சங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 19

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அகநானூறு
பாடல்  19 - விரிவுரை - விளக்கப்படங்களுடன்
பாடியவர் : பொருந்தில் இளங்கீரனார்  
திணை :  பாலைத் திணை
துறை  :: நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது
# 19 - மரபு மூலம் –  மறவல் ஓம்புமதி எம்மே
அன்றவ ணொழிந்தன்று மிலையே வந்துநனி
வருந்தினை வாழியென் னெஞ்சே பருந்திருந்
துயாவிளி பயிற்றும் யாவுயர் நனந்தலை
யுருடுடி மகுளியிற் பொருடெரிந் திசைக்குங்
5கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்ற
மெம்மொடு விறத்தலுஞ் செல்லாய் பின்னின்
றொழியச் சூழ்ந்தனை யாயின் றவிராது
செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே
மறவ லோம்புமதி யெம்மே நறவிற்
10சேயித ழனைய வாகிக் குவளை
மாயிதழ் புரையு மலிர்கொள் ளீரிமை
யுள்ளகங் கனல வுள்ளுதொறு வுலறிப்
பழங்கண் கொண்ட கலிழ்ந்துவீ ழவிரறல்
வெய்ய வுகுதர வெரீஇப் பையெனச்
15சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கை
பூவீ கொடியிற் புல்லெனப் போகி
யடர்செய் யாயகற்  சுடர்துணை யாக
வியங்காது வதிந்தநங் காதலி
வுயங்குசாய் சிறுபுறம் முயங்கிய பின்னே
# 19 - சொற்பிரிப்பு மூலம் –  மறவல் ஓம்புமதி எம்மே
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே! வந்து நனி
வருந்தினை! - வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
5கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம்
எம்மொடு இறத்தலும் செல்லாய்! பின் நின்று
ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது
செல் இனி, சிறக்க நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி எம்மே! - நறவின்
10சே இதழ் அனைய ஆகி, குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்
வெய்ய உகுதர வெரீஇப் பையெனச்
15சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை
பூ வீ கொடியின் புல்லெனப் போகி
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே
# 19 – அடிநேர் உரை - மறவல் ஓம்புமதி எம்மே
அன்று அங்கேயே இருந்திருக்கலாம் – அதுவும் இல்லை, வந்தபின் மிகுதியாக
வருந்துகிறாய், வாழிய என் நெஞ்சே! பருந்து இருந்து
வருந்தும் குரலில் அழைப்பது போல் பலமுறை ஒலிக்கும் யாமரங்களின் உயர்ந்த அகன்ற இடத்தில்
உருண்டையான உடுக்கின் ஓசையைப் போன்று, பொருள் தெரிந்து ஒலிக்கும்
5கடும் குரலையுடைய ஆந்தைகள் உள்ள உயரமான பெரிய மலையில்,
எம்முடன் கடந்து செல்லவும் மாட்டாய், பின் தங்கி
(திரும்பிச்) செல்ல நினைத்தால், தடையின்றிப்
போகலாம் இனியே - சிறப்புறட்டும் உன் உள்ளம்! – விரைவாக,
மறப்பதைச் செய்யாதிருப்பாயாக எம்மை – நறவம்பூவின்
10சிவந்த இதழ் போன்றவை ஆகி - (முன்பு)குவளையின்
கரிய இதழைப் போன்ற மிகுந்த நீரைக்கொண்ட, ஈரமான இமைகள் -
உள்ளம் கொதிப்பதால் நினைக்கும்போதெல்லாம் காய்ந்துபோக -
துன்பம் கொண்டு விரைந்து விழுகின்ற பளபளக்கும் நீர்த்துளிகள்
வெம்மையுடன் கீழே விழ, (அதனால்) அஞ்சி, மெதுவாக
15(அணிந்திருக்கும்)சில வளையல்களும் கழன்று விழுந்த மெலிந்த கைகளின் மணிக்கட்டு
பூக்கள் உதிர்ந்த கொடியைப் போல பொலிவிழந்து போக,
தகட்டை அழுத்திச் செய்த அழகிய அகல்விளக்கின் சுடரே துணையாக
எங்குமே செல்லாது நின்றிருக்கும் நம் காதலியின்
வருந்திய மெலிந்த முதுகினைத் தழுவிய பின்னர்.
அருஞ்சொற் பொருள் 
நனி = மிகுதியாக; உயா = வருத்தம், உயவு என்பதன் மரூஉ. விளி = அழைப்புக்குரல்; பயிற்றல் = திரும்பத் திரும்பச் செய்தல்; யா = ஒரு வகை காட்டு மரம்; நனந்தலை = அகன்ற இடம்; துடி = உடுக்கை; மகுளி = ஓசை; குடிஞை = ஆந்தை; இற = கடந்துசெல்; சூழ் = ஆராய், நினை; வல்லே = விரைவாக; நறவு = நறவம் பூ; குவளை = நீல மலர்; மா இதழ்= கரிய இதழ்; பழங்கண் = துன்பம்; கலிழ்ந்து = கலங்கி; அவிர் = ஒளிவிடு; அறல் = அறுத்துக்கொண்டு விழும் நீர்; வெய்ய = வெம்மையுடன்; உகுதர = சொரிய; வெரீஇ = அஞ்சி; இறை = பக்கக் கைகள்; முன்கை = மணிக்கட்டு; வீ = வீழ்ந்த; அடர் = தகடு; ஆய் = அழகிய; சாய் = மெலிவு; சிறுபுறம் = முதுகு, பின்பகுதி.

