ஆந்திரமும், முருக வழிபாடும் 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 ஸ்கந்த, குமரா, கார்த்திகேயா, சுப்ரமண்யா!நம்பனார்க் கொருபது நார ணற்குநான்(கு)
க(அ)ம்புயத் தவற்கிரண் டலரி யங்கியாம்
உம்பர்வான் சுடர்களுக் கோரொன் றென்பரால்
இம்பரி லிசைக்கும்அப் புராணத் தெல்லையே.

.வியாசமுனிவர் வகுத்த இந்த பதினெண்புராணங்களில் ஸ்ரீஸ்கந்தபுராணம்தான் மிகச் சிறந்த புராணமென்று கச்சியப்ப முனிவர் தன் தமிழ் கந்த புராணத்தில் கூறுகிறார். கந்தன் பிறந்த தொன்மை வரலாற்றை நம் தமிழகத்து கச்சியப்பமுனிவர் 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் காஞ்சி அருகே உள்ள குமரக்கோட்டத்தில் ஸ்கந்தபுராணத்தின் தமிழாக்கத்தை எழுதினார். தமிழில் பாடிய கந்தபுராணத்தில் பல சந்தேகங்கள் உண்டானபடியால் (கல்விக்கு பெயர் போன இடம் காஞ்சி, அதுவும் கல்வியாளர்கள் எப்போதும் எல்லாவற்றையும் எதிர்வாதம் செய்து, சந்தேகங்கள் தெளிந்து அதன் பிறகே எந்தக் காவியத்தையும் ஒப்புக்கொள்வார்கள்.) கச்சியப்பமுனிவருக்கு உதவி புரிய சாட்சாத முருகப்பெருமானே ஒரு புலவர் வடிவில் நேரில் வந்து இவை சரியாகப் பாடப்பட்டதுதான் என்று எல்லோரும் ஏற்கத்தக்கும் அளவில் விளக்கம் கொடுத்து மறைந்தார் என்றும் குமரக்கோட்டத் தலபுராணம் சொல்கிறது.

சூரபன்மன் எனத் தமிழிலும் தாரகாசுரன் என வடமொழியிலும் தரப்பட்டாலும் அசுரன் தன்னைக் கொல்லாமை வரம் பெற்றதும் அப்படிக் கொல்லும் பட்சத்தில் சிவசக்தியின் மைந்தனாகவும், அதுவும் ஏழு நாட்கள் வயதே ஆன மகவாலும் தான் கொல்லப்படவேண்டும் என்று வரம் கேட்டதாக புராணக்கதை நமக்குத் தெரிவிக்கிறது. அதே போல இங்குள்ள அமராவதி கோயில் தலபுராணம் ஆறுமுகனாகப் பிறந்தவன் ஓருருவம் தாங்கியது ஏழாம் நாள் என்றும் அந்த ஏழாம் நாளிலேயே தேவர்களின் சேனாதிபதியாகப் பொறுப்பேற்று மகாசேனன் என்று பெயரோடு அசுரனுடன் துவந்த யுத்தத்தில் மோதி, அசுரனை அழித்து, தேவர்களையும் இந்திரனையும் சிறைமீட்டு தேவர்களின் நகரமான அமராவதியையும் மீட்டதாகக் கூறுகிறது. அசுரனை அழித்த இடம் பற்றி யாரும் எதுவும் பேசுவதில்லை. செந்தூரில் சக்தியிடம் வேலாயுதத்தைப் பரிசாகப் பெற்றவன், அங்கேயிருந்த கடலுள்ளே இருந்த சூரபன்மனை வதைத்தாக நம் தமிழ்க்கதைகள் பல உள்ளன. ஆனால் இந்த ஆந்திரக் கதையில் வரும்போது இந்த அசுரன் நீள அகலம் அளக்கமுடியாதவன் என வர்ணிக்கப்படுகிறான்.

ஸ்ரீசைலபுராணத்தில் சக்தியும் சிவனும் கார்த்திகேயனைப் பெற்றுத் தந்ததாகத் தரும் தகவல்கள் இந்த அமராவதிக் கோயில் கதையுடன் ஏராளமாக ஒத்துப்போகிறது. முருகன் அசுரனை வதைத்த இடம் எந்த இடமாக இருந்தாலும், மஹாசேனாதிபதியாகவும் தேவர்கள் தலைவனாகவும், இந்திரன் தன் மகளைக் கொடுத்து மாப்பிள்ளை சுவாமியாக அருள் தந்ததாக ஆந்திர மக்களுக்கு அவன் அறியப்பட்டிருக்க வேண்டும்.

