திருவண்ணாமலை- ஓர் அக்னி ருத்ர வழிபாட்டுத் தலம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 
டாக்டர் பத்மாவதி, தமிழகம்
வேதகால மக்கள் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு அமைதியாக யோகம் செய்து கொண்டிருந்தவர்களும் இருந்தனர். இவர்கள் சடைமுடியை உடையவர்கள். மவுனம் கடைபிடித்ததால் முனி என அழைக்கபட்டனர். வேதத்தை ஏற்றுகொள்ளாத இவர்கள் லிங்க வழிபாட்டு முறையை பின்பற்றியவர்கள். இவர்கள் சிஷ்ன தேவர்கள் என்றும், ருத்ரனின் புதல்வர்கள் என்றும் கூறபட்டனர். இவர்களையும் லிங்க வழிபாட்டையும் வேத வழிபாட்டினர் ஆதரிக்கவில்லை. எனவே இந்திரன் சிஷ்ன தேவர்கள் எனக் கூறப்படும் லிங்க வழிபாடு செய்தவர்களைக் கொன்று மிருகங்கட்கு இரையாக்கினான் எனக்கூறுகிறது ரிக்வேதம்.
சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகளில் மூன்று முகத்துடனும் கொம்புத்தலையுடனும் கூடிய உருவம் யோக நிலையில் பத்மாசனத்துடன் காணப்படுகிறது. இவ்வுருவத்தின் அருகில் மாடுகள் நிற்கின்றன.

வேதங்களும் அதன் வழிவந்த நூல்களும் ஆகமங்களும் சிவனை திரிமுகன் என்றும் பசுபதி என்றும் யோகீஸ்வரன் என்றும் கூறுகின்றன. எனவே வேதகாலத்தில் மட்டுமல்ல, சிந்துசமவெளி காலத்திலேயே சிவருத்திர வழிபாடு யோகத்துடன் கூடியதாகவே இருந்திருக்கிறது

ரிக் வேதத்தில் சிஷ்ன தேவர்கள் எனக் கூறப்பட்ட முனிகள் அதர்வ வேதத்தில் விராத்தியர்கள் எனக் கூறபட்டனர். இந்த விராத்தியர்கள் யோகப்பயிற்சி உடையவர்கள் என்றும் துறவு முறையைப் பின்பற்றியவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விராத்தியர்கள் வழிபடும் ருத்ரனை ரிக்வேதம் இழிவாகக் கருதுகிறது. யஜூர் வேதம் தைத்ரீய சம்ஹிதை நாலாவது காண்டம் ஐந்தாவது பிரபாடகமே ஸ்ரீ ருத்ரம் என்ற பெயருடன் பேசப்படுகிறது.

எனவே விராத்தியர்கள் ருத்ரனாகிய மகாதேவ வழிபாட்டையும் யோக நெறியையும் பின்பற்றியவர்கள். இந்த யோக நெறிகளைத் தொகுத்து எழுதியவர் கிபி 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் ஆவார். இவர் யோகம் பற்றி தொகுத்துத் திரட்டி எழுதிய நூலுக்கு யோக சூத்திரம் என்று பெயர்.பதஞ்சலி எழுதிய யோக சூத்திரம் மிகப் பழைய தத்துவமான சாங்கியத்தில் இருந்து எடுத்துத் தொகுக்கபட்டது.

பழைய சாங்கியம், சடப்பொருளாகிய பிரகிருதி இயக்கத்தில் உள்ளது என்றும் அதில் சத்துவம், ராஜசம், தாமஸம் ஆகிய குணங்கள் சமமாக இருந்தன என்றும், அதன் இயக்கங்களில் மாறுபாடடைந்து ஒன்றின் குணம் அதிகரிக்கும்போது உலகில் உயிர்கள் தோன்றின என்றும் கூறுகிறது. பிரகிருதியை இயக்கி வைக்க ஒரு புருடன் தேவை என்பதையோ, ஆன்மாவையோ இந்த பழைய சாங்கியம் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் நிரீஸ்வர சாங்கியம் எனக் கூறப்பட்டது. ஆனால் பதஞ்சலி புஎன்ற கருத்து நுழைந்தபின் சேசீஸ்வர சாங்கியம் எனப்பட்டது. அதாவது கடவுள், யோகம் இவற்றுடன் கூடிய சாங்கியம் எனப்பொருள்.

இவ்வாறு கிபி 5ம் நூற்றான்டிற்கு பிறகு சாங்கியத் தத்துவத்தில், புருடனாகிய கடவுள் புகுத்தப்பட்டார்.

