தமிழிசை வளர்த்த ஓதுவா மூர்த்திகள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கட்டுரையாளர் பின்னலூர் மு.விவேகானந்தன்

நன்றி: தமிழ்மணி (தினமணி) தொகுத்து அனுப்பியவர்: டாக்டர் கண்ணன் நடராசன்சமயம் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாபெரும் சக்தியாகும். அதில் சைவ சமயம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறியாகும். சைவ சமயத்துக்கு இடையூறு நிகழ்ந்த காலங்களில் நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர், தம் தேவாரப் பதிகங்களில் பதிகத்தை ஓதுவதால் விளையும் பயன்கூறும் பாடல், பதிக இறுதியில் இடம் பெறும். இதனை "திருக்கடைக்காப்பு" என்பர். சுமார் 21 பண் வகைகள் அமைந்த தேவாரத்தை ஓதுதல் என்பது ஓர் ஒப்பற்ற திறனாகும்.


ஞானசம்பந்தர் வழியில் இன்றும் தமிழிசையால் சைவநெறி பரப்பும்;

தருமபுரம் பி.சுவாமிநாதன்
சீர்காழி எஸ்.திருஞானசம்பந்தம்
திருச்சிராப்பள்ளி முத்துக்கந்தசாமி தேசிகர்
திருத்தணி என்.சுவாமிநாதன்
பழனி சண்முகசுந்தர தேசிகர்
சிங்கப்பூர் எஸ்.முத்துக்குமாரசாமி தேசிகர்

போன்ற தமிழ்மறை இசை மாமணிகளை உருவாக்கிய பெருமை தருமையாதீன தேவாரப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக சுமார் 60 ஆண்டுகள் திருமுறைத் தொண்டாற்றிய ஆர்.வேலாயுத ஓதுவா மூர்த்திகளையே சாரும்.ஓதுவா மூர்த்திகள், "வரைவிலால் எயில் எய்த மயேந்திரப் பள்ளி" என்று சம்பந்தர் பெருமானால் பாடல் பெற்றதும், சூரியன், சந்திரன், இந்திரன் முதலானோர் வழிபட்டதுமான சீர்காழி வட்டத்தில் உள்ள திருமயேந்திரப் பள்ளியில் (தேவிக்கோட்டை என்றும் அழைக்கப்படும்) க.இரத்தின முதலியார் - விசாலாட்சி தம்பதிக்கு, 1910ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அருட்புதல்வராய்ப் பிறந்தார். அருள்மிகு வடிவாம்பிகை உடனாகிய திருமேனி அழகேசர் பால் அயரா அன்பு கொண்ட தொண்டை மண்டல சைவ வேளாளர் குடும்பத்தினரைச் சோழ மன்னர்கள் தேவிக்கோட்டையார் எனப்பாராட்டி கெளரவித்து வந்தனர். இத்திருமரபில் வந்து தோன்றியவரே வேலாயுத ஓதுவா மூர்த்திகள்.


பிறந்து, மொழி பயின்று தம் மூன்றாம் அகவையில் தந்தையைப் பறிகொடுத்துத் தொடக்கக் கல்வியையும் மூன்றாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். பின்பு பத்தாம் அகவையில் சிதம்பரம் சி.ப. தேவாரப் பாடசாலையில் நடராஜ ஓதுவா மூர்த்திகளிடம் தேவார இசைப் பயிற்சியைக் குற்றமறக் கற்றார்.


நல்ல குரல் வளமும், இசை ஞானமும் இயல்பாகவே அமைந்திருந்ததனால் பண்ணாங்கம், சுத்தாங்கம் ஆகிய பாடப் பயிற்சிகளை ஐந்தே ஆண்டுகளில் கற்று, பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் கவியாக, ஓதுவா மூர்த்தியாக உயர்ந்தார். தொடக்கத்தில் என்னும் வைத்தீஸ்வரன் கோயிலில் 1925 முதல் 1928 வரை ஓதுவா மூர்த்திகள் பலருடன் திருமுறைப் பணி செய்து, பின் 1929-1930இல் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் முன் தேவாரப் பாராயணம் புரிந்து வந்தார்.


1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தருமையாதீனத்தின் 23வது குருமகா சந்நிதானத்தின் அருளாணைப்படி திருமுறைப் பணியேற்று இண்டைமாலை சூட்டப்பட்டு ஆதீன ஓதுவா மூர்த்திகள் என்னும் சிறப்பைப் பெற்றார்.


1933இல் அங்கம்மாள் என்னும் நல்லாளை மணந்து, இல்லறப் பயனாய் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகளை மக்கட் செல்வங்களாகப் பெற்றார்.


