தெரிந்த ஊர் தெரியாத செய்தி - 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 தெரிந்த ஊர் தெரியாத செய்தி -2 விசாக பட்டிணம்

போ(B)னி அமரேஸ்வரர் கோயில்

வழங்கியவர்: மரபூர் ஜெய.சந்திரசேகரன்

கடந்த நவம்பர் மாதம் நானும் நண்பர் அண்ணாமலை சுகுமாரனும் பணி நிமித்தம் காரணமாக, புவனேஸ்வரம் செல்ல நேர்ந்தது. வரும் வழியில், திருமதி ஜெயஸ்ரீ ஹட்டங்காடி எனும் ரீச் ஆர்வலர் எங்களைக் கட்டாயம் விசாகபட்டிணத்திலிறங்கையே ஆகவேண்டும். அங்கே ஒரு சிவன் கோயில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது என்றும், அதனை புனரமைக்க திட்டம் தீட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தினார். விசாகபட்டிணம் என்றதுமே, ஞாபகம் வருவது நண்பர் எழுத்தாளர் திவாகர் தான். அவரையும் தொடர்பு கொண்டோம். சந்தோஷமாக வாருங்கள் என்றழைத்தார். மிகுந்த சிரமங்களுக்கிடையில், பயண டிக்கெட்டுகளை மாற்றியமைத்து, விசாகப்பட்டிணம் சென்றடைந்தோம்.

மறுநாள், ஜெயஸ்ரீ தமது யோகா ஆசான் என்று ஒரு முதியவரை அறிமுகப்படுத்தினார். பி. வெங்கட் ரமண ராவ் என்ற அந்த பெரியவரும் அவரது அருமைப் புதல்வர் பி. வெங்கடேஸ்வருலுவும், பல பழையநூல்களை மின்னாக்கம் செய்து, பேழையாகவும் பி.டி.எஃப் கோபாகவும் மாற்றிக் கொண்டிருந்தனர். தெலுங்கு மரபுக் கட்டளை!!! (அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி. மருத்துவர் தி.வா தமிழுக்கு வழங்கிய கொடை ரகசியத்தை அன்று இரவே இருவருக்கும், வலைத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, செய்து காட்டியது தனிக் கதை!!)


சரி, தெரிந்த ஊர்- விசாகபட்டிணம். தெரியாத செய்தி? அருகே, அனந்தபூர் பூ மார்க்கெட் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து, சிறிய மண் பாதை ஒன்று பிரிந்து பத்மநாபம் எனும் சிற்றூரை நோக்கி போகிறது. வழியிலேயே வரும், கோஸ்தானி (கோ- பசுமாடு, ஸ்தனம் - மடி) கோஸ்தானி நதி என்பதால் நீர் பால் போல் சுவையாய் இருக்கும் என்றரிந்தோம். வெள்ளையர் காலத்திலேயே நீர் வளத்தைக் கண்டறிந்து அங்கிருந்தே எல்லா இடங்களுக்கும் நீறேற்றி அறை அமைத்து நீர் விநியோகம் செய்கிறார்கள்.


அந்த கோஸ்தானி அருகிலேயே, வெள்ளை உடையுடுத்தி இருக்கிறது, அழகான அமரேஸ்வரர் கோயில்.

14v.jpg

உள்ளே உள்ள சிவலிங்கத்தின் ஈர்ப்பு அபரிதமானது.

6v.jpg

திவாகர் சாரும் அவரது அருமை மகளும் சரியாக பூஜை ஆரம்பிக்கும் முன்பு வந்தனர். தெலுங்கு கல்வெட்டுகள் தூண்களிலும், மேல் விதானத்திலும் காணப்பட்டன. ஒரிய கோயில் கட்டுமான முறையில், கோஷ்டங்களில் முறையே விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் வெள்ளையுடையணிந்தமையால் மர்ம பிசாசுகள்(???) போல் காட்சியளித்தனர்.

11v.jpg10v.jpg 9v.jpg 8v.jpg 7v.jpg

வாயிலில் இரு புறமும் இரண்டு அதிசயங்கள் எங்களை வரவேற்றன. அருமையான பிக்ஷாடனர் சிலையும், லெஷ்மி நாராயணர் சிலையும். அதிலும், பிக்ஷாடன மூர்த்தியின் கீழே நிற்கும் தாருகா முனியின் உடல் மான் போலவும், முகம் மனித முகமாகவும் செதுக்கப்பட்டிருந்தது. லெக்ஷ்மிநாராயணரோ, அதீத அழகு. அதில், நாராயணரின் பாதாரவிந்தங்களை சரணடைந்த மன்னன், தான் மட்டும் அல்லாது, தன் மனைவிமார்கள், பட்டத்து யானை உட்பட சகல பரிவாரங்களோடும் நாராயணனே நமக்கே பரை தருவான் என்று வணங்கி நிற்கும் சிலை மிக அருமை.