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
இது ஒரு பாலைத் திணைப் பாடல். பிரிதலும் பிரிதல் நிமித்தமும் இதன் உரிப்பொருள். பொருள் தேடிவரப் புறப்பட்டுச் செல்கிறான் தலைமகன். உறுதியாக இது தலைமகளுக்குத் துன்பம் தரும். இதை உணர்ந்திருந்தும் ஒருவழியாக அவளைத் தேற்றிவிட்டு, பருந்துகளும், ஆந்தைகளும், காய்ந்துபோன யா மரங்களும் நிறைந்த காட்டு வழியில் தலைமகன் போய்க்கொண்டிருக்கிறான். திடீரென நெஞ்சம் ‘மக்கர்’ பண்ணுகிறது. ‘திரும்பிப் போகலாம்’ என்கிறது. ‘என் கூட நீ வராமலேயே இருந்திருக்கலாம்; வந்த பின், பாதி வழியில் வருந்தி என்ன பயன்’ என்று கடிந்துகொள்கிறது மனம். ‘இருந்தாலும் உள்ளம் நினைத்துவிட்டது. நான் போயே ஆகவேண்டும்’ என்று சொல்லி நடுவழியில் நின்றுவிட்டது நெஞ்சம். ‘ஒழி’ என்று சொன்ன மனம், ஒரேயடியாய் நெஞ்சத்தை வெறுத்துவிடவும் இல்லை. மனதுக்கும் ஆசைதான் திரும்பிப்போய்விட – ஆனால் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையே. ‘தொடர்ந்து நான் பொருள் தேடிப் போகிறேன். திரும்பிப் போகும் நெஞ்சமே!, வீடு சென்ற பின் தலைவியை முயங்கி மகிழ்வாயே, அப்பொழுது என்னை நினைத்துக்கொள்’ என்று மனம் சொல்வதாக இப் பாடலைப் புனைந்துள்ளார் புலவர் பொருந்தல் இளங்கீரனார்.
பாடல் விளக்கம்
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனி
வருந்தினை வாழி என் நெஞ்சே-- 
இது பாலை நிலத்து நடுவழியில் நடைபெறும் பேச்சு. அன்று என்பது புறப்பட்டு வந்த நாள். அவண் என்பது புறப்பட்ட இடம் – வீடு. அன்றைக்கு, புறப்படும்போதே ‘வரமாட்டேன்’ என்று சொல்லி, அங்கேயே இருந்திருக்கலாம் – அப்படிச் செய்யவில்லை. கூடவே வந்து, இப்போது மிகவும் வருந்துகிறாயே! நெஞ்சமே, நீ நன்றாக இரு என்று தலைவன் நெஞ்சைப் பார்த்துக் கூறுகிறான். இங்கே தலைவன் என்பது அவன் மனம்.
-- பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
5கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம்
எம்மொடு இறத்தலும் செல்லாய்,
   
