சங்க இலக்கியம் காட்டும் வல்லம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 நண்பர்களே,

அரிமாநோக்கு இதழில் வெளிவந்த இலக்கிய ஆய்வாக அமைந்த ஒரு கட்டுரையை இன்று உங்கள் வாசிப்பிற்காக வழங்குகின்றேன். இக்கட்டுரையை நமக்காக தட்டச்சு செய்து வழங்கிருப்பவர் திரு.ஓம்.சுப்ரமணியம் அவர்கள். அவருக்கு நமது நன்றி.

நன்றி: அரிமாநோக்கு அக்டோபர் 2009

அன்புடன்
சுபாசங்க இலக்கியம் காட்டும் வல்ல
ஜெ அரங்கராஜ்பண்டைத் தமிழகத்தின் வரலாற்றுப் போக்கினையும், மக்கள் வாழ்விடங்களையும்அறிந்து கொள்வதற்குப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பெருந்துணையாக உள்ளன. இவ்விலக்கியப் பதிப்புகளின் வழியும் அப்பதிப்புகளின் ஊடிய பாடவேறுபாடுகளின் வழியும் ஆயும் போது பண்டைத் தமிழக நிலைகளினைஅறிந்துகொள்ளலாம்.


ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே

சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே (புறம் 312, 1-4)


என்ற புறப்பாட்டில் தந்தையால் நன்னடைப் படுத்தப்பட்டுச் சான்றோன்மை பெற்ற ஒருவனை மீண்டும் மன்னன் நன்னடைப்படுத்த வேண்டியதேனோ? சங்க இலக்கியங்கள் மிகச்சிறிய சொற்களிலும் விரிந்த நுட்பமான பொருளைத் தரும் வகையில் அமைந்த மொழிக் கட்டமைவினைப் பெற்றவை. இவ்வமைவிலிருந்து ஒரு சொல் மாறுபடும் போதோ நீக்கப்படும் போதோ பொருளியல் முரண்கள் எற்படுவது இயல்பாகின்றது. இப்பொருளியல் முரண்பாட்டினை ஓரளவு மட்டுப் படுத்தப் பாடவேறுபாடுகளே பெருந்துணையாகின்றன. மேற்கண்ட பாடலால் எழுந்த வினாவிற்கும் பாட வேறுபாடே விடையாக அமைகிறது. உ.வே.சா.வின் புறநானூற்றுப் பதிப்பில் நன்னடை- தண்ணடை எனும் வேறுபாட்டையும் வேல் வடித்துக் – வேலடித்துக் எனும் வேறுபாட்டையும் காணலாம். இவற்றில் முன்னது வரலாற்றியல் முறைமையினையும், பின்னது வழக்கு முறைமையினையும் விளக்குவதற்குப் பேருதவியாக அமைகின்றன.

பண்டைத் தமிழிலக்கிய வழிப்பட்ட தமிழக ஊர்ப் பெயராய்விற்கும் இவ்வேறுபாடுகள் இன்றியமையாதனவாகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் அறியப்படும் நகரங்கள் எவை என அறிவதில் சிலவற்றில் குழப்ப நிலையும் முரணும் நிகழ்கின்றன.அவ்வாறான ஐய நிலையில் வல்லம் என்னும் ஊரினையும் கொள்ளவியலும். சங்க இலக்கியத்தில் இரண்டு இடங்களில் வல்லம் என்னும் ஊர் சுட்டப்படுகிறது. இக்காலத் தமிழகத்தில் வல்லம் எனும் பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்ஙனமாகில் சங்க இலக்கியத்தில் சுட்டப்படும் வல்லம் யாது என்பதே இவ்வாய்வின் போக்காக அமைகிறது.

வென்வேல்

மாரி யம்பின் மழைத்தோற் சோழர்

வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை

ஆரியர் படையின் உடைகவென்

நேரிசை முன்கை வீங்கிய வளையே (அகம்-336/20-33)

...........................................................பாவைக்கொட்டிலார்


வெற்றி பொருந்திய வேலினையும் மழை போன்ற அம்பினையும் மேகம் போன்ற தோற்கிடுகினையு முடைய சோழரது விற்படை நெருங்கிய அரணையுடைய வல்லத்துப் புறத்தேயுள்ள காவற் காட்டின்கண் வந்தடைந்த ஆரியரது படைபோல எனது நேரிய சந்தினையுடைய முன்கையில் தற்காலத்து வல்லமே என உரையாசிரியர்கள் குறிப்பிடுவர். இக்கருத்தினில் சிறிது மாறு கொள்ள வேண்டியுள்ளது.