இங்கே விஜயபுரியில் (நாகார்ஜுனகொண்டா) இக்குவாகு மன்னரான சாந்தமூலன் மஹாசேனனுக்கும் தங்கள் குல காவல் தெய்வமாக ஆராதித்து முருகனுக்கும் தேவயானைக்கும் கோயில் எடுத்ததாக (E.I, XX. NKD Inscriptions) வும், இந்தக் கோயில் நாளடைவில் பாழடைந்து இடிபாடுகளுக்கு பலியானதாகவும், திரு எம். ராமாராவ், தன் ‘தி இக்‌ஷவாகு ஆஃப் விஜயபுரி’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கிபி.இரண்டாம் நூற்றாண்டில் அரசாண்டபோதே முருகனுக்குக் கோயில் எடுப்பித்ததோடு முருகன் நாமத்தையும் பலரும் முக்கியமாக பிராம்மணர்கள் வைத்துக் கொண்டதையும் ‘கொண்டமுடி தகடுகள்’ விவரமாக சொல்கிறது. மஹாராஜா ஸ்ரீஜயவர்மர் காலத்தில் (ஏறத்தாழ இரண்டாம் நூற்றாண்டு) இருந்துதான் கிருஷ்ணை நதிக்கரையில் இந்த அரச ஆணைகள் தாமிரத் தகடுகளில் பட்டயங்களாக பதிக்கப்பட்டு அவர்களால் பிராம்மணர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இவைகளை பிரம்மாதேய்ங்கள் என்றும் சொல்வர். இப்படிப் பட்டயம் பெற்று பலனடைந்தவர்களில் ஒருவர் கௌசிக கோத்திரத்தைச் சேர்ந்த ஸ்கந்த ருத்ரஜா எனும் அந்தணரும் ஒருவர். (பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).


பேராசிரியர் பி.எஸ்.என். ராவ் தனது ’சமூகங்களின் பிடியில் ஆந்திரம்’ எனும் ஆங்கில நூலில் குறிப்பிடுகையில் சத்திரியர்களான இக்‌ஷவாகு அரசர்கள்தான் சனாதன தர்மத்துக்கும் வேதங்களின் புனர் வாழ்வுக்கும் காரணமாக இருந்தவர்கள் என்று குறிப்பிடுவதோடு புத்தமதத்தைச் சேர்ந்த சக்தி வாய்ந்த பெருமக்களை ‘சுவர்ண கர்ப்பமஹாதானா’ எனும் யாகத்தின் மூலம் மறுபடியும் வேதமதத்தில் சேர்த்தவர்கள் இவர்கள். ஏறத்தாழ இந்தக் கால மதமாற்றம் போல நடந்ததாக்க் கொள்ளலாமோ என்னவோ. விஷ்ணுகுந்தின் மாதவர்மா எனும் அரசனின் தந்தை தன் மகன் வேதமதத்துக்கு திரும்ப சம்மதிக்காததால் தேவர்களின் அனுமதிக்காக மேற்கண்ட யாகத்தைச் செய்ததாக ஒரு குறிப்பு (EI-IV, PP-193-198) சொல்கிறது. அத்துடன் கோயில்கள் நிறுவப்பட்டு இக்‌ஷவாகு வம்சத்தினர் கோயில் வழிபாடைக் கட்டாயமாக்கினர் என்கிறார் திரு ராவ். அதன் ஒரு பகுதியாகவே விஜயபுரியில் முருகன் கோயில் மஹாசேனன் என்ற பெயரில் கட்டப்பட்டதாகும்.

