சீதாலட்சுமி - நினைவலைகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இக்கட்டுரைகள் சீதாலட்சுமி அவர்களால் மின்தமிழ் மடலாடல் குழுவில் எழுதப்பட்டவை.

சீதாலட்சுமி: மின்னஞ்சல்:

 

பொருளடக்கம்

முன்னுரை

இது ஒரு சமுதாய வரலாறு. சுதந்திரம் கிடைத்த பின்னர் அரசு, அரசியல், மற்றும் மக்கள் இணைந்து ஆற்றிய செயல்கள், காலத்தின் போக்கிலே ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் இவைகளைக் காணலாம். இத்தொடர் சென்னை ஆன் லயனில் வந்து கொண்டிருக்கின்றது. மின் தமிழில் வந்த எண்ணங்கள் ஊர்வலத்தின் தொடர் என்றும் கூறலாம். ஒரு முறையாவது இத் தொடரை வாசிக்க வேண்டிக் கொள்கின்றேன். பல பயிற்சிகள் பெற்றுப் பல பிரிவுகளில் பணியாற்றியவள் நான். எனக்குச் சில வாய்ப்புகள் அதிகமாகவே கிடைத்தன. எனவே என் அனுபவங்கள் பல தகவல்களைச் சுமந்து வரும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

பகுதி 1

தண்ணீர்விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

சுதந்திரப்பயிர் நினைத்து பாரதி பாடியவை, இக்காலச் சூழலுக்கும் பொருந்துமன்றோ?

வரலாற்றுச் சுவடுகளைப் பார்த்தால் மனிதன் ஓடி ஓடி அலைந்து, புலம் பெயர்ந்து , விலங்கு வாழ்க்கையை வெறுத்து , அமைதி வாழ்க்கைக்கு ஒரு கோட்பாடு கண்டான். குடும்பமும், கூட்டமாக வாழும் சமுதாயமும் பிரச்சனைகளின்றி வாழத் தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வாழத் தொடங்கினான். இலக்கிய வாழ்க்கை கிடைத்தது.


காலச் சக்கரத்தின் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது. சூழ்நிலையின் தாக்கங்கள் அவனை, அவன் வாழ்க்கையை அசைக்க ஆரம்பித்துவிட்டது.காலத்திற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் மனிதன் இருக்கின்றான். வாழும் முறைகளின் இடைவெளி மிரட்டுகின்றது; பாரதியின் ஊர்க்காரியான எனக்கும் ஓர் ஆதங்கம் உண்டு

உருண்டோடும் காலத்திலே உயிர்பிழைக்க ஓடியவன்
மருண்டோடும் வாழ்வொதுக்கி மகிழ்வில்லம் கண்டுகொண்டான்
அருள் கண்டான்! அன்பு கண்டான்! அமைதிகாக்கும் குடில்கண்டான்!
கருகத்தான் விடலாமோ? காத்திடுதல் கடமையன்றோ !

என் நினைவலைகள் உங்களை வருடும் பொழுது உங்களுக்குப் புரியாதவளாக இருக்க விரும்பவில்லை. என் பிள்ளைப் பருவ நிகழ்வுகளை எங்கோ கொட்டிவிட்டேன். உங்களிடம் சின்ன அறிமுகம் செய்து கொள்ள நினைக்கின்றேன். நினைவலைகள்
நீண்டதொரு பயணம். அதற்குரிய சக்தி எனக்கு எங்கிருந்து கிடைத்தது? கரிசல் மண் எட்டயபுரம் செதுக்கிய ஒரு பெண் நான்..

என் தந்தை சுதந்திரப் போராட்டத்தில் மும்முறை சிறை சென்றவர். சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்த்தார். தேவைக்கு மேல் எது வைத்திருப்பினும் அவன் திருடன் என்பார். எளிய வாழ்க்கையில் பழக்கினார்.

எங்கு சென்றாலும் என்னைஅழைத்துச் செல்வார். முதன் முதலில் பார்த்த அரசியல்வாதி இராஜாஜி அவர்கள். நான் பார்த்த முதல் எழுத்தாளர் கல்கி அவர்கள். ஆரம்பமே எனக்கு உச்சம். பாரதி மண்டபம் எழுப்ப ஆலோசனை செய்ய வந்தவர்கள், அவர்களைப் பார்க்க என் தந்தை கூட்டிச் சென்று வணங்கி ஆசி பெறச் சொன்னார். எழுதும் பொழுது பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. நானோ இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து விட்டுத்தான் எழுத ஆரம்பிப்பேன். கல்கியின் தரிசனம் பத்திரிகைகள் படிக்கத் தூண்டியது. அதிலிருந்து படிக்கும் பழக்கம் என்னை விடவில்லை.

நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் பிறந்தவள் நான். ஒரு வயது கூட ஆகவில்லை. சுதந்திரப் போராட்டத்திற்குச் சென்ற தந்தை ஐந்து வருடங்களுக்குப் பின்னரே வீட்டிற்கு வந்தார். பின்னரும் காந்திக் கட்சியில் தொடர்பு வைத்திருந்தார். குழந்தைப் பருவத்தில் காக்கா கதை , நரிக்கதை சொல்லிக் கேட்டிருப்போம். எனக்கு நாட்டுக் கதை, காந்திக் கதை சொல்லி வளர்த்தார்கள். கவுன் போட்டுக் கொண்டு கையில் காங்கிரஸ் கொடி ஏந்தி அப்பாவுடன் ஊர்வலங்களுக்குச் சென்றிருக்கின்றேன். இராட்டை நூற்று, கதர்ச் சிட்டம் கடையில் போட்டுக் கதர்த் துணி வாங்கி உடுத்தியவள் நான். கதர்த் துணி பார்த்தால் எனக்கு காந்தி நினைப்புத்தான் வரும். அந்தச் சூழலில் ஏற்பட்ட உணர்வுகளே வேறு. பாட்டு வாத்தியார் கூட கீர்த்தனைகள் சொல்லிக் கொடுப்பதுடன், வைஷ்ணவ ஜனதோ, வந்தே மாதரம், சாந்தி நிலவ வேண்டும்
பாட்டுக்களைச் சொல்லிக் கொடுப்பார்.. சுதந்திர தாகம் பட்டிகளிலும் இருந்தது. ஒவ்வொருவரின் துடிப்பிலும் நாட்டு நினைவு கலந்திருந்தது.

எனது சமுதாய அக்கறைக்கு அடித்தளம் அமைத்தது என்பிள்ளைப் பருவ வாழ்க்கைதான். என் பயணம் எட்டயபுரத்தை விட்டுப் புறப்படப் போகின்றது. 

பகுதி 2

( தாமதம் காரணமாகச் சில வரிகள் எழுத நேர்ந்துவிட்டது. இது ஒரு சமுதாய வரலாறு. 100 ஆண்டுகள் செய்திதர நினைத்து ஆரம்பித்தேன். ஆனால் காலச் சக்கரத்தில் மனிதன் தோன்றிய காலம் வரை போய் வர நேர்கிறது. மரபுச் செய்திகள் வரும்.
மனித வாழ்வின் மாற்றங்கள் பல கோணங்களில் காட்டப்படுகின்றன. தனி மனிதச் சாடல் கிடையாது. ஆனால் குறைகளைச் சுட்டிக் காட்டி இருக்கின்றேன். சாதனை புரிந்தவர்களின் பெயர்களை எழுதியுள்ளேன். இதிலும் நாயகி நானே. வரலாற்றுக்கு சான்றாக, சாட்சியாக வருகின்றேன். ஒரு முறையாவது எல்லோரும் படிக்க வேண்டுகின்றேன். வரிகளுக்கு மத்தியில் உண்மைகள் புதைந்திருக்கும். என் கடமையாய் நினைத்து எழுதியுள்ளேன். சமுதாயத்திற்கு நான் தரும் காணிக்கை )

என் பயணம் புதிய பாதையில் செல்லப்போகும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. என் தந்தைக்கு,அவர் தலைவர் கர்மவீரர் காமராஜரைப் பார்க்கும் ஆவல் பிறந்துவிட்டது. சென்னைக்குப் போகும் பொழுது என்னையும் கூட்டிப் போனார். பெரியவரிடம் தன் மகள் பி.ஏ பட்டம் வாங்கியதையும், வாத்தியார் வேலைக்குப் போயிருப்பதையும் கூறினார் உடனே நடந்த உரையாடல்தான் என் பயணத்தை மாற்றியது –
“வாத்தியார் வேலைக்கு யாரும் வருவாங்க. கிராமத்துக்குப் போய் வேலை பாக்கச் சொல்லு .” என்று என் தந்தையிடம் கூறிய பெரியவர் என்னை நோக்கி, “ நிறைய கிராமத்துலே பள்ளிக்கூடம் இல்லே. இருந்தாலும் புள்ளங்களே சரியா அனுப்பறதில்லே. இன்னும் அப்பாவித்தனமா இருக்காங்க. படிச்சாத்தானே உலகம்போற போக்குப் புரியும். நீ போய் இதெல்லாம் சொல்லணும்.சரியான ரோடு கிடையாது. லைட்டு இல்லே(மின் இணைப்பு), ஆஸ்பத்திரிகூட இல்லை. கிராமம் முன்னுக்கு வந்தாதான் நாடும் நல்லா இருக்கும். போவியா ?” என்று என்னைக் கேட்டார் . நான் சரியென்று தலையாட்டினேன். அது அவருக்குத் திருப்தி தரவில்லை போலிருக்கின்றது. “என்ன தலையாட்டறே, கிராமத்துக்கு நடந்துதான் போகணும். நிறைய ஊருக்கு பஸ் கிடையாது. வெள்ளைத் துணி அழுக்காகுமேன்னு நினைக்கிறியா?” அவர் கேள்வியில் கொஞ்சம் கோபம் தொனித்தது. நான் வாய் திறந்து பேசினேன்.“ நிச்சயமா போவேன். நீங்க சொன்னபடி அவங்க நல்லதுக்காக வேலை செய்வேன் “ அவர் முகத்தில் சிறு புன்னகை ! “கெட்டிக்காரி. புளச்சுப்பே “ என்றார் பெரியவர். அவர் ஆசிகளுடன் புறப்பட்டேன்.

சிலர்முன் சென்றால் பேச்சு வருவதில்லை. சிலரைப் பார்த்தவுடன் அர்த்தமில்லாமல் ஒதுங்க நினைக்கின்றோம். ஏதோ ஒரு காந்த அலைவரிசைமனிதர்களிடையே விருப்பு வெறுப்புகளைத் தோற்றுவிக்கும் போல் இருக்கின்றது. இந்த அனுபவம் பலமுறை எனக்குக் கிடைத்தது. என் தந்தையைப் பார்த்தேன். அவருக்குத்தான் மகள் பட்டம் வாங்கியதில் எவ்வளவு பெருமை ! அக்காலத்தில் ஒரு பெண் பட்டம் வாங்குவ்து வியப்புக்குரியதாக இருந்தது தன் மகள் படித்த மகிழ்ச்சியைத் தன் தலைவனிடம் கூற ஒரு தொண்டன் நினைக்கின்றான். தலைவனும் அக்கறையுடன் கேட்டு , எதிர்கால நடவடிக்கைக்கும் அறிவுரை கூறுகின்றான்.

இங்கே மதிப்பு மட்டுமன்று, தலைவன் தொண்டனுக்கிடையில் ஒரு பந்தமே இருக்கின்றது. அதனால்தான் அவர் ”பெருந்தலைவர்” என்று அழைக்கப் படுகின்றார். நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வலிமை பெற்றதும் இந்தக் குணத்தாலேதான். கண்டிப்பு மிக்கவர். கோபக்காரர். ஆனால் கருணை காட்ட வேண்டிய நேரத்தில் அரவணைப்பவர். கிராமங்களை உயிராய் நேசித்தவர். நான் அரசியல்வாதியில்லை. தொண்டன் தலைவனைப் புகழ்வது பெரிதில்லை. எக்கட்சியையும் சாராதவர்களும் ஒருவரை மதிக்க வேண்டும்; அவர்களிடமிருந்து புகழுரைகள் வரவேண்டும்.

ஊருக்கு வந்த பின் நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம். எந்த வேலையைக் குறிப்பிட்டார் என்று அப்பொழுது தெரியவில்லை. ஆனால் சில நாட்களில் விடை கிடைத்தது. என் மாணவன் சுப்பையா செய்தித்தாள் ஒன்றை எடுத்து வந்தான். அதில் ஒரு விளம்பரம் - வட்டார வளர்ச்சிப் பணிகளில் வேலை செய்ய பெண் ஊழியர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கிராமங்களில் செய்யும் பணி. பெரியவர் கூறியது இதுவாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொண்டோம். உடனே நான் இந்த வேலைக்கு மனுச் செய்தேன். பதிலும் சீக்கிரம் வந்தது. காந்தி கிராமத்தில் தேர்வு நடத்தப்படும். மூன்று நாட்கள் அங்கே இருக்க வேண்டும். தேர்வுக்குச் சென்றேன்.தேர்வுக்குச் செல்லும் முன் சோம சுந்தர பாரதியாரின் தம்பி ராஜாராம் அவர்களிடம் சிபாரிசுக் கடிதம் பெற்றுக் கொண்டேன்.

காந்தி கிராமச் சூழலே அமைதியாக இருந்தது. எங்களுக்குச் சில வேலைகள் கொடுத்துச் செய்யச் சொன்னார்கள். எங்கள் ஆர்வத்தையும், செய்யும் தொழிலில் எங்கள் பங்களிப்பையும் மதிப்பிட்டார்கள். எனக்குப் பிடித்தமாக இருந்தது. மறு நாள் ஒரு தலைப்பைக் கொடுத்து பேசச் சொன்னார்கள். நான் பேச்சிலே கெட்டி. கைதட்டு வாங்கினேன். ஒரு கருத்தைக் கூறி அதைப் பாட்டாக எழுதிப் பாடச் சொன்னார்கள். சிறு வயதில் கவிதை எழுதியவள்; சங்கீதம் முறைப்படி கற்றவள்; ஆனாலும் சினிமா மெட்டில் பாட்டிசைத்து மீண்டும் கைதட்டுப் பெற்றேன்.

