சங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 23

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அகநானூறு
பாடல்  23- விரிவுரை - விளக்கப்படங்களுடன்
பாடியவர் : ஒரோடகத்துக் கந்தரத்தனார்  
திணை : பாலைத் திணை
துறை :: தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
# 23 - மரபு மூலம் – காடே கம்மென்றன்றே
மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயற்
பாடுலந் தன்றே பறைக்குர லெழிலி
புதல்மிசைத் தளவி னிதல்முட் செந்நனை
நெருங்குகுலைப் பிடவமொடு வொருங்குபிணி யவிழ
5காடே கம்மென் றன்றே யவல
கோடுடைந் தன்ன கோடற் பைம்பயிர்
பதவின் பாவை முனைஇ மதவுநடை
யண்ண லிரலை யமர்பிணை தழீஇ
தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவே
10யனையகொல் வாழி தோழி மனைய
தாழ்வி நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மாச்சினை காட்டி
யவ்வள வென்றா ராண்டுச்செய் பொருளே
# 23- சொற்பிரிப்பு மூலம் –  காடே கம்மென்றன்றே
மண் கண் குளிர்ப்ப வீசித் தண் பெயல்
பாடு உலந்தன்றே பறைக் குரல் எழிலி
புதல் மிசைத் தளவின் இதல் முள் செம் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ
5காடே கம்மென்றன்றே அவல
கோடு உடைந்தன்ன கோடல் பைம் பயிர்
பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே
10அனையகொல் வாழி தோழி மனைய
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மாச் சினை காட்டி
அவ்வளவு என்றார் ஆண்டுச் செய்பொருளே
# 23 – அடிநேர் உரை –  காடே கம்மென்றன்றே
நிலத்து இடமெல்லாம் குளிரும்படி பெய்து - சில்லென்ற மழையினை,
முழக்கம் அடங்கிப்போயிற்றே முரசுக் குரல் மேகம்;
புதரின் மேலுள்ள செம்முல்லையின், காடையின் முள்ளைப் போன்ற சிவந்த அரும்புகள்
நெருக்கமான கொத்துக்களை உடைய பிடாவுடன் ஒன்று சேரத் தளையவிழ
5காடு முழுதுமே ‘கம்’மென மணக்கின்றதே! பள்ளங்களில் உள்ள,
சங்கு உடைந்ததைப் போன்ற வெண்காந்தளின் பசிய பயிரோடு,
அறுகின் கிழங்கையும் வெறுத்து, செருக்கான நடையினை உடைய
தலைமைப் பண்புள்ள ஆண் இரலைமான் தான் விரும்பிய பெண்மானைத் தழுவி
குளிர்ந்த நீரைப் பருகிப் படுத்துக்கொண்டன;
10அந்த அளவுதானா?; வாழி என் தோழி! வீட்டிலுள்ள
குட்டையான நொச்சியின் - சூழ்ந்து மலரும்
காட்டுமுல்லைக் கொடி - கருத்த கிளைகளைக் காட்டி,
அந்த அளவுதான் என்றார்-அங்கே செல்வம் சேர்த்துத் திரும்பி வரும் கால அளவு.
அருஞ்சொற் பொருள் 
பெயல் = மழை; பாடு = ஒலி; உல = அடங்கு; எழிலி = மேகம்; புதல் = புதர்; தளவு = செம்முல்லை; இதல் = சிவல், கவுதாரி, காடை; நனை = அரும்பு; பிடவம் = பிடா; அவல் = பள்ளம் ; கோடு = சங்கு, சங்கு வளையல்; கோடல் = வெண்காந்தள்; பதவு = அறுகம்புல்; பாவை = கிழங்கு; அமர் = விரும்பு; பிணை = பெண்மான்; 
பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
ஏதாவது ஒரு பொருளைச் சந்தேகத்துடன் பார்த்தால், “நல்லா கண்ணக் கசக்கிட்டுப் பாரப்பா” என்பார்கள். அந்த மாதிரி நம் கருத்தைக் கசக்கிவிட்டுப் பார்க்கவேண்டும் – ‘இது உண்மையில் பாலைத்திணைப் பாடல்தானா?’ என்று. முதலாவது இது ஒற்றை எண் (23) பாடல். எனவே இது பாலைத்திணைதான். ஆனால், அதைத் தவிர பாடலில் வேறு எந்த முகாந்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை. தண் பெயல், எழிலி, பிச்சி, பிடவம், கோடல், இரலை, நொச்சி, மௌவல் – கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் இது முல்லைத்திணைப் பாடல். முல்லை என்பது ஆற்றியிருப்பது – தலைவன் குறித்த காலத்தில் வந்துவிடுவான் என்று காத்திருப்பது – கார்காலம் வந்து - தலைவன் வரவில்லையென்றாலும் – “கானம் கார் எனக் கூறினும் யானோ தேறேன், அவர் பொய் வழங்கலரே” என்று அடித்துக் கூறுவது. “அன்னம் போல பெண்ணிருக்கு, ஆசை கொண்ட மனமிருக்கு, அவரை மட்டும் ஏனோ இங்கு காணேன்” என்று அழுகைக் குரலில் பாடினால், அது இரங்கல் – வருந்துதல். இது பாலைத்திணைதானே! எனவே முதற்பொருளும், கருப்பொருளும் என்ன சொன்னாலும், உரிப்பொருள் என்ன சொல்கிறது என்று பார்க்கவேண்டும். இங்கு அதனைப் பார்ப்போம்.
