கர்னாடகத்துக் கோயில்கள் - மேல்கோட்டை!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

மேல்கோட்டை!


                                                                        
Melkote-Cheluvanarayanaswamy temple melkote DK.jpg


கர்னாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிற்றூருக்குப் பெரிய பெருமை உண்டு! திருநாராயணபுரம் என்றும் அழைக்கப்படும் இந்த ஊரின் மகிமையை கீழ்க்கண்ட பெயர்களைப் படிக்கும் போதே நமக்கு எளிதில் புரிந்துவிடும்!

சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் பரம்பரையாக கீழ்க்கண்ட பெயர்கள் கூறப்படுகின்றன.
பத்ம கூடா, புஷ்கரா, புதம சேகரா, ஆனந்த மாயா, யாதவகிரி, நாராயணாத்ரி, வேதாத்ரி, வித்யா((ஞான) மண்டல், தட்சிணபத்ரி.
                                                                                              
Melkote vairamudi2.jpg


ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காலமேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

தெற்குதிசைக்கு ஸ்ரீரங்கமும்(கருணா நிவாசன் ஸ்ரீரங்கநாதன்)
கிழக்குதிசைக்கு காஞ்சீபுரமும்(ஸ்ரீ வரதராஜன்)
வடதிசைக்கு திருப்பதியும்(ஸ்ரீவேங்கடாசலபதி)
மேற்கு திசைக்கு-மேல்கோட்டையும்(ஸ்ரீசம்பத்குமாரர்)

என்று ஆகம் சாஸ்த்திரப்படி நான்கு திருக்கோயில்களும் கலை அழகு மிளிர நிர்மாணிக்கப்பட்டு அர்ச்சா மூர்த்திகள் ஸ்வயம்புவாக விளங்கி வருகின்றன.

கர்ப்பகிருஹத்தில் மூலமூர்த்தி திருநாராயண பகவான் சங்க  சக்ரத்துடன் சதுர்புஜம், அபயஹஸ்தம், தண்டாயுதம்(கதை) ,அற்புதமான ரத்னம் இழைத்த தங்கக்கிரீடம், பூநூல் ,நாகாபரணம் முதலிய திவ்ய அலங்காரத்துடன் சேவை சாதிக்கிறார். தாயார் யதுகிரிநாச்சியார். ஆசார்யர்களுக்கும் ஆழ்வார்களுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன.

கோயிலின் வெளியே வேதாந்த தேசிகன், மணவாள மாமுனிகள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் சந்நிதிகளும் அமைந்துவிளங்குகின்றன.

குலசேகர ஆழ்வார் சந்நிதி முன்பாக அக்கா தங்கைக் குளங்கள் என இரண்டு குளங்கள், பெருங்குளமும் சிறுகுளமுமாய் எழிலுடன் இணைந்து காட்சி அளிக்கின்றன.
                                                                                         
Thirunarayanar.jpg

இரண்டுசகோதரிகள் கோயிலின் ஜீர்ணோத்தாரண கைங்கர்யத்தில் முக்கியபங்கு கொண்டு கைங்கர்யம் செய்தனர். அக்காள் தனது சார்பில்குளம் வெட்டி அந்தக் கைங்கர்யத்தில் ஆன செலவை கணக்குப்பார்த்தாளாம், தங்கை அப்படிக் கணக்குப் பார்க்கவில்லையாம் !அதனால் அக்காளின் குளத்துநீர் உப்பாகவும் தங்கையின் குளத்துநீர் இனிப்பாகவும் இருக்குமாம்! (இந்த சம்பவத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் படிப்பினை, பக்திதொண்டிற்குநாம் செய்யும் பணிக்குச் செலவாகும் தொகையைக்  கணக்குப் பார்ப்பது சரியல்லஎன்பதாகும்) இது மேல்கோட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ளது. இத்திருக்குளத்தின் கிழக்கே சுமார் 50படிக்கட்டுக்களுடன் கூடிய மலைக்கோயிலில் ஸ்ரீயோகநரசிங்கன் அருள்பாலிக்கிறார்.

கல்யாணிதீர்த்தத்தின் கரையில் ஸ்ரீவராஹப்பெருமான் ஆலயமும் சப்தரிஷி க்ஷேத்ரமும், சீதாரண்யமும், கருடன்  இருகைகளுடன் வலது திருக்கரத்தில் திருமண் மலையை  வைத்துக்கொண்டு வாஹன வடிவில் அமர்ந்து காட்சி நல்கும் தார்ஷ்ய ஷேத்ரமும், புவனேஸ்வரி மண்டபமும் அகோபிலமடமும் உள்ளன.

