"கண்ணடி பட்டாலும் கல்லடி படக்கூடாது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
 

10:02, 15 ஏப்ரல் 2011 இல் கடைசித் திருத்தம்

 " கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது "  "கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது "

இரண்டுமே அருமையானபொருள் பொதிந்த பழமொழிகள். கல்லால் அடித்தால் எப்படியாவது தப்பி விட முடியும். பெண்கள் கண்ணால் அடித்தால் கயல் விழிகளால், காதல் என்னும் வில்லால் அடித்தால் தப்பமுடியுமோ.. .ஆனானப்பட்ட விஸ்வாமித்திரரே தப்ப முடியவில்லையே, அவ்வளவு ஏன் காமன் கணை தொடுத்தததனால் ஈசனே தப்ப முடியவில்லையே மோகினியிடம் மனதைப் பறி கொடுத்து விட்டாரே, இப்படியெல்லாம் தோன்றினாலும் இவையெல்லாம் உருவகக் கதைகளாகப் பட்டாலும், முடிவு என்னவோ கண்ணடிக்கு தப்ப முடியாது என்பதுதான் உண்மையாகத் தோன்றுகிறது.

ஆமாம் இப்பழமொழி என்ன பொருள் வருமாறு பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள்....?


” கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள்
ஏது பயனுமில என்று சொல்வார்கள் “

"எண் சாண் உடலுக்கு சிரசே ப்ரதானம்
ஒருசாண் சிரசுக்கு கண்ணே ப்ரதானம் " என்று நான் சொல்லுகிறேன்.

ஆனானப்பட்ட ராமனும் லோக மாதாவான சீதையும் இல்லறத்தில் மாட்டிக் கொள்ளவில்லையா...? கண்ணால் கண்டவுடனே நெஞ்சமே இடம் மாறுகிறது, என்றால் என்ன ஒரு சக்தி கண்ணுக்கு...? லோக மாதாவின் கடைக்கண் பார்வை பட்டாலே அங்கு ககனமே செழித்தோங்குமே.குசேலனைக் கடைக்கண் கொண்டு பார்த்தாள் மஹாலக்ஷ்மி கண்ணனின் வேண்டுகோளுக்கிறங்கி, குசேலன் குபேரனானான் என்று சொல்லுவர்.

”என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று அரங்கனைக் கண்ட கண்ணால் வேறு எதையுமே பார்க்காமல் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார் திருப்பாணாழ்வார், அடடா என்ன ஒரு சக்தி கண்ணுக்கு...?

கைதேர்ந்த அனுபவமிக்க சிற்பிகள் முதலில் ஒரு சிலையை வடிக்க தோஷமில்லாத கல்லைத் தேர்ந்தெடுப்பர். தேரை இருக்கும் கல் என்றால் அதனைத் தள்ளிவிடுவர். அது போல அவர்கள் ஒரு கல்லை செதுக்க உளி என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்துவர் , அப்படி உளியால் செதுக்கும் போது மொத்த சிலையையும் வடித்துவிட்டு, அந்தச் சிலைக்கு கண்ணை மட்டும் திறக்காமல், விட்டு வைப்பர் ஏனென்றால் மற்ற பாகங்கள் கல்லடி பட்டாலும் ,அதாவது கொஞ்சம் சிதைந்தாலும், அதை வேறு சிலையாக அளவைக் குறைத்து மீண்டும் சரி செய்து விட அவர்களின் திறமை பயன்பட்டது. ஆனால் கண்ணடி பட்டால் ,அதாவது அந்தச் சிலையின் கண் ஏதேனும் அஜாக்கிறதையினால் அடி பட்டுவிட்டால் அந்தச் சிலையை மீண்டும் சரி செய்ய முடியாது, அதனால் அதற்கென்று ஒரு நேரம் ஒதுக்கி ,இன்னும் கொஞ்ஜம் கவனமாக கண்ணை செதுக்கும் போது,வெகு தீவிரமாக கலைநுணுக்கத்தோடு அதிக கவனத்தோடு சிலையின் கண்ணைத் திறப்பர். அது மட்டுமல்ல ஒரு சிலை முழுமை பெறும் வரை சிற்பியைத்தவிற மற்றவர்கள் அதைப் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அதைப் பார்க்கும் யாராவது ஒருவர் கண் திருஷ்டி போட்டுவிட்டால் சிலை சரியாக வராது என்பது சிற்பிகளின் நம்பிக்கை. அதனால்தான் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது  என்று சொல்லி இருப்பரோ பெரியவர்கள்....?