அடுத்து நாடகம் - முதல் நாள் மாலையே சொல்லி இருந்தார்கள். கல்லூரி நாட்களில் விளையாட்டுகளுக்குக் கூடப் போகாமல் பாட்டு எழுதுவதும், நாடகம் கதை வசனம் எழுதுவதும், நான் எழுதிய நாடகத்திலே நடித்ததும இப்பொழுது பயன்பட்டது. இப்பொழுது மட்டுமா? கலைவாணர் அரங்கில் கலைஞர் தலைமையில் நாடகம் போடும் வாய்ப்பே கிடைத்தது. கல்லூரியில் நான் எழுதிய ஓரங்க நாடகத்தில் கண்ணகியாக நடித்தேன். அதிலிருந்து எங்கள் பிஷப் மேன்மைதகு ஆண்டவர் ரோச் அவர்கள் என்னைக் கண்ணகி என்றுதான் கூப்பிடுவார்.காந்தி கிராமத்தில் என் நடிப்புப் பாராட்டப் பட்டது.

மூன்றாவது நேர்காணல் - அங்கும் என்னால் அச்சமின்றி, தயக்கமின்றி பதில் சொல்ல முடிந்தது. என் தந்தையுடன் பல பெரியவர்களை என் பிள்ளைப் பருவத்தில் பார்த்ததும் பேசியதும்தான் என்னிடம் இப்படி ஒரு தன்னம்பிக்கையைத் தோற்றுவித்திருக்க வேண்டும். பிஞ்சிலே வளையாதது பின் வளைத்துப் பயனில்லை. சின்னப் பிள்ளைகளை அரவணைத்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அம்மாக்கள் தொலைக் காட்சிக்கு முன் உட்கார்ந்திருப்பது குழந்தைகளைத் தனிமைப் படுத்திவிட்டது. இப்பொழுது வளரும் சூழல், ஊடகத்தாக்கம் இவற்றால் மனிதன் உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றான்.

என் தேர்வு முடியவும் நான் கொண்டு சென்றிருந்த சிபாரிசுக் கடிதம் கொடுத்தேன். அவர்கள் அதனைப் பிரித்துக் கூடப் பார்க்காமல் சொன்னது - “நாங்கள் இந்த வேலைக்கு எதிர்பார்க்கும் தகுதி உன்னிடம் இருக்கின்றது. சிபாரிசு பார்த்துத் திறமை இல்லாதவர்களை வேலைக்கு எடுத்தால் கிராமம் உருப்படுமா? நீ கடிதம் கொண்டுவந்ததே தப்பு. கெட்டிக்காரப் பெண்ணாய் இருப்பதால் உனக்கு வேலை தருகின்றோம். இனி இப்படிச் செய்யதே” அப்பொழுது ஊரக வளர்ச்சித் துறைக்குத் மேலதிகாரியாக இருந்தவர் காந்தீயவாதி திரு வெங்கடாசலபதி அவர்கள். சரியான தலைமை. சிபாரிசும் குறுக்கு வழிதான். அதிகார வர்க்கங்கள் உண்டாக்கிய சலுகைகளில் ஒன்றுதான் சிபாரிசும். வரலாற்றில் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவர்களால் தீமைகள் ஒவ்வொன்றாகத் தோன்ற ஆரம்பித்தது; கால ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்து விட்டது. இப்பொழுது ஒழிக்க இயலாத அளவு பரவி விட்டது.

இப்பொழுது என்ன நடக்கின்றது? வேலைக்கு வேண்டிய முக்கியமான தகுதி காசும், சிபாரிசுகளும். திறமையானவர்கள் ஒதுக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி எந்த அளவு பாதிக்கப்படும் என்று வருங்கால சந்ததிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அறுவை சிகிச்சையின் பொழுது கத்திகூடச் சரியாகப் பிடிக்கத் தெரியாதவனுக்கு, சிபாரிசால் வெற்றி கொடுத்தால் மனித உயிர்களுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா? உதரணத்திற்காக இன்னொன்றும் கூற விரும்புகின்றேன்.சில காரணங்களால் சில சலுகைகள் தருகின்றோம். அதிலும் தேர்ந்தெடுக்க குறைந்தது 70 மதிப்பெண் பெற வேண்டுமென்று ஒரு நடுநிலை நிர்ணயம் செய்தால் அந்த மதிப்பெண் பெற முயல்வான். அதைவிடுத்து 40 மதிப்பெண் போதும் என்று சிபாரிசு செய்தால் அவனுக்கும் படிப்பில் அக்கறை ஏற்படாது. எதிர்காலத்தில் கல்வித்தரம் உயர அக்காலத்திற்கேற்பப் பல கோணங்களில் சிந்தித்துச் செயல் படவேண்டும். வேகமாக மாறிக் கொண்டுவரும் சூழ்நிலைகளில், பிள்ளைகள் அத்தனையும் தாண்டி சிறப்பாகப் படிக்கின்றார்கள். அமெரிக்காவில் புஷ் அவர்களும், ஒபாமா அவர்களும் கூட்த் தங்கள் நாட்டுப் பிள்ளைகளை நோக்கி இந்தியக் குழந்தைகளைப் போல் படியுங்கள் என்று சொல்கின்றார்கள். இந்தியா பெரிய நாடு. நம் நாட்டின் வளர்ச்சிக்குத் தரமான மனிதர்களை உருவாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. படிப்பில் மட்டுமல்ல, நாட்டுக்கென்று இருக்கின்ற சில கலாசாரங்களையாவது அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.. குடும்ப அமைதிக்குத் தேவையான சில கட்டுக் கோப்பை , நாகரிகப் போக்கில் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். எதிர்கால சந்ததிக்கு இதனைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அறிவுரைகள் யாருக்கும் பிடிக்காது. வழிகாட்டுகின்ற பெரியவர்களும் தங்களை அதற்குத் தகுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

என் நினைவலைகளின் பயணத்தில் பல காட்சிகள் காணலாம். காலச்சக்கரத்தின் சுவடுகளை ஒதுக்கித் தள்ளக் கூடாது. நான் ஏற்கனவே சொன்னதுபோல் என் பயணம் ஒரு த்ரில்லர் பயணம். அடுத்துவரும் காட்சியிலேயே சில அதிர்ச்சிக் காட்சிகளைப் பார்க்கலாம்

பகுதி 3

நினைப்பதெல்லாம் நடப்பதுவும் தெய்வத்தின் அருள். என் வேலைக்கு அரசு ஆணை கிடைக்கவும் எங்கள் குடும்பமே மகிழ்ந்தது. வெளியூரில் வேலை என்றாலும் வீட்டில் கலக்கம் இல்லை. அக்காலத்தில் ஒரு பெண்ணை வெளியூருக்கு அனுப்பித் தனியாக வசிக்க அனுமதி தருவது அபூர்வம்.

என் பயணம் தொடங்கும் முன்னர் சில விஷயங்களை முதலிலேயே கூறிவிட விரும்புகின்றேன். எழுதும் பொழுது சிலரின் பெயர்கள், சில ஊர்களின் பெயர்கள் எழுதுவதைத் தவிர்த்திருக்கின்றேன். செய்திகள் முக்கியமே தவிர , அங்கே பெயர்கள் தேவையில்லை. நான் யாருடைய மனத்தையும் காயப்படுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் தேவையான உண்மைகளும் புரிய வேண்டும். என் அனுபவங்களைத் தெரிவிப்பதை சமுதாயத்திற்கு நான் செய்யும் கடமையாக நினைக்கின்றேன்.

அடுத்தும் இன்னொரு தகவல். கூறப்படும் சம்பவங்கள், அவை நிகழும் காலத்தைத் தயவு செய்து கவனத்தில் கொள்ள வேண்டும். அக்காலத்தில் நடந்தவற்றை இக்கால நடப்புகளுடன் ஒப்பு நோக்கி விமர்சனம் செய்வது பொருந்தாது. படிப்படியாக நேரும் மாற்றங்ளையும் சொல்லிக் கொண்டு வருவேன். 

இப்பொழுது பயணத்தைத் தொடங்குகின்றேன்.

என் தந்தையுடன் ஊராட்சி அலுவலகம் சென்று பணி நியமனக் கடிதத்தை அலுவலகத்தில் அளித்தேன். அதன் பின் ஓர் ஊழியர் என்னை அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குச் சென்று, அங்கிருந்த ஒரு நாற்காலியையும் காட்டி “ இதுதான் உங்கள் இடம் “ என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். அந்த இடத்தில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து நின்று “ இதுதான் உங்கள் இடம். என் பெயர் பரமசிவம். சமூகக் கல்வியாளர் “ என்று கூறிவிட்டு, அந்த அறையில் இருந்த எல்லோரையும்
அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் அலுவலத்தின் பணியாளர்களின் அமைப்பையும் விளக்கினார். ஊரக வளர்ச்சி அதிகாரியின் கீழ், ஒவ்வொரு துறைக்கும் ஒரு விரிவாக்க அலுவலர் உண்டு. சமூகக் கல்விக்கு மட்டும் ஆண், பெண் என்ற இரு அலுவலகர்கள் .நான் சேர்ந்த பணியின் பெயர் சமூகக்கல்வி விரிவாக்க அலுவலர் (பெண்).

பரமசிவம் என்னிடம் நான் செய்ய வேண்டிய பணிகளைப்பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது என் தந்தை மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பரமசிவம் அகன்றவுடன் என் தந்தை அருகில் வந்து வெளியில் சென்று மாலையில் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார். அவருடன் கால்நடை அலுவலர் சரவணனும் சென்றார்.

சில நிமிடங்கள் கழிந்தன. பரமசிவமும், கூட்டுறவு அலுவலர் நடராஜனும் என் எதிரில் இரு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தனர்.ஏனோ அவர்கள் முகங்களைப் பார்க்கவும் நல்ல அபிப்பிராயம் தோன்றவில்லை;அவர்கள் மெதுவாகப் பேச ஆரம்பித்தனர். “உங்களிடம் ஒரு முக்கிய செய்தி கூற வேண்டும். உங்கள் அப்பா போகட்டும் என்று காத்திருந்தோம். உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நம் வட்டார வளர்ச்சி அதிகாரி பெண்கள் விஷயத்தில் மகா மோசம் --- “என்று இழுத்தார் நடராஜன். எனக்கு அச்சம் வரவில்லை. ஏனோ செய்தியை நம்பத் தோன்றவில்லை.என் மவுனத்தைக் கண்ட பரமசிவம் பேச்சைத் தொடர்ந்தார் “ உங்களுக்கு முன்னால் பத்மாவதி இருந்தார்கள். இந்த அதிகாரி எப்படியோ அவளைக் கெடுத்துவிட்டார். ஊர்க்காரங்க நோட்டீஸ் அடிச்சு கேவலப் படுத்திட்டாங்க. சுவத்திலும் அசிங்கமா எழுதிட்டாங்க. அது நம் பெரிய ஆபீஸ் வரை போய்த்தான் பத்மாவைத் தூக்கி விட்டார்கள். அந்த இடத்தில்தான் நீங்கள் வந்திருக்கின்றீர்கள். நம் ஆபீஸரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. “

பரமசிவம் பேசப் பேச எனக்குள் நெருப்பு புகைய ஆரம்பித்தது. பயம் வருவதற்குப் பதிலாக எதிரில் அமர்ந்திருந்த இருவரையும் கெட்ட நோய்க்காரர்கள் போல் உணர்ந்தேன். பெண்ணைப் பழிக்கின்றார்கள் பாவிகள் என்றுதான் நினைப்பு வந்தது.

என்னிடம் ஒரு குறையுண்டு. பெண் விஷயத்தில் ஆண்கள் கெட்டவர்கள் என்ற எண்ணம். அப்படி எண்ண வைத்தது பிள்ளைப் பருவத்து அனுபவங்கள், நான் கிராமத்தில் கண்ட காட்சிகளே. குடும்பச் சண்டை தெருவில் நடக்கும்.பெண்டாட்டி தலைமயிரைப் பிடித்து இழுத்து உதைப்பான். அவளோ ஓங்கிக் குரல் எழுப்பிக் கத்துவாள். அவனோ அவளை மிதிப்பான். தெருவில் அவள் துடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் திட்டிக் கொண்டே சென்று விடுவான். இவள் தெருவில் புரண்டு அழுவாள். ஒன்றா,இரண்டா பல முறை தெருக்காட்சிகள் கண்டிருக்கின்றேன். விசாரித்ததில், அவனுக்கு ஒரு வப்பாட்டி (இப்பொழுது அது சின்ன வீடு) இருக்கிறாள். குடும்பத்தைக் கவனிப்பதில்லை. குடித்துவிட்டு எப்பொழுதாவது வருவான்; இவளோ பொறுக்கமாட்டாமல் கத்துவாள். அவனோ அடிப்பான். பெண்டாட்டி அடித்து நான் பார்த்ததில்லை. அதனால் என் மனத்தில் ஆண்கள் பொல்லாதவர்கள் என்ற எண்னம் பதிந்துவிட்டது. நிறையக் கதைகள் படித்த அனுபவத்தில் வம்பு பற்றியும் தெரியும். என்முன் உட்கார்ந்திருந்தவர்கள் வம்பர்கள் என்று நினைத்தேன். அத்துடன் பணியாற்றும் பொழுது பெண்ணின் மேல் எப்படிப்பட்ட சேற்றைவாரி வீசுவார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். என் மவுனத்தைப் பார்த்த பரமசிவம் “பயப்படாதீர்கள், நாங்கள் இருக்கின்றோம். உங்களுக்குக் கஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வோம் “ என்றனர். அடிப்பதற்குக் கை பரபரவென ஊறியது. அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்தேன். அவர்கள் அறைக்கு வெளியில் போய்விட்டார்கள்.

அவர்கள் போனவுடன் விவசாய அலுவலகர் மாணிக்கம் வந்தார். “மேடம், இவர்கள் மோசமானவர்கள். பயப்படாதீர்கள். நம் அதிகாரி நல்லவர். இவர்களால்தான் கதைகட்டி விடப்பட்டது. ஊர்க்காரனைச் சுவத்திலே எழுத வைத்ததும் நோட்டீஸ் அடிக்க வைத்ததும் இவங்கதான். மெட்ராஸ் ஆபீஸுக்கும் எழுதிப் போடவைத்தவங்க இவங்க தான். இவங்க கிட்டேதான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். “ என்று மெதுவாக மாணிக்கம் பேசினார். ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. பெண்மேல் எந்தப் பழியும் சுமத்துவார்கள், கேவலப் படுத்தப்படுவார்கள் என்பதை உணர்ந்தேன். இக்காலத்திலும் அரசியலில் வரும் பெண்கள் மேல் பழி சுமத்தப்படுவதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் பழிப்பவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் பரிசுத்தமாக இல்லை.

