தெலுங்கானா போராட்டம்-2009-10

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தெலுங்கானா போராட்டம் - 2009-10

திவாகர்

ஆந்திர ஐக்கியவாதி: நாம் ஒரு தாய் மக்கள்.. ஒரே பாஷை.. நாம் ஒன்றாகவே இருக்கவேண்டும் தம்பி, நமக்குள் பிரிவினை வேண்டாம்.. நானும் நீயும் அண்ணன் தம்பி.. தெலுகு தல்லி (B)பிட்டலு மனமு! சொல்வதைக் கேள்!.

தெலுங்கானா: ஏற்கனவே உருது இருந்தாலும் தெலுங்கு அதிகம் பேசப்படுவதால் நாம் ஒரே மொழி என்று வேண்டுமானால் ஒருவகையில் பொருந்தும்.. ஆனால் ஒரு தாய் மக்கள் என்று சொல்லாதே.. 1956 க்கு முன் உன் தாய் வேறு.. என் தாய் வேறு.. ஏதோ விதி வசத்தால், முட்டாள்தனமாக ஒன்றானோம்.. இப்போது பிரித்துக் கொள்கிறோம். போ.. போ.. இங்கிருந்து போய்விடு.. எம் நாட்டை எமக்குக் கொடு.. நீ உன் நாட்டில் போய் சௌக்கியமாக இருந்துகொள்.. யார் வேண்டாமென்பது..

ஐக்கிய ஆந்திரா: ஐயோ, கொடுமை.. இதை யாரேனும் கேட்பது கிடையாதா.. நாங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கலாமென்றுதானே அன்று மொழிவாரியாக இணைந்தோம். இந்த ஐதராபாத்தை இவ்வளவு பெரிய புகழ்பெற்ற நகரமாக ஆக்கியிருக்கிறோம்.. கிளிண்டன் வந்தது யாரால்.. ஷம்சாபாத் ஏர்போர்ட் வந்தது யாரால்.. ஹைதராபாத் நகரத்தையே ஒரு பெரிய கம்ப்யூடர் மென்பொருள் சிடி என்று உலகமெல்லாம் புகழவைத்தோமே, யாரால்.. இந்தியாவின் ‘மருந்து மாத்திரைகளின் தலைநகரம் ஹைதராபாத்’ என்று பேசவைத்தோமே.. எல்லாம் ஆந்திரப் பெருமக்களாலல்லவோ.. இப்போது திடீரென தெலுங்கானா கேட்டால் எப்படி கொடுப்பது.. முடியாது.. முடியாது.. தனித் தெலுங்கானா இல்லை.. இல்லை.. அதெல்லாம் கொடுக்கவும் முடியாது.. நான் அண்ணன், நீ தம்பி, நான் மூத்தவன் சொல்வதைக் கேள் தம்பி, பிரிவினை பேசாதே..

தெலுங்கானா: நீயெல்லாம் ஒரு அண்ணனா? இதையெல்லாம் உங்களை செய்யச் சொல்லி யார் கேட்டது.. இதோ பார்! இந்தியாவில் எந்த ஒரு பெரு நகரமும் இந்த அறுபது ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது இயற்கையான முறையால்தான். அங்கே சென்னையைப் பார்.. நீங்கள் வந்ததிலிருந்து இன்னமும் பெரிய நகரமாக மாறிவிட்டது.. பெங்களூரைப் பார்.. எப்படிப்பட்ட வளர்ச்சி.. அதைப் போலத்தான் ‘எங்கள்’ ஹைதராபாத் நகரமும்! நாங்கள் கடந்த ஐம்பது வருடங்களாக தெலுங்கானா தனியாக வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறோம்.. சென்னா ரெட்டியிலிருந்து கே சி ஆர் வரை தெலுங்கானா வுக்காக போராடிய தலைவர்கள் பட்டியல் இருக்கிறது. ஐம்பது வருட போராட்டம் என்று தெரிந்தும், இந்த ஹைதராபத்தில் தொடர்ந்து உங்கள் ஆந்திரர்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், பணம் சம்பாதிக்கத்தானே.. இது வரை எத்தனை கோடி லாபம் பார்த்துவிட்டீர்களோ.. இனியும் எங்கள் தெலுங்கானா தல்லி (தாய்) பொறுக்கமாட்டாள். நாட்டைக் கொடுத்துவிட்டு உன் ஊர்ப்பக்கம் ஓடு..

ஐக்கிய ஆந்திரா: ஹா! இது அடுக்குமா.. அநியாயமாக அன்று மெட்ராசில் சண்டை போட்டு பிரிவினை வாங்கி ஒன்றாக வாழலாமே என்று வந்தோமே.. இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து கேட்கத்தானா.. தம்பி, நான் சொல்வதைக் கேள்.. எங்களை விலக்காதே.. நானும் நீயும் ஒரே ரத்தம்.. இரண்டு பேருக்கும் பொதுவானது ஹைதராபாத். நாம் ஒன்றாகவே இருப்போம்..

தெலுங்கானா: நீ எப்படி வேஷம் போட்டாலும் சரி! நீங்கள் எல்லோருமே சினிமாக் கும்பல்தானே.. உங்கள் நடிகர்கள் படத்தைப் பார்க்க கண்ணில் ரத்தம் வடிய எங்கள் தெலுங்கானா மக்கள் எவ்வளவு அழுதிருக்கிறோம்.. எங்கள் செல்வத்தையெல்லாம் இழந்தோமே.. இனியும் உங்கள் சகாப்தம் வேண்டாம்..