1941ஆம் ஆண்டு மார்ச் திங்களில் தருமையாதீனத்தின் 24வது பீடாதிபதியால் தோற்றுவிக்கப்பட்ட தேவாரப் பாடசாலையில் தலைமை ஆசிரியராகப் பணி அமர்த்தப்பட்டார். இப்பாடசாலையில் சுமார் 60 ஆண்டுகள் தலைமைப்பணி ஏற்று நூற்றுக்கணக்கான ஓதுவா மூர்த்திகளை உருவாக்கிய பெருமை வேலாயுத ஓதுவா மூர்த்திக்கு உண்டு.


திருமுறையைப் பாடும் பணியே பணியாக இருந்த ஓதுவா மூர்த்திகளை இன்னிசைச் சொற்பொழிவுகளும் ஆற்ற தருமை ஆதீன 25வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமணி பணித்தார். மேலும் அவரது ஜென்ம நட்சத்திர நாளில் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபாடியற்றி அவ்வத் தலத்திருப்பதிகளைக் குறிப்புரைகளோடும், வரலாற்றோடும் எழுதி உதவினார். தமிழ் அர்ச்சனை பற்றி தேவாரத் திருப்பதிகத் தொடர்களிலிருந்து இவர் தொகுத்து அளித்துள்ள நூல் ஆதீன வெளியீடாகவும் வெளிவந்துள்ளது.


பண் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஓதுவா மூர்த்தி, சென்னை தமிழிசை மன்றத்தின் பண் ஆராய்ச்சி மாநாடுகளில் பங்கேற்றுள்ளதோடு, தேவாரத்தால் தமிழிசை சிறந்து விளங்குவதையும் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.


திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் "திருமுறை ஓதுவார் பேக்டரி" என்று புகழப்பட்ட அவரது திருமுறைப் பணிகளைப் பாராட்டி 1970இல் சீர்காழியில் திருமுலைப்பால் விழாவில் "திருமுறைக் கலாநிதி" என்னும் பட்டம் 25வது தருமையாதீன குருமகா சந்நிதானத்தாலும், "தமிழ் இசைமாமணி" என்னும் பட்டம் 1984இல் காஞ்சிப் பெரியவராலும், திருக்கழுகுன்றத்தில் நடந்த 13வது திருஞானசம்பந்தர் இசைவிழாவில் "தேவாரத் தமிழிசைத் தென்றல்" என்ற பட்டமும் வழங்கப்பட்டது. "அன்பர் பணி செய்ய எமை ஆளாக்கி விட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே" என்ற கொள்கைப் பிடிப்போடு திருத்தொண்டு புரிந்தார். பன்னூறு திருமுறை இசைக்கலைஞர்களை உருவாக்கிய ஓதுவா மூர்த்தி, "சிவகதி பெறுவது திடமாமே" என்னும் ஞானசம்பந்தரின் வாக்கிற்கேற்ப, 1993ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி சென்னையில் சிவகதி பெற்றார். அன்னாரின் பெருமைகளைப் பாராட்டி 1998ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தருமை ஆதீனத்தின் 26வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் அன்னாரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து அருளாசியுரை நல்கினார்.


"இறைவனைச் சென்றடைதற்கு எளிய வழி குருவை வழிபடுதலால் கிட்டும்" என்னும் திருமந்திரம் உணர்ந்த தருமபுரம் பி. சுவாமிநாதன், ஓதுவா மூர்த்தியின் நாண்மங்கல நாளில் விழா நடத்தி, குருகாணிக்கை அளித்து வருகிறார். இவரைப் போலவே திருச்சியில் முத்துக்கந்தசாமி தேசிகரும் ஆண்டுதோறும் விழா எடுத்து கெளரவித்து வருகிறார்.


திருமுறைத் தமிழிசை மெல்ல மெல்ல அருகி வரும் இந்நாளில் வேலாயுத ஓதுவா மூர்த்தி நினைவைப் போற்றும் வகையில் மீண்டும் ஞானசம்பந்தரின் பண்ணிசை பாரெங்கும் பரவி சைவம் தழைத்திட சமய நிறுவனங்களும், இந்து அறநிலையத்துறையும் முன்வந்து தேவாரப் பாடசாலைகளை அமைக்க வேண்டும். அதுதான் அன்னாருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். திருநெறிய தமிழிசை வளர்த்த வேலாயுத ஓதுவா மூர்த்திகளின் புகழ் பாரெங்கும் பரவி சைவம் செழிக்கத் தொண்டாற்றிடுவோமாக.

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 12 ஜனவரி 2010, 22:05 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,391 முறைகள் அணுகப்பட்டது.