தன் இளம் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, பொருள் சேர்க்கத் தலைவன் வேற்றுநாட்டுக்குச் செல்லவிருக்கிறான். “எப்போது திரும்புவீர்” என்று கேட்ட இளம் மனைவியின் கையைப் பிடித்து வாசலுக்குக்கூட்டிச் செல்கிறான். அங்கு முற்றத்தைத் தாண்டி வேலியாக நிற்கிறது வெட்டிவிட்ட குட்டை நொச்சிச் செடி. அதற்கருகில் நடப்பட்டிருக்கும் மௌவல் கொடி நொச்சியின் மீது படர்ந்திருக்கிறது. “இந்த மௌவல் கொடி பூப்பூக்குமே அந்தக் காலத்தில் நான் திரும்பி வருவேன்” என்று கூறிவிட்டுத் தலைவன் சென்றுவிடுகிறான். இப்போது அந்த மௌவல் மலர்ந்து மணம் வீசுகிறது. இதுமட்டுமா, ஊருக்கு வெளியில் உள்ள பூக்களெல்லாம் மலர்ந்து அந்தப் பகுதியே ‘கம கம’வென மணக்கிறது. ‘கடபுட’வென்று இடியிடித்து முழங்கின மேகங்களும் தம் பாட்டை முடித்துக்கொண்டன. தோழியே! அவர் சொன்ன காலம் இன்னுமா வரவில்லை? என்று தோழியைத் தலைவி கேட்கிறாள். “மழக்காலம் வந்து மண்ணெல்லாம் குளுந்துபோச்சு, என் வீட்டுக்காரர் இருக்கிற ஊர்ல மட்டும் வெயில் இன்னும் அடிக்குது போல” என்று தலைவி கேட்பது போல இப் பாடலைப் புனைந்துள்ளார் புலவர் ஒரோடகத்துக் கந்தரத்தனார். தலைவியின் பிரிவுத் துன்பம் இப் பாடலை முல்லைத்தோல் போர்த்திய பாலைப்புலி ஆக்குகிறது. 
