ஆந்திரமும், முருக வழிபாடும் 1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 ஸ்கந்த,  குமரா, கார்த்திகேயா, சுப்ரமண்யா!  
இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் ஒரு சில விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1) கடந்த 60 வருடங்களுக்கு முன்பு வரை ஆந்திரக் கடற்கரையோரப் பகுதிகள் (தற்போதைய கோஸ்டல் ஆந்திராவும் தென்கோடி ஒடிஷா கடற்கரை பிரதேசங்களும்) நம் தமிழகத்துடன் இணைந்து இருந்தது
2) இப்போது வித்தியாஸமாக நோக்கப்படும் அளவில் முந்தைய கால கட்டத்தில் மொழிபேதம் பார்க்கப்படவில்லை
3) தமிழகத்தில் பக்தி மார்க்கத்தால் ஆயிரக்கணக்கான கோயில்கள் எழுப்பப்பட்ட அளவுக்கு அதே காலக் கட்டத்தில் ஆந்திரப் பகுதியில் ஏற்படாதது.
4) பொதுவான கலாசார விஷயங்களில் தமிழகப்பகுதிகளும் ஆந்திரப்பகுதிகளும் கூடுமானவரை ஒன்றாகவே மக்களால் பின்பற்றப்பட்டது.

ஆஹா,, இதெல்லாம் எதற்கு, சொல்லவந்ததை சொல்லி விட்டுப் போயேன் என்கிறீர்களா? எல்லாம் ஒரு முன் எச்சரிக்கையின் விளைவுதான்.. இல்லையேல் எங்கள் தமிழனின் தனிக்கடவுளான எந்தை முருகனை ஆந்திரத்துக்கும் சொந்தமாக்குகிறாயே என பின்னால் ஒரு பேச்சு எழக்கூடாது பாருங்கள், அதற்காக மட்டும்தான்.. சரி, விஷயத்துக்கு வருவோம்.

ஆந்திரமும் முருகனும் எனும் இக்கட்டுரை பலநாள் முயற்சியின் பலனாகத்தான் எழுதப்பட்டதாய் நான் கருதுகிறேன். பல தகவல்கள் வேண்டி சேகரிக்கவேண்டியதால் கட்டுரையும் நாள் தள்ளிக்கொண்டே போகிறது. முடிந்தவரை நமக்குத் தெரிந்ததை அந்த முருகன் அருளால் பகிர்ந்து கொள்ளலாமே என்றுதான் இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.

தமிழன் என்றாலே கூடவே முருகனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.. தான் எங்கு சென்றாலும் தன் மனதில் முருகக்கடவுளைக் கூட்டிச் செல்வான். எங்காவது வெகு காலம் தங்க நேரிட்டு விட்டால் அவன் மனது முருகனுக்கு ஒரு கோயிலைக் கட்டி விடு என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போல. குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென திரைப்பட வசனம் பேசுவது போல தமிழன் நிரந்தரமாக நின்றிருக்கும் இடமெல்லாம் முருகனுக்கும் ஒரு கோயில் கட்டி வைத்து விடுவான். இது தமிழன் கதை.. ஆனால் இங்கு நாம் தமிழன் கதை பேசப்போவதில்லை. தமிழன் தன்க்கே உரிய கடவுள் என மதித்த முருகனின் அண்டை மாநிலப் பிரவேசங்களை மட்டும் பேசுவோம்.

வடவேங்கடமானாலும் திருவேங்கடமானாலும் ஆதி காலத்திலிருந்தே வேங்கடம்தான் தமிழகத்தின் எல்லையாக இருந்தது. இன்னமும் சொல்லப் போனால் காஞ்சியைத் தாண்டிய தமிழகத்தின் வட எல்லை முழுவதும் காடு மலை பாலையாக இருந்ததை சரித்திர ஆதாரங்களும் சங்கத்தமிழ்ப் பாடல்களும் நமக்கு விலாவரியாக விவரிக்கின்றன.முருகன் தமிழ்ச்சங்க காலத்திலிருந்தே தெய்வமாக போற்றப்பட்டவன். திருமுருகாற்றுப்படை ஒன்றே போதும், முருகன் தமிழனுக்கு எத்தனை பழமையானவன் என்று சொல்வதற்கு..