ஐக்கிய ஆந்திரா: ஐய்யோ.. இப்போது அடிமடியில் கை வைத்துவிட்டாயே தம்பி!.. சினிமாக்காரர்கள் அதிகம் ஹைதராபத்தில் வசிக்கிறார்கள்.. அவர்களெல்லாம் துரத்தி அடித்தால் எங்கே என்று போவார்கள்..

சினிமாக்காரர்கள் (அழுதுகொண்டே) : வேறெங்கு போவதாம்? மறுபடியும் மெட்ராசே கதி.. எங்களை இன்னும் அங்கே அரவணைப்போர் அதிகம்.. எங்களை வேண்டாமென்றால் நாங்கள் அங்கேயே போய்விடுகிறோம்.. ரொம்ப நல்லவங்க அவங்க..

ஐக்கிய ஆந்திரா: பார்த்தாயா.. எப்படி அரண்டுபோய்விட்டார்கள் இவர்கள்.. இந்த முகத்தைப் பார்த்தாலாவது உன் முடிவை மாற்றிக் கொள் தம்பி!

தெலுங்கானா: ஐய்யோ தெலுங்கானா தல்லி! இவர்கள் நாடகத்தை சற்று நிறுத்தச் சொல்லேன்.. இவர்கள் அழுதாலும் சரி, கெஞ்சினாலும் சரி.. நாங்கள் தெலுங்கானா அடைந்தே தீருவோம்.. ஹைதராபாத் எங்கள் தலைநகரம்.. ஜெய் தெலுங்கானா..

மேலே கண்டவை எல்லாமே மிக மிக வாஸ்தவமாக தற்சமயம் ஆந்திர தேசத்தில் அடித்துக் கொண்டு பேசிக்கொள்ளப்படுபவை.. ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப் பிரதேசமாக மாறி ஏகமாக கூச்சல் போட்டுக் கொள்கிறார்கள். ஏறத்தாழ பத்து தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு இப்போதெல்லாம் வயிறு முட்ட முட்ட சாப்பாடு.. பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா.. எம் எல் ஏ வெல்லாம் கூண்டோடு ராஜினாமா.. அமைச்சர்கள் கூட வேலை செய்யமாட்டோம், என்று கோஷம்.. மாணவ மணிகளோ ஏகத்துக்கு உண்ணாவிரதம் இருந்து சாகும் கொடுமைகள் ஆங்காங்கே.. ஒரு போலிஸ் பெரிய பெண் அதிகாரி தெலுங்கானாவுக்கு ஜே என்று ராஜினாமா செய்து களத்தில் குதித்து விட்டார். இன்று ஆந்திரத்தின் எந்த மூலையில் போனாலும், இந்த தெலுங்கானா பிரிவினைதான் பேசப்படுகின்றது என்ற அளவுக்கு இது மக்கள் பிரச்சினையாக எல்லோரும் சேர்ந்து ஆக்கிவிட்டார்கள். இன்றைக்கு நடைமுறையில் பார்த்தோமானால் ஹைதராபாதிலேயே, தெலுங்கானா-ஆந்திரா என்று அரசாங்க அலுவலகத்திலும் பிரிவினை வந்துவிட்டது. ஆட்சியும் சரியாக நடத்த விடவில்லை.. தொழில் முடங்கிக் கிடக்கிறது. கல்விக் கூடங்கள் போராட்டக்களமாக மாறிப் போய்விட்டன..

சரி!.. இவர்கள் சண்டையைப் பற்றி மேலும் தொடங்கலாமா.. ஒருவேளை தெலுங்கானா வந்தால் ஆந்திரர்கள் என்ன செய்வார்கள். ஏன் ஹைதராபாத்தை அவ்வளவு விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறார்கள். கொஞ்சம் ஆதியிலிருந்துதான் பார்ப்போமே!,


WIFE - HUSBAND & DIVORCE  
தெலுங்கானா என்பது இவர்கள் சொல்வது போல ஒருதாயின் மக்கள் இல்லையா.. என்று கேட்டால் ‘இது அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்லிவிட்டு பண்டித ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற வார்த்தையை உதாரணமாக வைக்கிறார்கள். அது என்ன?

“தெலுங்கானா ஆந்திரா இணப்பு என்பது கணவன் மனைவி திருமணத்தைப் போன்றது. இதில் இன்னொரு சௌகரியம் என்னவென்றால் ஒருவேளை நாளடைவில் இருவர் மனமும் ஒத்துப்போகவில்லை என்றால் ‘விவாகரத்து’ வேண்டுமானாலும் இவர்கள் கேட்டுப்பெறலாம்”.

இது நமது நேரு மாமாவின் பொன்னான வார்த்தை. அப்படியே திருமணம், கணவன் மனைவி என்றாலும் திருமணத்தை வாழ்த்துபவர்கள் நம் இந்தியக் கலாச்சாரத்தில் எப்படி வாழ்த்துவார்கள்.. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என முழு நம்பிக்கையோடு வாழ்த்துவார்கள். ஐரோப்பிய கலாசாரம்தான் திருமண விஷயங்களில் சற்று பாதுகாப்பான எச்சரிக்கையாக இருக்கும். அதனால் அங்கு உள்ள அரசாங்கங்கள் இதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையாகவே, திருமணம் பதிவு செய்வதற்கு முன்பேயே ஒருவேளை இது பிற்காலத்தில் விவாகரத்தானால் என்னென்ன செய்யலாம் என்கிற மனோபாவத்தில் யோசித்து அதற்காக ஒரு பாதுகாப்புச் சட்டம் வைத்திருப்பார்கள். இந்த விஷயத்தில் நேரு மேற்கத்திய பாணியைப் பின்பற்றி மேலோட்டமாகவே நம்பிக்கையில்லாமல் வாழ்த்தினார் என்றுதான் சொல்லவேண்டும்.

