கலித்தொகை - குறும்பில் ஒளிந்திருக்கும் குறும்புகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கட்டுரையாளர்:மன்னை. மகா

நன்றி:- தினமணி - தொகுத்து அனுப்பியவர்: டாக்டர். கண்ணன் நடராசன்உலகில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் யாவும் மனித வாழ்க்கையில் சீரிய வெளிப்பாடுகளாகும்.


அத்தகு இலக்கியங்கள் பலவற்றுள்

  • நாடகப் போக்கும்
  • நாடகத் தனிமொழிக் கூற்றும் மிகுந்துள்ளன.

இவை தனித்தன்மை மிக்கவை.


இப்பாடல்களுள் பயின்று வரும் மாந்தர்கள் பிறரிடம் நிகழ்த்தும் உரையாடலை நாடகப் போக்குப் பாடல் எனவும், தன் நெஞ்சோடு கிளத்தலை நாடகத் தனிமொழி எனவும் வகைப்படுத்த இயலும்.


பாடலைப் பாடும் புலவரின் கூற்று இவற்றுள் அமையப் பெறுவதில்லை.


கலித்தொகை பாடல்கள் பெரும்பாலும் நாடகப் போக்குத் தன்மையுடன் விளங்கி வருகின்றன.


குறிப்பாக "சுடர்த் தொடீஇ கேளாய்" என்ற பாடல் அனைவர் மனத்திலும் தலைவனின் குறும்புச்  செயல்களை வியந்து போற்றி நீங்கா இடம்பெற்ற நாடகப்போக்குப் பாடலாக சிறப்புடன்  திகழ்வதைப் போல, அகப்பாட்டு ஒன்றில் காணப்படும் நாடகத் தனி மொழியில் காணப்படும்  தலைவனின் குறும்புத் திறத்தை அறிவோம்.


புதிதாய் மணமுடித்த தலைவன் ஒருவனோடு ஊடல் கொண்டிருக்கத் தலைப்பட்டாள்
அவனது தலைவி. அவன் அவ் ஊடலைத் தணிக்கவும், அவளோடு பழையபடி கூடி
மகிழவும் முயல்கிறான்.


ஆனால், அம் முயற்சி அவனுக்குக் கைகூடாததுடன் மேன்மேலும் அவளுடைய ஊடல்
கூடிக் கொண்டிருந்தமையால் மனம் வெறுப்புற்று, தன் நெஞ்சுடன் இப்படியாகத் தான்
புரிந்த பழங்குறும்பினை நினைந்து காயம்பட்ட மனதைப் போக்கிக்கொள்ள முனைகிறான்.


இது ஓர் உளத் தற்காப்பு உத்தியாகும்.


அன்று தான் அத்திருமணத் தம்பதியினருக்கு தலைநாள் இரவு.


விருப்பம் ஒன்று கூடிவர தூய ஆடையுடுத்திப் பொலிவுடன் நல் அணிகலன்கள் பல
பூட்டியதால் துளிர்க்கும் வேர்வை ஆற்றப்பட்டு உறவோரால் கொடுக்கப்பட்ட தலைவி,
மழையொலியைப் போல ஒலிக்கும் மென் ஒலிபரப்பி, நறுமணம் நிறைந்திட்ட
பந்தலின்கண் நுகரத்தக்க ஒன்றாகக் காட்சி அளிக்கிறாள்.


அத்தகு புதுத்தன்மை இழக்காத புடவையால் மேனி முழுவதும் போர்த்தி பெரும்
புழுக்கத்திற்கு ஆட்பட்டவளிடம்,

"உன் பிறை போன்ற நெற்றியில் அரும்பும் வியர்வையினை காற்று மிகக்கொண்டு ஆற்றும்
வண்ணம் சிறிது போதுதிற", என்று ஆண்மைத் திறத்துடன் அதனை (பட்டாடையை)
வேட்கையுடன் பற்றிக் கவர்ந்ததால், வெளிப்பட்டுத் தோன்றிய தன் உள் வடிவை
மறைக்கும் வழியறியாதவளாகி விரைந்து வெட்கிப் போனாள்.