கண்ணடி என்பது கண் திருஷ்டி என்று பொருள் வருகிறது ஆமாம் கண் திருஷ்டி என்று ஒன்று உண்டா?அதெல்லாம் சுத்தப் பயித்தியக் காரத்தனம் ,என்று நாகரீகம் முற்றிய நிலையில் நம் மனம் அதை ஒதுக்கினாலும் பெரியவர்கள் என்ன காரணத்துக்காக இப்படி சொல்லி இருக்கிறார்கள் என்று அலசினால்…

”எப்படி இப்போதும் இளமையாக காட்சி அளிக்கிறீர்கள்”? என்று கேட்பவர்களுக்கு நான் விளையாட்டாக பதில் சொல்வேன் ,சிறு வயதிலேயே முதியவன் போல தோற்றம் அமைந்து விட்டதால் ,அப்போதிலிருந்தே உங்கள் கண்கள் என்னைப் பார்த்து பழகிவிட்டதால் இப்போதும் என்னால் அதே மாதிரி தோற்றமளிக்க முடிகிறது என்று. கண்ணுக்கு பழக்கம் மிக முக்கியம் என்பது இந்த பதிலால் கொஞ்சம் விளங்குகிறது அல்லவா,
ஆமாம் இந்தக் கண்களின் பழக்கம் நமக்கு எப்படி மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதற்கு என்னுடைய வாலிப வயதிலே எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தை ஆராய்வோம்.

ஒரு நாள் வில்லிவாக்கம் என்னும் ஊரிலே நான் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். அனேகமாக பருவப் பெண்கள் எதிரே வந்தால் அவர்களை இந்தக் காலத்தில் இளைஞ்ஞர்கள் வெறிப்பதைப் போல  என்னால் பார்க்க முடிந்ததில்லை, ஏனென்றால் என் தாயாரின் வளர்ப்பு அப்படி,ஆனால் அதையும் தாண்டி ஒரு பெண்ணை வைத்த கண்வாங்காமல் பார்த்த அநாகரீகமான செயலை நான் செய்தேன்....ஏன் அப்படி செய்தேன் என்று என்னையே நான் ஆராய்ந்ததில் எனக்கு ஒரு முடிவு கிடைத்தது அது '

அந்தப் பெண்ணின் கண்களில் இருந்த காந்தமோ அல்லது அந்தப் பெண்ணின் பேரழகோ,ஏதோ ஒன்று என்னை ஈர்த்திருக்கிறது என்று உணர்ந்தேன்,மறு நாளும் அதே நேரத்துக்கு அதே சாலையில் நான் சென்று அந்தப் பெண்ணைக் காண தவமிருந்தேன். அது ஒரு நேர ஒற்றுமையோ, அல்லது என் அதிர்ஷ்டமோ  மீண்டும் அதே தேவதை நடந்து வந்து கொண்டிருந்தாள்.மறுநாளும் அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன்... இது போல தொடர்ச்சியாக அவளைக் காண்பதும் ஒவ்வொரு நாளும் என்னுடைய மனநிலை மாறு பாட்டை அலசுவதும் எனக்கு ஒரு பெரிய ஆராய்ச்சியாகப் பட்டது.

முதல் நாள் அவளைப் பார்த்தவுடன் நான் அதிர்ந்தேன், ஆம் அவள் அழகு என்னை மயக்கியது. அவள் கண்கள் என்னை அடித்துப் போட்டது, மறு நாள் அதே அழகுடன் அந்தப் பெண் ,அதே வாலிப வயதுடன் நான். ஆனால் முதல் நாள் என்னை அடித்துப் போட்ட அந்த அழகின் ,கவர்ச்சியின் விகிதா சாரம் மறுநாள் சற்றே குறைந்திருந்தது அதற்கு மறு நாள் இன்னும் சற்று குறைந்தது, இப்படியே நான் அவளைப் பார்த்த கடைசீ முறை எனக்கு அவள் பால் ஏற்பட்ட கவர்ச்சியின் விகிதாசாரம் வெகுவாக குறைந்து போய் விட்டது,  ஏன் இந்த மனோ நிலையில் இவ்வளவு மாற்றம் என்று யோசிக்க ஆரம்பித்தேன் ,இறைவனின் படைப்பின் அற்புதத்தை யோசிக்க ஆரம்பித்தேன். உலகில் உள்ள அத்துணை பெண்களுக்கும் ஒரே மாதிரி அவயவங்கள்
உலகில் உள்ள அத்துணை ஆண்களுக்கும் ஒரே மாதிரி அவயவங்கள். ஆனால் அவைகளை அமைக்கும்போது அளிக்கும் சிறு சிறு அளவு மாற்றங்களால் கோடானு கோடி மக்களை கோடானு கோடி விதமாகப் படைக்கும் இறைவனின் அற்புதம் விளங்கியது. சிறு சிறு அளவு மாற்றங்களில் இத்துணை மாற்றுப் படைப்புகள் கொடுக்க முடியுமா...? முடிகிறதே இறைவனால்!

