வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 பழமொழி -. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்


ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். சிந்தனையை தூண்டும் பழமொழி இது. கூத்தபிரான் ,சுடலைமாடன் நடராஜன்,தில்லைக் கூத்தன், அம்பலவாணன் , ஆத்மா பரமாத்மா ஊழிக்கூத்தாடிய நேரம் எப்போது எதனால் ஊழிக்கூத்தாடினான்? அவனுடைய ஆட்டம் நின்றால் ப்ரபஞ்ச சுழற்சியே நின்று போகும். உயிர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அம்பலத்தில் ஆடுகின்ற ஞானக் கூத்தன். அவன் கையிலே உடுக்கு, அந்த உடுக்குஎன்னும் இசைக்கருவியின் இசை நடனம் என்னும் கலைக்கு ஆதாரஸ்ருதி. ஒவ்வொரு உடுக்கு என்பதில் பல வகை உடுக்குகள் உள்ளன. அந்த ஒவ்வொரு வகை உடுக்கிலும் இசை,தாளம் சப்தம், எல்லாமே மாறுபடுகின்றன உடுக்கை அடிப்பவரின் திறமைக்கு ஏற்ப உடுக்கின் சப்தமும் மாறுகிறது .

ஊர் இரண்டு பட்டால் ,அதாவது ஊர்மக்கள் இரண்டு பட்டால் ஒற்றுமை குறைந்து விரோதம் அதிகரித்து அதனால் கலகம் வரும் நிலை ஏற்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ஊர் மக்கள் இரண்டு படும்போது கூத்தாடிக்கு எப்படி கொண்டாட்டம் வரும் ....? வரும் ….!!!!!! எப்படி வருமென்று பார்ப்போம். கூத்து என்பது நாடகம் என்னும் கலையின் பிறப்பிடம்........ கூத்தாடிகள் தங்களுடைய கலைகளால் மக்களின் கவலை மறந்து மகிழ்வாக இருக்க வைப்பர் மக்களின் கவலை போக்கும் மருந்தாக கூத்து என்னும் கலை பயன்பட்டு வந்தது,....

ஊர் மக்கள் மன வேறு பாடுகள் கொண்டால், இரண்டு ஊருக்கும் பொதுவாக இருக்கும் பெரியவர்கள் கூத்து என்னும் கலைக்கு ஏற்பாடுகள் செய்வர். அங்கு இரண்டு ஊர் மக்களும் ஒன்று கூடுவர். அப்படி ஒன்று கூடும் போது இரண்டு ஊர்ப் பெரியவர்களும் மக்கள் மகிழ்வாக இருக்கும் நேரம் பார்த்து, பல, அறிவு பூர்வமான ,மக்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய ,சமாதானங்களைக் கூறி இரண்டு ஊர்மக்களின் விரோத மனப்பான்மையைப் போக்கினர். அதற்கு கூத்து என்னும் கலை பயன் பட்டதால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு ஒரு கூத்து நடத்த வாய்ப்பு வருமல்லவா.அதைத்தான் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பெரியவர்கள் சொல்லி இருப்பார்களோ ...?

" விஞ்ஞானமும் மெய்ஞானமும் தண்டவாளங்களின் இரு இணை இரும்புகள் போல் என்றும் சந்திக்காது.ஆனால் அவைகளை இணைக்கும் நடு மரப் பட்டைகள் என்கிற உறவுப்பாலம், ,கீழே தாங்குதற்கு கருணை உள்ளம் கொண்ட பூமி , அன்பு பாசம் நேசம் போன்ற இணைப்புகள், இவைகள் இல்லாது போயின், மெய்ஞானமும் சரி விஞ்ஞானமும் சரி வலுவிழந்து போய்விடும் " இவற்றை உணர்ந்து பெரியவர்கள் இரண்டு தண்டவாளங்களை இணைக்கும் நடு மரப்பட்டைகளாக உறவுப் பாலமாக செயல்பட்டிருக்கிறார்கள். மனிதாபிமானத்தை ,அன்பை, பாசத்தை ஒற்றுமையை வளர்த்திருக்கிறார்கள், ஆனால் ...இப்போது பல கூத்தாடிகள் தாங்கள் கொண்டாட்டமாக இருப்பதற்காகவே, இனம் ,மொழி, மதம் சாதி ,போன்ற பலவகையான ஆயுதங்களைப் பயன் படுத்தி ஊர் மக்களை, இரண்டு படவைக்கிறார்கள், கலகம் செய்கிறார்கள்,நாமும் அவர்களின் பேச்சை, செவி மடுத்து அடித்துக் கொண்டு சாகிறோம்.

