தமிழ்த் தாத்தா

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய உலகில் இரண்டு பெரிய மலைகளைப் போன்ற பெரியவர்கள் தமிழ் மொழிக்குப் புதிய ஒளியைக் கொடுத்தார்கள். ஒருவர் ஸ்ரீசுப்பிரமணிய பாரதியார்; மற்றொருவர் ஸ்ரீ மகா மகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள். மகாகவி பாரதியார் தம்முடைய புதிய கவிகளால் தமிழ்த்தாய்க்குப் புதிய அணிகளைப் பூட்டினார். ஐயர் அவர்களோ, பல காலமாக மங்கி மறைந்து கிடந்த பழைய அணிகளை மீட்டும் எடுத்துக்கொணர்ந்து துலக்கி மெருகூட்டிப் பூட்டி அழகு பார்த்தார்.

தமிழ்த் தாத்தா என்று அன்புடன் போற்றப் பெறும் ஐயர் அவர்கள் 19ம் நூற்றாண்டில் தமது அரும் பெருந் தொண்டைத் தொடங்கி விட்டார். அவர்கள் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள் மறைந்த காலத்தில் (ஏப்ரல், 1942) தமிழ் உயர்ந்து நின்ற நிலைக்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு. அவர்கள் 1887ம் ஆண்டில் சீவக சிந்தாமணியை அச்சிட்டு வெளியிட்டார்கள். அது முதல் இறுதிக் காலம் வரையில் தமிழ்த் தாயின் அணிகளை ஒவ்வொன்றாகப் புதுப்பிக்கும் அற்புதமான தொண்டில் தம் காலம் முழுவதையும் அவர்கள் செலவிட்டார்கள்.

அவர் தோன்றிய காலத்தில் பெரும் புலவர்களும் சங்க நூல்கள் என்று பெயரளவிலே தெரிந்து கொண்டி ருந்தார்களே ஒழிய அவை இன்னவை என்பது அவர்களுக்குத் தெரியாது. கோவலன் கதை என்ற ஒரு நாடோடிக் கதையையும் அதில் வரும் கண்ணகி யையும், மாதவியையும் அறிவார்களேயன்றிச் சிலப்பதி காரத்தையும் அதில் உள்ள பாத்திரங்களையும் அறியமாட்டார்கள்; அகநானூறு, புறநானூறு என்ற இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இன்னதென்று தெரியாது; மணிமேகலை எந்தச் சமயத்தைப் பற்றிய நூல் என்பதும் தெரியாது.

பல ஆண்டுகளுக்கு முன் திராவிட மொழிகளின் அமைப்பைப்பற்றிக் கால்டுவெல் என்ற ஆங்கிலேயர் அழகான நூல் ஒன்று எழுதினார். 'திராவிட மொழிகளின் ஒப்பியல்' (Comparaitive Philology of Dravidian Languages) என்பது அந்த நூலின் பெயர். அதை இன்றும் சிறந்த நூலாகப் புலவர்கள் கொண்டாடுகிறார்கள். அதை எழுதினவருக்கே எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகியவை கிடைக்கவில்லை. அந்நூல்களின் அமைப்பை அவர் அறியார்.

இன்றோ சங்ககாலத் தமிழரைப் பற்றியும், நூல்களைப் பற்றியும் பல பல நூல்கள் வந்திருக்கின்றன. பல வகையான ஆராய்ச்சிகள் நிகழ்ந்துவருகின்றன. தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று சங்க காலத்தைப் போற்றிப் பாராட்டிப் பெருமிதத்துடன் பேசுகிறோம். தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழர் மரபு என்று நமக்குரிய தனிச் சிறப்பைப் பல மேடைகளில் புலவர் பெருமக்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். பாரத நாட்டில் உயிருடன் வழங்கிவரும் மொழிகள் யாவற்றிலும் பழையது, இலக்கிய வளம் பொருந்தியது, இலக்கண வரம்புடையது, எதையும் வழங்கத்தக்க சொல்வளமுடையது என்றெல்லாம் மற்றவர்களும் ஒப்புக்கொள்ளும் நிலை தமிழுக்குக் கிடைத்தி ருக்கிறது. தமிழ்த் தாத்தாவின் அரும்பெருந் தொண்டே இத்தனை உயர்வுக்கும் மூலகாரணம் என்பதை உலகே அறியும். தமிழ் வரலாற்றில் ஐயர் அவர்களுக்கு என்று ஒரு தனிப் பகுதி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நெல்லையில் கவிராஜ ஈசுவர மூர்த்தி பிள்ளை வீட்டிலிருந்த புத்தக அறையைப் பார்த்தவுடன் உ வே சா அவர்களுக்கு மேனி சிலிர்த்தது. "தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை வைத்திருந்தார் களோ?என்று எண்ணி மனம் குதூகலித்தது. புழுதி இல்லாமல் ஒழுங்காகச் சுவடிகள் அடுக்கி வைத்திருந்த முறையைக் கண்டதும் தமிழ்த் தெய்வத்தின் கோவில் என்று எண்ணி சாஷ்டாங்கமாக (மெய்பட வணங்குதல்) நமஸ்கரித்தேன்” என்கிறார் தமிழ்த் தாத்தா. ஈசுவரமூர்த்தி பிள்ளை போன்றோர் சேர்த்து வைத்திருந்த சுவடிகளைத் தேடித் தேடிப் படி எடுத்துத் தமிழ் அன்னைக்குப் புதிய பூச்சரம் கட்டியவர் உ.வே.சா.

