தமிழகத்தின் அரிய ஓவியங்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
தமிழகத்தின் அரிய ஓவியங்கள்


நம் நாட்டை கொள்ளை அடித்த வெள்ளையர்கள் (கொள்ளையர்கள்) நம்நாட்டின் இயற்கை அழகையும் அரண்மனைகள் மற்றும் கோட்டைகள், கோயில்கள், அற்புத ஓவியங்களாக ஆக்கி அதிக விலைக்கு விற்றுள்ளனர். அவர்கள் வியாபார நோக்கோடு வரைந்தாலும் நமக்கு நம் நாட்டின் அரிய ஓவியங்களும் அழிந்து போன  கோட்டைகளும் இன்றும் காணக் கிடைக்கின்றன. அவைகளில் மதுரை  திருமலைநாயக்கர் மஹால், முற்றிலும் அழிந்து போன திப்புவின் லால் மஹால், மதுரைக் கிழக்கு மாசி வீதி, திருச்சி மலைக்கோட்டை, தஞ்சை பெரிய கோயில் மற்றும் இந்தியக் காட்சிகளை ஒவியங்களாய்த் தீட்டி பதிப்போவியங்களாய் மாற்றி எராளமான பணத்துக்கு விற்றும் ஓவியப் பதிப்புகளைக் கொண்ட உயர்ந்த புத்தங்களைப் பதிப்பித்து விற்றும் பெருஞ்செல்வர்களாயினர் 1770-க்குப் பிறகு பிரிட்டிஷார் இந்தியாவில் காலுன்றத் தொடங்கிய தருணம் கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக பிரிட்டிஷ் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் இங்கு பதவியிலமர்ந்து பதவிக்கேற்றபடி சொகுசு மிக்க வசதியான பங்களாக்களில் வசிக்கலானார்கள் இந்த சொகுசான வீடுகளில் வசதிமிக்க வாழ்க்கைக்கு இந்தியாவை காட்டும்படியான இந்திய ஓவியங்கள் வேண்டப்பட்டன இத்தேவை ஒரு முகமாய் அதிகரிக்கவும் தொழில் ரீதியான பிரிட்டிஷ் ஓவியர்களோடு அமெச்சூர் கலைஞர்களும் இந்தியாவிற்கு இறக்குமதியானார்கள்.. பிரிட்டனிலிருந்த இயற்கைக் காட்சிகளைத் தீட்டும் ஓவியர்களின் பொருளாதார நிலை பின் தங்கிப் போனது வருவாய்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்தன.  இந்தியாவில் மிக எளிதாகப்  பணம் பண்ணக்ககூடிய அதிர்ஷ்டக் கூறுகளைக் கொண்ட கதைகள் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு  வந்து போன ஓவியக் கலைஞர்களால் பரவின. கீழை நாட்டுக் கட்டிடங்கள் கோயில்கள் மாளிகைகள் கோட்டைகள்   இயற்கைக்காட்சிகள் ஜரோப்பியக் கலை ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதாயிருந்தவை அவை அதுவரை யராலும் தீண்டப்படாதிருந்தே வந்தவை அந்த புதிய காட்சி ரூப விஷயங்கள் ஓவியத்துக்கும் தொழில் ரீதியான  ஓவியர்களுக்கும் மிகவும் தேவையாகின மற்றொரு மிக முக்கிய வரலாற்று நிகழ்வு பிரிட்டிஷாருக்கும் ஒரளவுக்கு பிரெஞ்சுக்காரர் களுக்கும் இந்தியாவைப் பற்றிய குறிப்பாக தென்னிந்தியாவைப் பற்றிய பல்வேறு சிந்தனைக்கு யோசனைக்கு –உணர்வுக்கு காரணமாகிப் போனது அவைதான்  நான்கு மைசுர் யுத்தங்களும் ஹைதர் அலி திப்பு சுல்தான் என்ற இரு