சிதம்பரம் கோயில் சாசனமும் கலிங்கத்துப் பரணியும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 நண்பர்களே,

அரிமா நோக்கு சஞ்சிகையில் வெளிவந்த ”சிதம்பரம் கோயில் சாசனமும் கலிங்கத்துப் பரணியும்” என்ற தலைப்பிலான கட்டுரையை உங்கள் வாசிப்பிற்காக வழங்குகின்றோம். இக்கட்டுரையைத் தட்டச்சு செய்து நமது வாசிப்பிற்காக வழங்கியவர் திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள். அவருக்கு நமது நன்றி.

அன்புடன்
சுபாசிதம்பரம் கோயில் சாசனமும் கலிங்கத்துப் பரணியும்
பா.சிவசங்கரி
சாசனங்கள் என்பன ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகிய அனைத்தையும் குறிக்கும். இவற்றுள் பெரும்பாலும் அரசாணைகள், உடன்படிக்கைகள், அரசனின் போர் நடவடிக்கைகள் போன்ற பதிவுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இத்தகைய சாசனங்களின் வரிசையில் தில்லை நடராசர் கோயிலிலுள்ள முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சாசனமும் ஒன்று. இச்சாசனம் வருமாறு:

வட்ட வெண்குடை மன்னர் தம்புகல்
கொண்டு மாமுடி கொண்டுபோர்
மாறு கொண்டேழு போசளன் தடை
கொண்டு வாணன் வனம் புகத்
தொட்ட வெம்படை வீரன் வெற்றி
புனைந்த சுந்தர மாறன் முன்
சூழி விட்ட தெலிங்கர் சேனை
துணிந்து வென்ற களத்து மேல்
விட்ட வெம்படி பட்ட பொழுதெழு
சோரி வாரியை யொக்கு நீர்
மேல் மிதந்த நிணப் பெருந்திரள்
வெண்ணுரைத்திர ளொக்குமுன்
பட்ட வெங்கரி யந்த வீரர்
படிந்த மாமுகி லொக்கும் வீழ்
பருமணிக் குடையங்கு வந்தெழு
பருதி மண்டலமொக்குமே”1

மேற்கூறிய, முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சாசனத்தையும், கலிங்கத்துப் பரணியையும் ஒப்பு நோக்குவதன் மூலம், கலிங்கத்துப் பரணியின் சிறப்பையும், பண்டு தொட்டுக் கோயிலில் நிகழ்ந்து வரும் ஆளும் வர்க்கத்தின் தலையீட்டையும் ஒருங்கே அறிந்து கொள்ள இயலும்.

கலிங்கத்துப் பரணியில் சோழனின் வெண்கொற்றக் குடையின் சிறப்புக் குறிப்பிடப் பட்டுள்ளது. குலோத்துங்கச் சோழனது குடையின் பேரொளியில் கலியெனும் காரிருள் மறைந்ததாகவும், வெண்கொற்றக்குடை பரப்பிய வெண்ணிலவால் மலைகளெல்லாம் சிவன் வாழும் கைலாய மலைகள் போல மாறியதாகவும் கலிங்கத்துப் பரணி பதிவு செய்துள்ளது. இதே போல், சுந்தரபாண்டியனும் வட்டவடிவமான அழகிய வெண்கொற்றக் குடையினைப் பெற்றிருந்ததாகச் சாசனம் குறிப்பிட்டுள்ளது.

குலோத்துங்கனின் மணிமுடிச் சிறப்பினைக் கூற வந்த செயங்கொண்டார், அவன் மணிமுடி சூடியதும் நாட்டில் அதுவரை இருந்த தீமைகள் அழிந்து நன்மை பயக்கும் செயல்கள் நடைபெறத் தொடங்கியதாகப் பதிவு செய்துள்ளார். மேலும், குலோத்துங்கனின் கிரீடத்தின்மேல் கடைதாங்கி வரும் அரசர்கள் முடியின் மீது முடிதாங்கி வருபவரைப் போலக் காணப்பட்டதாகக் கூறியுள்ளார். சுந்தரபாண்டியனும் மாமுடியை உடையவனாக விளங்கினான் என்று சாசனம் அவனது முடிச் சிறப்பைக் கூறியுள்ளது.

