சங்க இலக்கியம் - பட விளக்க உரை-அகம்-புறம் 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 சிறப்பு முன்னுரை – தொடர்ச்சி -1


அகம் - புறம் ஒரு விளக்கம்


அகம் – புறம் பற்றிய ஓர் எளிய முன்னுரையை முந்தைய கட்டுரையில் கண்டோம். அது அகம்-புறம் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு எழுதப்பட்டது. அகம்-புறம் பற்றி ஓரளவு தெரிந்து, பின்னர் அதனை மறந்துபோனவர்களுக்கு அந்த விளக்கம் மிகவும் எளிமையானதாக இருந்திருக்கக்கூடும். எனவே, இன்னும் சில கூட்டுத் தகவல்களுடன் அகம் பற்றிய மேலும் சில உண்மைகளைக் காண்போம். முதல் கட்டுரையைப் படித்தவர்களும் இதனைப் படிக்கலாம் – இது ஒரு supplement.


1. திணைப் பாகுபாடு


திணை என்பது ஒழுக்கம், வாழ்க்கை நெறி என்பதைக் குறிக்கும். ஒழுகுதல் என்பது நன்னெறிகளோடு வாழ்தல் - living in conformity with the laws and normal behavior. இதினின்றும் பிறந்தது ஒழுக்கம். இந்த வாழ்வு நெறியைத் தமிழர்கள் இரண்டாகப் பிரித்தனர் - அகத்திணை, புறத்திணை என்று. ஒரு ஆண்/பெண் -இன் சொந்த வாழ்க்கையைச் சார்ந்த உணர்வுகள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவை அக ஒழுக்கங்கள். எனவே, அவை அகத்திணையின்பாற்படும். அவரது வெளியுலகைச் சார்ந்த சிந்தனைகள், செயல்கள் ஆகியவை புற ஒழுக்கங்கள். எனவே, அவை புறத்திணையின்பாற்படும். மனிதரின் அகவாழ்வைத் தமிழர்கள் ஏழாகப் பிரித்தனர். எனவே அகத்திணைகள் ஏழு வகைப்படும். அவை கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் பெருந்திணை எனப்படும்

.
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழு திணை' என்ப – தொல்காப்பியம் – அகத்திணையியல் - 1
என்பது தொல்காப்பியர் கூற்று.


அவற்றுள்,
நடுவண் ஐந்திணை, நடுவணது ஒழிய,
படு திரை வையம் பாத்திய பண்பே – தொல் – அகத் - 2


இவற்றுள் நடுவில் இருக்கும் ஐந்து திணைகளான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம் நெய்தல் ஆகியவை சிறந்த திணைகள் எனப்படும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு ஆகிய தொகுப்புகளில் காணப்படும் பாடல்கள் இவை ஏதேனும் ஒரு திணையில்தான் அமைந்திருக்கும். இவையே அகப்பாடல்கள் எனப்படும். இவற்றில் நடுவில் இருக்கும் பாலைத்திணை நீங்கலாக, ஏனையவற்றுக்கு, அவற்றுக்கே உரித்தான நிலம் பகுக்கப்பட்டுள்ளது.


அகப்பொருள் என்பது ஓர் ஆண் - பெண்ணுக்கிடையே உள்ள காதல் உணர்வு. அந்த ஆண் தலைவன் எனப்படுவான்; பெண் தலைவி எனப்படுவாள். இவர்களின் பெற்றோர், உற்றோர், தோழமை கொண்டோர் ஆகியோரும் அகப்பாடல்களில் பங்குபெறுவர். இவர்களைப் பாடல் மாந்தர் என்போம். சங்க காலத்தை ஒட்டிய அகப்பாடல்களில், ஒரு பாடல் என்பது அப் பாடல் மாந்தரில் ஏதேனும் ஒருவரின் கூற்றாகவே (dramatic monologue – தெ.பொ.மீ) அமையும். திருமணத்துக்கு முன்னர் தலைவின் - தலைவி ஆகியோரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் களவுவாழ்க்கை எனப்படும். திருமணத்துக்குப் பின்னான வாழ்வின் நிகழ்வுகள் கற்புவாழ்க்கை எனப்படும். குழந்தைப் பருவம், மழலைப் பருவம், சிறார் பருவம் ஆகிய நிலைகளைக் கடந்து பதின்மப் பருவத்தை (teen age) அடையும் ஒருவரின் உடல் இனப்பெருக்கத்துக்கான பக்குவத்தையும் முதிர்ச்சியையும் அடைகிறது. அப்போது ஒருவருக்கு அடுத்த பாலினத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஈர்ப்பு ஏற்படுகிறது. அவரைப் பார்க்கவும், அவரிடம் பழகவும் ஒரு துடிப்பு உருவாகிறது. அப்பொழுதுதான் நூற்றாண்டுக் காலமாக ஒவ்வொரு மனித இனக்குழுவிலும் தொடர்ந்து வரும் காப்பு உணர்வுகள் ஒருவரின் எண்ணங்களை நெறிப்படுத்துகின்றன. இதுவே அக ஒழுக்கம். இந்த அகநெறி ஒழுக்கங்களைப் பாடல்களாகப் புனைய தமிழர்கள் தெரிந்தெடுத்த முறை உயர்ந்தது - ஒன்றேயானது (unique) - தெரிந்துகொண்ட உலகத்தோர் வியந்து போற்றுவது.