பெயர்களும்  எனவே தென்னிந்தியாவைப் பற்றிய விரிவான குறிப்புகளும் விவரணைகளும் ஓவியச் சித்தரிப்புகளும்(ஏனெனில் புகைப்படக் கருவி அன்று இல்லை ) வேண்டப்பட்டன   பிரிட்டனிலிருந்து இந்தியாவிக்கு வந்து பலகாலம் பல்வேறு திசைகளிலும் சுற்றித் திரிந்து வரைந்துகொண்டு தாய்நாடு திரும்பியதும் தாங்கள் அள்ளி வந்த இந்தியக் காட்சிகளை ஓவியங்களாய்த் தீட்டி பதிப்போவியங்களாய் (ETCHINGFS AND GRAPHICS)மாற்றி ஏராளமான  பணத்துக்கு விற்றும் ஓவியப்  பதிப்புகளைக்கொண்ட உயர்ந்த  புத்தகங்களைப் பதிப்பித்து விற்றும் பெருஞ்செல்வர்களாயினர் இந்தியாவிக்கு பயணம் செய்ய எவ்வித வாய்ப்புமற்ற ஆங்கிலேயர்கள, இந்தியாவைப் பற்றி அதன் கோட்டைகள், மாளிகைகள் , கோயில்களைப் பற்றி பயணக் குறிப்புகள், நூல்கள் வாயிலாகப் படித்தறிந்து பெற்ற ஆர்வத்தாலும்      இந்திய ஓவியக் காட்சிகளின் பதிப்புகளைப் பெரிதும் விரும்பி விலைக்கு வாங்கினர்.  இந்த வழியாக இந்தியாவக்கு வந்த முதல் ஓவியர் வில்லியம் ஹாட்ஜஸ்(WILLIAM HODGES), இவர் சென்னையில் --1780- ஆம் ஆண்டில் வந்திறங்கினாலும்தென்னிந்தியாவில் அதிகம் எதையும் வரையவில்லை.உடல் அசௌகரியம் ஒரு புறமிருக்க, இவர் தென்னிந்தியாவை அதிகம் சுற்றி பார்க்காததற்கு முக்கியக் காரணம் பிரிட்டிஷாருக்கும் – ஹைதர் திப்புக்கும் இடையே இருந்த பகைமையும் யுத்தங்களும் ஆகும்.  ஒரு வருடகாலம் மதராஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை விட்டு வெளிவராமல் முடங்கி கிடந்த ஹாட்ஜஸ் 1781 – ல் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப்  போய்  இந்தியக் காட்சிகளை வரைந்தார். இவை லண்டனில்  “ஆக்வாடிண்ட்”  எனும் முறையில் வண்ணப் பதிப்போவியங்களாய்  மாற்றம் பெற்று 48 பதிப்பு ஓவியங்களை கொண்ட ஓவிய நூலாக இந்தியாவின் தேர்ந்தெடுத்த காட்சிகள் “select view of India” எனும் பெயரில் 1785 – 88 களில் வெளிவந்தது. ஆக்வாடிண்ட் என்றால் கிட்டத்தட்ட நீர் வண்ணம் என்ற பொருள் தருவதோடு இவ்வகை ஓவிய பிரதிகளைப் பார்க்கையிலும் ஒருவித நீர்வண்ண ஒவியத்தைப் பார்க்கும் அழகியல் அனுபவத்தையே பெறுகிறோம். இந்த வகை பதிப்போவிய வேலைப்பாடும் ETCHING  எனும் முறையின் ஒரு வடிவமே ஆகும் ஒருவித அதி நுண்துளைகளாலான பரப்பைக்கொண்ட பிரத்தியேக செப்புத்தகடுகள் ஆக்வாடிண்ட்  பதிப்போவிய வேலைக்காக அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்டன அதன் மீது மெழுகைப் பரவவிட்டு மிக நுண்ணிய நுனியைக் கொண்ட ஊசியினால்  எற்கெனவே தாம் வரைந்து வைத்திருக்கும் ஓவியக் காட்சியை மெழுகு பூசின பரப்பின் மேல் கீறிக்கீறி வடிவமைத்து பின் செப்புத் தகட்டை நைட்ரிக் அமிலத்தால் முக்கியெடுப்பார்கள், கீறப்பட்ட கோடுகள் அமிலத்தில் அரிக்கப்பட்டிருக்க, மெழுகுப்பூச்சில் மறைந்த பகுதிகள் அப்படியே இருக்கும், உருளையைக்கொண்டு காகித்த்தின் மேல் வைக்கப்பட்ட தகட்டின் மேல் அழுந்த உருட்ட, வண்ண மை பூசின. தகட்டின் கீறிய் வடிவங்கள் பதிவா.