இக்குவாகு அரசர்களுக்குப் பின் வந்த அரசர்கள் சாலங்காயனவர்கள். இவர்கள் வம்சம் முழுவதும் பிராம்மணர்களாக இருந்தார்கள். இவர்கள் முதலில் கோதாவரி மாவட்டங்களில் அரசை ஸ்தாபித்து பின் படிப்படியாக முன்னேறி இக்‌குவாகு அரசர்களை வென்று அவர்கள் ராஜ்ஜியத்தையும் தம் ஆளுகைக்குள் உட்படுத்தினர். இப்போது இதே குண்டூர், கிருஷ்ணா, பிரகாசம் மாவட்டங்கள் கர்மராஷ்ட்ரம் எனப் பெயர் கொடுத்தனர். அதே போல தங்களையும் தேவர்களின் தூதர்கள் என்று சொல்லிக்கொண்டதும், சத்-பிராம்மணர்கள் எனப் பொருள் கொடுக்கும் ஸுப்பிரமணியத்தின் பெயரையும் வைத்துக் கொண்டார்கள். முருகனைத் தெய்வமாக வழிபட்டதோடு கூடவே அவன் கொடியான சேவலையும் தங்கள் கொடியாகக் கொண்டனர்.


இவர்களுக்குப் பின்னால் கர்மராஷ்டிரம் பிராந்தியம் முழுவதுமே பல்லவர்கள் (முற்காலப் பல்லவர்கள் என தமிழில் சொல்லலாம்) அளுகைக்கு உட்பட்டது. அதாவது மூன்றாம்-நான்காம் நூற்றாண்டுகளில் மிக அதிகமான அளவில் முருகன் வழிபாடு இருந்ததாற்கான ஆதாரங்கள் இங்கே உண்டு. பிராம்மணர்களான சாலங்காயன அரசர்கள் தங்கள் ஆதி இருப்பிடமான கோதாவரி தீரத்தில் அதன் வடக்கே பீடாபுரத்தில் சிவனுக்கும் முருகனுக்கும் கோயில் எழுப்பியதும் அந்தக் கோயிலுக்குப் பெயர் கொக்கடேஸ்வரர் கோயில் என்றே சொல்லப்படுவதுண்டு. கொக்கடேஸ்வரர் (சற்று மருவி குக்குடேஸ்வரர் என இப்போது வழங்கப்படுகிறது) என்பது சேவல் (கோழி) வடிவத்தான் என்பதாகும். இங்கு கோயில் மூலவர் லிங்க வடிவத்தில் இருப்பதால் மூலவரை சிவனாகவும் வழிபடப்படுவதுண்டு. கொக்க அல்லது குக்கு எனும் சொல் சேவல் அல்லது கோழி ’கொக்கரக்கோ’ என்று கூவுவதா வந்திருக்கலாம் என்றுதான் இங்கு பொருள் சொல்கிறார்கள். இதற்கான கதை (இந்த சொல் எப்படி வந்தது என்பது) வித்தியாஸமானதாக இருந்தாலும் நம் கட்டுரைக்கு சம்பந்தமில்லாததால் அதை இங்கே வெளியிடவில்லை. இந்த வார்த்தையை சற்று எச்சரிக்கையாக பலுக்கவேண்டும். ஏனெனில் குக்க என்றால் நாய் என்று தெலுங்கில் பொருள் உண்டு. பல்லவர்களின் மூலம் தெலுங்குதான். இக்குவாகு-சாலங்காயனர் வசங்களில் கிளை வழி வந்தவர்கள். பல்லவர்கள் தம்மை முதலில் ஜாதியின் பெயர்கொண்டுதான் (பிரும்மசத்திரியர்) அழைத்துக் கொண்டார்கள்.. பரத்வாஜ கோத்திரக்காரர்கள் என்பதற்கெல்லாம் சரித்திர ஆதாரங்கள் நிறைய உண்டு. துரோணரின் மகனான அஸ்வத்தாமனுக்கும் கிருஷ்ணை நதி தீரத்திலே இருந்த நாககன்னிகைக்கும் தங்கள் முன்னோர் பிறந்ததாகச் சொல்லிக்கொள்வர். அத்துடன் ஸ்ரீஸ்கந்தவர்மன் என்னும் பல்லவ மன்னன் மிகவும் புகழ்பெற்ற முதற்கட்ட பல்லவமன்னர்களுல் ஒருவன். இந்த பிரும்மசத்திரயர் என்று பல்லவர் சொல்லிக்கொளவதற்கும் முருகனுக்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றி சென்னையில் உள்ள கல்வெட்டறிஞரான திரு ராமச்சந்திரன் அவர்களது குறிப்பொன்று காணக்கிடைத்தது. அதை அப்படியே தருகிறேன்.

