கோள்களை அறிவோம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

ஆசிரியர் : திரு. செல்வன் USA


பகுதி -1
வியாழ மண்டலம் (jupiter)

வியாழனுக்கு 63 துணைக்கோள்கள் உள்ளன.அவற்றுள் ஒன்று யூரபா (Europa ) நிலவின் அளவை விடச் சற்றுப் பெரிதான இந்த கிரகத்தில் சூரியக் குடும்பத்தில் உள்ள மாபெரும் அற்புதம் ஒன்று காணப்படுகிறது...அதான் தண்ணீர். அதுவும் சாமானியமாக இல்லை. யூரபாவில் மிகப்பெரும் கடல் அளவில் திரவம் உள்ளது.

இந்தச் செய்தி அறிவியல் உலகில் மாபெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. யூரபாவில் -300 டிகிரி குளிர் நிலவுவதால் அங்கே திரவநிலையில் தண்ணீர் இருக்கும் என்பதை அறிவியலாரால் கற்பனையில்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்; ஆனால் பேரதிசயமாக யூரபாவில் - 300 டிகிரி திரவநிலையில் நீர் உள்ளது. காரணம் ஜியோதெர்மல் எனெர்ஜி ( geothermal energy) ...குழம்பவேண்டாம்.

                      http://en.wikipedia.org/wiki/Europa%28moon%29

பூமியில் உள்ள கடலில் அலைகள் உருவாக நிலவின் ஈர்ப்பு விசையே காரணம் என அறிவோம். பூமியை விடப் பலமடங்கு சிறிய நிலவு பூமியைக் கவர்ந்து இழுக்க முயன்று பூமியில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பூமியை விடப் பல மடங்கு பெரிய ஜுபிடர் கிரகம் நிலவை ஒத்த யூரபாவில் எத்தனை குழப்பத்தை ஏற்படுத்தும் என எண்ணிப் பாருங்கள்... ஜுபிடரின் ஈர்ப்பு விசை யூரபாவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி ஜூபிடரின் ஈர்ப்பு விசையும், யூரபாவின் ஈர்ப்பு விசையும் பொருதும்போது மிக உயர்நிலை வெப்பம் யுரபாவின் அடியாழத்தில் உருவாகிறது. அந்த வெப்பம் யுரபாவின் சமுத்திரத்தைச் சூடாக்கி திரவ நிலையில் வைத்திருக்கிறது. ஆனால் மேற்புறத்தில் -300 டிகிரி F குளிர் நிலவுவதால் சமுத்திரத்தின் மேற்புறம் பனியாக உறைந்து காணப்படுகிறது.

ஆக யூரபாவில் வெப்பம் உண்டு, சமுத்திரம் உண்டு....உயிரை உருவாக்கும் மூலக்கூறுகளைக் (Molecules) கொண்டுவந்து சேர்க்கும் விண்கல் (வால் நக்ஷத்ரம்) தாக்குதலும் உண்டு.

பூமியில் உருவான முதல் உயிரினம் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தது என்றொரு கோட்பாடும் உண்டு. ஆம்..நாலரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் கடல் இருந்தது, ஆறுகள் ஓடின. அப்போது செவ்வாயைத் தாக்கிய விண்கல் ஒன்று அதனுள் பேரதிர்வை ஏற்படுத்தியதாகவும், அப்போது செவ்வாயில் இருந்த கற்கள் விண்வெளியில் தூக்கி எறியப் பட்டதாகவும், அதில் ஒரு கல் பூமியில் வந்து விழுந்ததாகவும், அந்தக் கல்லில் ஒரு சிறு உயிரி ஒட்டிகொண்டு வந்து பூமியில் பல்கிப் பெருகியதாகவும் ஒரு கோட்பாடு உண்டு. இது உண்மை எனில் நாம் அனைவரும் ஏலியன்களே.

