சங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 29

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அகநானூறு
பாடல்  29 - விரிவுரை - விளக்கப்படங்களுடன்
பாடியவர் : வெள்ளாடியனார்
திணை : பாலைத் திணை
துறை :: வினை முற்றி மீண்ட தலைமகன் ‘எம்மையும் நினைத்தறிதிரோ’ என்ற தலைமகட்குச் சொல்லியது.
# 29 - மரபு மூலம் – நெஞ்சம் நின் உழையதுவே
தொடங்குவினை தவிரா  அசைவில் நோன்தாள்,
கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த
தாழ்வி லுள்ளந் தலைத்தலைச் சிறப்பச்
5செய்வினைக் ககன்ற காலை, எஃகுற்
றிருவே றாகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக்  காண்டொறும்
மேவல் தண்டா மகிழ்நோக் குண்கண் 
நினையாது கழிந்த வைக லெனையதூஉம்
10வாழலென் யானெனத் தேற்றிப் பன்மாண்
தாழக் கூறிய தகைசால் நன்மொழி
மறந்தனிர் போறி ரெம்மெனச் சிறந்தநின்
எயிறுகெழு துவர்வாய் இன்னகை யழுங்க
வினவ லானாப் புனையிழை கேளினி
15வெம்மை தண்டா எரியுகு பறந்தலை
கொம்மை வாடிய வியவுள் யானை
நீர்மருங் கறியாது  தேர்மருங் கோடி
யறுநீ ரம்பியின் நெறிமுத லுணங்கு
முள்ளுநர்ப் பனிக்கு மூக்கருங் கடத்திடை
20யெள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு
நாணுத்தளை யாக வைகி மாண்வினைக்
குடம்பாண் டொழிந்தமை யல்லதை,
மடங்கெழு நெஞ்சம் நின்னுழை யதுவே
# 29 - சொற்பிரிப்பு மூலம்  – நெஞ்சம் நின் உழையதுவே
தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம்படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச்
5செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று
இருவேறு ஆகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறு வடி போலக், காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் 
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்
10வாழலென் யான்" எனத் தேற்றிப், "பல் மாண்
தாழக் கூறிய தகைசால் நன் மொழி
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை!- கேள் இனி-
15வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை
20எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!
அருஞ்சொற் பொருள் 
அசைவு = தளர்ச்சி; நோன் = வலிமையான; தாள் = முயற்சி; மறுகுவது = வருந்துவது; இடம்படின் = இடப்பக்கம் விழுந்தால்; மிசை = உண்ணு; தலைத்தலை = மென்மேலும்; எஃகு = கத்தி; மாவின் நறுவடி = மாவடு; மேவல் = மேவுதல், பொருந்துதல் ; தண்டா = குறையாத; வைகல் = நாள்; துவர் = பவளம், சிவப்பு; அழுங்க = கெட; பறந்தலை = பாழ்நிலம்; கொம்மை = பருத்தது; இயவுள் = வழிச்செல்லும்; தேர் = பேய்த்தேர், கானல்நீர்; அம்பி = ஓடம்; உணங்கு = வெயிலில் காய்ந்திரு; பனிக்கும் = வருத்தும்; கடத்திடை = கடத்து இடை = காட்டுவழியில்; நாணு = மானம்; தளை = கட்டு; ஆண்டு = அங்கு; உழையது = அருகிலிருந்தது.
பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். போகும்போது, “உன்னையே நினைத்துக்கொண்டு இருப்பேன்” என்று உறுதி கூறிச் செல்கிறான். பின்னர், பொருள் சேர்த்துக்கொண்டு வீடு திரும்புகிறான். வந்தவனை, “என்னை மறந்துவிட்டுத்தானே இத்தனை நாள் அங்கு இருந்தீர்” என்று “உர்” என்ற முகத்துடன் கேட்கிறாள் தலைவி. அதற்கு விடையாகத் தலைவன் கூறும் கூற்றே பாடலாக அமைந்துள்ளது.
அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்
“தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம்படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச்
5செய்வினைக்கு அகன்ற காலை,
தொடங்கிய வினையைக் கைவிடாத-தளர்ச்சியற்ற வலிமையான முயற்சியை உடைய -
(படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்து
விழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த,
தாழ்வுணர்ச்சி இல்லாத உள்ளம் மென்மேலும் மிகுந்து விளங்க,
பொருளீட்டும் செயலுக்குப் பிரிந்து சென்ற நேரத்தில்,
புலி மேற்கொள்ளும் ஒரே வினை வேட்டையாடுவதுதான். வேட்டையாடுவதற்கு முன் நன்கு திட்டமிட்டு, வாகான நல்ல இடம் பார்த்து, வாய்க்கின்ற பொழுதுக்காகக் காத்திருந்து – பின்பு பாய்ச்சலில் புறப்பட்டுவிட்டால், விடாது துரத்தி, தன் வேட்டையை வீழ்த்தும் வரை தன் முயற்சியில் தளராத புலியின் முனைப்புதான் தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள். அந்தப் புலியைப் போல, தலைவனும் பொருள்தேடும் வினையில் இறங்கிவிட்டால் அவனது தீவிரத்தை யாராலும் குறைக்கமுடியாது. தான் வேட்டையாடியது களிறே என்றாலும், தான் பசியால் கிடந்து தவித்துப்போய் இருந்தாலும், வீழ்த்திய இரை இடப்பக்கம் வீழ்ந்தால் அதனை உண்ணாத புலியைப் போல, தன் கொள்கைக்கு முரணான வழியில் பெருஞ்செல்வமே கிடைத்தாலும், தான் எப்பேற்பட்ட வறிய நிலையில் இருந்தாலும், தலைவன் அப் பொருள்மீது நாட்டம் கொள்ளமாட்டான். அப்பேர்ப்பட்ட புலியைப் போன்ற உள்ளம் என்னாமல், அந்தப் புலியினும் சிறந்த உள்ளம் என்ற கூற்று தலைவனது பெருமையை இன்னும் பன்மடங்காக்குகிறது. விரும்பியது கிட்டினால் வெற்றிப் பெருமிதம் – அது கிட்டாவிட்டால், சோர்ந்து போவதில்லை – இனி அடுத்த முயற்சி – என்று குன்றாத ஊக்கத்துடன் இருக்கும் உள்ளமே தாழ்வு இல் உள்ளம். ஒவ்வொரு முறையும், முன்னர் பொருள்தேடச் செல்லும்போது இருந்த ஊக்கத்தைக் காட்டிலும் இன்னும் அதிகமான ஊக்கத்துடன் செயல்படும் உந்துணர்வு – அதுவே தலைத்தலைச் சிறத்தல். தலைவன் எத்துணை உற்சாகத்துடன் பொருளீட்டப் புறப்பட்டுச் செல்கிறான் பாருங்கள்!
 -‘எஃகு உற்று
இருவேறு ஆகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறு வடி போலக், காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் 
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்
10வாழலென் யான்’ - எனத் தேற்றிப்,
- ‘கத்தியால் வெட்டுப்பட்டு
இரண்டு பகுதியாக ஆன, நன்கு புலனாகும் அழகினையுடைய
மாவின் நறும் பிஞ்சு போல, காணுந்தோறும்
ஆசை குறையாத மகிழ்ந்த நோக்கினை உடைய மைதீட்டிய கண்களை
நினையாது கழிந்த நாளில் சிறிதுநேரங்கூட
வாழமாட்டேன் நான்’ - என்று ஆறுதல் கூறி,
பொருளீட்டப் புறப்படும் தறுவாயில், தலைவன் தலைவியின் முகத்தைப் பார்க்கிறான். அவள் கண்களில் தெரிந்த ஏக்கத்தைப் புரிந்துகொண்ட தலைவன் “எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் இந்தக் கண்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே! இப்போது இந்தக் கண்களில் தெரியும் ஏக்கத்தை அல்ல – எப்போதும் உன் கண்களில் இருக்கும் அந்தப் பூரிப்பை நினைத்துக்கொண்டே இருப்பேன்” என்று சொல்லி அவளைத் தேற்றுகிறான். மாவடுவை வெட்டிப் பிளந்து அருகருகே வைத்தது போன்ற அழகுக் கண்கள் என்று அவள் கண்களின் அழகைப் போற்றுகிறான். 