தெலுங்கானா ஆதியிலிருந்தே ஆந்திராவுடன் சேர மறுப்பு தெரிவித்துவந்தது. காரணம் தன் தனித் தன்மையை இழக்க நேரிடுமோ என்ற பயமும், ஆந்திராவின் கொள்ளைச் செல்வமும் தங்களுக்குக்குப் பயன் தரமுடியாதவகையில் இயற்கையாகவே அமைந்துள்ளதால், இருவரும் மணமுடித்துச் சேருவதால் அப்படி ஒன்றும் பயனில்லை என்றே கருதினர்.

ஆனால் 1950 களில் தெலுங்கானாவில் நிலைமை சற்று வித்தியாசமானது. ஆந்திரத் தெலுங்கர்கள் காங்கிரஸில் செல்வாக்காகவும், கட்சிக்குத் தூண்களாகவும் செயல்பட்டு வந்த காலகட்டம். ஏற்கனவே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையில் வெற்றி பெற்ற ‘மாவீரர்’கள். மொழிவாரிமாநில ஆணையம் தெலுங்கானா பகுதியும் (சுமார் ஒன்பது மாவட்டங்கள் ஹைதராபாத் உள்பட) ஆந்திரப்பிரதேசத்தில் இணைக்கப்படவேண்டும் என்று கருதியபோது, அப்போதைய தெலுங்கானா முதல்வர் பி.ராமகிருஷ்ணராவ் சிறிய சலசலப்பு செய்ததோடு ஒரு சாதாரணமான எதிர்ப்பைக் காண்பித்து சில பல ஒப்பந்தங்கள் ஏற்கப்பட்டதால் இணைப்பை ஒப்புக் கொண்டார்.

தெலுங்கானா நினைத்திருந்தால் அப்போதே ஏனைய இந்தி பேசும் தனித்து மாநிலங்கள் போல தனக்கும் ஒரு மாநிலம் வேண்டும் என்று கேட்டிருக்கலாம். அல்லது இன்றைய விதர்பா, சட்டிஸ்கரின் தென் பகுதிகள் இவைகளை தன்னுடம் சேர்த்துக் கொண்டு மேலும் பெரிய மாநிலமாக தன்னை உருவாக்கிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் வாய்ப்பை இழந்துவிட்டது அப்போது என்றே சொல்லவேண்டும். அங்கே அப்படி நினைத்துச் செயல்படும் அளவுக்கு தலைமை அப்போது இல்லை என்பதே பெரிய குறைபாடு.

தெலுங்கானாதான் ஆதி தெலுங்கு பேசும் நாடு என்று அந்த இருப்பிடங்களைச் சேர்ந்தவர் பெருமை பேசுகின்றனர். தெலுங்கானாதான் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தெலுங்கு நாடு என்றும், ராமர் வனவாசத்தில் கோதாவரி வட கரையில் (பத்ராசலத்துக்கு மேற்கே 22 கி.மீ) பர்ணசாலை வைத்துக் கொண்டு, சீதா தேவியுடனும், தம்பி லக்குவனுடனும் சில ஆண்டுகள் தங்கி இருந்தார் என்றும் சொல்வர். ஆனால் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த பிரதேசம் முழுமையும் நிஜாம் ஆளுமையில் இருந்தததும், பத்ராசலம் கோயில் கட்டி அதனால் சிறைப்பட்ட கோபன்னா எனும் இராமதாசர் கதையில் தெரியும். நிஜாம் ஆட்சியில் ஒரு காலகட்டத்தில் தெலுங்கானாவின் எல்லாப்பகுதியையும் ‘காவு’ கொடுத்துவிட்டு, அவர்கள் சம்மதத்துடன் கோல்கொண்டா, ஹைதராபாதை மட்டும் ஆண்டுகொண்டிருந்தவர், அதையும் 1948 இல் போலிஸ் நடவடிக்கை மூலம் பறிகொடுத்துவிட்டார்கள். இந்தப்பகுதியை மீட்டு இந்திய அரசு தெலுங்கானாவின் மற்ற பகுதிகளுடன் சேர்த்து ஹைதராபாத் மாநிலம் என்று பேர் வழங்கியது. 1956 இல் குடியரசு பிரகடனப்படுத்திய நேரத்தில் தெலுங்கானாவின் முதலமைச்சராக வி.கே. மேனன் எனும் மலையாள ஐ.சி.எஸ் ஆபீசரை இந்திய அரசாங்கம் முதல் அமைச்சராக நியமித்து 1952 இல் தேர்தல் நடத்தி பி. ராமகிருஷ்ணராவை தெலுங்கானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதலமைச்சராக்கியது. ஆனால் இவையெல்லாம் ஆந்திர அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் (அந்தக் காலத்தில்) முன்பு நீடிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பொதுவாகவே ஹைதராபாதை விடுத்து ஏனைய தெலுங்கானா பகுதிகளைப் பார்த்தோமானால், தக்ஷிணப் பீடபூமியும், மலைவளங்களும் சூழ்ந்தபிரதேசமாகவே தெலுங்கானா காணப்படும். அதிக விவசாய நிலங்கள் ஆந்திரக் கடற்கரை மாநிலங்களைப் போல கிடையவே கிடையாது. மலைவளமும் கனிவளமும் இந்திய பொதுவாக பயன்படுத்தப்படுகின்ற இயற்கைச் செல்வம். இந்த வளங்களைத் தன்னுள் கொண்டுள்ளதனால் ஒரு சில பகுதிகள் (சிங்கரேணி சுரங்கப் பகுதிகள், சில பேப்பர் மில்கள்) தவிர தெலுங்கானா இந்த அறுபது ஆண்டுகளில் மிகப் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை என்பது வாஸ்தவமே. ஏனைய இடங்களில் பெறவேண்டிய அத்தனை வளர்ச்சிகளுமே ஹைதராபாத் நகரம் ஒன்றே பெற்றுவிட்டதால் ஏனைய மாவட்டத் தலைவர்கள் ஒன்றுமே செய்யமுடியாத நிலையும் அங்கு ஏற்பட்டது.