வல்லத்துப் புறமிளை எனுமிடத்தில் வேங்கடசாமி நாட்டார் வல்லத்துக் குறுமனை எனும் பாடவேறுபாட்டைக் காட்டுவர். அதுகொண்டு வில்லீண்டு குறும்பின் வல்லத்துக் குறுமினை எனக் கொண்டால் குறும்பு எனும் சொல்லுக்கு அரண் என்னும் பொருள் உண்டு. அரணாவது யாதெனில் மலை, காடு, மதில், நீர் என்பனவாம் இந்நால்வகை அரண்களுள் குறும்பு என்பது சிறப்பாக மலையினையே குறிப்பதாகும். மேலும், குறுமிளை எனும் சொல் மலைக் காட்டையே குறிக்கப் பயன்பட்டதெனலாம். இடைவெளி குறுகிய மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டைக் குறிக்கவே குறுமிளை என்னும் சொல் பயன்பட்டதெனலாம். ஏனெனில் வயது குறைந்த இளம் பெண்ணைக் குறிக்க அசைஇஉள் ஒழிந்த வசைதீர் குறுமகட்குடு ( நற் 206) எனும் அடிகளில் குறுமகள் எனும் சொல் உருவத்தில் சிறிய மகளைக் குறிக்காமல் வயதில் இளம் பெண்ணைக் குறிக்கின்றமை போல குறுமிளை என்பதுவும் அடர்வு மிகுந்த மலைக் காட்டைக் குறிக்குமெனலாம். இவ்வாறான மலையும் மலை சூழ்ந்த காடும் தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் இல்லை எனலாம். மேலும் வல்லத்தை ஆரியப் படைகள் அடைந்த போது சோழர்களது படை தாக்கி அழிந்ததாக உரையில் கூறப்பட்டமையை ஏற்கவியலாது. ஏனெனில், ஆரியப் படையணிகளுக்கு வளையல் உவமை காட்டப்பட்டுள்ளமையால் வல்லத்தை ஆரியர் வளைத்து முற்றுகையிட்டிருந்தனர் என்பதே பொருந்தும். ஆரியப் படைகளின் முற்றுகை சோழர்களால் உடைத்துச் சிதைக்கப்பட்டமையை மேற்கண்ட பாடலடி உவமையால் விளங்கலாம்.

தஞ்சையை அடுத்து வல்லம் பகுதி சரளை மண்ணினை உடையது இம்மண்ணில் நெல் விளையாது. ஏனெனில் தண்ணீரைத் தேக்குதலுக்கு இம்மண் ஏற்புடையது அல்ல. மேலும் காவிரியாறும் வல்லத்திற்கு 15 கிலோமீட்டர் அப்பாலேயே ஓடு்கின்றது. ஆற்றிலிருந்து இப்பகுதி மேம்பட்டிருப்பதால் இப்பகுதிக்கு நீரினை ஏற்றுவும் இயலாது. தஞ்சை வல்லம் இவ்வாறிருக்க, வல்லம் என்னும் ஊரிலே நீண்ட கதிர் உடைய நெல் விளைந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.

நற்றேர்க்

கடும்பகட் டியானைச் சோழர் மருகன்

நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்

நல்லடி யுள்ளா னாகவும் ஒன்னார்

கதுவ முயறலும் முயல்ப அதா அன்று (அகம்: 356/12-15)

எனவே நெல்விளையும் மண்வளமுள்ள வல்லம் தஞ்சை வல்லமாக இருக்க வாய்ப்பில்லை.

சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்து ( அகம்: 336)

எனும் பாடலில் சோழர்களின் வல்லம் என்றே சுட்டப்படுகிறது. மருகன் எனும் சொல் ஒரு குடியிலிருந்து தன்குடிக்கு மருவி வந்த மருமகனைக் குறிப்பதாகும். ஒரே மரபில் தொடர்ந்து வந்தவனைக் குறிப்பதாயும் அமையும். அங்ஙனமாயின், வல்லம் எனும் ஊர் சோழர்களின் மணத்தொடர்போ, மரபுத்தொடர்போ கொண்ட சோழநாட்டில் அல்லாதோரையும் குறிக்குமெனலாம்.’வல்லம் கிழவோன்’ என்றமையின் வல்லத்து வேளிர் தலைவனைக் குறிப்பதனையும் அவன் சோழர்குடியில் மணத்தொடர்பு கொண்டிருந்தமையையும் கொள்ளலாம்.