பிரக்ருதியின் முக்குணங்களில் இருந்து தோன்றும் பொருள்களும் சத்துவம் மேலோங்கும்போது உற்பத்தி உண்டாகிறது. தாமசகுணம் மேலோங்கி நிற்கும்போது தன் மாத்திரைகள் ஐந்தும் தோன்றுகின்றன. அந்த ஐந்திலிருந்து பஞ்சபூதங்களுக்குக் காரணமான மூலப்பொருட்களை (ஆகாசம், காற்று, தீ, நீர், நிலம்) தோன்றுகின்றன எனக் கூறுகிறது சாங்கியம்.

இந்த ஐந்து பூதங்களுக்கும் ஐந்து தலங்கள் உள்ளன. இத்தலங்களில் சிவலிங்கமானது, திய்யாகவும், நீராகவும், ஆகயமாகவும், நிலமாகவும், வாயுவாகவும் வணங்கப்பட்டு வருகிறது- அவ்வாறு நெருப்பு வடிவில் வழிபடப்படும் இறைவந்தான் திருவண்ணாமலைக் கோயிலில் உள்ள அண்ணாமலையார் என்ற இறைவனாகும்.

அண்ணாமலையார் என்ற பெயர் லிங்கோத்பவ மூர்த்திக்குத்தான் வழங்கப்படுகிறது. லிங்கத்திலிருந்து இறைவன் தோன்றுவதாக அமைந்திருக்கும் இச்சிற்பம், அதாவது ஒளீவடிவத்தூணாக ஆதியும் அந்தமுமில்லாமல் இருப்பவன் சிவன். இவனது முடியைத் தேடி பிரம்மா அன்ன வடிவெடுத்தும், அடியைத்தேடி விஷ்ணு பன்றி உருவமெடுத்தும் தேடியபோது காண முடியாது திரும்பினர் எனக் கூறுகிறது லிங்க புராணம்.லிங்க புராணத்தின், அக்கதையைப் படித்த அப்பா 'லிங்கபுராணச் சுருக்கம்' எழுதினார்.

அச்சருக்கத்தைப் படித்த முதலாம் இராஜராஜ சோழன், தான் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் லிங்க புராண தேவரை செப்புச் சிலையாக வடித்து மகிழ்ந்தான் என்பதையும் இங்கு நினைவு கூறலாம்.

ஆக, சிவபெருமான் ஒளியாகிய தீவிடிவினன், என்றால் அந்தத் தீவடிவம் வானையும், பூமியையும் இணைக்கும் பாலம் போலவும், அதனையும் மீறி இருந்தது என்று பொருள்.

வேதங்களும் விதாதாவிலிருந்து (யாகம் செய்யும் சபை) அக்னி அவியை தேவர்களுக்காக எடுக்கிறான் என்றும், அவன் தான் விதாதாவுக்கும் தேவர்களுக்கும் இணைப்பாளனாக செயல்படுகிறான் என்றும் கூறுகின்றன. யாகம் செய்யும்போது, அந்த யாகத்தீயாகிய அக்னியையே அவர்கள் அவ்வாறு வர்ணித்தனர்.

ருத்ரன் யாகத்தை அழிப்பவன் என்றும், ருத்ரனின் கோபத்தைத் தணிக்க, யாகத்தின்போது சிந்துகின்ற அவியை அவனுக்கு கொடுத்ததாகவும் கூறுகின்றன வேதங்கள்.

ஆனால் இலிங்கபுராணமோ ஒளிப்பிழம்பாகிய அக்னியிலிருந்து தோன்றியவன் ருத்ரன் என்கிறது. அதனால் அக்னி- ருத்ரன் என்றும் அவனுக்குப் பெயர். லிங்கபுராணம், கிபி 2ம் நூற்ரான்டில் சிவலிங்க வழிபாட்டைப் புதுப்பித்த லகுளீசர் பற்றியும் அவரது சித்தாந்தம் பற்றியும் விவரித்துக் கூறுகிறது. லகுளீச பாசுபதர்கள் கடைப்பிடிக்கின்றயோக வாழ்வையும் அட்டாங்க யோகம் பற்றியும் கூறுகிறது.