அகப்பாடல்களுக்குள் இருக்கவேண்டிய கூறுகள் மூன்று.
முதல், கரு, உரிப்பொருள், என்ற மூன்றே,
நுவலும் காலை, முறை சிறந்தனவே;
பாடலுள் பயின்றவை நாடும் காலை – தொல் – அகத் - 3


என்பர் தொல்காப்பியர். அதாவது, தமிழர் அகப்பாடல்களுக்கு வகுத்த இலக்கணத்தில், ஒரு பாடலில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றும் அமைந்திருக்கவேண்டும் என நியமித்தனர். ஓரோவழி விதிவிலக்குகள் உண்டு. இவற்றின் சிறப்பும் இதே வரிசையில் அமையும். அதாவது, முதற்பொருளை வைத்தே பாடலின் திணை குறிக்கப்படும். அது இல்லாவிட்டால், கருப்பொருளைப் பொருத்தது திணை. அதுவும் இல்லாவிட்டால், இருக்கவே இருக்கிறது உரிப்பொருள். இதிலிருந்து என்ன தெரிகிறது? முதற்பொருள்தான் மிக முக்கியமானது என்றா? இல்லை! ஒரு அகப்பாடலில், முதற்பொருளோ, கருப்பொருளோ இல்லாமல் போகலாம். ஆனால் உரிப்பொருள் இல்லாவிட்டால் அது அகப்பாடலே அல்ல. எத்துணை நுட்பமான logic இங்கே அமைந்திருக்கிறது!
முதற்பொருள் என்பது நிலம் பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். அதாவது, அது பாடல் நிகழும் இடம், காலம் என்பவற்றைக் குறிக்கும்.


முதல் எனப்படுவது நிலம், பொழுது, இரண்டின்
இயல்பு என மொழிப-இயல்பு உணர்ந்தோரே – தொல் – அகத் - 4


என்பர் தொல்காப்பியர். பெரும்பாலும் இது பாடலுக்குரிய அழகிய பின்னணியாக (backdrop, background) விளங்கும். இவ்வாறு ஒவ்வொரு திணைக்குரிய நிலமும் என்ன என்பதையும் அகத்திணை இலக்கணம் வரையறுத்திருக்கிறது.


மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச்
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே - – தொல் – அகத் - 5


என்கிறார் தொல்காப்பியர். ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலத்தைச் சொல்லும்போதே, அதற்குரிய தெய்வத்தையும் அவர் குறிப்பிட்டுவிடுகிறார். இதனைக் கீழ்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்.


முல்லை – காடும் காடு சார்ந்த இடமும் – மாயோன் – திருமால், கருப்பன்
குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும் – சேயோன் – முருகன்
மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும் – வேந்தன் – இந்திரன் – மன்னன்
நெய்தல் –கடலும் கடல் சார்ந்த இடமும் - வருணன்


முல்லைக்குரிய நிலமான காடு என்பது forest அல்ல. மலையடிவாரத்தை ஒட்டிய மேட்டுநிலம். புன்செய்க்காடு. மாயோன் என்பது திருமால், சேயோன் – சிவபெருமான் மகன் – முருகன், வேந்தன் – இந்திரன் எனப் பிற்கால உரையாசிரியர்கள் எழுதிவைத்திருப்பதைப் பெரும்பாலான அண்மைக் காலத்திய தமிழ் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. சேயோன் என்பது, முருகனையே குறிப்பினும், அவனது சிவந்த நிறத்தின் காரணமாகவே இங்கு சேயோன் எனப் படுகிறான் என்பர். தாமரை புரையும் காமர் சேவடி, பவளத் தன்ன மேனி – என்ற அடிகளும் இதனை மெய்ப்பிக்கும். இன்றைக்கும் கிராமங்களில், மத்தியான நேரத்தில் ஊருக்கு வெளியே திறந்த வெளியில் தனியே போகக்கூடாது என்பர் – காத்து கருப்பு அடிச்சிடும் என்பர். இன்றைக்கும், மாய், மாயத்தேவர், மாயாண்டி, இருளாண்டி, இருளப்பன், கருப்பணன், கருப்பசாமி போன்ற பெயர்கள் உள்ளவர்கள் முல்லைக் காட்டு ஊர்களில் உண்டு. இது விவாதத்துக்குரியது.


அடுத்து ஒவ்வொரு திணைக்கும் உரிய பொழுதுகள் கூறப்படுகின்றன. பொழுது என்பது காலக் கணக்கு. இன்றைக்கு என்ன நாள் என்று கேட்டால், அன்றைக்குரிய தேதியையும், கிழமையையும் கூறுவோம். தேதி என்பது மாதக் கணக்கு. ஓர் ஆண்டை 12 மாதங்களாகப் பகுத்திருக்கிறோம். மேல்நாட்டினர் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாகப் பகுத்திருக்கின்றனர். Summer, Autumn, Winter, Spring என்ற நான்கு பருவங்கள் அவை. எனவே, ஒவ்வொரு பருவத்துக்கும் மூன்று மாத காலம் உண்டு. நம் முன்னோர்களும் ஓர் ஆண்டைக் கார்காலம், கூதிர்காலம், பனிக்காலம், வேனில்காலம் எனப் பகுத்தனர். ஆனால், தமிழகப் பகுதியில் கார்காலம் எனப்படும் மழைக்காலமும், கூதிர்காலம் எனப்படும் குளிர்காலமும் வெகுசில மாதங்களே நீடிக்க, பனிக்காலமும், வேனில் காலமும் நீண்ட காலம் தொடர்வதைக் கண்ட அவர்கள், பனிக்காலத்தை முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என இரண்டாகவும், வேனில்காலத்தை, இளவேனில் காலம், முதுவேனில் காலம் என இரண்டாகவும் பிரித்தனர். இந்த, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு காலங்களையும் பெரும்பொழுது எனக் கூறினர். இவை ஆறும், ஆவணி தொடங்கி, ஒவ்வொன்றும் முறையே இரண்டு மாதங்கள் கொண்டவை. இதே போல் ஒரு நாளுக்குரிய கால அளவையும் தமிழர்கள் ஆறு பகுதிகளாகப் பிரித்தனர். இன்றைக்கு நாம் ஒரு நாளை 24 மணிகளாகப் பிரித்திருக்கிறோம். ஆனால், நம் முன்னோர் ஒரு நாளை 60 நாழிகையாகப் பிரித்தனர். எனவே இரண்டரை நாழிகை கொண்டது ஒரு மணி நேரம். இந்த அறுபது நாழிகைகளையும் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஆறு பகுதிகளாக வகுத்தனர். இந்த ஆறும் சிறுபொழுதுகள் எனப்படும். இவை ஆறும், விடியலில் தொடங்கி, ஒவ்வொன்றும் முறையே 10 நாழிகை (4 மணி) அளவு கொண்டவை. இதோ தொல்காப்பியர் தொகுத்த காலப் பகுப்பு.


