கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 007

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

 

[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]

          தஞ்சைப்பெரியகோயிலின் அதிட்டானப்பகுதியில் அமைந்துள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் எழுத்துகளை நாம் கற்றுவருகிறோம். அவ்வெழுத்துகளுக்கு முந்தைய காலக் கல்வெட்டு எழுத்துகளும் பிந்தைய காலக் கல்வெட்டு எழுத்துகளும் பலவாறு மாற்றம் கொண்டவை. அம்மாற்றங்களோடு அவ்வெழுத்துகளையும் இனம் கண்டு படிக்க இங்கே பயிற்சி தொடங்குகிறது.

         சோழர்களுக்கு முன் தமிழகதிலிருந்த பல்லவர் காலத்திலேயே தமிழ் எழுத்துகள் கல்வெட்டுகளில் வழக்கத்துக்கு வந்தன என்றாலும் குறைவான எண்னிக்கையிலேயே அவை கிடைத்துள்ளன. பல்லவர்கள் வடநாட்டுப் பின்புலத்திலிருந்து வந்தவராதலால் பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளையே பயன்பாட்டுக்குட்படுத்தினர். பிறகு தமிழும் தமிழ் எழுத்தும் பயன்பாட்டுக்கு வந்தன. தமிழகத்தில் கிடைத்த காலத்தால் முந்திய தமிழ் எழுத்து பல்லவ அரசன் சிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்த பள்ளன்கோயில் செப்பேட்டில் உள்ளது. காலம் கி.பி. 575-600. அச்செப்பேட்டிலிருந்து சில வரிகள் இங்கு தரப்பட்டுள்ளன. (இரண்டு ஒளிப்படங்கள்).

முதல் ஒளிப்படம்:


Lesson7-1-P1100429.JPG


இப்படத்தின் பாடம் கீழ்வருமாறு:


..... விடுதகவென்று   நாட்டார்க்குத்திருமுக...........
... ந் திருமுகங்கண்டு தொழுது தலைக்கு வைத்து படா
கை நட(ந்)து கல்லுங்கள்ளியுநாட்டி நாட்டார் விடுத்த
அறையோலைப்படிக்கெல்லை கீழ்ப்(பா)
லெல்லை ஏந்தலேரியின் கீழைக்கடற்றி

இரண்டாம் ஒளிப்படம்:


Lesson7-2-P1100430.JPG


இப்படத்தின் பாடம் கீழ்வருமாறு:

ந் மேற்கு மோமைக்கொல்லை எல்லை இன்னு
ம் தென்பாலெல்லை வேள்வடுகன் கேணியி
ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபாநாம் கற்ற எழுத்துவடிவங்களிலிருந்து சற்று மாற்றம் பெற்ற எழுத்துகளைப்பற்றிய குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் கவனம் தேவை.Lesson7-3-pallankooyil thiruththam-1.jpg


Lesson7-4-pallankooyil thiruththam-2.jpg
பள்ளன்கோயில் செப்பேடு - ஒளிப்படமும் சில குறிப்புகளும்:


Lesson7-5-P1100443.JPGபள்ளன்கோயில் செப்பேடு,  பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும் சிற்றூரைத் தந்த செய்தியைக் கூறுகிறது.
மேலே நாம் பார்க்கும் செப்பேட்டுப் பாடத்தில் வரும் சில தொடர்களுக்கு விளக்கம் வருமாறு :
பள்ளிச்சந்தம் - ஜைன, பௌத்த மதத்தவர்க்கு அளிக்கப்பெற்ற இறையிலி (வரி நீக்கம் பெற்ற) நிலம்.
குரவர் - சமண ஆச்சாரியர்.
நாட்டார் - நாட்டுச்சபையார்
திருமுகம் - அரசனின் ஆணை எழுதப்பெற்ற ஓலை.
தொழுது தலைக்கு வைத்து - நாட்டார் அரசனின் திருமுகம் வரக்கண்டு தொழுது தலைமேல் வைத்துக்கொண்டனர்.
படாகை - பிடாகை=உட்கிடை ஊர்.
படாகை நடந்து  கல்லுங்கள்ளியு(ம்) நாட்டி -  பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து  எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நட்டனர். சிவன்கோயிலாக இருப்பின் சூலம் பொறித்த கற்களும், திருமால்கோயிலாக இருப்பின் சக்கரம் (ஆழி) பொறித்த கற்களும் நடுவது மரபு.
விடுத்த அறையோலை - கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவித்தனர்.
கிழக்கு எல்லை - ஏந்தலேரி என்னும் ஏரியின் கீழைக்கடறு; ஒமைக்கொல்லை. (கடறு=காடு)
தெற்கு எல்லை - வேள்வடுகன் கேணி.
துணை நின்ற நூல் : புலவர் வே.மகாதேவன் எழுதிய “கல்வெட்டுக்கள் வினா-விடை விளக்கம்”.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  
நிலக்கொடை அளித்தலில் அரசன் ஆணையிடுவது தொடங்கி, பின்பற்றப்பட்ட நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியன பற்றி அறிகிறோம்.
தமிழகத்தில் இன்றும் ஆங்காங்கே சூலக்கற்களும், ஆழிக்கற்களும் தொல்லியல் சிதறல்களாகக் காணக்கிடைகின்றன.
சமணப்பெரியாரைக் குரவர் என  அக்காலத்தே அழைதுள்ளனர் என்பதை அறிகிறோம். இவ்வழக்கத்தைப் பின்பற்றியே, பின்னாளில் சைவப்பெரியாரையும் குரவர் என அழைக்கும் வழக்கு வந்திருக்கக்கூடும். திரு.வி.க. பற்றிய செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. சிலப்பதிகாரத்தில் சமணப்பெரியோராக வரும் கௌந்தி அடிகள் பெயரை அடியொற்றித் திரு.வி.க. அவர்கள், காந்திப்பெரியவரைக் “காந்தியடிகள்” என அழைத்து ”அடிகள்” என்னும் சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார் எனக்கேள்வி.___________________________________________________________

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156

___________________________________________________________

பங்களிப்பாளர்கள்

Themozhi

இப்பக்கம் கடைசியாக 7 மார்ச் 2016, 08:18 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,780 முறைகள் அணுகப்பட்டது.