யூரபாவிலும் இதேபோல் விண்கல் தாக்குதல்கள் உண்டு என்பதால் யூரபாவின் சமுத்திரத்தில் ஏலியன் உயிர்கள் இருக்கலாம் என்ற கருத்தாக்கம் அறிவியல் உலகில் உருவாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சூரிய ஒளிபடாமல் பனிக்கட்டிகள் சமுத்திரத்தை முழுவதும் மூடியிருப்பதால் உயிரினம் அங்கே வாழும் சூழல் இருக்காது என முன்பு அறிவியலார் நம்பினர். அன்றைய காலகட்டத்தில் சூரிய ஒளி இல்லாமல் உயிர்கள் வாழஇயலாது எனக் கருதப்பட்டது; ஆனால் பூமியில் பசிபிக் சமுத்திரத்தின் அடியாழத்தை ஆராய்ந்த உயிரியலார் (biologists) அங்கே சூரிய ஒளியே இல்லாத பிரதேசத்திலும் ஜியோதெர்மல் எனெர்ஜி (geothermal energy) மூலம் உயிர்கள் வாழ்வதைக் கண்டு பிடித்தனர். இது விண்வெளி ஆய்விலும் பரபரப்பைக் கிளப்பியது.
பூமியின் அண்டார்க்டிகாவிலும் உயிரிகள் உள்ளன என்பதை இந்த வலைத்தளம் சொல்கிறது –

http://www.i-fink.com/articles/articles/lonely_old_bacteria/ம்
http://en.wikipedia.org/wiki/Europa%28moon%29

சூரிய ஒளியே படாத இடத்தில் திரவநிலை சமுத்திரத்தில் பூமியில் ஜியோதெர்மல் எனெர்ஜி மூலம் உயிர்கள் பல்கிப்பெருக முடியும் என்றால் யுரோபாவிலும் பனிக்கட்டிக்கு அடியே திரவநிலை சமுத்திரத்தில் ஏன் உயிர்கள் வாழக்கூடாது ? உயிரினம் உருவாக, வாழ,பல்கிப்பெருகத் தேவைப்படும் எல்லாச் சூழல்களும் யூரபாவில் நிலவுகின்றன. உயிரினம் என்றால் ஏதேனும் கடல் கன்னி,  திமிங்கிலம், நாலு கால் மனிதன் எனக் கற்பனை செய்ய வேண்டாம். ஒரே ஒரு மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ், பாசி, செடி என எதுவாக இருந்தாலும் அதுவும் உயிர்தான். பூமிக்கு வெளியே ஏதோவொரு கோளில் ஒரே ஒரு சிற்றுயிர் இருப்பது ஊர்ஜிதமானாலும் அது நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்ததற்கொப்பான அரிதான கண்டுபிடிப்பு.


இரு இடங்களில் உயிர்கள் இருந்தால் பிரபஞ்சம் முழுவதும் உயிர்கள் மலிந்திருக்கும் என நிரூபணமாகும். பூமியில் உயிர் தோன்றியது விபத்து அன்று; அந்தச் சூழல் நிலவும் எந்த கிரகத்திலும் உயிர்கள் உண்டு என நிரூபணமானால் அப்புறம் பிரபஞ்சம் முழுவதும் உயிர்கள் இருக்கும் என்பது உறுதி ஆகும். பிரபஞ்சத்தில் கணக்கு வழக்கற்ற எண்ணிக்கையில் அண்டங்கள் (galaxies) உள்ளன. ஒவ்வொரு காலக்சியிலும் ஆயிரம் கோடிக் கோள்கள். ஆக எண்ணற்ற ஏலியன் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்பு உண்டு; ஆனால் இதை நிரூபிக்க நமக்குத் தேவைப்படுவது ஒரே ஒரு ஏலியன் (Alien) உயிரினம். அது யூரபாவில் உண்டா இல்லையா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?