காரும் மாலையும் முல்லை, குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப
வைகறை விடியல் மருதம்; எற்பாடு
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் மெய்பெறத் தோன்றும்,
பின்பனி தானும் உரித்தென மொழிப. - தொல் – பொருள். - அகத். – 6 – 12


இங்கு, என்மனார் புலவர், என மொழிப என ஆசிரியர் கூறியிருப்பதால், இந்தக் காலப் பகுப்பு தொல்காப்பிய விதி அல்ல - தமிழர் மரபு என்பது புரியும். இதனை, கீழ்க்கண்ட அட்டவணை தொகுத்துக் கூறும்.


திணை பெரும்பொழுது சிறு பொழுது
குறிஞ்சி கூதிர் (ஐப்பசி-கார்த்திகை) யாமம் (நள்ளிரவு)
முன்பனி (மார்கழி, தை)
முல்லை கார் (ஆவணி புரட்டாசி) மாலை
பாலை பின்பனி, இருவகை வேனில் நண்பகல்
(மாசி - பங்குனி, சித்திரை - ஆடி)
மருதம் -------------- வைகறை, விடியல்


நெய்தல் ---------------- எற்பாடு


மருதம், நெய்தல் ஆகியவற்றுக்குப் பெரும்பொழுது வரையரை இல்லை.


உரிப்பொருள் என்பது பாடலுக்குரிய பாடுபொருள் - இது பாட்டுடை மாந்தரின் மனநிலையைக் குறிக்கும். இதை the distinctive feature of the emotional state of mind என்பர். தொல்காப்பியர் இதனை அழகுற வரிசைப்படுத்துவார்.

புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,
ஊடல், அவற்றின் நிமித்தம் என்றிவை,
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே - தொல் – பொருள். - அகத். – 16


உரிப்பொருள் என்பது மாந்தரின் மனநிலை என்றும், அதனை நம் முன்னோர் ஐந்துவகையாகப் பிரித்துக்கொண்டனர் என்றும் பார்த்தோம். அதனைப் பற்றி மேலும் அறியும் முன்னர் மனித நாகரித்தின் வளர்ச்சி எப்படி நடந்தது எனக் கண்போம்.


1. முதலில் மனிதன் காடுகளிலும், மலைகளிலும் சுற்றித்திரிந்து, குகைகளில் தங்கி, வேட்டையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவந்தான்.


2. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மலையை விட்டு இறங்கி, மலையோரப் பொட்டல் மேட்டு நிலங்களில் குடிசைகளைப் போட்டு, அங்கு விளைந்துகிடந்த பயறு தானிய வகைகளையும் உண்டு, அவற்றை விளைவிக்கவும் பழகிக் கூட்டம் கூட்டமாகச் சிற்றூர்களை அமைத்துக்கொண்டான்.


3. பின்பு ஆற்று ஓரங்களுக்கு நகர்ந்து, விவசாயத்தை முறைப்படுத்தி, பெருங்கூட்டமாக இருக்க பட்டணங்களைக் கட்டிக்கொண்டான். அதனால் பலவித தொழில்கள் கிளைத்தன.


4. பின்னர் ஆற்று வழியே சென்று கடலையும் கண்டு, அதைக் கடக்க நாவாய்களைக் கட்டி, தன் உறவு வட்டத்தைப் பெருக்கிக்கொண்டான்.


எனவே, 1. மலைகள், 2. வானம்பார்த்த நிலங்கள், 3. ஆற்றோர வயல்வெளிகள், 4. கடற்கரைப் பட்டினங்கள் என மனித நாகரிகம் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் வளர்ச்சியுற்றது.
அடுத்து மனிதனின் அகவாழ்க்கை எவ்வாறு வளர்ந்து வருகிறது என்று காண்போம்.


1. பருவம் வந்த ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி, பழகும் முதல் நிலை அதிக நாள்கள் நடைபெறுவதில்லை.


2. காதலைத் தொடர்ந்து மனிதன் தான் விரும்பியவளுடன் இல்லற வாழ்வை அமைத்துக்கொள்கிறான். இல்லற அமைப்பைத் தலைவியும், அதற்குத் தேவையான பொருள் ஈட்டுவதைத் தலைவனும் மேற்கொள்கின்றனர். அதனால் பெண்ணுக்குப் பெரும்பாலும் அகத்தே இருத்தலும், ஆணின் தற்காலிகமான பிரிவினைப் பொறுத்துக்கொண்டு ஆற்றியிருத்தலும் தேவையாகிறது.


3. இவ்வாறு அவர்கள் வாழ்க்கை வளம் பெற்று குழந்தை குட்டிகளுடன் பெருகும்போது, ஆண்-பெண் இடையே பலவிதப் பூசல்கள் உருவாகலாம். அப் பூசலின் காரணமாக மனைவி பொய்க்கோபம் கொண்டு ஊடியிருத்தலும், கணவன் அதைத் தீர்த்துவைக்க முயலுதலும் நடைபெறும்.


