சப்த விடங்கத் தலங்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

                                     திருச்சிற்றம்பலம்                

                             ஸப்த விடங்கத் தலங்கள்                                         

சோமாஸ்கந்தர்.png


1. திரு ஆரூர்
2. திரு நள்ளாறு
3. திருக்காறாயில்
4. திருமறைக்காடு
5. திருவாய்மூர்
6. திருநாகைக்காரோணம்
7. திருக்கோளிலி


1. ஆலய தரிசனம்

ஸப்த ஸ்தலங்கள்

திருச்சிற்றம்பலம்

சைவத்தின் மேற்சமயம் வேறில்லை யதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லையென்னும் நான்மறைச் செம்பொருள்
வாய்மை வைத்த சீர் திருத்தேவாரமும் திருவாசகமும்
உயர்வைத் தரச் செய்த நால்வர் பொற்றாளெம் உயிர்த்துணையே
(அருணைக்கலம்பகம்)


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி.

நமது புண்ணிய தேசத்தில் இமயமலை முதல் கன்னியாகுமரி வரை நமது இந்துக்கோயில்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன. நம் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் சிறிய மற்றும் பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. அவைகள் இறையடியார்களால் பாடப்பெற்றுள்ளன.


புராதனமான இத்தலங்களை

(1) தேவாரத்திருத்தலங்கள் (274)
(2) ஜோதிர்லிங்கத் தலங்கள் (12)
(3) அட்டவீரட்டத்தலங்கள் (8)
(4) பஞ்சபூதத்தலங்கள் (5)
(5) பஞ்சசபைத் தலங்கள் (5)
(6) ஸப்த விடங்கத் தலங்கள் (7)


எனப் பலவகையாகப் பிரித்து நம் முன்னோர் வழிபாடு செய்து வந்துள்ளனர். அவ்வாறு வழிபட்ட தலங்களுள், ஸப்தவிடங்கத் தலங்கள் பற்றி விரிவாக ஈண்டு காண்போம். ஸப்தவிடங்கத் தலங்கள் உருவாவதற்குக் காரணமானவர் முசுகுந்தச் சக்கரவர்த்தி ஆவார். இவரது வரலாறு பின்வருமாறு நம்பப் படுகிறது.


தேவலோகத்தில் உள்ள கந்தர்வன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட சாபம் காரணமாக குரங்காக உருப்பெற்றான். ஒரு சமயம் அவன் வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்தான். சிவன், பார்வதி அவ்வில்வ மரத்தின் கீழிருந்து உரையாடிக் கொண்டிருந்தனர். வில்வ மரத்தின் மேலிருந்த குரங்கு கிளைக்குக் கிளை தாவியதால் மரத்திலுள்ள வில்வ இலைகள் அம்மையப்பர் மீது அர்ச்சிப்பது போல் விழுந்தன. அம்மை அப்பர் மரத்தின் மேல் நோக்க, அவர்களின் பார்வையின் அருள் திறத்தினாலே குரங்காய் இருந்த கந்தர்வன் தன் சுய உருவம் பெற்றான். அவன் வில்வ மரத்தின் கீழிறங்கி வந்து அம்மையப்பரை வணங்கினான். அம்மையப்பரும், தங்களை வில்வத்தால் அர்ச்சித்ததால் மறுபிறவியில் நீ ஒரு மன்னனாகப் பிறக்கக் கடவாய் என்று ஆசி கூறினர். கந்தருவன் தான் அவ்வாறு மறுபிறவியில் பிறக்கும்போது குரங்கு முகத்தினோடு பிறக்கவேண்டும் என அம்மையப்பரிடம் வேண்டிக்கொண்டான். அம்மையப்பர் அருளியவாறே அக்கந்தர்வன் தனது அடுத்த பிறவியில் குரங்கு முகத்துடனே பிறந்து மன்னனாக ஆட்சி செலுத்தி வந்தான். முசு என்றால் குரங்கு என்று பொருள். மன்னன் குரங்கு முகத்தைப் பெற்றிருந்ததால் முசுகுந்தன் என்று பெயர் பெற்றான்.