நன்றி:Stevhapp.comwww.bbc.co.uk
பருந்து அமர்ந்திருந்து, வருத்தக் குரலில் அழைப்பது போல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது. அது இருப்பது ஒரு உயர்ந்த யா மரத்தில். அந்த யா மரம், விரிந்து படர்ந்திருக்கிறது. அதன் இன்னொரு பகுதியில் ஆந்தை இருக்கிறது. அது உடுக்கை ஒலிப்பது போல் இரட்டை இரட்டையாகத் தன் கரகரத்த குரலில் அலறிக்கொண்-டிருக்கிறது. இத்தகைய உயர்ந்த பெரிய மலையை என்னுடன் சேர்ந்து கடந்து வரமாட்டேன் என்கிறாய் – என்கிறான் தலைவன்
                
-- பின் நின்று
ஒழியச் சூழ்ந்தனை ஆயின் தவிராது
செல் இனிச் சிறக்க நின் உள்ளம் வல்லே
என்னை முன்னால் போகவிட்டு, நீ மட்டும் பின்னாக நின்று, அப்படியே திரும்பிச் செல்ல நினைத்தால், தடையின்றி நீ போகலாம் – விரைவாக; உன் உள்ளம் சிறப்பதாக – என்றும் தலைவன் கூறுகிறான். உள்ளம் நினைப்பதால் நெஞ்சம் வருந்துகிறது – எனவே அந்த உள்ளம் சிறந்து வாழட்டும் என்கிறது மனம்.
9மறவல் ஓம்புமதி எம்மே   -- 
-----------------
18-- நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே
“மறந்துவிடாதே என்னை – (வீட்டுக்குச் சென்று) நம் காதல் தலைவியின் வருந்தி மெலிந்த முதுகினைப் பின்புறமாகச் சென்று தழுவிய பின்னர்” என்று மனம் நெஞ்சுக்குக் கூறுகிறது.
- நறவின்
10சே இதழ் அனைய ஆகி குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்
வெய்ய உகுதர வெரீஇப் பையெனச்
15சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை
பூ வீ கொடியின் புல்லெனப் போகி
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக
இயங்காது வதிந்த நம் காதலி
(அந்தக் காதலி இப்பொழுது எப்படி இருப்பாள் தெரியுமா?)
குவளை மலரின் கருத்த இதழ்களைப் போன்ற, நீர் நிறைந்ததால் ஈரமாகிப்போன இமைகள், நறவம்பூவின் சிவந்த இதழ்களைப் போல் ஆகி, நினைத்து நினைத்து உள்ளம் கொதிக்க, அந்த வெப்பத்தால் காய்ந்து போயிருக்கும். 
   
துன்பத்தால் கலங்கிப்போன கண்களினின்றும் பளபளக்கும் கண்ணிர்த்துளிகள் சூடாகக் கீழே சொட்டும். 
       
