சங்க இலக்கியம் - பட விளக்க உரை-அகம்-புறம் 1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 சிறப்பு முன்னுரை


அகம் - புறம் ஒரு விளக்கம்


அகப்பாடல் இலக்கணத்தை நன்கு அறிந்தவர்கள் இப்பகுதியைத் தாண்டி அடுத்த தலைப்புக்குச் செல்லலாம். அகப்பாடல் என்றால் என்ன என்பதற்கான ஒரு சிறிய விளக்கத்தை முதற் பகுதியின் முன்னுரையில் கொடுத்துள்ளேன். இருப்பினும், இன்னும் சற்று விளக்கமாக இங்கு அதனைக் காண்போம்.


அண்மையில் நான் ஒரு புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்த பண்டித ஜவகர்லால் நேருவைப்பற்றிய கண்காட்சி அது. குழந்தைப் பருவத்திலிருந்து, நேருவின் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் அவர் எவ்வாறு காட்சியளித்தார் என்பதை வெகு அழகாக எடுத்துக்காட்டியது அக் கண்காட்சி. அவரைப்பற்றித் தெரிந்திராதவர்கள் அவரை நன்கு தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஓர் இடத்தில் நேருவின் குடும்பப்படம் இருந்தது. அதில் இருந்தவர்களின் பெயர், விபரம்பற்றித் தெரிந்துகொள்ளச் சிலர் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், அவரைப்பற்றித் தெரிந்தவர்களும் அங்கு நிறையப் பேர் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர், அப் புகைப்படங்களில் இருந்த நபர்களைப்- பற்றியோ, நிகழ்ச்சிகளைப்பற்றியோ பேசாமல், அப் படங்கள் கூறும் செய்தியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்திய-சீனப் போரின் போது நேருவின் முகத்தைப் பார்த்தவர்கள், அப்பொழுது அவர் பட்ட வேதனைகள், அதனால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றை நினைவுகூர்ந்தார்கள். அது ஒரு தனி மனிதனைப்பற்றிய கண்காட்சி.


சிறிது நாட்களில், வேறு ஒரு புகைப்படக் கண்காட்சிக்கும் சென்றிருந்தேன். ஒரு தனி மனிதன் பல்வேறு சூழ்நிலைகளில் தான் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு அது. அதில், ‘மனிதன்' என்ற தலைப்பில் பல புகைப்படங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்தவர்கள், அப் புகைப்படங்களில் இருந்த மனிதர்கள் யார், அவர்களின் பெயர் என்ன, அது எந்த இடம் என்பதைப்பற்றியெல்லாம் கேட்கவில்லை. அப் படங்கள் சொல்லும் செய்தி என்ன என்பதைப்பற்றி விவாதித்தார்கள். ஒரு மனிதனைப்பற்றிய படமாக இல்லாமல், ஒரு மனிதனைப்பற்றிய படமாகவே அவற்றைப் பார்த்தார்கள். தப்பித் தவறிக்கூட ஒரு படத்திலும் தெரிந்த முகங்கள் இல்லை. அவற்றில் இருந்த மனிதர்கள் மானுடத்தைப் பிரதிபலித்தார்கள்.

இந்தப் படத்தைப் பாருங்கள். இதில் இருப்பவர்கள் யார், அவர்களின் பெயர் என்ன, எந்த ஊர் என்பதைப்பற்றிக் கவலை இல்லை. தன் தந்தையின் மடியில் அமைதியாக அமர்ந்து ஒரு படப்புத்தகத்தில் ஆழ்ந்துவிட்ட சிறு குழந்தை. அதன் முகத்தில் உள்ள ஆர்வம் - அப்பாவின் மடியில்தான் அமர்ந்திருக்கிறோம் என்ற தன்னம்பிக்கை - பயமின்மை - ஓரளவுக்கே தெரிகின்ற அந்தக் குழந்தையின் முகத்தில், அத்தனை உணர்ச்சிகளையும் இந்தப் படம் தெளிவாகக் காட்டுகிறது. மிகக் குறைந்த வெளிச்சத்தில் காட்டப்படும் அந்தத் தந்தையின் முகத்தில் காணப்படும் பரிவு, பாசம், மகிழ்ச்சி, மனநிறைவு - நமக்குத் தெரிகின்ற அந்த ஒரு கண்ணில் காணப்படும் ஆர்வத்தோடு கூடிய இரசனை, அத் தந்தையின் மனநிலையை அப்படியே காட்டவில்லையா? இவ் உணர்வுகள் காதல் வாழ்வில் உச்சத்தைத் தொடுவன. இதைத் தான் அக உணர்வுகள் என்றும் இவற்றைப் பாடும் காதல், குடும்பம் பற்றிய பாடல்களை அகப்பாடல்கள் என்றும் கூறுகிறோம். எனவே, அகப்பாடல்கள் என்பன மனித உணர்வுகளைப்பற்றி-அதிலும் குறிப்பாக-காதல் உணர்வுகளைப்பற்றிப் பாடுவன. நான் கூறிய இரண்டாவது புகைப்படக் கண்காட்சியின் படங்களைப் போன்றவை இவை. இவை ஒரு தனிப்பட்ட மனிதனைப்பற்றியவை அல்ல. எனவே தான் அகப்பாடல்கள் என்பதற்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்


மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் - தொல். - 1000


என்று கூறுகிறார்.


அகப்பாடல்கள் அல்லாதவை புறப்பாடல்கள் எனப்பட்டன. அவை பெரும்பாலும் ஒரு தனி மனிதனின் அல்லது சமூகத்தின் பண்புகளையும், சிறப்புகளையும், உணர்வுகளையும் பற்றிக் கூறுவன. நாம் முதற் பகுதியில் கண்ட ஆற்றுப்படை நூல்கள் புறப்பாடல்கள் ஆகும்.


அகப்பாடல்கள் மனிதனின் குடும்ப வாழ்க்கையைப்பற்றியே பாடின. அவற்றில் சொல்லப்படும் உணர்வுகளைப் பொறுத்து அகப்பாடல்கள் ஐந்து வகைப்படும். ஒவ்வொரு வகையும் திணை எனப்பட்டது. மனமொத்த ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவதும், தனியிடத்தில் சந்தித்துக்கொள்வதும், தனிமையில் அதை நினைத்து மகிழ்வதும் ஏங்குவதும் குறிஞ்சித்திணை எனப்படும். எனவே, குறிஞ்சித் திணைப் பாடல்களின் பாடுபொருள் (theme) ஓர் ஆணும் பெண்ணும் மனத்தளவில் ஒன்றுபடுதலும், அதனை ஒட்டிய நிகழ்வுகளுமே. இதுவே இலக்கியத்தில், புணர்தலும் புணர்தல் நிமித்தமும் எனப்பட்டது. இங்கு புணர்தல் என்பது மனத்தளவில் ஒன்றுபடுவதே. சங்க இலக்கியங்கள் இந்த எல்லையைத் தாண்டிச் சென்றதே இல்லை. ஒரு பாடலின் பாடுபொருள் அப் பாட்டுக்கு உரிய பொருளாதலால், அது உரிப்பொருள் எனப்பட்டது. இந்த உரிப்பொருள் அது குறிப்பிடும் திணைக்குரிய ஒழுக்கம் என்றும் அழைக்கப்படும். இந்த உரிப்-பொருளைப்பற்றிப் பாடுவதற்கு ஒரு பின்னணி தேவைப்படும் இல்லையா? மேற்கண்ட படத்தில் உள்ள வெளிச்சம், அந்தத் தந்தை ஒரு நாளுக்குரிய பணிகளெல்லாம் முடிந்த பின்னர் தனது வீட்டில் ஓய்வாக அமர்ந்திருக்கும் ஒரு மங்கிய மாலைப் பொழுதைக் காட்டுகிறது. எனவே ஒரு நிகழ்ச்சி நடக்கின்ற இடமும், நேரமும் சரியாகக் காட்டப்பட்டால் அது அந் நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்குகிறது. இதையே இலக்கணம் முதற்பொருள் என்கிறது.


முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே - தொல். - 950


என்கிறது தொல்காப்பியம். இங்கு, நிலம் என்பது பாடலின் களம் எனலாம். பொழுது என்பது பாடலின் நிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் ஆகும். பொழுது அல்லது காலத்தைத் தமிழர்கள் இரண்டாகப் பிரிப்பர். முதலாவது, ஆண்டுக் கணக்கு. இது ஓர் ஆண்டில் எந்தப் பகுதி என்பதைக் குறிக்கும். வெயில்காலம், மழைக்காலம், பனிக்காலம் என்றெல்லாம் கூறுகிறோமே அதுதான் இது. அடுத்தது, ஒரு நாளில் எந்தப் பகுதி என்பதைக் குறிக்கும். அதாவது, வைகறைப்பொழுது, காலை, நண்பகல், மாலை, இரவு என்றெல்லாம் கூறுகிறோமே அதுதான் இது. முன்னதைப் பெரும்பொழுது என்றும், பின்னதைச் சிறுபொழுது என்றும் தமிழர்கள் கொண்டனர். இவற்றைப்பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.


‘ஓய்வாக அமர்ந்திருக்கும் தந்தை' என்று சொற்களால் கூறிவிடலாம். அதைப் படத்தில் காட்டுவது எப்படி? தந்தை அமர்ந்-திருக்கும் சாய்வு இருக்கை, அவர் அணிந்திருக்கும் அரைக்கால்சட்டை, கலைந்துபோயிருக்கும் அவரின் தலைமுடி - இப்படி ஒவ்வொன்றும் அச் சூழலுக்கு மெருகேற்றும் வண்ணமாக அமையவில்லையா? ஏன், வெளிச்சத்திற்காக ஓரளவு திறந்துவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகூட இப் படத்தின் சிறப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பொருள்களை, இந்த நிகழ்ச்சியை உருவகப்படுத்திக் காட்டுவதற்குப் பயன்படும் கருவிகள் எனலாம். இதனையே தமிழ் இலக்கணம் கருப்பொருள் என்கிறது. இன்னின்ன பொருள்கள் ஒரு பாடலின் கருப்பொருளாக அமையலாம் எனவும் இலக்கணம் வரையறுக்கிறது.


தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை
செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகைப் பிறவும் கரு என மொழிப - தொல் 964


அதாவது, தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் ஆகியவற்றோடு பண், ஊர், நீர், மலர்கள் போன்றவை ஒரு திணையைக் குறிக்கப் பயன்படுத்தப்படலாம். இவை, எடுத்துக்கொள்ளப்-படும் திணையின் உரிப்பொருளைச் சிறப்பிக்கும் வகையில் பொருத்தமாக அமைந்திருக்கவேண்டும். அகப்பாடல்கள் திணைகள் ஐந்து எனக் குறிப்பிட்டேன். அவை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன. இவற்றில், குறிஞ்சித்திணைபற்றிக் கூறிவிட்டேன். அதாவது, ஓர் ஆணும், பெண்ணும் மனம் ஒன்றுபடுவதே அது. அந்த ஆண், தலைவன் எனப்படுவான்; பெண், தலைவி எனப்படுவாள். தலைவனும் தலைவியும் மணம் முடித்த பின்னர், இல்லறம் நடத்த அவர்களுக்குப் பொருள் தேவைப்படும் இல்லையா? சில வேளைகளில் உள்ளூரிலேயே நல்ல வேலை அமையலாம். இல்லையெனில், பொருள் தேடித் தலைவன் வெளியூர் அல்லது அடுத்த நாட்டுக்குச் செல்லவேண்டியிருக்கலாம். மேலும், உயர்கல்வி பெறவும், அண்டை நாட்டுடன் ஏற்பட்ட போர் நிமித்தமாகவும் தலைவன் பிரிந்து செல்லலாம். ‘இன்ன நாளில் திரும்பி வருவேன்' என்று தலைவன் கூறிச் செல்வான். அவன் வரும்வரை தலைவி, அவனது பிரிவைப் பொறுத்துக்கொண்டு அவனுக்காகக் காத்துக்கொண்டிருப்பதை இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்று இலக்கணம் கூறும். இந்த உரிப்பொருள்பற்றிய பாடலின் திணை முல்லைத்திணை எனப்படும். இதுவே முல்லை ஒழுக்கம் ஆகும். அந்தக் காலத்தில் பொதுவாக, மழைக்காலத்தில் போர் நடைபெறாது. போரிட்ட மன்னர்கள் தம் படையுடன் வீடு திரும்பிவிடுவர். மழைக்காலம் கார்காலம் எனப்படும். போர் நடக்குமிடம் ஊரைவிட்டு வெகுதூரம் வெளியே அமைந்திருக்கும். திருத்தப்படாத புதர் மண்டிய திறந்த வெளி அல்லது வானம் பார்த்த பூமி காடு எனப்படும். இப்போது காடு என்பதை forest அல்லது jungle என்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். கிராமங்களில் காடு என்பது புன்செய் நிலத்தைக் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகிறது. எனவே காடும் காடுசார்ந்த இடமுமே முல்லைக்குரிய நிலம் எனக் கொள்ளப்படும்.


