காங்கியம்மை தேவாரத் திருப்பதிகம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

காங்கியின் திருவருள் உ யாங்கணும் பெருகுக
சக்திமயம்

பொருளடக்கம்

திருவோத்தூர் 'காங்கியம்மை தேவாரத் திருப்பதிகம்


ஆக்கியோன்
வித்துவான். மாவண்ணா தேவராசன் அவர்கள்
தமிழாசிரியர், கழக உயர்நிலைப் பள்ளி, ஊத்துக்கோட்டை

திருவோத்தூர் பு.ரா. கோபால முதலியார் வேண்டுகோட்கிணங்க திரு.அ. முருகப்ப முதலியார் குமாரன் ப.மு.தணிகாசல முதலியார் பொருளுதவியால் அச்சிடப்பட்டது.  

ஜய ஆண்டு வைகாசித் திங்கள் வெளியீடு

காங்கி அம்மன் தேவஸ்தானம்

சிறப்புரைகள்

என் விழைவு

விண்ணவர்க்கு அருமறை யூட்டிய வேதநாதனின் மறைசை நகரிலே ஆண்பனை பெண்பனையாக்கிய காழிமகனின் தேவாரப் பதிகத்தின் சுவையில் திளைத்தநான் திருவோத்தூர் அருட்பெருஞ் சக்தி காங்கியுமையின் மீது ஓர் ஒப்பிலாத் தேவாரம் புனைந்து அணிவிக்கவேண்டும் எனும் அவாக்கொண்டேன். புலவர் திரு. மாவண்ணா தேவராசன் அவர்கள் உடனே தம் பேனாவை ஓட்டி
இப்பாக்களை ஒரு தாளில் தீட்டி என்னிடம் நீட்டினார். அவர் புரிந்த பேருதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன்? வாழிய பன்னாள் அவர்! அவர்தம் கவித்திறன் வளருமாக! அவர்க்கு என் வணக்கம்.

திருவோத்தூர், அன்புள்ள,
25-5-’54. வைத்தியர், கு. வேதபுரி முதலியார்


வாழ்க நன்றே !


தென்னைநன் றிக்குச் சான்றாய்ச் சேய்நதி நாப்பண் தோன்றும்
பொன்னெயில் மறசை தோன்றல் புலவர் மா. தேவ ராசன்
கன்னலாம் திருத்தே வாரக் காங்கிநற் பதிகம் செய்தான்.
பொன்னெழில் வாணாள் பெற்றே புகழொடும் வாழ்க நன்றே.


திருவோத்தூர் திரு மு.ரா.முனிசாமி முதலியார் அவர்கள் மகன் 25-5-’54. முத்துகிருஷ்ணன்நூல் 1சக்திமயம்

திருவோத்தூர்
காங்கியம்மை தேவாரத் திருப்பதிகம்மழைநீர் வேண்டி வருந்துமிம் மாநிலம்
தழைவான் தண்ணருள் தந்ததாய்
குழையார் பூம்பொழில் கொள்கையார் ஓத்தூர்
விழைவாள் காங்கி விமலையே. 1

மலையா நெஞ்சினர் மனத்தெழு மாற்றலாய்
உலையா தோம்பிஎவ் வுலகையும்
தொலையா தூட்டும்நற் சுடர்விளக் கோத்தூர்
நிலையார் கங்கியமை நேர்வமே. 2

நேரி லாத்தமிழ் நேயமிக் கார்பலர்
சேரி டம்சக்தி சேரிடம்
ஊரி வர்முறை உயர்திரு வோத்தூர்
நாரி காங்கியின் நன்மையே. 3

நன்மை வந்தெய்தும் நாளும் நமைக் கொலும்
புன்மை யாவ்ய்மே போகுமால்
உண்மைய் யேயுஅர் ஒழுக்கமார் ஓத்தூர்ப்
பெண்மை காங்கியைப் பேசுமே. 4

