமட்டுமன்றி, "வறுமை மிக்க ஒருவன் இவ்வுலக இன்பங்களை அடைய விரும்பியதைப் போன்று நீயும் அடைவதற்கு அரிய ஒன்றையே விரும்பியிருக்கிறாய்; நம் தலைவி நல்லவள் என்று அறிந்ததைப் போன்று, நாம் விரும்பும் போதெல்லாம் பெறுதற்கு அரியவள் என்பதனை நீ அறியவில்லையே" (குறுந் - 120) எனவும் வருந்தி உரைத்தான்.
சாபம் கூறுதல் என்பது, அல்லகுறிப்பட்ட தலைவன், தன் நெஞ்சினை நோக்கி,
"நெஞ்சே! நம் தலைவி அடைதற்கு அரியவள் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறாய். அவளை நாம் நெருங்க இயலாது என்பதனையும் யான் கூறியிருக்கிறேன். ஆயினும், என் கூற்றைக் கேட்காமல் நாள்தோறும் குறமகளது நல்ல கொங்கைகளை விரும்புகிறாய். அவ்வழி கடுங்காவலை உடைய இரவில் வந்தும் அவளைப் பெற முடியவில்லை. அதனால் மிகவும் துன்பமுற்று, உலகோர் இகழ்ந்து சிரிக்க, அடங்காத காமத்தால் அரிய துன்பத்தை எனக்குத் தந்துவிட்டாய். ஆதலால் நீயும் மாய்ந்து போக" எனச் சாபமிடுகிறான்.
இதனை,
"மாய்கதில் வாழிய நெஞ்சே! - நாளும்
மெல்இயற் குறுமகள் நல்அகம் நசைஇ
அரவு இரை தேடும் அஞ்சவரு சிறுநெறி,
இரவின் எய்தியும் பெறாஅய், அருள்வரப்
புல்லென் கண்ணை புலம்புகொண்டு, உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெருநகை யாக
காமம் கைம்மிக உறுதர
ஆனா அரும்படர் தலைத்தன் தோயே" (அக - 258; 8 - 15)
என அந்த அடிகள் உணர்த்தும்.
இதுகாறும் கூறியவற்றால் தலைவியின் நினைவால் வாடும் தலைவனின் மனநிலையை, அகநானூறு, குறுந்தொகைப் பாடல்கள் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.