பொருளடக்கம்

பிறப்பும் கல்வியும்

ஐயர் அவர்கள் பிறந்தது தஞ்சை ஜில்லாவில் உள்ள உத்தமதானபுரம் என்ற சிறிய ஊரில். அவர் 1855ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி சங்கீத வித்துவானாகிய ஸ்ரீ வேங்கட சுப்பையருக்கும் ஸ்ரீமதி சரசுவதி யம்மாளுக்கும் புத்திரராக ஐயர் பிறந்தார். அவர்களுடைய தந்தையார் பல இடங்களுக்குச் சென்று தம்முடைய இசைத் திறமையைக் காட்டி ஊதியம் பெற்று வாழ்ந்து வந்தார். குறிப்பிட்ட வேலையும் குறிப்பிட்ட சம்பளமும் இல்லாவிட்டாலும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் அன்பும் கலைப்பற்றும் அவரைப் போன்ற கலைஞர்களைப் பாதுகாத்து வந்தன. அங்கங்கே இருந்த செல்வர்களும் ஜமீன்தார்களும் அவருக்குச் சிறப்புச் செய்து, வாழ்க்கையைச் சுவையுடையதாக்கினர்.

இந்தச் சூழ்நிலையில் ஐயர் அவர்கள் வளர்ந்து வந்தார். தந்தையாரிடமும் சில திண்ணைப் பள்ளிக்கூடத்து ஆசிரியர்களிடமும் இப்பேரறிஞர் இளமையில் கல்வி பயின்றார். அக்காலத்தில் சில நூல்களையே கற்றிருந்தாலும், அவற்றைத் திருத்தமாகப் பயின்று மற்றவர்களுக்கும் தெளிவாகப் பாடம் சொல்லும் சிறிய புலவர்கள் அங்கங்கே இருந்தனர். அத்தகையவர்களாகிய அரியலூர்ச் சடகோபையங்கார், செங்கணம் விருத்தாசல ரெட்டியார் முதலியவர்களிடம் ஐயர் அவர்கள் சில நூல்களைக் கற்றார். ஐயர் அவர்களுடைய தந்தையாருக்குத் தம் குமாரரைப் பெரிய சங்கீத வித்துவானாக ஆக்கவேண்டுமென்ற ஆசையே முதலில் எழுந்தது. ஆனால் இவர்களுக்குத் தமிழில் உண்டான பெரும் பசியைக் கண்டபோது அந்தத் துறையில் இவர்களை ஈடுபடுத்துவதுதான் தம்முடைய கடமை என்பதை அவர் உணர்ந்தார். அதனால் எங்கெங்கே தமிழ் நூல்களைப் பாடம் சொல்லுவோர் இருக்கிறார்களோ, அந்த அந்த ஊர்களுக் கெல்லாம் குடியேறித் தம்முடைய குமாரர் தமிழ்க் கல்வி பெறும்படி செய்து வந்தார்.

அப்போது திருவாவடுதுறை ஆதீனத்தில் பெருங் கவிஞராகவும் சிறந்த புலவராகவும் திகழ்ந்த மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அவர் பல மாணக்கர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவருகிறார் என்ற செய்தி ஐயர் அவர்களின் தந்தையார் காதில் விழுந்தது. ’நம் பிள்ளையையும் அந்த மகாவித்துவானிடம் சேர்த்துவிட வேண்டும்' என்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று.

