குறுந்தொகைச் சிக்கல்களும், தீர்வுகளும்!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முனைவர் தெ.ஞானசுந்தரம்இடம் மாறிய பாடல்


கடைச்சங்கப் பாண்டிய மன்னருள் இறுதியாக வாழ்ந்தவன் உக்கிரப்பெருவழுதி என்பார் வரலாற்றாசிரியர் கே.கே.பிள்ளை.

அப்பாண்டிய மன்னனே அகநானூற்றைத் தொகுத்தவன்.

அவன் பாடல் ஒன்றும் (அகம். 26) அத்தொகை நூலில் இடம்பெற்றுள்ளது.

அவனது பாடல் ஒன்று நற்றிணையிலும் (98) காணப்படுகிறது.

இதனால் அகநானூறும், நற்றிணையும் சம காலத்தவை என்பது புலனாகிறது.

நற்றிணையைத் தொகுத்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.

அத்தொகையில் அவன் பாடல் ஒன்றும் (301) உள்ளது.

அவன் புனைந்த பாடல் ஒன்று குறுந்தொகையிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

மாறன் வழுதியின் வெற்றிச்சிறப்பைக் குறிக்கும் அடைமொழியே "பன்னாடு தந்த" என்பது. இதனால் நற்றிணையும், குறுந்தொகையும் சமகாலத்தவை எனலாம்.

இவற்றைக்கொண்டு தொகை நூல்களுள்

- அகநானூறு
- நற்றிணை
- குறுந்தொகை

மூன்றும் ஒரே காலத்தைச் சார்ந்தவை என்று தெளியலாம்.

இவற்றுள் குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ.

நற்றிணையைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.

அகநானூற்றைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்.

பூரி என்பது உப்பூரிகுடி என்பதன் மரூஉ என்றும், "கோ" என்பது "கிழார்" என்பதன் மாற்று வடிவம் என்றும் கொள்வதற்கு இடமுண்டு.

சேக்கிழாரைச் "சேவையர் கோ" என்று உமாபதிசிவம் குறிப்பது இப்படிக் கருதத் துணை நிற்கிறது.

இவ்வாறு கொண்டால், குறுந்தொகையையும் நற்றிணையையும் தொகுத்தவர் பூரிக்கோ என்றும், அகநானூற்றைத் தொகுத்தவர் அவர் மகனார் உருத்திரசன்மர் என்றும் கொள்ளலாம்.

1940ஆம் ஆண்டு நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய இரு நாள்களில் சென்னையில் குறுந்தொகை மாநாடு நிகழ்ந்துள்ளது.

அதில் நிகழ்ந்த சொற்பொழிவுகள், "குறுந்தொகைச் சொற்பொழிவுகள்" என்று நூலாகவும் வந்துள்ளது.

அதில் நெய்தல் திணைபற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ள வித்துவான் இராஜசிவ. சாம்பசிவ சர்மா என்பவர், 9 அடிப் பாடல்கள் இரண்டு குறுந்தொகையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், "குறுந்தொகையைச் சார்ந்தனவாகவும் இக்காலப் பதிப்புகளிலும் ஏட்டுப் பிரதிகளிலும் காணப்படாதனவாகவும் குறுந்தொகைச் செய்யுட்கள் இரண்டுள்ளன என்று கூறி, அப்பாடல்கள் முறையே, "நன்றே" என்னும் தொடக்கத்தைக் கொண்ட பாடலும் நம்பியகப்பொருள் விளக்கத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள "இவளே நின்னலது இலளே" என்னும் பாடலும் ஆகும் என்று குறித்துள்ளார்.

இதனால்,"குறுந்தொகையில் நீக்கத்தக்கனவும் சேர்க்கத்தக்கனவும் உண்டுபோலும் என்னும் ஐயத்தைத் தெரிவித்துள்ளார்.

இக்கருத்து இதுநாள்வரை ஆராயப்படாமலே இருக்கிறது.

இவற்றுள் அவர் நீக்கத்தக்கன என்று கருதும் ஒன்பதடிப் பாடல்கள் இரண்டினைக் குறித்து முதலில் ஆராயலாம்.

