சங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 25

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அகநானூறு
பாடல்  25 - விரிவுரை - விளக்கப்படங்களுடன்
பாடியவர் : ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
திணை : பாலைத் திணை
துறை :: பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
# 25 - மரபு மூலம் – வாராமையின் புலந்த நெஞ்சம்
நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனற் சாஅ
யவிரறற் கொண்ட விரவுமண லகன்றுறைத்
தண்கயந் நண்ணிய பொழிடொறுங் காஞ்சிப்
பைந்தா தணிந்த போதுமலி யெக்கர்
5வதுவை நாற்றம் புதுவது கஞல
மாநனை கொழுதிய மணிநிற விருங்குயிற்
படுநா விளியா னடுநின் றல்கலு
முரைப்ப போல வூழ்கொள்பு கூவ
வினச்சித ருகுத்த விலவத் தாங்கண்
10சினைப்பூங் கோங்கி நுண்டாது பகர்நர்
பவளச் செப்பிற் பொன்சொரிந் தன்ன
விகழுந ரிகழா விளநா ளமையஞ்
செய்தோர் மன்ற குறியென நீநின்
பைத லுண்கண் பனிவார் புறைப்ப
15வாரா மையின் புலந்த நெஞ்சமொடு
நோவல் குறுமகள் நோயியரென் னுயிரென
மெல்லிய வினிய கூறி வல்லே
வருவர் வாழி தோழி பொருநர்
செல்சமங் கடந்த வில்கெழு தடக்கைப்
20பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதிய
னின்னிசை யியத்திற் கறங்குங்
கன்மிசை யருவிய காடிறந் தோரே
# 25- சொற்பிரிப்பு மூலம் – வாராமையின் புலந்த நெஞ்சம்
நெடும் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில்தொறும் காஞ்சிப்
பைம் தாது அணிந்த போது மலி எக்கர்
5வதுவை நாற்றம் புதுவது கஞல;
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில்
படு நா விளியால் நடு நின்று, அல்கலும்
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ;
இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
10சினைப் பூங் கோங்கின் நுண் தாது, பகர்நர்
பவளச் செப்பில் பொன் சொரிந்து அன்ன
இகழுநர் இகழா இளநாள் அமையம்
செய்தோர் மன்ற குறி என, நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப;
15“வாராமையின் புலந்த நெஞ்சமொடு
நோவல் குறுமகள் நோயியர் என் உயிர்” என
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி தோழி; பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
20பொதியின் செல்வன் பொலம் தேர்த் திதியன்
இன் இசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரே-
# 25 – அடிநேர் உரை – வாராமையின் புலந்த நெஞ்சம்
நீண்ட கரைகளைக் கொண்ட காட்டாற்றின் வேகம் மிக்க வெள்ளம் வற்றிவிட,
பளபளக்கும் அறல்களைக் கொண்ட பரந்த மணலுள்ள அகன்ற நீர்த்துறைகளில்
குளிர்ந்த மடுக்களை ஒட்டிய சோலைகள்தோறும் காஞ்சி மரத்தின்
அழகிய தாதுக்களை அணிந்த பூக்கள் நிறைந்த மணல்மேடுகள்
5திருமணமாலையின் புதுமணத்துடன் புத்துணர்ச்சியுடன் திகழ,
மாமரத்தின் அரும்புகளைக் கோதிய நீலமணி நிறமுள்ள கரிய குயில்கள்
ஒலிக்கும் தமது நாவினால் (மன்றத்தின்) நடுவில் நின்று நாள்முழுக்க
உரத்துக்கூறுவது போல மாறிமாறிக் கூவ,
கூட்டமான வண்டுகள் உகுத்துவிட்ட - இலவமலர்களின் மேல் -
10கிளைகளில் பூத்திருக்கும் கோங்கின் நுண்தாது – விற்போர்
பவளச் செப்பில் பொன்துகளைச் சொரிந்தது போன்ற,
அலட்சியத்துடன் இருப்பவர்களும் அலட்சியப்படுத்தாத இளவேனில் நாளை
(திரும்பிவரும் நாள் ஆகக்) குறித்தல் செய்தார் என நீ உனது
வருந்துகின்ற உன் மையிட்ட கண்களில் நீர் வடிந்து உதிர;
15(தலைவன்) “வராததினால் வெறுத்துப்போன நெஞ்சத்துடன்
வருந்த வேண்டாம், இளையோளே! வருந்துவதாக என் உயிர்” என
மென்மையான இனிய சொற்களைக் கூறி, விரைவிலேயே
வந்துவிடுவார்; வாழ்க! தோழியே! போர்வீரர்கள்
எதிர்த்து வரும் போரினை வென்ற, வில் ஏந்திய பெரிய கைகளையுடைய,
20பொதிகை மலைத் தலைவன் – பொன்னால் ஆன தேரை உடைய - திதியனின்
இனிய இசையுள்ள முரசைப் போன்று முழங்கும்,
மலை மேலுள்ள அருவிகளைக் கொண்ட காடுகளைக் கடந்து சென்றவர்.

