திருவண்ணாமலை = அருணாசல அருள் வரலாறு -(2)

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிங்கை கிருஷ்ணன் 


தில்லையை தரிசிப்பவர்களுக்கும், காசியில் இறப்பவர்களும், திருவாரூரில் பிறப்பவர்களுக்கும் முக்தியுண்டாகும். நேரில் சென்று தில்லையை வணங்குவது எல்லோராலும் இயலாது. காசியில் இறப்பதும் எளிதன்று.திருவாரூரில் பிறப்பதும் நம்மால் ஆகக்கூடியதன்று ஆனால் அண்ணாமலையை .எங்கிருந்தாலும் ஒரு முறை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.அந்த ஊரில் உள்ள கற்கள் எல்லாம் சிவலிங்கங்கள். திருஅண்ணாமலை பேரூரினை சுற்றி1008 லிங்கம் புதைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையால்,இன்றும் சிலர் காலில் காலணி அணியாதுதான் செல்வார்கள்.

புராணிகர் சோணாசல முதலியார் என்னும் பெரும்புலவர் திருவண்ணாமலை தீபம் பற்றிக் கார்த்திகை தீப வெண்பா படைத்துள்ளார்.


"கங்கை அணி தீபம் கற்பூரத் தீபமலை
மங்கையொரு பங்கில் வளர்தீபம் - பங்கயன்பால்
விண்பாரு தேடும் வண்ணம் மேவிய அண்ணாமலையில்
பண்பாரும் கார்த்திகை தீபம்.


இப்பாடல், உமையம்மை சிவனின் இடப்பாகம் பெற்றதையும், பிரம்மாவும்,திருமாலும் அடிமுடி தேடிய நிகழ்வையும் கோடிட்டுக் காட்டியுள்ளார் புலவர்!

உமாதேவி இடப்பாகம் பெற்ற பவழக்குன்று!

ஒரு நாள் உமாதேவி சிவனின் இருவிழிகளையும் வேடிக்கையாக மூட, இந்தப் பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. பல்லுயிர்களும் துன்புற்றன. இந்தப் பாவம் நீங்கிட, " உமையே! காஞ்சியில் மண் லிங்கம் செய்து, கடுந்தவம் புரிந்து, பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து தவமியற்றி, என் இடப்பாகம் பெறுவாய்!எனப் பணித்தார் சிவன்.

அவ்வாறே காஞ்சியில் மண் லிங்கம் பிரதிஷ்டை செய்து, தவம் மேற்கொண்டு, பின்னர் திருவண்ணாமலைக்கு வந்தார் அன்னை உமாதேவி. திருவண்ணாமலை துர்க்கை அம்மன் ஆலயம் அருகே உள்ள பவழக்குன்று மலையில் பர்ணசாலை அமைத்து, கவுதம முனிவரின் அருளாசியுடன் கடுந்தவம் மேற்கொண்ட போது, ஆசையால் அட்டகாசம் செய்த அசுரர் தலைவன் மகிடாசுரனை அழித்தாள் உமை.கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் கிருத்திகை பிரதோஷ நேரத்தில் மலைமேல் சிவனின் ஜோதி தரிசனம் கண்டு, வணங்கி, சிவனின் இடப்பாகம் பெற்றாள் உமாதேவி. அப்படி அன்னை உமாதேவி சிவனின் இடப்பாகம் பெற்ற பவழக்குன்றுப் பகுதி திருவண்ணாமலையில் காட்சி தருகின்றது. பகவான் ரமணர், சில காலம் பவழக்குன்றில் தங்கித் தவம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


============================================================================

திரு அண்ணாமலை கோயில் சுற்றுலா!

திரு அண்ணாமலை கோயில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. ஆறாம் பிரகாரம் என்று அழைக்கப்படும் வெளிப்பிரகாரத்தில் மிக உயர்ந்த கருங்கல்லினாலும் கோயில்சுற்றிச் சுவர் உள்ளது.நான்கு திசையிலும் வானை முட்டும் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளன.கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது.இந்த கோபுரம் 11 நிலைகளுடன 217 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் இது. இதன் அடிநிலை 135 அடி நீளம் 98 அடி அகலம். தெற்கு திசை கோபுரம் திருமஞ்சன கோபுரம்.

மேற்கு திசையிலுள்ள கோபுரத்தை பேய்க் கோபுரம் எனவும், வடக்கு திசையிலுள்ள கோபுரத்தை அம்மணி அம்மாள் கோபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.

அருணாசலேஸ்வரரை தரிசிக்க முதலில் ராஜ கோபுரத்தின் வழியே செல்ல வேண்டும்.நுழைந்தவுடன் அங்குள்ள செல்வ கணபதியை தரிசிக்க வேண்டும்.செல்வ கணபதியை எண்ணிக் கொண்டு தோப்பு கரணம் போடவேண்டும்.வணங்கும் போது உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. கரணம் என்றால் மனம், புத்தி, சித்தம்,அகங்காரம் எனப்படும்.இவைகளை தோற்பது தான் தோற்புக்கரணம்.விநாயகர் முன்பு நாம் செய்த தவற்றை உணர்ந்து வந்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகதான் தோப்புக் கரணம் போடுகின்றோம்.


இராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் வலது புறத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது.ஆயிரங்கால் மண்டபத்துள் ரமண ரிஷி வழிப்பட்ட பாதாள லிங்கேஸ்வரை காணலாம். ரமண ரிஷிகள் ஆழ்ந்த தியானத்தில் பல காலம் அமர்ந்து தன்நிலை மறந்து இருந்த காரணத்தால்
எறும்புகளாலும், நீண்ட காலம் அமர்ந்திருந்த காரணத்தாலும் புட்டம் அரிக்கப்பட்டு நோயுற்ற காலத்தில், இதனை நிஷ்டை மூலம் அறிந்த சேஷாத்திரி சுவாமிகள் ரமண அங்கிருந்து கொணர்ந்து புண்ணுக்கு மருந்திட்டு, குப்புறமாகவே சுமார் இரண்டு மாதம் வைத்திம் செய்தாக சொல்லப்படுகிறது

இடது புறமாக இளையானார் சன்னதி உள்ளது.[முருகன் சன்னதி]அடுத்தாற்போல் ஒட்டிஇருப்பது கம்பத்திளையார் சன்னதி. இங்கு முருகன் இரண்டாம் பிரபுட தேவாராய மன்னருக்கு காட்சி அளிக்க வேண்டும் என அருணகிரி நாதர் பக்தி பரசவத்துடன் பாடல் பாடி வரவழைத்த இடம்.
முருகன் கம்பத்தில் காட்சி அளித்தார். அதனால் கம்பத்திளையார் என முருகனுக்கு பெயர் வந்தது.

இதன் தென்புறமாக சிவகங்கை புண்ணிய நதி தீர்த்தம் அமைந்துள்ளது.சர்வ சித்தி விநாயகர் சன்னதியின் கீழ் புறமாக சிவகங்கை அமைந்துள்ளது.விநாயகர் சன்னதி ஒட்டியே பெரிய நந்தி காணப்பெறும். பெரிய நந்தியின் எதிரில் காணப்பெறுவது வல்லாள மகாராஜன் கோபுரம். அடுத்து கல்யாண சுந்தரேசுவரர் சன்னதி.காலபைரவரை அஷ்டமி, ஞாயிற்றுகிழமையில் தரிசித்தால் பில்லி,சூனியம் அகலும் .எதிரிகள் தோல்வி அடைவர்.வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.

அடுத்து நான்காம் பிரகாரம் ஆரம்பமாகிறது.இப்பிரகாரத்தின் கீழ் திசையில் கிளி கோபுரம் அமைந்துள்ளது.அருணகிரி நாதர் கிளி வடிவம் தாங்கி வந்து பாரிஜாத மலர்களை கொண்டு சிவனை வழிப்பட்டதால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்று வழங்கப்படுகிறது.கோபுரத்தினை சற்று
உற்று நோக்கினால் ஒரு கிளி இருப்பதைக் காணலாம்.

கிளி கோபுரத்தின் உட்புறம் எதிரில் தோன்றும் 16 கால் மண்டபத்தில் தான் கார்த்திகை தீப விழாவின் போது பஞ்ச மூர்த்திகள் அண்ணாமலையை நோக்க ஏக காலத்தில் தீப தரிசன காட்சி நடக்கும்.அடுத்து மூன்றாம் பிரகாரம்.இதில் சம்பந்த விநாயகர் சன்னதி.ஸ்தல விருட்சமாகிய மகிழ மரம் காணலாம்.இதில் உண்ணாமுலையம்மாள், அருணகிரி,காளத்தி லிங்கேஸ்வரர்,பழனி ஆண்டவர், ஏகாம்பரேசுவரர், ஜம்புலிங்ககேசுவரர், சிதம்பர லிங்கேசுவரர்,பிடாரி, சப்தகன்னியர் சன்னதியை காணலாம்.


அதன்பின் அண்ணாமலையாரை தரிசிக்க செல்ல வேண்டும்.முதலில் பலி பீடம் உள்ளது.அங்கு தலை,கையிரண்டு, இருசெவிகள், இரு முழங்கால்,மார்பு ஆகியவை பூமியில் படும் படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் தலை,இரண்டு முழ்ந்தாள்கள் பூமியில் படும்படி பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கீழே வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து வணங்கவேண்டும். அப்போது நம் மனதில் உள்ள காமம்,ஆசை,குரோதம்,லோபம், மோகம்,பேராசை,மத,மாச்சர்யம் என்னும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுத்தாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.


அடுத்து அருணாசல பெருமான் சன்னதி உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரம் ஆரம்பம்.சகல மூலவர்களும்,உற்சவமூர்த்திகளும், சமயாசாரியார்கலும், நாயன்மார்களும்,வேணுகோபால சுவாமியும்காணலாம்.இதன் மேல்பத்தியின் முதற்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தியும், சண்டிகே சுவரரும் விளங்குகின்றனர்.


இருதய ஸ்தானமாக விளங்கும் அண்ணாமலை பெருமான் அரூஉருவ திருமேனியாய் காட்சி அளிக்கிறார்.முதலில் அடியும்,முடியும் நெருங்க முடியா அண்ணாமலையானை தரிசித்து விட்டு அம்பாள் உண்ணாமுலை அம்மையை தரிசிக்கவேண்டும்.


{ ...வலம் தொடரும்....}


அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை


--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:06, 29 நவம்பர் 2011 (UTC)


பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2011, 09:11 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,155 முறைகள் அணுகப்பட்டது.