4. இவ்வாறு நெடுவாழ்க்கை வாழ்பவர் இடையே உயிர் இழப்புகள் நேரிடலாம். அதுவும், தலைவன், தலைவி ஆகியோரில் ஒருவரின் இறப்பு மற்றவருக்கு நீங்காப் பெரும் துயரம் தரும்.


இப்போது முதலில் கண்ட நான்கு வாழ்க்கை முறைகளையும், அடுத்துக் கண்ட நான்கு வாழ்வு நெறிகளுடன் ஒன்றுக்கொன்றான தொடர்புபடுத்துங்கள் (one-to-one-correspondence).
நாம் கண்ட நான்கு வாழ்வு நெறிகளையும் தமிழர்கள் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று அழைத்தார்கள் எனக் கண்டோம். இந்தப் பெயர்களுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. முதலில் நாம் கண்ட நான்கு விதமான வாழ்க்கை முறைகள் அமைந்த நிலப்பரப்பில் வளரும் சிறப்பான மலர்களே இவை. ஒவ்வொரு திணையும் ஒரு நிலத்துடனும், ஓர் ஒழுக்கத்துடனும் பொருத்தப்பட்டது. இதை அட்டவணைப் படுத்திக் கீழே காணலாம்.


திணை வாழ்க்கை நெறி நிலம்
குறிஞ்சி (தலைவன் தலைவி) இணைதல் மலை, மலை சார்ந்த இடம்
முல்லை ஆற்றி இருத்தல் காடு, காடு சார்ந்த இடம்
மருதம் பிணக்கம், ஊடல் வயல், வயல் சார்ந்த இடம்
நெய்தல் இரங்கல் கடல், கடல் சார்ந்த இடம்


குறிஞ்சித்திணைக்குரிய ஒழுக்கம் புணர்தலும், புணர்தல் நிமித்தமும் எனப் பார்த்தோம். இன்றைய வழக்கில் அது உடல் சேர்க்கையையே குறிப்பதால் அது இங்கே தவிர்க்கப்படுகிறது. ஒன்று பட்ட உள்ளங்கள் இணைவதே புணர்தல். அது ஒருவரை ஒருவர் சந்தித்து அளவளாவுதல்.


புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும் – திருக்குறள் 785


(நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும் – மு.வ.உரை


என்ற வள்ளுவரின் குறளும், நண்பர்கள் சந்தித்து உரையாடுவதையே புணர்ச்சி என்கிறது. அகத்தின் ஐந்திணைப் பாடல்கள் உடலுறவைப் பற்றிப் பாடுவதில்லை.
குறிஞ்சிக்குத் திணை புணர்தல் என்றாலும், தலைவன், தலைவி சந்திப்பு மட்டும் அன்றி, அதற்கு ஏதுவான நிகழ்வுகளும் குறிஞ்சித் திணையின்பாற்படும். எனவே குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் புணர்தலும், புணர்தல் நிமித்தமும் என இலக்கணங்கள் கூறும். ஏனைய திணைகளுக்கும் அவ்வாறே கூறப்படும்.


ஐந்தாவது திணையான பாலைத்திணை, தலைவன்-தலைவி ஆகியோரிடையே ஏற்படும் நீண்ட பிரிவின்போது உண்டாகும் உணர்வுகளை வெளிப்படுத்துவது. எனவே இதன் ஒழுக்கம் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் எனப்படுகிறது. பாலைநிலம் என்பது தமிழகத்தில் இல்லை. முல்லையும் குறிஞ்சியும் வறட்சியால் மாறுபடும் நிலையே பாலை நிலம் ஆகும். அகத்திணைப் பாடல்களில் மிகவும் பெரும்பாலான பாடல்கள் பாலைத்திணைப் பாடல்களே. அவற்றைத் தொகுத்தவர்கள் அப்படிச் செய்திருப்பினும் அது பெரும்பான்மை ஒப்புதல் பெற்றிருக்கும் என்பது உறுதி. Percy Bysshe Shelley என்ற ஆங்கிலக் கவி கூறிய “Our sweetest songs are those that tell of saddest thought” என்ற கூற்று நினைவுக்கு வருகிறதா? (நாம் காணவிருக்கும் அகநானூற்றில்கூட, அதிலிருக்கும் 400 பாடல்களில், 1, 3, 5, 7, 9 ... என ஒற்றை இலக்க எண்களின் பாடல்கள் இருநூறும் பாலைத்திணையைச் சேர்ந்தவை)


மேலும், மனித வாழ்க்கை ஓர் ஆற்றின் ஓட்டத்தைப் போன்றது என்று குறிப்பிடும் வண்ணம் தங்கள் அகத்திணைகளை வகுத்துக்கொண்டனர் எனவும் கூறலாம். எந்தவோர் ஆறும், முதலில் மலையும் மலை சார்ந்த இடங்களிலும் (குறிஞ்சி) உருவாகிறது. பின்னர், காடும் காடு சார்ந்த இடங்களிலும் (முல்லை) பாய்ந்தோடுகிறது. அடுத்து நகர்ப்புறங்களை அடைந்து வயலும், வயல் சார்ந்த இடங்களையும் (மருதம்) வளப்படுத்துகிறது. இறுதியில், கடல் சார்ந்த இடங்களில் ஓடி, கடலுக்குள் இணைந்துகொள்கிறது (நெய்தல்). இத்துடன் மனித வாழ்க்கையின் உடல்-உள்ளப் பக்குவப்படுதலையும் தொடர்பு படுத்தி அதனை இலக்கியமாக்கிய தமிழர் சிந்தனை எத்துணை உயர்ந்தது என்று எண்ணி வியக்கத் தோன்றுகிறதல்லவா!