முக்கியமாக மக்களின் கல்வி அறிவு வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை. இருக்கும் கல்வி அறிவு பெற்றோரில் கூட கணிசமானோர் முதலாளிகளின் அடக்குமுறையை ஏற்கமுடியாமல் கம்யூனிச இயக்கங்களில் சேர்ந்து, வசிக்கும் இடத்தின் வளர்ச்சியை மேலும் குறைக்கவே செய்தனர். கம்யூனிசம் இன்னமும் கூட கம்மம், பத்ராசலம், பெல்லம்பள்ளி போன்ற மலைக் காடு உள்ள பகுதிகளில் ஏராளமான செல்வாக்கு பெற்றும் பாராளுமன்றத்தில் படிப்படியாக குறைந்துவரும் கம்யூனிச கட்சிகளின் எண்ணிக்கையை தக்கவைக்கும் வகையில் பிரதிநிதிகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த கம்யூனிச பிரதிநிதிகள் இந்தக் கால அரசியல்வாதிகளோடு பழகினாலும், சம்பாதிக்கத் தெரியாததாலும், (ஊழலும் கிடையாது) மக்களுக்கு ஒருவேளை சாப்பாடு கண்டிப்பாகக் கிடைக்கவேண்டும் என்ற கொள்கையில் வேலையாட்களாகவே பயிற்றுவித்து, அந்த மாபெரும் ஜனங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் வகையில் சுதந்திரத்தின்போது எப்படி இருந்தோமே அப்படியே அவர்களை வைத்திருப்பதிலும் நிகரில்லாதவர்கள். பெரிய முதலாளிகள் இந்தப் பகுதியில் முதலீடு செய்வதில் மிக மிகத் தயங்குவார்கள்.

அதே சமயத்தில் ஆந்திரா எல்லாவகையிலும் முன்னேறியது.. நல்ல விளைநிலங்கள், தண்ணீர் வளம், மின்சார உற்பத்தியில் தடையில்லாமை, கல்வி நிறுவனங்கள், மருத்துவம், சாலை வளர்ச்சி, கிராம வளர்ச்சி என எல்லா முன்னேற்றமும் கண்டாலும் ஊழலிலும் மிகவும் தொழில்முறை நேர்த்தியாக எங்கெங்கும் எவ்வெதிலும் முன்னேறிய சமுதாயமாக மாறிவிட்டார்கள்.

1956 இல் சென்னையிலிருந்து மொழிவாரி மாகாணமாகப் பிரிந்து சென்ற ஆந்திர மக்கள், தெலுங்கானாவைக் கூட்டித் தம்மோடு வைத்துக் கொண்டு, தம் தலைநகரமான ஹைதராபாத் மிக மேன்மையான நிலையில் முன்னேற மிகக் கடுமையாக உழைத்தவர்கள், தங்கள் முதலீடுகளையும் தாராளமாகவே தலைநகரில் வாரி இறைத்தார்கள்.

சரி, இதைப் பற்றி மேலும் பார்ப்போம்..


ஹைதராபாதும் தெலுங்கானாவும்


(தெலுங்கானாவில் அரசியல் நிலவரம் சம்பந்தப்பட்டவரை நிறைய விஷயங்களை சுருக்கமாகவே தர முயல்கிறேன். குறிப்பாக கம்யூனிச இயக்க வரலாறு மிக விரிவாக வளர்ச்சி பெற்ற இடமாக தெலுங்கானாவில் சுதந்திரப் போராட்ட சமயத்தில் இருந்ததும், சுதந்திரம் அடைந்த பின்னர், காங்கிரஸ் மிகப் பெரிய பலத்துடன் இந்தியாவை ஆண்டுவந்த சமயத்திலும், கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள்ள செல்வாக்கை இந்த பிராந்தியத்தில் தக்கவைத்துக் கொண்டிருப்பதைக் கூட ஏற்கனவே சுருக்கமாகத் தந்துள்ளேன். இதன் பின்னனி மிக மிக நீண்ட வரலாறு கொண்டது.. ஆனால் இதை இங்கே விவாதிக்கப்போவதில்லை).