கும். பல்வேறு வண்ண மைகளைக் கொண்டு காகிதங்கள் மேல் செப்புத் தகட்டை உருளையால் அழுத்தி எவ்வளவு பிரதிகள் வேண்டுமானால் எடுக்ககும்  முறை ஆக்வாடிண்ட் ஆகும். அடுத்து லண்டனில் வெளியானது, “மைசூர் யுத்த பூமியைச் சுற்றியுள்ள இடங்களும் மலைக்கோட்டைகளும்“  என்ற ஓவியப் பதிப்பு நூல். இந்நூலிலுள்ள ஓவியங்களை வரைந்தவர்கள் மைசூர் போர்க் களங்களில் ஈடுபட்ட வெள்ளைக்கார ராணுவ அதிகாரிகள். மற்றொரு ஓவியர் அன்றைக்குப் பரவலாக அறியப்பட்டிருந்த ஓவியர்  ராபர்ட் ஹோம் (ROBERT HOME) என்பவரால் வரையப்பட்டது. இவர், திப்பு சுல்தானுக்கு எதிராக ஜெனரல் காரன்வாலிஸ் மேற்கொண்ட போரில் 1791 – ல் ராணுவத்தில் உடன் சென்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசாங்க ஓவியர். கம்பெனி ராணுவத்துக்கும் திப்புவின் மைசூர் படைகளுக்குமான யுத்த முஸ்தீபின்போது இவர் வரைந்த ஓவியங்கள் 1794 – ல் “SELECT VIEWS OF MYSORE“ என்ற பதிப்போவிய நூலாகவும், மற்ற இரு ராணுவ அதிகாரிகளான லெஃப்டினண்ட் கோல் புரூக் (CAPTAIN A.ALLAN) என்பவர்களின் ஓவியங்கள் முறையே, “ மைசூர் அரசின் கீழுள்ள இடங்களின் பன்னிரெண்டு காட்சிகள்“, “ மைசூர் தேசத்துக் காட்சிகள்“ என்ற பெயரில் இரு நூல்களாய் 1793 – 94 இல் வெளியி்ப்பட்டன. இந்த ஓவியப் பதிப்புகள் எண்ணிக்கையில் குறைவாயிருப்பினும் உண்மையில் இவையே தென்னிந்தியாவின் சில பகுதிகளின் காட்சிகளை அன்றைக்கிருந்த நிலையில் பிரிட்டிஷ் ஓவியர்கள் பதிவு செய்து வைத்தவை. அது மட்டுமல்ல, தென்னிந்திய முக்கியப் போர் அரங்கு (மைசூர் யுத்தங்கள் ) ஒன்றின் முதன்முதல் ஓவியச் சித்தரிப்பும் இதுவேயாகும். மற்றொரு ராணுவ அதிகாரியான லெஃப்டினணட் ஜேம்ஸ் ஹண்டர் ()LT.JAMES HUNTER) ஜெனரல் காரன்வாலிஸின் தலைமையிலான படைப்பில் மூன்றாவது மைசூர் யுத்தத்தில் பணியாற்றியவர். இவர் திறமையானதொரு அமெச்சூர் ஓவியர்,1792-ல் இறந்துபோன ஹண்டர், திப்பு சுல்தானோடான போர்க் காட்சிகளைச் சித்தரிக்கும் பல நீர் வண்ண ஓவியங்களைத் தீட்டியவர் இவர்.  அவரது மறைவுக்குப் பின்  அவரது ஓவியங்கள் “மைசூர் தேசத்தின் கண்கவர் இயற்கைக் காட்சிகள்“ (PICTURESQUE SCNERY IN THE KINGDOM OF MYSORE) என்ற பெயரில் 1804 நூல் வடிவில் –1805 வாக்கில் லண்டனில் வெளியானது.     