சித்தர் வழியில் பாம்பாட்டிச் சித்தர்18

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே ! “

Imagesபாம்பாட்டி.jpg

- என மனித உடலின் நிலையற்ற தன்மையை அனைவரும் வியப்புறும் படி பாடியவர்தான் -- பாம்பாட்டிச் சித்தர். பாம்புகளைக் கண்டு பயப்படாமல் காடு, மலையெல்லாம் அஞ்சாமல் பாம்புகளைத் தேடித் திரிந்த இளைஞர்தான் பாம்பாட்டிச் சித்தர்.  ஒருநாள் பாம்பாட்டிச் சித்தரிடம் சிலர் வந்து “தம்பி, உன்னுடைய அசாத்தியத்  துணிச்சல் எங்களை பிரமிக்க வைக்கிறது. நவரத்தின மயமான உடலினை கொண்ட குட்டையான பாம்பு ஒன்று இந்த மலைக்காடுகளில் சுற்றித்திரிகிறது. அதன் தலையில் மாணிக்கம் ஒன்று இருக்கிறது. அந்தப் பாம்பு இரவில் மட்டுமே உலவிடும். மருந்தாக அதன் விஷம், மாணிக்கம் எங்களுக்கு தேவைப்படுகிறது.அந்த விஷப் பாம்பை எப்படியாவது பிடித்து கொடு....” என்றனர்.


பாம்புகளைப் பிடிக்கப்  புற்றை இடிப்பது, படமெடுத்து ஆடச் செய்வது, வேடிக்கைக் காட்டுவது இவையெல்லாம் பாம்பாட்டிச் சித்தரின் விருப்பமான விளையாட்டு, இனிமையான பொழுது போக்கு. எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும், எவ்வளவு கொடிய விஷ நாகமானாலும் அதனைப் பிடித்து அதன் விஷத்தைக் கக்கவைத்து விடுவார். அதனால்தான் அந்த வைத்தியர் பாம்பாட்டிச் சித்தரிடம் அந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.எவராலும் பிடிக்க முடியாத அந்த நவரத்தினப் பாம்பை எப்படியேனும் பிடித்தாக வேண்டும் என்ற வேட்கையில் வெறி பிடித்தாற் போல் காடுகளில் அலைந்து திரிந்தார். ஒரு புற்றிலும் அவர்கள் கூறிய நவரத்தின் பாம்பு இல்லாமல் போனதைக் கண்டு மிகவும் மனம் நொந்தார். இப்படி மென் மேலும் அலைந்து, திரிந்த சமயம், திடீரென்று காடே அதிர்வது போன்ற ஒரு சிரிப்பொலி கேட்டது. பாம்பாட்டிச் சித்தர் நாலாபுறமும் திரும்பிப் பார்த்தபோது, ஓரிடத்தில் அவருடைய விழிகள் குத்திட்டு நின்றன. அங்கே ஒளி வீசும் திருமேனியுடன் சட்டைமுனி எனும் புகழ் பெற்ற சித்தர் நின்று கொண்டிருந்தார்.


சிங்கள நாட்டு தேவதாசியின் வயிற்றில் பிறந்தவர்தான் சட்டை முனிவர் எனும் இந்த சித்தர். இவர் பிறந்த பின் இவரது தாயாரோடும், தந்தையாரோடும் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறினார். சட்டைமுனி, கோவில் வாசலில் தட்டை ஏந்திக்கொண்டு யாசகம் பெற்றுத் தம் தாய் தந்தையருக்கு உதவி வந்தார். இளையவரான சட்டைமுனி ஒருநாள் கோவிலில் யாசகத்திற்கு நின்று கொண்டு இருந்தபோது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட தவசி ஒருவரைக் கண்டார். அவரைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே அவரால் கவரப்பட்டு அவருடனேயே புறப்பட்டுப்  போய் விட்டார். அந்தத் தவசியுடனே காடு-மலை என சுற்றியலைந்தார். அப்படி அலைந்து திரியும் போதுதான் போக முனிவரை சந்திக்கும் பேறு பெற்றார். அன்று முதல் அவர் போக சீடரானார்.அப்போது கொங்கணவர், கருவூரார் ஆகிய சித்தர்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்த அபூர்வ சித்தர்களிடமிருந்த அனைத்து சித்தர் நெறிகளையும் சட்டை முனி கற்றுத் தெளிந்தார். தாம் கற்றவற்றை எல்லாம் உலகத்தார்க்குத் தெரியப்படுத்த அற்புத நூல்களாக எழுதினார்.