1870ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயர் அவர்கள் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி தொடங்கியது. மாயூரத்தில் இருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் இவர்கள் மாணக்கராகச் சேர்ந்தார். அது முதல் அந்தத் தமிழ்க் கடலின் மறைவு வரையில் (1.2.1876) உடனிருந்து பலவகையான தமிழ் நூல்களைக் கற்றார். அப்புலவர் பிரான் அவ்வப்போது இயற்றிவந்த நூல்களை எழுதுவதும், திருவாவடுதுறை மடத்தின் ஆதீன கர்த்தர்களாக இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடன் பழகுவதும், அந்த மடத்துக்கு வரும் தமிழ்ப் புலவர்களிடத்திலும் ,வடமொழி வாணரிடத்திலும், சங்கீத வித்துவான்களிடத்திலும் நெருங்கிப் பழகுவதும் போன்ற செயல்களால் இவருக்குக் கிடைத்த அநுபவம் வேறு யாருக்கும் கிடைத்தற்கு அரிது. அத்தகைய அநுபவத்தினால் ஐயர் அவர்கள் பெற்ற பயன் மிக அதிகம்.

எந்தப் பொருளானாலும், எத்தகைய மனிதரானாலும், எந்த விதமான நிகழ்ச்சியானாலும் கூர்ந்து உணரும் இயல்பு ஐயர் அவர்களிடம் சிறந்திருந்தது. அதனால் அக்காலத்தில் அவர்கள் கண்டவையும் கேட்ட வையும் அப்படி அப்படியே இவர்களுடைய இளநெஞ்சில் நன்றாகப் பதிந்தன. பெரிய ஆதீனத்தின் தொடர்பால் பலவகை மக்களின் பழக்கம் இவர்களுக்கு ஏற்பட்டது. பெரும் புலவருடைய தொடர்பால் பல நூல்களில் அறிவு உண்டாயிற்று. பல கலைஞருடைய நட்பினால் பல துறையிலும் அறிவு சிறந்தது. வெவ்வேறு ஊர்களுக்குத் தம்முடைய ஆசிரியருடன் செல்ல வேண்டி யிருந்தமையால் பல தலங்களைப் பற்றிய செய்திகளும் அங்கங்குள்ள பெரிய மனிதர்களின் பழக்கமும் ஐயர் அவர்களுக்குக் கிடைத்தன.

பிள்ளையவர்கள் மறைவுக்குப்பின்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தொடர்பு ஐயர் அவர்களுக்குப் பின்னும் இறுகலாக அமைந்தது. அதற்கு முன் பிள்ளையவர்கள் மூலமாக ஆதீனத்தின் தொடர்பு இருந்து வந்தது. அதற்குப்பின் ஆதீனகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடமே பாடம் கேட்கப் புகுந்தார் ஐயர் அவர்கள். அதோடு மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் பணியையும் மேற்கொண்டார். இதனால் இவருடைய தமிழறிவு உரம் பெற்று வந்தது.

ஆசிரியராகப் பணி புரிதல்

அக்காலத்தில் கும்பகோணம் அரசாங்கக் காலேஜில் தியாகராசச் செட்டியார் என்ற பெரும்புலவர் தமிழா சிரியராக இருந்தார். அவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படித்தவர். அவர் ஓய்வு பெறவேண்டிய காலம் வந்தபோது அவர் தம்முடைய இடத்தில் ஐயர் அவர்களை நியமிக்கும்படி செய்தார். 1880ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி முதல் ஐயர் அவர்கள் கல்லூரித் தமிழாசிரியராக வேலை பார்க்கத் தொடங்கினார்.

நிறைந்த தமிழ்ப் புலமை, எதையும் சுவையாக எடுத்து விளக்கும் ஆற்றல், இசைப்பயிற்சி, அன்பு முதலிய இயல்புகளை இவர்கள் சிறப்பாகப் பெற்றிருந்தமையால் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளத்தை எளிதில் கவர்ந்தார். ஆங்கில மோகம் உச்சநிலையில் இருந்த காலம் அது. ஆங்கிலமும் பிறபாடங்களும் கற்பிக்கும் பேராசிரியர்களிடம் மாணக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல மதிப்பு இருந்து வந்தது. இங்கிலீஷ்காரர்கள் சிலர் அந்தப் பாடங்களைக் கற்பித்து வந்தார்கள். அதனாலும் அவற்றிற்கும் அவற்றைக் கற்பிப்பவர்களுக்கும் மதிப்பு உயர்ந்திருந்தது. தமிழாசிரியர்களுக்கு அத்தகைய மதிப்பு இல்லை. அவர்களுக்குக் கிடைத்த ஊதியமும் மிகக் குறைவு. கல்லூரிச் சேவகனுக்கு அடுத்தபடி சம்பளம் வாங்கினவர் தமிழாசிரியரே.