      நன்றி:  Connectnigeria.com                                   Io9.com
             
 நன்றி: http://mon--avis.blogspot.in/2009/11/express.html    pimminag.com

அதனை யாரும் பார்த்துவிடுவார்களோ என்று அஞ்சி, மெதுவாக -- இருக்கின்ற ஒரு சில வளையல்களும் கீழே கழன்று விழும்படி மெலிந்த கைகளின் முன்பகுதி, பூக்கள் எல்லாம் உதிர்ந்துவிட்ட கொடியைப் போலப் பொலிவிழந்து நிற்க – நடந்து போய், தகட்டைக் குழிவாக்கிச் செய்த அழகிய அகல்விளக்கின் சுடரே துணையாக, நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருப்பாள். 
மனம் – நெஞ்சம் - உள்ளம்
மனம், நெஞ்சம், உள்ளம் ஆகிய மூன்றும் தனித்தனியான சிந்தனை உறுப்புகள் என்றும் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டையும் பாடல்:3–இன் விளக்கத்தில் பார்த்தோம். இருப்பினும் அதனைச் சுருக்கமாக இங்கு மீண்டும் பார்ப்போம். 
மனம் என்பது நன்மை, தீமைகளை ஆராய்ந்து செயல்படுவது. (the seat of the faculty of reason) . 
நெஞ்சம் என்பது உணர்ச்சிகளின் வழிச் செயல்படுவது (The locus of feelings and intuitions).
உள்ளம் என்பது உள்ளுவது. நினைப்பதுவும், நினைப்பூட்டுவதுவும் அதுவே. ஒருவரின் எண்ணங்களை உருவாக்குவது உள்ளமே.
பொருள் ஈட்டவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவது நெஞ்சம். அது தேவைதானா, இன்றியமையாததா என்று குழம்பும்போது பலவித உணர்வுகளை (மகிழ்ச்சி, துயரம், ..) உருவாக்குவது உள்ளம். ஏதேனும் ஒருபக்கம் இழுப்பது நெஞ்சம். இறுதியில் நன்மையானது எதுவென்று எடைபோட்டுத் (pros and cons) தீர்மானிப்பது மனம்.  இதுதான் தலைவன் வீட்டிலிருக்கும்போது நடக்கிறது. இறுதியில் பொருள் வேண்டும் என்று முடிவுசெய்கிறது மனம். அப்பொழுதாவது, ‘’இல்லையில்லை, இதில் எனக்கு உடன்பாடில்லை, நான் உன்னுடன் வரவில்லை” என்று நெஞ்சம் சொல்லி வீட்டிலேயே இருந்திருக்கவேண்டும் (அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே). “கழுகுகளையும், ஆந்தைகளையும், காய்ந்து நிற்கும் யா மரங்களையும், நெடும் பெருங் குன்றத்தையும் பார்த்துப் பயந்துவிட்டாய் போலும்” என்கிறது மனம் (பருந்து விளி பயிற்றும் – கடுங்குரல் குடிஞை இசைக்கும் .. ). “சரி, பொழச்சுப் போ, நல்லா இரு” என்று நாம் சொல்வதில்லையா? இலக்கிய மனம் ஆச்சே, “வாழி என் நெஞ்சே” என்கிறது. இவ்வாறு மனம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கூடவந்த நெஞ்சம் நின்றுகொள்கிறது. “என்ன, கூட வரல்லியா?” (எம்மொடு இறத்தலும் செல்லாய்), “அப்படியே போயிடலாம்’னு நெனக்கிறியா?” (பின் நின்று ஒழியச் சூழ்ந்தனை), “அப்படீன்னா, ஒடனே கெளம்பு” (ஆயின், செல் இனி, வல்லே), “நான் ஒன்னும் சொல்லல” (தவிராது), “இதுக்கெல்லாம் காரணம் யார்’னு தெரியும். உன் உள்ளம்தானே, அவனக் கேட்டதாச் சொல்லு” (சிறக்க நின் உள்ளம்). எத்துணை இயல்பான உரையாடல் பாருங்கள்! எத்துணை இயல்பான நடை பாருங்கள்! எத்துணை இயல்பான சொற்கள் பாருங்கள்! 
என்றுமுள தென்தமிழ்
நான்கு வயதுக் குழந்தை. நன்றாக நடைபழகிவிட்டது. நல்ல வளர்த்தி வேறு. நாம் வெளியில் செல்லும்போது உடன் வருவேன் என்று அடம் பிடிக்கிறது. வேண்டாம், உன்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்று சொல்கிறீர்கள். பிள்ளை ஆசைப்படுகிறான், கூட்டிச் செல்லுங்களேன் என்று மனைவியின் கெஞ்சல் வேறு. கூட்டிச் செல்கிறீர்கள். சொன்னது போல சுணங்கிப்போகிறது குழந்தை. தூக்கச்சொல்கிறது. உங்களால் முடியாது. “சொன்னேனே கேட்டியா? அங்கயே இருந்து தொலச்சிருக்கலாம் இல்லையா?” – நீங்கள் கடிந்துகொள்கிறீர்கள். “அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே” என்ற சங்கச் சொற்களில் இந்தச் சலிப்புப் பொருள் ஒலிக்கவில்லையா? 