ஒன்று புரிந்தது அவ்வளவும் கண்கள் செய்த மாயம்,ஆமாம் கண்கள் இதயத்தின் வாசல் என்று யாரோ   கூறியது நினைவுக்கு வருகிறது, முடிவு என் கண்களுக்கு அவள் அழகு பழகிவிட்டது.அவ்வளவே ,அவள் அழகு சற்றும் குறையவில்லை என்பதே உண்மை, என் கண்களுக்கு அவள் அழகு பழகிவிட்டதால் என் இதயத்தில் முதல் நாள் ஏற்பட்ட அதிர்வுகள் வரவில்லை. ஆகவே நாம் கண்ணால் பார்ப்பது இதயத்தை பாதிக்கும் என்பது உண்மைதானோ...?

அப்படியானால் கண் திருஷ்டி என்பது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் .கண்களால் பார்த்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுமானால் எவ்வளவு ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் நாம்...? முன்பெல்லாம் பல தவ வலிமை பெற்றோர் கண்ணால் பார்த்தே ஒரு பெண்ணுக்கு ஒரு சிசுகர்ப்பம் ஏற்படுத்த முடியும் என்று பல கதைகள் கேட்டிருக்கிறேன் அது உண்மையா என்று ஆராய வேண்டும் .ஆக கண்களுக்கு இருக்கும் சக்தி வலிமையானதுதான் என்பதில் சந்தேகமில்லை,ஆகவே கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பெரியவர்கள் சொன்ன பழமொழி உண்மையாக இருக்கக் கூடும் .

ஒரு பெண்ணை ,அவள் அழகை ரசிப்பதில் தவறேதும் இல்லை, ஆனாலும் அதில் ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் ,நம் கண்கள் பார்ப்பதை அவள் உணர்ந்தாலும் அந்தப் பார்வை அவளுக்கு உறுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்று தோன்றியது, பருவ வயதில் ஏற்படும் விழிப்புணர்ச்சி இயல்பானதுதான், , ஆனால் விழி புணர்ச்சி மிகவும் தவறானது அல்லவா...? அதனால்தான் பெரியவர்கள் திருஷ்டி சுற்றிப் போடுங்கள் என்கிறார்கள்.
"கண்ணொடு கண் நோக்கின் வாய்ச் சொற்கள் ஏது பயனுமில " என்னும் வாக்கிற்கேற்ப கண்ணடி படுதல் கூடாது, கல்லடி பட்டால் ஆறும் கண்ணடி பட்டால் கஷ்டம்தான் , முன்பெல்லாம் நாம் எழுது கோலாக பயன் படுத்தி வந்த ஒரு சாதாரண பென்சிலின் கூர்முனையை நம்முடைய இரு கண்ணுக்கு மத்தியில் வைத்து இரு கண்ணாலும் நாம் அந்த கூர் முனையைப் பார்த்தாலே சிறிது நேரத்தில் தலை சுற்றும், தலை வலிக்கும்..


ஏனென்றால் நம் இரு கண்ணின் பார்வை அலகுகள் ஒரு சேர ஒரு புள்ளியில்..அதாவது இரு கண்ணுக்கு இடையே சந்திக்கும்போது அது நம் நெற்றிப் பொட்டில் சந்திக்கின்றது. நெற்றிப் பொட்டில் இரு கண்ணின் பார்வையின் அலகுகள் சந்திக்கும் போது நம் மூளையில் ஏதோ ஒரு மாற்றம்,அல்லது ஒரு பாதிப்பு வருகிறது அதனால் தலைய வலிக்கிறது, தலை சுத்துகிறது உச்சித் திலகம் என்பது புருவ மத்தியைக் குறிக்கும். யோகநெறியில் புருவமத்தியை 'ஆக்கினை' என்று சொல்வது வழக்கு. ஐம்புலன்களை கட்டுக்குக் கொண்டுவரும் மையம் 'ஆக்கினை'. சாதாரணமாக திலகம், குங்குமம் இட்டுக்கொள்ளும் இடம் இந்தப் புருவ மத்தியில்தான்.