அருஞ்சொற் பொருள் 
சாஅய் = வறண்டுபோக; வதுவை = புதுமணம், மணமாலை; கஞல = சிறப்புடன் விளங்க; நனை = மரும் மொட்டு; அல்கலும் = நாள்முழுதும்; ஊழ் கொள்பு = முறை முறையாக, மாறி மாறி; சிதர் = வண்டு; இளநாள் = இளவேனில் நாள்; பைதல் = துன்பம்; பனி = நீர்; பொருநர் = மறவர்; கடந்த = வென்ற; கறங்கும் = ஒலிக்கும். 
பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
பொருளீட்டப் புறப்பட்டுச் செல்லும் தலைவன், “இளவேனில் காலத் தொடக்கத்தில் திரும்பிவிடுவேன்” என்று கூறுகிறான். “இளவேனில் எப்போது வரும்?” எனக் கேட்கிறாள் தலைவி. “இது தெரியாதா?, காஞ்சி மரங்கள் பூத்துக் குலுங்கி ஊரெங்கும் மணக்கும் – மாமரம் அரும்புவிடும் – குயில்கள் துணையைத் தேடும் – பசும்பொன் போன்ற கோங்கமும், பவளம் போன்ற இலவமும் மலர்விட்டுச் சிரிக்கும்” என்கிறான் தலைவன். சொல்லிச் சென்றவன் சொன்னவண்ணம் திரும்பவில்லை. இளவேனில் கழிந்துகொண்-டிருக்கிறது. ஒவ்வொரு நாளும், அன்றைக்கு வந்துவிடுவான் என்று மையிட்டு அலங்கரித்து மகிழ்ச்சியுடன் காத்திருக்கும் தலைவி, மாலையில் சோர்ந்துபோய் கண்களில் நீர் வடியக் கலங்கி நிற்கிறாள். தனது தாமதமான வருகைக்கு வருந்தியவாறு தலைவன் சீக்கிரன் வந்துவிடுவான் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
பாடல் விளக்கம்
நெடும் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில்தொறும் காஞ்சிப்
பைம் தாது அணிந்த போது மலி எக்கர்
5வதுவை நாற்றம் புதுவது கஞல
காட்டாறு மேடுபள்ளங்களுள்ள பகுதியில் விரைந்து வரும்போது வளைந்து நெளிந்து ஓடும். ஆனால் அது சமவெளிப்பகுதிக்கு வரும்போது சீராக ஓடத்தொடங்கும். அப்போது அதன் கரைகள் நீண்டு இருக்கும். நெடுங்கரைக் கான்யாறு என்பதால், காட்டாறு ஊர்ப் பகுதியை நெருங்கிவிட்டது எனலாம். பருவ மழையின்போது, காட்டாற்றில் வெள்ளம் கடும்வேகத்துடன் வரும். புனல் சாஅய் என்பதால் நீர் குறைந்துவிட்டது அல்லது வற்றிப்போய்விட்டது எனலாம். எனவே ஆறு மணற்காடாய் மாறிவிட்டது. அறல் என்பது, பரந்த ஆற்றில் ஓர் ஓரத்தில் மிகச் சிறிதாக அறுத்துக்கொண்டு ஓடும் நீர் எனலாம். அது கதிரவன் ஒளியில் மின்னுவதையே அவிர் அறல் என்கிறார் புலவர் எனலாம். கடும் புனல் சாஅய் என்பதால் வேகமாக வரும் வெள்ளம் குறைந்து அறலாய் நீர் சிறுத்து ஓடுகிறது எனவும் கொள்ளலாம். ஆனால் இது காட்டாறு. மழை நின்றால் வெள்ளம் இருக்காது. எனவே, இங்கு சாஅய் என்பதற்கு வற்றிப்போய் என்ற பொருளே பொருந்தும் எனத் தோன்றுகிறது. அப்படியென்றால் அறல் என்பதற்குக் கரிய நுண்மணல் என்ற பொருள் கொள்ளலாம். இந்தக் கருமணல் பெண்களின் கூந்தல் போல் அலை அலையாக இருக்கும். அது கதிரவனின் ஒளிபட்டுப் பளபளப்பதால் அவிர் அறல் எனப்படுகிறது எனலாம். இந்த ஆற்றைக் கடப்பதற்குக் கரைகளின் உயரத்தைக் குறைத்து வழி அமைத்திருப்பர். அதுவே துறை எனப்படும். இங்கே துறை அகலமாக இருக்கிறது. காரணம், மிகையாக வரும் வெள்ளம் இதன் வழியே வெளியே செல்வதற்கான ஏற்பாடு அது. அப்படி வெளியேறும் வெள்ளத்தைச் சேமித்துவைக்க பள்ளங்கள் ஏற்படுத்தியிருப்பர். மழைக்காலத்தில் வரும் வெள்ளத்தால் இந்தப் பள்ளங்கள் நிறைந்து குளங்களாய் மாறும். இந்தக் குளத்தைச் சுற்றிலும் கரையில் மரங்கள் வளர்ந்திருக்கும். எனவேதான் இது