முதல் நாள் அனுபவம் ஓர் அவல முழக்கம்.இச்சூழ்நிலை எனக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. என்னால் பொறுமையாக இருக்க முடியுமா? இல்லை விலகி ஓடக் கூடாது, ஒருகை பார்க்கவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.

பிற்பகல் மூன்று மணிக்கு இரு பெண்கள் வந்தார்கள். ஒருத்தி கிராம சேவிகா,பெயர் மீனாட்சி. இன்னொருத்தி இராட்டை கற்றுக் கொடுப்பவர். பெயர் லட்சுமி.இருவரும் வேலைகளைப் பற்றிப் பேசிவிட்டு மறுநாள் உள்ளூர் மாதர் சங்கம் போகலாம் என்றார்கள். திரும்பி வந்த என் தந்தை ஒரு செய்தியுடன் வந்திருந்தார். வெளியில் சென்றவர் வாடகைக்கு ஒரு வீடு பார்த்துவிட்டதாகவும் , சில சாமான்கள் வாங்கி வைத்துவிட்டதாவும் கூறினார். எவ்வளவு சீக்கிரமாகத் தன் மகள் தனித்து வாழ, வேண்டிய வசதிகளைச் செய்துவிட்டார்!

மாலையில் என் தந்தை, சரவணன், மீனாட்சி, லட்சுமி எல்லோருடனும் புது வீட்டிற்குப் போனோம். சரவணன் வீடு இருந்த அதே தெருவில் என் வீடும். நீளமாக அமந்திருந்தது. கழிவறை கொல்லைப்புறத்தில் கோடியில் இருந்தது.கிணற்றுத் தண்ணீர்தான். வீட்டில் மின்னிணைப்பு கிடையாது (மனக் குரல் பெரியவர் பேசியதை நினைவுபடுத்தியது ). ஒரு ஹரிக்கேன் விளக்கு. சரவணன் மனைவி வந்து அடுப்பு மூட்டிப்பால் காய்ச்சினார்கள். விறகுடன், அல்லது விறகு இல்லாமல் இந்தச் சுள்ளிகளை வைத்து அடுப்பு மூட்டுவது கிராமத்து வழக்கம். சுள்ளிகள் பொறுக்கி கட்டாகக் கட்டி விற்பது ஒரு சிறு தொழில். அதுவும் வயலுக்கு அல்லது காட்டிற்கு வேலைக்குப் போய்விட்டு வரும் பொழுது பெண்கள் தலையில் சுள்ளிக் கட்டைச் சுமந்து கொண்டு வரிசையாய் வருவதைப் பார்க்கவே அழகு.

பால் காய்ச்சி முடியவும் மற்ற சின்னச் சடங்குகளையும் முடித்து வீட்டை விட்டுப் புறப்பட்டோம். என் தந்தை வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்தார். குஞ்சுகள் இறக்கை வளர்ந்தவுடன் பறக்கச் சொல்லிக் கொடுத்து விண்ணிற்கு அனுப்பும் தாய்ப் பறவைபோல் என் தந்தை இருந்தார்.

இனி நான் உலகில் தனியாக வலம் வர வேண்டும்;பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியது.கட்டுப்பாடுகளுடன் சுதந்திர வாழ்க்கை. ஒரு பெண்ணுக்கு உரிய வீடு கணவர் வீடு. ஆனால் அங்கே அவளுக்குக் கிடைப்பது கட்டுப்பாடுடன் கூடிய உரிமை . இஷ்டம் போல் சுதந்திரத்தைக் கையாண்டால் சுதந்திரம் பாழ்பட்டுவிடும். எதற்கும் ஒரு ஒழுங்கு வேண்டும். விண்ணிலே இருக்கும் கோள்களும் , நட்சத்திரங்களும் கட்டுப்பாட்டை இழந்தால், பரந்து விரிந்து கிடக்கும் கடல் கட்டுப்பாடற்ற சுதந்திரம் விரும்பினால் என்ன நடக்கும்? சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உரிமையைக் காக்கக் கடமையில் அக்கறை வேண்டும்.

முதல் நாள் கிடைத்த கசப்பு அனுபவம் என் உணர்வுகளைக் கொஞ்சம் பாதித்தாலும் சமாளித்துவிட்டேன்; என் துணிவிற்கு பாதிப்பில்லை;

பகுதி 4

இரண்டாம் நாள் நான் அலுவலகம் சென்ற பொழுது மீனாட்சியும், லட்சுமியும் உட்கார்ந்திருந்தார்கள். பரமசிவம் மறுபக்கம் ஓரத்தில் நின்று கொண்டு லட்சுமியைப் பார்த்துக் கொண்டே ஏதோ கிண்டல் பேச்சு பேசிக்கொண்டிருந்தார். என்னைப் பார்க்கவும் அருகில் வந்து சில காகிதங்கள் கொடுத்தார். கூட்டுறவு பற்றி ஒரு பயிற்சி முகாம் அடுத்த வாரத்தில் நடக்க இருக்கின்றது. அதற்கு யார் யாரெல்லாம் என்ன வேலைகள் செய்ய வேண்டுமென்ற குறிப்புகள் இருந்தன. அது சம்பந்தமாக சில விபரங்கள் கூறிவிட்டு போய் விட்டார். அதன்பின் நானும் மற்ற இரு பெண்களும் உள்ளூர் மாதர் சங்கம் காணப் புறப்பட்டோம். ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அக்காலத்தில் ஊராட்சியில் நான்கு மகளிர் மன்றம்தான். அப்பொழுது மாதர் சங்கம் என்று  கூறுவோம். அதற்கு ஒரு கன்வீனர். அங்கே மூன்று பெண்கள் தான் இருந்தனர். எங்களை உட்காரவைத்துவிட்டு கன்வீனர் வெளியில் சென்றாள். பின்னர் ஒவ்வொரு பெண்ணாக வர ஆரம்பித்தனர். அப்படியும் பன்னிரண்டு பேர்களே வந்தனர்.

மீனாட்சியோ லட்சுமியோ என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. அவர்கள் வந்தவுடன் நானே பேச ஆரம்பித்தேன். அவர்கள் குழந்தைகளைப் பற்றி விசாரிக்கவும் தயங்காமல் பேசினார்கள். அப்படியே கதை பேச ஆரம்பிக்கவும் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர். அடுத்த வாரம் கூட்டுறவு முகாம் என்று சொல்லி இருந்ததால் ஒற்றுமையாக இருப்பதுபற்றிக் கொஞ்சம் கிண்டலாகப் பேசினேன். அவர்களும் சிரித்துக் கொண்டே தெருவில் பெண்களுக்குள் வரும் சண்டைகள் பற்றிப் பேசி, , அது தவறுதான் என்று அவர்களே சொன்னார்கள் எனக்குள் நான் சபாஷ் போட்டுக் கொண்டேன். ஓ, இப்படித்தான் கதை சொல்லிப் பேச வைக்க வேண்டும்போல் இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டேன். நேரம் போனதே தெரியவில்லை. சங்கத்திற்கு வருவதால் லாபமில்லை என்றார்கள். பகல் நேரம் வேலைக்குப் போக வேண்டி இருப்பதால் கூலி நஷ்டம் என்றாள் ஒருத்தி. அவர்கள் பிரச்சனைகளைக் கேட்டுக் கொண்டேன். அங்கிருந்து என் வீட்டிற்குப் போனோம். கதவைத் திறந்தவுடன் அங்கு சாப்பாடு கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தது. என் தந்தை செய்திருந்த ஏற்பாட்டைச் சொல்ல மறந்துவிட்டேன். சரவணன் வீட்டில் வேலை பார்க்கும் முத்தம்மாவை எங்கள் வீட்டிற்கும் வேலைக்கு அமர்த்தியிருந்தார். மூன்று மாதங்களுக்கும் குறைவாக இருக்கப்போவதால் சரவணன் வீட்டிலிருந்தே காலை காபி முதல் எல்லாம் வீட்டிற்கு வந்துவிடும். முத்து எல்லா வேலைகளையும் செய்வாள். அவளிடமும் ஒரு சாவி கொடுக்கப் பட்டிருந்தது. இங்கிருந்து காந்தி கிராமத்திற்கு ஐந்து மாதங்கள் பயிற்சிக்குப் போக வேண்டும். பயிற்சிக்கு முன் சில நாட்கள் களப்பணி செய்ய வேண்டும்.

சாப்பாடு முடியவும் பேச ஆரம்பித்தோம். மீனாட்சி தன்னைப் பற்றி கூறினாள். விசேஷமாக ஒன்றும் இல்லை. ஆனால் லட்சுமி பேசாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள் “ என்ன லட்சுமி, பேசாமல் இருக்கின்றாய்? சொல்லத் தயக்கமாக இருந்தால் சொல்ல வேண்டாம்” என்றேன். உடனே லட்சுமி அழ ஆரம்பித்தாள் . இருந்த இரண்டு பெண்களும் என்னைவிட வயதில் மூத்தவர்கள். லட்சுமிக்குப் பதிலாக மீனாட்சி பேச ஆரம்பித்தாள். ஒரு பெண்ணின் சோகக்கதை.

லட்சுமிக்குப் பதினைந்து வயதில் திருமணம், பதினாறு வயதில் விதவை.எட்டாம் வகுப்பு வரைதான் படிப்பு . நெற்றியில் பொட்டு இருந்தது. அந்தக் காலத்தில் விதவைகள் நெற்றியில் திலகம் வைக்கக் கூடாது; ஏதோ பின்னால் கதை இருக்கின்றது என்பது புரிந்தது.

ஊரக வளர்ச்சித் துறையில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பொழுதே விதவைகள், ஆதரவற்றவர்கள் ஆகிய பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைக்கு எடுத்து வந்தனர். பெரும்பாலான பெண்கள் ஏதோ பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டவர்கள். இப்பொழுது போல் அக்காலத்தில் படித்த பெண்கள் நிறையக் கிடையாது. படித்தவர்களும் நகர்ப்புற வேலைகளுக்கே போனார்கள். மேலும் ஆதரவற்றவர்கள், ஊனமுற்றோர் இவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கான பணிகள் கொடுக்கப்பட்டன.

லட்சுமி பெயரில் மங்களகரமானவள். ஆனால் தாலி இழந்துவிட்டாள்.பெயர் வைக்கப்பட்டதற்காவது கடவுள் கருணை காட்டி இருக்கக் கூடாதா என்று படைத்தவன் மீது கோபம் வந்தது.“லட்சுமி, இதற்காகவா வருத்தப் படறே? ‘ என்று நான் கேட்கவும் மீண்டும் மீனாட்சியே பதில் கூறினாள். அப்பப்பா, பயங்கரமான கதை.

பெயருக்கேற்றாற்போல லட்சுமி பார்க்க லட்சணமாக இருந்தாள்.வீடுகளுக்குச் சென்று பெண்களுக்கு இராட்டை நூற்கக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவள் பணி. பக்கத்து ஊரில் வேலை பார்க்கும் பொழுது ஊர்ப் பெரியவர்களில் ஒருவர் வீட்டுடன் பழக ஆரம்பித்தாள். அந்த அம்மாள் நல்லவர்கள். ஓர் இராட்டை வாங்கிக் கொண்டார். இவளும் அடிக்கடி அங்கு போய் நூற்புக் கற்றுக் கொடுத்து வந்தாள். ஒரு நாள் அங்கே போயிருந்த பொழுது அந்த அம்மாள் இல்லை. வீட்டு அய்யா மட்டும் இருந்தார் .லட்சுமி திரும்ப முனைந்த பொழுது உட்காரச் சொன்னார். ஒரு மாதிரியாக இருந்தாலும் உட்கார்ந்தாள். ஏதோ பேசிக்கொண்டிருந்தவர் பக்கத்தில் வந்திருக்கின்றார். லட்சுமி பயந்துபோய் உடனே எழுந்து விட்டாள். ஆனால் அவரோ அவளைக் கட்டிப் பிடிக்கவும் போராட ஆரம்பித்திருக்கின்றாள். அவர் பலத்தின் முன் அவள் சக்தி ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது. அந்த மனித மிருகம் அவளைத் தனக்கு இரையாக்கிக் கொண்டு விட்டது. குமுறிக் குமுறி அழுதாள். இழந்ததை இனிப் பெற முடியுமா?

வெளியில் சென்றிருந்த அம்மா வந்தபொழுது லட்சுமி அழுது கொண்டிருப்பதைப் பார்த்தாள். நடந்ததைப் புரிந்து கொண்டாள். அவளும் கத்தினாள். தப்பு செய்த புருஷனோ மனைவியை அடித்திருக்கின்றான். என்ன கொடுமை! குற்றம் செய்தவன் ஒருவன். தண்டனை இரு அப்பாவி பெண்களுக்கு. அந்த அம்மா கோபத்துடன் உள்ளேபோய் ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கட்டி எடுத்து வந்து, “பாவி, நீங்க செஞ்ச பாவத்துக்கு அவளுக்கு என் முன்னாலே தாலி கட்டுங்க “ என்றாள். லட்சுமி தன்னைச் சுற்றி நடப்பதை உணரும் சக்தியை இழந்து உட்கார்ந்திருந்தாள். குற்றவாளி தலை குனியவில்லை. “அவ்வளவுதானே. இவளும் எனக்குப் பொண்டாட்டியா இருந்துட்டு போகட்டும். “ என்று லட்சுமிக்குத் தாலி கட்டிவிட்டார்.

லட்சுமி அழுது கொண்டே புறப்பட்டாள். கழுத்தில் கிடக்கும் மஞ்சள் கயிற்றை என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த அம்மாதான் தைரியம் சொன்னார்கள். “தாலியைப் பார்த்தால் ஊர் வாய் மூடிவிடும் “ என்று அந்த அம்மாள் கூறி அவர்கள் வீட்டு வேலைக்காரியுடன் அனுப்பி வைத்தாள். கொஞ்ச நாட்கள் எப்பொழுதாவது அவர் வருவார்.பின்னால் அதுவும் நின்று போனது. அவளுக்குக் கிடைத்தது அந்த மஞ்சள் கயிறும் ஒரு குழந்தையும்தான். முன்பு விதவை; இப்பொழுது அவள் வாழாவெட்டி. என்னதான் தாலி கட்டப்பட்டாலும் அவளை மற்றவர்கள் கேலியாகத்தான் பேசுவார்கள். தைரியமாகச் சத்தம் போட்டுப் பேச மாட்டார்கள். பெரிய இடத்துப் பகை எதற்கு என்ற அச்சமும் உண்டு. அதனால் வேறு ஆண்மகன் வாலாட்டுவதில்லை.

