சங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 16

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அகநானூறு
பாடல்  16 - விரிவுரை - விளக்கப்படங்களுடன்
பாடியவர் :  சாகலாசனார்
திணை  : மருதத் திணை
துறை ::  பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், ‘யாரையும் அறியேன்’ என்றாற்குத் தலைமகள் சொல்லியது
# 16 - மரபு மூலம் –  நீயும் தாயை இவற்கு
நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதி னல்லி யவிரிதழ் புரையு
மாசி லங்கை மணிமரு ளவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்
5யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழங்கு தெருவிற் றமியோற் கண்டே
கூரெயிற் றரிவை குறுகினள் யாவரும்
காணுந ரின்மையின் செத்தனள் பேணி
பொலங்கலஞ் சுமந்த பூண்டாங் கிளமுலை
10வருகமாள வென்னுயி ரெனப்பெரி துவந்து
கொண்டனள் நின்றோட் கண்டுநிலைச் செல்லேன்
மாசில் குறுமக ளெவன்பே துற்றனை
நீயுந் தாயை யிவற்கென யான்தற்
கரைய வந்து விரைவனென் கவைஇ
15களவுடம் படுநரின் கவிழ்ந்துநிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணினெ னல்லெனோ மகிழ்ந வானத்
தணங்கருங் கடவுளன் னோள்நின்
மகன்றா யாதற் புரைவதாங் கெனவே
# 16 - சொற்பிரிப்பு மூலம் –  நீயும் தாயை இவற்கு
நாய் உடை முது நீர்க் கலித்த தாமரைத்
தாது இன் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசு இல் அங்கை மணி மருள் அவ் வாய்
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்
5யாவரும் விழையும் பொலம் தொடிப் புதல்வனைத்
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை
10வருக மாள என் உயிர் எனப் பெரிது உவந்து
கொண்டனள் நின்றோள்  கண்டு நிலைச்செல்லேன்
மாசு இல் குறுமகள் எவன் பேதுற்றனை
நீயும் தாயை இவற்கு என யான் தற்-
கரைய வந்து விரைவனென் கவைஇ
15களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா
நாணி நின்றோள் நிலை கண்டு யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே
# 16 – அடிநேர் உரை - நீயும் தாயை இவற்கு
நீர்நாய் உள்ள பழைய குளத்தில் செழித்து வளர்ந்த தாமரை
மலரின் அல்லிவட்டத்தில் உள்ள ஒளிவிடும் இதழைப் போன்ற
மாசற்ற உள்ளங்கையையும், பவளமணி போன்ற அழகிய வாயையும்
நாவினால் திருத்தமாகப் பேசாத, சிரிப்பைத் தோற்றுவிக்கும் இனிய பேச்சையும்(உடைய)
5அனைவரும் விரும்பும் பொற்கொடி அணிந்த நம் புதல்வனைத்
தேர்கள் ஓடும் தெருவில் தனியனாய்க் கண்டு
கூரிய பற்களைக் கொண்ட இளம்பெண் கிட்டச் சென்றவளாய், ஒருவருமே
பார்ப்பவர்கள் இல்லாததால், தோற்ற ஒப்புமையைக் கருதியவளாய்ப் பாசத்துடன் தூக்கி
பொன் அணிகலன்களைச் சுமந்த, பூண்கள் தாங்கிய தன் இளம் கொங்கைகளில் -
10“வா என் உயிரே” எனப் பெரிதும் உவந்து-
அணைத்துக்கொண்டவளாய் நின்றவளைப் பார்த்து, நின்ற இடத்தில் நிலைகொள்ளாமல்,
“மாசற்ற இளையவளே, எதற்குக் கலங்குகிறாய்,
நீயும் தாயாவாய் இவனுக்கு” என்று சொல்லி நான் பாராட்டிக்
கூறி, விரைவாகச் சென்று அவளை அணைத்துக்கொள்ள,
15கையும் களவுமாய்ப் பிடிபட்டவரைப் போல் தலைகவிழ்ந்து, நிலத்தைக் கீறிக்கொண்டு
நாணி நின்றவளின் நிலைகண்டு, நானும்
அன்புடன் உபசரித்தேன் அல்லவா! தலைமகனே! வானத்துத்
தெய்வமகளாகிய அரும் கடவுள் போன்றோள் உன்னுடைய
மகனுக்குத் தாய் ஆகுதல் பொருத்தமானதுதானே என்று.