பொதுவாக சித்தர்களின் சித்த நெறியும் அற்புத இரகசியங்களும் வெளிப்படையாக எழுதப்பட்டால் கொடியவர்களின் தீய ஆயுதமாகிவிடும் என்பதால்தான் அவற்றையெல்லாம் பரிபாஷையாகஎழுதப்படும் வழக்கம் இருந்து வந்தது.ஆனால், சட்டை முனி அதற்கு எதிர்மாறாக, விளக்கமாக வெளிப் படையாகவே சித்த இரசியங்களை எழுதியதால், திருமூலர் அந்நூலைக் கிழித்தெறிந்தார். உரோம ரிஷியும் கடுங்கோபம்
கொண்டு சட்டை முனியை விமர்சனம் செய்தார்.சட்டை முனிக்கும் உரோம ரிஷிக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. இதனால் சட்டை முனி தனது அரிய நூற்களைக் கிழித்து எறிந்து விடுவார் என அஞ்சி அந்நூற்களைக்  காகபுஜண்டரிடம் கொடுத்தார். அவர் அந்நூற்களை தமது காக்கைச் சிறகுகளினடியில் மறைத்துக் கொண்டார். பின்னர் அவற்றை பத்திரமாக அகத்தியரிடம் கொடுத்துவிட்டார். அதன்பின் சட்டைமுனி இரசவாதம் முதலான வேதியியல் மர்மங்களை அறிய சதுரகிரி மலை சென்று அளவற்ற ஆற்றலைத் தரும் இரசமணியை தயாரித்து அளப்பரிய செயல்களை நிகழ்த்தினார்.


திருவரங்கநாதன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார் சட்டை முனி கால் நடையாகவே அரங்கனைக் காணாச்சென்றார். ஆனால், அவர் வந்து சேர்வதற்குள் நள்ளிரவு பூஜையும் முடிந்து நடையையும் சாத்திவிட்டார்கள். திருவரங்கனை எப்படியும் தரிசித்து விடவேண்டும் என்று
பைத்தியம் பிடித்தார் போல் பூட்டிய கோவிலுக்கு வெளியே நின்றுகொண்டு “அரங்கா அரங்கா” என்று மூன்று முறை கூவினார். தாபம் பொங்க அவர் கூவியதும் கோயில் மணிகள் முழங்க மேளதாளங்கள் ஒலித்தன.முரசுகள் அதிர்ந்தன. கோவில் கதவுகள் தாமாகத் திறந்தன.ஊர் மக்கள் ஒன்றும் விளங்காதவர்களாய் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது சட்டை முனி அரங்கன் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். சட்டை முனி இருந்த கோலம் கண்டு மக்கள் திகைத்தனர்.  திருவரங்கன் அணிந்திருந்த சங்கு சக்கரம் ஆபரணங்கள் போன்றவை அவர் மேலிருந்தது.


சட்டை முனி நிச்சயம் கள்வனாகத்தான் இருக்க வேண்டும் என்று  எண்ணிக் கோவில் பட்டர்கள் அவரை அரசன் முன்னிறுத்தினர். அரசனும் சட்டை முனி கள்வனெ குற்றம் சுமத்திய போது அவர் “அரங்கனே அனைத்தும் அறிவார்” என கூறினார். கோவில் வாசலுக்கு வந்ததும் “அரங்கா” என்று மூன்று முறை கூவி அழைத்தார். அப்போது சட்டை முனியின் அருகில் திருவரங்கன் காட்சி தந்தார்.  அந்த தெய்வீக காட்சியைக் கண்டு மெய்ம்  மறந்து  நின்ற வேளையில் சட்டை முனி இறைவனோடு இரண்டறக் கலந்தார். அந்தச் சட்டை முனிதான் இப்போது காட்டில் ஒளி வீசும் திருமேனியுடன் பாம்பாட்டிச் சித்தருக்குக் காட்சியளித்தார். ஆனால், பாம்பாட்டிச் சித்தருக்கு அவர் யாரென்று அறியவில்லை. ஆகையால்
சட்டை முனியைப் பார்த்து “யார் நீங்கள் ’’ என்று பாம்பாட்டிச் சித்தர் கேட்டார்.