ஒன்றைக் குறித்து யோசிக்கும்போதுகூட விரலால் புருவமத்தியைத் தொட்டுக்கொண்டுதான் யோசிக்கிறோம். இதனையே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறார். 'உதிக்கின்ற செங்கதிர்' என்பது சூரியனின் செங்கதிர்களைக் குறிப்பது போல் தோன்றினாலும் - சூரியனின் கதிர்கள் எல்லாவுயிர்களையும் காப்பது போல், இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளிருந்து இயக்குகிறான் என்பதை விளக்கவே 'உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்' என்றார்.அபிராமி பட்டர் இயற்றியவர்: அபிராமி பட்டர் ” கள்ளவாரணப் பிள்ளையார் காப்பு ” என்னும் இறை வணக்கப் பாடலில் .அதாவது புருவமத்தியில் தோன்றி நம்மை இயக்குகிறாள் என்பது மறைபொருள். இதனை உணர்ந்தவர்கள் இறையை மாணிக்கமாக மதிக்கின்றனர்.


அப்படி இருக்க கண்ணடி படலாமா...கூடாது, மனோ தத்துவ நிபுணர்கள் ஒரு பெண்டுலத்தை ஆட்டி விட்டு அதையே பார்கச் சொல்லுகிறார்கள். அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது அவர்களின் கண்ணையே பார்க்கச் சொல்லுகிறார்கள். அப்படி நம்முடைய சாதாரண கண்கள்,அந்த மனோ தத்துவ  நிபுணரின் சக்தி வாய்ந்த கண்களைச் சந்திக்கும் போது நம்முடைய பார்வையின் சந்திப்பு புள்ளியும் ,அவருடைய பார்வையின் சந்திப்பு புள்ளியும் ஒரு இடத்தில் சந்திக்கின்றன, சற்று நேரத்தில் நம்முடைய சாதாரண கண்ணின் பார்வையின் வீரியம் குறைந்து மனோதத்துவ நிபுணரின் பார்வையின் வீரியம் அதிகமாகும்போது நம் பார்வையின் சந்திப்பு புள்ளி பின் வாங்குகிறது, அப்படி பின்வாங்கி அவருடைய பார்வையின் சந்திப்பு புள்ளி நம்முடைய நெற்றிப் பொட்டில் வந்து தாக்கும் போது நாம் வலுவிழக்கிறோம்.


அவர் சொல்லுக்கு கட்டுபட்டு மயங்குகிறோம். நம் மூளை அவர் கட்டுப்பாட்டில் வருகிறது அதனால்தான் நெற்றிப் பொட்டை மறைத்து ஏதேனும் ஒரு பொட்டு வைத்துக் கொள்ளச் சொல்லி நம் முன்னோர் நமக்கு அறிவுறை சொன்னார்களோ.  அடடா பெரியவர்களின் ஞானம் நம்மை வியக்க வைக்கிறது! அந்தக் காலத்துப் பெரியவர்களின் ஞானம்தான் .இந்தக் காலத்து விஞ்ஞானம் என்கிற உண்மை புரிகிறது. அப்போது விஞ்ஞானம் என்று சொன்னால் நமக்குப்
புரியாது என்கிற ஒரே காரணத்தினால் அவர்கள் மெய்ஞானம் என்று அனைத்தையும் ஏற்படுத்தி விட்டு சென்றனரோ? என்று எண்ணிப் பார்க்கையில் வியப்பேற்படுகிறது அவர்களின் தீர்க்க தரிசனத்தின் மேல்.

ஈசனாரின் நெற்றிக்கண்ணில் தோன்றிய ஒளியால் பிறந்தவன் கந்தன். அதே நெற்றிக்கண்ணால் நக்கீரனை எரித்து சாம்பலாக்கினான். தன் கண்ணையே ஈசனுக்கு அளித்தவன் வேடன் கண்ணப்பன். ஒரு கையால் ஒரு கண்ணைப் பிடுங்கினான், மறு கண்ணைப் பிடுங்க கைகள் வேண்டுமே அதனால் ஈசனின் முகத்திலே செருப்புடன் கூடிய காலை வைத்து குறுதியை அடைத்தவன் கண்ணப்ப நாயனார். கண்ணப்ப நாயனாரின் பக்தியைப் புரிந்துகொண்டு இறைவனே காட்சி அளித்து மீண்டும் கண்ணப்ப நாயனாருக்கு கண்களை அளித்தான் ஈசன்.

கல்லடி படவேண்டாம், கண்ணடி...... படவே வேண்டாம் பெரியோர் சொல் வேதம்... நம்புவோம்.. அதனால் கண்ணடி படவே கூடாது, அப்படியே பட்டால் இறைவன்தான் காக்க முடியும் என்று உணர்த்தத்தான் இந்தப் பழமொழியை ஆன்றோர் கூறிவிட்டுச் சென்றனரோ..?

அன்புடன்

தமிழ்த்தேனீ

பங்களிப்பாளர்கள்

தமிழ்த்தேனீ மற்றும் Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 15 ஏப்ரல் 2011, 10:02 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,771 முறைகள் அணுகப்பட்டது.