சுவடி - அச்சு - செம்மொழி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 தமிழ்மொழி - "செம்மொழி" அறிவிப்புக்குப் பிறகு தமிழ் இலக்கிய - இலக்கண குறிப்பாக இலக்கிய மோகம் அதிகரித்திருப்பது ஆரோக்கியமானது.

செம்மொழிப் பட்டியலில் இடம்பெறும் தமிழ் இலக்கிய - இலக்கணங்கள் மீதான ஆய்வை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் வரவேற்கவேண்டிய ஒன்று என்றாலும், அது நுணுக்கமான அரசியல் பின்புலம் கொண்டது.

அப்படியான செம்மொழிப் பட்டியலிலும் தமிழர் வரலாற்று தரவிலும் முதலில் நிற்பது சங்க இலக்கியங்களான பாட்டும், தொகையும்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்கிற தொகுப்பில் இடம்பெறும் நூலைச் செம்பதிப்பு செய்யல், வாசித்தல் என்பது அதன் புத்தகமாக்க வரலாற்றோடு பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.

தமிழ்ச் சூழலில் ஓலைவழியாக வாழ்ந்து வந்த இலக்கண - இலக்கியங்கள், புத்தகமாக அச்சிடல் மிக முக்கிய நிகழ்வாகும். அப்படியான அச்சு முறையின் ஊடாக சங்க இலக்கியத்தை நாம் புரிந்து கொள்வதென்பது முக்கியமான ஒன்று.

இதுவரை சங்க இலக்கியப் பதிப்பு குறித்த விவரங்கள் எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடங்கி பலராலும் செய்யப்பட்டிருக்கிறது. அவையெல்லாம் சங்க இலக்கிய நூல்களின் முதல் பதிப்பையாவது சரியாக சொல்கிறதா எனில், இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

தமிழ் நூல் அச்சு வரலாற்றில் சங்கப்பிரதி பதிப்பு என்பது, ஆதிக்க வர்க்கத்தின் சிந்தனையோடு இணைந்தது.

இறையனார் களவியல் உரையில் வரும் சங்கம் பற்றிய கதை தொடங்கி, அதன் பதிப்பு நிறைவுபெறும் வரை நிகழ்ந்த நிகழ்வுகள் சுவாரசியமானவை. இறையனார் களவியல் உரையில் எட்டுத்தொகை நூல்களுள் சிலவற்றில் இருந்து மட்டுமே மேற்கோள் காட்டப்படுகின்றன. பன்னிரு பாட்டியலில்தான் பத்துப்பாட்டு என்கிற பெயர் வருகிறது. இவை முறையே கி.பி. 8,12 என்கிற கால வரையறைக்குள் சொல்லப்படுபவை. இதற்கடுத்த காலகட்டத்தில் வைதிக சமயத்தவரான பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய இவர்களால் பாட்டும் தொகையும் என வரையறை தரப்படுகின்றன. இதே சிந்தனை சங்க இலக்கியப் பதிப்பிலும் செயல்பட்டது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்றே அவை புத்தகமாக அறியப்பட்டன.

வையாபுரிப்பிள்ளையே 1940களில் சங்க இலக்கியம் எனப் பெயரிட்டுப் பதிப்பித்தார்.

சங்கப் பிரதியான பாட்டும் தொகையுமாகிய இவற்றில் "திருமுருகாற்றுப்படை" மட்டுமே முதலில் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சங்க இலக்கியப் புரிதலோடோ, பத்துப்பாட்டில் ஒன்று என்கிற புரிதலோடோ, பதினோராம் திருமுறையில் ஒன்று என்கிறப் புரிதலோடோ பதிப்பிக்கப்படவில்லை. மாறாக, முருகன் பாடல் என்கிற புரிதலோடே பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

"திருமுருகாற்றுப்படை மூலபாடம், தெய்வத்தன்மைப் பொருந்திய மதுரைக் கடைச்சங்கத்து மகாவித்துவானாகிய நக்கீரர் அருளிச் செய்தது. நச்சினார்க்கினியர் உரைபடியே பரிசோதித்துச் சென்னைப் பட்டணம், விவேகக் கல்விச் சாலைத் தமிழ் தலைமைப் புலவராகிய சரவணப்பெருமாளையரால், கல்வி விளக்கச்சுக்கூடத்தின், அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. சய வருடம் ஆவணி மாதம் (1934 ஆகஸ்ட் - செப்டம்பர்) பதிப்பிக்கப்பட்டது", என்கிற தகவலுடன் அச்சாகியுள்ளது.

திருமுருகாற்றுப்படை, 1851இல் ஆறுமுகநாவலராலும், 1853இல் சுப்பராயராலும் நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

சி.வை.தாமோதரம் பிள்ளையின் கலித்தொகைப் பதிப்பான 1887க்குள் பல பதிப்புகளைத் திருமுருகாற்றுப்படை கண்டது.