பேசு வீர்பரா சக்தியின் பேரருள்
வீசும் மெய்ப்புகழ் வீரமே
கூசு வார்பழி கூறிடார் ஓத்தூர்
மாசில் காங்கியை வாழ்த்துவமே. 5


காங்கியம்மை தேவாரத் திருப்பதிகம்

<span style="line-height: 1.5em;" />

வாழ்க்கை யாம்பிறர் வருத்தத்தை மாற்றல் இந்
நோக்க மேநவில் நுங்குகள்
சேர்க்கு மாண்பனைத் தென்னையார் ஓத்தூர்
காக்கும் காங்கியைக் கருதுமே. 6

கருதும் யாவையும் கைப்பந்து போலருள்
புரியும் மாசக்திப் பொற்பினை
வரவே தபுரி மனங்கொளும் ஓத்தூர்த்
திருவார் காங்கியின் சேவையே. 7

சேவை செய்பவர் தீவினை நீக்கிடும்
தேவை காங்கியைச் செம்மையை
வாழ்வில் தாம் மறவாதவர் ஓத்தூர்ச்
சூழ்வீர் காங்கியைத் தொழுதுமே. 8

தொழுவார் தம்பிற விதொழு நோய்கெடும்
அழுஞ்சேய் வெம்பசி யாற்றுந்தாய்
எழிலார் அன்பினும் ஏற்றமார் ஓத்தூர்
நிழலார் காங்கியை நினைமினே. 9

நினைவார் நெஞ்சினில் நினைத்தவா றேயுரு
புனைவாள் பொய்யருள் பொய்யளாம்
கனியார் வானுறு கான்செறி ஓத்தூர்
அனையாம் காங்கியின் ஆற்றலே. 10

ஆற்றல் மிக்கவள் அன்பர்க் கெளியவள்
தேற்றம் நம்பிணி தீர்ப்பவள்
போற்றுஞ் சேய்நதிப் புகழ்மிகும் ஓத்தூர்
ஊற்றம் காங்கியின் ஒண்மையே. 11


காங்கியம்மை தேவாரத் திருப்பதிகம்


ஒண்மை உண்மை உயர்விவற் றின்எதிர்த்
தன்மை தெய்வத் தன்மையாக்
கண்முன் னாய்ந்தவர் கருதெழி லோத்தூர்ப்
பெண்மை காங்கிப் பெருமையே. 12


பெரிதும் வேண்டினேன் பேய்மனம் தான்உன்மெய்
தெரிந்தி றைஞ்சிடத் தேவியே
உரியார் செய்பிழை ஒப்புவர் ஓத்தூர்ப்
பெரியார் பொன்மழை பேணுமே. 13


நூல் 2


ஓம்
வாழிய செந்தமிழ்!

காங்கியம்மை கவசம்


ஆக்கியோன்

மாவண்ணா தேவராசன்


[காப்பு வெண்பா]
ஓங்கியவிர் பேரொளியாய் நின்றான் உளமகிழும்
காங்கி யெனுஞ் சாத்தி கவசமிவண் – பாங்கிமிகும்
பீடுபெறும் நற்றமிழாற் பாடப் பெரிதுவக்குங்
காடுவெட்டிப் பிள்ளையார் காப்பு.


[தமிழ் அன்னை வணக்கம்]
கட்டளைக் கலித்துறை


என்று பிறந்தனை என்றறியாப் புகழ் இன்னிசையார்
துன்று கனித்தமிழ்ஹ்த் தோகை யணங்கே ! சொலற்கரும்நின்
ஒன்றும் இனிமைசற் றுற்றுணர் கிற்பார் ஒருவருண்டேல்
இன்றும் அவர்தாள் எனதுளம் சேர்த்தினி தேத்துவனே !


காங்கியம்மை கவசம்

சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க!