தண் கயம் எனப்படுகிறது. இந்தக் குளங்களுக்கு அருகில் புளியந்தோப்புகளும், மாஞ்சோலைகளும், பூந்தோட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு புலவர் கயம் என்றும் பொழில் என்றும் கூறுகிறார். இவை இயற்கையாய் அமைந்தவை – மனிதரால் உருவாக்கப்பட்டவை அல்ல. அந்தப் பொழில்களிலெல்லாம் காஞ்சி மரங்களும் உள்ளன. அவை பூத்திருக்கின்றன. காட்டாற்றின் அருகிருக்கும் சோலையாதலால், வெள்ளம் இந்தச் சோலையிலும் புகுந்து ஆங்காங்கே மணல்திட்டுகளை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்த மணல்திட்டுக்களின் மேல் காஞ்சிப் பூக்கள் சிதறிக்கிடக்கின்றன. காஞ்சி என்பது ஆற்றுப் பூவரசு என்ற மரம் ஆகும். இதனை River Portia, Mallotus nudiflorus (syn. Trewia nudiflora) என்பர். தாது என்பது மகரந்தத்தூள். இது மலர்ந்த பூக்களின் உள்ளே மீசை போன்ற பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால் காஞ்சிப் பூவின் தாது பூக்களின் உச்சியிலேயே இருக்கும். எனவேதான் காஞ்சிப்பூக்கள் தாதுவை அணிந்திருக்கின்றன என்கிறார் புலவர் எனத் தோன்றலாம். காஞ்சிப் பைந்தாது அணிந்த போது என்ற இத் தொடருக்கு, ‘காஞ்சி மரத்தின் அழகிய தாதுக்களைக் கொண்ட பூக்கள் மிக உதிர்ந்துள்ள’ -  என்ற பொருளிலேயே பல உரைகள் அமைந்திருக்கின்றன. ஆனால், காஞ்சிப்பூக்கள் மிகச் சிறியனவாக இருப்பதாலும், அவை காம்புடன் இறுக்கமாக ஒட்டிக்கொண்டிருப்பதாலும், தாதுக்களைக் கொண்ட பூக்கள் உதிர்ந்திருக்குமா என்பது ஐயத்திற்குரியது. குளத்தில் குவளையைத் தின்று கரையேறிய எருமைகளின் ஈர முதுகில் காஞ்சியின் தாதுத் துகள்கள் உதிர்ந்து விழுந்தன என்பதாக அகநானூறு பாடல் 56-இல் அறிகிறோம். (கருங்கோட்டு எருமை … காஞ்சி நுண்தாது ஈர்ம் புறத்து உறைப்ப – அகம் 56/3-6). எனவே காஞ்சியின் தாது தாமாக உதிர்வன என அறிகிறோம். அப்படி உதிர்ந்த தாது, மணலில் ஏற்கனவே உதிர்ந்துகிடந்த வேறுவகைப் போதுக்களின் மீது சொரிய, அந்தப் போதுக்கள் காஞ்சியின் நுண்தாதை அணிந்திருந்தன என்ற பொருள் இந்தக் கூற்றுக்குச் சிறப்புச் சேர்க்கும் எனத் தோன்றுகிறது.
     
என்றைக்கோ அடித்துக் கொணரப்பட்ட மணல்மேடுகளில், அன்றலர்ந்த போதுக்கள் விழுந்துகிடக்க, அவற்றின் மீது காஞ்சித்தாது உதிர்ந்து மணம் வீச, அந்த மணல்திட்டுகள் மணக்கோலம் கொண்டவை போல் புதுப்பொலிவுடன் திகழ்ந்தன என்பதை எக்கர், வதுவை நாற்றம் புதுவது கஞல என்ற தொடர் மூலம் எத்துணை அழகாகப் புலவர் குறிப்பிடுகிறார் பாருங்கள்!
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில்
படு நா விளியால் நடு நின்று அல்கலும்
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ
அடுத்துள்ள மாஞ்சோலையில் மாமரம் அரும்புவிட்டிருக்கிறது. அரும்புகள் முதிர்ந்து நனையாய் மாற, அவற்றுக்குள் தன் அலகுகளை விட்டுக் கொத்திக் குடைகின்றனவாம் குயில்கள். இந்தக் குயிலை மணி நிற இரும் குயில் என்கிறார் புலவர். மணி என்பது கருநீலமணி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. இங்கு மணி என்பது விலை உயர்ந்த கருநீலக்கல். அப்படியென்றால் இரும் என்பதற்குக் கரிய என்று பொருள் கொள்வது கூறியது கூறல்தானே? கீழ்க்கண்ட பயன்பாடுகளைப் பாருங்கள்.
மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சி – குறிஞ். 112
நீலமணியினது நிறத்தைத் தன்னிடத்தே கொண்ட கரிய பெரிய மயிரின்கண்ணே
மணி நிற இரும் புதல் – நற்.302/4
நீலமணியின் நிறம் போன்ற கரிய புதர்
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப – குறுந். 49/2
நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய தலைவ,
மணி நிறம் கொண்ட மா மலை – ஐங்.224/2
நீலமணி போலும் நிறம் அமைந்த பெரிய மலையிடத்தும்
மணி நிற இரும் கழி – பதிற். 11/9
நீலமணி போலும் பெரிய கழி 
மணி நிற மை இருள் அகல – பதிற். 31/11
நீலமணியின் நிறத்தையுடைய கரிய இருள் நீங்கும்படி
மணி நிற இரும் புதல் – அகம். 202/8
நீலமணியின் நிறத்தினை ஒத்த பெரிய புதரில்
‘மா’, ‘இரும்’ - ஆகியவற்றுக்குக் கரிய, பெரிய என்ற இரு பொருள்களும் உண்டு. இடத்திற்குத் தக்கவாறு பொருள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சி என்னும்போது எப்படியும் ஏதேனும் ஒன்றனுக்குக் கரிய என்ற பொருள் கொள்ளத்தான் வேண்டும். மணிநிற மை இருள் என்னும்போது ஐயத்துக்கு இடமின்றி அது கரிய என்றாகிறது. எனவே, இவ்வாறு மணி நிற என்று சொன்ன பின்னரும் கரிய என்று கூறுவது இலக்கிய வழக்கு என்றாகிறது. தேவையற்ற இந்த வழக்கு அழுத்தம் கொடுப்பதற்காகக் (emphasis) கூறப்படுகிறது எனலாம். 
“என்னப்பா!, பன மரத்தப் போல நெடுநெடு’ன்னு வளந்துட்ட!”
“அண்டங்காக்கா போல அட்டக் கரி”
“கோவைப் பழம் போன்ற சிவந்த கண்கள்”
போன்ற வழக்குகள் நமது அன்றாட வாழ்விலும் பயன்படுத்தப்படுகின்றன. 
குயில்கள் பொதுவாக cuckoo என்று அழைக்கப்படினும், அவற்றில் பல வகை உண்டு எனவும், நம் நாட்டில் காணப்படுபவை Asian Koel என்ற வகையைச் சேர்ந்தவை என்றும் பறவை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதைப் பாருங்கள்:
The Koel is a large cuckoo. The male has a glossy blue-black plumage and red eyes. The female is glossy brown above with white spots and bars. She has black face and black on top of head and red eyes. (http://birdsfreewallpaper99.blogspot.in/2012/05/asian-koel.html)
எனவே, இரும் குயில் என்பதற்குப் பெரிய குயில் என்ற பொருளும் ஒத்துவரும் என்றே தோன்றுகிறது. மேலும் glossy blue என்பதற்கு நீலமணி போன்ற (பளபளக்கும்) என்ற பொருளும், black என்பதற்கு இரும் என்ற பொருளும் நேராகி, glossy blue-black plumage என்பதற்கு நேராக, மணி நிற இரும் குயில் என்ற தொடர் மிகச் சரியாகப் பொருந்துகிறதைப் பார்க்கிறோம். 
குயில்கள் பூக்களைக் குயின்று கொத்தி அதன் தாதுவை உண்ணும் என்பது,
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற்.9/10
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து – அகம் 229/17
என்ற அடிகளால் தெரிகிறது.
குயில்கள் தம் இனவிருத்திக் காலத்தில் ஒன்றையொன்று மாறி மாறி விடாமல் அழைக்கும் என்றும் அறிகிறோம். இதனையே நம் புலவர் படு நா விளியால் .. அல்கலும் – ஊழ்கொள்பு கூவ என்கிறார். மேலும் பாடலில் தலைவி குறிப்பிடும் இளநாள் அமையம் என்பது இளவேனில் காலம் என்பதால் அது ஏப்ரல் மாதம் (சித்திரைத் திங்கள்) ஆகிறது. இதுவே குயில்களின் இனவிருத்திக் காலம் எனவும் அறிகிறோம். 
It usually calls from the tops of tall trees or when flying from tree to tree (Jerdon 1862), and much more persistently during breeding season, often calling all night long (Smythies 1968). The call is uttered intermittently for hours on end, for more than five minutes at a stretch, at about 23 calls per minute. The breeding season varies from May to July in northern China, March to August in India, January to June in Burma and January to August in the Malay Peninsula.
இந்த இளவேனில்கால ஏக்க அழைப்புக் கூவல்களால் தலைவியின் பிரிவுத்துயர் பன்மடங்கு பெருகி, அவள் பைதல் உண்கண் பனி வார்பு உறைத்ததில் வியப்பில்லை.
   
குயில்களின் கூவல்களில் பலவகை உண்டு எனவும் அறிகிறோம். ஆண் குயில் துணை நாடிக் கூவுகையில் அது தன் நாவினை நீட்டி அழைக்குமோ? படு நா விளியால் என்று புலவர் குறிப்பாகச் சொல்வதின் காரணத்தைப் பறவை ஆய்வாளர்கள் ஆய்ந்து காணவேண்டும்.