சார்லஸ் கோல்டு (CHARLES GOLD) என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் ராயல் ஆர்டில்லரி படைப்பிரிவில் காப்டனாகப் பணிபுரிந்த சிறந்த அமெச்சூர் ஓவியர். இவர் 1791   காலக்கட்டத்தில் சென்னைப் பகுதியில் ஓவியங்கள் வரைந்து, அவை “ORIENTAL DRAWINGS: SKETCHS BETWEEN 1791-1798“ என்ற தலைப்பில் நூலாக 1806இல் வெளியானது. ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்த திப்புசுல்தானின், “லால் மகால்“ எனும் அழகிய அரண்மனையை அதன் முன்னால் குதிரை யானைகளோடு இதர பரிவாரங்கள் சூழ, திப்பு திவான் பூர்ணய்யாவுடன் நின்றிருப்பது போன்ற அற்புத வண்ண ஓவியம் ஒன்றை சார்லஸ் கோல்டு தீட்டியிருக்கிறார். இது இன்றைக்கு மிக அரிதான ஓவியம் என்பதோடு அதிமுக்கியமானதுமாகும். ஏனெனில் ஸ்ரீ ரங்கப்பட்டண கோட்டை வளாகத்தில் திப்புவின் லால் மகால் இன்று இல்லை. 1799 – ஸ்ரீரங்கப்பட்டண வீழ்ச்சிக்குப் பின் அவ்வரண்மனை பீரங்கிகளால் தகர்க்கப்பட்டுவிட்டது. மற்ற பதினெட்டம் நூற்றாண்டு கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து பிரிட்டிஷ் ஓவியர்களிலிருந்து வித்தியாசமானவர்கள் தாமஸ் டானியல் (THOMAS DANIELL), வில்லயம் டானியல் (WILLIAM DANIELL) என்பவர்கள், தாமஸ் டானியலின் மருமான்தான் வில்லியம் டாதனியல். மற்ற ஓவியர்களைப் போல் அல்லாது டானியல்கள் பயணம் செய்து ஏராளமான ஆக்வாடிண்ட் பதிப்போவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், தைல வண்ண ஓவியங்களைச் செய்திருப்பதோடு பயண அனுபவங்களையும் அற்புதமான தினசரி குறிப்பேடுகளாய் எழுதிச் சென்றிருக்கிறார்கள். எனது பயணங்கள் சார்ந்த இந்நூலை எழுதுவதற்கான முக்கிய வழிகாட்டல்களில், உந்து சக்தியாய் டானியல்களின் ஆக்வாடிண்ட் படங்களே முக்கியமாய் இருந்திருக்கின்றன. அவர்களின் காலடிச் சுவட்டைப் பின்பற்றியே பெரும்பாலும் நான் என் பயணங்களை மேற்கொண்டவன்.


1749 – ல் பிறந்த தாமஸ் டானியல் மாக்ஸ்வெல் எனும் கோச்சு வண்டித் தயாரிப்பாளரிடம் ஏழு வருடங்கள் பயிற்சியாளனாக இருந்து வண்ணங்களையும், பல்வேறு வார்நிஷ்களையும் கற்றறிந்தவர். மூன்றாம் ஸார்ஸிடம் கோச்சு வண்டிப் பராமரிப்பாளராயிருந்த சார்லஸ் காட்டன் என்பவரிடம் வேலை செய்த உறவால், தாமஸின் சிறிய மலர் ஓவியமொன்று 1772 இல் ராயல் அகாதெமியின் கண்காட்சியில் இடம்பெற்றது. தாமஸ் டானியல் ஆக்வாடிண்ட் பதிப்போவிய  முறையின் முக்கிய முன்னோடிக் கலைஞர்களில் ஒருவர். டானியல்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது  தாமஸ் டானியலுக்கு முப்பத்தாறு வயதும் வில்லியம் டானியலுக்குப் பதினாறு வயதும் நிரம்பியிருந்தது.