“ஏன் லட்சுமி அவன் உங்கிட்டே வாலாட்டும்போது போராடி இருக்கலாமே. அப்படி வர்ரவனைக் கை நகத்தால் காயப்படுத்துன்னு காந்தி சொல்லி இருக்காறே “ என்றவுடன் இதுவரை பேசாமல் இருந்தவள் கோபத்துடன் என்னைப் பார்த்து, “பேசறது சுலபம். வெறி வந்துட்டா ஆம்புள்ளைக்கு ஆனை பலம் வருதே. அவன் பிடிச்சவுடன் நம்மகிட்டே இருக்கும் கொஞ்ச பலமும் போய்டுதே, என்ன நடக்குத்துன்னு புரியறதுக்குள்ளே எல்லாம் போய்டுத்தே !“ என்று கத்திக் கொண்டே அழுதாள். அவள் கத்தலின் உண்மை எனக்குள் இருந்த ஏதோ ஒன்றைக் குத்திவிட்டது. சிறிது நேரம் என்னால் பேச முடியவில்லை. என் அதிர்ச்சியைப் பார்த்த லட்சுமிதான் நிதானமடைந்து பேசினாள் - “மனுஷங்க எல்லாரும் கெட்டவங்க இல்லே. ஆனால் கெட்டது எப்போ வரும், எப்படி வரும்னு தெரியாது.. இப்பொத்தான் புதுசா வேலைக்கு வந்திருக்கீங்க. உங்களுக்கு முன்னாலே இருந்தவங்க ரொம்ப நல்லவங்க. எப்படிப் பேரைக் கெடுத்தாங்க?!. பெண்கள் ஜாக்கிரதையா இருக்கணும். யாரையும் நம்பக் கூடாது. யாரையும் விரோதிச்சிக்கவும் கூடாது. நீங்க என்னைவிடப் படிச்சவங்க. ஆனால் உங்களைவிட எனக்கு வயசு அதிகம். நான் அடிபட்டு அழிஞ்சு போனவ. புத்தி சொல்றதா தப்பா எடுக்காதீங்க”

அவளையே வெறித்துப் பார்த்தேன். எனக்கு அது முதல் பாடம்.பின்னர் பொதுவாக வேலைகள் பற்றிப் பேசினோம். இரண்டு நாட்களில் எத்தனை அனுபவங்கள். விளையாட்டுப் பெண் மாற ஆரம்பித்து விட்டாள். எப்பேர்ப்பட்ட உண்மை. வெறி வந்தவுடன் மனுஷன் மிருகமாகி விடுகின்றான். பயத்திலேயே பெண் இருக்கும் பலத்தையும் இழந்து விடுகின்றாள். பெண்ணாகப் பிறந்தாலே எத்தனை மனித மிருகங்களிலிலிருந்து தன்னைப் பாதுக்காக்க வேண்டியிருக்கின்றது. பத்து வயதுச் சிறுமியைக் கூட
குதறிவிட்டுக் கொன்று போட்டு குப்பையைத் தூர எறிவது போல் செய்யும் மிருகங்களை நடமாட விடலாமா? சமீபத்தில் ஒருசெய்தி. பெற்ற அப்பனே மகளைக் கற்பழித்துப் பயமுறுத்தி வைத்திருந்த செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. முன்பே இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதில் வேதனை என்னவென்றால் கெடுத்தவன் சிரிப்புடன் பெரிய மனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பான். வாழ்க்கையைப் பறி கொடுத்தவளை இந்த சமூகம் ஏசும். கொடுமையான உலகம். உள்ளம் குமுறியது. அனுபவம் என்னைக் குட்டி அடக்கியது.

பகுதி 5

மூன்றாம் நாள் மேலதிகாரி வந்ததை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன். ஏனோ அவரால் என்னை முகமலர்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. முகத்தில் சாந்தம். கதர் ஆடையில் ஓர் எளிமை. என்னால் அவருக்குப் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது கடமை என்ற எண்ணம் மட்டுமே தோன்றியது.

அந்த வட்டாரத்தில் இரண்டரை மாதமே பணிக்காலம். பின்னர் பயிற்சிக்காக காந்தி கிராமம் செல்ல வேண்டும். இந்தக் குறுகிய காலத்தில் முடிந்தவரை சமுதாயப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மனத்தில் உதித்தது. கிராமத்தில் வளர்ந்தவள்தான் நான். ஆனால் அப்பொழுது பிள்ளைப் பருவம். விளையாட்டுத்தனம் நிறைந்த பருவம். இப்பொழுது பொறுப்புணர்ச்சி தோன்றியுள்ளது. திடீரென்று பெரிய மனுஷியாகிவிட்ட உணர்வு. மனித மனம் வியப்புக்குரிய ஒன்று. இருபதாண்டு வாழ்க்கையில் பெறாத பல படிப்பினைகள் இந்த இரண்டரை மாதங்களில் கிடைத்தன. லட்சுமி சொன்ன ”ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் “ என்ற சொல் என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. கற்பது ஒரு தொடர் நிகழ்வு, அதற்கு முற்றுப் புள்ளி கிடையாது.

என் வட்டாரத்தில் இன்னும் சில பெண்கள் வேலை பார்த்து வந்தனர்.கிராமங்களுக்குப் போகும் பொழுது யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். 3 மைல், 5 மைல் என்று நடந்து செல்ல வேண்டியிருக்கும். சில நேரங்களில் பாதையில் போகும் கட்டை வண்டியில் ஏறிச்செல்வதும் உண்டு. நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்றாலும் அதன் மேல் உட்கார்ந்து போனதுண்டு. இதைச் சொல்லும் பொழுது ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது.

சிதம்பரம் போயிருந்தேன். அங்கிருந்து கங்கை கொண்டசோழபுரம் பார்க்கப் புறப்பட்டேன். என்னுடன் என் சுவீகார மகள் வல்லரசி வந்தாள். அந்த பஸ் எங்களை மெயின் ரோட்டிலேயே இறக்கிவிட்டது. ஊருக்குள் நடந்து போக வேண்டும்.நெல் மூட்டை ஏற்றிக் கொண்டு ஒரு கட்டை வண்டி வந்து கொண்டிருந்தது. வல்லரசி என்னை அதில் ஏற்றிக் கூட்டிப் போகும்படி கேட்டுக் கொண்டாள். எனக்கும் கட்டை வண்டிச் சவாரி கிடைத்தது. என் எண்ணங்களோ விண்ணில் பறந்தன.

இதே பாதையில் சோழ ராணிகள், இளவரசிகள் பல்லக்கிலும், ரதத்திலும் போயிருப்பார்கள். இப்பொழுது இந்த ராணி போய்க் கொண்டிருக்கின்றாள். கல்கியும் அகிலனும் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தனர். இது நடக்கும் பொழுது எனக்கு 45 வயது. கற்பனைதான் நம்மை எப்படியெல்லாம் மகிழ வைக்கின்றது. ஆனால் அந்தக் கற்பனையும் ஆள் ஆளுக்கு மாறித்தான் வருகின்றது.கிராமங்களைப் பார்வையிடச் சென்றபொழுது அவர்களுடன் பழகுவது எனக்கு சிரமமாக இல்லை. முதலில் நான் கிராமத்தில் வளர்ந்தவள். அடுத்தது பேச்சுத் திறமையுள்ளவள். கொஞ்ச நேரத்திலேயே கிராமத்து மனிதர்கள் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்கள். முதலில் கல்வியைப் பற்றிப் பேசும் பொழுது அவர்கள் மனத்தில் ஏற்கனவே ஒரு எதிர்மறை எண்ணம் பதிந்திருந்தது. படிப்பது என்பது வேலைக்குப் போக ஒரு சாதனம் என்ற கருத்து உருவானதற்குக் காரணம் அவர்கள் அறியாமை மட்டுமன்று, கற்றவர்கள் கூட கல்வியின் அடிப்படை நோக்கங்களைச் சரிவர விளக்கவில்லை. அன்று மட்டுமில்லை; இன்றும் அதே நிலை நீடித்திருக்கின்றது.


“கூலி வேலை செய்கிறவங்களுக்கு எதுக்குப் படிப்பு?”


“அடுத்தவீட்டுக்குப் போற பொண்ணுக்கு எதுக்குப் படிப்பு? சமைக்கணும், புருஷன் சொல்றபடி நடக்கணும், புள்ளைய வளக்கணும், இதுக்குப் படிப்பு வேண்டாம் ” கொஞ்சம் வசதியானவர்களின் மறுப்பு வேறு கோணத்தில் இருந்தது. “வயக்காட்டப் பாத்துக்க, தோட்டம் பாத்துக்க எதுக்குப் பெரிய படிப்பு ? எழுதப் படிக்கத் தெரிஞ்சா போதும். அது கூட வேண்டாம். பெரியவங்க மனத்துலேயே கணக்குப் போட்டுப் பாத்துப்பாங்க. அதைப்போல் சின்னவங்களும் காலத்துலே கத்துக்குவாங்க”


சில கிராமங்களில்தான் பள்ளிகள் இருந்தன. அதற்கும் சரியாகப் பிள்ளைகள் வருவதில்லை. வருபவர்களும் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவது வழக்கம். ஏன் இந்த நிலை?


இப்பொழுது வரலாற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.


விலங்கோடு விலங்காக மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். பிறகு புலம் பெயர்ந்து கூட்டமாகச் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களுக்கிருந்தது இரண்டு பசிகள். ஒன்று வயிற்றுப் பசி, மற்றொன்று உடல்பசி. இந்த இரண்டிற்கும் எந்த வரைமுறையும் அப்பொழுது கிடையாது. உயிரைக் காப்பாற்றுவதே போராட்டம். அச்சமும் அதிசயமும் கடவுட் கொள்கையைப் பிறப்பித்தன. கூட்டம் அதிகமாக ஆக பலமும் அறிவும் நிறைந்த தலைமை தோன்றியது. ஓர் இடத்தில் நிலைத்து வாழும்பொழுது தங்களுக்குச் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டனர். குடும்பம் தோன்றியது. தொழில்களுக்கேற்பப் பிரிவினைகள் உருவாயின. வசதி படைத்தவர்களும் உழைக்கும் கூட்டமும் இரு வேறு கிளைகளாக வளர ஆரம்பித்தன. மனிதனாகப் பிறந்தும் கொத்தடிமையாக வாழப் பழகிக் கொண்டான். அதன் தாக்கம்தான் நான் கிராமத்தில் பார்த்தது. 1956 ஆம் வருடம் மே, ஜூன் மாதங்களில் நான் சொல்லும் நிலைமை இது. கொத்து வேலைக்கு ஒரு கூட்டம், தோட்ட வேலை, வயல்புறவேலை என்று ஒவ்வொரு கிராமங்களிலும் பல கூட்டங்கள் வாழ்ந்து வந்தன. சாலைப் பணி, வீடு கட்டும் வேலை என்றால், “கருப்பனிடம் சொல்லு, அவன் ஆட்களைக் கூட்டிட்டு வருவான்” என்று பணம் படைத்தவன் சொல்லுவான், கருப்பனும் அவன் கூட்டத்தைக் கூட்டிச் செல்லுவான்.


கிராமத்தில் உள்ளவர்களுக்கு வயிற்றுப்பசி தீர வேண்டும்; ஒதுங்க இடம் வேண்டும். உடுத்தக் கூட அவன் அதிகம் நினைத்ததில்லை. ”மானத்தை மறைக்கத் துணி போதும் “ என்று நினைத்தார்கள். அவர்கள் தேவைகள் மிக எளிமையானவை. அவை கிடைத்தால் போதும். நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எனவே கல்வியைப் பற்றிய விழிப்புணர்வுத் திட்டங்கள் அவ்வளவு எளிதாக அவர்களைச் சேரவில்லை. இப்பொழுதும் பள்ளிக்கூடத்திலிருந்து இடையில் படிப்பில் நின்று போகின்றவர்கள் நிறைய. நம் நாட்டில் மட்டுமல்ல. அமெரிக்காவிலும் பள்ளிக் கல்வியை முழுதும் படிப்பவர்களின் எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கின்றது. உலக நடப்புகளின் போக்கைத் தெரிந்து கொண்டால்தான் மனிதன் முன்னேற முடியும். வாக்குச் சீட்டின் மதிப்பு கூடத் தெரியாத நிலையில் பாமரத்தனம் அதனால்தான் நீடித்து இருக்கின்றது. நீண்டகாலப் பயனைவிட தற்காலிகத் தீர்வை அவன் பெரிதாக நினைக்கின்றான். தொலை நோக்குச் சிந்தனை அவனுக்குக் கிடையாது. அதிகார வர்க்கம் அவன் அறியாமையை உபயோகித்துக் கொள்கின்றது. இது புதிதன்று. வரலாற்றில் தொடர்ந்துவரும் பிணி இது. இந்த இரண்டும் இணைகோடுகளாகவே சென்று கொண்டிருக்கின்றன. என்று இந்த இடைவெளி போகும்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். முடிந்தவரை பணிகள் செய்வோம். பெரியவரின் ஆதங்கம் நன்றாக இப்பொழுது புரிந்தது. அடுத்து மருத்துவ வசதிகளைப் பார்க்கும் பொழுது அங்கும் பல குழப்பங்கள் இருந்தன. வட்டாரத்திற்கு ஒரு ஆஸ்பத்திரி. குறிப்பிட்ட சில இடங்களுக்கு டாக்டர் வருவார். ஊரார் அங்கு போய்ப் பார்க்க வேண்டும். கிராமத்தினருக்கு அவரைத் தேடிப்போவதில் அலுப்பு. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளூர் மருத்துவச்சி இருப்பாள். அவள்தான் கை ராசிக்காரியாம். பரம்பரை பரம்பரையாக அவள் குடும்பத்தைச் சேர்ந்தோர் பிரசவம் பார்ப்பதையே கிராமத்தினர் விரும்பினர். அவளிடமோ சுத்தமான கருவிகள் கிடையாது. பிரச்சனைகள் உள்ள பிரசவங்களில் பெண்கள் சாவார்கள். கேட்டால் ஏதோ தோஷம் என்று சொல்லுவார்கள். குழந்தைகளுக்கு உடலுக்கு வந்தால் கை வைத்தியம் பார்ப்பார்கள். வீட்டு வைத்தியம் சிறந்ததே; ஆனால் எல்லா நோய்களுக்கும் அதில் மருந்து கிடையாது. மந்திரித்துக் கொள்வதில் நம்பிக்கை. சாமிக்கு நேர்ந்து கொள்வார்கள். இக்காரணங்களால் பிரசவகாலத்தில் பெண்கள் மரணம், சின்னஞ்சிறு சிசு மரணம் விகிதாசாரம் அதிகமாக இருந்தது. உள்ளூர் மருத்துவச்சியை வேலை செய்யாதே என்று சட்டம் போட்டு நிறுத்த முடியாது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியாக மருத்துவர்கள் போட முடியாது. எனவே இந்த மருத்துவச்சிகளுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுத்து, அவர்களுக்குப் பிரசவத்திற்கு வேண்டிய முக்கிய சாதனங்களும் வழங்கப்பட்டு வந்தன.


