கார்த்திகை தீபத்திருவிழா கல்வெட்டு- சமயம் - சிற்பம் - தரும் விளக்கங்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 
டாக்டர்.பத்மாவதி, தமிழ்நாடு தொல்லியல் துறை
கார்த்திகைத் தீபம் என்றாலே திருவண்ணாமலைத் தீபம் தான் நம் நினைவிற்கு வரும். திருவண்ணாமலையில் அத்தனைச் சிறப்புடன் கார்த்திகைத் தீபம் கொன்டாடப்படுவதற்குக் காரணம் இருத்தல் வேண்டும். கல்வெட்டுக்கள் தரும் ஆதாரப்படி அக்கோயிலில் கி.பி. பதினோராம் நூற்றாண்டு முதலே இத்திருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெற்று வந்திருக்கிறது. அக்கோயிலின் சமய வரலாற்றுத் தத்துவ விளக்கப் பிண்ணனிதான் என்ன?

பஞ்சபூதங்களினால் ஆனதே இவ்வுலகம்.. பஞ்சபூதங்களுமாய் இருப்பவன் சிவன். அவனே நீர். அவனே நிலம். அவனே வாயு. அவனே தீ. அவனே ஆகாசம். ஆகாசமாகத் தில்லையிலும், தீயாகத் தி திருவண்ணாமலையிலும், வாயுவாகக் காளஹஸ்தியிலும், நிலமாகக் காஞ்சியிலும், நீராகத் திரிவானைக்காவிலும் லிங்க வடிவில் கோயில் கொண்டிருப்பவன் அவன்.

திருவண்ணாமலை அக்னித்தலம் என்பதால் தீப வடிவில் அக்னி வணங்கப்படுகிறதா?

அண்ணாமலையார் சிற்பம்: சிவனின் அம்சங்களுள் ஒன்றான லிங்கோத்பவர் என்பது லிங்கதிலிருந்து இறைவன் வெளிப்படுவது ஆகும். இந்த லிங்கத்தின் அடியையும் முடியையும்தான் திருமாலும் பிரம்மாவும் தேடினார்களாம். இவர்கள் உருவத்துடன் காட்சியளிக்கும் லிங்கோத்பவர் சிற்பம் அண்ணாமலையார் என்று அழைக்கபடுவது ஏன்?

திருவண்ணாமலை இறைவனை மாலு நான்முகனும் கூடிக்காண்கிலா வகையுள் நின்றாய் என்றும் தேடிக்காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை என்றும் முறையே அப்பரும் சம்பந்தரும் பாடியுள்ளனர் என்பதை அறிகின்றபோது, அடிமுடி தேடிய இந்தக் கதைக்கும் திருவண்னாமலை இறைவனுக்கும் தொடர்பிருக்கிறதோ என்ற கருத்து உறுதிப்படுகிறது.

முதலாம் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப்பெருவுடையார் கோயிலில் அவனது அரசி அபிமானவல்லி அமைத்த செப்புச் சிலைகளுல் ஒன்றினைப் பற்றி இங்கு குறிப்பிடுவது மிகவும் அவசியம். அந்தச் செப்புத் திருமேனி லிங்கத்தின் நடுவில் தோன்றும் சிவபெருமானுடனும், லிங்கத்தோடு ஒட்டிய நிலையில் பிரம்மாவுடனும் திருமாலுடனும் செய்தளிக்கப்பட்டிருந்தது என்பதை அறிகின்றபோது இச்சிலை லிங்கோத்பவர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இச்சிலை கல்வெட்டில் எவ்வாறு கூறப்பட்டிருக்கிறது தெரியுமா? - லிங்கபுராணத் தேவர் என்று. லிங்கபுராணம் என்றதும் பதினெட்டுப் புராண நூல்களுல் ஒன்றாகிய லிங்கபுராணம் நம் நினைவிற்கு வரும்.

இரண்டாம் சந்திரகுப்த மெளரியன் கி.பி. 380 முதல் 412 வரை ஆட்சி புரிந்தவன். இவன் காலத்தில் தொகுக்கப்பட்ட நூல்தான் லிங்கபுராணம். இந்நூல் பாசுபத சித்தாந்தத்தையும், பாசுபத விரதத்தையும், அட்டாங்க யோகத்தையும், பாசுபத வழிபாட்டு முறைகளையும் சிவபெருமானின் சிறப்புக்களையும் விளக்கும் ஒரு பாசுபத சைவ நூல் ஆகும். லிங்கோத்பவர் சிலை, இந்த லிங்கபுராணத்தின் பெயரில் லிங்கபுராண தேவர் என அழைக்கபட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது.