ஸோமாஸ்கந்த மூர்த்தி/தியாகராஜர் இந்திரனுக்குக் கிடைத்த வரலாறு

திருமால் ஓர் ஆண்மகவு வேண்டி சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தார். இறைவன் இறைவியோடு காட்சிதர, திருமால் இறைவனை நோக்கி ஒரு அழகிய புத்திர பாக்கியத்தை அருள வேண்டுமென்று வேண்டினார். சிவனும் அவ்வாறே வரமளித்தார். திருமால் சிவனின் இடப்பக்கம் இருந்த உமையை வணங்கவில்லை. அதனால் சினம் கொண்ட உமை சிவனருளால் பெற்ற மகன் சிவனாலேயே இறப்பான் என சாபம் கொடுத்தார். திருமால் திகைத்து நின்றார். பின்பு சிவனின் அருளாணையின்படி அம்மையப்பரையும் , முருகக் கடவுளையும் ஒரே ஆசனத்தில் எழுந்தருளச் செய்து ஆகம விதிப்படி திருமால் பூஜை செய்தார். சிவபெருமான் உமாதேவியாரோடு திருமாலுக்குக் காட்சி அளித்தார். உமையம்மை மனம் மகிழ்ந்து தன் சாபம் தடைபடாது, ஆனால் உன் மகன் நெருப்புக் கண்ணால் வெந்து பின் பிழைப்பான் என்று வரம் தந்தார். சிவனை ஸோமாஸ்கந்தர் திருக்கோலத்தோடு எப்பொழுதும் எழுந்தருளி இன்னருள் புரிந்து இந்த உலக முழுதும் உய்யவேண்டும் என திருமால் வேண்டினார். சிவபெருமானும் அவ்வாறே அருள் புரிந்தார். திருமால் தன் நெஞ்சக் கோயிலில் அம்மூர்த்தியை ஸ்தாபித்து வழிபட்டு வந்தார். தேவலோகத்தில் அசுரர்கள் தொல்லை தாங்காமல் இந்திரன் திருமாலிடம் தஞ்சம் அடைந்தார். அதுசமயம் தான் வணங்கும் சோமாஸ்கந்தரை இந்திரனுக்குத் திருமால் அளித்தார். இதை வைத்து பூஜை செய்தால் சிவனருள் பெற்று வெற்றி கிடைக்கும் என்று கூறி ஸோமாஸ்கந்த மூர்த்தியாகிய தியாகராஜரைத் தந்தார். இந்திரனும் அதைப்பெற்றுக்கொண்டு பூஜை செய்து அசுரர்களின் துன்பத்திலிருந்து நீங்கினான்.


ஒரு சமயம் இந்திரனுக்கும் வலன் என்ற அரக்க அரசன் ஒருவனுக்கும் போர் மூண்டது. அந்த அசுர அரக்கனை வெல்ல முசுகுந்த சக்கரவர்த்தியின் துணையை நாடும்படி இந்திரனுக்கு குருபகவான் ஆலோசனை அளித்ஹார். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க முசுகுந்த சக்கரவர்த்தியும் அசுரனை வென்று தேவர்களுக்கு உதவினான். போரின் முடிவில் இந்திரன் முசுகுந்தருக்கு வரம் அளீக்க விரும்பி யாதுவேண்டுமெனக் கேட்டார். அதற்கு முசுகுந்தர் இந்திரன் வழிபடும் ஸோமாஸ்கந்த மூர்த்தியினை அளிக்கும்படிக் கேட்டார். இந்திரன் தான் வழிபடும் ஸோமாஸ்கந்த மூர்த்தியினை முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு அளிக்க மனமில்லாமல் தேவலோகத்திலுள்ள மயன் என்ற தேவதச்சன் மூலம் தான் வழிபடும் ஸோமாஸ்கந்த மூர்த்தியைப் போன்று மேலும் ஆறு மூர்த்திகளை உருவாக்கி முசுகுந்தச் சக்கரவர்த்தியை இந்த ஏழு மூர்த்திகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டினார். அந்த ஏழு மூர்த்திகளும் ஒரே மாதிரியாக இருந்தனர். இக்குழப்பத்தை நீக்க சிவனை முசுகுந்தச் சக்கரவர்த்தி வேண்டினார். சிவனும் செங்கழுநீர்ப்பூக்களைத் தரித்துள்ள மூர்த்தியே இந்திரன் வழிபட்டு வரும் மூர்த்தி என அருள் புரிந்தார். முசுகுந்தரும் அம்மூர்த்தியையே தன் கையில் எடுத்தார். இந்திரன் அவரது சிவபக்தியைப் பாராட்டி மற்ற ஆறு மூர்த்திகளையும் முசுகுந்தச் சக்கரவரித்திக்கே அளித்தார்.