           
 
அந்தக் கண்களை நினையாது கழிந்த நாளில் சிறிதுநேரங்கூட வாழமாட்டேன் என அவன் கூறுவது, அந்தக் கண்களின் நினைப்புத்தான் அவனை வாழவைக்கிறது என்ற பொருள் தருகிறதன்றோ! 
        பல் மாண்
தாழக் கூறிய தகைசால் நன் மொழி
மறந்தனிர் போறிர் எம்” எனச் சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை!- கேள் இனி-
-பல்வேறு மாண்புகளும்
தாழ்ந்துபோகும்படி கூறிய உயர்வான நல்ல சொற்களை
மறந்துவிட்டீர் போலத் தோன்றுகிறீர் எனக்கு” எனச் சிறந்த உனது
பற்கள் சிறந்து விளங்கும் பவள வாயில் இனிய புன்னகை கெடும்படியாகக்
கேட்டுக்கொண்டே இருக்கிறாயே, அழகிய அணிகளை உடையவளே! கேட்பாயாக, இப்போது
தலைவன் தலைவியிடம் பேசும்போது, அவனது பல்வேறு மாண்புகளும் தாழ்ந்துவிட்டன என்று தலைவி கூறுவதாகக் காண்கிறோம். தலைவனின் தொடங்கு வினை தவிராத மாண்பு, அசைவு இல் நோன் தாள் உள்ள மாண்பு, கிடந்து உயிர் மறுகுவதாயினும், இடம்பட்டு வீழ் களிறை மிசையாத புலியினும் சிறந்த மாண்பு, தாழ்வு இல் உள்ளம் கொண்டுள்ள மாண்பு ஆகிய அத்தனை மாண்புகளும் தாழ, தலைவன் தாழ்ந்துபோகிறான் – தன் தலைவியைத் தேற்ற. அதுதானே சிறந்த இல்லறம். அவன் தாழ்ந்து பேசும்போது அவன் கூறும் மொழி தகைசால் நன்மொழி ஆகிறது. அவன் தன் மாண்பை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டு, “இந்தா புள்ள, நான் போயிட்டு வர்ரேன், வர கொஞ்சம் நாளாகும்” என்று சொல்லியிருந்தால், “வெளியூருக்குப் போகும்போது கூட மனுசனுக்கு இத்தனை வீராப்பு” என்று கழுத்தை ஒடித்திருப்பாள் அவள். மாறாக, அவன் இறங்கிவந்து பேசும்போது அவன் பேச்சு இனிக்கிறது இவளுக்கு. “ ‘நினையாது கழிந்த வைகல் எனையதும் வாழலென் யான்’ என்று கூறிச் சென்ற நான், இப்போது திரும்பி வந்து உயிரும் சதையுமாக உன் முன் நிற்கிறேனே, இதிலிருந்து தெரியவில்லையா, நான் உன்னை நினைத்துக்கொண்டுதான் இருந்தேன் என்று” என்று அவன் அவளை மடக்கியிருக்கலாம். மாறாக, “இந்தச் சிவந்த வாயின் சிரிப்பை விழுங்கிக்கொண்டு, திரும்பத் திரும்ப, ‘மறந்தனிர், மறந்தனிர்’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாயே” என்று பொறுமையுடன் அவளுக்குப் பதிலிறுக்க முனைகிறான். விடாது கேட்டுக்கொண்டிருப்பதுதான் வினவல் ஆனா என்பது. இன்று அவள் பூண்டிருக்கும் நகைகளெல்லாம் முன்பு அவன் சேர்த்துவந்த செல்வத்தினால்தானே என்ற பொருளில் புனையிழை என்று அவளை விளிக்கிறான். பவளம் கோத்த நகை அணிந்திருக்கிறாய், உன் பவள வாயில் நகை இல்லையே என்று அவன் கேட்பதுபோல் இல்லையா? 
15வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை
வெம்மை குறையாத நெருப்பு கொட்டும் பாழ்நிலத்தில்
(தன் உடல்) பருமன் வற்றிப்போன தலைமைப் பொறுப்புள்ள யானை
நீர் இருக்குமிடம் அறியாது, கானல்நீர் தோன்றுமிடமெல்லாம் ஓடி,
வற்றிப்போன ஆற்றில் உள்ள ஓடத்தைப் போல, வழிநடுவே வாடிக்கிடக்கும்,
நினைத்துப்பார்ப்பவரையும் நடுக்கும் ஊக்கம் அழிக்கும் வறும் காட்டினில்
பகலவனின் சுடுகதிர்கள் பாலைநிலத்தில் தீயாய் இறங்குகின்றன என்பதையே எரி உகு பறந்தலை என்கிறார் புலவர். உகுதல் என்பது சொரிதல், உதிர்தல். யானையின் உருண்டு திரண்ட உடல் வாடி வற்றிப்போய்விட்டது என்பதையே கொம்மை வாடிய யானை என்கிறார் அவர். நீரற்ற ஆற்றில், ஓடம் நிமிர்ந்து நிற்காது. மாறாகச் சாய்ந்து படுத்திருக்கும். அதைப் போல யானை இறந்துகிடக்கிறது.
   
20எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!
(பிறர்) இகழ்வதைப் பொறுக்காத பொருளீட்டும் விருப்பத்துடன்
மான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக
(என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய
பேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது.
பொருள்மீது கொண்ட விருப்பத்தினால் அல்ல – பொருள் இல்லை எனில் பிறரின் இகழ்ச்சிப் பேச்சுக்கு ஆளாவோமே என்ற அச்சத்தினாலேயே நான் பொருளீட்டப் போனேன் என்கிறான் தலைவன். என்னை அங்கே கட்டிப்போட்டது பொருளாசை அல்ல – எள்ளுவோர் முன்னே நாணி நிற்கக்கூடாது என்ற உறுதிப்பாடு என்கிறான் தலைவன். “என் ஒடம்புதான் அங்க இருந்துச்சேயொழிய(உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை), இந்த முட்டாப்பய மனசு (மடம் கெழு நெஞ்சம்) ஒங்கிட்டயேதான்’மா இருந்துச்சு(நின் உழையதுவே)” என்ற தலைவனின் குழைவுப் பேச்சு எந்த இறுகிய மனதையும் இளக்கிவிடாதா?
தலைவனின் உள்ளுறை
தலைவன் தான் சென்ற பாதையின் கடுமையைப் பற்றிக் கூறுவது தலைவியை வெருட்டுவதற்கோ அல்லது அவள் இரக்கத்தைப் பெறுவதற்கோ அல்ல. வேறு புல நன்னாட்டில், அவன் ‘எப்படியெல்லாமோ’ இருந்திருக்கலாம். ஆனால் தலைவியின் நினைப்பு ஒன்றனையே கைவிடாத கடும் நோன்பு அவன் பூண்டிருந்தான் என்று குறிப்பால் தலைவிக்கு அவன் உணர்த்த விரும்பினான். வெம்மை குறையாத தீ உமிழ் பறந்தலையில், தன் கொம்மை வாட, யானை பேய்த்தேரையும் நீர் என்று நினைத்து ஓடி ஓடிக் களைத்துப்போகிறது. ஆனால், தொலைநாட்டில் பிரிவுத்துயரின் வெம்மையைப் பொறுக்கமாட்டாமல், தன் உயர்பண்புகள் மெலிந்துபோக, மாயக்காரிகளின் மயக்குவிழிகளைத் தேடித்தேடி அவன் ஓடிக் களைக்கவில்லை. அவனுக்கு உயிர் தரும் நீர் மருங்கு அவனுக்குத் தெரியும். அதை விட்டு வேறு தேர் மருங்கு அவன் ஓடவில்லை. அதனால் அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்காமல் உருப்படியாக வீடு வந்து சேர்கிறான். இவ்வாறு உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கரும் கடத்தில் உணங்கிக் கிடக்கும் இளைஞர்கள் எத்தனையோ பேர் அங்கிருக்க, நாணுத் தளை ஆக அவன் அங்கே தங்கியிருந்து வந்திருக்கிறான் என்பதையே உள்ளுறையாகத் தலைவன் தலைவிக்கு உணர்த்துகிறான்.