இத்தகைய நிலையில் ஐயர் அவர்கள் மாணாக்கர்களின் உள்ளத்தைப் பிணித்ததோடு மற்ற ஆசிரியர் களுக்குச் சமமான மதிப்பையும் பெற்றார்கள். ஆங்கிலம் சிறிதும் அறியாவிட்டாலும், ஆண்டில் இளைஞ ராக இருந்தாலும், அவர்களுடைய புலமையும், பண்பும் மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பிறரும் இவரைச் சிறந்தவர்களாக மதிப்பதற்குரிய காரணங்களாக இருந்தன.

சீவக சிந்தாமணி

காலேஜில் ஆசிரியராகப் புகுந்த ஆண்டிலேயே ஐயர் அவர்களுக்கும் கும்பகோணத்தில் ஜில்லா முன்சீபாக இருந்த சேலம் இராமசுவாமி முதலியாரவர்களுக்கும் பழக்கம் உண்டாயிற்று. அந்தப் பழக்கமே ஐயர் அவர்கள் பிறந்ததன் பயனைத் தமிழுலகத்துக்குக் கிடைக்கும்படி செய்யக் காரணமாயிற்று. முதலியார் சிந்தாமணியைப் பாடம் சொல்லும்படி ஐயர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அதனை முன்பு பாடம் கேட்டறியாதவர் இவர்; அந்த நூலைப் பார்த்தது கூட இல்லை. ஆயினும் தைரியமாகப் பாடம் சொல்லப் புகுந்தார். ஏட்டுச் சுவடியை வைத்துக்கொண்டு பாடம் சொன்னார். சிந்தாமணியில் ஆழ்ந்தார். தாம் அது காறும் படித்த நூல் குவியல்களால் அறிய வொண்ணாத பலவற்றை அதில் கண்டார். அது ஜைனசமய நூலாதலால் பல செய்திகள் ஐயர் அவர்களுக்கு விளங்கவில்லை. அவற்றையெல்லாம் ஜைனர்களிடம் சென்று கேட்டு அறிந்தார். சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையைப் படித்தார். அவருடைய உரைப்போக்கும் அதனிடையே அவர் காட்டியிருக்கும் மேற்கோள்களும் ஏதோ ஒரு புதிய பிரபஞ் சத்தையே அவர்தம் அகக்கண்முன் தோற்றுவித்தன.

தமிழ் மக்கள் செய்த தவத்தின் பயனாக இவர்களுக்குச் சிந்தாமணியைப் பதிப்பிக்கவேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆராய்ச்சி நடைபெற்றது. மேட்டுமடையில் நீர் பாய்வதுபோன்ற வேதனையைப் பல சமயத்தில் அவர் அடைந்தார். ஆனாலும் விடாப் பிடியாக முயன்று 1887ம் ஆண்டு சிந்தாமணியை வெளியிட்டார். அந்தப் பதிப்பைக் கண்ட தமிழ் நாட்டினர் மிகவும் ஆனந்தமடைந்து களிக்கூத்தாடினர். அதுமுதல் ஐயர் அவர்கள் பழைய நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார்.
சிந்தாமணிக்குப்பின் பத்துப்பாட்டு வெளியாயிற்று. அதன்பின் சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை என்பவை வந்தன. புறநானூறு கண்ட தமிழுலகம் ஏதோ ஒரு புதிய கண்டத்தைக் கண்டு பிடித்தது போன்ற மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அடைந்தது. ஆராய்ச்சியாளர்களுடைய மூளை வேலைச் செய்யத் தொடங்கியது. பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையைப்பற்றிய ஆராய்ச்சிகளை அறிஞர்கள் எழுதத் தொடங் கினார்கள்.