பேசும் பொழுது அரசியல் கட்சிகளைக் குறை கூறுகின்றோம்.ஆனால் மனிதன் ஆண்டவனுக்கே லஞ்சம் பேசி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். “ நீ எனக்கு இது செய், உனக்கு உண்டியலில் இவ்வளவு பணம் போடுகின்றேன் “ இதைச் சொல்லாதவர்களின் கணக்கு எடுத்துப் பாருங்கள். பேய் பிசாசு நம்பிக்கை அதிகமாக இருந்த்து. “சமஞ்ச பொண்ணு சாயங்கால நேரத்துலே வெளியே போனா பேய் அடிச்சுடும் “ என்று எல்லோரும் கூறுவார்கள். பட்டினத்து வேலைக்கு வந்த எந்தப் பெண்ணையும் பேய் அடிக்கவில்லை. மனுஷன்தான் பேயாய் அடித்தான். “சூன்யம் வச்சுட்டாங்க, மருந்து வச்சு மயக்கிட்டா ” இத்தகைய வதந்திகள் அதிகமாகப் பார்க்கலாம். மூட நம்பிக்கை கொடிகட்டிப் பறந்தது. இது இந்தியாவில் மட்டுமில்லை. ஆஸ்திரேலியாவில் ஒரு வருடம் இருந்தேன். அப்பொழுது என் மகன் ஓர் இடத்தைப் பார்க்கக் கூட்டிச் சென்றிருந்தான். மூன்று சகோதரிகள் மலையில் கல்லாகி நின்று கொண்டிருந்தார்கள். அதென்ன அங்கேயும் அகலிகைப் படலமா என்று சிலர் நினைப்பார்கள். அது ஒரு கதை.


ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள் அங்கே வாழ ஆரம்பித்தது சுமார் 30,000 வருடங்களோ அல்லது 50,000 வருடங்களோ இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளார்கள். அவர்களுக்குள் சில சட்ட திட்டங்கள், நம்பிக்கைகள். ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் இன்னொரு குழுவினருடன் மணஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். ஒரு குழுமத்தில் இருந்த மூன்று பெண்கள் அடுத்த குழுமத்தில் மூன்று இளைஞர்களைக் காதலித்து இருக்கின்றார்கள். ஆனால் பெண் பக்கம் அதற்கு முட்டுக் கட்டை போட்டது. இளைஞர்கள் விடவில்லை. போர் தொடுத்து விட்டனர். பெண்கள் பக்கம் மாந்த்ரீகம் தெரிந்தவர் பெண்களைக் கல்லாக்கிவிட்டார். போரில் அந்தக் கிழவன் இறந்ததால் பெண்கள் கல்லாகவே இருக்க வேண்டி வந்து விட்டது; காதல் சிலைகள். இது ஒரு சுற்றுலா மையம்.


இதன் மூலம் இரு உண்மைகளை நாம் உணரலாம். ஒன்று , திருமணம் ஊர்க்கட்டுப்பாட்டின் எழுதப்படாத சட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ளது. இது எல்லா நாடுகளும் இருந்த நடைமுறைப் பழக்கம். மற்றொன்று. மாந்த்ரீகம், தாந்த்ரீகம் என்பது இந்தியாவில் மட்டுமில்லை. அதுவும் எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு பெயரில் உலா வருகின்றது. மூடப்பழக்கத்தைச் சாடிய சாக்ரட்டீஸ், அவர் மாணவர் பிளாட்டோ போன்றோர் உயிர் கொடுத்துப் போராடியும் இப்பழக்கம் முற்றிலும் அழிக்கப் படவில்லை. அந்த அளவுக்கு அது சமுதாயத்தில் வேரூன்றிவிட்டது. மூடப்பழக்கத்தைச் சாடி, அதனை ஒழிக்க நம்மிடையேயும் ஒருவர் இருந்தார். அவர் வாழ்நாள் பூராவும் அதற்காக ஊர் ஊராய்ச் சென்றார். அவரை எல்லோரும் அறிவோம். சமுதாய வரலாற்றில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் நம் அன்புக்குரிய தந்தை பெரியாரைத்தான் குறிப்பிடுகின்றேன். அவரைப்பற்றி நிறையப் பேசலாம். இது ஒரு சமுதாய வரலாறு. அவரை ஒதுக்கிவிட்டு எழுதவே முடியாது.

பகுதி 6

தந்தை பெரியார் என்னுடைய 14ம் வயதில் ஒரு பால்காரரால் அறிமுகப் படுத்தப்பட்டவர். பால்காரர் பேச்சியப்பனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவருக்கு நிறையத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசை. புத்தகங்கள் எடுத்து வந்து என்னை வாசிக்கச் சொல்வார். அவர் கொண்டுவந்தவை பெரும்பாலும் அய்யாவின் சிந்தனைகளும், அண்ணாவின் சொற்பொழிவுகளும் தான். அந்தக் காலத்தில் அண்ணாவின் சொற்பொழிவுகள் சின்னச் சின்னப் புத்தகங்களாய் வரும். படித்துக் காட்டுவதுடன் நிற்காது. விபரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்வேன். சிந்தனைத் தெளிவிற்குத் தேடலும், சரியாகப் புரிந்து கொள்ளுதலும் இன்றியமையாதவை. படிக்காதவனின் சிந்தனையைத் தட்டிஎழுப்பியவர்களால் கூட சமுதாயத்தின் மூடப் பழக்க வழக்கங்களை முற்றிலுமாய் ஒழிக்க முடியவில்லை? காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.


ஆணாதிக்கம் என்று பேசுகின்றோம். ஆனால் உண்மையில் வீட்டில் ஆண்மகன் பல பிரச்சனைகளில் தன்னைச் சமரசம் செய்து கொள்ள ஒதுங்கி நிற்கின்றான். இது கோழைத்தனமில்லை. குடும்ப மானம் போகக் கூடாது என்று நினைக்கின்றான். எனவே அங்கே அவன் பலஹீனமாகி விடுகின்றான். எங்கோ பிறந்து , வளர்ந்து பின்னர் புது வீட்டிற்கு வரும் பெண் புதுப்பழக்கங்களைப் பார்த்துத் திணறுகின்றாள். புருஷனுக்கு இன்பம் கொடுப்பவள், அவன் குழந்தைகளுக்குத் தாய் என்ற உரிமையில் அவள் அந்த வீட்டின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கின்றாள். மறுபக்கம் இன்னொரு பெண். வயிற்றில் சுமந்து, வலியெடுத்துப் பெற்று பாலூட்டிச் சீராட்டி வளர்த்த பிள்ளைக்குத் தானே முதல் உரிமையாளர் என்று நினைக்கின்றாள். அன்பில் பங்கு போட மனமில்லை. இதுவரை இருந்த குடும்பத் தலைவிக்குரிய அதிகாரமும் மாறுவதைப் பொறுக்க முடியவில்லை.


இது உளரீதியான பிரச்சனை. அத்துடன் அதிகாரப் பகிர்வில் போராட்டங்கள். ஆண்மகன் ஒதுங்கி விடுகின்றான். அல்லது ஒருவர் பக்கம் சாய்ந்து மற்றவரின் நிலையை மோசமாக்குகின்றான். இதுதான் குடும்ப நிலைமை. அந்தப் பெண் வணங்கும் கடவுள், அவளின் நம்பிக்கைகள், மூடப் பழக்கங்கள் அப்படியே பாதுகாப்பாக அவளிடம் இருக்கின்றன. ஆண்மகன் அங்கே ஒதுங்கி விட்டான். பகுத்தறிவுக் கட்சி என்று சொல்லிக் கொள்கின்றவர்களின் வீடுகளிலும் கோயில்களுக்குப் போகின்றார்கள்; சோதிடம் பார்க்கின்றார்கள். எந்த மாறுதலும் வீட்டில் பெண் ஏற்க வேண்டும். அதுதான் பெரியவர்கள் கூறும்பொழுது ஒரு பெண் படித்தால் அந்தக் குடும்பமே கல்வி பெற்றதாகி விடும் என்று. மாற்றம் வீட்டுக்குள் வரும்வரை நம் சமுதாயம் இப்படித்தான் இருக்கும்.


“ பகுத்தறிவு “ என்ற சொல்லை நாம் உபயோகிப்பது கூடச் சரியாக இல்லை. அதன் விளக்கங்கள் பின்னால் வரும். இது ஒரு சமுதாய வரலாறு. தந்தை பெரியாரும் பாரதியும், இன்னும் பல சிந்தனையாளர்களும் செயல்வீரர்களும் தொடர்ந்து வருவார்கள். எனவே ஒரே இடத்தில் ஒருவரை முழுமையாகக் காட்ட விரும்பவில்லை.


நாம் கிராமத்திற்குள் நுழையலாம். ஓர் உண்மையை முதலிலேயே உங்கள் முன்வைத்து என் எழுத்தைத் தொடர நினைக்கின்றேன். கசப்பான பல உண்மைகள் காணலாம். வரலாறு என்பது உண்மைகளைச் சொல்வது. தனிப்பட்ட தாக்குதல் இல்லை. ஒரு குறையை எடுத்துச் சொல்லும் பொழுது அது ஒட்டு மொத்தமாக மதிப்பீடல் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அப்பொழுது நான் கண்ட, உணர்ந்த சில உண்மைகளின் வெளிப்பாடுதான். காரணங்களைச் சிந்திக்க முயன்றால் குறைகள், நீக்க முயற்சிக்கலாம், அல்லது குறைக்கவாவது முடியும். மனிதன் செம்மையாக நிம்மதியாக வாழ வேண்டும். ஒவ்வொரு மனிதனின் ஆசையும் இதுதான். நம்மிடம் இருக்கும் போலிக் கவுரவத்தை விடுத்து நம்மை நாமே உணர்ந்து கொள்வது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.


குடும்பம், சமுதாய அமைப்புகளைப் பார்க்கலாம். பல ஊர்களில் சொந்த அமைப்பில் கிராமப் பஞ்சாயத்துக்கள் இயங்கி வந்தன. அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளை கிராமத்தினர் மீற முடியாது. நீதிமன்றங்களில் கூடத்தப்பிக்க முடியும். ஆனால் இவர்கள் முடிவு சொன்னால் கடுமையாக இருக்கும். செல்வந்தர்களும் உயர் சாதிக்காரர்களும் கிராம சபை உறுப்பினர்கள். ஊரின் பெரிய பணக்காரன் அங்கு செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான். வரலாற்றில் பொருளாதார அடிப்படையில்தான் அதிகாரம் இருந்துவந்திருக்கின்றது. ,அதற்குள் சமுதாயம் அடங்கி இயங்கி வந்ததன் அடையாளத்தை நான் பல கிராமங்களில் அன்று பார்த்தேன்.


திருமணத்தில் முறைப் பெண், முறை மாப்பிள்ளை என்னும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெண் கொடுக்க மறுத்தால் கடத்திப்போய்த் தாலி கட்டுவதும் உண்டு. தண்டனையாக சங்கத்திற்குப் பணம் கட்டிவிட்டு அவளுடன் அவன் வாழலாம். சொந்தத்தில் திருமணம் செய்வது அதிகம். சாதி விட்டுத் திருமணம் செய்வதை கிராமம் ஏற்கவில்லை. ஊரைவிட்டு சம்பந்தம் செய்வதுகூட வரவேற்கப்படவில்லை.


இலக்கியத்தில் “உடன்போக்கு” அதிகமாக வரும். ஓடிப்போன மகளைத் தேடிச்செல்வது போன்ற பாடல்கள் வருகின்றன. அன்றைய சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் என் காலத்தில் ஓடிப்போகும் பெண்ணுக்கு மரியாதை போய்விடும். “காதல் “ என்று சிறப்புச் செய்து அதை ஏற்கவில்லை. இப்பொழுது பொருளாதார அடிப்படையில் அதற்கு மதிப்புக் கிடைக்கின்றது. அவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தால், நிறையப் பணம் ஈட்டும் நிலையில் இருந்தால் சேர்த்துக் கொள்கின்றார்கள். மரபு என்பதும் காலத்திற்கேற்ப மாற்றம் பெறுகிறது. ஒரு பழக்கம் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு, கொஞ்சம் அதிகமாக அந்தப் பழக்கம் தங்கிவிட்டால் அது மரபாகிவிடுகின்றது. சிறிது சிறிதாக நாம் அடையும் மாற்றங்களை நினைவலைகளில் காணலாம்.


சாதிப்பிரிவினைகள் எங்கும் இருந்தன. ஒரு ஊரில் எந்த சாதி அதிகம் இருக்கின்றார்களோ அவர்கள் கை ஓங்கி நிற்கும். செல்வந்தர்களுக்கும், உயர்சாதியினருக்கும் ஊழியம் செய்யும் நிலையில் ஹரிஜனங்கள் இருந்தனர். இன்று தலித் என்கின்றோம். பல கிராமங்களில் டீக்கடையில் அவர்களுக்கென்று தனி காபி டம்ளர்கள் இருந்தன.அதை ஏற்படுத்தியவர்கள் உயர் சாதிக்காரர்கள். அந்தணன் அங்கே போவதில்லை. அக்ரஹாரத்தில் அவர்கள் செருப்பு போட்டுக் கொண்டு நடப்பதில்லை. பிராமணர்கள் மற்ற சாதிக்காரர்கள் எல்லோரையும் ஒதுக்கி வாழ்ந்தனர். ஆனாலும் செல்வ நிலையில் அவர்கள் உயர்ந்திருக்கவில்லை. அதனால் செல்வந்தர்களுடன் ஒத்துப் போயினர். வீடு என்று வரும் பொழுது ஆச்சாரம் என்று கூறி ஒதுக்கினர்.


