ஆத்தூர் வசிஷ்டாரண்ய மஹிமை - ஸ்தல வரலாறு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

ஆத்தூர் வசிஷ்டாரண்ய மஹிமை - ஸ்தல வரலாறு


ஈசுவர நாடி ஓலைச்சுவட்டிலிருந்து தொகுத்தது.


1969 ல் வெளியிட்டபோது தொகுத்தவர் : ப.நடேச ஐயர் - வேதாந்தமடம்

உலகெலாம் போற்றும் உமையொரு பாகனாய் ஓதற்கரிய ஓம் எனும் குடிலையும் பொருளாய் ஐந்தொழில் நடாத்தும் அம்மையப்பனய்க் கைலைவாசனாம் பரமசிவத்தின் கட்டளையைப் போற்றும் பிரமதேவனால் சிருட்டிக்கப்பெற்ற புண்ணிய பூமியாகிய பரத கண்டத்திலே உள்ள மூர்த்தி தலம்,தீர்த்த விசேடங்களைக் கூறிவரும் போது தெ பாரிசத்தில் வெள்ளாற்றங்கரையில் பஞ்சபூத லிங்க ஸ்தலங்களின் மகிமைகளையும் வரலாறுகளையும் கேட்க ஆவலுடையவராயிருக்கின்றோம். அநுகிரகிக்க வேண்டுமென்று பணிவுடன் கேட்ட சென்னகாதி முனிவர்களுக்குச் சூதபுராணிகர் கூறத் தொடங்கினார்.


பக்தியிற் பதிந்து பணிந்த மாதவச் சிரேட்டங்களைச் சூத மகா முனிவர் தன்னருள் நோக்காலினிது நோக்கி,’மாசறு ஈசன் மலரடியென்றே மறவாதிறைஞ்சும் மாதவச் சீலர்காள் ! உலகெலாம் போற்றும் உமையொளிப் பாகன் தன்னிடத்தே தளராவன்புடைய உபய சம்புவாந்திருநந்தி தேவருக்குத் திருவாய் மலர்ந்தருளியதும் நந்தியெம்பெருமான் சனற்குமாரர்க்கும், சனற்குமாரர் வேத வியாசர் எங்களுக்கும் அருளிச் செய்ததும் ஸ்காந்தம்,பிரமாண்டம் ஈசுரநாடி முதலிய புராணங்களில் விரிவாய்க் கூறியதுமாகிய அதனைச் சுருக்கமகச் சொல்லுகிறேன் கேட்பீர்களாக ,’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.


முன்னொரு காலத்தில் ஸ்ரீ வசிட்ட மாமுனிவர் சிவபெருமானை நோக்கி அருந்தவம் புரியலானார். பன்னெடுங்காலம் தன்னை வழிபடும் பக்தனை ரஷிக்க வேண்டும் என்னும் கருணையினால் முன் தோன்றி தன்னை மறந்து பரவசமடைந்த வசிட்டனைப் பார்த்து, அருந்தவ ! யாது கருதித் தவங்கிடந்தாயென, அதனைக் கேட்ட வசிட்டர் எம் பெருமானே ! அகக்கண்ணால் தரிசித்த தேவரீரையே தவங்களைந்து பறமாகும் போது புறத்திலும் மனமொழி மெய்களால் வழிபடும்படியாகிய வரத்தை ஈந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்க அதற்கு இறைவன் அருந்தவ நீ வேண்டியவாறே எம்மை பூசிப்பாயாக, இதோ எம்மால் எடுத்து வீசிய சடையின் சிறிய அம்சமே மலையாகவும் அச்சடையிலிருக்கும் கங்கையே நதியாகவும் பிரவாகித்துச் செல்லும், அந்நதி வளம் பெருகியவிடமே எமக்கு உகந்த ஸ்தானமாகும். ஆதலால் அவ்விடத்தில் ஆலயமைத்து லிங்க பிரதிஷ்ட்டை செய்து வழிபடுவாயாக என்று அநுக்கிரகித்து மறைந்தருளினார். அருந்தவ வசிட்டனும் இறைவனருளிய ஸ்தானத்தையே தபோவனமாகக் கொண்டு அதில் ஆலயம் அமைத்து தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்திற்கு கைலாசநாதர் என்னும் நாமத்தை சூட்டியும் லோக மாதாவாகிய சக்திக்கு காமாஷி என்னும் நாமம் சூட்டியும் வழிபட்டு அச்சிவ பெருமானின் சாயுச்சிய பதிவியையெய்தினார் என்றும் கூறப்படுகிறபடியால் ஆருஷ ஸ்தலமாகிய இத்தலம் வசிட்டர் தபோவனம், வசிஷ்டாரண்யம், வசிஷ்டபுரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு கருவறையில் உள்ள இறைவன் வசிஷ்டபுரீஸ்வரர். வசிஷ்டவனேசுவரர் வசிஷ்டாரண்யேசுவரர் என்று காரணப் பெயரால் அழைக்கப்பட்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு கைலாச நாதேசுவரர் திருத்தலமாகும்.