தமிழரின் அன்றாட வாழ்வுக்கான காலப்பகுப்புக்கும் (முதற்பொருள்), இலக்கிய உருவாக்கதுக்கான திணைப்பகுப்புக்கும் (உரிப்பொருள்) என்ன தொடர்பு இருக்கமுடியும் என நினைக்கலாம். ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதனை விளக்கலாம். பகல் முழுக்க வெளியில் இரைதேடச் சென்ற பறவைகளும் விலங்குகளும் மாலை நேரத்தில் தத்தம் உறைவிடங்களுக்குத் திரும்புகின்றன இல்லையா? அதுபோலத்தானே மனிதர்களின் வாழ்வும் அமைந்திருக்கிறது. ஏதோ ஒரு பணியின் நிமித்தமாக வெளியில் சென்ற வீட்டுத்தலைவன், மாலையில் வீடுதிரும்பும் வரை வீட்டிலுள்ள தலைவி பொறுமையுடன் காத்திருப்பாள். மாலை நெருங்கும்போது அவள் மனதில் பரபரப்பு ஏற்படும். தலைவன் திரும்பிவரக் கொஞ்சம் தாமதமாகிவிட்டால் மனம் படபடக்கத் தொடங்கிவிடும். ஏக்க உணர்வு மிகும். இந்த உணர்வுகள் எல்லாம் முல்லைத் திணையினைச் சேரும் இல்லையா? எனவே முல்லைத் திணைக்குரிய பாடல் இயற்றும்போது, அதன் நிகழ்வுகள் மாலையில் நடப்பதைப் போன்று அமைந்தால் பொருத்தமாகத்தானே இருக்கும்? அதை விடுத்து, நண்பகலிலேயே. தலைவன் வீடுதிரும்பவில்லையே என ஏங்குவது இயல்பானதாக இருக்காது அல்லவா! எனவே முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது மாலை எனக் கொள்ளப்பட்டது. அன்றாடப் பணிக்காக அல்லாமல், வெகுதொலைவு சென்றிருக்கும் தலைவன் கார்காலத்தில் தன் பணியை முடித்து வீடுதிரும்பும் வழக்கம் அன்றைக்கு இருந்தது. அன்றைய தமிழ் மன்னர்கள் போர் மேல் செல்லும்போது பெரும்பான்மை வேனில்காலத்திலும், ஒரோவழி கூதிர்காலத்திலும் படையெடுத்துச் செல்வர். எனவே, போர்முடிந்து கார்காலத் தொடக்கத்தில் அவர்கள் வீடுதிரும்புவர். அக்காலத்தில் பெண்கள் போரிடச் செல்லும் தலைவனை வீர உணர்வுடன் வழியனுப்பி வைப்பார்கள். எனவே கார்காலத் தொடக்கம் வரை அவர்கள் பொறுமையுடன் காத்திருப்பர். கார்காலம் தொடங்கியும் தலைவன் வீடு திரும்பவில்லை என்றால் அவளின் ஏக்க உணர்வு மிகும். எனவே முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது கார்காலம் என்றும் கொள்ளப்பட்டது. ஒரு பாடலில் கார்கால, மாலை நேர வருணனைகள் காணப்படின், அது முல்லைத் திணைப் பாடல் எனத் தெரிந்து கொள்ளலாம். புலவர் கூறவரும் மனநிலை இந்தப் பொழுதுகளின் உணர்வுகளோடு ஒத்துப்போகும். தமிழரின் அன்றைய வாழ்க்கை முறைகளுக்கும், இலக்கிய வாழ்வு நெறிகளுக்கும் உள்ள இயல்பான தொடர்பையே அவரின் இலக்கணமாகவும் கொண்டனர் எனலாம்.


கருப்பொருள் என்பது முதற்பொருளான நிலம், பொழுது ஆகியவற்றை நன்கு உணர்த்தக்கூடிய சிறப்புப் பொருள்கள். அதாவது, கிளி என்றவுடனே மலையும், புன்னைமரம் என்றவுடனே காடும், உழவர் என்றவுடனே வயலும், சுறாமீன் என்றவுடனே கடலும் நம் நினைவுக்கு வரவில்லையா? இவ்வாறு ஒவ்வொரு நிலத்திற்கும் உரித்தான தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை என்ற முரசு, தொழில், யாழ் ஆகியவை ஒரு திணைக்குரிய கருப்பொருள்களாம்.


தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை,
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ,
அவ் வகை பிறவும் கரு' என மொழிப - தொல் – பொருள். - அகத். – 20


என்பர் தொல்காப்பியர். இதன் அட்டவணை மிகப் பெரிது. பாடல்களைப் படிக்கும்போது தெரிந்துகொள்வீர்கள்.


2. துறை
மனிதனின் அகவாழ்வு ஓர் ஆற்றின் ஓட்டத்துக்கு நேரானது என்று கண்டோம் அல்லவா! ஆற்றை நாம் எந்த இடத்திலும் கடப்பதில்லை. சில குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தனித்தனிப் பயன்பாட்டுக்கு உட்படுத்துகிறோம். ஆற்றுக்குள் இறங்கும் அந்த இடங்களைத் துறை என்று அழைக்கிறோம், படித்துறை, குளியல் துறை, உண் துறை, சலவைத்துறை என்ற பல பெயர்களில் அவற்றை அழைக்கிறோம். இதைப் போலவே, அகப்பாடல்களிலும், எந்தெந்த பொருள்களில் பாடலாம் என்பதையும் செய்யுள் இலக்கணக்காரர்கள் வகுத்துவைத்திருக்கிறார்கள். அவற்றை நாம் பாடலுக்கான துறை என்கிறோம். சங்கப்பாடல்களில் ஒவ்வொன்றுக்கும் திணை, துறை உண்டு. அதாவது அது எந்த ஒழுக்கத்தைப் பற்றியது, எந்தக் கருத்தைக் கூறுவது எனக் கூறுவதுவே.