 கிழக்கிந்தியக்  கம்பெனியின் அனுமதி பெற்று சீனாவின் காண்டன் நகர் வழியாக அவர்கள் 1786 – ல் கல்கத்தாவில் வந்திறங்கினார்கள். இந்தியாவைப்  பல்வேறு திசைகளிலும் சுற்றிப் பார்த்து ஓவியம் வரையும் செலவுக்கான பணத்தை டானியல்கள், ஜமீன்தார்களை, பிரபுகளை, பணக்காரர்களை அமரச் செய்து உருவப்படங்களைத் தீட்டியும், அங்கங்கே இயற்கைக் காட்சிகளைத் தீட்டியும் பழைய ஒவியங்களை சுத்தப்படுத்தி பழுதுபார்த்துக் கொடுத்தும் சம்பாதித்தனர். இதன் எல்லா விவரங்களையும், தினசரி நிகழ்ச்சிகளையும் தம் பயணக் குறிப்பேடுகளில் சித்தரித்துள்ளனர். டானியல்களின் நாட்குறிப்பிலிருந்து அவர்கள்,“ காமிரா ஆப்ஸ்க்யூரா“ (CAMEA OBSCURA) எனும், காட்சிகளை நோக்கி காகிதப் பதிவு செய்யும் கருவியை உபயோகித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. காமிரா ஆப்ஸ்க்யூரா என்பது தத்ரூபமான யதார்த்த வகை ஓவியச் சித்தரிப்புக்கும், உலகின் முதல் காமிரா கண்டுபிடிப்புக்கும் இடைப்பட்ட இயந்திரக் கருவி.  பெரும்பாலும் செல்வ வசதி மிக்க பிரபலமான கலைஞர்களே இயற்கைக்   காட்சிகள், மாளிகைகள், கோட்டைகள் ஆகியவற்றைப் பார்த்து, அவற்றைப் பல்வேறு கோணங்களில் நுட்பம் பிசகாமல் வரைந்து ஓவியந்தீட்ட இக்கருவியை வைத்திருந்தனர் என்பதும், இந்திய ஓவியர்களால் இது உபயோகிக்கப்படவில்லை என்பதும் தெரிய வருகிறது.


  காமிரா ஆப்ஸ்க்யூரா 16 – ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கருவி. ஒளிபுகாத மரப்பெட்டிக்குள் லென்சுகளும் உருவத்தைப் பிரதிபலிக்கும் ஆடிகளும் பொருத்தப்பட்டிருக்கும். லென்சுகளால் பார்க்கப்படும் காட்சி ஆடிகளின் வழியாகப் பிரதிபலிக்கப்பட்டு ஒரு காகிதப் பரப்பின் மீது விழுகிறது. ஓவியன், காகிதப்பரப்பில் விழுந்த காட்சி உருவின் ஓரங்களையும் இதர பகுதிகளையும் டிரேஸ் செய்துகொண்டால் போதும். இதைவிடத் தெளிவாக ஒளி ஊடுருவிச் செல்லும் வகையில் லென்சுகளும் பிரதிபலிப்பாடிகளும் பொருத்தப்பட்ட “ காமிரா லூஸிடா “ (CAMERA LUCIDA ) எனும் கருவியை சில ஓவியர்கள் உபயோகித்தனர். தென்னிந்திப் பயணத்தின்போது ஏராளமான மலைக்கோட்டைகளையும் அரண்மனைகளையும் கோயில்களையும் ஓவியமாக்கிய தாமஸ் – வில்லியம் டானியல்கள் காமிரா ஆப்ஸ்க்யூராவின் உதவியுடன் பெரும்பகுதி படங்களை வரைந்ததாக அவர்களின் குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறோம்.


 தங்களைக் கவர்ந்த ஆலமரங்களைப்  பல காட்சிகளாக்கிய டானியல்கள், சிலசமயம் ஆலமரத்துக்கும் அரசமரத்துக்கும் வேறுபாடு தெரியாமல் ஆலமரத்தைச் சுற்றியே மேடை கட்டி சிறு கோயில்களையும் கல் நாகர் உருவங்களையும் காட்டி ஜனங்கள் வணங்குவதுபோல ஓவியமாக்கியிருக்கிறார். பல சமயம் காமிரா ஆப்ஸ்க்யூராவைக் கொண்டு காட்சிகளை டிரேசிங் செய்யும் வேலையை வில்லியமும், பிறகு அந்த டிரேஸ் செய்த படத்தில் மற்ற காட்சி விவரங்களைத் தாமஸ் சேர்ந்த விவரமும் டயரியில் எழுதப்பட்டிருக்கிறது.  