They are very vocal during the breeding season (March to August in South Asia), with a range of different calls. The familiar song of the male is a repeated koo-Ooo.
நம் வீட்டுக் கொல்லைப்புற மரங்களில் தொடர்ந்து ‘குஉ ஊஉ’ என்ற கூவலைக் கேட்டவர்களுக்கு இதைப் புரிந்துகொள்வது கடினம் இல்லை.
குயில்கள் மாறிமாறிக் கூவுவதை விவரிக்க புலவர் இங்கே நடு நின்று அல்கலும் உரைப்ப போல என்ற ஓர் உவமையைக் கையாண்டுள்ளார். பிணக்கம் கொண்ட காதலரைச் சேர்த்துவைக்க நடுநிலையிலிருந்து பேசுவோர் உரைப்பது போல என்று இதற்குப் பொருள் கொள்கின்றனர். ஆனால் அப்படிப் பேசும்போது ஒருவர், இரண்டுபேரிடமும் மாறிமாறிப் பேசுவார். இங்கே இரண்டு குயில்களும் ஒன்றுக்கொன்று மாறிமாறிக் கூவி அழைத்துக்கொள்கின்றன, எனவே இந்த விளக்கம் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை. நடுநின்று உரைப்ப என்பதற்கு இடையில் அல்கலும் என்ற சொல்லைப் புலவர் கூறியிருப்பதையும் கவனிக்கவேண்டும். திருவிழாக் காலங்களிலோ, குடும்ப விழாக் காலங்களிலோ, நன்கொடை அல்லது சீர்கள் கொடுப்போர், அப் பொருள்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்வர். அப்போது முச்சந்திகள் வரும்போது, நின்று, இசையை நிறுத்தி, இருவர் அந்தப் பொருள்களைப் பற்றி உரத்துக் கூறுவர். ஒருவர் சில சொற்கள் கூற, அடுத்தவர் அதனையே மீண்டும் கூறுவார். அல்லது, ஒருவர் இது என்ன, யார் கொடுத்தார், எதற்குக் கொடுத்தார் என்பது போன்ற கேள்விகள் கேட்க, அடுத்தவர் அவற்றுக்குப் பதில் சொல்லுவர். இது இன்றைக்கும் வழக்கில் இருக்கிறது. இப்படிச் செய்பவர்கள் நாலைந்து இடங்களில் மட்டும் இவ்வாறு கூறுவர். அவர்கள் நாள்முழுக்க இவ்வாறு உரைத்துக் கொண்டிருப்பது போல குயில்கள் கூவின என்று புலவர் கூறுவதாகக் கொள்ளலாம். அல்லது, இன்றைய இந்த வழக்கம் போல அந்நாளில் இருந்த வேறு ஒரு வழக்கினைப் புலவர் கூறுகிறார் எனலாம்.
இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
10சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர்
பவளச் செப்பில் பொன் சொரிந்து அன்ன
இகழுநர் இகழா இள_நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி என நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
பூத்திருக்கும் கோங்கு மலர்களை வண்டுகள் மொய்க்கின்றன. அந்தப் பொன்னிறப் பூக்களினின்றும் தாதுக்கள் உதிர்கின்றன. உதிர்ந்து விழும் தாதுத் துகள்கள் சிவந்த இலவம்பூக்களின் மீது சொரிகின்றன. அது பவளச் செப்பில் பொன்துகளைச் சொரிவது போல் இருக்கிறதாம். பகர்நர் என்போர் விலை கூறி விற்போர். அவர்கள் விற்கும்போது, காண்போரைக் கவர்வதற்காகவும், தம் பொருளைக் காட்டுவதற்காகவும், சிவப்புச் செப்பினுள் கையை விட்டுப் பொன்துகளை அள்ளி, பின்னர் சிறிது உயரத்தூக்கி, செப்புக்குள் அந்தத் துகளைச் சிறிது சிறிதாகச் சொரிந்தவாறு விற்பர். என்ன ஒரு பொருத்தமான உவமை பாருங்கள்! சினைப் பூங்கோங்கு என்ற சொல்லாட்சி எத்துணை பொருத்தமானது என்பதைப் படத்திற் காணுங்கள்!
     
        
மணல்மேடுகளும் வதுவை நாற்றம் கஞல - இருங்குயில்கள் ஊழ்கொள்பு கூவ -இலவச் செப்பில் கோங்குத்தாது சொரிந்து நிறைய - “என்ன பெரிய இளவேனில்” என்று இத்தனை நாளும் ஏளனம் செய்தோரும், “அட என்ன அழகு” என்று தம் ஏளனச் சொல்லை மறுத்துரைப்பர். இகழுநர் இகழா இளநாள் அமையம் என்ற அழகிய சொல்லாட்சி இளவேனிலினும் அழகிதாய் அமைந்துள்ளது. 
“இளவேனில் தொடங்கும் காலத்தில் திரும்பிவிடுவேன்” என்று நாள்குறித்துச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. தலைவன் வந்துவிடுவான் என்ற எதிர்பார்ப்பில் அவள் கண்களுக்கு மையிட்டுக் காத்திருக்கிறாள். அவன் வராததால், சோகப் பார்வையுடன் கண்ணீர் சொரிய சோர்ந்துபோயிருக்கிறாள் தலைவி.