லக்ஷ்மி நாராயணர்


பிக்ஷாடனர் மாலின் காலில் மன்னர் மற்றும் அரசகுடும்பத்தினர் 

நான் வெள்ளையுடையணிந்து, வெள்ளையுடை அணிந்து என்று அடிக்கடி சொல்வது எதைத் தெரியுமா? சுண்ணாம்பு அடித்திருப்பதை. மலிவோ அல்லது தானமாக வந்ததா, தெரியவில்லை.அப்படி அடி அன்றால் அடி! உள்ளிருக்கும் சிலைகளின் நுணுக்கமான அழகோ, வேலைப்படுகளோ, பொதிந்து போகும்படியான சுண்ணாம்பு, சுமார் 1 இன்ச் அளவிற்கு படிந்துள்ளது, கோயில் முழுதும்! வாசலில் நாம் கண்ட கிடைப்பதற்கரிய சிலைகளைக் கழுவிச் சுத்தம் செய்ததில் ஊர் மக்களே, சிலைகளைப் பற்றி விவரித்ததும் அதிசயித்துப் போனார்கள்! தெரியாமல் செய்து விட்டோம், இனி சுண்ணாம்பு அடிக்க மாட்டோம் என்று சத்தியம் வாங்கிக் கொண்டோம்.

திவாகர் அருமையாக் கோஷ்ட தேவதைகள், ‘கஷ்ட' தேவதைகளாக சிரமப் படுகிறார்கள் என்றும், அந்தந்த திசைகளைப் பார்த்து அமரும் தேவதைகளின் பார்வை நம் மேல் பட்டால் எத்தனை நன்மைகள் என்பதையும் சுந்தரத் தெலுங்கினில் விவரித்ததும், மகுடிக்கு கட்டுண்ட பாம்பு போல், மக்கள் ஆமோதித்தனர். அவரது மகளும், வாயிலில் நான் சொன்ன சிலைகளை சுத்தம் செய்வதில் தன்னார்வத்தோடு பங்கு கொண்டார்.

கோஷ்ட தேவதைகளைப் பற்றிய விளக்கம் த்ருகிறார் திவாகர்
 
166v.jpg

போய ராஜாக்கள் கட்டியதாகத் தெரிகிறது, இக்கோயில். நாக அரசர்கள் மிகவும் போற்றி வணங்கியதாகவும் இருந்துள்ளது. போயர்களின் அரசாட்சி காலம் 8ஆம் நூற்றாண்டு. மீண்டும் 1533 ஆம் ஆண்டு கிருஷ்ண தேவராயரின் மாமனார் ப்ரதாப ருத்கஜபதி வம்சத்திடமிருந்து அரசை மீட்ட போயர்கள், மிகவும் நன்கு அரசாட்சி செய்தனர். 8ஆம் நூற்றாண்டின் போது அவர்கள் அரசாண்டபோது பொம்மக்கர வம்சம் என்றே பெயர் இருந்தது. அவர்களது முதல் அரசி, சோழ வம்சத்தைச் சேர்ந்தவர்! (திருபுவன மஹாதேவி) . அவர் நந்திவர்மன் III ஆம் மன்னனின் , பிரதானியான ராஜ மல்ல தேவராயன் என்பவரின் மகள்! இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் ஓரிடத்தில் கிருபாள போயா என்ற பெயர் காணப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த போயர்கள், தங்கள் முன்னோர்கள் பெயரை கல்வெட்டாக பொறித்தார்கள் என யூகிக்கலாம்.

கற்தூண்களில் கல்வெட்டுக்கள்
வெங்கட்ரமண ராவும் அவர்தம் மைந்தர் வெங்கடேஸ்வருலுவும் எப்பாடுபட்டேனும் கோயிலைப் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றனர். திவாகரின் கூற்றுப்படி, அமராவதிக் கரையில் உள்ள அமரேஸ்வரர் கோயிலுக்கும் இந்த கோஸ்தானி கரையிலுள்ள ஈஸ்வரர் கோயிலுக்கும் சம்பந்தம் உண்டு என்ற செய்தியும் குறிப்பிடத் தக்கது. திவாகரிடமிருந்து இன்னுமொரு புதிய வரலாற்றுப் புதினத்தை எதிர் பார்க்கலாம்! கோயிலை பழைய நிலைக்கு மீட்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் வெங்கடேஸ்வருலு. 10000 லிட்டர் ஆஸிட் வரவழையுங்கள் என்றேன்! நிஜமாகத்தான். அத்தனை சுண்ணம்பையும் ஆசிட் ஊற்றி சுரண்டி எடுத்தால்தான் உள்ளே உள்ள சிலைகள், பிம்பங்கள், வேலைப்படுகள் தெரிய வரும். அது முடிந்த பின், மேற் கூறையின் கசிவுக்கான காரணத்தை அறிந்து அதை சரி செய்வோம் என்றேன்.
தெலுங்கில் ஊர் மற்றும் கோவில் பெயர்

இப்பொது மே மாதம் கடைசியில் இந்த பதிவை இடமுடிகிறது. பார்ப்போம், ஆஸிட்டோடு அழைப்பு வருகிறதா என்று!

இதை தூக்கிச் சாப்பிடக்கூடிய வகையில் அருகிலேயே இன்னொரு அருமையான விஷ்ணு க்ஷேத்திரம் உள்ளது. அங்கே ஒரு போனஸ் காட்சி காத்திருந்தது. அதை அடுத்த பதிவில் பார்ப்போமா?

பங்களிப்பாளர்கள்

REACH Chandra