திருக்கோவலூர் ஞானியார் மடாலயத்
தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான
சிவாசாரியார் அருளிய


சாத்துகவி

காங்கிப்பே ரம்மை கவசம் இயற்றியுய்ந்தான்
தாங்குறுசீர்த் தேவராசச் செம்மல் – ஓங்குறவே
கல்வியொடு மக்கள் கடமை தெரியிவற்கு
மல்குகவே நல்ல வளம்.

காங்கியம்மை கவசம்


நூல்

[அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்]


அழகொளிர் ஓத்தூர் வாழ்நல் ஐயையாம் காங்கி யம்மை,
குழகொளிர் தலையைக் காக்க; கூறுமும் மூளை காக்க;
ஒழுகுநல் அருவிப் புந்தி உத்தமி காக்க; குஞ்சி
எழுகவின் காளி காக்க; இன்னருள் பொழிந்துள் காக்க! 1

ஆரணி நெற்றி காக்க; அமர்சிலைப் புருவந் தன்னைக்
கூரணி காங்கி காக்க; குண்டலி பொறியாம் ஐந்தும்,
சீரணி பெறவே காக்க; திருமுகம் சூரி காக்க;
தாரணி புரக்கு மாயை தனியிதழ்ப் பன்னாக் காக்க! 2

இருக்கொடு நால்வே தங்கள் ஏத்துமெண் டோளி காக்க
உருக்கொளும் பிடர்க்க துப்போ டுயரிரு தாடை தம்மை
திருக்கொளும் காங்கி யண்ணம் திருப்புகந் தரத்தைக் காக்க;
செருக்கொளு மலைத்தோள் மார்பும் சேர்விலா கௌரி காக்க3

ஈங்குடற் பதினெண் குற்ற இடுக்கணைக் களைந்துள் ளுற்ற
பாங்குறு குடலி ரண்டும் பயிரவி காக்க; சித்தம்
ஆங்குறு கரணம் நான்கும் அடக்கியே வண்சீ காக்க;
ஓங்குநல் லிதயம் மற்றுள் உறுப்பெலாம் காங்கி காக்க! 4

உன்னரு முழங்கை நீண்ட உயிர்த்துணை(ப்) பின்முன் கைகள்
நன்னர்கங் காளி காக்க; நல்மிகு விரல்கள் பத்தும்
துன்னுவெண் ணகங்கள் காங்கி துகளறக் காக்க; நீயும்
பின்னுறு முதுகிடுப்பைப் பெரிதுவந் தீண்டுக் காக்க! 5


காங்கியம்மை கவசம்


ஊழொடெண் சாண்மெய் தன்னில் உறுதுயர் வயிறு முந்தி
சூழுகீழ் அகடும் நன்றே சொல்லுயர் குமரி காக்க;
காழிளிர் குய்யம் ஆணி கமலைதாள் காக்க; காங்கி
பேமுற அமர்கை விந்தைப் பேரெழு பண்ணாள் காக்க! 6

எங்குமா யாவுமாகி யிருந்தருள் சுரங்குங் காங்கி
தங்குமுட் பகையா ரோடும் தாழ்வெலா மகற்றித் தாழும்
பொங்குமுன் றொடையைக் காக்க; பொலியுமுன் றொடையை வண்மைச்
சங்குசேர் முழங்காற் றாளைத் தாருகற் செற்றோள் காக்க! 7

ஏதிடந் தனிலு மின்னல் எண்ணில் தேரும் பின்கால்
சேதக வுட்கால் கண்டைச் சீறடி விரலைக் காங்கி
தாதனென் உகிரைக் காக்க; தாதுவேழ் புனைந்த மெய்யைப்
பாதகப் பகைமுன் முற்றும் பரிந்துவந் தணங்கு காக்க! 8