இந்தப் பாடலைப் பாருங்கள்:
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிது
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே – குறுந்தொகை 40


இந்தப் பாடலில் வரும் செம்புலப் பெயல் நீர் என்ற தொடரின் அழகில் சொக்கிப்போன அகநானூற்றின் தொகுப்பாளர், இவரின் இயற்பெயரை விட்டுவிட்டுப் பாடலாசிரியர் பெயர் செம்புலப்பெயல்நீரார் என்றே எழுதிவைத்திருக்கிறார். இதைப்போல், அணிலாடும் முன்றிலார், தேய்புரிப்பழங்கயிற்றினார், மீனெறிதூண்டிலார் எனத் தமது பாடல் வரிகளால் பெயர் பெற்றவர்கள் பலர் உண்டு. இப் பாடல் குறிஞ்சித்திணையின்பாற்படும். ஏனெனில் இது தலைவன் தலைவி காதல் உறவைக் கூறுவது. தலைவனின் காதல் உறுதியானதுதானா என்று கருதிய தலைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்தில் தலைவன் கூறியது. இப் பாடலின் நோக்கம் இதுதான். இதுவே அதன் துறை. எனவே, உரைகாரர்கள் வகுத்த துறை ; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், பிரிவர் எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது.


இவ்வாறு ஒவ்வொரு அகப்பாடலுக்கும் உரையாசிரியர்கள் திணை, துறை வகுத்திருக்கிறார்கள். சிலர் சிலவற்றில் மாறுபடலாம். அகப்பாடல்கள் என்னென்ன துறைகளில் அமையலாம் என்பதை, அகத்திணைக்கு இலக்கணம் கண்ட தொல்காப்பியர் வகுத்துவைத்துள்ளார். இப்படியெல்லாம் உங்கள் பாடல் அமையலாம் என்று அவர் கூறியவற்றுக்கு மேல் வேறு எதுவும் இல்லை என்று சொல்லத்தக்க அளவில், அவற்றை, வகுத்து, தொகுத்து, நேரின மணியை நிரல்படத் தொகுத்தாங்கு, தொல்காப்பியர் எழுதியுள்ள திறத்தைப் படித்துப் பாருங்கள்.


3. உள்ளுறை உவமம்
செம்புலப் பெயல்நீர் போல என்பது அன்புடை நெஞ்சம் கலந்து நின்றதற்கு உவமை. பொருத்தமான - புதுமையான உவமைகளைப் பயன்படுத்துவதில் சங்கப் புலவர்கள் வல்லவர்கள். அதனை ஒவ்வொரு பாடலிலும் பார்க்கப்போகிறோம்.
இவ்வாறு நேரடியான உவமைகளைக் காட்டிலும், இன்னும் சிறப்பானது உள்ளுறை உவமம். உள்ளுக்குள் உறையும் (வசிக்கும்) உவமமே உள்ளுறை உவமம். சிய்யம் (சுகியன்) அல்லது கொழுக்கட்டைக்குள் ஒளிந்திருக்கும் பூரணம் போன்றது. வெளிப்பார்வைக்குத் தெரியாது. கடித்துச் சுவைத்தால் அத்துணை இனிமை!


யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளுர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழை இயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே – குறுந்தொகை - 85


இது ஒரு மருதத்திணைப் பாடல். குருவி, கரும்பு ஆகிய கருப்பொருள்களைக் கவனியுங்கள். தலைவி கருவுற்றிருக்கிறாள். தலைவன் அதுபற்றி அக்கறை கொள்ளாமல் ‘ஊர்மேய’ச் சென்றுவிடுகிறான். தலைவிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. “வரட்டும் அந்த ஆள், ஒருகை பார்க்கிறேன்” என்று கறுவிக்கொண்டு இருக்கிறாள். தலைவனுக்கு இது தெரியாதா என்ன? மெல்ல, தன் personal assistant -ஐ வீட்டுக்கு அனுப்பிப் பார்க்கிறான் – to sense the mood there. அவனைப் பாணன் என்பர். பாணனும் வீட்டுக்கு வருகிறான். உள்ளே அவனை விடுவார்களா? தலைவி, தன் தோழியை அனுப்பி, அவனை விரட்டிவிடச் சொல்கிறாள். இதனை வாயில்மறுப்பு என்பர். வந்த தோழியிடம் பாணன் தலைவனைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொல்லி மன்றாடிப் பார்க்கிறான். விடாப்பிடியாக மறுத்த தோழி, கதவை அடைத்துவிட்டு உள்ளே வருகிறாள். வந்தவளிடம், “என்ன சொல்கிறான் அவன்?” என்று தலைவி வினவுகிறாள். “அவன் சொன்னான் .. சுரைக்காய்க்கு உப்பில்லை - ன்னு” என்கிறாள் தோழி. என்னதான் அவன் சொன்னான் என்று தெரிந்துகொள்ள தலைவிக்கு ஆர்வம். மீண்டும் கேட்கிறாள். “எல்லாத்தையும் போல இல்லாம, இவரு – அதான் ஒன் வீட்டுக்காரரு – ரொம்ம்ம்ப நல்லவராம் – ஒம்மேல உசிரயே வச்சிருக்கிறாராம் – அப்படீங்கிறான் இவன்” என்று இளக்காரமாகக் கூறுகிறாள். இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வீட்டு முற்றத்துத் திண்ணைக் கூரையின் உள்ளே ஓர் ஆண் குருவி வந்து அமர்கிறது. அங்கு ஏற்கனவே ஒரு பெண்குருவி அமர்ந்திருக்கிறது – புடைத்த வயிறுடன் - முட்டையிடும் முதிர்ந்த பருவத்தில். ஆண்குருவியின் மூக்கில் ஒரு வெள்ளையான நீண்ட பொருள் இருக்கிறது. உற்றுப்பார்க்கிறாள் தோழி. அது கரும்பின் பூ. ஆண்குருவி அதைக் கொத்திக் கொத்திக் கிழித்து, ஏற்கனவே தாம் தங்கியிருக்கும் கூட்டுக்குப் பக்கத்தில் இன்னோர் அழகிய கூடு கட்டுகிறது. அது பெண்குருவிக்கான maternity home. அதற்கு ஈனில் என்ற அழகிய சொல்லைப் போடுகிறார் புலவர். ஈன் + இல் = ஈனுவதற்கான இல்லம். என்ன அருமையான, சுருக்கமான, பொருத்தமான சொல் பாருங்கள்! “ஹூம் – இந்த வீட்டுல குருவிக்கு இருக்கிற புத்திகூட, இந்த வீட்டு ஆம்புளைக்கி இல்ல” என்கிறாள் தோழி அலுப்புத்தட்ட.