யூரபாவுக்கு ஒரு ராக்கெட்டை அனுப்புவது. அது யுரபாவின் மேற்பரப்பில் இறங்கி அங்கே ஒரு சுரங்கம் வெட்டும். அதனுள் நீரில் நீந்தக்கூடிய ரோபோ ஒன்று காமராவுடன் இறங்கி நீந்தியபடி விடியோ எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கும். அந்த வீடியோவில் ஏலியன் உயிரினம் ஒன்றே ஒன்று தட்டுப்பட்டாலும் அது அறிவியலில் வரலாற்றுத் திருப்புமுனையாக அமையும்.

ஆகா அருமையான திட்டமா இருக்கு. யூரபாவுக்கு ராக்கெட் எப்பக் கிளம்புகிறது என்று கேட்கிறீர்களா ???

இப்போதைக்குக் கிளம்புவதாக இல்லை.காரணம் இப்படி எளிதான திட்டம் கையில் இருந்தாலும் அதை நிறைவேற்றும் நுட்பம் நம்மிடம் இன்னும் இல்லை. முப்பது கோடி மைலுக்கு அப்பால் உள்ள கோளுக்கு ஒரு ராக்கட்டை அனுப்பி, அங்கே மைனஸ் 300 டிகிரி F குளிரில் பாறையாக உறைந்து கிடக்கும் பனியில் பல மைல் ஆழத்துக்குக் குழிதோண்டி, ரோபோவை கடலுள் இறக்கி,,, புகைப்படம் எடுத்து....
இதைச் செய்யும் நுட்பம் நம்மிடம் இன்று இல்லை.
ஆனால் இன்னும் 20, 30 ஆண்டுகளில் அந்த டெக்னாலஜி நம்மிடம் கிடைக்கலாம். இப்போதுதான் அண்டார்டிகா பனிப்பரப்பைத் துளைத்துச் சுரங்கம் தோண்டி உள்ளே இருக்கும் சமுத்திரத்தை ஆராயும் முயற்சியில் அறிவியலார் வெற்றியடைந்துள்ளனர் -

                     http://earthsky.org/space/bill-stone-robo-sub-allien-life-jupiters-moon

இதையே முப்பது கோடி மைலுக்கு அப்பால் உள்ள ஒரு கோளில் செய்தால் இத்திட்டம் வெற்றி அடையும்...
பில்லியன் கணக்கான ஆண்டுகளாக சமுத்திரத்தில் உறைபனிக்கு அடியே எந்த மாதிரியான உயிரினங்கள் யூரபாவில் உருவாகியிருக்கக் கூடும்? முதன்முதலில் ஒரு காமிரா ஏந்திய ரோபோவைச் சந்திப்பது அவற்றுக்கு என்ன வகையான உணர்வுகளை அளிக்கக்கூடும்? பிரபஞ்ச வரலாற்றை மாற்றியமைக்கும் இத்தகைய மகத்தானதொரு சந்திப்பு நிகழுமா?

நம்புவோம்...நம்பிக்கைதானே வாழ்க்கை?

பகுதி - 2
புத மண்டலம் (mercury)

”எக்ஸோடஸ் எர்த்” எனும் சயன்ஸ் சானல் நிகழ்ச்சியில் புத மண்டலத்தில் (மெர்க்குரி) மனிதன் குடியேற முடியும் என்பதை விளக்கினார்கள். மெர்க்குரி என்பது கடும் வெப்பம் நிறைந்த,கால் வைக்கவும் இயலாத கோள் எனக் கருதியிருந்த எனக்கு அந்த நினைப்பு தவறு என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபித்தது.

புதன் (mercury) என்பது சூரியனுக்கு அருகே உள்ள கோள். பூமியின் அளவில் நாற்பது சதவிகிதம் மட்டுமே உள்ள கோள் புதன். புத மண்டலத்தின் ஒரு நாளின் அளவு அதன் ஆண்டின் கால அளவைக் காட்டிலும் சுமார் இரு மடங்கு அதிகம். அது எப்படி என்று பார்ப்போம்.