கலிங்கத்துப் பரணியிலே, காளிதேவி வாழ்கின்ற வனத்திற்கு உவமை சொல்ல வந்த ஆசிரியர், சோழனுடன் நடந்த போரில் தோற்ற பாண்டிய மன்னன் காட்டு வழியாகவும், மலைவழியாகவும் விழுந்தடித்து ஓடினான் என்றும், அப்பாண்டிய மன்னனின் ஊர்களான வெள்ளாறும், கோட்டாறும் தீக்கிரையாகி வெந்து பொசுங்கின என்றும் கூறியுள்ளார். அத்தகைய கொடிய இடம் காளிதேவி வசிக்கும் பாலை வனம் என்று உவமை கூறுவதன் மூலமாகக் குலோத்துங்கச் சோழனுக்கு அஞ்சிப் பாண்டியன் காட்டுவழியாக ஓடியதைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

மேலும், சோழமன்னனின் யானைகளின் சிறப்பினைக் கூற வந்த இடத்தில் சேர, பாண்டிய மன்னர்களை இழித்துக் கூறுவதன் மூலம் தன் பணியைச் சிறப்புற நிறைவேற்றியுள்ளார். சோழனின் யானைப்படை வரிசை வரிசையாக அசைந்து செல்வது, மலைநாடுடைய சேரமன்னன் தனது நாட்டு மலைகள் அனைத்தையும் அழைத்துக்கொண்டு அபயதானம் வாங்க வந்தது போன்று காணப்படுகிறது. அத்தகைய சிறப்புடைய யானைகள் தம்முடைய நாசித் துளையினின்றும் சிதறுகின்ற நீர்த்துளி களானவை சோழனுக்கு அஞ்சிப் பாண்டியர்கள் தென் திசை ஓட, அத்திக்கில் கிடைத்துள்ள முத்துக்களை வாரிக்கொண்டு தென்றல் வீசுவது போன்று தோன்றுகிறதாம். இவ்வாறு, குலோத்துங்கச் சோழனின் சிறப்பினைக் கூறும் பொருட்டுச் சேர, பாண்டிய வேந்தர்களுக்கு இழிநிலை கற்பித்துள்ளார் சயங்கொண்டார்.

இதேபோ, சுந்தரபாண்டியனின் சிறப்புக்கூற அமைக்கப்பட்ட இச்சாசனமும் அவனது புகழைக் கூறும் பொருட்டுப் போசள மன்னனை இழித்துரைத்துள்ளது. சுந்தரபாண்டியனுக்கும், போசள மன்னனுக்கும் இடையே நடந்த போரில் போசளன் வீழ்ந்ததாகவும், அவன் காட்டிலோடி ஒளியும் நிலையினை அடைந்ததாகவும் இச்சாசனம் குறிப்பிட்டுள்ளது.

வட கலிங்க மன்னனான அனந்தவர்மன், சோழனுக்கு இருமுறையாகச் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தவில்லை. அதனால், குலோத்துங்கன், கலிங்க மன்னன் மீது போர்ச்சீற்றங் கொண்டு வெகுண்டெழுந்தான். அப்போரின் பொருட்டு ஓங்கி அறைந்த முரசொலி கடல் ஒலியாய் முழங்கிற்று. குலோத்துங்க சோழனின் படை, கலிங்கப் படையை அழித்து வெற்றி வாகை சூடியது. சுந்தரபாண்டியனும், தன் முன் சூழ்ந்து நின்ற தெலிங்கர் சேனையைப் போரிட்டு வென்றார்.

கலிங்கத்துப் பரணியில் போர் முடிந்த பின்னர் அப்போர்க்களக் காட்சியை வருணிக்கும் ஆசிரியர் இறந்த யானைகளின் இரத்தம் கடலாகப்பரந்து கிடப்பதாகவும், இரத்தப் பெருக்கில் யானைகளின் உடல்கள் மிதந்து செல்வதாகவும் இக்காட்சியானது தோணிகளுக்குப் பின் தோணிகள் தொடர்ந்து செல்வது போன்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குருதிச் சேற்றில் கால் வழுக்குற்று நடக்க முடியாமல் தவிக்கும் குதிரைகள் இரத்த வெள்ளத்தின் மீது வரிசையாய்ப் படிந்து கிடப்பது, வெள்ளத்தைத் தடுக்க வைத்த குதிரை மரங்கள் போன்று உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் செயங்கொண்டார்.