பாடல் விளக்கம்
மண் கண் குளிர்ப்ப வீசித் தண் பெயல்
பாடு உலந்தன்றே பறைக் குரல் எழிலி
பறை என்பது முரசம். முரசை எப்படிக் கொட்டுவார்கள்? இரண்டு கைகளினாலும் மாறி மாறி ஓங்கி ‘டம்,…….,டம்,……டம்,……..டம்’ – என்று. அல்லது, ஓங்கி அடிக்காமல், ‘டம்டம்டம்டம் …..’ என்று. இவ்வாறு பறையை ஒலித்தது போல மேகம் முழங்கியதாம் – ஓங்கி இடித்தும், ஒடித்து ஒடித்து உறுமியும். இது கார்கால மேகம். முதுவேனில் முடிந்து பெய்கின்ற முதல் மழை. ‘டமார்,…..டமார்’ என்ற பெருத்த இடியுடன் மேகங்கள் கூடுகின்றன (பறைக் குரல் எழிலி). அப்புறம், வீசியடிக்கிறது மழை-(வீசி). ‘சில்’-லென்ற காற்று சுழற்றி அடிக்க,(தண் பெயல்) மக்கள் மேனியை மூடிக்கொண்டு கதவுகளையெல்லாம் இழுத்து அடைக்கிறார்கள். இடி தொடர்ந்து விட்டு விட்டு இடிக்க, மழை ஊற்றுகிறது. மேடு, பள்ளம், காடு, கழனி எல்லாம் ஒரே தண்ணீர் மயம். மண் என்று தெரிகிற இடமெல்லாம் குளிர்ர்ர்ர்ர்ரப் பெய்த பெரு மழை-(மண் கண் குளிர்ப்ப). சில வேளைகளில் வருகிற மழை பெருத்த ஆர்ப்பாட்டத்துடன், ‘சடசட’ வென்று இறங்கி, அப்புறம் ‘சல்’-லென்று நின்றுவிடும். “இருக்கிற சூட்டையும் கெளப்பிவிட்டுப் போயிருச்சப்பா!”  என்பார்கள். அப்படியில்லாமல் மழை நின்ன்ன்று பெய்துவிட்டுப் போனால், “பெஞ்சாலும் பெஞ்சிச்சு ஒரு மழை, பூமியே குளிந்ந்ந்துபோச்சுப்பா” என்பார்கள். அப்படி வந்து நின்று பெய்த மழை, இடையிடையே உறுமிக்கொண்டிருக்கும். மழை விட்ட பின்னும் சிறிது நேரத்துக்கு ‘டமடம……..டமடம டமடம என்று வானம் புலிக்குட்டி உறுமுவதைப் போல உறுமிக்கொண்டிருந்துவிட்டு ஓய்ந்துபோகும். (பாடு உலந்தன்றே) இவ்வளவையும் சொல்கின்றன இந்த இரண்டு அடிகள்.
மண்ணையெல்லாம் குளிர்வித்த மழை ஒரு மனதையும் குளிர்விக்கிறது. ஆனால், சிறிது நாளில் ‘வந்துவிடுவார்’ என்று அரும்பிய நம்பிக்கை அவிந்துபோக, செடி,கொடியெல்லாம் அரும்புகள் விட ஆரம்பிக்கின்றன.
புதல் மிசைத் தளவின் இதல் முள் செம் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ
5காடே கம்மென்றன்றே --
காய்ந்துகிடந்த நிலம் புதர்க்காடாய் மாறிவிட்டது. அதன் மீது எழுந்து படர்ந்த பிச்சிக்கொடியில் கௌதாரியின் கால்முள் போலக் குறும் அரும்புகள் கூர்மையாய்த் தோன்றுகின்றன. பிடவஞ்செடியிலோ கொத்துக்கொத்தாய் மொட்டுகள். இவை இரண்டும் ஒன்றுசேர்ந்து பூக்கின்றன. பிச்சியே எட்டூருக்கு மணக்கும். அதோடு பிடவமும் சேர்ந்துகொண்டால்? அந்தக் காடே ‘கம்ம்ம்ம்’-என மணக்கிறது.
   
           -- அவல
கோடு உடைந்து அன்ன கோடல் பைம் பயிர்
பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே
பள்ளங்களிலோ வெண்காந்தள் பூத்திருக்கிறது - சங்கு வளையல்களை உடைத்து-விட்டாற்போல. 
               
அங்கிருக்கும் பச்சைப் பயிர்களை இரலைமான்கள் மேய்ந்து, அது வெறுத்துப்போய், அறுகம்புல்லைக் கடித்து இழுக்க, அவை வேரோடு பிடுங்கிக்கொண்டு வருகின்றன – ஈரமான நிலமல்லவா!. எல்லாவற்றையும் தின்று திகட்டிப்போன அந்த மான்கள் தாங்கள் விரும்பும் பெண்மானைத் தழுவி மகிழ்கின்றன. அப்புறம் என்ன? அருகிருக்கும் குளிர்ந்த நீரை உறிஞ்சிக் குடித்துவிட்டு ஓய்வெடுக்கப் படுத்துவிட்டன. 
        
         நன்றி:www.amanushyam.com Cynodon dactylon            நன்றி: www.bbc.co.uk                        
-- மனைய
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மாச் சினை காட்டி
அவ்வளவு என்றார் ஆண்டுச் செய்பொருளே
வீட்டிலிருக்கும் – அப்போது குட்டையாக இருந்த மௌவல் சூழப் படர்ந்திருக்கும் அந்த நொச்சியின் கரிய கொடியினைக் காட்டி, “இது மலருமே அந்தக் காலம் வரைதான் நான் வெளியூரில் இருந்து பொருள் சம்பாதிக்கும் காலம்” – (என்று)
10அனையகொல் வாழி தோழி
அன்றைக்கு அவர் சொல்லிவிட்டுப் போனாரே, அவர் சொன்ன காலம் இதைப் போன்றது-தானா? சொல் தோழியே!
