சித்ரகுப்தர் திருக்கோயில்- காஞ்சிபுரம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 காஞ்சிபுரம் - அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்


                                                                                 
T 500 1410.jpg


மூலவர் : சித்ரகுப்தர்
 பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு

தல சிறப்பு:

சித்ரகுப்தருக்கென தனி கோயில் அமைந்திருப்பதே தலத்தின் சிறப்பு.

பிரார்த்தனை

 சித்ரகுப்த பூஜையை முறையாகச் செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது பகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். ஆகையால் சித்ரகுப்தரை வணங்குவதால் கேதுவினால் துன்பம் உண்டாகாது. வளமான வாழ்வு, மேன்மை, ஞானம், மோட்சம் அனைத்தும் கிட்டும். சித்ரகுப்தரைக் போற்றும், ஓம் யமாய தர்மராஜாய ஸ்ரீசித்ரகுப்தாய வை நமஹமந்திரத்தையும் எழுதி, தங்கள் பெயர், முகவரி, அன்றைய தேதி மற்றும் முழு வரவு செலவு கணக்கை எழுதி, அதை மடித்து படத்தின்முன் வைத்து பூஜிப்பார்கள். அடுத்துவரும் ஆண்டில் எதிர்பார்க்கும் வரவு செலவையும் உத்தேசமாகக் குறித்து, அது நிறைவேற சித்ரகுப்தரின் ஆசியை வேண்டுவார்கள்.

தலபெருமை:

முன்னொரு காலத்தில், சௌதாஸ் என்ற மன்னன் தற்போது சௌராஷ்டிரம் எனப்படும் பிரதேசத்தை ஆண்டு வந்தான். கொடுங்கோலனாகவும், அசுரர்களை விடவும் மோசமாக ஆட்சி செய்து மக்களைத் துன்புறுத்தி வந்தான். தனது ஆணையில்லாமல் ஒரு செயலும் நடக்கவிட மாட்டான். தன்னை ராஜாதி ராஜன், பேரரசன் எனக் கூறிக்கொண்டான். ஒரு நாள், காட்டில் அவன் வேட்டையாடச் சென்ற போது தன் பரிவாரங்களை விட்டு வெகு தூரம் வழிதவறிச் சென்றுவிட்டான். அலைந்து திரிந்த சமயத்தில் அவன் செவியில்,


ஓம் தத்புருஷாய வித்மஹே

சித்ரகுப்தாய தீமஹி

தந்நோ: லோகப் பிரசோதயாத்


என்று எவரோ சித்ரகுப்த கயாத்ரியை மந்திர உச்சாடனம் செய்யும் ஒலி விழுந்தது. சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றான். அங்கு சீடர்கள் புடைசூழ, தவசிகளும் முனிவர்களும் வேள்வி செய்வதைப் பார்த்து வெகுண்டான். என் ஆணையில்லாமல் இப்படியொரு யாகமா செய்கிறீர்கள்? நிறுத்தாவிட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன் ! என்று கத்தினான்.

துறவிகள் அவனைச் சட்டை செய்யவில்லை. அதனால் மேலும் வெகுண்டு, வேள்வி நடத்தும் முதியவரை அணுகித் தன் உடைவாளால் அவரைக் கொல்ல வந்தான். அதைக் கண்ட ஒரு இளம் சீடன், அப்பனே ! நீ யார்? எதற்காக இடையூறு செய்கிறாய்? என்று வினவ, சௌதாஸ், நான் ராஜாதி ராஜன் சௌதாஸ். நீங்கள் எல்லாம் யார்? என்று கோபமாகக் கேட்டான்.

அந்தச் சீடனோ புன்முறுவல் பூத்து, சௌதாஸ் ! ராஜாதிராஜன் என்பவர் சித்ரகுப்தர் ஒருவர்தான் ! அந்தப் பட்டம் பெற வேறு எவருக்கும் தகுதியில்லை. நாங்கள் சித்ரகுப்த வம்சாவளியினரான காயஸ்தர்கள். எங்கள் குலதெய்வம் சித்ரகுப்தருக்கு பூஜை செய்கிறோம். தாங்களும் கலந்துகொண்டு புண்ணியம் பெறுங்கள். செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இந்த பூஜை செய்து, நரகத்திலிருந்து விடுபட்டு சித்ரகுப்தரின் அருள்பெற முன் வாருங்கள் என்று பூஜையின் மகிமையை விளக்கினான். அதைச் செவிமடுத்த சௌதாஸ், தான் செய்த பாவச் செயல்களுக்கு வருந்தி மனம் மாறினான். வேள்வியில் கலந்துகொண்டவன், பின்னால் ஆண்டுதோறும் சித்ரகுப்த பூஜையை முறையாக நடத்தி ஆராதித்து வந்தான்.