கல்கத்தா, டெல்லி, ஆக்ரா பகுதிகளுக்குச் சென்று விட்டு மீண்டும் கல்கத்தா திரும்பிய டானியல்கள், தம் தென்னிந்தியப் பயணத்துக்கான பணத்தைத் திரட்டும் முகமாக 1792 – ல் வடஇந்திய ஓவியங்களைக் கொண்டு கல்கத்தாவில் ஒரு லாட்டரிப் பரிசுக் குலுக்கலை ஏற்பாடு செய்தனர். இந்த லாட்டரியில் கிடைத்த பெருந்தொகை, இவர்களின் தென்னிந்தியப் பயணத்துக்கான செலவைப் போதுமான அளவுக்குச் சரிகட்டும்படியாயிருந்து.  தென்னிந்திய மலைக்கோட்டைகளுக்கான பயணம் கல்கத்தாவிலிருந்து 1792, மார்ச் பத்தாந்தேதி துவங்க, டானியல்கள் ஏறிய கப்பல் மதராஸ் பட்டணக் கடற்கரையை அடைந்தது.இரண்டு இலேசான டிராயிங்  மேஜைகள், தூரத்தைக் கணக்கிட பெரிய சக்கரம் பொருத்தப்பட்ட கோல் ஒன்றும் அவர்களின் மலைக்கோட்டைப் பயணங்களில் இடம்பெற்றிருக்கிறது. இவ்விரு ஓவியர்கள் தம்மோடு நாற்பத்தேழு பேர் கொண்ட குழுவை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். டானியல்கள் தனித்தனியாக இரு பல்லக்கில் விட்டு விட்டு ஆள் மாற்றி ஆளாக, தோள் மாற்றி தோளாக பதினோறு இந்திய பல்லக்குத் தூக்கிகளால் மலைக்கோட்டைப் பயணங்களின்போது   தூக்கிச் செல்லப்பட்டனர். ஆளுக்கொன்றாக அமர்த்திக்கொண்ட இரண்டு குதிரைகளையும் கவனித்துக்கொள்ளப்  பயிற்சி பெற்ற முஸ்லீம் குதிரைக்காரர் ஒருவர், கூடாரங்களையும் உணவுப் பணடங்களையும் இதர சாமான்களையும் எடுத்துச் செல்லப் பொதி சுமக்கும் மூன்று காளை மாடுகளும், ஒரு மாட்டு வண்டியும், நான்கு வண்டியோட்டிகளும் அந்தப் பயணக்குழுவில் அமர்த்தப்பட்டிருந்தனர். பாத்திர பண்டங்கள், உணவுப் பண்டங்கள், கோழிகள், வாத்துகளை எடுத்துச் செல்ல சுமைசுமக்கும் கூலிகள் ஏழுபேர், டிராயிங் மேஜைகளையும் ஓவியர்களின் கட்டிலையும் எடுத்துச் செல்ல நான்கு பேர். டானியல்களின் உதவியாட்களில் வரவு செலவு கணக்கு வழக்கைக் கவனித்துக்கொள்ளவும், சுதேசிகளோடு பேசவும் கூடிய துபாஷ் ஒருவரும் சமையற்காரர் ஒருவரும், இரண்டு பியூன்களும், ஆயுதம் தரித்த மெய்க்காப்பாளர் ஒருவரும், அமர்த்தப்பட்டதாக டானியல்களின் அரிதான டைரி விவாரிக்கிறது. அன்றைக்கு லண்டனில் பத்திரிக்கைச் செய்தியாக பிரிட்டிஷாருக்கும் திப்புசுல்தானுக்கும் இடையேயான யுத்தச் செய்திகளும் அவை இடம் பெற்ற பல்வேறு மலைக்கோட்டைகளின் தகவல்களும், அவ்வப்போது வெளிவந்த வண்ணமிருந்தன. இதை பார்த்த டானியல் அந்நத மலைக்கோட்டைகளை பல்வேறு கோணங்களில் வரைந்து கொண்டனர். டானியல்களின் வட இந்திய தென்னிந்திய பயணம் நிறைவடைய ஏழு ஆண்டுகள் ஆனது. இந்த நீண்ட கால பயணத்தில் இந்தியாவின் நானகு திசைகளிலும் அலைந்து திரிந்து இவ்விரு ஓவியர்களும் செய்திருக்கும் பணியைப் போல எந்த வெளிநாட்டவரும், ஏன் வேறு இந்தியக் கலைஞனும் கூட செய்ததில்லை. இவர்களின் ஓவியங்கள் மூலமாக காட்சிரூபமான இந்தியாவை அதன் வடக்கு – தெற்காக, கிழக்கு – மேற்காக ஐரோப்பாவும், உலகின் பிற நாடுகளும் தெரிந்துகொள்ள முடிந்தது.


