சரபோஜி - திருக்குறள் உருவாக்கிய நூலகம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எஸ்.விசுவநாதன்தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட "சரபோஜி மன்னர்" ஒருமுறை காசியாத்திரை சென்றார். அப்போது "கொல்கத்தா" நகரத்தில் இருந்த அரசப் பிரதிநிதி ஒருவரை அவர் காண விரும்பி, அதற்குரிய அனுமதியைப் பெற்று அவரைச் சென்று கண்டார்.


தமிழ்நாட்டில் உள்ள அரசர் ஒருவர், தம்மைப் பார்க்க வருவதை அறிந்த அந்த அரசப் பிரதிநிதி, தமிழ்நாட்டின் சிறப்புகளை விசாரித்து வைத்துக்கொண்டார்.


அவர் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து இன்புற்றவர். அது தமிழ்நாட்டில் உண்டான சிறந்த நூல் ஆதலின், "திருக்குறள் தமிழ் மூலநூலைப் பற்றி சரபோஜி மன்னரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்" என்று எண்ணியிருந்தார்.


அவ்வகையில் தம்மைச் சந்தித்த சரபோஜி மன்னரிடம், "திருக்குறள் மூல நூலின் செய்யுள் சிறப்பைப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


சரபோஜி மன்னர் அதுகாறும் தமிழின்பால் அதிக கவனம் கொண்டவர் அல்லர். அவருடைய தாய்மொழி மராத்தி என்பதால் திருக்குறளைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஆனாலும், அரசர் கூர்த்த மதி உடையவர் ஆதலால் ஒருவாறு சமாளித்துக் கொண்டார். தமது அறியாமையை அவர் வெளிப்படுத்த விரும்பவில்லை.


"என்னுடைய புத்தகசாலையில் திருக்குறள் போல ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் உள்ளன. அத்தனை நூல்களையும் நான் தெரிந்து வைத்துக்கொள்வது என்பது முடியாத காரியம். ஆதலால், ஊருக்குப் போனவுடன் திருக்குறள் மூல நூலையும், அது பற்றிய செய்திகளையும் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்! என்று அப்போதைக்கு ஒரு பொய்யைச் சொல்லித் தப்பித்துக் கொண்டார்.


காசியாத்திரை முடிந்து தஞ்சைக்குத் திரும்பியவுடன் "தாம் அரசராய் உள்ள நாட்டுக்குரிய மொழியில் கவனம் செலுத்தாமல் இருந்தது பெருங்குறை" என்பதை அரசர் உணர்ந்தார்.


தமிழ் இலக்கியம் பற்றிய நூல்களைச் சேகரித்தார். எங்கெங்கே தமிழ்ப் புலவர்கள் உள்ளார்கள் என்பதை அறியத் தலைப்பட்டார். ஏராளமான ஏட்டுச் சுவடிகளை விலை கொடுத்து வாங்கினார். இப்படியாகத் தமது அரண்மனையில் மிகப்பெரிய ஒரு நூலகத்தை உருவாக்கினார் அரசர். அதுவே பின்னாளில் சரபோஜி மன்னருக்கு அழியாத புகழைத் தேடிக்கொடுத்த "சரசுவதி மகால்" நூல் நிலையமாக மாறியது.


பிறகு, தாம் வாக்குக் கொடுத்தபடியே திருக்குறள் மூலநூலையும், அரிய பழந்தமிழ் நூல்களின் அட்டவணை ஒன்றையும் சரபோஜி மன்னர் அந்த அரசப் பிரதிநிதிக்கு அனுப்பிவைத்தார். இந்த நிகழ்ச்சியை "தமிழ்த்தாத்தா" உ.வே.சாமிநாதையர், தாம் எழுதிய "பழையதும், புதியதும்" என்ற நூலில் "சரசுவதி மகால்" நூலகம் உருவான விதத்தைப் பதிவுசெய்துள்ளார்.


சிறந்த - பழந்தமிழ் ஏட்டுச்சுவடிகளும் மூலநூல்களும் கிடைக்கக் காரணமாக இருந்தது "திருக்குறள்"தான் என்பது தமிழர்களுக்குப் பெருமையல்லவா?


நன்றி:- தினமணி

--Ksubashini 11:52, 8 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 8 ஆகஸ்ட் 2011, 11:52 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,596 முறைகள் அணுகப்பட்டது.