இவ்வாறு ஐயர் அவர்கள் பழந்தமிழ் நூல்களை அச்சிடும் தொண்டை விடாது செய்து வந்தார். ஐம்பெருங் காப்பியங்கள் என்று சேர்த்துச் சொல்லும் நூல்களில் கிடைத்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி என்ற மூன்றையும் அவர் வெளியிட்டார்.அவருடைய உழைப்பால் பத்துப்பாட்டைத் தமிழுலகம் காண முடிந்தது. எட்டுத்தொகைகளில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்பன மலர்ந்தன. பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை என்னும் இலக்கிய இலக்கணங்கள் வெளிவந்தன. இவற்றையன்றி  திருவாலவாயுடையார் திரு விளையாடற் புராணம், திருக்காளத்திப் புராணம் முதலிய பல புராணங்களும், கோவை, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், இரட்டை மணி மாலை, அந்தாதி, குறவஞ்சி முதலிய பலவகைப் பிரபந்தங்களும் குறிப்புரைகளுடன் வெளிவந்தன. தம்முடைய ஆசிரியர் இயற்றிய பிரபந்தங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு தொகுதியாக வெளியிட்டார்.

ஏட்டில் இருப்பதை அப்படியே பெயர்த்துக் காகிதத்தில் அச்சிடும் வேலை அன்று, ஐயர் அவர்கள் செய்தது. புத்தகப் பதிப்பு அவ்வளவு எளிதாக இருந்தால் எத்தனையோ அறிஞர்கள் அதை முன்பே செய்து புகழ் பெற்றிருப்பார்கள். ஏட்டில் உள்ள பாடம் பிழைபட்டிருக்கும். பல இடங்களில் இன்னதென்றே ஊகிக்க முடியாத அளவுக்குச் சிதைவு உண்டாகியிருக்கும். அவற்றையெல்லாம் பல நூல் அறிவினாலும் இயற்கையான அறிவுத் திறமையாலும் விடா முயற்சியினாலும் திருவருளின் துணையாலும் ஆராய்ந்து செப்பம் செய்யவேண்டும்.

ஐயர் அவர்கள் திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து தாமே வழியமைத்துக் காடு நாடாக்கிய பெருந் தொண்டர். அவர்களுடைய பதிப்பு என்றாலே தமிழ்ப் புலவர்களும் ஆராய்ச்சியாளரும் போற்றிப் பாது்  காக்கிறார்கள். ஒவ்வொரு நூலிலும் முன்னே உள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும், நூலைப்பற்றிய குறிப்புக்களும், பிற செய்திகளும் மிகமிக அற்புதமானவை. நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் அடிக் குறிப்பில் பல வகையான விளக்கங்களும் பல நூல்களிலிருந்து எடுத்த ஒப்புமைப் பகுதிகளிலும் காட்சி தரும். அவை ஐயர் அவர்களுடைய பரந்த நூற்புலமைக்குச் சான்றாக விளங்கும். இறுதியில் நூலில் கண்ட சொற்களுக்கும் பொருள்களுக்கும் அகராதி இருக்கும். ஆசிரியரின் உதவியின்றியே பயிலும் வகையில் அமைந்தவை ஐயர் அவர்களின் பதிப்புக்கள்.

இந்த முறையில் கண்ணாடிபோல மேல் நாட்டாரும் வியக்கும் வண்ணம் ஆங்கிலமே அறியாத தமிழ்ப் பண்டிதர் புதிதாக இத்துறையில் புகுந்து சாதித்தார் என்று சொன்னால் அது அதிசயமான செயல் அல்லவா?
முன்னுரை முதலியவற்றை எழுதி உரைநடை எழுதும் ஆற்றலைச் சிறிய அளவிலே வெளிப்படுத்திய ஐயர் அவர்கள், தாம் பதிப்பித்த நூல்களின் அங்கமாக மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் என்பவற்றை எழுதியளித்தார்.

கும்பகோணம் கல்லூரியிலிருந்து சென்னைக் கல்லூரிக்குத் தமிழாசிரியராக 1903ம் ஆண்டு வந்தார்; பின்னர் அந்தப் பதவியிலிருந்து 1919ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அலுவலிலிருந்து ஓய்வு பெற்றாரேயன்றி மாணக்கர்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியத் தொண்டிலிருந்தோ, நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியத் தொண்டிலிருந்தோ அவர்கள் ஓய்வு பெறவில்லை. உண்மையில் அப்பணிகள் பின்னும் பன்மடங்கு பெருகின.