Double negative – mathematical logic
தலைவன் தலைவியை விட்டுப் பிரிகின்ற போது என்ன சொல்கிறான்?
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் 
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்
10வாழலென் யான்’ - எனத் தேற்றிப்,
‘நினையாது கழிந்த வைகல் – எனையதூஉம் வாழலென்’ – இங்கே இரண்டு எதிர்மறைக் கூற்றுகள் உள்ளன. ‘வைகலும் உனை நினைத்து வாழ்வேன்” என்று நேர்முறைக் கூற்றுக்களாகக் கூறியிருக்கலாம். அதைவிடுத்து இதனை இரண்டு எதிர்மறைக் கூற்றுக்களாய்த் தலைவன் அமைக்கிறான்.
அது எனக்குத் தெரியும்.
அது எனக்குத்தான் தெரியும் – வேறுபாடு என்ன?
அது எனக்குத் தெரியும். – வேறு ஒருவருக்கும் தெரிந்திருக்கலாம்.
அது எனக்குத்தான் தெரியும் – என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதில் என்னைத் தவிர என்பது ஒரு எதிர்மறை; வேறு எவருக்கும் தெரியாது என்பது அடுத்த எதிர்மறை. இங்கே அது எனக்குத்தான் தெரியும் என்னும்போதை விட என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்னும்போது அதிக உறுதிப்பாடு தெரிகிறது போல் இருக்கிறது இல்லையா? 
ஒவ்வொரு நாளும் இந்த மருந்தைச் சாப்பிட்டால்தான் நலமுடன் இருக்கலாம். மருத்துவர் இதனைச் சொன்னபின்பு இன்னொன்றும் கூறுவார்.
அப்படி ஏதேனும் ஒருநாள் இந்த மருந்தைச் சாப்பிடவில்லையென்றாலும் நலமுடன் இருக்கமுடியாது. 
வைகலும் இந்த உண்கண்ணை நினைந்து கழித்தேதான் நிறைவாக வாழ்வேன் என்று கூறினாலும்,
அப்படி ஏதேனும் ஒரு வைகல் இந்த உண்கண்ணை நினையாது கழிந்தால் சிறிதளவும் வாழமாட்டேன் என்று சொன்னால்தான் சொன்னது நிறைவுறும். 
உண்கண் நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் வாழலென் என்பதில் உள்ள அழுத்தத்தின் முழுப்பொருளை உணரச் சிறிது கணிதமுறைத் தருக்கம் (mathematical logic) தெரிந்திருந்தால் எளிதாகும்.
A => B = B’ => A’ (A, B கூற்றுகள்; A’, B’ அவற்றின் எதிர்மறைக் கூற்றுகள்) => என்பது implies


ஆக்கம்: முனைவர் திரு பாண்டியராஜா பரமசிவம், மின்னஞ்சல் முகவரி: <pipiraja@gmail.com>  
--Geetha Sambasivam (பேச்சு) 12:09, 6 மே 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 1 ஜூன் 2015, 12:18 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,788 முறைகள் அணுகப்பட்டது.