இன்றைய தமிழகத்தின் மையப்பகுதியிலும் பண்டைத் தமிழகத்தின் தென்கிழக்குப் பகுதியிலும் உள்ள வல்லம் (தஞ்சை) தமிழகத்தின் வட எல்லையில் இருந்து கனதொலைவில் உள்ளது. வடக்கில் கொங்குப் பகுதிகளையும் தொண்டை மண்டலப் பகுதிகளையும் வெற்றி பெறாமல் சோழநாட்டு் பகுதிகளைக் கைப்பற்றுதல் என்பது வடவருக்கு எளிதான செயல் அன்று. பிற்காலத்தில் தொண்டை நாட்டில் பல்லவர்களை ஒடுக்கியபின்தான் சாளுக்கியர்களால் காவிரிக்கரை வரை வர இயன்றது. சங்கக்காலத் தமிழக எல்லையில் ஒரு பெரும் வலிமைமிகு படையிருந்த படியாலேயே மௌரியர் முதலாய வடவர்களால் தமிழகம் கைக்கொள்ளப்படவில்லை எனலாம். தமிழகத்தின் வட எல்லையில் ஒரு பெரும் கூட்டுப் படை இருந்தமையைக் கலிங்க மன்னன் காரவேலனின் ஆதிகும்பா கல்வெட்டுக்களின் வழியறியலாம். தமிழகத்தின் வட எல்லையில் பல குறுநில அரசுகள் அமைந்திருந்தன..

நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி

துன்னரும் கடுந்திறற் கங்கன் கட்டி (அகம் 44/9-8)

மேற்கண்ட கங்கர், கட்டி முதலாயோர் அல்லாமல் பங்களர், அதியர், வாணர், புல்லி முதலாய மரபினரும் மேலைக் கடல் தொட்டுக் கீழைக்கடல் வரையிலான தமிழக எல்லைப் பகுதியில் காவல் அரண்கள போல் அரசு ஏற்படுத்திக கொண்டிருந்தனர். இவ்வரசுகளின் அமைவிடம் தமிழகத்திற்குப் பெரிதும் பாதுகாப்பை வழங்கிய தெனலாம். கட்டிநாடு காவேரிபுரம் கணவாயைப் பாதுகாக்கும் நிலையிலும் அதியநாடு தோப்பூர் கணவாயைக் காக்கும் நிலையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. மேற்கண்ட காவல் அரண்களைக் கடந்து கருவூரையும் உறையூரையும் வெற்றிகொண்ட பின்பே தஞ்சை வல்லத்தை அடையவியலும். உறையூரைத் தாக்காமல், வல்லத்தை (தஞ்சை) அடையவியலாது. உறையூரை ஆரியர்கள் தாக்கியமைக்கான அகப் புறச் சான்றுகள் ஏதுமில்லை. மேற்கண்டவற்றால் ஆரியர் (தஞ்சை வல்லத்தைத் தாக்கவில்லையாகில் தமிழகத்தின் எவ்வல்லத்தைத் தாக்கினர் எனும் வினா எழும்போது ஆரியர்களது தமிழகப் படையெடுப்புக் குறித்து மற்றொரு சேதியும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்

பலருடன் கழித்த வொள்வாள் மலையன்

தொருவேற் கோடி யாங்குநம்

பண்மைய தெவனோவிய ணன்மை தலைப்படினே (நற் 170/6-9)

மேற்கண்ட நற்றிணைப் பாடலில் மலையமான்களின் முள்ளூர்ப் பகுதியை ஆரியர்கள் வளைத்துத் தாக்கியதாகவும் அத்தாக்குதலைப் பலருடன் சேர்ந்து மலையமான் வெற்றி கொண்டதாகவும் காணப்படுகின்றன. திருமுடிக்காரியின் இம்முள்ளூர் நாடு தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். இப்போரில் தமிழ் மன்னர்கள் பலரும் ஒருங்கிணைந்து வெற்றி பெற்றமையைக் காணலாம்.

இத் திருமுடிக்காரியின் நாட்டை அடைவதற்கு முன் ஆரியர் பாணர்களின் நாட்டைக் கடநதாக வேண்டும். அது மலையமான் நாட்டின் வடபால் உள்ளது.

வடாஅது

நல்வேற் பாணன் நன்னாட் டுள்ளதை (அகம் 325-16)

இப்பாணர் எனும் வாணாதிராயர்களின் தலை நகரம் இன்று திருவலம் என அழைக்கப்படும் பழைய வல்லமாகும். எனவே முள்ளூர்ப் படையெடுப்பும் வல்லம் படையெடுப்பும் ஒரே காலத்தில் நிகழ்ந்ததாகக் கருதலாம். வாணர்களுடன் சோழர்கள் மணவுறவும் அரசியல் உறவும் கொண்டிருந்தனர். பாணன், ஆரியப் பொருநனுடன் மற்போர் செய்ததையும் (அகம் 386) பாடலடிகளில் அறியலாம்.