கல்லூரியில் பணிபுரிந்தபோதே வீட்டில் தனியே இவர்களிடம் பலர் பாடம் கேட்டார்கள். மகாபாரதப் பதிப்பாசிரியராகிய மகா மகோபாத்யாய ம. வீ. இராமாநுஜாசாரியார், திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான் முதலிய பலர் இவ்வகைகளில் பாடம் கேட்டவர்கள். இவர்களிடம் இருந்து ஆராய்ச்சி முறையைக் கற்றுக்கொண்டு தாமே நூல்களைப் வெளியிட்டவர்கள் சிலர். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், இ. வை. அனந்தராமையர் , விசுவநாத ஐயர் முதலியோர் இத்தகைய வரிசையில் இருந்தவர்கள். இவர்கள் ஏடு தேடி ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்ட நூல்களைத் படித்து அந்த முறையையும் அறிந்த சில புலவர்கள் பழந்தமிழ் நூல்களைத் தாமே வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

1924 முதல் 1927 வரையில் ஐயர் அவர்கள் ராஜா அண்ணாமலை செட்டியாரவர்கள் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் தலைவராக இருந்தார். ஓய்வு பெற்ற பிறகு, தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதோடு தம்முடைய அநுபவங்களை எளிய இனிய உரைநடையில் எழுதத் தொடங்கினார். இந்தத் துறையில் ஐயர் அவர்கள் தொண்டாற்றப் புகுந்தபோது பெரியவர்களும் சிறுவர்களும், ஆடவரும் பெண்டிரும், புலவர் களும் பிறரும் ஒருங்கே இவர்கள் எழுத்தைப் படித்து இன்புற்றனர். பத்திரிகைகளில் இவருடைய கட்டு ரைகள் வெளியாயின. மாதந்தோறும் முதலில் ஐயர் அவர்களின் கட்டுரை ஒன்றைத் தாங்கிச் சிறப்ப டைந்தது கலைமகள். தமிழ் நாட்டுப் பத்திரிகைகளின் மலர்கள் ஐயர் அவர்களின் கட்டுரைகளோடு மலர்ந்தன.

தம்முடைய ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றை வெளியிடவேண்டும் என்னும் நெடு நாள் ஆர்வத்தால் அவர்கள் பல செய்திகளைத் தொகுத்து வைத்தி ருந்தார். அவற்றைக் கொண்டு மிக விரிவாக அச் சரித்திரத்தை இரண்டு பாகங்களாக எழுதி முடித்தார். தம்முடைய வாழ்க்கையில் எந்தப் பெரியார்களோடு பழக நேர்ந்ததோ அவர்களைப் பற்றிய வரலாறு களையும் நிகழ்ச்சிகளையும் சுவை ததும்ப எழுதினார். தியாகராச செட்டியார் சரித்திரம், கோபாலகிருஷ்ண பாரதியார் சரித்திரம், மகா வைத்தியநாத ஐயர் சரித்திரம், கனம் கிருஷ்ணையர் வரலாறு என்பன இவர்க ளுடைய அன்பையும் எழுதும் ஆற்றலையும் நன்றியறிவையும் விளக்குகின்றன. சிலருடைய வரலாற்றைச் சுருக்கமாக எழுதினார்; இவ்வகையில் பூண்டி அரங்கநாத முதலியார், மணி ஐயர், வி. கிருஷ்ணசாமி ஐயர், திவான் சேஷையா சாஸ்திரிகள் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகள் வெளியாயின.

இவர் பெற்ற பட்டங்கள்

இவருடைய பெருமையைத் தமிழுலகம் மெல்ல மெல்ல உணரலாயிற்று. அரசாங்கத்தார், 1906ம் ஆண்டு, 'மகா மகோபாத்தியாயர்' என்ற பட்டத்தையும், 1917ம் ஆண்டு பாரத தர்ம மண்டலத்தார், 'திராவிட வித்தியா பூஷணம்' என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார்கள். 1925ம் ஆண்டு காமகோடி பீடாதிபதி களாகிய ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள், 'தாக்ஷிணாத்திய கலா நிதி' என்ற பட்டத்தை அருளினார்கள். இவர் சென்னை, மைசூர் ஆந்திரா, காசி முதலிய இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பல வகையில் கலந்து தொண்டாற்றினார். 1932ல் சென்னைப் பல்கலைக் கழகத்தார் 'டாக்டர்' பட்டம் அளித்தார்கள். உ.வே.சா அவர்களுக்கு ”தமிழ்த் தாத்தா” என்னும் பட்டத்தைக் கொடுத்தவர் பேராசிரியர் கல்கி.