கேரளாவில் ஒரு பழக்கம் இருந்துவந்தது. உயர் சாதிக்காரர்கள் வரும் பொழுது உழைக்கும் கூட்டம் மேலே போட்டிருக்கும் துண்டுகளை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்க வேண்டும். பெண்ணும் மேலே போட்டிருக்கும் துணியை எடுத்தாக வேண்டும். அப்பொழுது ரவிக்கை போடும் பழக்கம் இல்லை. எனவே திறந்த மார்புடன் பெண்கள் குனிந்து வணங்குவதை நிறுத்தக் கடுமையாகப் போராடியவர் நாராயண நம்பூதிரி அவர்கள்; போராடி வெற்றியும் கண்டார்.


நான் பார்வையிட்ட கிராமங்களை வைத்துச் சில செய்திகளைக் கூறுகின்றேன். என் பணிக்காலத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்களைப் பார்க்க வேண்டி வந்தது. எனவே அந்தந்த இடங்கள் வரும் பொழுது அச்சூழலை வருணிப்பேன்.


பழிவாங்குதல் என்பதை ஓர் இயல்பாய் நினைத்தனர். கோபம் வந்து விட்டால் கத்தியால் வெட்டுவது, குத்துவது என்பது அங்கே சாதாரணம். ஒன்று அவர்களே செய்வார்கள்; அல்லது ஏழைகளை உபயோகித்துக் கொள்வார்கள். குற்றம் புரிந்தவன் சிறையில் இருக்கும் காலத்தில் அவர்கள் குடும்பங்களைச் செல்வந்தர்கள் கவனித்துக் கொள்வார்கள்..


இவைகளைப் படிக்கும் பொழுது பயங்கரமானதாகத் தெரியும். ஆனால் இது எப்போழுதும் நடப்பதன்று. பழகும் பொழுது பாசத்துடன் பழகுவார்கள். போலித்தனம் கிடையாது. விருந்தோம்பல் அதிகம். நாம் சொல்கின்றபடி செய்வார்களோ இல்லையோ நாம் பேசுவதைப் பொறுமையுடன் கேட்பார்கள்.அவர்களுக்கு நம்மைப் பிடித்துவிட்டால் நாம் சொல்வதைக் குழந்தைகள் போல் செய்வார்கள். ஒரு குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால் அவர்கள் நம்மைக் காப்பாற்ற எதுவும் செய்வார்கள்.


இது போன்ற சமுதாயக் கட்டுப்பாடுகள் உலகில் எங்கும் இருந்து வந்தன. தனி மனிதனாக வாழ முடியாது. சிறு குழுவானாலும் , பெருங்கூட்டமானாலும் ஓர் ஒழுங்கு வேண்டும். மனிதன் அதற்காகச் சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொண்டான். கூர்ந்து பார்த்தால் சிலவற்றில் ஓர் ஒற்றுமை காணப்படும்.சமூக இயல், மனித இயல் இரண்டினையும் உலக அளவில் இருக்கும் செய்திகளை, எழுத்துக்களைப் படித்து ஆய்வு செய்து வருகின்றேன். வெளி நாடுகளுக்குச் செல்லும் பொழுது பல இடங்களுக்கும் சென்று வருவேன். மக்கள் புலம் பெயர்ந்து செல்லும் பொழுது பழக்க வழக்கங்களில் கலப்பு ஏற்பட்டுவிடும்.


75 ஆண்டுகால வரலாற்றின் பார்வையாளர், பங்குதாரர் என்ற முறையில் அனுபவங்களை, எண்ணங்களைப் பதிவு செய்கின்றேன். சாதி, மதம், மொழி, அரசியல், நாடு இவை பற்றிய உண்மைகள் பதியப் படும்பொழுது நாம் உணர்ச்சி வயப்பட வேண்டியதில்லை. நாம் மனிதர்கள், குறையும் நிறைவும் கலந்த ஒரு கலவை.

பகுதி 7

அடிக்கடி நம் மூதாதையரை நினைக்க வேண்டிவருகின்றது. காரணம் சில பழக்கங்கள் ஏதோ ஒரு வடிவில் ஒட்டிக் கொண்டே வருகின்றன . காட்டிலே திரியும் பொழுது இரைதேடி வெளிச் செல்வான். உடல் பசி வந்துவிட்டால் பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு பெண்ணிடம் இச்சையைத் தீர்த்துக் கொள்வான். தாய், தாரம். உடன் பிறந்தோர் என்ற உறவுகள் அப்பொழுது கிடையாது. வரலாறு படிக்க வேண்டும். மனிதன் தோன்றி லட்சக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டது. அந்த அளவு கால ஆராய்ச்சி வேண்டாம்.  வால்கா முதல் கங்கை வரை என்னும் புத்தகம் இருக்கின்றது. அதையாவது படித்துப் பாருங்கள்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை வருமாம். ஆண்மகனுக்கு ஒருத்திமட்டும் போதவில்லை. இடையில் மனிதனைச் செம்மைப் படுத்த கதைகளும் காவியங்களும் வந்திருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் அவன் தன் பலஹீனத்தை வெல்ல முடியாமல் திண்டாடுகின்றான். ஆண்களுக்குச் சலனங்கள் தோன்றுவது இயல்பு.
ஆன்மபலத்திலும் பயிற்சியிலும் அடக்குக்கின்றான். காலப் போக்கில் சிலருக்கு இத்தகைய சலனங்கள் தோன்றாத நிலை வரலாம். சிலர் சலனத்தில் மட்டுமின்றிச் சபலத்திலும்  மூழ்கிக் கிடக்கின்றார்கள்.

இராமாயணம் இன்றும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்றால் ராமனே காரணம். தொலைக் காட்சியில் எத்தனை முறை வந்தாலும் அலுக்காமல் பார்ப்பவரின் கூட்டம் இருப்பதாலேயே மீண்டும் மீண்டும் இராமாயணம் வருகின்றது.

அக்காலத்தில் இராமகதையால் ஆண்களுக்கு ஏற்பட்டது வியப்பு. “சிந்தையாலும் பிற மாதரைத் தொடேன்”. இது முடிகின்ற காரியமா என்ற திகைப்பு.ஆணுக்கு. அப்படி இருக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது சீராக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுபவர் இராமன். பெண்ணுக்குத் தன் கணவன் தன்னைத் தவிர வேறு யாரிடமும் செல்லக்கூடாது என்ற ஆதங்கம் அதிகம். அவள் கண்களுக்கு இராமன் மிக உயர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார்.

இன்னொரு காரணமும் உண்டு. மனிதன் குடும்பம் என்ற கோட்பாட்டைக் கொண்டுவந்தபின் அதன் அருமையை உணர்ந்தான். பின்னர் முதுமை வரும் பொழுது அவன் மனத்தில் இன்னொரு ஏக்கம் வளர ஆரம்பித்தது. தான் தேடிய சொத்துக்களைப் பராமரிக்க மட்டுமின்றி தன்னை அன்புடன் பாதுக்கும் பிள்ளகளாக இருக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தான். தனக்குக் கட்டுப் பட்டவனாக இருக்க வேண்டுமென்று விரும்பினான்.. தந்தை சொல்லைத் தட்டாத இராமன் அவனுக்குத் தெய்வீக புருஷனாகத் தெரிந்தார்.

காட்டுக்குப் போ என்ற செய்தி கேட்டாலும் “சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை முகத்தினைக்” கொண்ட இராமனைப் போன்ற பிள்ளை தனக்கு வேண்டும் என்று நினைக்காத தந்தைமனம் உண்டோ?!

காக்காய்க் கதை, நரிக்கதை என்று குழந்தைகளிடம் கதைகள் சொல்லுகின்றோம். நீதிக் கதைகள். நல்லது கேட்டல், நல்லது பார்த்தால் நல்லதாக இருக்கத் தோன்றும். இது உளவியல்.

இத்தனை முயற்சிகளிலும் திருந்த முடியாத மனங்களும் உண்டு 1956 - இந்த ஆண்டில், கிராமங்களில் சில காட்சிகள் காணலாம். பணக்காரன் வில்வண்டியில் ஒரு வைப்பாட்டி வீட்டிற்குப் போவது அவனுக்குப்  பெருமை. அப்படி வெளிச் செல்லும் கணவனிடம் பெண் முகம் தூக்கி வைத்துக் கொள்வாள்; அழுவாள் ; இரண்டு நாட்கள் பேசாமல் இருப்பாள். ஏதாவது கணவன் வாங்கிக் கொடுத்து விட்டால் சமாதானம் ஆகிவிடுவாள். கணவன் நிரந்தரமாகப் பெண்னை வைத்துக் கொள்ளும் பொழுதுதான் போராட்டம் வரும் பெரும் சண்டையும் நடக்கும். எளியவர் வீடுகளில் நடக்கும் சண்டைகள் வீதிக்கு வரும். கணவனின் அடியும் மிதியும் கிடைக்கும்.

கண்ணகியால் அன்று பேச முடிந்ததா? கடவுளிடம் கூடக் கணவனைப் பற்றிக் குறை கூறினால் கற்பு பாதிக்கப் படும் என்றல்லவா எழுதி வைத்துவிட்டார்கள். பரத்தைகூட, தலைவன் வர சில நாள்களானால் பொறாமையிலும்ஆத்திரத்திலும் பேசுவதைச் சங்கப் பாடல்களில் காணலாம். தாலி கட்டாத மனைவியும் பெண். அப்படி பொறாமைப்படுவது உரிமையில்லா விட்டாலும் அது பெண்ணின் இயல்பு. எனவே இரு நிலையிலும் பாதிக்கப் பட்டவர்கள் பெண்கள்.

பெண்ணுக்கு மட்டும் கற்பை வைத்தான். நிச்சயம் அது ஆண்டவனின் சட்டம் இல்லை. ஒரு பெண் கர்ப்பமாகி இத்தனை மாதங்கள் கருவை வயிற்றில் சுமக்க வேண்டுமென்பது பொது விதி. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்துப் பெண்ணுக்கும் அமெரிக்காவின் நியூயார்க்கில் வாழும் பெண்ணுக்கும் ஒரே விதி. இதுதான் இயல்பானது. உயர்குலப் பெண்டிற்கு மட்டும் கற்பு என்று கூறுவது ஆண் வகுத்த சட்டம்.

அவனுக்குச் சலுகைகள் உண்டு. பல பெண்களிடம் அவன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். அன்று அவன் அதற்குச் சில காரணங்களை நினைத்திருக்கலாம். அக்காலத்தில் வாணிபத்திற்காக ஆண் வெளிச் செல்ல வேண்டும். வெளியில் செல்லும் ஆணுக்கு வீட்டுக்குத் திரும்ப நாட்களாகும்.எனவே உடல் பசியை
அவனால் ஒத்திப்போட முடியாது. அதுசரி, அவன் வர நாட்களாகும் பொழுது பெண்ணிற்குப் உடல்பசி ஏற்படாதா? அவள் மூளைச் சலவை செய்யப் பட்டாள். அவள் கணவனுக்குக் கட்டுப் பட்டவள். அவனுக்கு இன்பம் கொடுப்பது, பிள்ளைகளைத் தருவது, அவன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது அவள் கடமைகள். அவள் வீட்டுக்குள் இருந்தால்தான், பிறக்கும் குழந்தைகள் தன்னுடையது என்பதற்கு உத்தரவாதம் இருக்கும்.

இது ஆரம்பத்தில் ஆணாதிக்கம் என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப் பட்டாலும் ஆண் அந்த குடும்ப அமைப்பில் அமைதி கண்டான். பெண்ணின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சியைக் கொடுத்தன. மற்ற பெண்களிடம் காணாத அமைதியை உரிமையுள்ள மனைவியிடம் கண்டான். அவள் தன்னை விட்டுப் போகக் கூடாது என்பதற்குப் பெண்ணுக்கு இன்னும் கூடுதலாகக் கட்டுப்பாடுகளை விதித்தான். இதுதான் சமுதாய வரலாறு. அன்பிலும் ,அச்சத்திலும் விளைந்தது அடக்குமுறை.

பெண் விடுதலைக்கு நானும் போராடியவள். சொல்லப் போனால் நான் சமுதாயத்தில் ஒரு போராளியாகவே வாழ்ந்தேன். உலகம் தோன்றிய நாள் முதலாய் மனிதன் வாழ்ந்த விதத்தை மனித இயலை ஆழ்ந்து படிக்கப் படிக்க ஒரு புதிய எண்ணம் தோன்றுகின்றது. அந்தக் காலத்தில் பெண் வீட்டை விட்டு சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாது.அப்படி வரும் பெண்கள் சிதைக்கப்படலாம். பலரிடம் வதை பட்டு அழிவதை விட  ஒருவனிடம் அடங்கி இருந்தது அக்காலத்தில் அவளுக்குப் பாதுகாப்பாகவும் இருந்திருக்கலாம். இந்த என் எண்ணத்தைத் தாக்கிப் பேசுவார்கள் என்று

தெரிந்தே இதனை எழுதுகின்றேன்.

குடும்பத்தின் அருமையை ஆண் உணர்ந்து கொண்டான்.. எனவே பெண்ணைப் போற்றிப் பாட ஆரம்பித்தான்,. இயற்கையில் கூட அவண் பெண்ணைக் கண்டான். சாந்தமான கடவுள் உருவங்களைப் பெண் வடிவில் செய்தான். ஒரு பிரச்சனையை ஆராயும் பொழுது அந்தக் காலம், அக்காலச் சூழல், அப்பொழுது மனிதன் தனக்கு வைத்துக்கொண்டிருந்த விதிகளையும் நோக்க வேண்டும். அவன் செய்த தவறு அந்த விதிகளை எக்காலத்திலும் நிலை நிறுத்த நினைத்ததுதான். சோடாபாட்டில் அடக்குமுறை என்று சொல்வார்கள். பெண்ணும் படித்து ஆணுக்குச் சரியாக வெளியில் சென்று வேலை பார்ப்பவர்களிடம், கட்டுப் பாடுகளை விதிக்கும் பொழுது சீறுகின்றார்கள். அக்காலச் சலுகைகளை இக்கால ஆண்கள் இன்னும் விரும்பி நடத்தினால் வீட்டுப் போராட்டம் தவிர்க்க இயலாது. பின்னால் மாறிய காலமும் சமுதாயமும் பற்றிப் பேசும் பொழுது உதாரணங்களுடன் நிறைய பேசலாம்.

