கர்னாடகத்துக் கோயில்கள் - நஞ்சன் கூடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


நஞ்சன் கூடு.


கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.ஆம் எங்கும் நிறை ஈசனை எழிலார்ந்த ஓர் இடத்தில் கண்டு தரிசிக்க நாம் இங்கு செல்வோம் இந்த இடத்தின் பெயர் நஞ்சன்கூடு!!


நஞ்சன்கூடு!


                                                                                                
Misc nanjangud01.jpg


இந்தப்பெயரைக்கேட்டவுடனேயே நினைவுக்கு வருவது இந்தப்பெயரில் பிரபலமான பற்பொடியும் ரஸ்தாளி வாழைப்பழமும்தான். ஆனால் ஆன்மீக வேட்கை உள்ளவர்களுக்கு அங்கு அருமையான சூழலில் அமைந்துள்ள சிவபெருமானின் திருத்தலம் தான் நினைவுக்கு வரும்!

\ஸ்ரீகண்டேஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் என்ற பல பெயர்களில் வழங்கும் சிவபெருமானின் இந்திருத்தலம் மைசூர்- குண்டல்பேட்டை மார்க்கத்தில் ஊட்டி செல்லும்பாதையில் அமைந்திருக்கிறது மைசூரிலிருந்து ஏராளமான பேருந்துகள் புறப்படுகின்றன.

மைசூரிலிருந்து சுமார் 25கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்தக்கோயில், கர்னாடக மாநிலத்திலேயே மிகப்பழமையானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள்.

நஞ்சன்கூடு முன்பு தண்டகாருண்யமாக இருந்தது. ‘கேசி’ என்ற ராட்சசனை கொன்றபிறகு அவன் உடலில் இருந்த விஷம் ஓரிடத்தில் விழுந்தகாரணத்தால் அது’கேசிபுரிதிருத்தலம்’ என்று வழங்கப்பட்டு வந்திருக்கிறது அங்கிருந்து சிவலிங்கம் மாமுனிவர் பரசுராமரால் பூமியிலிருந்து எடுக்கப்பட்டதால் இது பரசுராம ஷேத்திரம் என்றும் வழங்கப்படுகிறது.

இந்தக்கோயில் 424 அடி நீளமும் , 159அடி அகலமும் கொண்ட தாய் விரிவான பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் சுவரில் மேற்பகுதியில் சிறிய மண்டபங்கள் அழகான சிலைகளைத்தாங்கி நிற்கின்றன. அந்த மண்டபங்களில் இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், வீரபத்திரர் ,அஷ்டபைரவர், பதினாறுதிருக்கோலங்களில் சுப்ரமண்யர், ஏழு சிவதாண்டவங்கள், பதினான்கு தட்சிணாமூர்த்திகள் ,சாமுண்டேஸ்வரி, இருபத்தேழு திரு உருவங்களில் சிவ பெருமான், இரண்டு கணபதிகள் , சப்தமாத்திரிகள் என்று சுவரின் மேல் நான்குபுறங்களிலும் வடித்திருக்கிறார்கள்.

ராஜகோபுரம் 120அடி உயரம் கோபுரத்தின் பீடம் 53 நீளமும் 46 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது ஏழுநிலைகளைக்கொண்ட ராஜகோபுரம் முகப்பின் இருபுறத்திலும் கம்பீரமான துவாரபாலகர்கள் அழகு சேர்க்கின்றனர்.

வெளிப்புறச் சுற்றுப் பிராகாரத்தில் அறுபத்துமூன்று சிவனடியார்களின் திருவுருவங்கள் எங்கும் காணாத அளவுக்கு 4 அடி உயரத்தில் அற்புதமாக அமைந்துள்ளன.இதைத் தொடர்ந்து சகஸ்ரலிங்கம் பிரஸன்ன கணபதியையும் மேற்பகுதியில் அருள்மிகு ஷக்தி கணபதி சுப்ரமண்யர் வள்ளி தெய்வானை ஆகியோருடன் இருக்கக்கூடிய திருவுருவங்களையும் காணமுடியும்.

சுவாமிசந்நிதியின் வலப்புறத்தில் அம்பாள் பார்வதி தேவியின் சந்நிதி இருக்கிறது.
கோயிலின் வெளிப்புறத்தில் உள்ளபெரிய மண்டபத்தில் ஒரு பசவரும்(நந்தி) எட்டுஅடி உயரத்தில் காணப்படுகிறது. மூலவரின் சந்நிதிக்குமுன்பும் ஒரு சிறிய நந்தி இருக்கிறது,. இந்த நந்திதேவரின் திருமேனி 1643ஆம் வருடம் தளவாய் விக்கிரமராயரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒருமுறை மைசூரை ஆண்ட திப்புசுல்தானின் பட்டத்து யானைக்கு கண்நோய் வந்து மிகவும் அவதிப்பட்டது அப்போது அதன் கண்நோய் குணமாக நேர்ந்துகொண்டாராம் திப்புசுல்தான். நோயும் குணமாகிவிட்டதாம். அதற்கு நன்றிக்கடனாக பச்சையினால்செய்யப்படட் லிங்கமும்,மகரகண்டி மாலையும் வெள்ளிப்பாத்திரமும் வழங்கி இருக்கிறார்.