அருஞ்சொற் பொருள் 
நாய் = (இங்கு)நீர்நாய்; முதுநீர் = நாட்பட்ட நீர்நிலை; கலித்த = செழித்த; அங்கை = அகம் கை, உள்ளங்கை; மணி = (இங்கு)பவளமணி; செத்தனள் = (உருவ) ஒற்றுமையைக் கருத்திற்கொண்டனள்; மாள = அசைச்சொல்; பேதுறு = மனம் கலங்கு, திடுக்கிடு; புரைவது = தகுதியானது, பொருத்தமானது.
பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
இப்பாடல் மருதத்திணைக்கு உரியது. நீர்நாய், முதுநீர், தாமரை ஆகியவை மருதத்திணைக்குரியவை. இத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் ஆகும். எனவே இப் பாடலை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள முயன்ற உரையாசிரியர்கள் இப்பாடலுக்குரிய துறையாக ஒரு கதையைச் சொல்கின்றனர். தலைமகன் பரத்தையர் சேரிக்குச் சென்றுவருகிறான். மருதத் திணைக்குரிய ஊடலுக்கு இது ஒரு முக்கிய காரணமாகச் சங்க இலக்கியங்கள் கைக்கொள்ளும். திரும்பி வந்த தலைமகனிடம் தலைமகள் ஊடல்கொள்கிறாள். அவனோ, “நான் யாரையும் அறியேன்” என்று பொய்யுரைக்கிறான். அதற்குப் பதிலிறுக்கும் வழியாகத் தான் ஏற்கனவே தலைமகனின் காதற்பரத்தையிடம் பேசிய நிகழ்ச்சியை எடுத்துக்கூறும் தலைமகளின் கூற்றாக இப் பாடல் அமைந்துள்ளது என்பர் உரையாசிரியர். 
எனினும், இப் பாடலைப் படிப்போரின் கற்பனைத் திறனுக்கேற்றவாறு பின்புலத்தை அமைத்துக்கொள்ளும் வகையில் பாடலைப் புனைந்துள்ளார் புலவர் என்றும் கொள்ளலாம்.
தலைமகனுக்கு ஒரு ‘சின்னவீடு’ இருப்பதை அரசல் புரசலாகத் தெரிந்து-கொண்டாள் தலைமகள். அது யார் என்பதுவும் அவளுக்குத் தெரியும். இருப்பினும் அது உண்மையா என்பதை அவன் மூலமாகவே தெரிந்துகொள்ள விழைகிறாள் அவள். தக்க தருணத்துக்குக் காத்திருக்கிறாள் தலைமகள். ஒருநாள் தலைமகளின் சிறுகுழந்தை யாரும் கவனிக்காத நேரத்தில் வீதிக்குச் சென்றுவிடுகிறது. தேர்கள் ஓடும் தெருவில் ஒரு சிறு குழந்தை தனியே நின்றுகொண்டிருந்தால் பார்ப்பவர் மனம் பதைபதைக்காதா? இதை ‘அந்தப் பெண்’ பார்க்கிறாள். கிட்டே ஓடி வருகிறாள் (குறுகினள்). அருகில் வந்தபின்தான் அவளுக்குத் தெரிகிறது – ஜாடையில் குழந்தை ‘அவரை’ப் போல் இருப்பது (செத்தனள்). குற்ற உணர்வுடன் அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கிறாள். நல்ல வேளை, யாரும் இல்லை (காணுநர் இன்மையின்). “வாடா, என் கண்ணு” என்று (‘வருக என்னுயிர்’) அவனைத் தூக்கி, மார்புடன் அணைத்து (பேணி) உச்சிமுகர்கிறாள் (பூண் தாங்கு இள முலை கொண்டனள்). அப்பொழுதுதான் குழந்தை