கந்தரத்தனாரின் கவிநயம்
1. பாடு உலந்தன்றே பறைக் குரல் எழிலி
பாடு என்பதற்குப் பல பொருள் உண்டு. இங்கே ஒலி என்ற பொருள் உரையாசிரியர்களால் கொள்ளப்படுகிறது, இது சரியாயின், தலைவி இக் கூற்றைக் கூறுவதற்குச் சற்று முன்னர்தான் மழை பெய்து ஓய்ந்திருப்பதாகப் பொருள் கிடைக்கிறது. அப்படியெனில் பள்ளங்களிலெல்லாம் நீர் நிறைந்து மேடுபள்ளம் தெரியாமல் போயிருக்கும். ஆனால், அவல கோடல் பைம்பயிர் எனத் தலைவி கூறுதலால், பள்ளங்களில் பயிர்பச்சை காணப்படுவதால், மழை எப்போதோ பெய்து ஓய்ந்திருக்கவேண்டும். இது கார்காலத்து முதல் மழையும் அல்ல. தளவும், பிடவமும் பிணியவிழ்ந்து காடு முழுக்க மணக்கின்றன என்றால், கார் தொடங்கிப் பலநாட்கள் ஆகிவிட்டன என்று பொருள். சொல்லப்போனால் இது கார்காலத்துக் கடைசி மழையாகக்குட இருக்கலாம். கார்மழை தன் கடமையைச் செய்துவிட்டுப் போய்விட்டது. 
இரண்டு பேருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அவரவருக்குப் பணிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒருவர் தன் பணிகளைச் சீக்கிரமாக முடித்துவிட்டுப் போய்விடுகிறார். அடுத்தவருக்கு இழுத்துக்கொண்டே போகிறது. முன்னவர் திரும்ப வந்து, “என்ன, இன்னமுமா முடியவில்லை?” என்கிறார். “ஒனக்கென்ன, லேசான வேல. ஒம் பாடு முடிஞ்சது. ஒம் பாட்ட முடிச்சிட்டு நீ பாட்டுக்குப் போயிட்ட. இங்க எம் பாடு’-ல்ல முடியமாட்டேங்குது. நான் பாடாப் பட்டுகிட்டு இருக்கேன்”. இங்கே எத்தனை ‘பாடு’ பாருங்களேன்! 
பாடு என்ற பெயர்ச்சொல்லுக்கு 33 பொருளைத் தருகிறது பேரகராதி. அதில் கடமை, duty, obligation, accountability என்ற பொருளும் உண்டு. உல என்பதற்கு முடிவுபெறுதல், to be full, complete, perfect என்ற பொருளையும் தருகிறது பேரகராதி. எனவே, கார்கால மழை தன் வருடாந்திரக் கடமையை முடித்துவிட்டுப் போய்விட்டது; என்னவரைத்தான் இன்னும் காணோம்” என்ற கருத்தில், “மழைகூடத் தம் பாட்ட முடிச்சிட்டுப் போயிருச்சு, எம் பாட்டத் தீத்துவைக்க இன்னமும் அவரைக் காணோம்” என்று புலம்புகிறாளோ தலைவி?