அவ்வாறு இந்திரனிடம் இருந்து பெற்ற ஏழு மூர்த்திகளையும் பூலோகத்தில் ஏழு இடங்களில் முசுகுந்தச் சக்கரவர்த்தி ஸ்தாபித்தார். இந்திரன் வழிபட்ட மூல மூர்த்தியை (1) திருவாரூரில் ஸ்தாபித்தார். எனைய ஆறையும் முறையே (2)திருநள்ளாறு, (3) திருநாகைக்காரோணம் (4) திருமறைக்காடு(வேதாரண்யம்) (5) திருவாய்மூர் (6) திருக்காறாயில் (திருக்காரவாசல்) (7) திருக்கோளிலி (திருக்குவளை)ஆகிய இடங்களில் ஸ்தாபித்தார். இவையே ஸப்தவிடங்கத்தலங்கள் என்று பெயர் பெற்றன. விடங்கம் என்றால் உளி படாமல் சுயம்புவாகத் தோன்றினமையால் விடங்கர் என்று பெயர் வந்தது.


ஸப்த விடங்க ஸ்தலங்கள்

(1) திரு ஆரூர்


இறைவர் திருப்பெயர்: வன்மீக நாதர், புற்றிடங்கொண்டார் (மூலட்டானம்- பூங்கோவில்) தியாகராஜர்

இறைவியார் பெயர்: அல்லியம் பூங்கோதை
கமலாம்பாள்
நீலோத்பலாம்பாள்

தல மரம்: பாதிரி
தீர்த்தம்: கமலாலயம்
சங்கு தீர்த்தம்
கயா தீர்த்தம்
வாணி தீர்த்தம்

வழிபட்டோர்:
திருமால்
திருமகள்
இராமர்
மன்மதன்
முசுகுந்தச் சக்கரவர்த்தி

Nalvar5.jpg

தேவாரப் பாடல்கள்:

திருஞான சம்பந்தர்:

1.சித்தம் தெளிவீர்காள் (1/91)
2. பாடலன் நான்மறையான்.... (1/105)
3. பவனமாய்ச் சோடையாய்..... (2/279)
4.பருக்கையானை மத்தகத்...... (2/101)
5.அந்தமான உலகு.... (3/45)

திருநாவுக்கரசர்:

1.பாடிளம் பூதத்தினான்....4/4
2.மெய்யெல்லாம் வெண்ணீறு ...(4/5)
3.எத்தீப்புகினும்..... (4/47)
4.சூலப்படையானை......(4/19)
5.காண்டலே கருத்தாய்.....(4/20)
6.முத்து விதானம் (4/21)
7.படுகுழிப் பவத்தன்ன.... (4/52)
8.குழல் வலம் கொண்ட ...(4/53)
9.குலம் பலம்பாவரு ......(4/101)
10.வேம்பினைப் பேசி......(4/102)
11.எப்போதும் இறையும் (5/6)
12.கொக்கரை குழல்..... (5/7)
13.கைம்மான மதகளிற்றின்.....(6/24)
14.உயிரா வனமிருந்த .....(6/25)
15.பாதித்தன் திருவுருவில்....(6/26)
16.பொய்ம்மாயப் பெருங்கடலில்....(6/27)
17.நீற்றினையும் நெற்றிமே.....(6/28)
18.திருமணியைத் தித்திக்கும்..... (6/29)
19.எம்பந்த வல்வினை நோய்......(6/30)
20.இடர் கெடுமாறெண்ணுதியேல்....(6/31)
21.கற்றவர்கள் உண்ணும்..... (6/32)
22. பொரும்கை மதகரி....... (6/33)
23.ஒருவனாய் உலகேத்த...... (6/34)


சுந்தரமூர்த்தி சுவாமிகள்:

1. இறைகளோடு இசைந்த.......(44)
2. குருகுபாயக் கொழுங் (45)
3. தில்லைவாழ் அந்தணர்......(46)
4. பத்திமையும் அடிமை......(47)
5. பொன்னும் மெய் பொருளும்....(48)
6. கரையுங் கடலும்.....(49)
7. அந்தியும் நண்பகலும்.....(50)
8. மீளா அடிமை......(51)
9. தூவாய........(52)
10.பாறு தாங்கிய.......(98)
11. காட்டூர் கடலே.......(100)


இத்தலம் "பிறக்க முத்தி திருஆரூர்" என்று புகழப்படும் சிறப்பினது. இத்தலத்தில் சாயரட்சை எனப்படும் திருவந்திக்காப்பு வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.


கமலை என்னும் பராசக்தி தவம் செய்த பதி.


எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியனமும் சாயரட்சை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.


இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.


ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோவில்.


கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது. இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.


கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, (கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப் படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும் கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய தலம்.


தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. (வீதி விடங்கர்) சப்த விடங்கத் தலங்களுள் இது மூலாதாரத் தலம்.


பஞ்ச பூதத் தலங்களுள் "ப்ருத்வித் (மண்) தலம்".


இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்:


1க்ஷேத்ரபுரம்
2.ஆடகேசுரபுரம்
3.தேவயாகபுரம்
4.முசுகுந்தபுரம்
5.கலிசெலாநகரம்
6.அந்தரகேசுபுரம்
7.வன்மீகநாதபுரம்
8.தேவாசிரியபுரம்
9.சமற்காரபுரம்
10.மூலாதாரபுரம்
11. கமலாயபுரம்

தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் "அஜபா நடன" மூர்த்தியாகத் திகழும் பதி. அதாவது திருமாலின் மார்பில் அமர்வது. மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியிடும்போது அசைந்தாடும் நடையில் உள்ள அதே நடனத்தை இங்கு ஆடுகிறார்.
அஜபா.jpg


இத்தலத்து இறைவர்

1.வீதி விடங்கர்
2. தேவரகண்டபெருமான்,
3.தியாகப்பெருமான்
4.ஆடவரக் கிண்கிணிக்காலழகர்
5.செங்கழுநீரழகர்
6.செவ்வந்தித் தோடழகர்
7.கம்பிக்காதழகர்
8.தியாகவிநோதர்
9.கருணாகரத் தொண்டைமான்,
10.அசைந்தாடும் அப்பர்,
11.அடிக்காயிரம்பொன் வழங்கியவர்
12.கமலேசர்
13.செம்பொன் தியாகர்
14.தேவசிந்தாமணி
15.தியாகசிந்தாமணி

என்று இன்னும் பலப்பல திருநாமங்களில் சிறப்பிக்கப் படுகிறார்.


மநுநீதிச் சோழன் நீதி கேட்ட தன் கன்றை இழந்த ஒரு பசுவிற்காகத் தன் ஒரே மகனைத் தேரேற்றிக் கொன்று நீதி வழங்கிய தலம்.


1.ஆடுதண்டு- மணித்தண்டு
2. கொடி -தியாகக்கொடி
3.ஆச்னம்-இரத்தின சிம்மாசனம்
4.மாலை-செங்கழுநீர் மாலை
5, வாள்-வீரவாள்
6.நடனம்-அஜபா நடனம்
7.யானை-ஐராவணம்
8.மலை-அரதன சிருங்கம்
9.முரசு-பஞ்சமுக வாத்தியம்
10.நாதஸ்வரம்-பாரி
11.மத்தளம்-சுத்த மத்தளம்
12.குதிரை-வேதம்
13. நாடு-சோழநாடு
14. ஊர்-திருவாரூர்
15.ஆறு-காவிரி
16. பண்-பதினெண்வகைப்பண்

என்பன. இவை யாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப் பொருளாகும்.


தியாகேசப் பெருமான் இராஜாதி இராஜா. ஆதலின் அவர் வீதிகளில் தனியாக எழுந்தருளுவதில்லை. அவருடன்,


1.அருளிப்பாடியார்
2.உரிமையில் தொழுவார்
3.உருத்திரப் பல்கணத்தார்
4.விரிசடை மாவிரதிகள்
5.அந்தணர்கள்
6.சைவர்கள்
7. பாசுபதர்கள்
8.காபாலியர்கள்

ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார்.


"இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு ஆரூர் கமலாலயத்தில் எடுத்துக்கொள்" என்று முதுகுன்றத்து ஈசரால் சுந்தரருக்குப் பணிக்கப்பட்ட தலம்.


சுந்தரர் வேண்டிக்கொண்டதன் பேரில் அவருக்காக இத்தலத்துத் தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய தலம்.


பரவை நாச்சியார் வாழ்ந்த பதிசுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணைப் பெற்ற பதிசுந்தரர் "திருத்தொண்டத் தொகையைப் பாடுதற்கு அடியவர்களின் பெருமைகளை விளக்கிய பெருமையை உடையது இப்பதி.


அறுபத்து மூன்று நாயன்மார்களுள்

1.நமிநந்தி அடிகள்
2. செருத்துணை நாயனார்
3.தண்டியடிகள்
4.கழற்சிங்க நாயனார்,
5.விறன்மிண்ட நாயனார்

ஆகியோர் முத்தித் தலம்.


இருப்பிடம்:தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர்-திருத்துறைப் பூண்டி இரயில்பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.


எழுதித் தயாரித்தது திரு வடிவேல் கன்னியப்பன். 

--Geetha Sambasivam 10:45, 28 நவம்பர் 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"http://heritagewiki.org/index.php?title=சப்த_விடங்கத்_தலங்கள்&oldid=3621" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2010, 15:18 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,168 முறைகள் அணுகப்பட்டது.