ஸ்ரீதிருநாராயணர் கோயிலின் பிரதான வாசலுக்கு எதிரே ஓர் இலந்தைமரத்து அடியில் ஒரு சிறிய நாராயணன் சந்நிதிஉள்ளது இங்கும் நித்யாராதனம் (தினப்படிபூஜை) நடைபெற்றுவருகிறது. இங்கு
Yadhikiri.jpg
சாண்டில்ய மஹரிஷியை மெச்சி  ஸ்ரீ பதரீ நாராயணர் அவருக்கு தரிசனம் அளித்து அனுக்ரஹித்தார் ஆகவே இதை தட்சிணபத்ரி எனவும் அழைக்கிறார்கள்.

ஸ்ரீ பலராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் தங்களின் தீர்த்த யாத்திரையின்போது இங்கு விஜயம் செய்து பகவானை தரிசித்தார்கள். அப்போது கிருஷ்ணன் ஒரு வைரமுடியை பகவானுக்கு சமர்ப்பித்தார் என்று சொல்லப்படுகிறது.

கோவிலின் விமானம் ஆனந்தமய விமானம்.

கோவிலுக்கு எதிரே த்வஜஸ்தம்பம்(கொடிமரம்)உள்ளது; அதைத் தாண்டி 24 கம்பங்கள் உள்ள மண்டபத்தில் 7அடி உயரமுள்ள கருடபகவானை தரிசிக்கலாம்.

இது, ஸ்ரீ ராமானுஜரின் அபிமான ஸ்தலம், நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வநாரயணன், திருநாராணன், வண்புகழ் நாரணன், வாழ்புகழ்நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம்.

ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய இப்பாசுரத்தை உடையவர் திரு நாரணனுக்கு ஸமர்ப்பித்து உகந்தார் -


ஒருநா யகமாய் ஓடவுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்கொள்வர்,
திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ.

"உலகங்கட்கெல்லாம் ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்களும்கூட நாளடைவிலே வறியவர்களாய்த் தடுமாறும்படியைக் கண்கூடாகக் காணப்பெறலாயிருக்கும், ஆகையாலே நித்ய ஸ்ரீமாநான எம்பெருமானைப் பணிவதே பாங்கு"

திரு அரங்கத்திலிருந்து தொண்டனூருக்கு ராமானுஜர் வந்ததும் அவருக்கு நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் திருமண் தீர்ந்துவிட்டது;  அதை யோசித்தபடியே சயனித்தவரின் கனவில் ஸ்ரீநாராயணன் தோன்றி  திருமண் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி” இங்கு துளசிச் செடிகள் மத்தியில்  இருக்கும் நான் உங்களை எதிர்பார்க்கிறேன் ”என்று கூறினாராம். மறுநாள் காலை ராமானுஜர் கிராமத்து முக்கியஸ்தர்களுடன் அங்கேசென்று அந்த இடத்தைத் தோண்டியதில் திருமண்ணும், திவ்யமூர்த்தியும் கிடைக்க அனைவரும் மகிழ்ந்தனர். உடனே அழகான கோயில் கட்டிப் பெருமானை பிரதிஷ்டை செய்தனர்.

இந்தக்கோயிலின் புனருத்தாரண  கைங்கர்யத்தில் அரசன் விஷ்ணுவர்த்தநன் பெரிதும் உதவினான்.  ராமானுஜரின் சிஷ்யர்களோடு அவருடைய யாத்திரையில் எல்லா வகை உதவிகளையும் அளித்த அந்தபிரதேசத்துப் பழங்குடி மக்களைப் பெரிதும் மதித்த எதிராஜர் அவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களை ‘திருக்குலத்தார்’ என்று பெயரிட்டு அழைக்கலானார். அவர்களின் தன்னலமற்ற சேவையை மதிக்கும் பொருட்டு கோயிலின் உத்சவங்களில் அவர்களுக்குக் கோயிலின் உள்ளேசென்று இறைவனை தரிசிக்கவும், கல்யாணி தீர்த்தக்குளத்தில் நீராடவும் அனுமதி தந்து மேலும் பலவசதிகள் செய்து கொடுத்தார். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் மிகப்பெரியபுரட்சி என இது கருதப்படுகிறது.