ஐந்துபூ தங்க ளாக அடங்கியேழ் ஏழுமண்ணும்
விந்தையிற் றொழில்மூன் றாச்சீர் விரிந்தருள் காங்கி தீமைக்
கொந்திணர் பூக்கும் எண்ணில் கொடியபேய்க் குழூஉவின்
நின்றும் மைந்தனாம் என்னைக் காக்க; மாலினி என்றுங் காக்க.9

ஒல்லையில் உயிர்போக் கும்பாழ் உவணிவிற் றண்ட மாதி
கொல்லுமாப் படைநின் றென்னைக்குமரி ஐங்கிலியும் சவ்வும்
நல்லவா காக்க; மந்த்ரம் ஞாயமில் தந்த்ர யந்த்ர
அல்லலைப் பொசுக்கிக் காங்கி ஐம்படை இனிதே காக்க! 10

ஓதிடா மாக்க றானுண் ணுலுத்தர்வாய் ஒன்று கூறிப்
பாதக மைந்துஞ் செய்யும் பதகர்தம் மினத்தினின்றும்
மாதரி காக்க; கோடி மறலியர் போற்சூழ்ந் துள்ள
தீதளி விலங்கி னின்றும் தெளிவுறக் காங்கி காக்க! 11காங்கியம்மை கவசம்


ஔவிய நரக மேழும் அணுகிடா தமலை காக்க;
கௌவையில் களிப்பில் காங்கி காக்கநல் விமலை யேழு
பௌவமார் புவியில் எட்டுப் படரிரு திக்கில் காக்க
வௌவுமுப் பிணியிற் றுன்பம் வளர்க்குநோய் இன்றிக் காக்க! 12

கதறுநான் மறைக்கு மெட்டாக் காங்கிமண் டலமேழ் தம்மில்
பதறிடா வாறுகாக்க: பத்திரி திணைஐந் துள்ளு
சிதறிடா வாறு காக்க; செந்தமிழ் மொழியா ளேரேழ்
உதறிடக் கதிரால் ஆமி ரெழுபொழி தூடுங் காக்க! 13

சகலரும் தூற்றுந் தீநீர்த் தசமுமீண் டணுகா வண்ணம்
பகலவர் முந்நால் வோரும் படக்கதிர் முத்தீக் கண்ணி
இகதறக் காக்க; காங்கி எமபடர் பாசம் வீச
அகலமிவ் வுயிரை அவ்வா றகன்றிடா தருளிக் காக்க! 14

ஞலவல்செங் கதிர்முன் னென்ன நமனிரு வினையும் வீழச்
சொலவரு மாற்றல் வாய்ந்த சூலிஏழ் வகைநன் மாதர்
பலவரும் பாவா லேத்தப் பரவுசேய் நதிப்பால் காங்கி
கலவியுண் டிருந்த லாதி கணக்கிலா வினையிற் காக்க! 15

தனித்ததண் டமிழன் னாள்சூர் தடிந்தசண் டிகைநற் காங்கி
கனித்தஎண் போகந் துய்க்கும் காலையும் காக்க; திங்கள்
பனித்தசெஞ் சடைமால் வேதன் பரவுநன் மறைசைச் சத்தி
இனித்தசெங் கரும்பா யென்றும் எங்கணு மினிதே காக்க! 16

நடுங்கஞர் வேலை ஏழும் நாகமோர் ஏழும் எட்டும்
கடுங்கணை மதனம் பைந்துங் கயங்கள் பாலகர்கள் எட்டும்
தடங்கலின் றேவல் செய்யத் தனியர சோச்சுங் காங்கி
மடங்கலே றுயர்த்தாள் என்றும் வருத்தங்கள் நூறிக் காக்க! 17காங்கியம்மை கவசம்


படர்சடா டவிகூத் தோன்முன் பகரொணா நட்ட மார்த்துச்
சுடர்தர நிற்கும் காங்கி துன்பெலா மொழித்துக் காக்க;
தொடர்புறும் பிறவித் தீயைத் துன்னுமுத் தீயால் வீட்டி
அடர்புறு பிணிப்பேய் தம்மை அலகையால் அழித்துகாக்க! 18