இப்புராணத்தின் பதினேழாம் அத்தியாயத்தில் பிரம்மாவும் திருமாலும் சிவனின் அடிமுடி தேடிய கதை கூறப்பட்டுள்ளது. அதாவது திருமாலும் பிரம்மாவும் தங்களுக்குள் யார் பெரியவர்கள் என்பது பற்றி விவாதம் செய்துகொண்டிருந்தபோது அவர்களின் நடுவே விண்ணிற்கும் மண்ணிற்கும் ஒரே ஜோதியாக நெருப்புபிழம்பு ஒன்று லிங்க வடிவில் தோன்றியதாம்.

இதைக்கண்டு நடுங்கிய அவர்கள் இந்த லிங்கத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியபோது திருமால் வராக அவதாரம் எடுத்து நெருப்புலிங்கத்தின் அடியையும் பிரம்மா அன்னவடிவெடுத்து லிங்கத்தின் முடியையும் தேடிச்சென்றனராம். நெருப்பு லிங்கத்தின் நடுவே 'ஓம்' எனும் ஓசையுடன் சிவபெருமான் காட்சியளித்தாராம். அதன் பிறகுதான் பிரம்மாவும் விஷ்ணுவும் தங்களைவிட பெரிய தெய்வம் சிவனே என்பதை உணர்ந்து வழிபட ஆரம்பித்தனராம்.

ஆக, அக்னிலிங்க வடிவில் லிங்கம் எழுந்ததால் அக்னிலிங்கமாயிற்று. அந்த லிங்கத்திலிருந்து உத்பவமானதால் (தோன்றியதால்) லிங்கோத்பவர் என அழைக்கப்பட்டார். இந்த லிங்கோத்பவர் பற்றிய அழகிய கதை முதன் முதலில் லிங்கபுராணத்தில் கூறப்பட்டுள்ளதால் லிங்கபுராணதேவர் என்று அழைக்கப்பட்டார். ஆக அக்னிலிங்கம்தான் லிங்கபுராண தேவராயிற்று. இதே லிங்கபுராண தேவராகிய அக்னிலிங்கம்தான் அக்னித்தலமாகிய திருவண்னாமலையில் வழிபடப்படுவதால் அண்ணாமலையார் ஆயிற்று. ஆகவே அண்ணாமலையார் லிங்கபுராண தேவராகிய லிங்கோத்பவரே- என்பது தெளிவாகிறது.

தேவாரங்களில் புராணக்கருத்துக்கள்:

அக்னிலிங்கத்தின் அடிமுடிதேடிய கதையைப் பற்றி அப்பர் ஒரு பொதுப்பாயிரத்தில் பாடியுள்ளார். அப்பாயிரத்தை 'லிங்கபுராணக் குறுந்தொகை' என்று கூறியிருப்பதைக் கொன்டு அப்பர் லிங்கபுராணத்தை பின்பற்றி எழுதியிருப்பதை அறிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, அவரது பாடல்களிலும் சரி, ஞானசம்பந்தர் பாடல்களிலும் சரி, கடவுள்களின் உருவ அமைதிகள், வழிபாட்டு முறைகள், பஞ்சபூதங்களாகக் கூறப்படும் சிவனின் ஐந்து முகங்கள் ஆகியவை பற்றியும், தக்கன் யாகத்தை அழித்தது, காமனை எரித்து, காலனை உதைத்தது, யானையைக் கிழித்தது, பிரமன் தலையைக் கொய்தது, முப்புரங்களை அம்பால் அழித்தது போன்ற செய்திகளும் பரவலாகக் கூறப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. சைவ ஆகமங்களாக இக்கருத்துக்கள், லிங்க-அக்னிஸிவபுராணங்களில் மிகவும் சிறப்புடன் பேசப்பட்டிருக்கின்றன. கி.பி. 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இப்புராணங்களை, கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தேவார ஆசிரியர்கள் நன்றாக அறிந்திருந்தனர். தாங்கள் ஒப்புக்கொண்ட அப்புராணக் கருத்துக்களையும், தத்துவங்களையும் தங்கள் பாடல்களில் புகுத்தி, மக்கள் மத்தியில் பக்திபரவசத்தைப் பெருக்கி புதியதொரு சமயநெறியைக் கூட்டி, சைவ சமயம் மறுமலர்ச்சியை வகுத்திருக்கின்றனர்.

இப்புராணங்களைக் கூறும் பாசுபத சைவசமயத்தின் அடிப்படையில் எழுந்த தேவாரப்பாடல்கள் கூறும் சைவ சமயத் தத்துவமே சோழர்கள் உருவாக்கிய பேரரசிற்கு முதுகெலும்பாய் விளங்கியது என்பதை வரலாற்று, சமய, தத்துவ, கோயிற்கலைகள் ஆய்வினின்றும் அறிந்து கொள்ளலாம்.

புராணங்களில் கார்த்திகைத் தீபம்:

கார்த்திகை மாதத்தில் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யப்படுவதற்கும், லிங்க, அக்னி புராணங்களில் சான்றுகள் உள்ளன.