ஹைதராபாத் நிலவரத்துக்கு வருவோம். கோல்கொண்டா நவாப் தன் அன்பு மனைவி பாக்கியாவுக்காக பரிசளித்த பாக்கியநகரம் என்று ஹைதராபாத்தைக் கட்டியதாக சொல்வர். இப்போதும் கூட இந்த சுந்தரமொழி நாட்டு தொலைக்காட்சிகள் அடிக்கடி பாக்கியநகரம் என்றே ஹைதராபாதைப் பற்றி பேசிக்கொண்டே ஞாபகமூட்டி வருகின்றன. 458 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஹைதராபாத் கடந்த சில நூற்றாண்டுகளாகவே புகழ் பெற்ற நகரம், அதுவும் இரட்டை நகரம் என்ற பெயரில் சிகந்திராபாத் நகரும் சேர்ந்து கொண்டதால் இந்த நகருக்கு சாதாரணமாகவே ஒரு விசேஷம் வருவது கூட இயற்கைதான் நன்றாக வளர்ச்சி அடைந்த நகரம் - எந்த அளவில் என்றால், நவநாகரீகத்தில் உச்சகட்டமாகவும், ஏழ்மையில் பரம தரித்திரமாகவும் இருவேறு கோணங்களில் புகழ் பெற்ற நகரமாகவும் விளங்கியது. ஒருபக்கம் ஆடம்பரமான ஹைதராபாத் இருந்தால் அதே ஹைதராபாதில்தான் உலகத்தின் மொத்த சந்துகளும், ஒருவேளை வயிற்றுக்குக் கூட உணவில்லாத ஏழைகளும் அதிக அளவில் உள்ளனர். புகழ்பெற்ற போலிஸ் நடவடிக்கை 1948 இல் அப்போதைய நிஜாம் மீது இந்திய சர்க்கார் நடத்தியபோது ஏற்பட்ட கலவரத்தில் இறந்துபோன ஏழைக் குடும்பங்கள் (மதபேதமில்லாமல்) ஏராளம். இடம் பெயர்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில். (எழுத்தாளர் அசோகமித்திரன் கூட இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுதியிருப்பதாக நினைவு) ஏறத்தாழ 1983 வரை, பழைய ஹைதராபாதில் ஒரு விசித்திரமான விதத்தில் இந்து-முஸ்லீம் கலவரம் வெடிக்கும். காரணம் எது, எதற்காக என்று யாருக்குமே தெரியாது. திடீரென ஊரடங்கு உத்தரவு என்பார்கள்.. யாரோ வருவார்கள்.. யாரையோ கத்தியால் குத்துவார்கள்.. ஏன் எதற்கு என்று புரியாமல் கேட்க நாதியில்லாமல் ஊர் அடங்கி காணப்படும். இதெல்லாம் ஓரிரு வாரங்கள்தாம்.. பிறகு நிலைமை வழக்கப்படி சர்வசாதாரணமாகவே இருக்கும். சில மாதங்கள், சமயத்தில் சில வருஷங்கள் கழித்தும் திடீரென பழைய கொடுமை ஆரம்பித்து முடியும்.. இதற்கு காரணம் கூட உள்ளூர் அரசியலும் அந்தந்தக் கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளும்தான். ஆனால் இந்த நிலை முழுவதுமாக மாற்றப்பட்டது ஒரு அரசியல்வாதியால் அல்ல.. ஒரு சினிமா நடிகரால்..

ஆம்.. மதிப்புக்குரிய தெலுங்கு நடிகர் என். டி. ராமாராவ் ஆட்சிக்குப் பொறுப்பேற்ற நாள் முதல் (1983) இந்த திடீர்க் கலவரங்கள் காணாமல் போனது. மறுபடியும் ஒரு முறை 1990 இல் எழுந்து (இது அப்போது மீண்டும் பெரிதாக எழுந்த தலைவரான முதலமைச்சர் சென்னாரெட்டியை பதவியில் இருந்து விரட்டப் பயன்படுத்தப்பட்டது)) உடனே அடங்கிப் போனாலும் அந்த சமயத்தில் என். டி. ஆர் ஆட்சியில் இல்லை என்பதும் உண்மை. 1985 இலிருந்து தலைநகரத்தின் வளர்ச்சியில் மள மளவென மாற்றங்கள் காணப்பட்டன. தெலுங்கு தேசம், ஆந்திரர்களின் தன்மானம், அவர்கள்தம் உரிமை என்ற பெயரில் என். டி. ஆரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தலைநகரான ஹைதராபாதை மிக வேகமாக பல்வேறு திட்டப்பணிகள் செய்து வளர்த்தார்கள் என்பதில் மாற்றுக்கட்சியினருக்குக் கூட அபிப்பிராய பேதம் கிடையாது. முக்கியமாக தொழில் முன்னேற்றம், பிறகு படிப்படியாக சினிமா படப்பிடிப்புத் தொழில் முன்னேற்றமும், அடுத்த கட்டமாக புறநகர்ப் பகுதியை விரிவுபடுத்தி மென்பொருள்நகரமாகவும் விரிவுபடுத்தி, மற்ற எந்த நகரத்துக்கும் கிடைக்காத வளர்ச்சியை இந்த மாநகருக்குக் கிடைக்கவைத்தார்கள். (அப்படிச் செய்தாலும் அவர்களுக்கு அங்கு ஓட்டு விழவில்லை என்பது வேறு விஷயம்). தற்சமயக் கணக்குப்படி சுமார் 30 லட்சம் ஆந்திரர்கள் அதாவது தெலுங்கானா தவிர ஏனைய மாவட்டத்துக்காரர்கள் ஒரு ஹைதராபாத் நகரத்தில் (மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதாவது மகா ஹைதராபாத்) மட்டும் வசித்தும், தொழில் அல்லது வேலை புரிந்தும் வருகிறார்கள். இவர்களின் உழைப்பு பல்வேறு வகையிலும் அந்த நகரத்துக்குக் கிடைத்துக் கொண்டும், அவர்களால் நகரமும், அந்த நகரத்தால் அவர்களும் ஒன்றுக்கொன்று பிரியமுடியாத அளவில் சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டனர் என்றே கூறலாம்.