பூ மண்டலம் 24 மணி நேரத்தில் தன்னைச் சுற்றுகிறது; சூரியனைச் சுற்ற 365 நாட்கள்; ஆனால் புத மண்டலத்தின் இயல்பு வேறு. அது தன்னைத் தானே சுற்ற பூமி நாட்களில் 176 நாட்களுக்கு சமமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. அதாவது புதனின் ஒரு நாள் என்பது பூமியில் 176 நாட்களுக்கு சமம்; ஆனால் சூரியனையோ அதே அளவில் 87 நாட்களில் சுற்றி விடுகிறது புத மண்டலம். ஆக புதனின் ஒரு நாள் அதன் வருடத்தை விட சுமார் இருமடங்கு அதிகம்.

சூரியக் குடும்பத்தில் மனிதன் குடியேறும் வாய்ப்புள்ள கிரகங்களில் மெர்க்குரியும் ஒன்று என்பது விந்தையான தகவல்.காரணம் மெர்க்குரியின் வித்தியாசமான நிலவியலே.மெர்க்குரியின் ஒருபக்கம் சூரியனைப் பார்த்தபடி உள்ளது. அந்தப் பகுதியில் 800 டிகிரி வெப்பம் நிலவுகிறது. ஒப்பீட்டளவில் சமையல் செய்யும் அவனில் (oven) 450 டிகிரி வெப்பம் தான்.

இந்த அளவு வெப்பம் மிக்க மெர்க்குரியில் எப்படிக் குடியேறுவது என்று கேட்கிறீர்களா? ரொம்ப சிம்பிள். மெர்க்குரியின் ஒரு பக்கம்தான் சூரியனைப் பார்த்தபடி உள்ளது; அதன் இன்னொருபக்கம் சூரியனுக்கு எதிர்ப்புறமாக. அந்தப் பக்கம் சூரியனை நோக்கித் திரும்ப 176 நாட்கள் ஆகும் என்பதால் அங்கே கடும்குளிர் நிலவும், கடும்குளிர் என்றால் -261 டிகிரி குளிர். அதாவது அண்டார்டிகாவை விட இரு மடங்கு குளிர் அதிகம்.

    • மெர்க்குரியில் சூர்யோதயம் -

                         http://discoveryenterprise.blogspot.com/2010/04/exodus-earth-mercury.html

ஆனால் அதிசயமாக மெர்க்குரியின் துருவங்களில் சூரிய ஒளி அதிகம் படுவதில்லை. அங்கே விண்கற்கள் விழுந்து உருவான பல குழிகள் உண்டு. அங்கே அண்டார்டிகாவுக்கு ஒப்பான குளிர் நிலவும்.எப்போதும் அங்கே வெயில் படாது. அண்டார்டிகாவில் அறிவியலார் வசிப்பது போல அந்த குழிகளுக்குள் நிரந்தரக் குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு வசிக்கலாம்.

குழிக்குள் வசித்தால் நீர், காற்று, உணவுக்கு எங்கே போவது என்று கேட்கிறீர்களா? அதிசயத்திலும் அதிசயமாக மெர்க்குரியின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் நீர் உள்ளது. அதுவும் கிட்டத்தட்ட அண்டார்டிகா பனித் தகடுக்கு சமமான அளவு பனிக்கட்டி உள்ளது. இத்தனை பனி அங்கே எப்படி வந்தது ? விண்கற்கள் மெர்க்குரியைத் தாக்கியபோது அவற்றிலிருந்த நீர் அப்படியே மெர்க்குரியின் துருவப் பகுதிகளில் தங்கி விட்டது. அங்கே சூரிய வெளிச்சம் படுவதில்லை என்பதால் பனிக்கட்டியாக உறைந்து விட்டது.