1935ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி ஐயர் அவர்கள் 80 ஆண்டுகள் நிறைந்து விளங்கினார். அவருடைய சதாபிஷேக விழாவைத் தமிழகமே கொண்டாடியது. தமிழுலகம் முழுவதும் பங்கேற்ற இவ்விழா சென்னையில் பல்கலைக் கழக மண்டபத்தில் மிகமிகச் சிறப்பாக நடைபெற்றது.

இறுதிக் காலம்

பழுத்த பருவத்திலும் ஐயர் அவர்களின் தமிழ்த் தொண்டு வீறுகொண்டு நடைபெற்றது. குறுந்தொகையை விரிவான உரையுடன் பதிப்பித்தார்கள். சிவக்கொழுந்து தேசிகர், குமரகுருபரர் என்னும் புலவர்களின் பிரபந்தத் திரட்டுகள் குறிப்புரையுடன் வெளியாயின. தமிழன்பர்களின் விருப்பப்படி ஆனந்த விகடனில் வாரந்தோறும் தம்முடைய வரலாற்றை ’என் சரித்திரம்’ என்ற தலைப்பில் எழுதத் தொடங்கினார். 1940ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய அது 122 அத்தியாயங்களோடு சுய சரித்திரமாக வரும் நிலை பெற்றது.

1942ம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயர் அவர்கள் தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று தங்கினார். அங்கே ஏப்ரல் மாதம் 28ம் தேதி அந்தத் தலத்தில் தமிழ்த்தாயின் தவப்புதல்வராகிய ஐயர் அவர்கள், தாம் பிறந்த காலத்தில் கண்ட நிலையை மாற்றித் தமிழ் மக்களைப் பழந்தமிழ்ச் செல்வத்துக்கு உரிமையுடையவர்களாக ஆக்கி, ஆசி கூறிவிட்டு இறைவன் திருவடியை அடைந்தார்கள். அவர் காலஞ்சென்ற பிறகு அவருடைய தலைமை மாணாக்கர் கி.வா.ஜ அவர்கள் உ.வே.சாவின் சரித்திர நூலைப் பூர்த்தி செய்தார்.

                         ********************************************

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் ஐயர் அவர்கள் தொகுத்து அளித்தார்; அவர் விட்டுச் சென்ற ஏடுகள் அடையாறு கலாக்ஷேத்திரத்தின் தலைவராகிய ஸ்ரீமதி ருக்மணி தேவியாரால் ஒரு நூல் நிலையமாக அமைத்துப் பாதுகாக்கப் பெற்று வருகின்றன. அந்நூல்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட வேண்டும் என்னும் ஆர்வத்துடன் பல நூல்களை இந்நிலையத்தார் வெளியிட்டு வருகிறார்கள்.

உ.வே.சா அவர்கள் பழந்தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் நிலைபேறுடைய பெயர் பெற்றவர் . பதிப்பு நுட்பங்களைத் தம் அனுபவத்தின் மூலமாக அறிந்து செம்மையாகச் செய்த அவர் பல்வேறு தளங்களிலும் ஆளுமை கொண்டவர், உரையாசிரியர், உரைநடை எழுத்தாளர், தம் காலச் செய்திகளைப் பதிவாக்குவதில் பெரு விருப்புடைய ஆவணக்காரர், சிறந்த ஆசிரியர் என அவரைப் பலவாறு கணிக்கலாம்.

பல நிகழ்ச்சிகளை நகைச்சுவை மிளிர எழுதியுள்ளார். பிறர் வாயிலாகத் தாம் அறிந்துகொண்டவற்றையும் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அவர் இரு வித நடைகளைப் பின்பற்றி எழுதியுள்ளார். ’மணிமேகலை கதைச் சுருக்கம்’ போன்ற நூல்களை உரையாசிரியர் நடையைப் பின்பற்றி உயர்ந்த செந்தமிழ் நடையில் எழுதினார். பிற்காலத்தில் எழுதிய  ‘நினைவு மஞ்சரி’ போன்ற நூல்களின் நடை எளிமையும் தெளிவும் வாய்ந்ததாகும். பிழையற்ற எளிய தமிழில் நூல்கள் எழுதி உரைநடை வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்தார்.

’இராமலிங்கரும், வேதநாயகரும் செய்யுளில் வளர்த்த எளிமையைத் திரு. வி. கல்யாண சுந்தரனாரும் உ.வே. சாமிநாதய்யரும் உரைநடையில் வளர்த்தனர்’ என டாக்டர் மு.வ. கூறுவார்.