ஈஸ்வரன்.jpg

“ நீ எதற்காக அலைந்து கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உலகத்திலுள்ள அத்தனை பாம்புகளையும் பிடித்து ஆட்டக்கூடிய திறமைசாலி என்றும் அறிவேன்.ஆனால், உன் உடம்புக்குள்ளேயே ஒரு பாம்பு ஒளிந்திருக்கிறதே அது தெரியுமா உனக்கு. எல்லோரும் அறியாதது போலவே நீயும் அதனை அறியப்படவில்லை.அதை ஆட்டுபவன் தான் அறிவாளி.அதனை அடக்கி ஆள்பவர் தாம் சித்தர்கள்.அடக்கத் தெரியாதவர்கள் பைத்திக்கார மனிதர்கள். எனவேதான் சொல்கிறேன்.கண்ணுக்குத் தெரியும்  வெளியில் திரியும் அந்தப் பாம்புகளை விட்டு விடு. உன் உள்ளே இருக்கும் அந்தப் பாம்பைத் தேட, அடக்க வழி தேடு..”“ சாமி, இந்தக் காடெல்லாம் பாம்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஒரு பாம்பு இருப்பதை இது நாள் வரை அறியவில்லை. இதைப்பற்றி இது வரை யாரும் என்னிடம் கூறியதுமில்லை. தயவு செய்து தாங்கள்  எனக்கு அதனைத் தெரிவிக்க வேண்டும்..” என்று பணிந்து நின்றார் பாம்பாட்டி சித்தர்


“இறைவனது படைப்பில் மிகவும் அற்புதமானது இந்த உடம்புதான். இந்த உடம்புக்குள் ஆதியில் இருந்தே ஒரு பாம்பு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. குண்டலினி என்பது அதன் பெயர். இந்தப் பாம்பை யாரும் அறியவில்லை. இந்தப் பாம்பு அறிவைப் பெருக்கி, உணர்வை ஒடுக்கி உணர்வு அறுந்த நிலையாகி, அறியாமை இருளை நீக்குகிறது. உடம்புக்குள் இருக்கும் ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்ள கூடிய தெய்வ தரிசனம் கிட்டும். சுவாசம் ஒடுங்கும்.அதன் காரணமாக உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி எனும் பாம்பு விழித்து, வால் கீழாகவும் தலை மேலாகாவும் ஆகும்.பின் சிவத்தில் ஒடுங்கும். ஆன்மா ஆனந்தமயமாகும்.பரம்பொருளான இறையுடன் ஒன்றிணை யும் நிலையே முக்தி நிலை. முக்தி நிலையை அடையும்போது, அங்கே உயிர் என்றும் பரம் என்றும் பேதங்கள் இல்லை. இரண்டும் ஒன்றாக இணைந்த நிலையே அந்தப் பேரானந்த நிலை. அந்த நிலையில் உயிர் அற்றுப் போகும்; பரமும் அற்றுப்போகும். எஞ்சி நிற்பது ஒரு பேரானந்த
நிலை மட்டுமே ” என்றார்.


’’ சாமி! நீங்களே என் குருநாதர். இந்த அரும்பெரும் இரகசியத்தை இன்றுதான் உங்களால் அறிந்தேன்”

உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைத் தள்ளி கண்டு கொண்டு அன்பாய்க்
களித்து நின்று ஆடுபாம்பே !