இம்மாதிரியான, போர்க்கள வருணனைகள் சுந்தரபாண்டியனது சாசனத்திலும் உள்ளன. சுந்தரபாண்டியன் வென்ற போர்க்களமானது எவ்வாறிருந்ததெனில், குதிரைப்படைகள் சிந்திய இரத்தம் கடல் நீரைப் போலவும், இறந்த வீரர்களின் குடல்கள் போன்ற உறுப்புகள் கடலினுள் மிதக்கும் நுரை போலவும் இருந்ததாகச் சாசனம் பதிவு செய்துள்ளது.

கலிங்கப் போரில் தோல்வியைத் தழுவிய கலிங்க மன்னன் அநந்தவர்மன் சோழர்படைக்கு அஞ்சி ஓடி ஒளிந்தான். அவனைப் பிடித்து வருமாறு கருணாகரன் ஆணையிட்டான். ஆணை பிறக்கும் முன்னே அணிமலைகளும், நெடுங்காடுகளும் அடையப் புகுந்து ஒற்றர்கள் தேடத் தொடங்கினார். கலிங்க மன்னனைப் பற்றிய சுவடு ஒன்றும் தென்படவில்லை. ஆனால் அவனுடைய படைகள் ஒரு மலைக்குவட்டைப் பற்றி நின்ற சுவடு மட்டும் தென்பட்டது. எக்குவடும், எக்கடலும், எந்தக் காடும் இனிக் கலிங்கர்களுக்கு அரணாக முடியாது என்ற கொள்கையால் சோழவீரர்கள் தமது வேலாலே வேலி கோத்து விடியுமளவும் காத்து நின்றனர். செம்பரிதி எழுந்தது. சூழ்ந்து நின்ற மலையும் செம்மலையாகத் திகழ்ந்தது. ஒளிந்து நின்ற கலிங்க வீரர்களையும் உடல்வேறு தலைவேறாகத் துணித்து இரத்தமயம் ஆக்கியதனாலே, ‘உதயகிரி இதுவோ, அதுவோ!’ என்ற ஐயம் சூரியனுக்கு உதித்து விட்டது.

சுந்தரபாண்டியனது போர்க்களத்தில் இறந்த யானைகள் கடல்நீரைப் பருகும் மேகம் போலவும், தோற்ற அரசன் விட்டுச் சென்ற வெண்கொற்றக் குடை கடலிலிருந்து எழும் சூரியன் போலவும் இருந்ததாகச் சாசனம் குறிப்பிட்டுள்ளது.

இப்படியாக, சிதம்பரம் கோவில் சாசனமும், குலோத்துங்கன் மீது பாடப்பட்ட கலிங்கத்துப்பரணியும் ஒப்புமை உடையதாக உள்ளனவென்பதை உவமைகள், வருணனைகள் வழியாகக் கண்ட நாம் , இதற்கான அரசியல் பின்புலத்தைப் பற்றியும் சிறிது காணலாம்.

முதலாம் குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் [கி.பி.1070-1120] இலங்கை சோழர் பிடியிலிருந்து நழுவியது. இருப்பினும் குலோத்துங்கன் அது குறித்துப் பெரியதாகச் சிரத்தை ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவன் பாண்டியர்களை அடக்கி வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான். இவனது பாண்டியர்களுக்கெதிரான போரில் ஐந்து பாண்டிய மன்னர்களை வென்று கோட்டாற்றுக் கோட்டையைத் தீக்கிரையாக்கினான். மேலும், கேரளப்படைகள் பலவற்றை அடக்கிக் கடற்படையில் தனது வெற்றித் தூணை நட்டான் என்று சிதம்பரத்திலுள்ள நாள் குறிப்பிடப்படாத ஒரு வடமொழிக் கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது.2 இதிலிருந்து குலோத்துங்கன் தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த பாண்டியமன்னர் கூட்டத்தை அடிமைப் படுத்தினான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு, சோழர்களால் தாக்குண்ட பாண்டிய மன்னர்கள் தாங்கள் பட்ட கறைக்குக் கழுவாய் காணும் விதமாகச் சோழர்களைப் பழிக்குப் பழி வாங்க எண்ணினர். இவர்களில் குறிப்பிடத் தக்கவன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன். இவனது ஆட்சிக்காலத்தில் [கி.பி. 1215-1239] கி.பி. 1219-ஆம் ஆண்டு சோழநாட்டின் மீது படையெடுத்தான். 3