பின்னர், இதழ் பருத்த பெரிய ஆம்பல் மலர் மாலையின் மணம் வீசியும் வண்டுகள்
நாடத்தக்க மலர் சூட்டப் பெற்றும், கரிய அடர் கூந்தல் இருளிடத்துப் பேணி தம்
புறம்தெரிந்த அவ்வுறுப்பினை ஒளித்து, வெறுப்பு நீங்கிய சிறந்த இல்லத்தலைவி
குணத்துடன் இத்தகைய என் ஆளுமைக்கு அடிபணிந்தவளாகத் தாழ்ந்து கைகூப்பி
வணங்கி நின்றாள் எனத் தலைவன் தன் செய்கையினை தானே எடுத்துரைப்பதாக
அமைந்திருக்கும் அப்பாடல் பின்வருமாறு.


"தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி
மழைப்பட்டன்ன மணன்மலி பந்தர்
இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்
உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி

முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்
பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர்
உறுவளி ஆற்றச் சிறுவரை திறஎன
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப

மறைதிறன் அறியாள் ஆகி ஒய்யென
நாணினள் இறைஞ்சி யோளே - பேணிப்
பரூஉப்பகை ஆம்பற் குரூஉத்தொடை நீவிச்
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே". (அகம் - 136:15 - 29)


இல்லத்தலைவி மீதான இத்தகைய இரக்கமற்ற சீண்டல்களை ஆணாதிக்க சமூகம்
தலைவனின் குறும்பாகக் காலந்தோறும் புனைந்துரைத்து நியாயப்படுத்தி வருவது
ஈண்டு நோக்கத்தக்கது.


அதுபோல், பெண் என்பவள், ஆடவனின் உடைமை மற்றும் நுகர்வுப் பொருளாகவும்,
யாதொரு உணர்ச்சியுமற்று அடங்கி நடப்பவளாகவும், ஒடுங்கிக் கிடப்பவளாகவும்
ஒழுக வேண்டியவளாகத் திகழ வேண்டும் என்பதே இப்பாடலின் உள்பொருளாகக் காணப்படுகிறது.


ஆண் வண்டினம் மொய்த்து ஆரவாரத்துடன் களிக்கத்தக்க மலராகப் பெண்
இருக்கப்பட வேண்டும் என்பது இதன் மற்றொரு இறைச்சிப் பொருளாக இருக்கிறது.


நல்லது செய்வதாகக் கூறி அல்லது செய்து பெண்ணை பெரும் துன்பத்துக்கு
ஆளாக்கும் இத்தகைய நடத்தை நடப்பு, வாழ்வியலோடு ஒப்பிட்டு உணரத்தக்கது.


மேலும், நல்ல இல்லத் தலைவி, கணவனின் எத்தகைய விரும்பத்தக்க மற்றும்
விரும்பத்தகாத செயல்களுக்கும் பணிந்து ஏற்று நடப்பதை தாம்பத்திய
உயர்நெறியாகக் கடைபிடிக்க வேண்டுமென்பதை அறிவுறுத்துகிறது.


இவ்வித அடிமைக் கற்பு நிலை வரலாறு நெடுக தடம்பதித்தே வந்துள்ளது.


ஆகவே, இதுபோன்ற நாடகத் தனிமொழிப் பாடல்களில் பொதிந்து காணப்படுகின்ற
தந்தையாதிக்கக் கருத்துகளை வெளிக்கொணர்வது சார்பியல் சிந்தனையற்ற ஆய்வியல்
முறைமையாகும்.


அப்படி அடிபணிந்து ஒழுகியவள் இப்போது தொடர்ந்து புரிந்துவரும் ஊடலுக்குக் காரணம் யாதோ?


என்று தனக்குள்ளாகப் புலம்பும் ஐயப்பாடே இங்கு கருத்து வெளிப்பாட்டுப் பாங்கியலாக உள்ளது நன்கு புலப்படும்.

இவ் ஊடலுக்குக் காரணம் பெண் தன்னெழுச்சியுற்று தன் மதிப்பை விழைவதேயாகும்.  ஏனெனில், புனிதம் என்பது இங்கு எதுவுமில்லை. எல்லாம் மீள்வாசிப்பிற்கும், மறுசிந்தனைக்கும் உள்பட்டது. 


இப்பாடல் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை மானுடம் போற்றும் மனிதர் கட்டாயம் அறிவர்.

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 8 ஜனவரி 2010, 14:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,696 முறைகள் அணுகப்பட்டது.