2. அண்ணல் இரலை
சங்குவளையலை உடைத்துப்போட்டது போல் வெண்காந்தள் பூத்திருக்கிறது. அதைச் சுற்றி பசிய பயிர்போல அறுகம்புல் மண்டிக்கிடக்கிறது. அந்த அறுகம்புல்லை மேலாக மேய்ந்துவிட்டு, அடிக்கட்டையை இழுக்கிறது இரலை மான். புல் வேரோடு பிடுங்கிக்கொண்டு வருகிறது. சாதாரணமாக அறுகம்புல் வேரிலிருந்து கிளம்பி, சுற்றிலும் பரவிக் கிடக்கும். பின்னர் அதன் சிறு கணுக்களிலிருந்து தரைக்குள் வேர் இறங்கும். அப்புறம் அதை மூலமாகக்கொண்டு புல் மேலும் படரும். இவ்வாறு செல்கின்ற இடம் முழுதும் வேர்விட்டுக்கொண்டே செல்லும் புல், தரையோடு தரையாகப் புதராய்க் கிடக்கும். அதை பன்னரிவாளால்தான் அறுத்து எடுப்பார்கள். வேர்கள் அங்கேயே உள்ளே இருப்பதால் புல் மேலும் மேலும் வளரும். இப்போது மழைக்காலம். எனவே ஒட்ட மேய்ந்த பின்னர், மான் புல்லை மேலும் இழுக்கும்போது, செடி வேருடன் பிடுங்கிக்கொள்ளும். அந்த வேர்ப்பகுதி சேறும் சகதியுமாயிருக்க, அதை வெறுத்து வேறோர் இடத்துக்கு மான் மேயப்போகிறது. புல்லின் வேர்க்கிழங்கையும் சேர்த்துத் தின்று தெவிட்டுப்போகிறது மான் என்று உரைகள் சொல்கின்றன. அறுகம்புல் வேர்க்கிழங்கை மான்கள் தின்னுமா? தெரியவில்லை. ஆனால் அறுகம்புல் மாடு, குதிரை, மான் போன்ற விலங்குகளுக்கு மிகவும் பிடித்த உணவு என்பர்.
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்னுமணி அன்ன மாஇதழ்ப் பாவை – அகம் 136/11-13
என்ற அடிகளால் கார்காலத்து முதல்மழையிலேயே அறுகம்புல் வேரில் கிழங்கு விடுகிறது என்பது தெரிகிறது. இவ்வாறு வயிறு நிறைய மேய்ந்த மான், தன் இனிய துணையைத் தழுவி மகிழ்கிறது. பின்னர் அங்கு ஓடையில் அறுத்துக்கொண்டு போகும் குளிர்ந்த நீரையும் பருகுகிறது. உண்ட களைப்புத் தீர, மண்டியிட்டு  உட்கார்ந்து படுத்துவிடுகிறது. 
புல்லை மேய்ந்துவிட்ட இரலைகூடக் கிழங்கை வெறுத்துத் தன் பிணையைத் தழுவி மகிழ்கிறதே! பொருள்தேடிச் சென்ற என் தலைவனுக்கு என் நினைவு வரவில்லையா என்று ஏக்கத்துடன் தலைவி உள்ளுறையாகக் கூறுகிறாளோ?
3. மனைய தாழ்வின் நொச்சி
இந்தப் பாடல் தலைவியின் கூற்றாக அமைந்திருக்கிறது. அவள் யாருக்குச் சொல்வாள்? தன் தோழிக்குத்தான். இந்தக் கூற்று பேசப்படும் இடம் எது? தலைவியின் வீடா? தளவமும், பிடவமும் காடே மணக்கப் பூத்திருக்கின்றன என்கிறாள் தலைவி. மேய்ந்து தழுவிய இரலையும் பிணையும் தாழ்ந்து படுத்துக்கொண்டன என்கிறாள் அவள். எனவே, வீட்டிற்குள்ளிருந்து வெளியே எட்டி எட்டிப் பார்த்துச் சலித்துப் போன தலைவி தோழியைக் கூட்டிக்கொண்டு, “வா, கொஞ்ச தூரம் அவர் வருகிற வழியில போய்ப் பார்ப்போம்” என்று நடந்து நடந்து காட்டுக்கே வந்துவிட்டாள். காடு என்பது முல்லைக்காடு – புன்செய் நிலம் – ஊரை ஒட்டி வெளியே இருக்கும். அங்குதான் செம்முல்லையும் பிடவமும் மணக்க மலர்ந்திருப்பதைக் காண்கிறாள். ஓடையில் அறல் நீரைக் குடிக்கும் மான்களையும் பார்க்கிறாள். ஊருக்குள் அறல் எப்படி வரும்? வந்தாலும், காட்டு மான்கள் ஊருக்குள் வருமா? அறுகம்புல் ஊருக்குள்ளா முளைத்திருக்கும். கோடல் மலர்கள் ஊருக்குள்ளா சிதறிக்கிடக்கும்? இத்தனையையும் பார்த்துவிட்டு அவள் கேட்கிறாள், “தலைவன் சொன்ன காலம் இதுபோன்றதுதானா? (அனைய கொல்?). தோழி கேட்கிறாள், “அவர் என்னதான் சொன்னார்?”. “நம்ம வீட்டிலிருக்குதே, அந்த நொச்சி .. “ என்று தொடங்குகிறாள் தலைவி (மனைய … நொச்சி ..). மனை நொச்சி அல்ல, மனைய நொச்சி. அப்படியென்றால் அவள் வீட்டுக்கு வெளியில் இருக்கிறாள். வீட்டுக்குள் ஆற்றியிருக்கவில்லை. இருந்திருந்தால் அது முல்லைத்திணை. ஆற்றாமல், வருந்திப் புலம்பினால் அது நெய்தல். இங்கு அவள் வருந்திப் புலம்பவில்லை. பிரிவுத் துயரத்தை – வேதனையை – வெளிப்படுத்தி நிற்கிறாள். மணக்கின்ற மலர்களும், பிணைகின்ற மான்களும் அவள் பிரிவுத் துயரத்தைப் பெருமடங்கு ஆக்குகின்றன. எனவே இது பாலை. எத்துணை நுணுக்கமாக இந்த உரிப்பொருளைக் கையாள்கிறார் புலவர் என்று பாருங்கள்!