சுந்தரபாண்டியனது போர்ச்செயல்களை உற்று நோக்கும்போது மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தபோது என்னென்ன அழிவுகளைச் செய்தானோ அவற்றையே தானும் திருப்பிச் செய்தான். சோழநாட்டுப் படையெழுச்சியின் போது பாண்டியநாட்டு வீரர்கள் சோழரின் பழைய தலைநகரான தஞ்சையையும், உறையூரையும் தீக்கிரையாக்கினர், பேரழிவை நிகழ்த்தினர். பலமணிமண்டபங்களும், மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும் இடித்துத் தள்ளப்பட்டன. இவ்வாறு, பாண்டியர் தமது சீற்றத்தைத் தணித்துக் கொண்டனர். 4

சோழன் கரிகாற்பெருவளத்தான் பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு, அவரது புலமைத் திறனைப் பாராட்டும் விதத்தில் பரிசாக வழங்கிய பதினாறு கால் மண்டபம் மட்டுமே இவ்வழிவினின்றும் தப்பியது என்பதைத் திருவெள்ளறையில் காணப்படுகின்ற செய்யுள் வடிவிலான பின்வரும் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக் கூறுகிறது.

வெறியார் தளவத் தொடைச் செய மாறன் வெகுட்னதொன்றும்
அறியாத செம்பியன் காவிரிநாட்டு ளரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப்பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறுமேயங்கு நின்றனவே. 5


இவ்வாறு பாண்டியர்கள் சோழர்களைப் பழிவாங்கி வந்தனர்.

சோழமன்னர்கள் அனைவரும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குப் பல கொடைகள் வழங்கியும் பொன் வேய்ந்தும் மிகச் சிறப்பாக அக்கோயிலைப் பராமரித்து வந்தனர். இதில் குறிப்பாக இரண்டாம் குலோத்துங்கனைக் கூறலாம். ஒரு கல்வெட்டில், “தில்லை நகருக்கு ஒளியூட்டும் வகையில் தன் முடியை அணிந்து கொண்ட அரசன்” என்று இவன் புகழப்பட்டுள்ளான். இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியில் தில்லைமாநகரம் புதுப்பித்தும், விரித்தும் அழகு படுத்தப் பட்டது என்பது இக்கல்வெட்டின் பொருளாக இருக்கலாம். கோயில் திருப்பணியும், சிதம்பரம் கோயில் சீரமைப்பும் தாம் இவனுடைய ஆட்சியில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகும். இச்செய்தியை, இவனுடைய 7-ஆம் ஆட்சியாண்டில் நிறுவப்பட்ட திருப்புறம்பயம் கல்வெட்டு முதன்முறையாக வெளிப்படையாகக் கூறியுள்ளது.6

இதிலிருந்து, சோழர் காலத்தில் சிதம்பரம் கோயில் மிகவும் சிறப்புற்று விளங்கியதையும், சோழமன்னர்களால் சிதம்பரம் நடராசர் கோயில் போற்றப்பட்டதையும் அறிந்து கொள்ளலாம்.

பாண்டியர் எழுச்சிக் காலத்தில் குறிப்பாக, முதலாம் சடையவர்மன சுந்தரபாண்டியன் காலத்தில் சோழர்கள் மிகவும் அடக்கி ஒடுக்கப் பட்டிருந்தனர். பாண்டியர் தம் முன்னோர் பட்ட களங்கத்திற்குத் தீர்வாக முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் போன்ற மன்னர்களால் சோழர்கள் மீது போர் தொடுக்கப்பட்டது. இந்தப்பழி வாங்கும் முறையை முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனும் கடைப்பிடித்தான். தன் முன்னோர் காலத்தில் பாண்டியப் பேரரசு தளர்ச்சியுறக் காரணமாகவும் பாண்டியர்களால் கைப்பற்றப் பட்ட சோழ இராச்சியத்தை மீட்டுச் சோழர்களிடத்தில் ஒப்படைத்தும் வந்த போசளர்களின் கொட்டத்தை அடக்கினான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

இவன் போசளர் தலைநகரான திருச்சிக்கு வடக்கே, ஏழு கல்தொலைவில் அமைந்துள்ள, இப்போது சமயபுரம் என்று அழைக்கப்படும், அப்போதைய கண்ணனூரைத் தாக்கி அழித்தான். இச்செய்தியே, சிதம்பரம் கோயில் சாசனத்திலும் குறிப்பிடப் பட்டு உள்ளது.