வீட்டில் இல்லாததைக் கவனித்த தலைமகள் வாசலை எட்டிப்பார்க்கிறாள். ‘அவள்’ கையில் மகன்! இதுதான் தருணம் என்று வெளியே விரைகிறாள். தலைமகளைக் கண்டவுடன் ‘அவள்’ திடுக்கிடுகிறாள். “நீ ஒரு தப்பும் செய்யவில்லையே (மாசில் குறுமகள்!), அப்புறம் ஏன் இப்படிப் பேயறைந்த மாதிரி நிற்கிறாய்” (“எவன் பேதுற்றனை?”) என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்கிறாள் தலைமகள். “ஒரு தாயின் பதற்றத்தோடு ஓடிவந்து இவனைத் தூக்கிக்கொண்டாயே” என்ற பொருளில், “நீயும் தாயை இவனுக்கு” என்கிறாள் தலைமகள். அவள் எதிர்பார்த்தது போலவே, ‘அவள்’ அதைக் கேட்டு நாணம் கொள்கிறாள். அந்த நேரம் தலைமகன் அவர்களைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைகிறான். அவன் குற்றமுள்ள மனம் குறுகுறுக்கிறது – “என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் இருவரும்?” – எனவே, தலைமகள் வீடு திரும்பியவுடன், “என்ன இது, யார் அந்தப் பெண்?, எதற்கு அவள் நம் குழந்தையைத் தூக்கவேண்டும்? யாரோ ஒரு பெண்ணுடன் உனக்கென்ன பேச்சு?” என்று நல்லவன் போல் நாடகமாடுகிறான் தலைமகன். நடந்ததைக் கூறுகிறாள் அவள். “அதெப்படி அவள் இவனுக்குத் தாயாவாள்?” மீண்டும் நடிக்கிறான் அவன். “என்ன இது? தனியே நின்றுகொண்டிருந்த சிறுவனை ஓடிவந்து தூக்கியிருக்கிறாள், தூக்கிக் கொஞ்சியுமிருக்கிறாள், பார்த்தால் மாசில்லாத சிறுமி போல இருக்கிறாள், கடவுள் போல வந்து நம் குழந்தையைக் காத்திருக்கிறாள் (‘வானத்து அணங்கு அரும் கடவுள் அன்னோள்’), உன் மகனுக்கு அவளைத் தாய் என்று சொன்னால் என்னவாம்?”. மாட்டிக்கொண்ட தலைமகன் என்ன சொல்லுவான்? ‘சரி’ என்று சொல்ல அவன் குற்றமுள்ள மனம் இடம்தரவில்லை – மாட்டிக்கொள்வோமோ என்ற பயம் வேறு- ‘தவறு’ என்று ஒரேயடியாய்ப் பொய்சொல்லவும் முடியவில்லை. “இவள் நம்மை ஆழம் பார்க்கிறாளா? இல்லை, அறியாமல் பேசுகிறாளா?” – அவன் தடுமாறுகிறான். தலைமகளுக்குத் துரோகம் செய்யக் காரணமாயிருப்பவளை, ‘மாசற்றவள், தெய்வம் போன்றவள்’ என்று போற்றும் மனைவிக்கு மீண்டும் துரோகம் செய்யலாமா என்று அவன் மனம் சிந்திக்க ஆரம்பித்ததா?  இவ்வளவு வெகுளித்தனமாகப் பழகும் ஒரு குடும்பப் பெண்ணுக்குத் துரோகம் இழைக்கப்பட நாமும் ஒரு காரணமாக இருக்கலாமா என்று ‘அவள்’ மனம் சிந்திக்க ஆரம்பித்ததா? இதன் முடிவு எவ்வாறு இருப்பினும், தலைமகள் இப் பிரச்சினையைக் கையாண்டவிதம் புதுமையானது – அதைப் பாடலாய் வடித்த புலவர் போற்றுதற்குரியவர்.