நீர் இருக்கு சரி..காற்றுக்கு (உயிர் வளிக்கு) என்ன செய்வது? அறிவியல் அதற்கும் வழி சொல்கிறது. மெர்குரியில் காற்றே இல்லை. ஆனால் மெர்க்குரியின் மண்ணில் ஏராளமான அளவு உயிர் வளி உள்ளது. மண்ணில் இருந்து உயிர்வளியைப் (oxygen) பிரித்தெடுக்க முடியும். மெர்க்குரியில் சிறு நகரம் ஒன்றை ஏற்படுத்திச் செயற்கையாக ஆக்சிஜனை உற்பத்தி செய்து, நீர், உயிர்வளி மூலம் உயிர்வாழ இயலும்; உணவுக்குக் கோழி, ஆடு போன்றவற்றை வளர்க்க இயலும்; மெர்க்குரியில் சோலார் பேனல்கள் அமைத்தால் மின்சாரம் எளிதில் உற்பத்தி செய்ய இயலும். மெர்க்குரியில் சூரிய ஒளி ஏராளம் என்பதால் பூமியை விட மிக விரைவில் அங்கே சூரிய ஆற்றல் கிடைக்கும்.

மெர்க்குரியில் புவியீர்ப்பு விசையும் நிலவை விட மூன்று மடங்கு அதிகம் என்பதால் அங்கே வாழ்க்கை சிரமமாக இருக்காது.மனிதனால் ஈர்ப்பு விசை இல்லாமல் உயிர்வாழ இயலாது. அந்த விஷயத்தில் நிலவை விட மெர்க்குரி பரவாயில்லை.அதுபோக நிலவில் இன்னொரு சிக்கலும் உண்டு.அதாவது சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சுக்களை பூமி மின்காந்த அலைகள் மூலம் தடுக்கிறது. நிலவில் அப்படி மின்காந்த அலை ஏதும் இல்லை. அதனால் நிலவில் அதிகநாள் வசித்தால் புற்றுநோய் வந்து நாம் இறந்துவிடுவோம். மெர்க்குரியும் பூமியைப் போலவே மின்காந்த அலைகளை உருவாக்குவதால் அங்கேயும் மனிதர்கள் வசிப்பது பாதுகாப்பானதே.

மெர்க்குரியில் ஒருபக்கம் 800 டிகிரி வெப்பம், இன்னொரு பக்கம் -260 டிகிரி குளிர். இந்த இரு பெரு நிலப்பரப்புகளும் சந்திக்கும் இடத்தில் அதாவது இரவும் பகலும் சந்திக்கும் சாயங்காலப் பகுதியில் சுமார் 30 சதுர மைல் பரப்புக்கு மனிதன் வாழக்கூடிய அளவு வெப்பம் உள்ளது என்கின்றனர் அறிவியலார்; ஆனால் மெர்க்குரி தன்னைத் தானே சுற்றுவதால் இந்த 30 சதுரமைல் பகுதி நகர்ந்துகொண்டே இருக்கும். இந்த 30 ச. மைல் பிரதேசத்தில் புதன் தன்னைச் சுற்றும் வேகத்திலேயே நாமும் நகர்ந்தால் நாம் பாதுகாப்பாக முழுக் கோளையும் சுற்றிப் பார்க்கலாம்.

சற்று விளக்கமாக -

மெர்க்குரி தன்னைத் தானே சுற்றுகிறது. அதாவது பூமி சுழல்வதைப் போல. இப்படிச் சுழலும்போது மெர்க்குரியின் இருள் கவிந்த பகுதி சூரியனை நோக்கித் திரும்புகிறது. அப்போது அங்கே பகல் ஆகிறது. சூரியனை நோக்கி இருந்த பகுதி மறுபக்கம் திரும்புவதால் அங்கே இருள் கவிகிறது.
இப்படி இரவுக்கும் பகலுக்கும் இடையே 30 சதுரமைல் பகுதி இரவும், பகலும் அற்ற அந்திப்பொழுதாக இருக்கும். மெர்க்குரியின் பகல் பொழுது வெப்பம் 800 டிகிரி செல்ஷியஸ். இரவுப் பகுதி வெப்பம் -261 டிகிரி செல்ஷியஸ். இரண்டுக்கும் இடைபட்ட இந்த 30 சதுரமைல் பகுதியில்தான் மனிதன் வாழத்தகுந்த அளவு வெப்பம் இருக்கும். ஒரு சில ஆயிரம் பேரே மெர்க்குரியில் வசிக்க இயலும்.