4. ஒரு குழப்பம்  
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மாச் சினை காட்டி
என்ற தொடரைப் பாருங்கள். மௌவல் என்பது ஒரு கொடி. அதற்குச் சினை ஏது? சினை என்பது கிளை – மரத்துக்கு உண்டு. செடிக்கும் உண்டு. நொச்சி என்பது சிறு மரம். எனவே, சினை என்பதை நொச்சிக்குச் சேர்ப்பதற்காக, மௌவல் சூழ்வன மலரும் தாழ்வின் நொச்சி மாச்சினை காட்டி என்று இந்த இரு அடிகளையும் வளைத்து, ஒடித்துப் பொருள் காண்கின்றனர். 
(3)தாழ்வின் நொச்சி   (2)சூழ்வன மலரும்
(1)மௌவல்   (4)மாச் சினை காட்டி
இவ்வாறு தாவியும், குதித்தும், முன்னும் பின்னும் புரட்டிவிட்டும் பொருள்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? இங்கே ஆற்றொழுக்கான நேர்ப்பொருள் அமைய-வில்லை. இவ்வாறு ஓரிரண்டு இடங்களில் செய்யவேண்டிய காரணத்தினால், ஆற்றொழுக்காகப் பொருள் அமைந்திருக்கும்போதும், தனக்கு வேண்டும் பொருள் கிடைப்பதற்காகச் சொற்களைப் புரட்டிப்போடுவோர் உண்டு. பெருமழைப்புலவர் போன்றோர் அத்தகைய போக்கைக் கண்டிப்பர். ஆனால், அவர்களே இந்த இடத்தில் சொற்களைப் புரட்டித்தான் போடுகின்றனர். இதற்கு ஒரே காரணம் சினைக்கு உரிய அடையாக நொச்சியைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. இதற்கும் ஆற்றொழுக்கான பொருள் உண்டா எனப் பார்ப்போம்.
மல்லிகையிலேயே பலவகை உண்டு. எல்லாமே கொடி மல்லிகை அல்ல. செடி மல்லிகையும் உண்டு. ஏறக்குறைய வேறுபாடு தெரியாது. மர மல்லிகை கூட உண்டு என்கின்றனர் தாவரவியலார். Jasminum angustifolium  என்பது புதர் மல்லிகை எனப்படுகிறது. இதற்குச் சினை உண்டே! Millingtonia hortensis எனப்படும் மர மல்லிகை என்றோர் வகை உண்டு. இதைக் காட்டு மல்லிகை என்றும் அழைக்கின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் பன்னீர் மரம்தான். இந்தப் பன்னீர்ப்பூவே மௌவல் என்றும் சிலர் கூறுகின்றனர். எனவே இங்கு புலவர் குறிப்பிடுவது வீட்டில் வளர்க்கும் செடிமல்லி அல்லது மர மல்லி என்ற வகையைச் சார்ந்தது என எடுத்துக்கொண்டால், இவ்வடிகளுக்கு ஆற்றொழுக்காக நேர்ப்பொருள் காணலாம். 
   
      
அருஞ்சொல் விளக்கம்
1. எழிலி 
எழிலி என்றால் மேகம் என்கிறது அகராதி. அதுவே மேகம் என்றால் முகில் என்கிறது. முகில் என்றால் மேகம் என்கிறது. ஆனால் எல்லாமே cloud என்கிறது. எனவே அகராதியைப் பார்த்துப் பயன் இல்லை. பயன்பாட்டைப் பார்க்கவேண்டும்.
கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
என்கிறது முல்லைப்பாட்டு (5,6). மேலும், பெரும் கலி எழிலி, இன் குரல் எழிலி, பல் குரல் எழிலி, அதிர் குரல் எழிலி, மணி நிற எழிலி, தண் பத எழிலி, பெய்து போகு எழிலி, தண் குரல் எழிலி, ஆர்ப்பின் எழிலி, ஆர் குரல் எழிலி, ஆர் கலி எழிலி, கறங்கு குரல் எழிலி, இன் இசை எழிலி, பனை முழங்கு எழிலி என்றேல்லாம் எழிலிக்கு அடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, மழையைக் கொடுக்கும் மேகமே எழிலி. மழை பெய்வதற்குச் சற்று முந்தைய நிலையிலுள்ள மேகம். The rain is imminent. அது பெய்து, பின்னர் முடித்துவிட்டுப் போகும் வரை அந்த மேகம் எழிலிதான். 
2. நொச்சி
ஒரு காட்டுச் செடி - Vitex negundo. எனவேதான் அதை வீட்டில் வளர்க்கும்போது மனை நொச்சி என்கிறார்கள். நிறைய மருத்துவக் குணம் கொண்டது. கிராமங்களில் ஓடைக்கரைகளில் செழித்து வளரும். வீட்டைச் சுற்றிலும் வேலிக்காக வளர்ப்பார்கள். அவ்வப்போது வெட்டிவிடுவார்கள். வீட்டு நொச்சி எப்போதும் மௌவலுடன் இணைத்துப் பேசப்படுகிறது.
    
www.yourgardenshow.com                                                  www.flickriver.com 
3. தளவு 
செம்முல்லை – jasminum sembac, jasminum nitidum  வகையைச் சேர்ந்தது. 
    
www.visoflora.com
கொடிவகைத் தாவரம். இதன் அரும்புகள் சிவப்பாக இருக்கும். எனவே, இது காடையின் கால்களின் பின்புறம் நீட்டிக்கொண்டிருக்கும் முள்ளுக்கு ஒப்பிடப்படுகிறது. 
4. இதல்
காட்டுக்கோழி இனம். காடை, கௌதாரி, சிவல் போன்றவை. இதன் கால்களில் விரல்களுக்குச் சற்று மேலே, பின்புறமாக ஒரு முள் போன்ற உறுப்பு உண்டு. அது தளவத்தில் சிவந்த மொட்டுகளுக்கு உவமிக்கப்படுகிறது.
      
www. redorbit.com                ibc.lynxeds.com 
5. பிடவம் – பிடா
காட்டு மலர். சிறு மர வகை – Randia malabarica அல்லது Benkara malabarica எனப்படும். மிகுந்த மணம் தருவது.
                    
6. மௌவல்
இது கொடி வகை (Jasminum officinale) என்றும், செடி வகை (Jasminum angustifolium) என்றும், மர வகை (millingtonia hortensis) என்றும் பலவாறாகக் கூறப்படுகிறது. (படங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன)
7. நனை
நனை என்பது மொட்டு. அரும்பு என்ற வினைச்சொல்லுக்குத் தோன்று என்ற பொருள் உண்டு. பூக்கின்ற பருவத்தில் முதலில் தோன்றுவதற்குப் பெயர் அரும்பு. பின்னர் அதன் வெவ்வேறு நிலைகளுக்குத் தனித்தனிப் பெயர் உண்டு. அவற்றை முறைப்படுத்திக் கொடுத்திருக்கிறது ஒரு தளம்.
மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்
அரும்பு - அரும்பும் தோன்றுநிலை
நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை - நனை முத்தாகும் நிலை
மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர்- மலரும் பூ
பூ - பூத்த மலர்
வீ - உதிரும் பூ
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை


ஆக்கம்: முனைவர் திரு பாண்டியராஜா பரமசிவம், மின்னஞ்சல் முகவரி <pipiraja@gmail.com> 
 
--Geetha Sambasivam (பேச்சு) 12:14, 16 பெப்ரவரி 2014 (GMT)பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 1 ஜூன் 2015, 12:08 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,902 முறைகள் அணுகப்பட்டது.