இறைவனை வழிபடும் முறைபற்றி லிங்கபுராணம் கூறும்போது, யார் கார்த்திகை மாதத்தில் இறைவன் முன்னிலையில் நெய் வழங்குகிறார்களோ, அவர்கள் நற்பயனை அடைவார்கள் என்று கூறுகிறது.

விளக்குத்தானம் செய்வதனால் எல்லா விதமான மகிழ்ச்சியும், விமோசனமும் கிடைக்கும் என்று கூறும் அக்னிபுராணம், கார்த்திகை மாதத்தில் விளக்குதானம் செய்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்; விளக்குதானம் செய்வதைவிட வேறு சிறந்த தானம் இல்லை; இத்தானம் செய்வதினால் நல்ல கண்பார்வையும் ஒளிமயமான எதிர்காலமும், வம்சவிருத்தியும் ஏற்படும் என்றெல்லாம் கூறுகிறது.

இக்கருத்துக்களின் தாக்கம், எந்த அளவு தமிழகத்தில் வேரூன்றியிருந்தது என்பதை ஏராளமான தானங்கள் கோயில்களுக்கு விளக்கெரிக்க அளிக்கப்பட்டிருந்ததைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

கல்வெட்டுக்களில் கார்த்திகைத் தீபம்:

திருவண்ணாமலைக் கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. இவ்விழாவுக்கு வருகைதரும் சிவனடியார்களுக்கு உணவு வழங்கவும், அவ்வூரிலுள்ள மடங்களுக்கு நிலங்கள் தானமளிக்கபட்டிருந்தன.

முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கி.பி 1031-ல் திருக்கார்த்திகைத் திருநாளன்று திருவண்ணாமலைக்கோயில் ஸ்ரீ விமானத்தைச் சூழ இரவை சந்தி விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. (கருவறை முதல் மேலே உள்ள சிகரம் வரை உள்ள கட்டடப்பகுதியே ஸ்ரீ விமானம் என்று கூறப்படும்) இவ்வாறு உயர்ந்த விமானத்தில், சூழ எரிந்த சந்திவிளக்குகளின் தீபங்களே அக்னி லிங்கமாக காட்சியளித்திருக்கும். இந்த சந்தி விளக்குகளுக்கு அணுக்க விளக்காக ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதே மன்னன் காலத்தில் எட்டு வருடங்களுக்குப் பின்னர் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டிலும் கார்த்திகைத் திருவிழா பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த இருகல்வெட்டுக்களுமே சிவனடியார்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த செய்தியையும் தெரிவிக்கின்றன.

இம்மன்னன் மகன் முதலாம் இராஜாதிராஜன் காலத்திலும் கார்த்திகைத் திருவிழாவன்று நடராஜருக்கு சாந்தாடல் செய்வதற்கு 9சந்தன அபிஷேகம்) நிவந்தஞ் செய்யப்பட்டிருந்தது.

முதலாம் குலோத்துங்க சோழன் தொடர்ந்து கார்த்திகைத் திருவிழாவினை நடத்தி வந்தான் என்று தெரிகிறது. அவனது முப்பத்தியிரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு, முப்பத்தியிரண்டாவது திருக்கார்த்திகைத் திருநாள் எனக் குறிப்பிடப்படுவது கொண்டு அறிந்து கொள்ளலாம்.

சோழன் மன்னர்கள் அனைவருமே திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத்திருவிழாவை வருடந்தோறும் சிறப்புடன் நடத்தி வந்தனர் என்பது புலனாகிறது.

இவ்வாறு கல்வெட்டுக்கள், லிங்கோத்பவர் சிற்பம், லிங்கபுராணமும் தேவாரப்படல்களும் தனக்கி நிற்கும் பாசுபதச் சித்தாந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தோமானால் - பஞ்சபூதங்களுல் ஒன்றான அக்னியாக சிவனை வழிபடும் திருவிழாக்களுக்குள் ஒன்றுதான் கார்த்திகைத் தீபத் திருவிழா என்பது மிக நன்றாகத் தெளிவாகும்.

லிங்கபுராணத்தில் கூறப்பட்ட அக்னிலிங்கத் தத்துவத்தில் அமைக்கப்பட்ட லிங்கோத்பவர், லிங்கபுராணத்தேவர், அண்ணாமலையார் என்றெல்லாம் கூறப்படும் அச்சிற்பம் பெரும்பாலான சிவன் கோயில்களில் கருவறையின் மேற்குப் புறத்தேவ கோட்டங்களில் அமைக்கபட்டிருப்பதை கண்டுகளிக்கலாம்.

உதவிய நூல்கள்:

1. Lingapuranam- Motilal bansaridass. Delhi_Patna Varanasi

2. Agnipuranam- Do

3. அப்பர், ஞானசம்பந்தரின் திருமுறைகள்

4. Are 1945-46/61-81


--Ksubashini 16:27, 27 ஜனவரி 2013 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2013, 16:27 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,097 முறைகள் அணுகப்பட்டது.