ஆனால் மெர்க்குரி தன்னைத் தானே சுற்றுவதால் இந்த பகுதியும் நகர்ந்து கொண்டே இருக்கும். அதனால் மெர்க்குரி சுற்றும் வேகத்தில் நாமும் இந்த அந்திப் பொழுது நிலவும் பகுதியிலேயே தொடர்ந்து பயணித்தால் பாதுகாப்பான தட்பவெப்பத்தில் புதனைச் சுற்றி வரலாம்.
சோலார் பேனல் பொருத்தப்பட்ட ஊர்தி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்; சூரிய ஒளிபடும் இடத்தில் சோலார் பேனலை வையுங்கள்; அதை உங்கள் ஊர்தியுடன் இணையுங்கள். அவ்வூர்தியை 30 ச.மைல் ட்வலைட் சோனில் (twilight zone) நிறுத்துங்கள். மணிக்கு இரண்டு மைல் தூரம் பயணித்தால் மட்டுமே போதும். மெர்க்குரியின் பாதுகாப்பான 30 ச. மைல் பிரதேசம் உங்களுடனே தொடர்ந்து வரும்.

இது ஒரு சுற்றுலாவைப்போல் உள்ளது என்பது வியப்பளிக்கிறது இல்லையா !

பகுதி - 3
கோள்களின் தோற்றம்

சூரியக் குடும்பம் உண்டான போது அதில் நூற்றுக்கும் மேற்பட்ட கோள்கள் இருந்ததாகத் தெரிகிறது. அவை ஒன்றுடன், ஒன்று மோதி அழிந்து, வலுவான கோள்களின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டுத் தற்போது காணப்படும் கிரக அமைப்பு உருவானது.


கோள்கள் உருவானது எப்படி ? பெருநட்சத்திரம் ஒன்று அழிந்து விண்வெளி தூசு உருவானது. அந்த தூசுகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொண்டு கோள்களாக மாறின. ஹைட்ரஜன் வாயுத் துகள்கள் ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டு சூரியனாக மாறியது. ஈர்ப்பு விசையால் கோள்கள் சூரியனை சுற்றி வரத் துவங்கின. சூரியனுக்கு அருகே உள்ள புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் (மெர்குரி,வீனஸ், எர்த், மார்ஸ்) ஆகிய நான்கு கோள்களும் பாறையால் ஆனவை. ஜூபிடரும் சாடர்னும் வாயுக்களால் ஆனவை. நெப்டியூனும், யுரேனசும் பாறையைச் சுற்றி வாயு என்னும் அமைப்பைக் கொண்டவை.

சூரியனுக்கு அருகேதான் பாறை கோள்கள் உருவாகும்; ஆனால் சூரியனுக்கு இத்தனை தொலைவுக்கு அப்பால் பாறை கோள்கள் உருவானது எப்படி என மண்டையைப் பிய்த்து கொண்ட அறிவியலார் யுரேனசும், நெப்டியூனும் தற்போது உள்ள இடங்களில் உருவாகியிருக்க சாத்தியமே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். இந்த கோள்கள் சூரியனுக்கு அருகே உருவானவை. முன்பு இவற்றின் பாதை அருகே ஜூபிடரும், சாடர்னும் (குருவும் சனியும்) ஒரே நேரத்தில் வந்தன. அப்போது அவற்றின் ஈர்ப்பு விசை இந்த இரு கோள்களையும் சூரியக் குடும்பத்தை விட்டு உந்தித் தள்ளியது.