15வாராமையின் புலந்த நெஞ்சமொடு
நோவல் குறுமகள் நோயியர் என் உயிர் என
மெல்லிய இனிய கூறி வல்லே
வருவர் வாழி தோழி
இந்த நேரத்தில் தோழி வருகிறாள். “இதோ சீக்கிரம் அவர் வந்துவிடுவார்” என்கிறாள். அதுமட்டுமா? தலைவியின் துன்பத்தை மாற்ற இனிய மொழிகளைக் கூறுகிறாள். “இந்தா பார், அவர் வரும்போதே, ‘நான் வரலேன்’னு ரொம்ப வருத்தப்பட்டுட்டியோ? (வாராமையின் புலந்த நெஞ்சமொடு) - வருத்தப்படாத குட்டி’மா (நோவல் குறுமகள்!) - நான் வேணும்’னா என் தலையில நாலு கொட்டு கொட்டிக்கவா? (நோயியர் என் உயிர்)’ அப்படீன்’னு செல்லமாக் கொஞ்சிக்கிட்டே வருவார் (மெல்லிய இனிய கூறி)” என்று தோழி, தலைவியைச் சிரிக்கவைத்து ஆற்றுப்படுத்த முயல்கிறாள். 
பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
20பொதியின் செல்வன் பொலம் தேர்த் திதியன்
இன் இசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரே
“தலைவன் சென்றிருக்கும் இடம் என்ன அருகிலேயா இருக்கிறது? திதியன் தெரியுமா உனக்கு? பொதிகை மலைத் தலைவன் – பொன்னாலேயே செய்யப்பட்ட தேரைக் கொண்டவன் – பெரிய வில் வீரன் – அண்மையில்கூட எதிர்த்து வந்த பகைவரைப் போரிட்டு வீழ்த்தியவன் – தன் வெற்றியை இன்னிசைக் கருவிகளை முழக்கிக் கொண்டாடியவன் – அந்தக் கருவிகளின் ஒட்டுமொத்த ஓசையைப் போன்ற ஓசையுடன் மலை உச்சியிலிருந்து விழும் அருவிகளையுடைய காடுகளைத் தாண்டிச் சென்றிருக்கிறாரே!” என்கிறாள் தோழி.
தலைவி இன்ன ஊரைச் சேர்ந்தவள் என்று கூறுவதற்குப் பாடலில் சான்றுகள் இல்லை. ஆனால், பாடலை எழுதியவன் பாண்டிய அரசன். எனவே, தலைவி மதுரையைச் சேர்ந்தவள் என நம்ப இடமிருக்கிறது. இந்த மன்னன் பொதிகைமலைப் பகுதியை ஆண்ட திதியன் என்ற குறுநில மன்னனுக்கு இனிய நண்பன் என்பர். எனவே, பாண்டியன் திதியனைப் பற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறான் எனலாம். இந்தப் பொதிகை மலை என்பது இன்று அகத்தியர் மலை எனப்படும் பகுதி என்பர். இன்றைய திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் மேற்கு எல்லையை ஒட்டிய மலைப் பகுதி இது. புகழ்பெற்ற குற்றால அருவிகள் இந்த மலையில்தான் இருக்கின்றன. எனவே, பாடலில் கூறப்பட்டுள்ள கல்மிசை அருவி இந்த அருவிகளாக இருக்கவேண்டும். இந்தக் காட்டுப் பகுதியைத்தான் தலைவன் தாண்டிப் போயிருக்கிறான். எனவே அவன் மதுரையிலிருந்து தென்மேற்காகப் புறப்பட்டு, இந்த மலைக்கு வந்து காடுகளைக் கடந்து போயிருக்கவேண்டும். அது அவனை மேற்குக் கடல்பகுதிக்குக் கொண்டுசென்றிருக்கும். மேற்குக் கரையில் கரையிறங்கிய யவனர்கள், பாலக்காட்டுக் கணவாய் வழியாகத் தமிழ்நாட்டுக்குள் வந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், கொற்கையின் முத்துக்களை விற்பதற்கு அத்துணை தொலைவு செல்லாமல், கொற்கையிலிருந்து நேர் மேற்கே சென்று, ஆரியங்காவு எனும் கணவாய் வழியாக மேற்குக் கரையை அடைய ஒரு பெருவழி இருந்திருக்கலாம். அந்த வழியில் சென்று, கடற்கரைப் பட்டினம் அடைந்து, அங்கே வணிகத்தின் மூலம் பொருள் ஈட்டத் தலைவன் சென்றிருக்கலாம். ஆப்பிரிக்காவில் உள்ள செங்கடல் பகுதியிலிருந்து நேர் கிழக்கே இந்தியாவுக்கு வந்தால் பொதிகை மலைப் பக்கம் வரலாம். சீனாவுக்குச் செல்லும் Silk route என்று அழைக்கப்படும் பட்டு வணிகவழி ஒன்று அப்படி இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. மேலும், அரேபிய தீபகற்பத்தை ஒட்டிக் கடற்கரை வழியேயும் ஒரு வழித்தடத்தில் மேற்குக் கடற்கரையில் உள்ள பட்டினம் ஆகிய ஊர்களுக்குக் கப்பலில் யவனர் வந்ததாகத் தெரிகிறது. எனவே, தலைவன் மிளகு, முத்து, பட்டு ஆகிய பொருள்களின் வணிகனாக இருந்திருக்கலாம். 