ஹைதராபாத் பற்றி எழுதும்போது முக்கியமான விஷயம் சொல்லவேண்டும். இங்குள்ள ஹைதராபாத் வாசிகளுக்கு ஆரம்பத்தில் தெலுங்கு தெரியாது.. எல்லோருமே உருது அல்லது இந்திதான் பேசுவார்கள். இது 1990 வரை இருந்தது. இப்போது அப்படி அல்ல.. 90 சதவீதம் பேர் தெலுங்கு பேசுகிறார்கள். உபயம்: குடியேறிய ஆந்திரமக்களும், தொல்லைப்படுத்தும் தொலைக்காட்சித் தொடர்களும்தான். (நம் அஷாருத்தீனுக்கும் சானியா மிர்சாவுக்கும் இப்போதும் தெலுங்கு நஹி நஹிதான்)

சரி, மறுபடியும் தெலுங்கானா பிரச்னைக்கு வருவோம். நம் தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு ஒரு குணம். அவர்களுக்குள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இது ஆதிநாளில் இருந்து வந்த ஒரு விளையாட்டுதான். ஆனால் அவர்கள் தங்கள் டெல்லித் தலைவருக்குக் கட்டுப்பட்டவர் போல வெளியே காட்டிக் கொண்டு அதன்படியும் நடந்துவருவார்கள்.பிரும்மானந்தரெட்டி, சஞ்சீவரெட்டி போன்ற பெரிய ரெட்டிகள் ஆண்டுவந்த காலத்தில் சற்று முடங்கிக் கிடந்த தெலுங்கானா போராட்டம் மறுபடியும் 1969 இல் சென்னாரெட்டியால் புதியரத்தம் செலுத்தப்பட்டு, புத்துயிர் ஊட்டி மறுபடியும் மிகப் பெரிதாக மாணவர்கள் மூலம் எழுப்பப்பட்டது. காங்கிரஸிலிருந்து பிரிந்த சென்னா ரெட்டியார், தெலுங்கான பிரஜா சமிதி என்ற பெயரில் இப்போதுள்ள டி.ஆர்.எஸ் (தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி) போல ஒரு கட்சி ஆரம்பித்தார். மாணவர்கள் மிகப் பெரிய ஆதரவை அளித்தார்கள். பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1965 இல் மாணவர்கள் தலைமையும், அண்ணாதுரையின் தலைமையும் எப்படி ஒன்று சேர்ந்து நடத்தி வெற்றி கண்டார்களோ, அதே விதத்தில் தெலுங்கானா மாணவர்களும் சென்னாரெட்டியும் ஒன்று சேர்ந்து வெற்றி காண விழைந்தார்கள். தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புக்காக மாணவர் பலி அல்லது ‘தியாகம்’ போலவே, தெலுங்கானா போராட்டத்திலும் சுமார் 360 மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் கண்ட வெற்றி இங்கு தெலுங்கானாவில் கிடைக்கவில்லை. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி ஒரு புதிய முயற்சி மூலமாக தலைவரான சென்னாரெட்டியையே காங்கிரஸுக்கு தங்கள் உறுப்பினர் சகிதம் வந்துவிடுமாறும், அவருக்கே முதலமைச்சர் பதவி என்றும் வலைவிரித்தார். வலையில் சரியாக மாட்டிய அந்த தெலுங்கானா கட்சி உடைந்து சென்னாரெட்டி முதல்வராகி, தான் முதல்வரானதால் தெலுங்கானாவே பயன்பட்டு விட்டது என்றும் நாடெங்கும் அறிவித்தார். இதனால் இன்னொரு குழப்பம், 1972 இல் புதுமாதிரியாக மற்ற பகுதிகளில் இருக்கும் ஆந்திரர்கள் ‘ஜெய் ஆந்திரா’ இயக்கம் மறுபடியும் அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் ஆரம்பித்தார்கள். இது முதலில் மிகப் பெரிய இயக்கம் போல ஆரம்பித்தாலும் நாளடைவில் ஸ்ருதி மங்கித் தேய்ந்து போய்விட்டது. (இந்த இயக்கம் மூலம் வெளியே தெரிய ஆரம்பித்தவர்தான் இப்போதை வெங்கையாநாயுடு)

சரி, இப்போது உள்ள இயக்கம் என்ன.. ஏன் வந்தது.. இத்தனை இடைவெளி விட்டு வரவேண்டிய அவசியம் என்ன.. சரி, இப்போதாவது தெலுங்கானா கிடைத்துவிடுமா..

அதையும் ஒரு கை பார்த்து விடுவோமே..


பழைய புட்டியில் இருந்து விடுவிக்கப்பட்ட பூதம்


சுமார் ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே மத்திய அரசால் சரி செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சினை இந்த தெலுங்கானா பிரச்னை. இந்த பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாமல் அவ்வப்போது மிகப் பூதாகரமாக வெளிவந்து பல இளம் மாணவ உயிர்களைக் கொள்ளை கொண்டு போவதுதான் மனதுக்கு சிரமம் விளைவிக்கிறது. இந்த தெலுங்கானா பிரச்சினையால் சுமார் 400 மாணவர்கள் தியாகம் செய்துள்ளதாக தெலுங்கானா ஆதரவாளர்கள் மிகப் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், மாணவர்களை ஏன் அநியாயமாக காவு கொடுக்கவேண்டும் என்று அவர்களை அதுவும் அந்த அரசியல்வாதிகளை கேட்போர் யாரும் இல்லை. பொதுவாகவே இளம் பிஞ்சுகளின் உயிர்கள் பலி வாங்கப்படும்போது மனம் கவலைப்படுமே.. இந்தக் கவலை இங்குள்ள அரசியல்வாதிகள் யாரிடத்திலும் இல்லை. இந்த முறை மறுபடி பூதாகாரமாக வெடித்த இந்தப் போராட்டத்திலும் ஒரு சில இளம்பிஞ்சுகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டன. பல இடங்களில் மாணவர்களே முன்னின்று உண்ணாவிரதம் இருப்பதும் அவைகளை ஆதரிப்பதாக அரசியல் தலைவர்கள் செய்தி சேனல்களுக்கு போஸ் கொடுத்துவந்ததும், பேருக்காக இந்த அரசியல் தலைவர்களும் உண்ணாவிரதம் இருந்து (சலைன் வாடர் ஏற்றிக்கொண்டே) பயமுறுத்தியதும் அனைவரும் புரிந்துகொண்டுதான் இருந்தனர். இந்த அரசியல்வாதிகளின் பூடக உண்ணாவிரதத்தின் மகிமை எல்லோருக்குமே நன்றாக தெளிவாக விளங்கியதால் இவைகளை அவ்வளவாக ஆந்திரமக்கள் ஆதரிக்கவில்லை என்றே சொல்லலாம். தெலுங்கில் நிராஹார தீட்சை (உண்ணாநோன்பு) என சொல்லப்படுவது இவர்களால் ‘நீராஹாரதீட்சை’ (தண்ணீர் அருந்தும் விரதம், அதாவது மருத்துவர்களால் சலைன் வாட்டர் ஏற்றப்பட்டது) ஆகிவிட்டது