மணிக்கு மில்லியன் கணக்கான கிமி வேகத்தில் சூரியக் குடும்பத்தை விட்டு தூக்கி எறியப்பட்ட இந்த இரு கோள்களையும் Asteroid belt என அழைக்கப்படும் விண்கற்களின் தொகுதி பெல்ட் பிரேக் போட்டது போல அடித்து நிறுத்தி வேகத்தைக் குறைத்து சூரியக் குடும்பத்தினுள் தக்க வைத்தது. அதன்பின் சூரியனுக்கு மிக அருகே இருந்த நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளாக மாறி ஏக்கத்துடன் சூரியனைச் சுற்றி வரத் தொடங்கியது.

அப்புறம் சூரியனை ஆராய்ந்த அறிவியலார் சூரியனின் மேற்பரப்பில் லிதியம் எனும் வாயு இருப்பதை கண்டு அதிசயித்தனர். லிதியம் வாயு எங்கே எப்படி வந்தது என ஆராய்ந்ததில் சூரியனுக்கு அருகே முன்பு ஒரு  Gas giant planet (ஜூபிடரைப் போல) இருந்ததும் அந்த கிரகம் சூரியனின் ஈர்ப்பு சக்தியால் இழுபட்டு சூரியன் மேல் மோதித் தன்னிடம் இருந்த லிதியத்தை சூரியனுக்குத் தாரை வார்த்ததாகவும் கண்டுபிடித்தனர்.

( Gas giant planet -  http://en.wikipedia.org/wiki/Gas_giant )


நம் நிலவு உருவாகக் காரணமும் இப்படி ஒரு கிரக மோதல்தானாம். முன்பு பூமிக்கு தியா என்ற துணைக்கோள் இருந்ததாம்.அது ஒரு நாள் பூமியின் மேல் மோதியது. அப்போது பெரும் அளவில் பாறைத் துணுக்குகள் விண் வெளியில் வீசப்பட்டன. நாளடைவில் அவை ஒன்றை ஒன்று ஈர்த்து கொண்டு நிலவாக மாறின. பூமியோடு மோதிய தியாவை பூமி உள்ளிழுத்துக் கொள்ளவே பூமியின் பரப்பளவு மேலும் அதிகரித்தது. தியாவின் இரும்பு மையப்பகுதியை (core) பூமி உள்ளிழுத்துத் தன் மையத்தில் தக்க வைத்துக் கொண்டது.

பூமியின் மரணமும் இதேபோல கிரக மோதலால்தான் நிகழுமாம். சூரியனுக்கு அருகே அப்பிராணியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் மெர்க்குரி தூக்கி வீசப்பட்டு பூமியின் மேல் மோதுமாம்.அப்போது பூமி உடைந்து துண்டுகளாகி சூரியனால் இழுக்கப்பட்டு சூரியனுள் சமாதி அடையுமாம்.

பூமாதேவி தன் காதலனான சூரிய(நாராயண)னுடன் இணைவது சுபமான முடிவு தானே? காதலர்கள் இணைந்தாச்சு.அப்புறம் என்ன?

வணக்கம் போடப்பட்டு சூரியக் குடும்பம் இழுத்து மூடப்படும்:-)


பகுதி - 4

தியா பூமியில் மோதியபோது தற்போது இருக்கும் கண்ட அமைப்புகள் இல்லை.சொல்லப் போனால் அப்போது பூமியில் தண்ணீரே இல்லை. தியாவுக்கு முந்தைய பூமி தற்போதிருக்கும் வடிவத்தில் இல்லை.

தியா என்பது செவ்வாய் கிரகம் அளவு பெரிய கிரகம்.அது பூமியின் மேல் விழுந்தபோது லக்ஷக்கணக்கான அணுகுண்டுகள் வெடித்ததற்கு ஒப்பான விளைவுகள் ஏற்பட்டன.பூமியே பிளந்தது. அந்தச் சூட்டில் தியாவின் மேற்பரப்பு துண்டு,துண்டாக சிதறிப் பாறையாக, கல்லாக, மண்ணாக விண்வெளியில் தூக்கி வீசப்பட்டது.