மணம் முடித்து, குழந்தை குட்டிகள் பெற்று மகிழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வரும் குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம் இல்லையா? பொதுவாகத் தலைவனின் போக்கினில் ஏற்படும் மாற்றங்களினால் தலைவிக்குத் தற்காலிகக் கோபம் ஏற்படும். இது ஊடல் அல்லது புலவி எனப்படும். ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதை உரிப்பொருளாகக் கொண்ட பாடலின் திணை மருதம் எனப்படும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதத்திணைக்குரிய நிலம் எனக் கொள்ளப்படும். தலைவன் தலைவியிடையே ஏற்பட்ட பிரிவினைத் தலைவி பொறுக்கமாட்டாமல் அரற்ற ஆரம்பிக்கலாம். அல்லது தலைவன் ஆபத்தில்லாமல் உயிருடன் திரும்ப வருவானா என்று மனம் கலங்கி அழலாம். இப்படிப் பிரிவினால் ஏற்பட்ட துயரத்தைப் பொறுக்கமாட்டாமல் மனம் கலங்கி அழுவது இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்ற உரிப்பொருள் எனப்படும். இவ்வகைப் பாடலின் திணை நெய்தல் திணை எனப்படும். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்திணைக்குரிய நிலம் எனக் கொள்ளப்படும். தலைவனும் தலைவியும் ஒன்றாக இருக்கும் போதே, பிரியவேண்டிய சூழ்நிலை உருவானால், அப் பிரிவினால் ஏற்படக்கூடிய துன்பத்தை நினைத்து மனம் மறுகி வாடுவதும், ஒன்றாக இருப்பதன் மேன்மையை எண்ணி மனம்திடங்கொள்வதுவும் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்ற உரிப்பொருள் எனப்படும். இவ்வகைப் பாடல்களின் திணை பாலைத் திணை எனப்படும். இங்கு பாலை என்பது வறட்சியைக் குறிக்கும். தமிழ்நாட்டில் எப்போதும் வறண்டு கிடக்கும் பாலைவனங்கள் இல்லை. முல்லை நிலமும், குறிஞ்சி மலைப்பகுதிகளும் நீண்ட நாட்கள் மழையின்றி இருந்தால் காய்ந்து வறண்டுபோகும் அல்லவா! அப்பொழுது அவை பாலை நிலங்கள் எனப்படும். எனவே, கொடிய வெப்பம் மிகுந்த வறண்ட நிலப்பகுதிகளைப் பாலைநிலம் என்பர்.


தமிழர்கள் காலத்தைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்று வகுத்தனர் என்று கண்டோம். நமது பூமிஉருண்டை சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலத்தை ஓர் ஆண்டு என்கிறோம். அவ்வாறு சுற்றி வரும் பாதை வட்டமாக அமையாமல், ஒரு நீள்வட்டமாக அமைந்துள்ளது. எனவே, இந்த ஓர் ஆண்டுக்குள் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு மாறிக்கொண்டே வருகிறது. எனவே, பூமியின் நிலப்பரப்பில் பல்வேறு தட்பவெப்ப நிலைகள் ஏற்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரே மாதிரியான தட்பவெப்பநிலை திரும்பத் திரும்ப வருவதைக் கவனித்த மனிதன், மாறி வரும் அந்தக் காலநிலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் வைத்தான். பொதுவாக மேலைநாடுகளில் இக் காலநிலைகளை நான்காகப் பகுப்பர். Summer, Autumn, Winter, Spring எனபனவே அவை. ஆனால், தமிழர்கள் ஓர் ஆண்டின் காலநிலைகளை ஆறாகப் பகுத்தனர். கார்(மழை), கூதிர்(குளிர்), முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பனவே அவை. இவையே பெரும்பொழுதுகளாம். ஒவ்வொரு பெரும்பொழுதுக்கும் இரண்டு மாதக் கால அளவை நிர்ணயித்தனர். இதைப் போலவே, 24 மணிநேரம் கொண்ட ஒரு நாளின் பல்வேறு பகுதிகளையும் ஆறாகப் பகுத்தனர். வைகறை, விடியல்(காலை), நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்பனவே அவை. இவை சிறுபொழுதுகள் எனப்படும். ஒவ்வொரு சிறு-பொழுதும், நமது கணக்கில் நான்கு மணிநேர அளவைக் கொண்ட-தாகும். தமிழர்கள் ஒரு நாளை அறுபது பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிற்கும் நாழிகை எனப் பெயரிட்டனர். எனவே, 60 நாழிகை கொண்டது ஒரு நாள். நமது மணி அளவில், ஒரு மணி நேரம் என்பது இரண்டரை நாழிகை ஆகும். பெரும்பொழுது, சிறுபொழுது ஆகியவற்றை எளிதில் விளக்கும் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பெரும்பொழுது