(பிரம்மக்ஷத்ரியத் தன்மை என்பது பிராமண-க்ஷத்ரியத் தன்மைகள் இணைந்த சுப்ரம்மண்யனின் தன்மையே என்பது தொடக்க காலப் பல்லவ மன்னர்களின் பெயர்களிலும் வெளிப்படுகிறது. ஸ்கந்த சிக்ஷ்யன், சிவஸ்கந்த வர்மன் என்ற பெயர்கள் இதற்குச் சான்றாகும். பிராமணர்களின் வழிபாட்டில் முதன்மையான இடத்தை வகித்த அக்நியின் தன்மையும், காற்றும் நெருப்பும் கலந்த யாகத் தீ வடிவமாகிய வைதிக ருத்ரசிவனின் தன்மையும், முருகனின் சின்னமாகிய கந்து அல்லது கந்தழி வடிவமும் இணைந்த ஒரு வழிபாட்டு மரபினைப் பல்லவர்கள் முதன்மைப்படுத்தினர்.இது தவிரத் திருமால் வழிபாட்டுக்குச் சமமாக தேவசேனாபதி பதவியை, அதாவது தேவர் படைத் தலைமைப் பொறுப்பை ஏற்ற சுப்ரம்மண்யன் (நல்ல பிராமணன்) வழிபாட்டுக்கும் பல்லவர்கள் முதன்மையளித்தனர்.)

இந்த சுப்பிரமணியன் எனும் பெயரே தெற்கு ஆந்திரத்திலிருந்துதான் தமிழகத்துக்கு இறக்குமதியானது என்று கூட சொல்லலாம். ஆதிகாலங்களில் சாதாரண ஜனங்களிடையே பரவி இருந்த இந்தப் பெயரானது நாளடைவில் சற்றுக் குருகி சுப்பா என ஆகிவிட்டது. சுப்பாராவ், சுப்பாரெட்டி, சுப்பா நாயுடு என வெகுஜன அளவில் இன்றளவும் இந்தப் பெயருக்கு புகழ் அப்படியே இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதே சமயத்தில் சுப்பிரமணியம் எனும் நீண்ட பெயரும் அப்படியே தொடர்ந்துகொண்டுதான் வருகிறது.

காளிதாசன் குப்தர்கள் காலத்தவன் (மூன்றாம்/நான்காம் நூற்றாண்டு) என்றுதான் பலரும் சொல்கிறார்கள். மகாகவி எழுதிய குமாரசம்பவம் ஸ்கந்தபுராணத்தின் ஒரு பகுதிதான். முருகன் அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பதைப் பற்றிய காவியம்தான். இந்தக் காவியம் வடநாட்டில் மிகவும் புகழ்பெற்றது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரகுப்தன், ஸ்கந்தகுப்தன் என்போர் குபதவம்சத்து கடைவரிசை ராஜாக்கள் முருகன் பெயரை விரும்பி வைத்துக்கொண்டவர்கள். ஆனால் வடநாட்டில் புழங்கும் முன்பாகவே ஆந்திரத்தில் ஸ்கந்தன் பெய்ரும் புகழும் பரந்து விரிந்து படர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அதேபோல சங்ககாலக் கோயில் எனப் பார்க்கையில் தமிழகத்தில் கூட சென்னையை அடுத்த சாலுவான்குப்பம் (மாமல்லபுரத்துக்கருகே) முருகனுக்குக் கட்டப்பட்ட கோயிலின் முழுத்தடயங்களை தொல்லியல் அறிஞர் திரு தியாக சத்தியமூர்த்தியின் தலைமையில் சமீபகாலத்தில் கண்டெடுத்தார்கள் என்ற செய்தியும் இங்கே பகிர்கின்றேன். அந்தக் கோயிலின் காலம் நான்காம் நூற்றாண்டு என்ற போதிலும் சங்க காலம் என வரும்போது நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கோயிலைப் பற்றியும் திரு ராமச்சந்திரன் அவர்களின் குறிப்பைப் பகிர்கிறேன்.

