சங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 42

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அகநானூறு
பாடல்  42 - விரிவுரை - விளக்கப்படங்களுடன்
பாடியவர் : கபிலர்
திணை :  குறிஞ்சித் திணை
துறை :: தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.
# 42 - மரபு மூலம் – உள் பெய்த உவகை மழை
மலிபெயற் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயலரு நிலைஇய பெயலேர் மணமுகைச்
செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட்
டளிரேர் மேனி மாஅ யோயே
5நாடுவறங் கூர நாஞ்சிற் றுஞ்சக்
கோடை நீடிய பைதறு காலைக்
குன்றுகண் டன்ன கோட்ட யாவையுஞ்
சென்றுசேக் கல்லாப் புள்ள வுள்ளில்
லென்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்
10பெரும்பெயல் பொழிந்த வேம வைகறைப்
பல்லோ ருவந்த வுவகை யெல்லா
மென்னுட் பெய்தந் தற்றே சேணிடை
யோங்கித் தோன்று முயர்வரை
வான்றோய் வெற்பன் வந்த மாறே
# 42 - சொற்பிரிப்பு மூலம் – உள் பெய்த உவகை மழை
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரும் நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழும் கடை மழைக் கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே
5நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்சக்
கோடை நீடிய பைது அறு காலைக்
குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசிப்
10பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறைப்
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்த மாறே
அருஞ்சொற் பொருள் 
கலித்த = தழைத்த; பித்திகம் = பிச்சிப்பூ,  jasminum grandiflorum; கொயல் = கொய்தல்; வெரிந் = முதுகு; உறழும் = போன்று இருக்கும்; நாஞ்சில் = கலப்பை; பைது = பசுமை, ஈரம்; சேக்கும் = தங்கும்; என்றூழ் = வெப்பம், வெயில்; வீசி = வாரி வழங்கி; சேண் இடை = தொலை தூரத்தில்;
பாடலின் பின்புலமும் பாடல் சுருக்கமும்
‘வெகு சீக்கிரத்தில் உன் வீட்டுக்கு மணம்பேச வருவேன்’ என்று தலைவன் சொல்லிச் செல்கிறான். தலைவியும் ஆசையுடன் காத்திருக்கிறாள். தலைவன் வரக்காணோம். தலைவியின் தோழிக்குப் பயம் பிடித்துக்கொள்கிறது. ‘வராமலிருந்துவிடுவானோ’ என்று கவலைப்படுகிறாள். வாட்டத்தினால் நெஞ்சம் வறண்டுவிடுகிறது. ஒருநாள் மணம்பேசும் ஏற்பாடுகளுடன் மணமகன் தலைவியின் வீடு நோக்கி வருவதைக் காண்கிறாள் தோழி. ‘வழக்கத்துக்கும் மாறாக கோடை நீண்டுகொண்டு செல்ல, பயிர்பச்சை எல்லாம் பசுமை இழக்க, உயர்ந்த கரைகளைக் கொண்ட குளங்குட்டைகள் உலர்ந்து வெடிக்க, பறவைக்கூட்டங்கள் பறந்துசென்றுவிட, அகன்ற குளங்கள் எல்லாம் அனல்காடாய் மாறிவிட்ட நிலையில், குளிர்ந்த நீரால் நிறைந்துவழியும்படி ஒரு மழை கொட்டித்தீர்த்தால், அதற்குப் பின்னர் ஊர் முழுதும் பொங்கிப் பெருகுமே ஓர் உவகை வெள்ளம் – அந்த உவகை எல்லாம் என் உள்ளத்துக்குள்ளே பாய்ந்தது போல் இருக்கிறது – நம் தலைவனின் வரவுகண்டு’ என்று தலைவியிடம் தோழி கூறுகிறாள்.
அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரும் நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே!
மிகுந்த மழையால் தழைத்த மழைக்காலப் பிச்சிக் கொடியின்
கொய்வதற்கு முடியாத நிலையையுடைய மழைக்கு எழுச்சிபெற்ற மணமுள்ள அரும்பின்
சிவந்த பின்புறத்தைப் போன்ற வளமையான, குளிர்ந்த கடைக்கண்ணையும்
தளிரைப் போன்ற அழகிய மேனியையும் உடைய மாநிறத்தவளே!
   
தலைவன் மணம்பேசத் தாமதித்ததனால் தலைவியின் உள்ளம் வற்றிய குளமாய் வறண்டுபோய் இருந்திருந்தால் அவளின் கண்கள் கொழுங்கடை மழைக்கண்களாய் இருந்திருக்க மாட்டா. அவளின் மேனியும் பசப்பூர்ந்து இருந்திருக்குமேயன்றி தளிரேர் மேனியாய் இருந்திருக்காது. எனவே கோடையின் வறட்சி தோழியின் உள்ளத்தில் மட்டும் இருந்திருக்கிறதேயொழிய, தலைவி நம்பிக்கையுடனும் ஆசையுடனும் தலைவன் வரவை எதிர்நோக்கி இருந்திருக்கிறாள். இது அவளின் காதலின் ஆழத்தைக் காட்டுகிறது. 