பதஞ்சலியின் யோக சூத்திரமும் அஷ்டாங்க யோகம் பற்றிக்கூறுகிறது. கிபி பதினோராம் நூற்ராண்டில் வகுளீச சித்தாந்தத்தைினபின்பற்றும் காளாமுகக் குருக்களால் அஷ்டாங்க யோகம் கடைப்பிடிக்கபட்டிருக்கிறது.
லகுளீச சித்தாந்ததை உருவாக்கிய லகுளீசர், பழைய சாங்கியத்தில் உள்ள பஞ்ச பூதங்கள் கிபி 5ம் நூற்றாண்டில் சாங்கியத்தில் நுழைந்த யோகம், வேத காலங்களில் சிஷ்ன தேவர்களாலும், விரத்தியர்களாலும் வழிபடப்பட்ட ருத்ரன், அவனது குணாதிசயங்கள், வேதங்கள் தவிர்க்க இயலாதவாறு ருதரனைப் பற்றி கூறிய கருத்துக்கள் ஆகியவை, லகுளீசரின் சித்தாந்தத்தில் உள்ளன என்பது உண்மை.

லகுளீசரின் மாணவர்கள், பாசுபதர்கள் என்றும், காளாமுகர்கள் என்றும், காபாலிகர்கள் என்றும் தனித்தனியே சைவத்தை வளர்த்து வந்தனர். இவர்களில் பாசுபதர்களும், காளாமுகர்களும் பின்பற்றிய சித்தாந்தம், தங்கள் குரு லகுளீசரால் ஏற்படுத்தப்பட்ட லகுளீச சித்தாந்தமே ஆகும்.

இத்தகைய சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்த பஞ்சபூத தலங்களில் ஒன்றுதான் திருவண்ணாமலை. இந்த பின்னணியுடன் இங்கு திருவண்னாமலைக் கோயில் வரலாற்றைக் காண்போம்.

இக்கோயில் நிர்வாகத்தையும் வழிபாட்டு முறைகளையும் கவனித்து வந்த சிவபக்தர்கள் ஸ்ரீ ருத்ர மாஹேஸ்வரர்கள் எனப்பட்டனர். பொதுவாக இவ்வாறு பணிபுரிந்து வரும் சிவனடியார்களை ஸ்ரீ மகேஸ்வரர்கள் என்ற பெயரால் குறிப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலை போன்ற சில கோயில்களில் சிவனின் குறிப்பிட்ட ஒரு அம்சம் சிறப்பக வாழிபடப்படுமேயாயின் அந்த பெயரில் இறைவனை வழிபடுவதுடன் வழிபாடு செய்யும் சிவனடியார்களும் அந்த சிறப்புகுரிய பெயருடன் அழைக்கபடுவதுண்டு.

அத்தகைய ஒரு கோயில்தான் திருவண்ணாமலையும், அங்கு பணிபுரிந்த சிவனடியார்களும். திருக்கழுகுன்றத்தில் பணிபுரிந்த சிவனடியார்களும் ஸ்ரீ ருத்ர மகாதேவர்கள் என குறிக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டம் ஆரகளூரில் ஸ்ரீ ருத்ரர்கள் என்றும் ஸ்ரீ மகேஸ்வரர்கள் என்றும் குறிக்கப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் திருமயானம் என்ற ஊரில் வேதமும் ஸ்ரிருத்ரமும் இறைவன் முன் வாசிக்கப்பட்டன. நெல்லூர் மாவட்டம் நந்தனவனத்தில் மல்லிகார்ஜுனர் கோவிலில் ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஸ்ரீ ருத்ரம் அத்யாயனம் செய்யப்பட்டது.
இக்கோயில்களில் எல்லாம் சத்ருத்ரீய பிராமாணத்தில் உள்ள ஸ்ரீ ருத்ரம் இறைவன் முன் ஓதப்பட்டு வழிபடப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை ஒரு அக்னித்தலம் ஆதலால் இறைவன் ஒளிவடிவமான தூணாக வானையும் மீறிய உயரத்திலும், பூமியையும் மீறி பாதாளத்திலும் விளங்குபவன். ஆதலால் அந்த இறைவனுக்கு கார்த்திகை தீபத் திருவிழா சிறப்புகுரியதாக விளங்குகிறது.

இக்கோயில்களில் உள்ல கல்வெட்டுக்களை ஊன்றிக்கவனித்தால் கார்த்திகை மாதத்தில் மட்டுமல்ல, தினம் தினம் தீபத்திருவிழா போன்று எங்கும் ஒரே தீபமயமாகவே காட்சியளித்திருக்க வேண்டும் போலத் தெரிகிறது.