ஆனால் மத்திய அரசு இந்த முறை வலியவந்து வலையில் மாட்டிக் கொண்டதாகவே இங்குள்ள அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். கடந்த டிசம்பர் 9ஆந்தேதி வரை சாதாரணமாக இருந்த இந்தப் போராட்டத்தை நட்டநடு நிசியில் வெளியிட்ட சிதம்பரத்தின் ‘தெலுங்கானா அமைப்பதற்கான ஏற்பாடுகள் துவங்கப்படும்’ என்ற அறிக்கை இங்குள்ள நிலவரத்தை ஒரேயடியாக தலைகீழ் நிலைக்குத் தள்ளிவிட்டது.

அந்த அறிக்கை சிதம்பரத்தின் (பாவம் அவர்!) அறிக்கையாகவே இங்குள்ள (ஏனைய ஆந்திரப்பகுதிகளில்) பாவித்து மிகப் பெரிய அளவில் போராட்டம் செய்தனர். ஐக்கிய ஆந்திரத்தைப் பிரிக்க மாபெரும் சதி நடக்கிறது என்றும், ஒரே மொழி பேசும் மக்களைப் பிரிப்பது மகா பாபம்.. என்றும் ஏனையபகுதிகளில் விவரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு காட்டுத் தீ போல பரவியது. சென்ற 1972 இல் தனி ஆந்திரா கேட்ட இவர்கள் அந்தக் கோரிக்கைக்கு முற்றும் மாறான ஐக்கிய ஆந்திரம்தான் தேவை என்று போராட்டத்தில் மாணவர் சகிதம் இறங்கிவிட்டனர். அத்தனை மக்கள் பிரதிநிதிகளும் கட்சி பேதமில்லாமல் ராஜினாமா செய்ய, மத்திய அரசாங்கத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள். சுமார் 25 பாராளுமன்ற எம்.பி.க்கள் கொண்ட பகுதியிலிருந்து வந்த எச்சரிக்கை மத்திய அரசுக்குப் பெரும் தலைவலியாகப் போகவும், அது ஏற்கனவே தெரிவித்த தெலுங்கானா ஏற்பாடுகள் துவங்கப்படும் என்பதற்கு மேலும் விளக்கமாக, இது பற்றி பரவலான கருத்துகள் சேகரித்தபின் முடிவு செய்யப்படும் என்று குழப்பமாக (மறுபடியும் சிதம்பரம்) தெரிவிக்கவே, ஆந்திரா ஓய்ந்து மறுபடியும் தெலுங்கானா ரணகளம் ஆகியது.

மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி.. மத்திய அரசுக்கு இப்போது எந்தப் பக்கம் பேசினாலும் ஆபத்தே.. ஆனால் இத்தனை கஷ்டத்திலும் ஒரு மகிழ்ச்சி அவர்களுக்கு என்னவென்றால் மாநிலத்தின் பெரிய கட்சியான தெலுகுதேசத்தை உடைக்கும் நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். காங்கிரஸ் தெலுங்கானாவில் வந்தாலும், ஆந்திராவில் வந்தாலும் அவர்களுக்கு லாபமே. ஆனால் தெலுகுதேசத்தாருக்கு அப்படி இல்லை.. தெலுங்கானா தெலுகுதேசக் கட்சிக்காரர்கள் தனியே போவதற்கு தயாராகிவிட்டார்கள். இது அசகாயசூரரான நாயுடுவுக்கு பெரும் சோதனைதான். என்ன செய்வார் என்று பார்க்கவேண்டும். இன்றைய தேதிவரையில் அக்கட்சியில் இது பற்றி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார். இதுதான் அவரை இதுவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் எத்தனைநாள் நீடிக்கும் என அவருக்கே தெரியவில்லையோ என்னவோ..

சரி, இந்தத் தெலுங்கானா பிரச்னைக்கு என்னதான் வழி.. பிரிந்து போவதா.. அல்லது ஒன்றாய் இருந்துகொண்டே சண்டை போட்டுக்கொண்டு ரத்தம் வடிப்பதா.. இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக் கட்டத்தில் இருக்கின்றது என்றே அரசியல் நிபுணர்கள் கூற்று. ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டதாகவே கருதுகிறார்கள்.

சரி, பிரிந்தால் என்னவாகும்: உண்மையாகச் சொன்னால் ஒன்றும் ஆகாது.. ஹைதராபாத் விஷயத்தில் மத்திய அரசு ஆட்சியின் பொறுப்பில் பொதுவாக வைத்துவிட்டும், மற்ற தெலுங்கானா மாவட்டங்களைப் பிரித்துக் கொடுத்தால், ஆந்திரருக்கு எந்த விதக் கவலையுல் இல்லை.. ஐக்கியம் பேசுவோர் அனைவரும் உடனே ஒப்புக் கொள்ள வழி இருக்கிறது. ஆனால் ஹைதராபாத் இல்லாத தெலுங்கானா, காரமில்லாத ஊறுகாய், இனிப்பில்லாத திருப்பதி லட்டு, பருப்பே இல்லாத சாம்பார். இவர்கள் அனைவரின் கண்ணும் அந்த மாபெரும் நகரத்தின் மேல்தான். செல்வமும், நாகரீகமும் கொழிக்கும் ஹைதராபாதைப் பிரித்து தெலுங்கானா கொடுத்தால் தெலுங்கானா மக்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.