 
அருஞ்சொல் விளக்கம்
1. கஞல் – விளங்கு, சிறப்புறு – shine forth, be prominent
பூக்கள் அழகிதாகவும், பொலிவுள்ளதாகவும், புதுக்கருக்குடனும் இருப்பதையே பெரும்பாலும் கஞலிய எனப் புலவர்கள் வருணிக்கின்றனர்.
பன்மலர் காயாம் குறுஞ்சினை கஞல – நற்.242/4
பூ மலர் கஞலிய பொழிலகந்தோறும் – நற் 348/5
புதுமலர் கஞல – புறம் 147/8
போன்ற வழக்காறுகளினின்றும் புதிதாய்த் தெரிந்துகொள்ள ஒன்றும் இல்லை.
 சேவல்
போர்புரி எருத்தம் போல கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல்  – அகம் 277/16
என்ற அடிகளைக் கவனியுங்கள். சண்டையிடும் சேவலின் கழுத்து மயிரைப் போல பலாசம் என்று அழைக்கப்படுகிற புரச மரத்தின் (Butea frondosa) பூக்கள் கஞல்கின்றன என்று இங்கே கூறப்படுகிறது. இது உருவம், நிறம் ஆகியவற்றுக்கு மட்டும் அல்ல, தோற்றத்துக்கும் உவமை ஆகிறது எனக் கொள்ளலாம். எனவே கஞலுதல் என்பது பூக்கள் அன்றலர்ந்த சிலிர்ப்புடன் காட்சியளித்தலே ஆகும்.
   
2. கொழுது – கொத்து, குடை, கிழி, peck, drill through, tear
உழவர்கள் உழும்போது, கலப்பையை நன்கு அழுத்திப் பிடிப்பர். அப்போது, கலப்பை மண்ணை நெடுகக் கிளறிவிட்டவாறு செல்லும். இதைச் செய்வது கலப்பையில் பொருத்தப்பட்டுள்ள கூரான இரும்புப் பட்டை. இதற்குக் கொழு என்று பெயர். கொழு செய்யும் வேலை மண்ணைக் கொழுதுவது. 
நீண்ட கூந்தலையுடைய மகளிர், தலைக்குக் குளித்துத் துவட்டிய பின்னர், சிக்கு எடுக்கவும், மயிரை நன்கு உலர்த்தவும், தலையை இலேசாகப் பின்னால் சாய்த்து, கைவிரல்களைப் பின்னந்தலை உச்சியில் நுழைத்து ஊடுறுவி, அப்படியே நான்கு விரல்களையும் கூந்தலுக்குள் இழுத்துச் செல்வர். அதுவே கொழுதுதல். 
இந்த இரண்டு கொழுதுதல்களும் ஒரு பயன் கருதிச் செய்யப்படுவன. ஒரு சோளத் தோட்டத்தின் வழியே செல்கிறீர்கள். இடுப்பளவே வளர்ந்திருக்கும் கதிர்விடாத நெருக்கமான பயிர்களின் கொழுவிய தோகைகள் நான்கு பக்கங்களிலும் வளைந்து நிற்கின்றன. காற்றில் தலையசைத்து உங்களை வரவேற்கும் அந்தப் பயிர்களின் ஊடே உங்கள் கைவிரல்களை விட்டு ஆசையாய்க் கோதிவிடுகிறீர்கள். இதுவும் கொழுதுதல்தான். ஆசையாகவும், சிலசமயம் விளையாட்டாகவும் நாம் இதனைச் செய்வோம். 
ஆற்றில் குளிக்கச் செல்லும்போது அருகிருக்கும் அடும்பு மலர்களை ஆசையாய்க் கொழுதிவிட்டுச் செல்லும் அழகு மங்கையரையும், இலுப்பம் பூவை மென்று அதக்கிக்கொண்டே, கொன்றையின் குழற்பழங்களை இளப்பமாகக் கொழுதிவிட்டுச் செல்லும் எண்கினங்களையும், தலைவனுக்காகக் காத்திருக்கும்போது, பொறுமை இழந்துபோய், என்ன செய்வதென்று தெரியாமல், தாழ்ந்து இருக்கும் ஞாழல் கிளையில் பூத்திருக்கும் கொத்து மலர்களைக் கொழுதிவிட்டுப் பொழுதுபோக்கும் தலைவிகளையும், காதலிக்குக் பேறுகாலக் கூடுகட்ட கரும்புப்பூவைக் கொழுதிக் கொண்டு வரும் குருவிகளையும் சங்க இலக்கியங்களில் நிறையக் காணலாம். இதோ, இவற்றைத் தேடிப்பிடித்துப் படித்து மகிழுங்கள்.