மட்டிலா வன்மைக் காங்கி மதுபதி மூவேழ் வேள்வி
திட்டமாய்ச் செயினு முத்தி சேர்ந்திடா(து) அன்பால் உள்ளச்
சட்டமாம் படத்துள் வைத்துத் தவறிடா தேத்து வோர்க்கே
பட்டமு முத்தி யீயும் பகடியெப் பவத்துங் காக்க! 19

யகரமே போற்சூ லேந்தும் யாமளை யாளி யூர்தி
அகரமாம் பதுமை காங்கி அட்டமாக் குணச்சா முண்டி
பகரரு மாற்றல் காட்டிப் பாரெலா மாட்டுங் கூத்தி
நிகரமாய்த் தோன்றும் துன்பம் நீக்கியெவ் விடத்தும் காக்க! 20

வல்லணங் காகுங் காங்கி வையமாய் அணுவா யோங்கிச்
சொல்லரும் படிவந் தாங்கித் தூநதி எழுநீர் வாங்கிப்
பல்லருந் தீமை நீங்கிப் பரசிடச் செற்றார் ஏங்க,
நல்லமர் புரிந்த நீலி நயந்துளத் தமர்ந்து காக்க! 21

[நூற்பயன் – அகவல்]

சத்தியே உலகில் தனிபெருந் தெய்வமால்
பத்தியாய்ப் படித்திதைப் பரவுத லாற்றின்
முத்தியோ டெல்லா முழுவின் பங்களும்
நித்தமும் எய்தியிந் நேமியில்
எத்தல மும்புகழ் எய்துவர் இனிதே!

[வாழ்த்து – கலி விருத்தம்]

வாழ்க செந்தமிழ் வையகம் எங்கணும்
சூழ்க காங்கியின் கவசம் தொன்மையார்
ஏழ்கடற் புவி இனிதே எய்துக
ஆழ்க தீதெலாம் அமைதி நிற்கவே!


நூல் 3

மாவண்ணா தேவராசன் இயற்றிய


திருவோத்தூர்

காங்கியம்மன் திருப்பள்ளியெழுச்சி


[காப்பு]

ஓங்கு திருவோத்தூர் உறை காங்கி யம்மன்மேல்
பாங்கு திருப்பள்ளி எழுச்சியையான் – ஈங்குரைக்க
முப்போதும் அஞ்ஞானம் மூளுமென்னுட் காடுவெட்டும்
கைப்போ தகத்தின்தால் காப்பு.


அருணன் உதித்தனன் அம்புஜம் விண்ட(து)
அகில சராசரம் அகம் விழித்தெழுந்தே
மரணம் போலுந்துயில் வீட்டியுள் மகிழ்ந்தே
வாழ்க்கையில் செல்லுமுன் வாழ்த்தியுன் னருளின்
சரணமே பெற்றுய்யச் சார்ந்தன்; அன்னாய்
தநயர்கள் ஏங்கிடத் தாய்துயில் வாயோ?
இரணிய மேய்மதில் மறைசைவாழ் காங்கி
எம்முயிர்த் தாய் பள்ளி எழுந்தருள் வாயே! 1காங்கியம்மன் திருப்பள்ளியெழுச்சி


ஆதவன் குணகடல் அளந்து குன்றேறி
ஆகாயம் எங்கணும் அழகொளி வீசிப்
போதக மலர்ந்திட அருள்பொழி கின்றான்;
போக்கின தம்துயர் புட்குலம் யாவும்,
மேதினி தனில் எங்கள் வேட்கையுட் பெறுவான்
விரும்பிவந் தடிபணிந் தடியேங்கள் நின்றோம்
ஏதிது வியப்பென எண்ணிடேல்; காங்கி
எம்முயிர்த் தாய் பள்ளி எழுந்தருள் வாயே! 2