பூர்வம் சுவேதனென்னும் முனிவர் தனக்குண்டான சரீர ரோகங்களையும் ஜென்ம ரோகத்தை நீக்கிக் கொள்ளும் கருத்துடையவராய் இந்த ஸ்தலத்தையடைந்து அருகேயோடும் வசிட்ட நதியில் நாள்தோறும் தீர்த்தமாடித் தென்பாரிசத்தில் எழுந்தருளிய காமாஷி சமேத கைலாசநாதனைப் பக்தி வினயத்துடன் பூசித்து தன் சரீரத்தில் தோன்றிய சகல ரோகங்களும் நீங்கப் பெற்றவராயும் மேன்மேலும் சிரத்தையோடும் வழிபாடு செய்ய சாதன சதுட்டய வாயிலாக சிவ ஞானம் பெற்று முடிவில் மீண்டும் வாராப் பரமுத்தியை யெய்திய காரணத்தால் இந்த ஸ்தலம் சுவேதபுரியென்றும் வழங்கலாயிற்று.


சுவாயம்புமநுவந்தரத்தில் அனந்தன் என்னும் பேருடைய வேடர்குலத் தலைவன் தன்பந்துக்களோடு சடைமலையின் சாரலே வாழுமிடமாகக் கொண்டு நாள்தோறும் வழிப்பறி, கொள்ளை, கொலை முதலிய தீய பாதகங்களைச் செய்து அதனால் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஜீவித்துவருவானாயினான். இப்படி இவன் செய்து வரும் தினத்தில் ஒருநாள் வழிப்போக்கர்களாகிய ஒரு கூட்டத்தைத் தன் பந்துக்களோடு சேர்ந்து தாக்கும் போது, வெட்டு, குத்து, அறு, உதை அடி என்ற பல கடுஞ் சொற்கள் கூறும்போது அனனை அறியாமலே அரன் என்னும் நாமத்தைக் கூறினான். இவ்விதம் சிலவாண்டுகள் கழிய வயோதிகமடைந்து நானாவித வியாதிகளினால் பெருந்துன்பத்தை அநுபவித்து மரணமடைய எமகிங்கிரர்கள் இவனை எமராஜனின் சபையில் நிறுத்தி சித்திரகுப்தனைக் கொண்டு நன்மை தீமைகளைக் கணக்குப் பார்க்க அரன் என்னும் நாமத்தைக் கூறிய மகத்துவத்தால் சகல பாவங்களும் ஷமிக்கப்பட்டு, மறு பிறவியில் நடு நாட்டின் அரசனாகத் தோன்றி வெள்ளாற்றங்கரையில் உள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்து வரும்போது வசிட்டரைத் தரிசிக்க நேரிட்டது. பெரியோர்கள் கரிசனம் நன்மைக்குத்தான் என்றறிந்த அரசன், வசிட்ட மகானுபாவரே ! பாவியாகிய என்னையும் ரஷிக்க வேண்டுமென்ற பக்தி வினயத்துடன் வசிட்ட முனிவரை நோக்கிக் கூறி வணங்க, வசிட்டரும் அவன் பூர்வீகத்தை ஞானநோக்கத்தால் உணர்ந்து, ‘அரசே ! நீ பூர்வ சென்மத்தில் வேடனாய்ப் பஞ்சமாப்பாதகத்தில் முழுகிக் கிடந்தாய். ஒரு தடவை அரன் என்னும் எம் பெருமானின் நாமத்தைக் கூறிய மகத்துவத்தால் இவ்வரச பிறவி கிடைக்கப் பெற்றாய்” என்றதும் அரசன் ஆச்சரியப்பட்டு ஒரு தடவை கூறிய நாமவைபவம் இதுவாகுமானால் எம்பெருமானின் ஆயிர நாமங்களையும் அடியேனுக்குக் கூறியருள வேண்டுமென வணங்க வசிட்ட மகா முனிவரும் அனுக்கிரகம் செய்ய அதன்படியே நாள்தோறும் காமாஷி சமேத கைலாசநாதனை ஆயிர நாமம் சொல்லி அர்ச்சித்து சிவானுபூதியைப் பெற்று சவசாயுச்சியப் பதவியைப் பெற்றான் என்றும் கூறப்படுகிறது. கல்மீதிருக்கும் கைலாயநாதனை அனந்தன் வழிபட்டு முக்தி யடைந்தமையால் இந்த ஸ்தலம் அனந்தகிரி என்றும் வழங்கப்படுகிறது.


காப்புரிமை : ப.சுந்தர நாயக்கர் இயற்றிய ஸ்ரீ கைலாசநாதர் மாலை , தொகுக்க உதவியவர் : ஈஸ்வரநாடி, உயர்திரு ஜோதிடர் ஆறுமுக ஐயர், அவர்கள்.

பவள சங்கரி திருநாவுக்கரசு

தேதி - 30 - 03 - 2011
--

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 30 மார்ச் 2011, 16:45 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 985 முறைகள் அணுகப்பட்டது.