ஆஞ்சநேயர் திருக்கோவில் - நாமக்கல்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

* அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்

                                                                                                      
T 500 463.jpg

மூலவர் : ஆஞ்சநேயர் -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : நாமக்கல்
மாவட்டம் : நாமக்கல்
மாநிலம் : தமிழ்நாடு


தல சிறப்பு:

இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் அருள்பாலிக்கிறார்.

இச்சன்னதியின் பக்கவாட்டு சுவர்களிலுள்ள அஷ்டபுஜ நரசிம்மர், வைகுண்ட பெருமாள், வராகர், மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பங்கள் அவசியம் காணவேண்டியவை.


தலபெருமை:


குடவறை நரசிம்மர்: இது ஒரு குடவறை சிற்பம். கூரிய நகங்களுடன் இருக்கும் இவர், இரணியனை சம்ஹாரம் செய்ததன் அடையாளமாக உள்ளங்கையில் ரத்தக் கறையுடன் காட்சி தருவது கலியுக அதிசயம். அருகில் சனகர், சனாதனர், சூரியன், சந்திரன் மற்றும் பிரம்மா உள்ளனர். நரசிம்மர் குடவறை மூர்த்தி என்பதால், திருமஞ்சனம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம் நடக்கிறது.

தாயார் சிறப்பு: நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்தால், "லட்சுமி நரசிம்மர்' என்றழைக்கப் படுவார். ஆனால், லட்சுமி இவரது மடியில் இல்லாமல், மார்பில் இருக்கிறாள். நாமகிரி தாயார் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறாள். இவளை வணங்கிட, கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.

பக்த ஆஞ்சநேயர்: சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோயில் எதிரே தனிக்கோயில் இருக்கிறது. 18 அடி உயரமுள்ள இவர், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.


தல வரலாறு:


ஒருசமயம் கண்டகி நதியில் (நேபாளத்தில் உள்ளது) ஆஞ்சநேயர் நீராடியபோது, ஒரு சாளக்ராமம் (திருமாலின் வடிவமாக கருதப்படும் புனிதமான கல்) கிடைத்தது. அதை பூஜைக்காக எடுத்துக்கொண்டு வான் வழியே பறந்து வந்தார்.

இத்தலத்தில் நீராடுவதற்காக இறங்கிய அவர், கமல தீர்த்தத்தைக் கண்டார். சாளக்ராமத்தை கீழே வைக்க முடியாது என்பதால் என்ன செய்வதென யோசித்த வேளையில், தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவமிருப்பதைக் கண்டார்.

அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார். திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும், அந்த வடிவத்தைக் காண தான் தவமிருப்பதாகவும் கூறினாள். ஆஞ்சநேயர், அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடிவிட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்துவிடுவேன் என லட்சுமி நிபந்தனை விதித்தாள். ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டாள். தாமதமாக வந்த ஆஞ்சநேயர், சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில், நரசிம்மர் தோன்றி, தாயாருக்கு அருள் செய்தார். இவர் "லட்சுமி நரசிம்மர்' எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.


திருவிழா:

பங்குனியில் 15 நாள் விழா நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர், தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அதன்பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே சுவாமி, தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கிறது.


பிரார்த்தனை


திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


திறக்கும் நேரம்:


காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும்.


--பவள சங்கரி திருநாவுக்கரசு. 15:42, 19 ஜூன் 2011 (UTC)

நன்றி - தின மலர்

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 19 ஜூன் 2011, 16:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,575 முறைகள் அணுகப்பட்டது.