கல்லூரியில் படிக்கும் மகன். வீட்டில் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். வெளியில் நடைப்பயிற்சிக்குச் (walking) செல்கிறீர்கள். ‘என்னோட வாடா’ என்கிறீர்கள். வரமாட்டேன் என்றவனை வம்படியாய் அழைத்துச் செல்கிறீர்கள். சிறிது தொலை சென்றவுடன் அவன் கல்லில் இடறிக்கொள்கிறான். காலில் இரத்தம். ‘அப்பா, முடியவில்லை, வீட்டுக்குப் போகிறேன்’ என்று அங்கேயே நின்றுவிடுகிறான். ஒரு நிமிடம் முகத்தைச் சுருக்கி அவனைப் பார்த்துவிட்டு, “சரி, வேண்டாம்’னு நெனச்சுட்ட, ஒழி” என்கிறீர்கள். “பின் நின்று ஒழியச் சூழ்ந்தனை” என்ற சங்க வரிகளில் இந்தத் தந்தையின் எரிச்சலைக் காணமுடிகிறதல்லவா? 
ஆருயிர் நண்பன் எதிரில் வருகிறான். அவன் கையில் பை நிறைய மாம்பழங்கள். உமக்கோ கொள்ளை ஆசை. ‘கொஞ்சம் எடுத்துக்கொண்டு போ’ என்கிறான் நண்பன். எப்படிக் கொண்டு செல்வது? வேறு பையும் இல்லை. “சரி, இப்ப வேணாம், திங்கும்போதுமட்டும் என்ன நெனச்சுக்கோ” என்கிறீர்கள். “மறவல் ஓம்புமதி எம்மே – நம் காதலி .. சிறுபுறம் முயங்கிய பின்னே” என்று அன்று கூறிய சங்கப் புலவரின் தங்கச் சொற்கள் இன்றும் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவே!
பொருந்தில் ரவிவர்மா
ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்திருப்பீர்கள். காலில் தைத்த முள்ளை எடுக்கிறாற் போல, நின்று பின் புறமாக ஒரு காலை மடக்கித் தூக்கி, கை காலைத் தொட, கண் ‘அவனை’ப் பார்க்க ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கும் தமயந்தியின் ஓவியம் உயிரூட்டமுள்ளது. எனினும் ஓவியங்களுக்கு ஒரு எல்லை உண்டு. கண்ணில் ஏக்கத்தைக் காட்டலாம். உள்ளத்தில் வெப்பத்தைக் காட்டமுடியுமா? இதோ இங்கே காட்டுகிறார் பொருந்திலார். தூரிகையால் வரையப்பட்ட காரிகையைப் போல், சொற்களால் தீட்டப்பட்ட கற்பனைப் பெண் இவள். ஒரு காலத்தில் குவளை மலரைப் போல் கருமையாய் இருந்த கண்ணிமைகள் – கண்ணுள் நீர் நிறைந்ததால் ஈரமாகி - ஓயாமல் அழுததால், நறவம்பூவின் சிவந்த இதழ்களைப் போல் ஆகிவிட்டன (நறவின் சே இதழ் அனைய ஆகி, குவளை மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை). பிரிந்து சென்ற அவனை நினைக்கும்போதெல்லாம் உள்ளம் வேகிறது. அந்த வெப்பத்தில் கண்ணிமைகள் காய்ந்து போகின்றன (உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி). இவ்வாறு, நெஞ்சம் நோகுந்தோறும் நனைய – உள்ளம் வேகுந்தோறும் காய – எனத் துன்பம் தொடர்கதையாகிறது. கண்கள் கலங்க, அதில் திரண்ட கண்ணீர் உருண்டு விழ (பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்) – மார்பு சுடுகிறது (வெய்ய உகுதர). யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் அவளைக் கவ்வுகிறது (வெரீஇ). இதை மறைக்க என்ன செய்யலாம். சுடரைத் தூண்டுவது போல் விளக்கை நோக்கி மெதுவே நடக்கிறாள் (பையென). இது மாடக்குழி விளக்கு. மதிலில் உள்வாங்கி இருப்பது. அதைப் பார்த்து நின்றால் முகம் யாருக்கும் தெரியாது. அதை நோக்கி நடக்கக் கைவீசிச் செல்கிறாள். “போவேன்” என்று அவன் சொன்ன மாத்திரத்தில் மெலிந்து போன