கந்தபுராணம் முருகன் தோன்றிய வரலாறு பற்றிய மிகப் பெரிய புராணவரலாற்றைச் சொல்லும். ஆண்டவன் என வரும்போது அவன் எல்லோருக்குமே தலைவன். அவனுக்கு படைப்பில் பேதம் எதுவும் கிடையாது. ஆனால் பூமியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் மிகப் பெரிய பொறுப்பு தேவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிலை அவர்கள் ஒழுங்காக செய்து கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் பாற்கடல் கடையப்பட்டு அமுதம் வரவழைக்கப்பட்டு அது கட்மையை செவ்வனே செய்யும் தேவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களது ஆதிக்கத்தால் இந்த பூமியே ஆளப்படும்போது, அசுரர்கள் அவர்களை எதிர்த்து அவர்கள் ஆதிக்கத்தைக் கைப்பற்றுவது என்பது தேவாசுர விளையாட்டுகளின் ஒன்றாக இருக்குமோ என்னவோ.. பேதமில்லாத ஆண்டவனின் வரங்களைப் பெற்ற அசுரர்கள் தனக்குக் கிடைத்த வரங்களை வைத்து தேவர்களை முதலில் சிறைப்படுத்தவே விரும்புகிறார்கள். ஒவ்வொரு சமயம் பூமியில் நடக்கும் யுத்தங்கள், நாடு பிடித்து ஆளவது இவைகள் யாவுக்கும் முன்னோடியே இந்த தேவர்களும் அசுரர்களும்தான் என்று நினைக்கத் தோன்றும். அசுர வர்க்கத்தில் தெய்வ வரம் பெற்று இப்படி எழுந்தவன் தான் மிகப் பெரிய அசுரனான தாரகாசுரன். இவனால் அடக்கி ஆளப்பட்ட தேவர்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறும் நிலைக்கு வந்ததால் தாரகாசுரனை வதைப்பதற்கான ஒரே மார்க்கமான (அசுரனின் நிபந்தனையின்படி) குமரக் கடவுளைத் தோற்றுவிக்க, அதற்காக சிவனும் பார்வதியும் இணைய மன்மதனை அனுப்புகிறார்கள்,, மன்மதன் தன் காமக் கணையைக் குறி தவறாமல் வீச தவத்தில் இருந்த சிவபெருமானின் மூன்றாவது கண்ணினால் தன் தவத்தைக் கலைக்க முயன்ற மன்மதனை எரிக்கிறார். இங்கே சிவபெருமானின் தவத்தைக் கலைக்க முயன்ற என்று எழுதியதற்குக் காரணம் உண்டு. அனைத்தும் அறிந்தவன் அவன். அவன் தவம் செய்வதால் பிரபஞ்சம் இயங்குகிறது. இருந்தும் இறைவனின் தவத்தைக் கலைக்க யாருக்குமே அதிகாரம் கிடையாது என்பதால் தேவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டுமே என்ற நோக்கில் மட்டுமே மன்மதன் எரிப்பது பார்க்கப்படவேண்டும்.

.மன்மதன் எரிந்தபிறகு காமத்துக்கு அங்கே வேலை இல்லை. காமம் அழிந்த பிறகு விருப்பத்துக்கே வேலை இல்லாத பட்சத்தில் எந்தப் பிறப்புமே இனி நடக்க சாத்தியமில்லை. தேவர்களின் வேண்டுதலான முருகன் அவதரிக்கவேண்டுமென காரணத்துக்காகத்தானே மன்மதன் அங்கு அனுப்பப்பட்டான். இங்கே மன்மதனே பலியானபின் குமரன் அவதாரம் ஏது.. இனி பிரபஞ்சம் எங்கும் பிறப்பேது.. இருந்தாலும் பராசக்தியின் கருணைக்கடாட்சத்தினால் மன்மதனுக்கு உயிர் மட்டும் கிடைக்க அவன் தன் வேலையைத் தொடங்குவதற்கும் சாத்தியமாகிறது.