                                                                                              
Misc nanjangud03.jpg


கோவில் வாசலைத்தொட்டுக்கொண்டே மிக அருகில் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆடியில் ஓடிவரும் திருவரங்கத்து அகண்ட காவிரியைப்போல கண்ணுக்கெட்டிய தூரம்வரை நதிப்பிரவாகம்தான்.படித்துறையில் பலர் குளிக்கிறார்கள்.

இந்த ஊர் கபிலா, கபினி நதிகளின் கரையில் சங்கமத்தில் இருப்பதால் இதில் நீராடினால் கங்கையில் நீராடியபுண்ணியத்திற்கு சமம் என்ற கருதப்படுகிறது. எனவே இது ‘தட்சிண காசி என்று வழங்கப்படுகிறது. இந்தமண்ணிலும் ஆற்றின் சங்கமத்திலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாக இருப்பதால் இறைவன்நஞ்சுண்டேஸ்வரர் ‘பவரோக வைத்யர் என்றும் அழைக்கப்படுகிறார்.

தொட்ட ஜாத்ரா, சிக்க ஜாத்ரா என இரண்டு பெரிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன

ஒருமுறை சிவபெருமானிடம் பார்வதி கேட்டாளாம்,’ உங்களுக்கு எந்த திருத்தலம் பிடிக்கும்?’என்று. அதற்கு சிவபெருமான்’கபிலா கௌண்டினி நதிகள் சங்கமமாகும் கரளபுரி எனும் நஞ்சன்கூடு திருத்தலம் ’ என்றாராம்!

இந்த இடத்தின் மண்ணை சிறிதளவு யார் எடுத்துசாப்பிட்டாலும் எல்லா வியாதிகளையும் அது குணப்படுத்திவிடுமாம் அதனால்தான் இந்த இடத்திற்கு நஞ்சன்கூடு(விஷக்கூடு) என்று பெயர் வந்ததாம்!


இங்கே வருடத்தில் பல சிறப்பான விழாக்கள் வைபவங்கள் நடைபெறுகின்றன. ஜூன் ஜூலையில் (மிதுனமாதம்) நடைபெறும் கல்யாண உற்சவத்தின்போது திப்புசுல்தானால் வழங்கப்பட்ட பச்சை மகரகண்டி ஹாரத்தையும் மும்முடி கிருஷ்ணராஜ உடையாரால் வழங்கிய முத்து வைரம் மட்டும் வைடூரியம் என எல்ல நகைகளையும் இறைவனுக்குஅணிவித்து பக்தர்களை மகிழ்விக்கிறார்கள். இக்காட்சியினைக் காணக் கண் கோடி வேண்டும்.பொதுவாக தெப்ப உற்சவங்கள் திருக்குளத்தில்தான் நடக்கும் ஆனால் இந்தக் கோயிலின் உற்சவங்களோ கபினி கவுண்டினி நதிகளில் நடைபெறுவது வித்யாசமான வைபவமாக உள்ளது.


திருக்கோயிலின் வலப்புறம் உள்ள இரட்டைச்சாலை அழகுற ஆரம்பித்து மைசுர்-கொள்ளேகால் பிரதான பாதையில் முடிகிறது. அந்தச்சாலையின் வலதுபுறமாக ஓடும் கவுண்டினி நதி அழகான படிக்கட்டுக்களுடன் அமைந்திருக்கிறது மழைக்காலங்களில் படிக்கட்டுகள் மூழ்கும்படி நதிநீரின் பிரவாகம் இருக்குமெனத்தெரிகிறது.

இந்த திருக்கோயில் காலை 6மணிமுதல் பிற்பகல் ஒருமணிவரையும் மாலையில் 4மணிமுதல் இரவு 9மணிவரையிலும் திறந்திருக்கிறது/ தேவஸ்தானம் நடத்தும் தங்கும் விடுதிகள் விலைகுறைவாககிடைக்கின்றன. ஏராளமான தனியார் விடுதிகளும் இருக்கின்றன.
நஞ்சன்கூட்டில் ஒரு அழகிய ஐயப்பன் கோயிலும் உள்ளது இதுசபரிமலை பாணியில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

கட்டாயமாக அனைவரும் தரிசிக்க வேண்டிய புராதன சிவாலயங்களில் ஒன்று நஞ்சன்கூடுதிருத்தலமும் தான்.

என்ன , அடுத்து உங்களின் ஆன்மீகப்பயணம் நஞ்சன்கூடுதானே?!


புகைப்படங்களை எடுத்தவர் திரு ஹரிக்ருஷ்ண'ன்'.நன்றி அவருக்கு.
திருமதி ஷைலஜா

தேதி - 02 - 04 - 2011.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 6 ஏப்ரல் 2011, 20:21 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,792 முறைகள் அணுகப்பட்டது.