இப்பொழுது கிராம வாழ்க்கையைப் பார்க்கலாம்.

கிராமத்தினரின் அன்றைய உணவுப் பழக்கம். சத்து நிறைந்தது. எண்ணையில் வதக்கி உண்பது மிக மிகக் குறைவு. பச்சைக்காய்களைப் போட்டு ஒரே குழம்பாய் வைப்பார்கள். கம்பு, சோளம், கேழ்வரகு, அதிகமாகச் சேர்க்கப்பட்டது. சக்கி அரிசி என்று கைகுத்தல் அரிசியை நாங்கள்அறிமுகப் படுத்தினோம். ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள். சத்தான சாப்பாடு, தூய்மை கெடாத காற்று, சுறுசுறுப்பான வாழ்க்கை அவர்களைப் பலம் மிகுந்தவர்களாக வைத்திருந்தது. இத்துடன் பெரும்பாலும் பேராசைகள், தீய எண்ணங்கள், சுய நலங்கள் அப்பொழுது அதிகம் கிடையாது. தலைவனுக்குப் பேராசை இருக்கும். அது உலகம் தோன்றிய நாள் முதலாய் இருந்து வருகின்றது.

பல ஆண்களிடம் ஒரு பழக்கம் இருந்து வந்தது. கள் குடிப்பது. “கள்” பற்றி ஒரு செய்தி கூற விரும்புகின்றேன். இந்தச் செய்தியை எங்காவது பதிய நினைத்து வந்தேன். தமிழர்களின் வரலாறு எழுத முடியவில்லை என்று மதிப்பிற்குரிய மதன் அவர்கள் கூறினார்கள் அதற்குக் அவர் கூறிய காரணம் கள் கொடுத்துப் புலவர்களை மன்னர்கள் பாட வைத்தார்கள். கள் குடித்த மயக்கத்தில் பாடிய புகழ்ப்பாக்கள் வரலாற்று உண்மைகளைக் காட்டாது என்றார். தமிழ் வரலாற்று ஆய்வு செய்பவர்களும் , வரலாற்றின் மீது பற்று கொண்டவர்களும் மறுப்பு கொடுத்தார்கள். வரலாறு டாட் காம் மின்னிதழில் கமலக் கண்ணன் முதலில் மறுப்புக் கட்டுரை எழுதினார். டாக்டர் கலைக்கோவன் அவர்கள் நீண்டதொரு அழகான கட்டுரையே எழுதி விட்டார். அந்தக் “கள் “ பற்றிய ஒரு செய்தி எனக்குக் கிடைத்தது. சுவையான தகவல்.

பகுதி 8

உங்களிடம் ஒரு செய்தி கூறுவதாகச் சொல்லி இருந்தேன். அச்செய்தியை நான் வேடிக்கையாக நினைக்கவில்லை. ஆய்வுக்குரிய செய்தியாக நினைத்தேன். கள் குடித்தல் என்பது காலம் காலமாக சமுதாயத்தில் இருந்துவந்த பழக்கம். காபி, டீ வருவதற்கு முன்பே வந்துவிட்ட பழக்கம். காட்டிலே வாழும் பொழுது அவனுக்குச் சுலபமாகக் கிடைத்த ஒரு பானம  கள். மிருகங்களை அடித்துப் பச்சையாய்த் தான் நம் மூதாதையர்கள் சாப்பிட்டனர். இதற்காக யாரும் வெட்கித் தலை குனியவேண்டியதில்லை.  எனவே மாமிசம் சாப்பிடுவதும், கள் குடிப்பதும் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றன. மனிதனின் நாகரீகமும் பண்பாடும் வளர வளர உணவு, உடை , இன்னும் பல விஷயங்களில் மாற்றம் சிறிது சிறிதாகப் புகுந்தது.எதையும் பேசும் பொழுது , காலத்தையும்
அப்பொழுது மனிதன் வாழ்ந்த முறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையின் பரிமாணம். அந்தக் கள் பற்றிப் பேசலாம்.

முதலில் இறக்கப்படும் கள்ளின் பெயர் சுத்தக்கள்ளு. இதில் மிகவும் கொஞ்சமாகவே போதை இருக்கும். ஆனால் ஆண்களுக்கு இது வீரியத்தை அதிகமாக்கும். ( இன்றைய வயாகரா போல). அடுத்து சுண்ணாம்பு கலந்தவுடன் அது பதநீர். இது உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மூன்றாவது கள்ளைப் பாடம் செய்து கொடுப்பது போதைக் கள்ளு ; இதுவே அதிகமான போதை தரும். இதைச் சொன்னவர் பெயர் சுந்தரம்பிள்ளை. இவர் ஊர் நெல்லை மாவட்டம் கடம்பூரின் அருகிலுள்ள ஊர் இளவேலன்கால். இவருக்கு வயது 85க்கு மேல் இருக்கும். இவரை அமெரிக்காவில் என் வீட்டிற்கு வந்த பொழுது பார்த்தேன், பேசினேன். இந்தவயதிலும் மிக திடகாத்திரமாக இருந்தார். வேகமாக நடப்பார். இங்கு வந்தால் சும்மாவே இருக்க மாட்டார். மொழி தெரியாவிட்டாலும் இவர் சுறுசுறுப்பால் அமெரிக்கர்களும் இவருடன் பழகுவர். இவர் சுத்தக் கள் நிறையக் குடித்திருக்கி்றாராம். இதற்கு மேல் இதுபற்றிக் கேள்வி கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. அவரை நேரில் பார்த்துக் கேட்டுக் கொள்ளலாம். அல்லது புதுக்கள் பற்றி ஆராய்ச்சி செய்யலாம். வயாகரா தேவை இருக்காது. இது ஓர் ஆய்வுக்குரிய விஷயம்.

அக்காலத்தில் விருந்தோம்புதலில் மாமிச உணவும் கள்ளும் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. கள்ளுண்ணாமைச் சிறப்பும் சொல்லப்பட்டிருக்கின்றது. இது போதும். கிராமத்தைப் பார்ப்போம்.

கிராமங்களில் குடிதண்ணீருக்குக் கிணறுகள், குடிதண்ணீர்க் குளங்கள்,கண்மாய்கள் உபயோகப்படுத்தப்பட்டன. சில வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டிருந்தன. இப்பொழுது இருப்பவை போல் இருக்காது; காலையில் சுத்தப் படுத்தப் பட வேண்டும். பெரும்பாலும் இருள் போகும் முன்
ஊரின் எல்லையான ஒதுக்குப் புறங்களே காலைக் கடன்களைக் கழிக்கும் இடங்களாக
இருந்தன. இந்த இரண்டரை மாதங்களில் பெரிய அளவில் கட்டப் பட்ட வீடுகள் பார்த்ததில்லை.

வீட்டிலே சடங்குகள் சிறப்பாக நடத்துவர். பெண் பெரிய மனுஷி யானால் சடங்கு, நிச்சயதார்த்தம், திருமணம் போன்றவைகள் வீடுகளில் செய்தனர். குழந்தைக்குக் காது குத்தலுக்குக் கோயில்களுக்குப் போய்ச் செய்வதும் உண்டு. கிராமங்களில் ரசிக்கத் தக்க ஒன்று இருந்தது. மனிதன் இசையுடன் வாழ்வது. மொழி பிறக்காத காலத்தில் கூட ஓசை எழுப்பி , ஏதோ குரல் எழுப்பிக் கூத்தாடி மகிழ்வர். உலகம் முழுவதிற்கும் இது பொதுவானது. ஆனால் நம் தமிழன் இசையை பலவிதங்களில் பயன்படுத்தினான். தாலாட்டும் உண்டு ;ஒப்பாரியும் உண்டு. ஏற்றப் பாட்டு, நாற்று நடும் பாட்டு என்று தொழில்
செய்யும் பொழுது கூடப் பாடிக்கொண்டே களைப்பின்றி பணி புரிவான்.பாடுபவர்கள் அனைவரும் கவிஞர்களே. எப்படித்தான் வார்த்தைகள் வருமோ, தடையின்றி இராகத்துடன் பாட்டு வெள்ளமெனப் பெருகி இசைப்பர். என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவர்களிடமிருந்து நாட்டுப் புறப் பாடல்கள்
கற்றுக் கொண்டேன்.

அடுத்து சினிமா. இதைபற்றிப் பேசாமல் இருக்க முடியுமா? சில ஊர்களில் டெண்ட் கொட்டகையில் சினிமா நடக்கும். பள்ளிகளுக்கு அனுப்பப் பிடிக்காது. ஆஸ்பத்திரிக்குப் போகக் கூடத் தயக்கம். ஆனால் சினிமா மட்டும் எங்கு நடந்தாலும் போய்ப் பார்க்க வேண்டும். சினிமா ஆர்வத்திற்குக் குறைவில்லை.
இறைவனைப் போல் எங்கும் நிறைந்தி ருந்தது சினிமாப்பைத்தியம். இயல், இசை,நாட்டியம் முத்தமிழல்லவா? தமிழன் கொஞ்சம் அதிகமாகவே சினிமா மோகம் கொண்டுள்ளதை மறுக்க இயலாது.
இந்தப் போக்கால் அரசுப்பீடத்திலும் அவர்களை அமர்த்திப் பார்த்து ரசிக்கின்றனர்..

கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு உண்டு. குல தெய்வங்கள் வெளியூரில் இருந்தால் குடும்பமாகப் போய் வருவர். பொங்கல் வீட்டில் வைப்பதுண்டு. கோயில்களில் சென்று பொங்கல் வைத்து வழிபடுதலும் உண்டு. கோழி, ஆடு பலி கொடுப்பதும் உண்டு.

என்னை மன்னிக்கவும். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள். ஆனால் மூடப் பழக்கங்களை வெறுப்பவள். கடவுள் பெயரால் தீமைகள் புரிந்தால் தயங்காமல் அங்கேயே சுட்டிக் காட்டத் தயங்காதவள். சாதி, மதம், மொழி, மண் இவைகளின் ஆளுமை என்னிடம் கிடையாது. “யாதும் ஊரே யாவரும் கேளீர் “ என்ற தமிழ்ப்
பாடல் வெறும் பெருமைக்காகச் சொல்லுபவள் இல்லை நான். என் மதம் மனித நேயம். இறைவன் படைத்த எல்லா உயிர்களும் ஒன்றே.  எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. என் கருத்தை பிறரிடம் திணிக்க மாட்டேன். ஆனல் சொல்ல நினைப்பதைச் சொல்லுவேன். இறைவன் படைத்த எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். கடவுள் மிக மிக உயர்ந்தவர். அவரை வியாபாரம் செய்கின்றவர்களைக் காணும் பொழுது மனம் வேதனைப் படுகின்றது.

கிராமங்களில் கூட இந்து முஸ்லீம் அப்பொழுது சண்டை போட்டுக் கொண்டதில்லை. மாமன், மச்சான் என்று சொல்லிப் பழகுவார்கள். சாதி உணர்வு இருந்த ஊர்களிலும் இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் பிரியமாகப் பழகுவதைப் பார்த்திருக்கின்றேன். மதம் இறைவனைப்பற்றி மட்டும் சொல்லும் வரையில் பிரச்சனையில்லை. அதிகார உணர்வு வந்துவிட்டால் அரசியலுக்குண்டான அத்தனை குணங்களும் இணைந்துவிடும். மதம்பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை .பின் தொடர் வேறு திசையில் பயணம் செய்ய நேரும். என் நோக்கம் குடும்பம் என்ற கோட்பாடு சிதைந்து விடக்கூடாது. குடும்பங்கள் அடங்கிய சமுதாயம் அன்பும் அமைதியும் நிறைந்து இயங்க வேண்டும்.

மரணம் நடந்தால் ஊரே கூடிவிடும். கல்யாணத்திற்குப் போக முடியாவிட்டாலும் சாவுக்கு அவசியம் போயாக வேண்டும். பிறந்தவுடன் மனிதன் அழுகின்றான். வாழும் காலத்தில் என்னென்ன வதைகள் படவேண்டுமோ என்று நினைப்பிலே பிறந்ததுவோ அழுகை? இது கற்பனை.செத்தவுடன் மவுனம். அவன் வேதனைகள் முடிந்து விட்டன. மற்றவர்கள் அழுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தின் துணை ஒன்று துண்டித்துப் போய்விட்டது. இதுதான் வாழ்க்கை!

இரண்டரை மாதங்களும் கடந்து போனதே உணர முடியவில்லை. பிரச்சனை கேள்விப்பட்டேனே தவிர எனக்கு யாரும் பிரச்சனைகள் கொடுக்கவில்லை. கிராமங்களில் என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தனர். அவர்களும் என்னிடம் தங்கள் பிரச்சனைகளைக் கூறினார்கள். என்னுடைய அணுகுமுறைகளும், என்னுடைய சரளமாகப் பழகும் தன்மையும் , வம்பு பேசிய சக அதிகாரிகள் கூட என்னை மதிக்கத் தொடங்கினர், முதலில் முகம் மலந்து வரவேற்காத என் மேலதிகாரி கூடபுறப்படும் பொழுது புகழுரை பேசி வாழ்த்தி அனுப்பினர். காந்தி கிராமத்தில் ஐந்து மாதக்காலம் பயிற்சி. என்னை சமுதாயப் பணிக்குப் பொருத்தமாக முழுமையாக்கியது காந்தி கிராமம்.

மதுரை மாவட்டத்தில் கல்லுப்பட்டியில் உயர்திரு குருசாமி அய்யா அவர்கள் தலைமையில் ஒரு பயிற்சிப் பள்ளி உண்டு. ஆனால் இங்கே சில பிரிவுகளுக்கே பயிற்சி கொடுத்து வந்தனர். இவ்விரண்டு பயிற்சி நிலையங்களிலும் பயிற்சி பெற்றவர்களிடம் காந்தீய உணர்வை இப்பொழுதும் காணலாம். .எளிமையும் உழைப்பிற்குத் தயங்காத இயல்பும்இருக்கும்.காலம் மாறிவிட்டது. இப்பொழுது இருக்கும் காந்தி கிராமத்தில் வசதிகள்வந்துவிட்டன. ஒரு கல்வி நிறுவனமாகக் காட்சியளிக்கின்றது.