தமக்கு வரும் கடிதங்களுக்கு உடன் பதில் எழுதித் தெளிய வைக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது; வயதில் சிறியவராக இருப்போரையும் ஒருமையில் விளித்து அழைக்க மாட்டார். தள்ளாத வயதிலும் தம் பணியைத் தாமே செய்வாரேயன்றிப் பிறரை ஏவமாட்டார்.

திருவாசகம், திருக்குறள், நாலடியார் இவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திரு.ஜி.யு. போப் அவர்களுக்கு உ.வே.சாவின் பதிப்புப் பணிகள்தான் மொழிபெயர்ப்புக்குத் தூண்டுதலாக அமைந்தன. உ.வே.சாவிடமிருந்து புறநானூற்றைப் பெற்றுக் கொண்ட ஜி.யு. போப் வந்தனம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார் -

" உங்களின் உயர்ந்த பதிப்பான சிந்தாமணி என்னிடம் இருக்கிறது. இதனைப் பற்றி என்னு டைய நாலடியார் பதிப்பில் குறிப்பிட்டுள்ளேன். எங்களுக்கு நீங்கள் தான் இரக்கம் காட்ட வேண்டும். புற நானூற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளப் புதிய முயற்சிகளைச் செய்யவேண்டும். புறநாட்டின னாகிய எனது மடமையைப் பார்த்து ஒருகால் நகைக்கலாம். தமிழை உலகத்திலுள்ள தாய் பாஷைகளில் ஒன்றாக உயர்த்துவதின் நிமித்தம், ஏதாவது கொஞ்சம் தொண்டு செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேன். ஒவ்வொரு மூச்சிலும் தமிழையே தரிசித்துப் பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தந்த உங்களிடம் உள்ள நூல்களைக் கொடுத்து எனக்கு உதவிட வேண்டும். உங்களின் உயர்ந்த சேவையில் என் மனம் லயிக்கிறது. பெருந்தேவனாராற் செய்யப்பட்ட அழகிய முதற்பாட்டு மாணிக்கவாசகர் பாட்டைப் போலிருக்கிறதே! அது சரியா?”

இக் கடிதம் கண்ட உ.வே.சா போப்பின் தமிழ் உணர்வைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார். பெருந் தேவனாரின் காலம், மாணிக்கவாசகரின் காலம், இருவரின் பாடல்களின் அழகு இவை பற்றி போப்புக்கு விரிவான ஒரு கடிதத்தை எழுதினார் ஐயர்.


                                       **********************************************************************************


தமிழ்த் தாத்தாவின் சுவைமிக்க  கட்டுரைத் தொகுப்பு ஒன்றை நண்பர் திருவேங்கட மணி அவர்கள் மின்  பதிப்புச் செய்து வழங்கினார்; அன்பர்கள் தட்டச்சுச் செய்து மரபுப் பகுதியில் இணைப்பதற்குத் துணை புரிந்தனர்.


”திரு சாய்ராம் உதவியுடன் தமிழ்த் தாத்தா டைரியைப் புரட்டிப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்து. தமக்குப் பட்டம் கிடைத்ததை எளிதாக, நாளேட்டில் அன்றைய தேதியில் “சன்னது கிடைத்தது” என்று இரண்டே வார்த்தைகளில் குறிப்பிடுகிறார்!   எவ்வளவு எளிமையான மனிதர்! ”
                                                                                               

                                                                                                          திரு நரசய்யா அவர்கள்


ஆசிரியர் பெயர் அறியமுடியாது இருந்த பாடல்களின் பட்டியலைத் தந்து 15 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியமுடியவில்லை என்பதையும் உ.வே.சா புறநானூறு முதற்பதிப்பில் குறித்துள்ளார். இதுநாள் வரை நம்மால் அப்பெயர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தப்படவில்லை என்பதை நினைக்கும் பொழுது உ.வே.சா. அவர்களால் ஒருவேளை புறநானூறு வெளிப்படுத்தப் படாமல் போயிருந்தால் தமிழர்களின் வீர வரலாறு அறியப்படாமல் போயிருக்கும் என்று கருதுவதில் தவறில்லை.


                                                 புறநானூறு - முதற்பதிப்பு ஆய்வுரை : முனைவர் மு இளங்கோவன்தேவ்


பங்களிப்பாளர்கள்

Dev மற்றும் Vinodh

"http://heritagewiki.org/index.php?title=தமிழ்த்_தாத்தா&oldid=1818" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 22 பெப்ரவரி 2010, 10:58 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 8,847 முறைகள் அணுகப்பட்டது.