பிச்சிக்கொடி மழைக்காலத்தில் தழைத்து வளரும். வந்ததுவோ மலி பெயல். எனவே செழித்துப் படர்ந்திருக்கிறது செம்முகைப் பிச்சி (கலித்த). ஆர் பெயலால் கலித்த பித்திகம் அரும்புகளை ஈன்றுதள்ளிவிட்டது. கொய்து மாளாத அந்தக் குவிந்த மொட்டுகள் மழை தந்த மகிழ்ச்சியால் மணம் நிறைத்து நிற்கின்றன. செழித்து வளர்ந்த அந்த மொட்டுகளின் சிவந்த மேனியைப் போல் இருக்கின்றனவாம், தலைவியின் கொழுத்த கடைக்கண்கள். நறுமணத்தை அடக்கியிருக்கும் அந்த மணமுகைகளைப் போல், தலைவியின் கொழுத்த கண்கள் குளிர்ச்சியை அடக்கியிருக்கின்றவாம் (மழைக்கண்). மலி பெயலில் கலித்த மாரிப் பிச்சிக்கொடியைப் போல் இருக்கிறது தலைவியின் தளிர் ஏர் மேனி. மாமை மின்னுகிற அந்த மாந்தளிர் மேனியாள் பசேலென்று பளபளக்கும் பச்சைக் கொடியைப் போல் இருக்கிறாள். 
ஓர் அழகிய பிச்சிக்கொடியையும் அதன் அரும்புகளையும் காட்டுவதன் மூலம் தலைவியின் உள்ளத்தின் நிலையை அருமையாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் கபிலர். இது குறிஞ்சித்திணை. உள்ளக் களிப்பும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடும் திணை.
தென்றல் வரும், சேதி வரும் – திருமணப் பேச்சின் தூது வரும்;
மஞ்சள் வரும், சேலை வரும் – மாலையும் மேளமும் சேர்ந்து வரும் –
என்று தலைவி உற்சாகமாய்க் காத்திருப்பதைக் காட்ட, புலவருக்கு முல்லைத் திணையின் மாரிப்பித்திகத்து மணமுகை கைகொடுக்கிறது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒன்றிரண்டு அரும்புகள் தோன்றியிருந்தால் அது நம்பிக்கை துளிர்க்கும் காட்சி. கொய்வதற்கும் முடியாத அளவுக்குக் கொள்ளை அரும்புகள் விட்டிருப்பது உள்ளத்துக் குதூகலத்தின் அடையாளம்(கொயலறு நிலைய). இது நீர்விட்டு வளர்த்த கொடி அல்ல – நிலவளத்தால் வளர்ந்து விட்ட அரும்பு அல்ல. கார் மழையால் கலித்து வளர்ந்த காட்டு முல்லை – மேல் மழையால் செழித்துப் பூத்த சிவப்பு முல்லை. தலைவி தானாக வளர்த்துக்கொண்ட காதல்கொடியில் தனித்தனியாய் தோன்றுகின்ற அரும்பு நிலையள் அல்லள்.  தலைவனின் அன்பு மழையில் நனைந்து, அவன் மேல் கொண்ட ஆசைமழையில் ‘குப்’-பென்று அரும்புவிட்டுக் கொயலரும் நிலையளானாள் தலைவி. இத்தனைக்கும் ‘சீக்கிரம் வருகிறேன்’ என்று அவன் சொல்லி நாட்களாகின்றன. சிறிதளவும் குன்றாத உவகையில் திளைத்துக் கிடக்கிறாள் அவள்.
மாறாக, அடுத்து வரும் வறண்ட காட்சி தோழியின் நட்பின் ஆழத்தைக் காட்டுகிறது. 