(அகழ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்ட தமிழ்நாட்டுக் கோயில்களுள் பழமையானது மாமல்லபுரத்தை அடுத்த சாளுவன் குப்பத்தை ஒட்டியுள்ள திருவிழிச்சில் என்ற ஊரின் கடற்கரையில் இருந்து புதையுண்டு போன கி.பி. 4ஆம் நூற்றாண்டைய சுப்ரம்மண்யர் (முருகன்) கோயிலே கி.பி. 7,8,9 ஆகிய நூற்றாண்டுகளில் பல்லவர் சிற்பக் கலை மரபில் முருகனின் பிரம்மசாஸ்தா கருத்தோட்டம் முதன்மைப்படுத்தப்பட்டது என்பதும் கவனத்தை ஈர்க்கும் விஷயமாகும் - கல்வெட்டறிஞர் திரு ராமச்சந்திரன்)


குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணை நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதி கோயில்தான் மிகப் பழமையானது. இது பஞ்ச ஆராம சிவத்தலங்களில் (ஏனைய நான்கும் – குமாரராமம், பீமாராமம் (2), திராட்சாராமம், கோதாவரி மாவட்டத்தில் பிற்காலத்தில் கட்டப்பட்டது) முதன்மையானது. இந்த அம்ராவதிக்கு ஒரு சிறப்பு உண்டு.

புத்தபிரான் தான் ஞானம் பெற்றபின்னர் சீடர்களுடன் பல தேசங்கள் சென்று வந்தபோது அமராவதிக்கும் வந்தாராம் (அவர் வந்தபோது அமராவதி எனும் பெயர் கிடையாது). அவருடன் 96 தேச ராஜாக்கள் வந்தனர் என்றும், அங்குதான் அந்தச் சமயத்தில் காலச் சக்கரம் எனும் யோகமார்க்கத்தால் எதிர்கால பாரத நிலையைக் கண்டறிந்து சுட்டிக் காட்டி, புத்த பிரான் தன் சகாக்களை நோக்கி இனி வரும் காலங்களில் நீசமான ஸ்திதிக்கு பாரதம் செல்லும் காலமாக மாறி வருமாகையால் மக்களுக்கு முடிந்தவரை அன்பையும் அஹிம்சையும் மட்டுமே போதிக்கவேண்டும் என அருளியதாக வரலாறு சொல்கிறது. (ஆனால் எந்த மக்கள் அறிவுரைகள் சொல்படி நடக்கிறார்கள்? அதற்கு மாறாகத்தான் யுத்தங்கள் மிகக்கொடிய முறையில் நடந்து வருவதை நாம் அறிவோமே) சென்ற 2006 ஆம் ஆண்டில் அமராவதியில் இந்த காலச்சக்கரா விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு புத்தமதத்தலைவரான தலாய்லாமா வந்திருந்து சிறப்பித்ததும் சமீபத்தில் நடந்ததுதான். புத்தர் வாழ்ந்த இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சாதவாகனர் பௌத்தமதத்தினைச் சார்ந்தவராதலால் புத்தர் வந்தமர்ந்த இடத்தைச் சுற்றி ஒரு நகரம் எழுப்பியதோடு, அதற்கு ஸ்ரீதான்யகடகம் என்றும் பெயர் கொடுத்தார்கள். இங்கு புத்தர் எழுந்தருளியதன் நினைவாக சாதவாகனர்களால் ஒரு ஸ்தூபம் அமைக்கப்பட்டுள்ளது. (இந்த ஸ்தூபம் இன்றும் உள்ளது). சாதவாகனர்களின் காலம் முடிந்தபோது புத்தமத வளர்ச்சியும் நின்று போனது.. வேதமதம் வெகுவாக சீர் பெற்றது. இக்குவாகு அரசர்கள் செய்த முதல் வேலை ஸ்ரீதான்யகடகம் எனும் பெயரை மாற்றியதுதான். முருகன் அசுரனை வென்றதோடு இல்லாமல் அங்கு சிறைப்பட்டுக் கிடந்த இந்திராதி தேவர்களை விடுவித்து தேவர் தலைவன் இந்திரனை மறுபடியும் அமராவதியில் முடிசூட்டினான என்பதால், அதே போல சாதவாகன பௌத்தர்களிடமிருந்து மீட்கப்பட்ட இந்த நகருக்கும் இக்குவாகு அரசர்கள் ’அமராவதி’ என்றே மாறுபெயர் சூட்டினார்கள்.. இங்கே அவர்களே சிவனுக்கு ஒரு கோயிலும் எழுப்பினார்கள். முருகனுக்கும் கோயில் உண்டு. சக்தி பீடமுமாக இருந்ததால் அமராவதி கோயில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அமராவதியில் விஜயபுரியின் அரசர்கள் முடிசூட்டிக்கொண்டதாகவும் இந்திரனின் மருமகனான கந்த பெருமானை காவல்தெய்வமாக ஏற்றுக் கொண்டதாகவும் இங்குள்ள வரலாறு சொல்கிறது. இவற்றைக் குறிப்பிடும் ‘இக்‌ஷவாகுஸ் ஆஃப் விஜயபுரி’ புத்தகத்தின் ஆசிரியர் எம்.ராமாராவ் இன்னொரு இடத்தில் காவல்தெய்வங்கள் அமராவதியிலிருந்து விஜயபுரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் எழுதுகிறர்ர்.