உள்ளுர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் = தலைவன்
சூல்முதிர் பேடை = கருவுற்றிருக்கும் தலைவி


ஈன்இல் இழை இயர் / தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் / நாறா வெண்பூக் கொழுதும் = இது போன்ற அறிவு தலைவனுக்கு இல்லையே
பாட்டில் இதற்கு உவமை இது என்று சொல்லப்படவில்லை. உய்த்துணரும் வகையில் பொதித்துவைக்கப்பட்டுள்ளது.


பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக்குறின்
என்ற குறளும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.


இன்றும் தமிழர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாரதிராஜா படங்களில் கிராமத்துக் கிழவிகள் அடிக்கடி கூறும் சொலவடைகளில் பாதிக்கு மேல் இளக்காரமான உள்ளுறை உவமங்கள்தான். வெளிப்பார்வைக்கு மரியாதையாக நடந்துகொள்கிறவர்கள், சொந்த வாழ்க்கையில் குணமிழந்து இருந்தால், அவர்களைப் பார்க்கும்போது, அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு கிழவி நீட்டி முழக்கிக் கூறுவாள், “ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம், உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்”. ஒய்யாரக்கொண்டை யார், தாழம்பூ எது, ஈரும் பேனும் எது என்று தெரிந்தவர்கள், வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பார்கள். இந்த நுட்பம் தெரியாதவர்கள், “என்ன இந்தக் கெழவி என்னத்தையோ ஒளறிக்கிட்டு இருக்கா” என்பார்கள். விபரம் தெரிந்தவர்கள், “அடி, போடி, இவளே, எல்லாம் கெழவி கூரோடுதான் பேசுறா” என்பார்கள். எனவே, சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது தேவையற்றதாகத் தோன்றும் அடிகளை நன்றாக உற்றுப் பாருங்கள். அவை பெரும்பாலும் உள்ளுறை உவமங்கள் ஆகலாம். உள்ளுறை உவமங்கள் இலக்கிய உத்தி மட்டும் அல்ல. தமிழரின் குருதியில் ஊறியவை. அவற்றைத்தான் தொல்காப்பியர் இலக்கணமாக வடித்துள்ளார்.


4. இறைச்சி


சங்க இலக்கிய உத்தி இன்றும் வழக்கில் இருப்பதைப் பார்த்தோம். அடுத்து, இன்று வழக்கில் இருக்கும் ஒன்று சங்ககாலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது எனக் காண்போம்.


ஒரு வீட்டில் ஒரு பையன் வீட்டுக்கணக்கு போடுகிறான். ஏதோ ஒன்று தெரியவில்லை. தன் தந்தையிடம் கூறுகிறான். அவர் மகிழ்ச்சியுடன், விலாவாரியாக அத்தனையையும் விளக்குகிறார். இடையிடையே “புரியுதா? புரியுதா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்கிறார். இறுதியில், மன நிறைவுடன் அவனிடம் ஒரு சிறிய அடிப்படைக் கேள்வியைக் கேட்கிறார். அவனோ ஏதோ எக்குத்தப்பாக உளறுகிறான். தந்தை மனம் நொந்துபோனார். பின்னர் கூறுவார், “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் என்ன வேண்டும்’னு கேட்டா, ‘சித்தப்பா’ என்றானாம்” இது உள்ளுறை உவமமா? விடிய விடிய ராமாயணம் கேட்டது = பையன் நீண்ட நேரம் பாடம் கேட்டது, என்றாலும், ராமன் = ? சீதை = ? சித்தப்பா = ? என்று கூறமுடியாது. இருந்தாலும் இது நமக்குப் புரிகிறது. சொன்னதை வைத்துச் சொல்ல வந்ததைப் புரிந்துகொள்கிறோம். இருப்பினும் சொன்னதற்கும், சொல்ல வந்ததற்கும் – உள்ளுறை உவமத்தில் அமைந்தது போல் ஒரு ஒன்றுக்கொன்றான நேர்தொடர்பு (one-to-one correspondence) இல்லை. உள்ளுறை உவமத்தில் அமைந்தது போல, சொன்னதற்கும், சொல்ல வந்ததற்கும் ஒரு முழுத் தொடர்பு இல்லாவிட்டால், அல்லது அப்படி ஒரு தொடர்பே இல்லாவிட்டாலும், சொன்னதை வைத்துச் சொல்லவந்ததைப் புரியவைக்கும் வித்தையினை செய்யுள் இலக்கணக்கார்கள் இறைச்சி என்கிறார்கள். அதாவது, கூறிய செய்தியைப் பிரித்து, “இதற்கு இது – இதற்கு இது” என்று சொல்ல முடியாவிட்டாலும், அந்தச் செய்தியின் முழுமை உணர்த்துவதே இறைச்சி. இந்த கலித்தொகைப் பாடலைப் பாருங்கள்.


இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே
வானின் இலங்கும் அருவித்தே
தானுற்ற சூள் பேணான் பொய்த்தான் மலை – குறிஞ்சிக்கலி 41: 18-20


குறிஞ்சி நிலத் தலைவன் ஒருவன் வேட்டையாடச் செல்கிறான். அங்கு ஓரிடத்தில் தலைவியைச் சந்திக்கிறான். காதல் பிறக்கிறது. தலைவிக்கு ஒருநாள் ஐயம் தோன்றுகிறது. அவன் காதல் உண்மையானதுதானா? – என்று. அவன் சத்தியம் செய்கிறான் – உன்னைச் சீக்கிரம் மணம் முடிப்பேன் என்று. இதனையே சூள் உரைத்தல் என்றார்கள் அன்றைய நாளில். அப்படிக் கூறிவிட்டுச் சென்றவன் சென்றவனே! “நீண்ட நாள் வரவில்லை. தனது சூளைப் பொய்த்துவிட்டானே” என்று தோழி வேறு குத்திக்காட்டுகிறாள். அலமருகிறாள் தலைவி. அவள் கூறுகிறாள்:


“ஒளிரும் அருவியை உடையது! ஒளிரும் அருவியை உடையதே!
மழைபெய்து ஒளிரும் அருவியை உடையதே!
தான் சொன்ன சூளைப் பொய்த்தவனுடைய மலை.”


சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவனின் மலையில் மழையும் பெய்து, அருவியும் இருக்கிறதே! என்பது இதன் பொருள். சூளைப் பொய்த்தவன் வாய்மை அற்றவன். எனினும் தலைவிக்குத் தலைவனை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. வாய்மை அற்றவனின் மலையில் மழை பெய்யாது. இருப்பினும் மழை பெய்திருக்கிறது - அதிலும் அருவியாய்க் கொட்டும் அளவுக்கு. அவன் நாட்டில் மழை பெய்வதால் அவன் நல்லவன். தலைவி கூறியது “அவன் சூள் பொய்த்தவன்”. சொல்ல எண்ணியது “அவன் நல்லவன்”. தலைவனின் மலைநாடு அருவியை உடையது என்பதை அவள் மூன்றுமுறை சொல்வதைக் கவனியுங்கள். வானின் என்ற சொல்லைக் கவனியுங்கள். வான் என்பது மேகம் – மழைக்கு ஆகிவந்தது.


இதனுள் இன்னொரு செய்தியும் இருக்கிறது. சங்க காலத்தில், வாக்குறுதி கொடுப்பவர், சூள் உரைத்த பின் நீர் குடிப்பது வழக்கம். இதைப் படியுங்கள்.


அறம் புணை ஆகத் தேற்றிப் பிறங்கு மலை
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி
அம் தீம் தெண் நீர் குடித்தலின் – குறிஞ்சிப்பாட்டு - 208 - 211


பத்துப்பாட்டுள் வரும் குறிஞ்சிப்பாட்டின் தலைவன், தலைவிக்கு வாக்குக் கொடுத்த பின் நீர் குடிப்பதை இது குறிப்பிடுகிறது. சூளுரைத்து நீர் குடித்தவன் மலையில் நீர் அருவியாய்க் கொட்டுகிறதே என்று தலைவி கூறுவதாகவும் இதைக் கொள்ளலாம்..
இதைத்தான் வடமொழியார் தொனி என்கின்றனர். பாடலின் தொனியே இறைச்சி.


உள்ளுறை உவமத்துக்கும், இறைச்சிக்கும் கோடு போட்ட எல்லை கிடையாது. அது பகலுக்கும் இரவுக்கும் உள்ள வேறுபாடுதான். காலையின் கருக்கல் அல்லது மாலை அந்தி ஆகிய வேளைகள் பகலா, இரவா? ஆதவன் தொடுவானத்துக்கும் கீழே இருப்பதால் பகல் இல்லை - இரவு. வெளிச்சம் இருப்பதால் இரவு இல்லை - பகல். இதைப் போல், ஒரு கூற்று உள்ளுறை உவமமா அல்லது இறைச்சியா என்பதில் உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு – ஆகுபெயருக்கும் அன்மொழித் தொகைக்கும் உள்ள வேறுபாடு போல.


இந்த உள்ளுறை உவமம், இறைச்சி என்பவற்றையே, பிற்கால இலக்கணக்காரர்கள் அக்கு வேறாய் – ஆணி வேறாய்ப் பிரித்து அணி வகைகள் ஆக்கினர். தொல்காப்பியர் செய்யுளின் உறுப்பாக 26 + 8 = 34 உறுப்புகளைக் கூறுகிறார். அவற்றுள் அணி இல்லை என்பது கவனிக்கத்தக்கது. உள்ளுறை உவமம், இறைச்சி போன்றவை நம் இரத்தத்தில் ஊறிய மரபுகள் – வெறும் செய்யுள் இலக்கண விதிகள் அல்ல.


எழுதியவர்  முனைவர் பாண்டியராஜா பரமசிவம், மின்னஞ்சல் முகவரி: <pipiraja@gmail.com> 


--Geetha Sambasivam 09:43, 3 நவம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 28 மே 2015, 08:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 10,532 முறைகள் அணுகப்பட்டது.