சோழ மன்னர்கள், ராஜகேசரி வர்மனாகிய முதலாம் ஆதித்த சோழன், முதலாம் பராந்தகச் சோழன் ஆகியோர் காலம் முதல், பிற்காலம் வரை கல்வெட்டுக்கள் உள்ளன. மன்னர்களும் சரி, அரசியரும் சரி, அரசியல் அதிகாரிகள், சிற்றரசர்கள், ஏன் சேரநாட்டிலிருந்து இங்கு வந்து தானமளித்த சேரநாட்டு அரசியாக இருந்தாலும் சரி, அவர்களெல்லாம் இக்கோயிலுக்கு தானமளித்தது, தீபமேற்ற நந்தா விளக்குகளைத்தான்.

இவர்களெல்லாம் பொன்னையும் பொருளையும் நிலங்களையும் ஏராளமாகத் தானம் செய்திருக்க முடியும். ஆனாலும் தீபமேற்றி விளக்குகள் எரிக்க, ஆடுமாடுகள் கொடுப்பதையே சிறப்பாகக் கருதினர். பிறதானங்களும் கொடுக்கப்பட்டன என்றாலும் இக்கோயிலுக்கு தீபமேற்றும் தானத்தையே புண்ணியமாகக் கருதியிருக்க வேண்டும். அதனால் அக்கோயில் தினம் தினம் ஒரே தீபமயமாகக் காட்சியளித்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அக்னி வடிவான இறைவன், அக்னி வடிவாக தீபங்களில் ஜொலித்துக் கொண்டிருப்பதாக நம்பியிருத்தல் வேண்டும்.

ஆனால் கார்த்திகைத் திருநாள் பற்றி முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கிபி 1031ல் தான் குறிக்கப்பட்டுள்ளது என்றாலும், சாதாரண நாட்களிலேயே ஒளிமயமாக விளங்கியக் கோயில் கார்த்திகைத் திருநாளன்று எப்படியிருந்திருக்குமென்று கூறவேண்டியதே இல்லை.

ராஜேந்திர சோழனின் இரு கல்வெட்டுக்கள் சில சுவையான செய்திகளைக் கூறுகின்றன. அதாவது கார்த்திகைத் திருநாளின் போது இறைவன் வேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அன்று அக்கோயிலில் சாதாரண நாட்களில் திருவமுது படைப்பது போலல்லாமல், பெருந்திருவமுது செய்து திருவிழாவுக்கு வருகைதரும் அடியார்களுக்கு சட்டிச்சோறு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்செய்யப்பட்டிருந்தன.

அதுமட்டுமல்ல, அண்ணாமலையார் கோயில் விமானத்தைச் சுற்றிலும் இரவு சந்தி விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இந்த விளக்குகளுக்கு அணுக்க விளக்காக ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது என்பன போன்ற செய்திகளால் கார்த்திகைத் தீபத்தன்று அகோயில் எத்தகைய தீப அலங்காரங்களுடன் அழகாக காட்சியளித்திருக்கும் என்பதை நம் மனத்திரையில் கொண்டுவர முடிகிறது.

இவ்வாறு விளக்குகள் எரிக்க ஏராளமான ஆடுமாடுகள் கொடுக்கபட்டன என்பதை நாம் முன்னர் கண்டிருக்கிறோம். இவற்றைப் பராமரிக்கும் மன்றாடிகளை இவ்வீர்க் கல்வெட்டுக்கள் சிவனடியார்களை குறிப்பிடுவது போல "சுரவித்திருமேனிகள்" என மிக்க மரியாதையுடன் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகிறது.

முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் திருகார்த்திகை விழாவில் ஆடவல்லாராகிய நடராஜருக்கு சாந்தாடல் செய்ய 80 பொன்கழஞ்சு கொடுக்கபட்டது.பஞ்சபூதங்களுல் ஒன்று ஆகாயம். ஆகாயமாக உடுவக்படுத்தப்பட்டவர் நடராசர். அதனால் கார்த்திகைத் திருநாளில் அவருக்கும் சிறப்புச் செய்யப்பட்டிருக்கலாம்.

கார்த்திகைத் திருவிழா பற்றிக்கூறும் அடுத்த கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு 32வது திருக்கார்த்திகைத் திருநாள் முதல் திருவீதி ஆண்டார்களாக 20 பேரை நியமித்தது பற்றிக் கூறுகிறது. அது என்ன 32வது திருக்கார்த்திகை என்று பார்த்தால் இக்கல்வெட்டு அம்மன்னனின் 32வது ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். அப்படியென்றால் குலோத்துங்க சோழன் ஒவ்வொரு கார்த்திகைத் திருவிழாவையும் தான் ஆட்சிக்கு வந்தது முதல் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறான் என்பது பொருள்.