இன்பமே உருவெடுத் திட்டகுக் குடங்கள்
இறைவிநின் திருப்பெயர் இனிதிவண் கூவி
மன்பதை தனிஎழுப் பிடஎழுந் தினிதே
மாலைகள் புனைந்துநின் மலரடிச் சூட்ட
அன்பர்கள் சூழ்ந்துவந் தடியின்கீழ் கின்றோம்
ஆவியாய் உலகெலாம் புரந்தருள் காங்கி
என்புநெக் குருகுமெம் இடரொழி மறைசை;
எம்முயிர்த் தாய் பள்ளி எழுந்தருள் வாயே! 3


ஈடிலாப் பேரொளி எழுந்திடக் கண்டே
எண்ணில் தாரகையினம் இரிந்தன நிலவோ(டு)
ஆடியுன் திருப்பெயர் ஆயிரம் பாடி
ஆண்டாண்டாய் தூங்குங் குண்டலிசத்தி எழுப்பிக்
கூடுமா றாதாரங் களையுந்தாண் டிப்போய்க்
கூத்தொலி கேட்டுயிர் குறைவிலா இன்ப
ஏடவிழ் மரையிதழ் மலர்த்திடக் காங்கி
எம்முயிர்த் தாய் பள்ளி எழுந்தருள் வாயே! 4


காங்கியம்மன் திருப்பள்ளியெழுச்சி


உத்தமக்கற் பொழுக்கங் கொண்டுள் ஒழுகும்
உயர்பத்னி ஒத்தடி யோங்களும் உனையே
நித்தமும் போற்றி யன்புற்றுயிர் வாழ்வோம்
நிமலை யமலை கமலை; திருவோத்தூர்
மெத்தவும் வதியெங்கள்; காங்கியம் மையே
விடிந்தது பொழுதினும் மெலத்துயில் கின்றாய்
இத்ததி எம்துயர் நீக்கிட இனிதே
எம்முயிர்த் தாய் பள்ளி எழுந்தருள் வாயே! 5


ஊமையன் கண்டவோர் கனவது போல
உன்திரு வடியின்பம் உற்ற காகங்கள்
தாமகிழ்ந் துட்கரை வதன்பொருள் அறியோம்;
தள்ளொணா விருந்தென வந்துநிற் கின்றோம்
சோமன்புன் ஒளிகெடக் கதிரவன் தோன்றித்
தொல்லுலகில் யாவையும் உயிர்ப்பித்தான் அதுபோல்
ஏமநல் பேரின்பம் ஈந்திடக் காங்கி
எம்முயிர்த் தாய்பள்ளி எழுந்தருள் வாயே! 6


என்னியல் வாழ்க்கையில் எய்திய இன்பம்
ஈதெனப் பேசும்பைங் கிளிகளும் பனிசேர்
கொன்னுறு பேரிருள் தொலைந்த தென்றேஉன்
குலவிய கோழிகா கங்குயில் கூவும்
மன்னிய சேய்நதி வளங்கெழு மோத்தூர்
வாழ்திருக் காங்கியே வளர்துயில் ஏனோ!
இன்னமுதே! உயிரே! செழுந் தேனே
எம்முயிர்த் தாய்பள்ளி எழுந்தருள் வாயே! 7


காங்கியம்மன் திருப்பள்ளியெழுச்சி


ஏதிலார் போலநீ பொய்த்துயில் கின்றாய்
இளஞ்சிசு கதறிடத் தாய்பொறுப் பாளோ
வேதனை தாள்கிலேன்; வீழினும் வழுக்கி
மிகச்சிறி தும்முன்னை மறந்திலேன்; உயிராய்
போதவிழ் கதிர்மதி யாய்நிலம் வெளியாய்
புனல்கனல் தீயெனப் போந்தொளிர் கின்றாய்!
ஈதுனக் கழகல மறைசை வாழ் காங்கி
எம்முயிர்த் தாய்பள்ளி எழுந்தருள் வாயே! 8