1. கார் காலம் ஆவணி, புரட்டாசி AUG MID - OCT MID
2. கூதிர் காலம் ஐப்பசி, கார்த்திகை OCT MID - DEC MID
3. முன்பனிக் காலம் மார்கழி, தை DEC MID - FEB MID
4. பின்பனிக் காலம் மாசி, பங்குனி FEB MID - APR MID
5. இளவேனில் காலம் சித்திரை, வைகாசி APR MID - JUN MID
6. முதுவேனில் காலம் ஆனி, ஆடி JUN MID - AUG MID


சிறு பொழுது பொதுவான கருத்து என் கருத்து


1. விடியல் (காலை) 6 a.m - 10 a.m 6 a.m - 9 a.m
2. நண்பகல் 10 a.m - 2 p.m 9 a.m - 3 p.m
3. எற்பாடு 2 p.m - 6 p.m 3 p.m - 6 p.m
4. மாலை 6 p.m - 10 p.m 6 p.m - 9 p.m
5. யாமம் 10 p.m - 2 a.m 9 p.m - 3 a.m
6. வைகறை 2 a.m - 6 a.m 3 a.m - 6 a.m


தமிழ்ச் செய்யுள் இலக்கணம் இந்தப் பெரும்பொழுது, சிறுபொழுது ஆகியவற்றைப் பல்வேறு திணைகளுடன் சேர்த்தது. காட்டாக, முல்லைத்திணைக்குப் பெரும்பொழுது கார்காலம்; சிறுபொழுது மாலை. முல்லைத்திணை என்பது பிரிந்துசென்ற தலைவன் வரும் காலத்திற்காகக் காத்திருத்தல் தானே! எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் வீட்டைவிட்டுச் சென்ற தலைவன் கார்காலம் தொடங்கும் முன்னர் வீடு திரும்பிவிடுவான். எனவே கார்காலம் முல்லைத்திணைக்கு ஆயிற்று. அதனால், மற்ற காலங்களில் தலைவன் வீடு திரும்பமாட்டான் என்பது பொருள் அல்ல. குடும்ப வாழ்வில் கார்காலத்தில் மற்ற ஒழுக்கங்களும் நிகழலாம். எனினும், பெரும்பாலும் ‘கார்' என்பது பிரிந்தவர் கூடும் காலமாக அமையும். மாலை நேரம் என்றாலே, இரைதேடிச் சென்ற பறவைகள் தத்தம் கூடுகளுக்குத் திரும்பி வரும் நேரம் அல்லவா! மேய்ச்சலுக்குச் சென்ற ஆனினங்கள் தம் வீடுகளுக்குத் திரும்பும் நேரமும் மாலை தானே! இன்றைக்கும், காலையில் பணிக்குச் சென்றவர்கள் மாலை வேளையில் அவரவர் வீடுகளுக்கு அவசரமாய்த் திரும்பிச் செல்ல முனைவதைப் பார்க்கிறோமே! குஞ்சுப்பறவைகள் தாய்ப்பறவைகளுக்காக ஏங்கியிருக்கும் நேரம் மாலை. கன்றுக்குட்டிகள் தாய்ப்பசுக்களுக்காகத் துடிப்புடன் காத்திருக்கும் வேளையும் அதுவே! மூன்று வயதுகூட ஆகாத என் பேரனுக்கு மாலை ஆறு மணி என்றாலே இருப்புக்கொள்ளாது. வாசல் அண்டையில் நின்றுகொண்டு வழிமேல் விழிவைத்துத் தன் பெற்றோர் வருகின்றனரா என்று பார்த்த வண்ணம் இருப்பான். இதுதான் இயற்கை. இந்த இயற்கையைத்தான் தமிழர்கள் தங்கள் இலக்கியங்களுக்குக் குறியீடாகக் கொண்டனர். ஒரு