மென் தளிர்க் கொழுங் கொம்பு கொழுதி – மதுரைக். 586-7
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற். 9/10
ஞாழல் அஞ்சினைத் தாழ் இணர் கொழுதி, முறி திமிர்ந்து உதிர்த்த கையள் – நற். 106/3,4
குரீஇ – ஈனில் இழைஇயர் - தீங்கழைக் கரும்பின் – நாறா வெண்பூக் கொழுதும் – குறுந். 85/2-5
இருங்குயில் .. மாச்சினை – நறுந்தாது கொழுதும் – குறுந். 192/2-4
அடும்பின் - தார்மணி அன்ன ஒண்பூக் கொழுதும் - ஒண்தொடி மகளிர் – குறு.243/1-2
பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்திற்கோ – கலி. 76/7
கொன்றை அஞ்சினைக் குழற்பழம் கொழுதி
வன்கை எண்கின் வயநிரை பரக்கும் – அகம் 15/15,16
குறுந்தொடி மகளிர் .. பழனப் பைஞ்சாய் கொழுதி – அகம்.226/4,5
பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கின் அப்
போது அவிழ் அலரி கொழுதித் தாது அருந்து
அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை
செங்கண் இருங்குயில் நயம்வரக் கூஉம் – அகம் 229
   
அன்றலர்ந்த மலர்க் குவியல்களை ஆசையாய்க் கொழுதிவிட்ட மாங்குயில்கள், இளவேனில் ஏக்கத்துடன் இன்துணையை அழைக்கும் இரட்டைக் கூவல்களை இந்தப் பாடலில் கண்டோம். 
3. கறங்கு – ஒலி, சுழல், sound, whirl
காற்றாடியின் சுழற்சியைக் கறங்குதல் என்பர். காற்றாடியையே கறங்கு என்பதும் உண்டு. ஆனால் நம் பாடலில் வருவது ஒலித்தல் என்ற பொருளில்தான். ஒலித்தல்களில் எத்தனையோ விதங்கள் இருக்கும்போது கறங்குதல் என்றால் என்ன?
அருவி விழும் ஓசை கறங்குதல் எனப்படுகிறது. ஆனால், அருவி விழும் ஓசை அதன் உயரம், அது விழும் இடம், கொண்டுவரும் நீரின் அளவு ஆகியவற்றைப் பொருத்து மாறும். தேரில் பொருத்தியிருக்கும் மணிகள், ஆநிரையின் மாடுகளின் கட்டப்பட்டிருக்கும் மணிகள் ஆகியவை எழுப்பும் ஓசையும் கறங்குதல் எனப்படும். ஆனால், இது மணியின் உலோகம், அதன் அளவு ஆகியவற்றைப் பொருத்து மாறும். 
சிதடி, சிள்வீடு எனப்படும் சில்வண்டு அல்லது சுவர்க்கோழி அமைதியான இரவில் எழுப்பும் ஒலியைக் கேட்டோருக்கு ஒரு செய்தி – அதுதான் கறங்குதல்.
http://www.youtube.com/watch?v=mah26og11ms அல்லது http://soundbible.com/920-Cicada.html ஆகிய தளங்களில் இதனைக் கேட்கலாம். (Ctrl + Click – செய்க)
மழைக்கால இரவுகளில் தவளையின் கூட்டுக்குரல்களைக் கேட்டோருக்கும் ஒரு செய்தி – அதுவே கறங்குதல். 
கிராமங்களில் தப்பட்டை அல்லது உறுமிக்கொட்டு ஆகியவற்றின் ஓசையும் கறங்குதலே. சங்க இலக்கியங்களில் உறுமி மேளம் என்பது அரிக்கூட்டு இன்னியம் எனப்படுகிறது. அரி என்பது தவளை. தவளைகள் மொத்தமாக எழுப்பும் ஓசை கறங்கு இசை எனப்படுகிறது.
கீழ்க்கண்ட இலக்கியச் சான்றுகளைத் தேடிப் படித்துப் பாருங்கள்.
அரிக்கூட்டு இன்னியம் கறங்க – குறி.193
மான்தோல் சிறுபறை கறங்க – மலை.321
தட்டைப்பறையின் கறங்கும் நாடன் – குறு 193/3
கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய – பதி. 58/13
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து – அகம் 89/6
கூடுகொள் இன்னியம் கறங்க – அகம் 98/14
ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க – அகம் 344/8
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் – புறம் 158/3
கறங்கு மணி நெடுந்தேர் – புறம் 200/11
   

ஆக்கம்: முனைவர் திரு பாண்டியராஜா பரமசிவம், மின்னஞ்சல் முகவரி: <pipiraja@gmail.com> 
 
--Geetha Sambasivam (பேச்சு) 12:23, 16 பெப்ரவரி 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 1 ஜூன் 2015, 12:12 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,474 முறைகள் அணுகப்பட்டது.