மேலும், சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டவாறு இப்பாணர்களின் தலைநகராகிய வல்லம் மலைகள் சூழ அமைந்துள்ளது. பாலாற்றின் துணையாறான மியாற்றின் மேற்குக் கரையில் இவ்வல்லம் அமைந்து இன்றும் நல்ல நெல் விளையும் வண்டல்மண் பகுதியாக விளங்குவதும், தமிழகத்தின் எல்லையில் உள்ள நாடாக இருப்பதும் கருத்திற்கு வலுசேர்ப்பதாக அமைகிறது.

இவ்வல்லம் குறித்த பிற்காலச் செய்திகளைச் சதாசிவ பண்டாரத்தார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

வாணர் என்பார் பாலாற்றுக்கு வடக்கே சித்தூர் ஜில்லா வரையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகிய வாணகப்பாடி நாட்டைப் பண்டைக் காலத்தில் ஆட்சிபுரிந்த ஓர் அரசர் மரபினர் ஆவர். அன்னோர் வல்லம், வாணபுரம் என்ற நகரங்களைத் தம் தலை நகரங்களாகக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகள் அப்பகுதியில் ஆட்சி புரிந்தனர். அவர்கள் மரபியலின் வழியில் வந்தவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்வதை. பல கல்வெட்டுக்களில் காணலாம். அவர்களது நாடு ’பெருமாயாணப்பாடி’ என்றும் வடுகவழி மேற்கு என்றும் முற்காலத்தில் வழங்கப்பட்டது. தொண்டை மண்டலம் பல்லவர் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் வாணர்குல வேந்தர் அவர்கட்குத் திரை செலுத்திக் கொண்டு குறு நில மன்னராக இருந்து வந்தனர்.

மேற்கண்ட செய்திகளை யொட்டி பாணர்கள் சங்ககாலம் முதற்கொண்டு சோழர்காலம் முடியக் கட்டி மன்னர்களைப் போன்று ஆண்ட மரபினர் என் அறியலாம். அவர்களது தலைநகரான வல்லம் வட ஆர்க்காடு மாவட்டத்தில் குடியாத்தம் வட்டத்திலுள்ள ஓர் ஊர். இவ்வூர் தீக்காலி வல்லம் என்று பழைய கல்வெட்டுகளில் காணப்படுகிறது. பாடல் பெற்ற தொண்டைநாட்டுத் தலங்களுள் இவ்வூரும் ஒன்று. எனவே திரு அடை கொடுத்து திருவல்லம் என வழங்கி இன்று திருவலம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரிலுள்ள சிவனுக்குத் திருத்தீக்காலீஸ்வரர் என்று பெயர்.

இப்பாணர் நாடு பிற்காலத்தில் தொண்டை நாட்டின் படுவர் கோட்டப் பிரிவில் உள்ளது. இதில் உள்ள மற்றைய பிரிவுகளுள் பங்கள நாடு என்பதுவும் ஒன்று.இது சித்தூர் மாவட்டப்பகுதியில் தமிழக எல்லையில் பாணர் நாட்டின் வடபால் அமைந்திருந்தது. இது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பங்களரின் நாடாகும். இதன் வழி ஒரு பழமையான ஆட்சியின் தொடர்ச்சியினை அறிய இயலுகிறது. இவ்வரசுகள் தமிழகத்தின் வடபகுதியில் இருந்தமையால் சங்ககாலம் தொட்டே வடபுலத் தொடர்புகள் மிகுந்திருந்தன எனலாம்.

தமிழகத்தின் மேல் படையெடுத்து வந்த ஆரியர்கள் பாணர் நாட்டைத் தாக்கி வல்லத்தை முற்றுகையிட்டுவிட்டுப் பின்வல்லத்திற்குத் தெற்கேயுள்ள மலையமான்களின் முள்ளூர்ப் பகுதியையும் தாக்கியிருக்கவேண்டும். ‘பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த’ என்றமையால் ஆரியருக்கு எதிரான பொரில் பல மன்னர்கள் ஈடுபட்டதாகக் கருதலாம். இதில் வல்லத்துப் பகுதியில் ஆரியர்களது முற்றுகையைச் சோழர் படை தாக்கி உடைத்ததாகக் கொள்ளலாம். எனவே தமிழகத்தின் மீதான ஆரியப் படையெடுப்பை வல்லப் படையெடுப்பு, முள்ளூர்ப் படையெடுப்பு என இருவேறு கால கட்டத்தில் இரு வேறு நிகழ்வாகக் கொள்ளாமல் ஒரே காலத்தில் நிகழ்ந்த ஒரே படையெடுப்பாகக் கொள்ள இடமாகிறது. வல்லம் குறித்தும் முள்ளூர் படையெடுப்பு குறித்துமான பாடல்களைப் பாட்டிய கபிலர் பரணர், பாவைக்கொட்டிலார் முதலாயோரில் கபிலரும் பரணரும் சமகாலத்தவர் என்பது தெளிவாதல் இந்நிகழ்வின் சமகால வாய்ப்பிற்கு வலு சேர்க்கும்.