கூத்தாடிகள் அந்தக் காலத்தில் பல நல்ல கருத்துக்களை மையமாக வைத்து மக்களை அறிவுறுத்தி மக்களை நல் வழிக்கு அழைத்துச் சென்றார்கள், )இந்தக் காலத்தில் அதே கூத்தை ,நாடகத்தை , திரைப்படத்தை வைத்து மக்களை இரண்டு படுத்தி கூத்தாடிகள் குளிர் காய்கிறார்கள்,கொண்டாட்டமாக இருக்கிறார்கள், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று நன்மைக்காக பெரியோர்கள் செய்து வைத்த அதே பழ மொழியை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு மக்களின் விரோதங்களைத் தூண்டி விட்டு, மக்கள் அடித்துக் கொண்டு இருக்கும்போது நாட்டின் செல்வங்களை சத்தமில்லாமல் களவாடி தங்களுக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.

இவை புரியாமல் மக்கள் வேறு வழியில்லாமல் மாற்றிமாற்றி மீண்டும் அவர்களுக்கே வாக்குகளை அளித்து அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள், வாழும் மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம், என்று உணராமல் பல கோடிகளை தங்கள் வாரிசுகளுக்கு சேர்த்து வைத்துவிட்டு செல்கிறார்கள், அந்த வாரிசுகள் கஷ்டப் பட்டு சம்பாதித்திருந்தால் அந்தப் பணத்தின் அருமை தெரியும், இலவசமாக வந்ததால் அந்தப் பணத்தைக் கொண்டு அதையும் கெடுத்து தாங்களும் கெட்டுப் போய் வன் முறைகளுக்கு வழி வகுக்கிறார்கள், இவையெல்லாம் நல்ல வழிகள் அல்ல என்று உணர்ந்த அக்காலத்துப் பெரியோர்கள் முன் உதாரணமாக தங்களுடைய சொத்துக்களை நாட்டுக்கு தானமாக அளிக்க முன் வந்தனர்,மக்களின் நல் வாழ்வே, ஒற்றுமையே நாட்டின் பெரும் பலம் என்று உணர்ந்து செயல் பட்டார்கள்.

பொதுவாக ஊர் மக்கள் இயற்கை சீற்றத்தாலோ. விபத்துக்களாலோ பாதிக்கப்படும்போது மற்ற மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும்,அதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றாமல் அவர்களிடம் இருக்கும் பணத்தையும், தங்கம் போன்ற விலைஉயர்ந்த பொருட்களையும் களவாடிக்கொண்டு செல்வர் சிலர் .அவர்கள் மனிதர்களே அல்லர். அவர்களைப் போன்ற மனிதர்கள் உதவுவது போல் நடித்து களவாடுவர்
ஒரு வகையில் இவர்களும் கூத்தாடிகளே. இவர்கள் இந்தக் காலக் கூத்தாடிகள். இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது.மனமே கிடையாது.
இன்றைய நிலையில் நம் சகோதர நாடாகிய ஜப்பானுக்கு ஆழிப் பேரலை (சுனாமி) அதிகப் பேரழிவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அங்கு அவதிப்படும் மக்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம் என்று நினைக்கும் மனிதர்கள் வணங்கப்படவேண்டியவர்கள்.மாறாக இந்த நிலையில் எப்படி தமக்கு ஆதாயம் தேடலாம் என்று நினைக்கும் மனிதர்கள் இன்றையக் கூத்தாடிகள்.

ஆகவே ஊர் இரண்டு பட்டால் அதாவது மக்கள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்திருந்தால் சந்தர்ப்பவாதிகளும் சுயநலவாதிகளும் நவீனக் கூத்தாடிகளாக மாற அதிக வாய்ப்பு உள்ளது ஆகவே மக்களும் ஒற்றுமையாய் வாழ்வது அவசியம் என்று உணர்த்தத்தான் முன்பே பெரியவர்கள் ஆராய்ந்து சொல்லிவிட்டுச் சென்றார்களோ ”:ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் “ என்னும் முது மொழியை அளித்து விட்டுச் சென்றனறோ...?

அன்புடன்
தமிழ்த்தேனீ

Contributors

தமிழ்த்தேனீ மற்றும் Coralsri.blogspot.com

This page was last modified on 15 April 2011, at 09:57. This page has been accessed 5,559 times.