பாடலில் அமைந்த  உள்ளுறையும் மறைமுகச் செய்தியும்
தலைவனின் தவறை மறைமுகமாக இடித்துக்காட்டும் பாடலில் உள்ளுறை இல்லாமல் போகுமா? தன் மகனைப் பற்றிக் கூறும் தலைமகள் அவனது உள்ளங்கை தாமரை இதழைப் போன்றது என்கிறாள். அத்துடன் நிறுத்தவில்லை. நெடுநாள் நீர் நிற்கும் குளத்தில் (முதுநீர்) கலித்த தாமரை என்கிறாள். நாட்பட்ட நீருள்ள நீர்நிலையில் தாமரை மட்டுமா இருக்கும்? இன்னும் எத்தனையோ செடி, கொடி வகைகள் செழித்து வளர்ந்து, படர்ந்து, பூத்து – என்னவோர் அழகிய காட்சியுடன் இருக்கும் அந்த இடம்!  இந்த அருமையான நீரில் நீர்நாய்களும் இருக்கின்றனவே (நாயுடை முதுநீர்) என்கிறாள் அவள். எத்தனையோ சிறப்புகளை நெடுநாளாய்க் கொண்டிருக்கும் இந்தச் சிறந்த குடும்பத்தில், நாய்ப்புத்தியுள்ள நீயும் இருக்கிறாயே என்று குத்திக்காட்டுகிறாளோ தலைமகள்? பாடலின் தொடக்க அடியாக இதைப் புனைந்திருக்கும் புலவரின் நோக்கம் தவறு செய்யும் தலைமகனைத் தட்டித்திருத்துவது என்பதுவே எனக் கொள்ளலாம்.
         
தலைமகள் தான் கண்ட இளம்பெண்ணைப் பற்றித் தலைவனிடம்  சொல்லும்போது வேண்டுமென்றே அவளைப் போற்றிச் சொல்கிறாள். ‘அவளை’ப்பற்றிக் கூறும்போது ‘பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை’ என்று அவளை வருணிக்கிறாள். ‘பொன்னாலேயே அவளைப் பூட்டிவைத்திருக்கிறாயே, இப்படிச் சென்றால் குடும்பம் என்னாகும்?’ என்று தலைவி இடித்துரைக்கிறது போல் இல்லையா இது?
புலவரின் சொல்நயம்
தலைமகனின் காமக்கிழத்தியைப் பற்றிக் கூறவந்த புலவர், ‘பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இளமுலை’ என்கிறார். இதனைப் பொலங்கலம் சுமந்த இளமுலை – பூண்தாங்கு இளமுலை எனப் பிரிக்கலாம். கழுத்தில் அணிந்திருக்கும் பொன் ஆரங்கள் மார்புவரை நீண்டு, மார்புக்கும் கீழே தொங்கிக்கொண்டிருக்கின்றன. எனவே, அவற்றை மார்புகள் சுமந்துகொண்டிருக்கின்றன என்ற பொருளில் பொலங்கலம் சுமந்த இளமுலை என்கிறார் புலவர். பொதுவாகப் பூண் என்பது இறுகப் பற்றிக்கொள்ளும் வகையில் அணிந்திருக்கும் அணிகலன். வெள்ளரிப்பழத்துக்குப் பூண் போடமுடியுமா? என்ற பழமொழி உண்டு. முற்றின வெள்ளரிக்காய் பழுக்கப் பழுக்க வெடித்துக்கொண்டே வரும். அந்த வெடிப்பைப் பூண் போட்டு இறுக்கிக் கட்டமுடியாது என்பது இதன் பொருள். மார்பை இறுகப் பற்றிக்கொள்ளும் வண்ணம் அணிந்திருக்கும் பூண்கள் அந்த மார்பைத் தாங்கிக்கொண்-டிருக்கின்றனவாம்!  இதையே பூண்தாங்கு இளமுலை என்கிறார் புலவர். 