                                                                                         
Download.jpg

முகம்மதிய படையெடுப்பின் போது டில்லி சுல்தான் கோயிலை இடித்து விக்ரகங்களையும், பொன் பொருள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம் தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்தார் இராமானுஜர். மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார். சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான். தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த விக்ரகத்தை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான். அதைத் திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதனால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம் என்றான். நிபந்தனை இதுதான் - இராமானுஜர் உற்சவமூர்த்தியை அழைக்க வேண்டும. விக்ரகம் தானாகவே அவரிடம் வந்து சேரவேண்டும் . உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பதுபோல் ”என் செல்வப் பிள்ளாய், வருக !” என்று மனம் குழைந்து அழைத்தார். என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்த விக்ரகம் மாறி ஒரு குழந்தை வடிவில் நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று. சுல்தான் மலைத்துப் போனான். நிபந்தனைப்படியே உற்சவத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். மேல்கோட்டை உற்சவமூர்த்தி 'செல்வப்பிள்ளை' என்றே அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘ஸம்பத் குமாரன்’ சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து 'பீபீ நாச்சியார்’ என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் இராமானுஜர்.

இத்தலத்துப் பெருமானை சக்கரவர்த்தித் திருமகன் ஆராதித்தபடியால் ராமபிரியன் என்றும் செல்வப்பிள்ளை என்றும், ராமானுஜர் டெல்லி சென்று அங்கிருந்த சம்பத்குமாரனைச் செல்லமாய்க்கூப்பிட அவரும் ராமானுஜரின் மடிமீது வந்தமர்ந்த
பெருமானாகையால் ’செல்வ நாராயணன்’ என்றும் அழைக்கிறார்கள்.

யதுகுல மன்னர்கள் இத்தலத்தைப் பூஜித்ததால் ’யாதவகிரி’ என்றும், யதிவரரான ராமானுஜர் பிரதிஷ்டை செய்ததால் ’யதிசைலம்’ என்றும் இந்த ஊருக்குப் பெயர்கள் உண்டு.ராமானுஜரும், வேதாந்த தேசிகரும் பலகாலம் இங்கே தங்கிக் கைங்கர்யம் செய்துள்ளனர். ராமானுஜர் தை புனர்பூச நாளில் கல்யாணி புஷ்கரணிக்கரையில் அமைந்த புதரினுள் ஒளிர்ந்த பெருமானைக்கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்த அந்த நன்னாள் இன்றும் தை மாதம் விமரிசையாகத் திருநாராயணபுரத்தில் கொண்டாடப்படுகிறது.                                       
Download (3).jpg


சித்திரைமாதம் ஸ்ரீ ராமானுஜர்  திரு அவதார விழா பத்துநாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.10ம்நாள் திருநாராயணன் ராமானுஜருக்கு தசாவதார சேவை தருகிறார்.

மாசி மாதத்தில் திருநாராயணபுரத்தைச் சுற்றி அமைந்துள்ள வேதபுஷ்கரணி, கல்யாணி போன்ற எட்டு தீர்த்தங்களில் தீர்த்தவாரி கண்டருளும் அஷ்டதீர்த்த பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. வேத புஷ்கரணியில்தான் வெள்ளை சாத்திக்கொண்டு திருநாராயணபுரம் எழுந்தருளிய ராமானுஜர் மீண்டும் துவராடையுடுத்திக்கொண்டார் என்பது வரலாறு.

தீர்த்த உத்சவத்தின் நான்காம் நாள் இரவு திருநாராயணன் ஸ்ரீ கிருஷ்ணராஜ உடையார் அளித்த க்ருஷ்ணராஜமுடியுடன் வீதி வலம் வந்து பக்தர்களை அருள்பாலிக்கிறார். இதே வகையில் பங்குனி பிரம்மோத்சவத்தின் நான்காம் நாள் வைரமுடி உத்சவமும் நடைபெறுகிறது.

விலைமதிப்பற்ற வைரமகுடத்தை முன்னிட்டே இந்த பிரம்மோத்சவம் நடத்தப்பெறுவதால் வைரமுடித்திருவிழா பெருஞ் சிறப்பு வாய்ந்த ஒன்று. ’வஜ்ர மகுடி விலாஸ சம்பூ’ என்னும் நூலை திருநாராயணனைக காலங் காலமாய் பூஜித்துவந்த பெரியோரான ஸ்ரீ அளசிங்கபட்டர் எனத்திருநாமம் கொண்ட ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம வல்லுனர் தனது மேதா விலாசத்தால் படைத்தளித்துள்ளார்.
ஆண்டுதோறும் பங்குனித்திங்கள் புஷ்ய நட்சத்திரம் கூடிய சுபதினத்தின் இரவு வைரமுடித்திருவிழா சீரும் சிறப்புமாகக்கொண்டாடப்படுகிறது.

