கோதுமை அல்வா செய்முறை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 கோதுமை அல்வா. செய்முறை:


தேவையான பொருட்கள்:  சம்பாகோதுமை, அல்லது மாவு கோதுமை கால் கிலோ, சர்க்கரை தித்திப்பு அதிகம் வேண்டாமெனில் முக்கால் கிலோ போதும்.  ஒரு கிலோ போட்டால் சரியாக இருக்கும்.  நெய் காய்ச்சியது அரை கிலோ, ஏலக்காய்த் தூள் இரண்டு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு ஐம்பது கிராம்.  அல்வாப் பவுடர் ஒரு கால் டீஸ்பூன் நீரிலே கரைத்து வைத்துக் கொண்டு அல்வாக் கிளறுகையில் விட வேண்டும்.நல்ல சம்பா கோதுமையாக இருந்தால்  இது சீக்கிரம் வேகும் என்பதோடு அல்வாவும் கையில் ஒட்டாமல் கிண்ணென்று வரும். மாவு கோதுமையிலும் செய்யலாம். நிறையக் காணும். இதுவும் கிண்ணென்று வந்தாலும் வேக நேரம் எடுக்கும். மற்றபடி ருசியில் மாறுதல் தெரியாது. சம்பா கோதுமை கால் கிலோ முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் காலையிலேயே பால் எடுத்து வைத்தல் நல்லது. கோதுமையை மிக்சியில் அரைத்தால் பிரச்னையாத் தான் இருக்கு. ஆகவே கையால் அரைத்தாலே நல்லது. அரைத்துப் பாலை வடிகட்டி வைக்கவும். பால் மேலே நீர் தெளிந்து வரும். அதைக் கொட்ட வேண்டாம். அந்த நீரிலே சர்க்கரைப் பாகு வைத்தால் அல்வா ஒட்டாமல் திரண்டு வரும்.


கால்கிலோ கோதுமைக்கு முக்கால் கிலோ சர்க்கரை போதும். அவரவர் ருசிக்கு ஏற்ப . ஒரு கிலோ வரை போடலாம்.  பாகு வைக்கப் பாலில் உள்ள தெளிந்த நீரைப் பயன்படுத்தவும்.  பாகு நல்ல மிளகு போல் உருட்டும் பதமாக வரவேண்டும்.    அதைத் தவிரவும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில்  ஒரு லிட்டருக்கும் மேல் நீர் ஊற்றி  வெந்நீர் போடவும். நிறையவே வெந்நீர் போடவும். நன்றாகக் கொதிக்கட்டும்.  

 

சர்க்கரையை ஒரு வாயகன்ற பாத்திரம் அல்லது வெண்கல உருளியில் போட்டு பாலில் இருந்து எடுத்தத் தெளிந்த நீரை விட்டுப் பாகு வைக்கவும். தெளிந்த நீரை விடுவதால் மேலே நுரைத்துக்கொண்டு பொங்கிப் பொங்கி வரும். ஆகவே கவனமாகப் பாகு கீழே பொங்கி வழிந்து விடாமல் கிட்டவே இருந்து கிளறணும். நல்ல கெட்டிக் கம்பிப் பாகு வைக்கவும். கையால் உருட்டினால் மிளகு மாதிரி உருட்ட வர வேண்டும். அப்போது தெளிந்த பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கிளற வேண்டும்.  உதவிக்கு ஆளே இல்லாதவர்கள்  ஒரு கையால் விட்டுக் கொண்டே மறு கையால் கிளற வேண்டும். இது அவரவர் செளகரியம். கிளறும்போதே கட்டி தட்ட ஆரம்பிக்கும். ஆகவே அடுப்பு கொஞ்ச நேரம் மெதுவாக எரிந்தால் நல்லது. அல்வாப் பவுடர் கரைத்து வைத்ததைச் சேர்க்கலாம்.


கிளறிக் கொண்டே பக்கத்தில் கொதிக்கும் வெந்நீரைக் கரண்டி கரண்டியாக எடுத்து எடுத்து அல்வா கிளறும்போது விட்டுக் கொண்டே கிளறவும். வெந்நீரை விட விட பால் உள்ளேயும் வெந்து கொண்டு விரைவில் கெட்டிப் படும். கெட்டிப் பட ஆரம்பித்ததும் நெய்யைச் சேர்க்கவும். இப்போதும் சிறிது நேரம் விடாமல் வெந்நீரை விடவும். நன்கு திரண்டு கரண்டியால் கிளறும் போது ஒரே பந்து போல் வர ஆரம்பிக்கும். நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். பந்து போல் வர ஆரம்பித்ததும் உடனே இறக்கி விட வேண்டாம். கிளறிக் கொண்டே இருக்கவேண்டும். சிறிது நேரத்தில் சுற்றிலும் நெய் கசிய ஆரம்பிக்கும். கசியும் நெய்யைத் தனியாக எடுக்கலாம். எடுத்து வேறொரு பாத்திரத்தில் விட்டு வைக்கவும். அரை கிலோ நெய்யில் குறைந்தது 200 நெய்யாவது இப்படியே வந்துவிடும். இப்போது கிளறினால் பந்து அப்படியே உருளும். அதிலிருந்து ஒரு சின்ன துண்டு எடுத்தால் கையில் ஒட்டாமல் வருவதோடு தாம்பாளத்தில் போட்டுப் பார்த்தால், "ணங்" என்று சப்தமும் வரும். இதுவே சரியான பதம். இப்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும். வறுத்த முந்திரிப்பருப்பைத் தாம்பாளத்தில் கொட்டியதும் மேலே தூவி அலங்கரிக்கவும். அல்வாத் துண்டுகள் ட்ரான்ஸ்பரன்டாக இருந்தால் நீங்க அல்வா எக்ஸ்பெர்ட்.--Geetha Sambasivam 06:16, 7 ஜனவரி 2013 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"http://heritagewiki.org/index.php?title=கோதுமை_அல்வா_செய்முறை&oldid=12042" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 7 ஜனவரி 2013, 11:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 7,859 முறைகள் அணுகப்பட்டது.