தர்மபுரி, சேலம், ஹோசூர், கிருஷ்ணகிரி பகுதி மலைக்கோட்டைகளின் தூரக்காட்சிகளும், சமவெளித் தோற்றங்களும் இவ்வோவியர்களைப் பரவசத்திலாழ்த்தின. வில்லியம் டானியல் தம் நாட்குறிப்பில் அதை இவ்வாறு குறிப்பிடுகிறார்:-     “குறிப்பாக சூரிய உதயத்தின்போது, தொலைவில் தெரியும் மலைகளின் காட்சி மனதை மிகவும் ஈர்த்து பரவசமடையச் செய்கிறது. அவற்றின் அகன்று உயர்ந்த மேற்பரப்பும் அதில் எழும்பிய கோட்டைகளும் சூரிய கிரணங்களை வாங்கிப் படித்து சுற்றுப் புறத்திலுள்ள சமவெளிகள் மீதும் படச்செய்து பார்வைக்கு இதமான அழகுக் காட்சியாகத் தோன்றச் செய்கின்றன.“


பிறகு அவர்கள், திருச்சி மலைக்கோட்டையை அடைந்து நிறைய கோணங்களில்  வரைந்துகொண்டனர். நான்கு முக்கிய கோணங்களில் அமைந்த திருச்சி மலைக்கோட்டைக் காட்சிகளை நான்கு வித ஆக்வாடிண்ட் பதிப்போவியங்களாய் செய்துகொண்டனர். 1792 – மார்ச் மாத இறுதியில் மதுரையை அடைந்தனர். திருமலைநாயக்கர் மகாலை மூன்று பதிப்போவியங்களுக்காகப் படம் வரைந்துகொண்டனர். மகால் வளாகத்தில், மகாலுக்கு நேரெதிரே இருந்த மதுரைக் கோட்டையின் ஒரு முக்கிய அழகிய கட்டிடம் இப்போது இல்லை. நிறைய படிக்கட்டுகளைக் கொண்ட மண்டபம் போன்ற இக்கட்டிடம் கோட்டையின் ஒரு முக்கிய பகுதி. இதை மிக அழகுற வரைந்து ஆக்வாடிண்ட் படமாக்கியிருக்கிறார்கள் டானியல்கள். பிறகு, குற்றலாம், கன்னியாகுமரி, ராமேசுவரம், தஞ்சாவூர் வரை பயணம் செய்து ஏராளமான ஓவியங்களை வரைந்து கொண்டு மதராசுக்குக் கடல் வழியே வருகையில்  மகாபலிபுரத்திலிறங்கி அங்குள்ள சிற்பங்களையும் குடைவரைக் கோயில்களையும் வரைந்துகொண்டு மதராஸ் திரும்பினர். 1792, நவம்பர் மாதம் மதராஸ் வந்து சேர்ந்த டானியல்கள், பட்டணக் காட்சிகளை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை, அதன் உள் வளாகத்துப் பகுதிகளை, அர்மேனியன் பாலம் ஆகியவற்றை ஆக்வாடிண்ட் பதிப்புக்கான படங்களாய் வரைந்துகொண்டு பம்பாய் சென்று இங்கிலாந்துக்குக் கப்பல் ஏறினர். தாங்கள் வரைந்த படங்களைச் செப்புத் தகடுகளுக்கு மாற்றி ஆக்வாடிண்ட் பதிப்புகளாய் 1795 – ல் செய்து நூல் வடிவில் கொண்டுவந்தனர். மொத்தம் 144 ஆக்வாடிண்ட்களை ஆறு பகுதிகளாய் கொண்ட ”கீழை நாட்டு இயற்கை காட்சிகள்” (THE ORIENTAL SCENERY)  எனும் தலைப்பில் 1795 – 1808 வாக்கில் அவை நூலாக வெளியிடப்பட்டபோது அது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டானியல்களின் ஆக்வாடிண்ட் பதிப்போவியப்  பிரதிகள் கல்கத்தாவிலுள்ள விக்டோரியா மெமோரியலில் இருக்கின்றன. சென்னையில் கோட்டை அரும்பொருட்காட்சியில் கொஞ்சம் இருக்கின்றன.தட்டச்சியவர் திரு கொங்கு சதாசிவம்
கட்டுரை எழுதியவர் திரு விட்டல் ராவ் அவர்கள்
தமிழகக் கோட்டைகள் புத்தகம் வெளியீடு அம்ருதா -கிடைக்கும் தளம்- கிழக்கு தளம்
--Geetha Sambasivam (பேச்சு) 08:48, 13 அக்டோபர் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2014, 08:48 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,462 முறைகள் அணுகப்பட்டது.