நடை அழகு அரங்கனுக்கு!
வடை பிரசாதம் பிரசித்தம் திருமலையானுக்கு!
குடை அழகு பேரருளாளன் வரதனுக்கு!
முடி(கிரீடம் )அழகு திருநாராயணனுக்கே!


வைரமுடியன்று காலை வைரமுடியும், சாமராஜ முடியுமாக இரண்டும் மண்டியா காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு வழிநடைப்பூஜைகளையும் ஏற்று, மாலை திருநாராயணபுரம் வந்தடையும். திருநாராயணபுர எல்லையிலிருந்து பல்லக்கில் வீதி வழியாக திருக்கோவிலுக்கு சென்று சேரும். இரவு ஒன்பது மணிக்கு திருநாராயணன் வைரமுடிப்புறப்பாடு கண்டருளி, மாடவீதிகள் மிகச்சிறியதாயினும் தமிழ்நாடு ,ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற இடங்கலிருந்து வரும் பக்தர்களுக்குக் காட்சி அளிக்க வேண்டி விடியற்காலை 4மணி அளவில் வாஹன மண்டபம் திரும்புவார்.

வாஹன மண்டபம் சேர்ந்தவுடன் சாமராஜமுடி அணிவிக்கப்பெறும். மற்ற ஆறு நாட்களும் சாமராஜமுடியுடன் சம்பத்குமாரனைக் கண்குளிரக்காணலாம்!
                                                                                           
Melkote-kulam.jpg

ராமாவதாரத்தில் ஸ்ரீராமன் சூடிய வைரமுடி, பிரகலாதனது மைந்தன் விரோசநன் கைகளில் அகப்பட்டதாகவும், அவன் அதைப் பாதாள லோகத்தில் மறைத்து வைத்திட, வைநதேயன் அதைப் பாதாளத்தில் இருந்து கொண்டு வருகையில் பிருந்தாவனத்தில் ஸ்ரீக்ருஷ்ணன் இருப்பதைக் கண்டு அவனுக்குச் சூட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேல்கோட்டை நாராயணபுரத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் 'வைரமுடி சேவை' விழா தனிச்சிறப்புடையது. இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர். இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது!.

வேத வேதாந்த போதினி ஸம்ஸ்க்ருத மஹாபாடசாலை என்ற பெயரில் அன்றைய மைசூர்மகாராஜா கிருஷ்ணராஜ உடையாரின் உத்தரவுப்படி 1854ல் ஸ்தாபிக்கப்பட்ட வித்யாலயம், (கர்னாடக ராஜ்ஜியத்தின் முதல் ஸம்ஸ்க்ருத மஹாவித்யாலயம், பாரதத்தின் இரண்டாவதாய் ஸ்தாபிக்கபட்ட வித்யாலயம் )இங்கே உள்ளது, யதுகிரிராஜமடம், பரகாலமடம் மேலும் அஹோபிலமடத்தில் கிளைகள் மேல்கோட்டில் உள்ளன. பல அரிய ஆராய்ச்சிநூல்களும் ஓலைச்சுவடிகளும் இங்கு உள்ளன.

இங்கு பாரதீய கலாசாரத்தின் அகண்ட பரம்பரை காணப்படுகிறது. இங்குள்ள வேத வித்வான்கள் , பண்டிதர்கள் ,பன்மொழிப்புலவர்கள் சம்ஸ்கிருதம், தமிழ், கன்னடம், ஹிந்தி மேலும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் சிறப்பாக ஆன்மீகக் கிரந்தங்களை  இயற்றியும் ,மொழிபெயர்த்தும் பக்தி இலக்கியத்தொண்டில் மேம்பட்டு இருந்தனர், இன்றும் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த இடம் வித்வத் ஜன நகரி என்றும் சொல்லப்படுகிறது.


அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !
ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே.


‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’ எழுதிய திருவரங்கக் கலம்பகம்ஷைலஜா.

தேதி - 02 - 04 - 2011.

பங்களிப்பாளர்கள்

Dev, Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 6 ஏப்ரல் 2011, 20:22 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 6,330 முறைகள் அணுகப்பட்டது.