தியாவையும், பூமியையும் மாங்கனியாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மாங்கனிக்கு நடுவே கொட்டை, மேற்புறம் கெட்டியான பழம்,அதை மூடும் தோல்.. அதே மாதிரிதான் பூமிக்கும், தியாவுக்கும் நடுவே இரும்பு கோர். அதைச் சுற்றிப் பாறை போன்று இறுகிய மேன்டில், மேற்புறம் ஜூஸ் போல இளகிய திரவ நிலையில் இரும்பு. அதற்கு மேற்புறம் மீண்டும் பாறை. அதற்கு மேலே நாம்.

இப்படி இரு மாங்கனிகள் ஒன்றின் மேல் ஒன்று பலத்த வேகத்துடன் மோத தியா மாங்கனியின் மேற்புறம் முழுக்க விண்வெளியில் தூக்கி வீசப்பட்டது. பூமியும் பிளந்தது. தியாவின்நடுவே இருந்த இரும்பு கோர் பூமியின் உள்ளே இழுக்கப்பட்டது. அது பூமியைத் துளைத்துக் கொண்டு உள்ளே போய் பூமிக்கு நடுவே இருந்த இரும்புக் கோருடன் கலந்து விட்டது.

அதன் பின் தூக்கி வீசப்பட்ட துகள்களில் சில பகுதிகள் பூமியால் ஈர்க்கப்பட்டு விழுந்தன. தியா பூமியில் விழுந்ததால் உண்டான குழி இதனாலும் பிளேட் டெக்டானிக்ஸாலும் மூடப்பட்டது. சொல்லப் போனால் அதன்பின் பல மில்லியன் வருடங்களுக்கு பூமியின் மேற்புறம் உருகிய இரும்பாகவும், பாறையாகவும் திரவ வடிவில் இருந்தது,இறுகியது,மாறியது. தியாவின் சில பகுதிகள் புவியீர்ப்பு வெளிக்கு வெளியே சென்றாலும் பூமியின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு பூமியைச் சுற்றி வரத் தொடங்கின.தற்போது சனிகிரகத்துக்கு ஒரு வளையம் இருப்பது போல பூமிக்கும் வளையம் உண்டானது. நாளடைவில் அந்த வளையத்தில் இருந்த பாறைகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொண்டு சுழற்சி வேகத்தில் நிலவாக மாறின.

Plate tectonics கண்டங்களையே நகர்த்தும் சக்தி வாய்ந்தது. இந்தியா முன்பு ஆபிரிக்காவின் மடகாஸ்கருடன் ஒட்டியதாக  இருந்தது. தென் அமெரிக்காவும், ஆபிரிக்காவும் மறுபுறம் ஒட்டிக்கொண்டு இருந்தன. பிளேட் டெக்டானிக்ஸ் விளைவால் இந்தியா ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியிலிருந்து மேலே தூக்கி வீசப்பட்டு ஆசியாவின் மேல் வந்து மோதியது. அந்த மோதலின் விளைவாக இந்தியாவின் விளிம்பும், ஆசியாவின் விளிம்பும் மோதி மேலே உயர்ந்து இமயமலை உருவானது.

தியாவும், பூமியும் மோதியதைக் காட்டும் computer simulation இதோ -

                        http://www.youtube.com/watch?v=WpOKztEiMqo&feature=related


நன்றி : Science Channelபங்களிப்பாளர்கள்

Dev மற்றும் Vinodh

"http://heritagewiki.org/index.php?title=கோள்களை_அறிவோம்&oldid=4689" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 9 பெப்ரவரி 2011, 08:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 16,428 முறைகள் அணுகப்பட்டது.