மேடை நாடகத்தில் காட்சிக்கு ஏற்ற மாதிரி, திரைச் சீலைகளைத் தொங்கவிடுவர். ஒரு கடற்கரைக் காட்சி என்றால், கடல் மாதிரி ஓர் அமைப்பைக் காட்டுவார்கள். அதுமட்டுமல்ல. ஒரு மணல்மேடு, ஒரு கலங்கரை விளக்கம், கரையொதுங்கிய ஒரு படகு, ஒரு மீனவன், அவனது வலை, மீனவச் சிறுமியின் தலையில் நெய்தல் பூ, கழிகளில் வளரும் செடிகொடிகள், கரையோரத்துப் புன்னை மரங்கள், கட்டுமரத்தருகே ஒரு நீர்க்காக்கை, சில உப்பங்கழிகள், உப்பு விற்கும் உமணர்கள் இவ்வாறாக அந்தக் காட்சிக்கு ஏற்றவற்றைத் தெரிந்தெடுத்து வரைந்திருப்பர். இவை அந்தக் காட்சிக்கு பின்புலமாக அமையும். இந்தப் பின்புலம் இன்றி வெறும் இரண்டுபேர் வந்து பேசிக்கொண்டிருந்தாலும் காட்சிகள் நகரும். ஆனால் சிறப்புற அமையுமா? ஒரு பாடலுக்கு உரிப்பொருள் என்பது அதன் மையக்கருத்தாகும். அதனைச் சிறப்பிக்கக் காட்டப்படும் கருவிகளே முதல்பொருளும் கருப்பொருளும். இந்தக் கருவிகள் குறியீடுகளாக பொதுமைப்படுத்தப்பட்டன. கிறித்தவ மதத்தைக் குறிக்க சிலுவை; இசுலாமியத்துக்கு இளம்பிறை; இந்து மதத்துக்கு கோவில் கோபுரம் போன்றவை குறியீடுகள். இளம்பிறையை இந்துக்களும் தொழுவார்கள். இருப்பினும், பெரும்பாலும் அதனை இசுலாமியர் பயன்படுத்துவதால் அம் மதத்திற்குரிய குறியீடாயிற்று. அகத்திணைகளில் இந்த ஐந்து திணைகளும் சிறப்பித்துப் பாடப்பெறுவன. இவை தவிர, கைக்கிளை, பெருந்திணை என்ற இரண்டு திணைகளும் அகத்தில் உண்டு. கைக்கிளை என்பது ஒருதலைக்காதல் அல்லது மனம் ஒன்றிய காதலுக்கு முற்பட்ட நிலை. காதல் உணர்வுகள் தோன்றா இளமையோள்வயின் காதல் கொள்வது என்பர் தொல்காப்பியர். தான் காதல்கொள்ளும் பெண்ணிடமிருந்து இசைவுக் குறிப்புகள் பெறாத நிலையில், அக் காதலைத் தானே சொல்லி இன்புறலும் இவ்வகைப்படும் என்பார் அவர். பெருந்திணை என்பது எல்லைமீறிய காதல். இதை ஆங்கிலத்தில் obsession எனலாம். இதற்கு, ‘an unhealthy and compulsive preoccupation with something or someone' என்று பொருள். தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் அல்லது மிக்க காமத்து மிடல் என்பர் தொல்காப்பியர். இந்த வகைத் திணைகள் பாடுவதற்குரிய சிறப்புக் கொண்டவை அல்ல. ஆனால், இத்தகைய உரிப்பொருளைக் கொண்ட தொடர்கள் நம் தொலைக்காட்சியில் அதிக அளவு இடம் பெறுகின்றன என்பது வேதனைக்குரிய விஷயம்.