அந்திமக் காலத்தில் உயிர்பிரிந்த அவனது ஆத்மாவை, யமதூதர்கள் யமலோகத்துக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கு சித்ரகுப்தர் யமனிடம், சௌதாஸின் கர்மவினைகளைத் தன் பதிவேட்டிலிருந்து படித்தார். பிரபு! இவன் செய்த பாவச் செயல்கள் எண்ணில் அடங்காது. அதர்மமே மேலோங்கி நிற்கிறது. நரகத்தில்தான் இவன் உழல வேண்டும். ஆனால், வாழ்வின் பின்னாளில் மனம் திருந்தி, நம் இருவரையும் முறையாக பூஜித்துள்ளான். அதனால் இவனுக்கு, சொர்க்கலோகத்துப் பலனை அனுபவிக்க அனுமதிக்கலாம். பிரபு ! என்று கூற, யமனும் தலையசைத்து சம்மதித்தான். சித்ரகுப்தரின் வாக்குக்கு மறுப்பு ஏது! சௌதாஸ் சொர்க்கலோகவாசியானான்.

தல வரலாறு:

பார்வதி பரமேஸ்வரர் அருளால் அவதரித்தவர். பிள்ளையில்லா குறை நீங்க, இந்திரன் - இந்திராணிக்கு தெய்வப் பசு காமதேனு மூலம் அவதரித்தவர் என்று இவரது பிறப்பு பற்றிச் சொல்வதுண்டு.

யமலோகத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்ய, பிரம்மன் தன் மனதுள் ரகசியமாக உருவகப்படுத்திய உருவத்தை இருத்தி, 11,000 ஆண்டுகள் ஈசனை நோக்கித் தவமியற்றினார். முடிவில், தன் மனதில் இருந்தவரே தன் முன், கையில் எழுத்தாணி ஓலைச்சுவடியுடன், இடையில் தொங்கும் உடைவாளுடன் தெய்வீகக் களை சொட்ட தோன்ற, தவத்தின் பலனை உணர்ந்தவராக அகமகிழ்ந்தார். ரகசியமாக என் உடம்பிலிருந்து (காயம்) தோன்றியதால், சித்ரகுப்தர் என அழைக்கப்படுவாய். உனது சந்ததியினர் காயஸ்தா என அறியப்படுவர் என்று அருளினார் பிரம்மன். தமிழகத்தில் இவர்கள் கருணீகர் என அழைக்கப்படுகிறார்கள். சித்ரகுப்தர் இவர்களது முழுமுதற் கடவுளாக வணங்கப்படுகிறார்.

பின்னர் நான்முகனின் ஆணைப்படி சித்ரகுப்தர் காளிதேவியை உபாசித்து, அவளது கருணையால் எண், எழுத்து இரண்டிலும் புலமைபெற்ற உலகின் முதல் மாணாக்கராக ஆனார். பிறகு, அவந்திகாபுரி (உஜ்ஜயினி) சென்று மகா காலேஸ்வரரின் அருளால் கணக்கு வழக்குகளைப் பேரேட்டில் பதியும் திறமையைப் பெற்று, ஐப்பசி மாத யம துவிதியை நாளில் யமதர்மராஜனின் கணக்கராகப் பதவி ஏற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் சித்ரகுப்தருக்கென ஒரு சில கோயில்களே உள்ளன. அதில் முதன்மையானது இக்கோயில்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: சித்ரகுப்தருக்கென தனி கோயில் அமைந்திருப்பதே தலத்தின் சிறப்பு.

திருவிழா:

சித்திரை மாத பௌர்ணமி அன்று, சித்ரகுப்தருடைய ஜெயந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 

முகவரி:

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில் 74, நெல்லுக்காரத் தெரு, காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் காஞ்சிபுரம்.

பவள சங்கரி திருநாவுக்கரசு

தேதி - 09/04/2011
நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 10 மே 2011, 14:34 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,623 முறைகள் அணுகப்பட்டது.