ஆக, அக்னியாகிய ருத்ரனுக்கு அக்னியாலேயே திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.வேதங்கள் ருத்ரனின் கோபத்தைத் தணிக்க ஆட்டின் பாலால் அபிஷேகம் செய்ததைக் குறிக்கின்றன. திருவண்னாமலைக் கோயில் கல்வெட்டுக்களும் இறைவன் பாலாடி அருள ஏற்பாடு செய்திருந்ததைத் தெரிவிக்கின்றன. இறைவன் பாலாடியருள பசுக்கள் கொடுத்த செய்தி மட்டுமல்ல, நெய்யாபிஷேகத்துக்கும் பசுக்கள் கொடுக்கப்பட்டிருந்தன,.

உத்திரமயன சங்கிரமம், தட்சிணமயன சங்கிரம் எனக்கூறப்படுகின்ற ஐப்பசி மாதப்பிறப்பு அன்றும், சித்திரை மாதப் பிறப்பு அன்றும் ஆயிரம் குடங்கள் அல்லது சங்குகள் கொன்டு பால்,நெய் போன்ரவற்றால் அபிஷேகம் செய்விக்கப்பட்ட செய்தி காணப்படுகிறது. இந்த அபிஷேகங்கள், ருத்ராபிஷேகம் என வழங்கப்பட்டதை நெல்லூர் மாவட்ட நந்தவன மல்லிகார்ஜுனர் கோயில் கல்வெட்டு மூலம் அறிந்தோம்.

வேதங்கள் ருத்ரனை மலையடிவாரத்தில் உறைபவன் என்றும் நீர்நிலைகளாகிய ஏரி, ஆற்றங்கரைகளில் உறைபவன் என்றும் கூறுகின்றன. திருவண்ணாமலை இறைவனோ, மலையடிவாரத்தில் தான் உறைந்திருக்கிறான். அருகில் ஏரியும் உள்ளது.

கிபி 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவர் குல குறுநில மன்னனாக புகழ்பெற்று விளங்கியவன் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னன். இவன் சிறந்த சிவபக்தன். சிறந்த பணிகளை சிவன் கோயிலுக்க்ச் செய்தவன். இவன் காலத்துப் பாடல் கல்வெட்டு ஒன்று திருவண்ணாமலையில் உள்ளது.

இக்கல்வெட்டு சிவனை ஆதிநாதன் என்ரும், பாய்புனற் கங்கையை சடையிலே ஏற்றுக்கொண்டவன், பிரைசூடியவன் என்றும் கூறி இந்தச் சிவனை ஆதியில் ஐந்தெழுத்தோதி வணங்கிய தொன்டர்கள் நாற்பத்தெண்ணாயிரவர் எனக்கூறியதுடன் அதே பெயரில் அங்கு சிவனடியார்கள் வாழ்ந்தது பற்றியும் கூறுகிறது.

இக்கல்வெட்டில் கூறுகிற 'ஆதியில் ஐந்தெழுத்தோதி வணங்கிய தொன்டர்கள்' என்பது முக்கியமான ஒன்றாகும். யஜூர் வேத தைத்திரிய சம்ஹிதையில் பஞ்சாட்சரம் எனக் கூறப்படுகிறது. பஞ்சாட்சரம் என்றால் 'ஐந்து எழுத்துக்கள்' என்று பொருள். அதாவது 'நம சிவாய' என்ற ஐந்தெழுத்து. இச்சம்ஹிதையில் 'நமஹ, சிவாய, சிவதராய சஹ' என்ற பகுதி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதே சமஹிதை தான் ஸ்ரீ ருத்ரம் என்று வழங்கப்படுகிறது என்பதை முன்னர் கண்டோம்.

திருவண்ணாமலையில் - இறைவன் ருத்ரன் என்பதையும் ஸ்ரி ருத்ரம் என்னும் மந்திரத்தையும் சிறப்பாகவே உணர்ந்து வழிபடப்பட்டு வந்தது. இன்றும் வழிபடப்பட்டு வருகிறது என்பது தெரிய வருகிறது.

ஆக, இக்கோயில் பசுபத, காளாமுக, சைவர்கள் பின்பற்றிய லகுளீச சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்த அக்னி- ருத்ர வழிபாட்டுத்தலம் என்பது நன்கு புலனாகிறது

உதவிய நூல்கள்

1 The edic age. Gen editor R.C. Majumda Bharadiya vidya bhavan, Bombay (1988)
2. Indian Philosophy- Debiprasad Chattopadhyya (1993)
3. Are431/1913
4. Are 1945-46/66-81
5. are 1952-53/212-213


--Ksubashini 16:29, 27 ஜனவரி 2013 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2013, 16:29 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,517 முறைகள் அணுகப்பட்டது.