அகம் அல்லாத பாடல்கள் புறம் எனப்படும். இவற்றிலும் திணைவகைகள் உண்டு. அகத்திணைகள் ஒவ்வொன்றுக்கும் உரித்தான புறத்திணைகள் என்ற பாகுபாட்டுடன் இவை பகுக்கப்பட்டுள்ளன. புறத்திணைகள் பெரும்பாலும் போரை அடிப்படையாகக் கொண்டவை. இரு நாடுகளுக்கு இடையே ஆன எல்லைப்புரங்களில் சச்சரவு இன்றைக்கு இருப்பதைப் போலவே அன்றைக்கும் இருந்திருக்கிறது. எல்லை மீறி வந்து மேயும் ஆனிரைகளை, அடுத்த நாட்டு வீரர்கள் கவர்ந்து கொள்வது வெட்சித்திணை. எல்லை கடந்து சென்று அடுத்த நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து வருவதும் உண்டு. இது நடக்கவிருக்கும் பெரும்போருக்கான ஆரம்பம். ஆனிரைகளைக் கவர்ந்து சென்றோரை விரட்டிச் சென்று அவருடன் போரிட்டு மீட்டு வருவருவது கரந்தைத்திணை. இந்த இரண்டுமே மலைப்பாங்கான இடங்களில் நடைபெறும் என்பதால் இவை, குறிஞ்சித்திணைக்குரிய புறம் எனக் கொள்ளப்பட்டன. தன் நாட்டின்மீது ஆசைகொண்டு எல்லையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்ட பகையரசனை எதிர்கொண்டு சென்று அவனோடு போரிட்டு அவனை அழிப்பது வஞ்சித்திணை எனப்படும். போர் நடைபெறும் இடம் நாட்டின் எல்லைப்புறம் என்பதால், இது முல்லைத்திணைக்குரிய புறம் எனக் கொள்ளப்படும். படையெடுத்துச் செல்லும் மன்னனை எதிர்க்கும் வலிமை இன்றித் தன் கோட்டைக்குள் பதுங்கியிருக்கும் மன்னனை வெளிக்கொணர, அக் கோட்டையை முற்றுகையிடுவது உழிஞைத்திணை எனப்படும். கோட்டைக்குள் இருக்கும் மன்னன், அங்கிருந்தவாறே பகை மன்னனோடு போரிடுவது நொச்சித்திணை எனப்படும். உழிஞையும் நொச்சியும் நகர்ப்பகுதியில் நடைபெறுவதால் இவை இரண்டுமே மருதத்திணைக்குப் புறம் எனக் கொள்ளப்படும். தன் வலிமையைக் காட்டப் படையெடுத்து வரும் பகையரசனை எதிர்கொண்டு சென்று அவனை அழிப்பது தும்பைத்திணை எனப்படும். இது திட்டமிட்ட பெரும்போர். எனவே மிகப் பரந்த வெளியில் இது நடைபெறும் என்பதால், இத்திணை நெய்தல்திணைக்குப் புறம் ஆயிற்று. போரில் வெற்றியை நிலைநாட்டுவது வாகைத்திணை எனப்படும். இது பாலைத்திணைக்குப் புறம் எனக் கொள்ளப்படும். போரில் மட்டும் அல்ல, தாம் எடுத்த ஏதேனும் ஒரு கொள்கையில் உறுதியுடன் நின்று அதனைச் செய்துமுடிப்பதில் வெற்றிபெறுவது வாகைத்திணையைச் சேரும். அகத்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பவையும், புறத்திணைகளான வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என்பவையும் பூக்களின் பெயர்களே. எனவே, வெட்சி வகைப் போரை மேற்கொள்ளும் தலைவன் தலையில் வெட்சிப்பூ சூடிக்கொண்டு செல்லுதல் இலக்கிய மரபு. அதைப் போல, வெற்றிகொண்ட மன்னனும் வாகைப்பூவைச் சூடிக்கொள்ளுதல் மரபு. இந்த மரபு அழிந்தாலும், இந்தச் சொல்லாட்சி இன்னும் தொடர்கிறது. ஏதேனும் ஒரு விளையாட்டில், கடுமையான போட்டிக்குப் பின்னர் நம் நாட்டு அணி வெற்றிபெற்றால், ‘இறுதியில் இந்தியா வெற்றிவாகை சூடியது' என்று இன்றும் பத்திரிகைகள் எழுதுகின்றன. இன்றும் தொடரும் சங்ககால மரபுகளில் இதுவும் ஒன்று. இவற்றைத் தவிர இன்னும் இரண்டு திணைகள் புறத்தில் உள்ளன. அவை பாடாண், காஞ்சி என்பன. ஒரு ஆளின் ஆளுமையான ஆண்மைத்திறனைப் பாடுவது பாடாண்திணை. இது அகத்திணையில் கைக்கிளைக்குப் புறம் என்பர். இந்த உலகத்தில் நிலையாமைக் கொள்கையை வலியுறுத்திப்பாடுவது காஞ்சித்திணை ஆகும். இது பெருந்துணைக்கும் புறம் என்பர். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என்ற மூவகை நிலையாமைகளைப்- பற்றிய பாடல்கள் இதில் அடங்கும். யாக்கை என்பது நமது உடல்.