சக்தியும் சிவனும் முருகனை அவதரிக்கச்செய்ய அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட இடமே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம் மலைதான் என்கிறது இங்குள்ள கோயில்களின் – கிருஷ்ணா நதிக்கரை கோயிலான அமராவதியும், அருகேயே அமைந்துள்ள நல்லகொண்டா மலைத்தொடரில் சிகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் சிவத்தலங்களின் புராணகதைகள் இவ்வாறுதான் சொல்கின்றன. அமராவதி கோயிலில் குமாரசுவாமி இங்குதான் அவதரிக்கிறார் என்று நேரடியாக தலப்புராணமாக எழுதியுள்ளார்கள்., அமராவதியைப் பற்றி சொல்லும்போது நாம் அங்கேயுள்ள பழைய நடப்புகளைப் பற்றியும் விவரிக்கவேண்டிதாக உள்ளது.


கி.பி. ஒன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் இங்கே அரசாட்சி செய்த இக்குவாகு வம்சத்தவர்கள் தனக்கு முன்பே ஆண்ட சாதவாகனர்களின் பௌத்தமதக் கொள்கைகளை கைவிட்டு சனாதன தர்மத்தைக் கைக்கொண்டனர். சனாதன தர்மத்தில் ரிஷி கோத்திரங்கள் மிக முக்கியமானவை. இந்த ரிஷி மூலம் வந்த தம் முன்னோர்கள் வழியாக தாம் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதே கோத்திரங்களின் அவசியம். பௌத்த சமண சமயம் சார்ந்த அரசர்கள் ஆட்சியின் போது இந்த கோத்திரங்களை அவர்கள் வெறுத்தார்கள். தாங்களை சிறப்பானவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலும், பாட்டன், முப்பாட்டன் பெயரை மட்டும் சொல்லிக்கொள்வதிலும் ஆர்வம் காட்டினார்களே ஒழிய தான் இந்த கோத்திரம் என்று சொல்லிக்கொள்வதில்லை. சனாதன் தர்மத்தில் அக்னி வழிபாடு (யாகங்கள்) என்பது தலையானது. துறவறம் என்பது சனாதன தர்மத்தில் அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். எல்லா ரிஷிகளுமே இல்லறத்தைப் பேணி வளர்த்தார்கள். ஆனால் பௌத்தத்தில் யாக வழிபாட்டை அறவே ஒழித்தனர். துறவறம் சிறப்பாகப் பேசப்பட்டது. துறவிகள் தங்க ஆங்காங்கே விஹாரங்கள் எழுப்பப்பட்டன். இளையவயதில் பெண்களும் ஆண்களும் துறவறத்தை மேற்கொள்ளும் சாத்திரங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் அதே சமயத்தில் வர்ணங்களுக்கு அதாவது நால்வகை வர்ணங்களுக்கும் ஒரு முக்கிய அந்தஸ்து கொடுத்தும் வந்தாலும் சத்திரியப் பிரிவை முன்னிலைப் படுத்தினர். அதன் மூலம் முதல் பிரிவான பிராம்மணர்களை ஒதுக்கி வைத்தார்கள். அதனால் ஒதுக்கப்பட்ட பிராம்மணர்களின் நிலை தாழ்ந்து போனதால், தங்கள் நிலையைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு அவர்களில் பலரும் பௌத்த சமயத்துக்கு மாறினர். பொதுவாக ஆதி காலத்திலிருந்தே பிராம்மணர்கள் ஆச்சார்ய ஸ்தானத்திலேயே இருந்து வந்ததால் பௌத்தத்துக்கு வந்த பிறகும் அவர்கள் அந்த நிலையில் இருந்தார்கள். சாத்திரம் மாறியது, கோத்திரம் போனது, ஆனாலும் தங்கள் தலைமைப் பீடத்தை பௌத்தத்திலும் தக்க வைத்துக் கொண்டனர். அப்படி முதன்மைஸ்தானத்துக்கு பிராம்மண்ராக இருந்து வந்தவர்தாம் நாகார்ஜுனாச்சார்யா எனும் பௌத்த மதத் தலைவர். சாதவாகனர்கள் காலத்தில் (கிருஸ்துவுக்கு முந்தைய முதல் முன்னூறு ஆண்டுகள்) நாகார்ஜுன ஆச்சாரியாரின் கொள்கைகளும், அவர் வகுத்துத் தந்த சாத்திரங்களுமே முதன்மைப் படுத்தப் பட்டன. (இன்றைக்கும் நாகார்ஜுனா ஆச்சாரியரின் பெயரில் கிருஷ்ணை நதிப் பிராந்தியத்தில் ஒரு பல்கலைக்கழகம் (குண்டூர்-விஜயவாடா மார்க்கம்) இருக்கிறது. அவர் பெயரில் ஒரு பெரிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள நீர்த்தேக்கத்துக்கு நாகார்ஜுன சாகர் என்றே பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. சாதவாகனர் கால ஆட்சி வரை இருந்த இந்த பூரண பௌத்த ஆதிக்கம் இக்குவாகு வம்சத்தினர் ஆட்சி வந்ததும் பழைய நிலைக்கு வந்தது.