எங்கள் பயிற்சிக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். நான் கொடுத்துவைத்தவள். சௌந்திரம் அம்மா, அம்புஜம்மா இன்னும் பல பெரியவர்களின் நேரடி வழி காட்டலில் பயிற்சி பெற்றவள். கல்லறைக்கருகில் இருக்கும் எனக்குச் சமுதாய அக்கறை இருப்பதற்குக் காரணமே இது போன்ற
பெரியவர்கள் தான்.“பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்” நல்லவர்களின் தொடர்பு நம்மைச் செம்மைபடுத்தும். எங்களுக்கு யாரிடமும் காழ்ப்புணர்ச்சியை அவர்கள் விதைக்கவில்லை. ஆதாயம் தேடி அவர்கள் சேவை செய்யவில்லை. சமுதாய அக்கறையுள்ளவர்கள் அன்பையும் ஒருமைப்பாட்டையும் மக்களிடையே நிலைநிறுத்த வேண்டும். தொடக்கம் இனிய ராகமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் சிறிது சிறிதாக வரலாற்றில் அபஸ்வரங்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டதை நாம் மறுத்தல் இயலாது. இயன்ற மட்டும் ஆராய்வோம்.

பகுதி 9

காந்தி கிராமம்

காந்தியின் பெயரில் இருந்ததாலோ என்னவோ எளிமையும் அழகும் ஒருங்கிணைந்த ஓர் அமைதிக்குடிலாக அமைந்திருந்தது. இப்பொழுது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன .அங்கே பல பயிற்சிகள் நடைபெற்று வந்தன. ஆதரவற்ற பெண்களுக்குச் சேவை இல்லமும் இருந்தது. அந்த இடத்தையொட்டிச் சிறிது தள்ளி கிராமிய வளர்ச்சிப் பல்கலைக்கழகமும் இருந்தது. காந்தி கிராமத்தை அப்பொழுது நிர்வகித்து வந்தவர் டாக்டர். திருமதி சவுந்தரம் ராமச்சந்திரன் ஆவார். மதுரையில் அக்காலத்தில் கோலோச்சி வந்த டி.வி.எஸ் குடும்பத்தின் மகள். மத்திய அரசிலும் அமைச்சராக இருந்தவர்கள்.காந்தீய வழியில் எல்லாம் நடந்து வந்தன.

பயிற்சிக்கு வந்தவர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேலைகள் தரப்பட்டன. அதிகாலையில் எழுந்து அந்த இடம் முழுவதையும் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளைக் கொட்ட முதலிலேயெ உரக்குழிகள் வெட்டி அதில்தான் போட வேண்டும். இந்தக் குழிகளையும் நாங்கள் தான் ஏற்படுத்த வேண்டும். நீளம் அகலம், ஆழம் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு.

இந்தக் குழிகள் மட்டுமல்ல, கழிப்பறைக்கும் குழிகள் தோண்ட வேண்டும். வார்தா கக்கூஸ் என்று பெயர். குழி தோண்டியபின் இரு நீண்ட அகலமான பலகைகள் குறுக்கே போடப்பட்டு, அது அறையாகித். தட்டிகள் வைத்து மறைக்கப் பட்டிருக்கும். மலம் கழித்த பின் பக்கத்தில் குவித்து வைத்திருக்கும் மண்ணை அள்ளி அதில் போட வேண்டும். இதுதான் எங்கள் கழிப்பறை. மூடப்பட்டபின் ஆறு மாதங்களில் இது உரமாகிவிடும். குப்பைக் குழிகள், மலக் குழிகள் ஆகிய இடங்களை ஆறு மாதம் கழித்துத் தோண்டி, எருவை அருகில் இருந்த வயல்களில் போட வேண்டியதும் எங்கள் பணி. அக்காலத்தில் நாங்கள் யாரும் முகம் சுளித்தது கிடையாது. சாதி, அந்தஸ்து என்ற பேச்சிற்கு இடமில்லை.

காய்கறி வெட்டுவது முதல் பாத்திரம் கழுவுவது வரை எல்லா வேலைகளையும் நாங்கள்தான் செய்ய வேண்டும். சமையலில் பாத்திரத்தை அடுப்பில் தூக்கி வைத்து இறக்கவும், மா ஆட்டவும் பணியாளர்கள் உண்டு. மற்றப்படி எல்லாப் பணிகளையும் நாங்கள் செய்வோம். இத்தனையும் முடித்துவிட்டு வகுப்பறைக்குச் செல்வோம். கிராம வளர்ச்சிக்கு அரசு என்னவெல்லாம் திட்டங்கள் கொண்டு வந்திருந்ததோ எல்லாவற்றையும் பற்றி எங்களுக்கு அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்தனர். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி என்பதால் முதலில் நாங்கள் அவற்றைத் தெரிந்து கொள்ளப் பயிற்சி அளிக்கப் பட்டது.உதாரணமாக அப்பொழுது விவசாயத்தில் ஜப்பானிய நடவு முறை அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது. அதாவது வயலில் நாற்றை வரிசையாக நட வேண்டும். நாங்களும் வயல்களில் இறங்கி நாற்று நடக் கற்றுக்கொண்டோம்.. இதே போன்று பல துறைகளையும் பற்றி வகுப்புகள் நடத்தியதுடன் நடைமுறைப் பயிற்சிகளும் கற்றுத்தந்தனர். விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த வகைகளில் எல்லாம் மக்களிடம் செல்லவேண்டும் என்பதற்கும் முறைகள் கற்றுத் தரப்பட்டன (communication skill). படங்கள் வரைவது முதல் பொம்மலாட்டத்திற்குப் பொம்மைகள் செய்து அதை இயக்கும் முறைகள் வரை பல கற்றுத்தரப்பட்டன.


பக்கத்து கிராமங்களுக்கு அழைத்துப் போய்த் தங்க வைப்பார்கள். எந்த வசதியும் எதிர் பார்க்கக் கூடாது. மக்களோடு மக்களாக இருக்கவேண்டும். பயின்றதை அங்கே செய்ய வேண்டும். வீடுகளுக்குப் போய் எப்படி பேச வேண்டும், பழக வேண்டும் என்பதும் கற்றுத்தரப் பட்டது.ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அன்று இப்படி கழிப்பறை வசதிகள் கூட இல்லாத காலத்தில் வாழக் கற்றுக் கொடுத்தது சரி. இந்தக் காலத்திலும் அதன்படி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் இத்தகைய முறைகளில் பயின்றதால் கிராமங்களில் எங்களால் இயல்பாய்ப் பழக முடிந்தது. கிராமத்தினரும் அவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். மனம் பண்பட கழிப்பறை, உரம் அள்ளுதல் தவிர சிலவற்றிலாவது பயிற்சி முறைகள் தொடர்ந்திருக்கலாம். கல்லூரிகளிலிருந்து நேரடியாக வருவோர் கிராமத்துடன் ஒன்றத் திணறுகின்றனர். பழகினால்தானே நாம் அவர்களுடன் ஒன்றி நாம் நினைக்கும் வழிக்குக் கொண்டு வர முடியும். காந்திகிராமத்தில் யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு உண்டு. அதுதான் சர்வோதயப் பிரார்த்தனை. பெரிய ஓலைக் கொட்டகை. மாலையில் அங்கே குறித்த நேரத்தில் போய்ச் சதுரமாக உட்கார வேண்டும். முன்று பக்கங்களில் பயிற்சியாளர்கள். ஒரு பக்கம் பிரார்த்தனையை வழி நடத்துபவர்கள் இருப்பார்கள். தினமும் ஒரு சொற்பொழிவும் இருக்கும். பேசுகின்றவரும் அங்கே அமர்ந்திருப்பார். எல்லா மதங்களிலிருந்ததும் போதனைகள் கூறி, வாழ்க்கையின் நன்னெறிகளைப் பற்றிப் பேசுவார்கள் .

இங்கே ஒரு செய்தி கூற விரும்புகின்றேன். பெரும்பாலும் எங்கள் பிரார்த்தனையை வழி நடத்தியவர் செல்வி சியாமளா .அவர்கள் வேறு யாருமல்ல. நாட்டியத் தாரகை செல்வி பத்மா சுப்பிரமணியத்தின் அண்ணியாவார். சியாமளாவிற்கு அப்பொழுது திருமணம் ஆகவில்லை. பின்னர் நாட்டுப்புற இசையில் ஆய்வு செய்தார். கிராமங்களுக்குச் செல்லும் பொழுது ஆய்வில் சிறிது காலம் உடன் சென்றவர் இசைஞானி இளையராஜா அவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கின்றேன். திருமதி சியாமளா பாலகிருஷ்ணன் அவர்களின் குரலை எங்களால் மறக்க இயலாது. பாடல்களும் இன்னும் ஒலித்துக் கொண்டிருகின்றன. வி. வி. சடகோபன் அவர்கள் அப்பொழுது சங்கீத வகுப்பிற்குப் பொறுப்பானவர். அவர் ஒரு சங்கீத மேதை. என்னை எப்பொழுதும் திட்டுவார். காரணம் என் குரலை நான் கெடுத்துக் கொள்கிறேனாம். நான் முறைப்படி சில ஆண்டுகள் கர்நாடக சங்கீதம் கற்றிருந்தேன். ஆனால் சினிமாப் பாட்டுகள்தான் அதிகம் பாடுவேன். அதுவும் பாடகியின் குரலைப் போல் என் குரலை மாற்றி மாற்றிப் பாடுவேன். எம்.எஸ்.ராஜேஸ்வரி என்று ஒரு பாடகி . அவரைப் போல் குழந்தைக் குரலிலும் பாடுவேன். சாதாரணமா ஐந்தரைக் கட்டை சுருதியில் பாடி வந்தவள் . மீரா சினிமாப் பாடல்களை அற்புதமாகப் பாடியவள். ஆனால் இப்படிப்பாட ஆரம்பித்ததால் என் குரல்வளம் போயிற்று. அவர் சொன்னது சரி.

அக்காலத்தில் கொஞ்சம் மாற்றிப் பாடினாலும் வித்துவான்களுக்குக் கோபம் வந்துவிடும்.சங்கீத உலகில் ஜி. என். பி கொஞ்சம் மாறுதலைக் கொண்டு வந்தார். நிறைய விமர்சிக்கப்பட்டார். இசைக்குயில் எம்.எஸ் அவர்களையே இராகத்திற்காக வார்த்தைகளைச் சுத்தமாகப் பாடுவதில்லையென்று கூடப் பேசினர். டி. கே பட்டம்மாள் சுத்தமாகப் படுகின்றார் என்பார்கள். அப்படிப் பேசுங்காலத்தில் என்னை எப்படி சகித்துக் கொள்வார்கள்.!?

எங்கள் அம்மா ( அப்படித்தான் அழைப்போம் ) காங்கிரஸ் கட்சியில் பெரிய பதவியில் இருந்ததால் பல காங்கிரஸ் தலைவர்களும் காந்தி கிராமத்திற்கு வருவார்கள். நேருஜி வந்த பொழுது பக்கத்தில் நின்று பார்க்க முடிந்தது எங்களுக்குப் பெருமையாக இருந்தது. என் வாழ்நாளில் காந்திஜியை நேரில் பார்க்க முடியாத குறை இன்னும் எனக்குள் இருக்கின்றது. அம்மாவின் கணவர் உயர்திரு. ராமச்சந்திரன் . அவர் ஆங்கிலத்தில் பேசினால் நாங்கள் அப்படியே வியந்து அவரைப் பார்த்துக் கொண்டு நிற்போம்.. அங்கு இருந்த ஐந்து மாதங்களும் கடுமையான உழைப்பிலும் களிப்பாக வாழ்ந்து வந்தோம். இந்தப் பயிற்சி கிராமப் பணியில் சிறப்பாகச் செயலாற்ற எங்களுக்கு உதவியது. பின்னால் எங்கள் துறைக்கு ஒரு பெரும் சோதனை வந்த பொழுது காந்திகிராமப் பயிற்சி முறைகளைக் கூறிப் போராடினேன்.இதே போன்ற ஒரு பயிற்சி மையம் கல்லுப் பட்டியில் உயர்திரு குருசாமி அய்யா தலைமையில் இயங்கி வந்தது. ஆனால் காந்திகிராமம் மாதிரி நிறைய பயிற்சிகள் இல்லை. சில பயிற்சிகளே கற்றுக் கொடுக்கப் பட்டன. என் துறையில் அடிக்கடிப் பல பயிற்சிகள். பல workshops திட்டங்கள் வரும். பொதுவாகப் பயிற்சி என்றால் பெண்கள் போகத் தயங்குவர். நான் தயங்கியதே இல்லை. எனவே நான் பெற்ற பயிற்சிகள் கொஞ்சமல்ல. எங்கள் பயிற்சி முடியுங்காலத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. பயிற்சிக்கு வரும் முன்னர் எல்லோருமே குறுகிய காலம் ஏதாவது ஒரு வட்டாரத்தில் வேலை பார்த்துவிட்டே வந்திருந்தனர். பல கசப்பான செய்திகள், அனுபவங்கள் எங்களில் பலரை உள்ளுக்குள் குழப்பி இருந்தன. பயிற்சியாளர்கள் பொதுப்படையாகக் கற்றுத்தந்தனர். ஆனால் எங்கள் கேள்விகளுக்கு விடைகள் பாடங்களில் இல்லை. அம்மாவைச் சந்தித்துப் பேசலாம் என்று சிலரிடம் கூறினேன். பெரிய இடத்தில் பேசும் விஷயமா என்று சிலர் எதிர்க் கருத்துக் கூறினர். ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். என்னுடன் சிலர் வந்தார்கள்.எப்பேர்ப்பட்ட சந்திப்பு. எங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையாகப் பதில்கள் கூறினார்கள். சொல்லப் போனால் கேட்காத சில பிரச்சனைகளையும் விளக்கி ,சமுதாயப் பணி செய்ய இருப்போரின் அணுகுமுறைகள், செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டுமென்று சொன்னார்கள். அர்ஜுனனுக்குக் கிடைத்த துரோணாசாரியர் போல் எனக்குக் கிடைத்த வழிகாட்டி அம்மா அவர்கள். அவர்கள் சொன்ன அனைத்தையும் கூற முடியாவிட்டாலும் சில குறிப்புகளையாவது கொடுக்க விரும்புகின்றேன்.

--Ksubashini 18:27, 27 பெப்ரவரி 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Dev

இப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2011, 12:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 8,112 முறைகள் அணுகப்பட்டது.