ஆரியப் படையெடுப்பு குறித்துப் பல்வேறு கருத்துக்கள் உண்டு. இதில் தமிழகத்தின் மீது படையெடுத்த ஆரியப்படையென்பது தனி ஒரு ஆரிய மன்னனின் படையல்ல. யெளத்தெய கனம் எனும் மன்னர்களுக்கு அடங்காத கொள்ளைப் படை என்றும், இவர்கள் ஆயுத ஜீவி சத்திரியர் என்று வழங்கப் படுவதாகவும் மயிலை சீனி வேங்கடசாமி கூறுவர். இதற்கு அவர் காட்டும் காரணம் சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஆரியப்படை எந்த மன்னருக்குரியது என்பதைப் பற்றியான யாஹொரு குறிப்பும் இல்லை. ஆரிய மன்னன் பிரகத்ததனுக்காகக் குறிஞ்சிப் பாட்டு பாடப்பட்டது எனும் பெயர் சுட்டும் மரபு உள்ளபோது ஆரியப் படைகளின் மன்னன் பெயர் சுட்டப்படாமையே அப்படைகள் ஆரிய மன்னருடையவை அல்ல என அறியமுடிவதாகக் குறிப்பிடுவர்.

இவர் காட்டும் சான்றுகள் ஏற்புடையனவல்ல. ஏனெனில், ஆரிய மன்னன் பிரகதத்தன் குறித்துச் சங்க இலக்கிய அடிகளில் அகக் குறிப்புகள் ஏதுமில்லை. இச்செய்தி அடிக்குறிப்பாகவே குறிக்கப்படுகிறது. மேலும், மோரியர் நந்தர் முதலாய் வடபுல அரச மரபுகளின் குடிப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் சுட்டப்பட்டாலும் அக்குடி மன்னர்களின் பெயர்கள் யாதும் சுட்டப்படாதது குறப்பிடத்தக்கது. எனவே பெயர் சுட்டாதவை கொண்டு ஆரியப் படையினை மன்னர்களுடையவை அல்ல என ஒதுக்க இடமில்லை. வடபுல மன்னர்களின் படையெடுப்புகளே உள் நுழைய முடியாத பண்டைத் தமிழகத்தில் ஆரியக் கொள்ளைப் படை நுழைந்ததனையும் அதனைத் தமிழகமன்னர் பலர் கூடி எதிர்த்தனர் என்பதையும் ஏற்க இயலாதாகும்.

ஆயுதஜீவிகள் எனும் கொள்ளைப்படை எல்லா நாடுகளிலும் உண்டாவதுண்டு. ஆறலைக் கள்வர் முதலாய கொள்ளைப் படைக்குழுக்கள் தமிழகத்திலும் உண்டு. பெரும் படையெடுப்பாளர்களாகவோ ஊடுருவலாளர்களாகவோ இக்குழுக்களைக் கருதத்தக்க சான்றுகள் இல்லை.

எனவே ஆரியப்படை ஒரு குறிப்பிட்ட ஆரியக் குடி மன்னர்களின் ஆணைப்படி தமிழகத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட நிகழ்த்தப்பட்ட படையெடுப்புஎனவும் இப்படையெடுப்பிற்கு உள்ளான இடமாகத் தஞ்சை வல்லத்தைக் கொள்ளாமல் பாணர்களின் திருவல்லத்தைக் கொளலாம். எனவும் முள்ளூர் படையெடுப்பு வல்லப்படையெடுப்புமாகச் சங்க இலக்கியங்களில் பதிவாகும் ஆரியப் படையெடுப்புகள் தமிழகத்தில் ஒரே நிகழ்வாக நிகழ்ந்த படையெடுப்பு எனவும் கொள்ளலாம்.

--Ksubashini 10:56, 19 ஜூன் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 19 ஜூன் 2011, 10:56 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,630 முறைகள் அணுகப்பட்டது.