கடம்பனூர்ச் சாண்டிலியன் பாடியுள்ள "வளைஉடைத் தனையது ஆகி" என்னும் 307ஆம் பாட்டு எல்லா ஏட்டுப் படிகளிலும் ஒன்பது அடிகளைக் கொண்டதாகவே காணப்படுகிறது என்றும், "உவரி ஒறுத்தல்" என்னும் 391ஆம் பாடல் சில படிகளில் எட்டடியாகச் சில வேறுபாடுகளுடன் எழுதப்பட்டுள்ளது என்றும் குறித்துள்ளார் தமிழ்த்தாத்தா உ.வே.சா.

இதனால் பின்னர் உள்ள பாடலில் ஏதோ சிக்கல் உள்ளது என்பது தெரிகிறது.

அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள காகிதப்படிகள் இரண்டினைப் பார்த்தபோது ஒரு படியில் (ஈ.244) பாடலின் பின் நான்கு அடிகள்.

"வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர் கையறப்
பையுள் மாலைப் பூஞ்சினை யிருந்த
போழ்கண் மஞ்ஞை தாநீர் நனந்தலை
புலம்பக் கூவுந் தோழி பெரும் பேதையவே.

என்று பிரிக்கப்பட்டிருந்தது.

இச்சீர் அமைப்புச் சரியாக இல்லை.

இப்பகுதியின் முதலடியும், ஈற்றடியும் ஐந்துசீர் கொண்டனவாக உள்ளன.

மேலும் ஈற்றயலடி முச்சீரடியாக அன்றி நாற்சீரடியாக வேறு இருக்கிறது.

"உவரி ஒருத்தல் உழாஅது மடியப்
புகரி புழுங்கிய புயல்நீங்கு புறவில்
கடிதுஇடி உருமின் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாநீர் நனந்தலை புலம்பக்
கூஉம் தோழி பெரும்பே தையவே.

என்பதே பாடலின் திருந்திய வடிவம்.

இவ்வாறே உ.வே.சா.வும் மர்ரே பதிப்பாசிரியரும் வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலில் மூன்று தொடர்கள் உள்ளன.

"ஒருத்தல் மடியப் புறவில் பாம்பு அவிய வீழ்ந்தன்று", என்பது முதல் தொடர்.

"வீழ்ந்த மாமழை தழீஇ வந்த மாலை பூஞ்சினை இருந்த மஞ்ஞை புலம்பக் கூவும்", என்பது இரண்டாவது தொடர்.

"பெரும் பேதைய" என்பது மூன்றாவது தொடர்.

இதில் முதல் தொடருக்கு எழுவாய் இல்லை.

மழை என்னும் எழுவாயை வருவிக்க வேண்டியுள்ளது.

மூன்றாம் அடியில் வன்மையாக இடிக்கும் உருமேற்றினால் பாம்புகள் படம் சிதைய என்றதன் பின்னர் நான்காமடியில் மீண்டும் இடியொடு மயங்கி என்று வருவது கூறியது கூறல் ஆகிறது.

முதல் தொடர் "வீழ்ந்தன்று" என்று முற்றுப்பெற,
இரண்டாம் தொடர் "வீழ்ந்த மாமழை" என்று அந்தாதி அமைப்பில் தொடங்குவதும் மிகையாகத் தோன்றுகிறது.

இவையேயன்றி மழை, சேர்ந்திருக்கும் தலைமகனுக்கும், தலைமகளுக்கும் மகிழ்ச்சியாகவும் பிரிந்துறையும் அவர்களுக்குத் துன்பம் தருவதாகவும் இருப்பதாகப் பாடுவதே அகப்பாடல் மரபு.

இத்தொகை நூலில் உள்ள "தாழ்இருள் துமிய" என்னும் பன்னாடு தந்தான் பாட்டு, சேர்ந்தார்க்கு மழை மகிழ்ச்சி தருவதாய் இருத்தலைக் காட்டுவதாகவும்.

"அவரே, கேடில் விழுப்பொருள்" என்னும் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன் பாட்டு, பிரிந்தார்க்கு அது துன்பம் பெருக்குவதாய் இருத்தலையும் எடுத்துரைக்கின்றன.

ஆனால், "பிரிவிடை பருவவரவின்கண் ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது", என்னும் துறையில் அமைந்த இப்பாடலில், மழை "இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்று" என்பது "சுருதி பேதமாக" அமைகிறது.

இத்துணை இடர்ப்பாட்டுக்கும் காரணமாக இருப்பது "இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே", என்னும் நான்காவது அடியே.