இப்போர் வெற்றிக்குப் பின்னர் தெலுங்குப் பல்லவன் ஆளுந்திக்க கோபாலன் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றான். தெலுங்குப் பல்லவனின் தலைநகரான காஞ்சியையும் கைப்பற்றினான். 8 இப்போர்க்கள வருணனையே சாசனத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
சோழர் காலத்தில், சிறப்புற்று விளங்கிய சிதம்பரம் நடராசர் கோயில், பாண்டியர்களின் காலத்திலும் சிறப்புற்றிருந்தது. குறிப்பாக, முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் இக்கோயிலுக்குப்பெரும் பொருளைத் தானமாக வழங்கினான். தில்லையம்பலப்பதியின் திருக்கோயிலுக்குப் பொன் வேய்ந்தான். 9

இவ்வாறு, சோழர்கள் மீது படையெடுத்தும், சிதம்பரம் கோயிலுக்குச் சோழர்களைப் போலவே பொன் வேய்ந்தும் தங்கள் பழம்பெருமையை நிலைநாட்ட முயன்றனர் பாண்டியர்கள்.

இவ்வாறெல்லாம், தங்களுக்குப் பெருமைத் தேடிக்கொண்ட பாண்டியர்கள், சோழர்களின் மீது பாடப்பட்டிருந்த இலக்கியச் செல்வங்களைக் கண்டு பொருமி இருக்க வேண்டும். இதன் காரணமாகவே, முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், சோழன் மீது பாடப்பட்ட கலிங்கத்துப் பரணியினை ஒட்டித் தனக்கும் ஒரு பாடலை இயற்றச் சொல்லி இருக்கவேண்டும். அப்பாடலைச் சோழர்கள் போற்றிய சிதம்பரம் கோயிலில் சாசனமாக்குவதன் மூலம் தன் குலப்பெருமை மேலும் பரவுவதுடன், நிலைத்து நிற்கும் என்று எண்ணியே சிதம்பரம் கோயிலில் அத்தகைய போர் பற்றியதான சாசனத்தைப் பொறித்திருக்க வேண்டும்.

மேலும் கோவிலில் மன்னன் அளித்த கொடைகள், நிவந்தங்கள் பற்றியதான சாசனம் இடம்பெறுவதே பொருத்தமானதாகும். அவ்வாறின்றி இத்தகைய கொடூரப் போர் பற்றியதான சாசனம் இடம்பெற்று உள்ளது சற்றும் பொருத்தமானதல்ல. இருப்பினும் இடம்பெற்றுள்ள இது, அக்காலந்தொட்டே கோயிலில் நிகழ்ந்து வரும் ஆளும் வர்க்கத்தின் தலையீட்டையும், அவர்களின் அதிகாரப் போக்கையுமே காட்டுகின்றன.

இதுகாறும் கூறியவற்றால், வெவ்வேறு கால கட்டத்தைச் சேர்ந்த இலக்கியமும், சாசனமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையதாக உள்ளன என்பது தெளிவாகும். இலக்கியம்—சாசனம் ஒப்பீடு தொடர்பான ஆய்வுகள் இன்றியமையாதவை. அவ்வாறான ஆய்வுகளுக்கு இக்கட்டுரை ஒரு தூண்டுகோல் ஆகும்.

குறிப்புக்கள்

1. சங்ககால வரலாற்று ஆய்வுகள்- மயிலை.சீனி.வேங்கடசாமி , பக். 220-221

2. சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி பக். 427

3. பாண்டியர் வரலாறு – ம.இராசசேகரதங்கமணி பக். 442

4. பாண்டியர் வரலாறு—ம.இராசசேகரதங்கமணி பக். 445

5. பாண்டியர் வரலாறு – ம.இராசசேகரதங்கமணி பக். 446

6. சோழர்கள் – பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரி பக். 474

7. பாண்டியர் வரலாறு – ம.இராசசேகரதங்கமணி பக். 475

8. பாண்டியர் வரலாறு – ம.இராசசேகரதங்கமணி பக். 479

9. பாண்டியர் வரலாறு –ம. இராசசேகரதங்கமணி பக். 481

10. கலிங்கத்துப் பரணி – பேராசிரியர் ஆ. முத்துச்சிவன்


நன்றி - அரிமா நோக்கு 3:4 ஜனவரி 2010

--Ksubashini 16:24, 6 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 6 ஆகஸ்ட் 2011, 16:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,720 முறைகள் அணுகப்பட்டது.