இக்குவாகு வம்சத்தினரின் ராஜாக்கள் (இவர்களுக்கும் ஸ்ரீராமனின் வம்சமான இக்‌ஷவாகுக்கும் எவ்வித முகாந்திரமும் இல்லை, வேண்டுமெனில் ஆந்திர இக்‌ஷவாகு என்று அழைக்கலாம்) சனாதனதர்மத்தில் உள்ள கோத்திர வழியைப் பின்பற்றினர். ஒரு அரசன் பெயரே வசிஷ்டபுத்திர் சாந்தமுலன் என அழைக்கப்பட்டதாக இங்கு கிடைக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன. இவன் ஆட்சியின் போதுதான் சனாதன தர்மத்தின் ஆணிவேரான யாக வழிபாடு (அக்னி வழிபாடு) முன்னிலைப்படுத்தப்பட்டது. அஸ்வமேதயாகம், வாஜ்பேய யாகம் போன்றவைகளை நடத்தியதற்கான ஆதாரங்கள் இங்கு கிடைத்துள்ளன. இவர்கள் ஆண்ட பகுதி என்பது இன்றைய குண்டூர், கர்நூல் மாவட்டங்கள்தாம். இந்த மாவட்டங்களின் வட எல்லை போல கிருஷ்ணா நதி பாய்ந்து கொண்டிருப்பதைக் காணமுடியும். கர்நூல் மலைவளத்தை அதிகம் கொண்டது. இன்றைய குண்டூர் அமராவதியில் இருந்து மேற்காகச் சென்றால் இன்றைய நாகார்ஜுன கொண்டா எனும் ஊரை அடையலாம். இந்த ஊருக்கு அப்போதைய பெயர் விஜயபுரி. இந்த விஜயபுரியே சாதவாகன, இக்குவாகு வமசத்தவர்க்கும் பின்னால் வந்த அரசர்களுக்கும் தலைநகரமாக விளங்கியது.

சரி, முருகனுக்கும், மேற்கண்ட வரலாற்றுக்கும் என்ன தொடர்பு? அதையும் பார்ப்போமே!!


படங்களுக்கு நன்றி கூகிளார். (நடுவில் உள்ளது அன்றைய நாகார்ஜுனகொண்டாவில் உள்ள புத்த விஹாரச் சிதைவுகள். அடுத்து வருவது இன்றைய நாகார்ஜுன அணைக்கட்டு)
(தொடரும்)


எழுதியவர் திரு திவாகர்


--Geetha Sambasivam 11:23, 8 ஜனவரி 2013 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 8 ஜனவரி 2013, 11:23 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,173 முறைகள் அணுகப்பட்டது.