இவ்வடியை நீக்கிவிட்டால், பொன்மணியாரின் இப்பாடல் எக்குறையுமின்றி உயர்ந்த பொன்மணியாகவே திகழ்கிறது.

பாடலின் முதல் ஏழரை அடிகள் ஒரு தொடராகவும், எஞ்சிய இருசீர்கள் ஒரு தொடராகவும் அமைந்து செறிவோடு திகழ்கிறது.

"தோழி, பன்றிகள் வெறுப்புற்று நிலத்தைக் கிளைக்காமல் சோம்பிக் கிடக்கவும், மான்கள் வெப்பத்தால் துன்புறவும், மழைபெய்யாமல் நீங்கிய முல்லை நிலத்தில் விரைந்து இடிக்கின்ற இடியினால் பாம்புகள் படம் அழியும்படி பெய்த பெருமழையோடு சேர்ந்துகொண்டு தம் தலைவரைப் பிரிந்து தனித்துறையும் மகளிர் செயலற்றுச் சோர்ந்து போகுமாறு வந்த துன்பம் தரும் இம்மாலைப் பொழுதிலே, பூக்களையுடைய கிளைகளில் இருந்த பிளவுண்ட கண்களையுடைய மயில்கள் பாயும் நீரையுடைய அகன்ற இடத்தின்கண் தனிமைத் துன்பம் மிகும்படி கூவுகின்றன. இவை மிக்க அறியாமை உடையன

என்று தெளிவான பொருளைத் தருவதாக அமைகிறது.

இதனால் பொன்முடியார் பாடல் எட்டடிகளைக்கொண்ட பாடல் என்றும், எல்லா ஏடுகளிலும் ஒன்பதடியாகவே காணப்படும் 307ஆம் பாடல் குறுந்தொகையில் தவறாகச் சேர்க்கப்பட்டது என்றும், அதுவே முற்றும் கிடைக்காமற்போன நற்றிணை 234ஆம் பாடல் என்றும், ஒருவராலோ ஒரே வீட்டில் வாழ்ந்த தந்தை, மகன் ஆகிய இருவராலோ நற்றிணையும், குறுந்தொகையும் தொகுக்கப்பட்டபோது நற்றிணைப்பாடல் ஏடு மாறிக் குறுந்தொகையில் சேர்க்கப்பட்டுவிட்டது என்றும் தெளியலாம்.பெயர் மாறிய தொகுப்பு

அகப்பாடல் மரபுகளை விரிவாக விளக்கும் நூல்களுள் ஒன்று நாற்கவிராசநம்பி இயற்றிய நம்பியகப்பொருள்.

அதில்,

"இவளே நின்னலது இலளே; யாயும்
குவளை உண்கண் இவள்அலது இலளே;
யானும் ஆயிடை யேனே;
மாமலை நாட! மறவாது ஈமே.

என்னும் பாட்டொன்று மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

வித்துவான் இராஜ சிவ. சாம்பசிவ சர்மா தமது குறுந்தொகைச் சொற்பொழிவில்,"இது, குறுந்தொகைச் செய்யுள் என்று பாங்கி (கை)யடை கொடுத்தலுக்கு மேற்கோளாகச் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் பிள்ளையின் நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்னும் நூற்பதிப்பில் காணப்படுகிறது".

குறுந்தொகைப் பதிப்புகள் எதிலும் அச்செய்யுள் காணப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இப்பாடல் குறுந்தொகையில் உள்ளதாகத் தவறாக அப்பதிப்பில் அச்சிடப்பட்டுள்ளது.

பாங்கி கையடை கொடுத்தற்கு எடுத்துக்காட்டாகப் "பறந்திருந்து" (திருக்கோவையார் - 13) "நீள்கடல் உண்ட" (திருவாரூர்க் கோவை - 226) நனைமுதிர் ஞாழல் (குறுந்தொகை - 397) "இவளே நின்னலது" ஆகிய நான்கு பாடல்கள் தரப்பட்டுள்ளன.

அகப்பொருள் உரையில் ஒரு துறைக்குப் பல எடுத்துக்காட்டுகள் தரப்பட்டாலும் ஒரு நூலிலிருந்து ஓர் எடுத்துக்காட்டே பிற இடங்களில் எல்லாம் தரப்பட்டுள்ளது.

இங்கு மட்டும் ஒரு துறைக்குக் குறுந்தொகையிலிருந்து அடுத்தடுத்து இருபாடல்கள் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன என்று கொள்வது பொருந்தாது.