சிறு குழந்தைகளுக்கு நாம் ஒரு சில சொற்களையே சொல்லிக்கொடுக்கிறோம். நாம் பேசுவதைக் கேட்கும் குழந்தைகள் சொற்களைப் புதிதாய்க் கற்றுக்கொண்டு, அவற்றைத் திருத்தமாய்ச் சொல்லத் தெரியாத நிலையில், மழலை மொழியில் சில சொற்களைச் சொல்லும்போது மகிழ்ச்சியுடன் கைதட்டிச் சிரிப்போம். நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் என்று எத்துணை அழகாக இதனை வருணிக்கிறார் புலவர்! நவிலுதல் என்பது பயிலுதல், பயிற்சிபெறுதல். நம் சிரிப்புக்குக் காரணம் ஏளனம் அல்ல, மகிழ்ச்சியே என்பதைக் கூறவந்த புலவர் நகைபடு தீஞ்சொல் என்கிறார். தீஞ்சொல் என்பது இனிய சொல். 
அன்றைய வழக்கு
1. நிலைசெல்லாது--
தன் தலைமகனின் காமக்கிழத்தி, தெருவில் தன் புதல்வனை அணைத்துத் தூக்கிக்கொண்டிருப்பதைக் கண்ட தலைமகள், ‘நின்றோள் கண்டு நிலைச்செல்லேன்’ என்கிறாள். நிலைச்செல்வது அல்லது நிலைச்செல்லாதது என்ற தொடர் அன்றைக்கு ஒரு வழக்குச்சொல் (Idiom) ஆக இருந்திருக்கவேண்டும். 
கால் நிலைசெல்லாது கழி படர்க் கலங்கி – அகம் 299/16
 என்ற அடியிலும் இத் தொடரைக் காண்கிறோம். கால் ஓரிடத்தில் நிலையாக நிற்காமல் என்று இதற்குப் பொருள் கூறுகின்றனர். ஒருவர் ஓரிடத்தில் நிலையாக நிற்காமல் அங்குமிங்கும் சென்று அலைமோதிக்கொண்டிருந்தால் அவர் நிலைகொள்ளாமல் தவிக்கிறார் என்று இன்றைக்கும் சொல்லும் வழக்கம் உண்டு. 
மெல்லம்புலம்பற் கண்டு நிலைசெல்லா
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே – நற் 263/8-10
என்ற நற்றிணை அடிகளில் வரும் நிலைசெல்லா என்பதற்கு நிலைகொள்ளாது என்ற பொருளே கூறப்படுகிறது.
அகம் 299, நற். 263 ஆகிய பாடல்களில் காணப்படும் நிலைசெல் என்ற சொல்லும், இப் பாடலில் காணப்படும் நிலைச்செல் என்ற சொல்லும் ஒன்றா? சங்க இலக்கியங்களில் இவ்வாறு ஒற்று மிகுந்தும் மிகாமலும் ஒரே பொருளில் வரும் சொற்கள் காணப்படுகின்றன. தலைபெயர் என்ற சொல் பொரு.22, அகம் 311-8 ஆகிய இடங்களிலும், தலைப்பெயர் என்ற சொல் நற். 169-6, 321-2, அகம். 367-1 போன்ற இடங்களிலும் ஒரே பொருளில் வரக் காணலாம். இதைப் போல, நிலைச்செல், நிலைசெல் ஆகிய இரண்டும் நிலைகொள் என்ற ஒரே பொருள் உடையன எனத் துணியலாம்.