திணைக்குரிய பெயர்கள் மலர்களைக் குறிக்கும் எனவும் அகத்திணைகள் ஒவ்வொன்றுக்கும் நிலம் என்பது முதற்பொருள்களில் ஒன்று எனவும் கண்டோம். எனவே, அந்தந்த நிலப்பகுதிகளையும் அவற்றிற்குரிய மலர்களின் பெயராலேயே குறிப்பிடுவது உண்டு. மலைப்பாங்கான இடங்களைக் குறிஞ்சிநிலம் என்றும், வயல்வெளிகளை மருதநிலங்கள் என்றும் இவ்வாறாகவே ஏனையவற்றையும் குறிப்பிடுவது உண்டு. இந்த வழக்காறுகள் அனைத்தையும் தெரிந்திருந்தால் மட்டுமே சங்க இலக்கியங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு அவற்றின் சிறப்புகளை அறிந்துகொள்ள முடியும்.


ஒரு திணையைப்பற்றிப் பாடும் பொழுது மற்ற திணைகளுக்குரிய முதற்பொருளும், கருப்பொருளும் மாறி வரலாம். அதாவது முல்லைத் திணையைப்பற்றிப் பாடும்போது குறிஞ்சி மலர்களோ, மருதத்திற்குரிய எருமை மாடுகளோ, நெய்தலுக்குரிய தாழையோ வரலாம். இது திணை மயக்கம் எனப்படும். ஆனால் முதற்பொருளில், நிலம் மயங்கிவருதல் கூடாது. நிலன் ஒருங்கு மயங்குதல் இன்றென மொழிப என்பர் தொல்காப்பியர். இரங்கல் பற்றிய பாடல்கள் நெய்தல் திணைக்குரியவை. அவற்றில் கடலும் கடல் சார்ந்த இடங்களே வரவேண்டும். வேறு நிலங்கள் இடம்பெறுவது கூடாது. முதல், கரு, உரி என்ற மூன்று பொருள்களில், உரிப்பொருள் தவிர்த்தவை மயங்கிவரலாம். அதாவது கருப்பொருளும், முதற்பொருளில் நிலம் தவிர்த்த பொழுதும் மயங்கிவரலாம். அதாவது, முல்லைத்திணைப் பாடலில் தலைவனின் பிரிவின்போது ஆற்றியிருப்பது தலைவியின் பண்பு. ஆனால், அவள் பிரிவாற்றாமையால் புலம்புவதோ, கண்ணீர் வடித்து இரங்குவதோ கூடாது. திணைமயக்கம் என்பது சில கட்டாயங்களுக்காகக் கொடுக்கப்பட்ட சலுகைகள் அல்லது விதிவிலக்குகள் எனலாம். எனவே, விதிவிலக்குகள் வழிகாட்டிகள் ஆகமாட்டா - Exceptions are not rules. தமிழ் இலக்கணம், செய்யுளின் கட்டுக்கோப்பை முன்னிட்டுச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அவற்றினில் இதுவும் ஒன்று. பந்தாட்டக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் பந்துகளை அடிக்கவேண்டும் என்பதைப்போல.


எழுதியவர் முனைவர்  திரு பாண்டியராஜா பரமசிவம் மின்னஞ்சல் முகவரி: <pipiraja@gmail.com> 


--Geetha Sambasivam 09:35, 3 நவம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 28 மே 2015, 08:08 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,646 முறைகள் அணுகப்பட்டது.