அகப்பொருள் கழகப் பதிப்பில் "இவளே நின்னலது" என்னும் பாடல் வருமிடம் சுட்டப்படவில்லை. ஆயினும், பாண்டித்துரைத் தேவரால் பரிசோதிக்கப்பட்டு, மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பாக 1913இல் வெளிவந்துள்ள "அகப்பொருள் விளக்க மூலமும், உரையும்" நூலில், இது தொல்காப்பியப் பொருளதிகாரவுரையில் வருவதாகக் குறிக்கப்பட்டுள்ளது. "தொல், பொருள் பக்கம் 65" என்பது அந்நூலில் உள்ள குறிப்பு.

இது தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பா 39இன் உரையில் "தோழி கையடை கொடுத்தற்கு" நச்சினார்க்கினியரால் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளதையே சுட்டுவதாகும். ஆனால், அங்கும் இப்பாட்டு எந்நூலில் உள்ளது என்னும் குறிப்பு இல்லை.

இதனால் "இவளே நின்னலது" எனத் தொடங்கும் செய்யுள் குறுந்தொகைச் செய்யுள் அன்று என்பதும், வேறு ஏதோ ஒரு நூலைச் சார்ந்தது என்பதும் தேற்றம்.

அகப்பொருள் விளக்கத்தின் உரையில் மேற்கோள் பாடல்கள் எந்த நூலைச் சார்ந்தவை என்னும் குறிப்பு அந்நூலாசிரியரால் தரப்படவில்லை.

பதிப்பாசிரியர்களே முயன்று தேடிப் பல பாடல்களின் முகவரியைக் கண்டு பதிப்பித்துள்ளார்கள். ஆனால், நம் நல்வாய்ப்பாக அவ்வாசிரியர் 251ஆம் நூற்பாவுரையில் மட்டும் "உரைத்திசின் தோழி", நாளும் நாளும், சுறவுப்பிறழ் இருங்கழி என்னும் மூன்று பாடல்களை அவை வருமிடங்களோடு எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.

அப்பாடல்கள் "சிற்றட்டகம்" என்னும் நூலில் இருப்பதாகக் குறித்துள்ளார்.

அப்பாடல்கள் மூன்றும் நேரிசை ஆசிரியப்பாக்களாக உள்ளன. மூன்று முதல், எட்டடிவரையிலான இருபத்து நான்கு இடந்தெரியா நேரிசை ஆசிரியப்பாக்கள் அகப்பொருள் விளக்கத்தில் காணப்படுகின்றன. அவற்றில், மேற்குறித்த மூன்று பாடல்களோடு "கண்ணும் சேயரி எம்மூர் அல்லது அடும்பமல் நெடுங்கொடி", என்னும் தொடக்கத்தை உடைய மூன்று பாடல்களும் சிற்றட்டகத்தைச் சார்ந்தன என்பது தொல்காப்பிய உரைகளால் தெரியவருகிறது.

சிற்றட்டகம் என்னும் பெயர் சில இடங்களில் சிற்றெட்டகம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. அப்பெயர் சிறிய எட்டுத்தொகை என்னும் பொருளைத் தருமானால், அகப்பொருளில் இடம் தெரியாமல் இருக்கும் எல்லாப் பாக்களும் சிற்றட்டகத்தைச் சார்ந்தன என்று கொள்ளலாம்.

சிறிய எட்டடிக்குட்பட்ட அகப்பாடல் என்னும் பொருளைத் தருமானால், அதில் காணப்படும் 24 பாக்களைச் சிற்றட்டகப் பாக்கள் என்று துணியலாம்.

இதனால் "இவளே நின்னலது" என்னும் அழகிய பாடல், குறுந்தொகையைச் சார்ந்ததன்று என்பதும்; சிற்றட்டகப் பாட்டு என்பதும்; தமிழர்கள் தவக்குறையால் இழந்த நூல்களுள் ஒன்று சிற்றட்டகம் என்பதும் தெளிவாகும்.

மேலும், குறுந்தொகை சேர்க்கவோ விடுக்கவோ வேண்டாமல் தொகுக்கப்பட்ட 400 பாடல்களைக் கொண்ட முழுமையான நூல் என்பதும் விளங்கும்.

நன்றி:- தினமணி

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 6 ஆகஸ்ட் 2011, 15:57 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,902 முறைகள் அணுகப்பட்டது.