ஆந்திரத்தில் திருப்பதி மலையில் கோயில் கொண்டுள்ள திருவேங்கடத்தான் கோயிலும், கிருஷ்ணை நதி தீரத்து அமராவதி மற்றும் மலை உச்சியிலுள்ள ஸ்ரீசைலம் கோயிலும் மட்டுமே அந்த முதல் நூற்றாண்டுகளில் பேசப்பட்டன என்றும் சொல்லலாம். திருப்பதியைப் பற்றி தெலுங்கு மண்ணில் அந்தக் கால கட்டத்தில் எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் அப்போது பாடப்பட்ட தமிழ் சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டியது ஒன்றே அந்தக் கோயில் (அல்லது வேங்கடத்தான் நின்ற கோலத்தில் உள்ள சிலை) பழைய காலத்திலேயே இருந்ததற்கான சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

அமராவதியில் மகிழமரம் சிவனுக்காகவும் முருகனுக்காகவுமான மரமாகப் போற்றப்படுகின்றது. பிள்ளை இல்லாதோர் இங்கே தொட்டில் கட்டினால் முருகனைப் போலவே மகன் பிறப்பான் என்ற நம்பிக்கை உண்டு. இதே மகிழ மரம் சென்னையருகே திருப்போரூர் கந்தஸ்வாமி கோயிலில் கூட தலவிருட்சமாக வணங்கப்படுகிறது என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்கிறேன். அதே சமயத்தில் அமராவதியில் உள்ள மகிழ மரத்தை ஜைன தீர்த்தங்கரர் ஒருவர் செடியாகக் கொண்டு வந்து வளர்த்தார் என்றும் ஒரு தகவல் உண்டு.

அமராவதிக்கு கிழக்கே, கிருஷ்ணை கடலில் பாயும் பகுதியில் கிருஷ்ணையின் வடகரையில் மோபிதேவி எனும் ஊர் உள்ளது. விஜயவாடாவிலிருந்து ஏறத்தாழ 60 கி.மீ தொலைவு. அமராவதியைப் போல இந்தக் கோயில் பிரபலமான இல்லைதான். இந்தத் தலம் இன்னமும் அதிகமாக அறியப்படவில்லை என்றாலும் நானும் என் நண்பர்களும் சில மாதங்களுக்கு முன்பு அந்தக் கோயிலுக்கு சென்ற போது கிடைத்த விவரங்கள் எங்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கின.. மோபி தேவியில் பிரதான தெய்வமாக ஸ்ரீஸ்கந்தபெருமான் வள்ளி தெய்வானை சமேதராக எத்தனையோ நூற்றாண்டுகளாக கோயில் கொண்டுள்ளார். இந்தக் கோயில் பற்றிய விவரமும், இந்தக் கோயில் வழிபாட்டு முறை எப்படியெல்லாம் ஆந்திர-கர்நாடக மலைப் பிரதேசத்தில் பிரதிபலித்தது என்பதும் கந்தனின் அருளை இந்தப் பிராந்தியத்தில் எப்படியெல்லாம் பரப்பியது என்பதையும் அடுத்துப் பார்ப்போம்.

அடுத்து வரும்.

மேலே உள்ள படங்களில் ‘பட்டியல்’ படத்தைத் தவிர ஏனைய மூன்று படங்களுக்கும் நன்றி-கூகிளார்.


எழுதியவர் திரு திவாகர்


--Geetha Sambasivam 11:26, 8 ஜனவரி 2013 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 8 ஜனவரி 2013, 11:26 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,351 முறைகள் அணுகப்பட்டது.