5நாடு வறங்கூர நாஞ்சில் துஞ்சக் 
கோடை நீடிய பைதுஅறு காலைக்
குன்று கண்டன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள உள்இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசிப்
10பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறைப்
நாட்டில் வறுமை மிக, கலப்பைகள் செயலற்று இருக்க
கோடை நீண்ட பசுமையற்ற காலத்தில் –
குன்றுகளைப் பார்த்தது போன்ற கரைகளையுடையவும், முற்றிலும்
பறவைகள் வந்து தங்குதல் இல்லாதனவும் ஆகிய, உள்ளே நீர் அற்ற
வெப்பமுடைய அகன்ற குளம் நிறையும்படி மிகுதியாகக் கொட்டிப்
பெரிய மழை பொழிந்த இன்பமிக்க விடியற்காலத்தில்
வீட்டின் வறுமையைக் காட்ட அடுப்படியில் பூனை தூங்குகிறது என்பார்கள். ஒரு நாட்டின் வறட்சியைக் காட்ட, அங்கு கலப்பைகள் தூங்குகின்றன என்கிறார் புலவர் (நாஞ்சில் தூங்க). உழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அன்றோ! ஆனி, ஆடி மாதங்கள்தான் முதுவேனில் காலம். குறித்த காலத்தில் மழை வராததால் கோடை நீண்டுகொண்டே செல்கிறது (கோடை நீடிய). மழையை எதிர்பார்த்து விதைத்து வளர்த்த பயிர்பச்சைகள் நீரின்றி வாடத்தொடங்குகின்றன (பைதறு). பைது என்பது பசுமை. அது அற்றுப்போயிற்று எனில் அது கொடிய வறட்சியைக் குறிக்கும்.
மீண்டும் ஒரு முல்லைக் காட்சி – இது காய்ந்த முல்லை. வான் மழையைத் தேக்கி வைக்கும் கோடுயர்ந்த குளங்கள். அவை முற்றிலும் வற்றிப்போனதால், கரையின் முழு அளவும் வெளித் தெரிய அது குன்று போல் உயர்ந்திருக்கிறதாம் (குன்று கண்டன்ன கோட்ட). குளத்தில் குடிக்க நீர் இல்லாததினால், குளத்தங்கரை மரத்துப் பறவைகள் குடிபெயர்ந்து போய்விட்டன. புதிதாய் வருகின்ற பறவைகள் தற்காலிகமாகக்கூடத் தங்கியிருக்கவில்லை. சென்று சேக்கல்லாப் புள்ள – எத்துணை அழகிய தொடர்! தமிழுக்குப் புதிது! புள்ள என்பது பறவைகளைக் கொண்ட (மரங்கள்) என்று பொருள்படும். எந்தவகைப் பறவைகளைக் கொண்டன? வந்து தங்காத பறவைகளைக் கொண்டன. சே என்பது தற்காலிமாகத் தங்குதல். மரத்தைப் பார்த்து வந்த பறவைகள், நீர் இல்லாததினால், சிறிது நேரம் கூடத் தங்கியிராமல், வந்தவேகத்தில் திரும்பிவிடுகின்றனவாம். எந்தப் பறவையும் வந்து தங்குவதில்லை என்னாமல், வந்து தங்காத பறவைகளைக் கொண்டிருக்கும் மரங்கள் என்கிறார் புலவர். A tree where no birds halt. அப்படியென்றால் அங்கு எந்தப் பறவைகள் அல்கும்?
சுத்தமாய் வறண்டு கிடக்கிறது அந்தக் குளம் (உள் இல்). அதுமட்டுமல்ல, அதன் பரப்பு வெயிலில் வெம்மையில் விரிந்து கிடக்கும் வெப்பக்காடாய் மாறிவிட்டது (என்றூழ் வியன் குளம்). ஊரெல்லாம் ஒரே பேச்சு, “இந்த மழ எப்ப வரும்?” ஒருநாள் – விடிகின்ற பொழுதில் (ஏம வைகறை) வீசியடிக்கிறது மழை. பேயாத பெருமழை – பேய்மழை. ஒரேநாள் மழையில் குளத்தில் கரை ததும்பும் நீர் பெருகிவிட்டது (வியன்குளம் நிறைய வீசி). 
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந் தற்றே
பலரும் மகிழ்ந்த மகிழ்ச்சி எல்லாம்
எனக்குள் பெய்ததைப் போன்று இருக்கிறதே!
ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம். ஆடு, மாடு, மனுச மக்களுக்கெல்லாம் உவகைப் பெருக்கு. “இந்த உவகைப் பெருக்கு அத்துணையும் என் ஒருத்தியின் உள்ளத்துள் பாய்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது” என்கிறாள் தோழி. “எதுக்குடீ?” என்கிறாள் தலைவி.
 சேண்இடை
ஓங்கித் தோன்றும் உயர்வரை
வான்தோய் வெற்பன் வந்த மாறே.
நெடுந்தொலைவில்
உயர்ந்து தோன்றும் உயரமான மலைகளையுடைய
வானளாவிய மலையைச் சேர்ந்தவன் வந்ததாலே.
“இங்கிருந்தே பாத்தாக்கூட எட்டால தெரியுதே அந்த ஓங்கி ஒசந்த மல! வானத்தயே முட்டிகிட்டு நிக்கிற அந்த மலநாட்டு ராசா மக்க வந்துகிட்டு இருக்காகடீ”
   
எழுதியவர் திரு பாண்டியராஜா பரமசிவம்

--Geetha Sambasivam (பேச்சு) 12:32, 25 ஏப்ரல் 2015 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2015, 12:33 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 943 முறைகள் அணுகப்பட்டது.