தமிழ் இலக்கிய - இலக்கண மரபில் சமயங்களின் அதிகாரங்கள் மிக்குக் கிடப்பது வெளிப்படை. புத்தகமாக்கம் என்பது வைதிக (ஆதிக்க) சமயம் சார் சமூகத்தாரால் மட்டுமே சாத்தியமானது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சாகத் தொடங்கிய தமிழ் நூல்களின் பதிப்பு அரசியல் ஆதிக்கவார்க்கத்தின் அதிகார மையங்களுக்குக் கட்டுப்பட்டே இயங்கியது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள், பக்தி இலக்கியங்கள், இலக்கணங்கள், தத்துவங்கள் எனப் பல நூல்கள் அச்சாயின. ஆனால், தமிழின் பழமையான இலக்கியங்களாகக் கொள்ளப்படும் சங்க இலக்கியம் மட்டும் தாமதமாகப் பதிப்பிக்கப்பட்டது ஏன்? என்கிற வினா பல்வேறு சிந்தனை மரபுக்கு உள்பட்டது.

"சங்க நூல்களெல்லாம் புத்த சமண சமயச் சார்புசடையன; அவைகளைப் பயிலுதல் கூடாது என்று எனது இளமைப் பருவத்தில் சில சிவனடியார்கள் கூறியதுண்டு என்று ம.பாலசுப்பிரமணியன், வையாபுரிப்பிள்ளையின் "பாட்டும், தொகையும்" என்கிற சங்க இலக்கிய மூலப் பதிப்பில் பதிவு செய்துள்ள பின்புலத்தோடு சங்க இலக்கியப் பதிப்பின் தாமதத்தைப் புரிந்து கொள்வது நன்று.

பக்திப் பனுவல் என்ற நிலையில், திருமுருகாற்றுப்படைக்கான பல பதிப்பின் தேவையும், பிற சங்க இலக்கியங்கள் பதிப்பின் கால இடைவெளியும் இவற்றூடாக செயல்பட்ட சைவ - வைணவ சமய அறிவுசார் தளத்தில் இயக்கங்கொண்ட 19ஆம் நூற்றாண்டு அறிவுப் பாரம்பரியத்தின் செயல்பாட்டையும் அவதானிக்க முடியும்.

- பத்துப்பாட்டு (1889)
- புறநானூறு (1894)
- ஐங்குறுநூறு (1903)
- பதிற்றுப்பத்து (1904)
- நற்றிணை (1915)
- குறுந்தொகை (1915)
- பரிபாடல் (1918)
- அகநானூறு (1920)

என்று அறியவரும் சங்க இலக்கியப் பதிப்பும் 1834 முதல் 1887 வரை வெளியான திருமுருகாற்றுப்படையின் பதிப்பும் செம்மொழி அறிவிப்பினூடாக நிகழும் ஆய்வின்வழி இன்னும் நாம் புரிந்துகொள்ள வேண்டியவை அதிகம் இருக்கின்றன.

1914இல் முழுமைபெற்ற நற்றிணைப் பதிப்பு பின்னத்தூர் நாராயணசாமி அய்யரின் இறப்புக்குப் பிறகு 1915இல் தான் நமக்குக் கிடைக்கிறது.

1887க்கும் 1920க்கும் இடைப்பட்ட 33 ஆண்டு இடைவெளி ஏன்?

சங்க இலக்கியச் சுவடி கிடைக்காமல் இல்லை; சங்க இலக்கிய ஏட்டுச் சுவடிகள் ஓலையாகவும், காகிதப் பிரதியாகவும் பல இருந்திருக்கின்றன என்பது 1920 வரை வெளியான சங்க இலக்கியங்களின் பதிப்பின் முன்னுரையினை நன்கு கவனித்தால் அறியவரும்.

"ஏடுகள் பற்றிய செய்திகளையும் அவ்வேடுகளை அவர்கள் பெற்றுக்கொண்ட முறைகளையும் நோக்கும்போது அரசியல், சமூக செல்வாக்குகள் முதன்நிலைப்படுகின்றமையைக் காணலாம். மடங்களில் பெறப்பட்ட ஏடுகளின் மீட்பினை நோக்கும்போது, அவ்வேடுகள் ஒரு தொடர்ச்சியான பயில்வுப் பாரம்பரியத்தைச் சார்ந்தவையாவல்லாது சிதைவுற்றுப்போன ஒரு பாரம்பரியத்தின் வழியாகவே பதிப்பாசிரியர்களுக்குப் பெரும்பாலும் கிட்டியுள்ளன எனும் உண்மை முக்கியமானதாகும் என்கிற கா.சிவத்தம்பியின் உ.வே.சா.வின் பதிப்புப்பணி பற்றிய சிந்தனையோடு அணுகத்தக்கது.

சங்க இலக்கியங்கள் என்று நாம் போற்றும் பாடல்கள் பல்வேறு அதிகாரப் பின்புலத்தோடு காப்பாற்றப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, இறையனார் களவியல் உரை முதலான சைவ நூல்களில் மேற்கோள் காட்டப்பட்டதுதான் இன்று நம் கையில் சங்க இலக்கியங்கள் புத்தகமாகக் கிடைத்துள்ளதற்குக் காரணம்.


கா.அய்யப்பன்

நன்றி:- தினமணி

--Ksubashini 14:43, 6 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://heritagewiki.org/index.php?title=சுவடி_-_அச்சு_-_செம்மொழி&oldid=7730" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 6 ஆகஸ்ட் 2011, 14:43 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,419 முறைகள் அணுகப்பட்டது.