கைகளினின்றும் சொரிந்து விழுந்தன பல வளைகள். அவன் போன பின்பு, இருக்கும் சில வளையல்களும் அந்த நோஞ்சான் முன்கைகளினின்றும் கழன்று விழுகின்றன (சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை). பூ நிறைந்த கொடியைப் போன்ற அவள் நீண்ட கைகள் இப்போது பொலிவிழந்து கிடக்கின்றன (பூ வீ கொடியின் புல்லெனப் போகி). தட்டித் தகடாக்கி, அதனை அழுத்திக் குழிவாக்கிய அந்த அழகிய அகல்விளக்கின் சுடரே அவளுக்குத் துணை (அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக). அங்கு இங்கு செல்லாது நின்ற இடத்திலேயே நிலைகொண்டுவிட்டாள் அவள் (இயங்காது வதிந்த). இது சொல்லோவியமா? சொற்சிற்பமா?  இல்லை, சொல்லால் நகரும் குறும்படமா?  இந்த மூன்றாலும் முழுதும் காட்டமுடியாத சொல்லற்புதம் இது.
புலவரின் சொல்நயம்
தலைமகளின் கண்ணீர்ப் பெருக்கைச் சொல்லவந்த புலவர், பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல் என்கிறார். பழங்கண் என்பது துன்பம். கலிழ்தல் என்பது கலங்குதல். கண்ணீர் வெளிவரும் முன், முதலில் கண்களில் நீர் கோக்கும். “ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” என்று கேட்பது இன்றைக்கும் வழக்கு. இதன் அடுத்த நிலை, கண்ணீர் பெருக்கெடுத்தல். பெருக்கெடுத்த நீர், இமை புரண்டு ஓடிக் கன்னங்களில் விழும். உள்ளகம் கனல உருவெடுக்கும் நீராதலால், அது சூடாக வெளிவருகிறது. வெய்ய உகுதர என்கிறார் புலவர். இந்த நீர் தொடர்ந்து வருவதால் கன்னங்களில் தாரை தாரையாய் ஓடுகிறது. அப்போது உள்ளகம் கனல உள்ளுதொறு உலறிப்போகிறது கண்கள். அந்தத் தாரை இப்பொழுது நீர்த்தடம் ஆகிறது. மீண்டும் கண்ணீர் பெருக்கெடுக்க, அந்தத் தடத்தின்மீது மீண்டும் தாரையாய்க் கண்ணீர். இதையே அறல் என்கிறார் புலவர். அறல் என்பது அறுத்துக்கொண்டு போகிற நீர். கன்னங்களை அறுத்துக்கொண்டு, தடம் ஏற்படுத்திக்கொண்டு ஓடுகிறதாம் கண்ணீர். இது மட்டுமல்ல – இதனை அவிர் அறல் என்கிறார் புலவர். அவிர் என்பது ஒளிவிடு, பிரகாசி, மின்னு என்ற பொருள் தரும். கண்ணீர் எப்படி மின்னும்? இன்னும் சில அடிகளுக்குப் பின்னர், புலவர் அகல்விளக்கின் சுடர் பற்றிக் கூறுகிறார். பகல் முடிந்து இரவு தொடங்க, அகல் விளக்கு மாடத்தில் ஏற்றப்படுகிறது. தலைவி சற்றுத் தள்ளி நிற்கிறாள். அவள் முகத்தில் படுகிறது வெளிச்சம். அப்போது ஓடிவரும் கண்ணீர்த்துளியின் மீதும் அந்த ஒளி விழுகிறது. நீர்த்துளி மீது ஒளி பட்டால், அந்தத் துளி பளபளக்காதா? இதனையே அவிர் அறல் என்கிறார் புலவர். எத்துணை கூர்மையான பார்வை, நுணுக்கமான வருணனை பாருங்கள்! (பார்க்க–படம்-பக்.5)
 தன்னை யாரும் பார்த்துவிடுவார்களோ என்று அஞ்சிய தலைமகள் மெல்ல நடந்து விளக்கின் அருகே போய் நிற்கிறாள். இந்த அகல் சுடர் துணையாக இயங்காது வதிகிறாள் அவள். அவளுக்குத் துணை அந்த சுடர்தானாம். அதாவது அந்தச் சுடர் இன்றிரவு அணையப்போவதில்லை – அவளுக்கு உறக்கமும் இல்லை – என்பதை எத்துணை நுட்பமாகக் குறிப்பிடுகிறார் புலவர் என்று பாருங்கள்.
               
நன்றி:        www.tradebit.com          www.indiamart.com

ஆக்கம்: முனைவர்  திரு பாண்டியராஜா பரமசிவம், மின்னஞ்சல் முகவரி: <pipiraja@gmail.com> 

--Geetha Sambasivam (பேச்சு) 08:25, 2 பெப்ரவரி 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 1 ஜூன் 2015, 11:50 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,768 முறைகள் அணுகப்பட்டது.