2. தற்கரைய -
தன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிக்கொண்டிருக்கும் காமக்கிழத்தியைக் கண்ட தலைமகளுக்கு வீட்டிற்குள் நிலைகொள்ளவில்லை. வெளியில் வந்து, விரைவாகச் சென்று அவளை அணைத்துக்கொள்கிறாள் (வந்து விரைவனென் கவைஇ), “நீயும் இவனுக்குத் தாய்தானே!” என்று கூறுகிறாள். அதைக்கேட்ட கிழத்தி, நாணி நின்றாள் எனத் தலைவி கூறுகிறாள். இதைக் கூறவந்த புலவர்,
நீயும் தாயை இவற்கு என யான் தற்
கரைய வந்து விரைவனென் கவைஇ
15களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா
நாணி நின்றோள் –
என்று கூறுங்கால், தற்கரைய என்ற சொல்லைக் கையாள்கிறார். கரைதல் என்பது சொல்லுதல் என்ற பொருள் படினும்,தற்கரைதல் என்றால் என்ன? தற்கரைய என்பதற்கு உரையாசிரியர்கள் கூற என்றுதான் பொருள் கொள்கின்றனர். தலைவி கூறியதைக் கேட்ட கிழத்தி நாணி நின்றாள் என்று பார்க்கிறோம். இதே போன்று ஓர் அடி நற்றிணையிலும் வருகிறது.
யாம் தற்கரையவும் நாணினள் வருவோள் – நற் 308/3
என்றவிடத்தும், தற்கரைய, அதைக்கேட்டு நாணினள் என்று வருவதைக் காண்கிறோம். எனவே, தற்கரைய என்ற சொல்லாட்சி சங்க காலத்தில் இருந்தது என்றும் அதற்கு புகழ்ந்துகூற என்ற பொருள் இருந்தது என்றும் இவற்றின் மூலம் தெரியவருகிறது.
3. வானத்து அணங்கு அரும் கடவுள் அன்னோள்
அணங்கு என்பது பொதுவாக வருத்தும் தெய்வத்தைக் குறிக்கும். அது ஒரு deity. எனவே அது தரும் வருத்தத்தினின்றும் தங்களைக் காத்துக்கொள்ள அதை வணங்குகின்றனர். நாளடைவில் வணங்குதற்குரிய பெண் தெய்வங்கள் அனைத்தையுமே அணங்கு என்று அழைப்பது வழக்கமாகிவிடுகிறது. அப்புறம், எந்தப் பெண்ணையுமே போற்றிச் சொல்லும்போது அணங்கு என்று அழைப்பது வழக்கமாகிவிடுகிறது. இங்கேயும் கிழத்தியை அணங்கு என்கிறாள் தலைமகள். இருப்பினும் அவளுக்கு ஐயம் எழுகிறது. அவ்வாறு கூறுவது அவளை வருத்தும் அணங்கு என்று கூறுவதாகிவிடுமோ என்று அஞ்சிய தலைமகள் வானத்து அணங்கு என்கிறாள். அத்துடன் நில்லாமல் அவளை வானத்து அணங்கு அரும் கடவுள் என்கிறாள். இவ்வாறு புலவர் குறிப்பிடுவது அருந்ததி என்ற விண்மீன் என்கிறனர் உரையாசிரியர். இந்த விண்மீனாய் நிற்பது கற்புக்கரசி அருந்ததி என்பது ஒருசாரார் நம்பிக்கை. ஏற்கனவே கிழத்தியை மாசில் குறுமகள் என்று தலைவி சொல்லியிருப்பதால், இங்கு அவளைக் கற்பில் சிறந்த அருந்ததி போன்றோள் என்று தலைமகள் கூறுவதாகக் கொள்வர். இருப்பினும், ‘அவள் வருத்தும் தெய்வம் போன்று அழகாக இருந்தாள்’ என்றே அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பொருள் கூறுகிறார். 


ஆக்கம்: முனைவர் திரு பாண்டியராஜா பரமசிவம், மின்னஞ்சல் முகவரி: <pipiraja@gmail.com> 

--Geetha Sambasivam (பேச்சு) 08:17, 2 பெப்ரவரி 2014 (GMT) 

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 1 ஜூன் 2015, 11:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,383 முறைகள் அணுகப்பட்டது.