குருவின் அருளால் பாம்பாட்டிச் சித்தர் சட்டை முனியின் தாரக மந்திரத்தினால் பல்வேறு சித்திகள் அடைந்து மக்களின் பிணியைப் போக்கி வாழச் செய்தார். இந்நிலையில் அந்நாட்டு மன்னன் தீய ஒழுக்கமும், தீயோரின் சேர்க்கையின் காரணத்தால் இறந்து போனான். மன்னனைச் சுற்றிலும் அரண்மனையில் ராணியும், மற்றவர்களும் அழுது அரற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது ஆகாயமார்க்கமாக சென்று கொண்டிருந்த பாம்பாட்டிச் சித்தர் மனமிரங்கி பூமியில் இறங்கினார். தனது உடலை ஒருபுறம் ஒளித்து வைத்துவிட்டு, இறந்து போன ஒரு பாம்பை மன்னனைச் சுற்றி அழுது கொண்டிருந்தவர்கள் முன்பாக வீசினார். இறந்து போன பாம்பென்று அறியாது அவர்கள் பயந்து பதறிப்போய் ஓடினர். ஆனால் ராணி மட்டும் கணவரை விட்டு அகலாதிருந்தாள். பாம்பாட்டிச் சித்தர் இறந்து போன மன்னனின் உடம்புக்குள் புகுந்தார்..அந்நேரம் மன்னனின் கைகால் அசைந்தது. உடல் அசைந்தது கண்டு மன்னன் உயிர் பெற்றுவிட்டதை அறிந்து ராணி முதலான மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அந்த ஆரவாரத்தில் மன்னனின் பார்வை செத்த பாம்பின் மீது விழுந்தது. பார்வைப்பட்டதும் பாம்பு உயிர்த்தெழுந்து கூட்டத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தது.


“ஏ... பாம்பே! அதற்குள் உனக்கு என்ன அவசரம். இறந்து போன நீ உயிர் பெற்றவுடன் உனக்கு உன் மனைவியின் நினைவு வந்து விட்டதா? இன்னுமா உனக்கு ஆசை விடவில்லை. உலக வாழ்வில் ஏமாந்து விடாதே..” என்று பாடலாய்ப்  பாடினார். பாம்பை முன்னிலைப்படுத்திச், சொல்வது போல் பாடியபோது  சுற்றியிருந்த மக்கள் மன்னருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று ஐயம் கொண்டு அஞ்சி நகர்ந்தனர்.ராணி தன் கணவனை நீண்ட காலம் அறிவாள். அவனிடம் இருந்த தீய பழக்கங்களையும் அறிவாள். ஆனால், இப்போது அவன் தத்துவ மழையாகப் பாடல் பாடுவதைக் கண்டு குழம்பினாள். வேறு  வழியின்றி ராணி மன்னனிடமே விளக்கம் கேட்டாள். ” ராணி...! நான் கோபம் எனும் யானையை அறிவு எனும் அங்குசத்தால் கொன்று விட்ட சித்தன். என்னை பாம்பாட்டிச் சித்தர் என்று சொல்வார்கள். உங்களுடைய துயரத்தினைப்  போக்குவதற்காக சில காலம் இந்த உடலினுள் புகுந்து உபதேசிக்க வந்தேன். நான் செல்லும் நேரம் வந்துவிட்டது” எனக் கூறி மன்னன் உடம்பை விட்டு வெளியேறினார்.


சித்தர் பெருமக்கள் குருவை மிகவும் மேலாக வைத்துப் போற்றினர். திருமூலரின் திருமந்திரப் பாடல்களில் குருவின் உயர்வை நாம் காணலாம். ஒரு சாதகன் மிகப்பெரிய ஞானியாக இருப்பின் அவர் உள்ளத்தில் இறைவனைக் காண குருவின் துணை மிகவும் அவசியம்.
பாம்பாட்டிச் சித்தரும் தாம் இயற்றிய பாடல்களில் குருவை போற்றி வணங்கியுள்ளார்.


காற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்
போற்றிமணம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்
புகழ்ந்து நின்று ஆடு பாம்பே !

எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்

--

--Geetha Sambasivam 09:31, 22 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2011, 12:12 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,075 முறைகள் அணுகப்பட்டது.