ஐயுணர் வெய்திய பொழுதுமுன் னருள்சேர்
அழிவில்மெய் யுணர்வினர் அஞ்சிடாத் தகைமை
பையநான் உணர்ந்துநின் பதமலர் போற்றிப்
பார்வைபெற் றுய்ந்திடப் பக்தியின் உற்றேன்
செய்யமா நதியெனத் திருவருள் பொழிவான்
திருமறை சைநகர் உறையுமெம் காங்கி
எய்யுமென் தனையஞ்சேல் என்றிடச் சற்றே
எம்முயிர்த் தாய்பள்ளி எழுந்தருள் வாயே! 9


ஒப்பிலா மணீயொடு தேனுவுந் தருவும்
உவந்தளித் தேசுரர் தலைமைப்புரந் தனையே
கப்பிய பேரிருள் திரைகழித் தெறிந்தே
கதிரவன் வானில் நிமிர்ந்தொளிர் கின்றான்
துப்பிலா வாழ்க்கையில் தொலைந்த்ழிந் தேனைச்
சொலொன்று கூறிஎன் செவிநல முறுவான்
இப்பொழு தியைந்தது மறைசைவாழ் காங்கி
எம்முயிர்த் தாய்பள்ளி எழுந்தருள் வாயே! 10


காங்கியம்மன் திருப்பள்ளியெழுச்சி


ஓமென எங்கணும் பரந்திசைக் கின்றாய்
உன்னுமெம் உள்ளுருவினில் வெளிப் படுவாய்
ஆமை யெனப்புலன் ஐந்து மடக்கி
அரிதின்வாழ் துறவினர் வாழ்வெனக் கியல்போ
நாமநீர் வையத்தில் லறநெறி ஒழுகி
நன்றுன தருளினால் நானிலம் உய்ய
ஏமகேஸ் வரிவேத புரிநகர் காங்கி
எம்முயிர்த் தாய் பள்ளி எழுந்தருள் வாயே! 11


ஔவியம் பேசியான் அழிந்ததும் போதும்
ஐந்தறி வினுமிக இழிந்ததும் போதும்
பௌவிய ஜீவனாய்ப் பவமொழித் தினிதுன்
பதமலர்ப் பரவிநான் பைந்தமிழ் எனவே
செவ்வைநல் வாழ்வுறச் சேகரம் மலரின்
தேன்குடித் திசைத்திடச் சேர்ந்தனன் கதிர்கிப்
இவ்விடத் துனைவிடேன் மறைசைவாழ் காங்கி
எம்முயிர்த் தாய் பள்ளி எழுந்தருள் வாயே! 12

முற்றிற்று
பிற் குறிப்பு: இம் மூன்று நூல்களின் தொகுப்பு திருவத்திபுரம், ஸ்ரீ பாலசுப்ரமண்யம் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டது. இவற்றுடன் திரு பாலசுந்தர நாயகர் அவர்களின் பாடலும் சேர்க்கப் பட்டிருந்தது.

மாவண்ணாவின் பாடல்களை தட்டச்சு செய்து வலைத் தளத்தில் ஏற்றியவர், அந்நாரின் தலை மகன் டாக்டர் எம்.டி.ஜெயபாலன்.

தேடல் சொற்கள்: செய்யாறு காங்கியம்மன் துதிப் பாடல்கள், திருவத்திபுரம், திருவோத்தூர், மாவண்ணா, தேவராசன், எம்.டி.ஜெயபாலன்,

Tags: Cheyyaru Kaangi Ammai Devotional Poems, Mavanna Devarajan, M.D.Jayabalan, Thiriuvathipuram, Thiruvoththur, kavas am, thiruppalli ezhuchi


--Ksubashini 22:26, 29 ஜனவரி 2013 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2013, 22:30 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,835 முறைகள் அணுகப்பட்டது.