ஹைதராபாதை ஒரு பொதுவான நிலையில் வைப்பதிலும் உள்கஷ்டங்கள் நிறைய இருக்கின்றன என்பது மத்திய உளவுத்துறைக்குத் தெரியும். ஏற்கனவே போலிஸ் நடவடிக்கை மூலம்தான் பணியவைக்கப்பட்ட ஒரு நகரத்தைக் கடந்தகால நிலைக்கு எடுத்துச் செல்வதில் மத்திய அரசுக்கு விருப்பம் இருக்காது.

ஒருவேளை ஹைதராபாதையும் சேர்த்து தெலுங்கானாவை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால் ஏறத்தாழ 30 லட்சம் ஆந்திரர்களும், அவர்கள் உழைப்பும் செல்வமும் வீணாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்துவிட்டோமே என்ற ஒரு மாபெரும் பயம், ஆந்திராவை ஆக்கிரமிக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த ஒரு நிலை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. ஆனால் இப்போது இப்படித்தான். இனியும் இப்படித்தான் இருக்குமே தவிர ஹைதராபாதிலிருந்து விலகிவருவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல! நிலத்தின் மீது, தொழில்களின் மீது என ஏராளமான ஆந்திர முதலீடுகள் ஹைதராபாதில் சிக்கிக் கொண்டுள்ளன. அவ்வளவு சீக்கிரம் மீளவும் முடியாது.

வேறு என்னதான் வழி! மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? ஒருவேளை சென்னாரெட்டியை மடக்கிச் செய்தது போல கேசிஆருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்து சமாளிக்கமுடியுமா என்றால் ஏராளமான விழிப்புணர்வுக்கு மத்தியில் உள்ள தெலுங்கானா மக்கள் கேசிஆருக்கு எதிராகக் கிளம்பி சுனாமி போல ஆனால் என்ன செய்வது என்ற பயம் இப்போது உண்டு.

மத்திய அரசுக்கு இன்னொரு சிக்கலும் உண்டு. இப்போதே மற்ற மாநிலங்களும் தங்களுக்குள் தனித்தனிப் பிரிவினைக் கோரி அவர்களை நெருக்கவாரம்பித்துள்ளனர். தெலுங்கானா கொடுத்துவிட்டால் அவர்களுக்கும் இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஒரே மொழிப் பிரதேசத்தையே இரண்டாகப் பிரித்தால், விதர்பா மராத்தி பேசாது இந்தி பேசும் மாநிலம், அதை உடனடியாகச் செய்யுங்கள் என்று போர்க்கொடி எழும்.

அட, தெலுங்கானாவுக்குத் தேவை சுயவளர்ச்சிதானே.. அது செய்துகொடுத்தால் போகிறது.. என்று யாரும் பேசவும் இனி வாய்ப்பில்லை. காலம் கடந்துவிட்ட வாய்ப்பு அது.

ஒரு விவரம் தெரிந்த ஆந்திர அறிஞர் சொன்னார்.. இந்தப் பிரச்சினையை ஏன் தீர்க்கமுயலவேண்டும்.. பிரச்சினை அப்படியே இருக்கட்டும், அதுவே ஆறி அணைந்து சாம்பலாகிவிட்டு, மறுபடியும் சிறிது காலம் கழித்து யாராவது புதிய தலைவர் மூலம் சாம்பல் ஊதப்பட்டு பிரச்சினை பெரிதாகி, மறுபடியும் சிலபல ‘தியாகங்கள்’ மூலம் ஆற்றப்பட்டு.. பிறகு.. மறுபடியும் பழைய குருடி, கதவைத் திறடி கதை போல இப்படியே இருக்கவேண்டியதுதான்.. காலம் செல்லச் செல்லப் பழகிவிடும் என்கிறார். காலம் ஒரு பெரிய மாயாவி என்றும் அந்த அனுபவசாலி ஆறுதல் சொல்கிறார்.

இது ஒருவகை பழைய தந்திரமே தவிர, பிரச்சினையை முடித்து சுமுகநிலை காணவேண்டும் என்ற விருப்பம் யாரிடத்திலும் இல்லையோ என்ற ஐயத்தைதான் எழுப்பும்.

அண்ணன் தம்பி உறவோ, அல்லது கணவன் மனைவி தகறாரோ, இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே சந்தேகங்களும், அடிதடியும் வெகு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதையும் அப்படியும் கட்டாயப்படுத்தி ஒரே குடும்பமாக வைத்தால் இந்த அடிதடியுடன் எத்தனை நாட்கள் ஒன்றாக காலம் கழிப்பார்கள் என்ற கவலையும் வருகிறது.

இந்த பிப்ரவரி மாத முதல் வாரத்தில் இப்போதுதான் இந்தப் பிரச்னையே வெளியே தெரிய வருவது போல மத்திய அரசு ஒரு ‘கமிஷன்’ முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் தெலுங்கு மொழி பேசுவோர் இல்லாத ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. ஆனால் இந்த கமிட்டிக்கு தற்சமயம் ஆந்திர மாநிலத்திலோ, தெலுங்கானாவிலோ அப்படி ஒன்றும் வரவேற்பில்லை. காலம் தாழ்த்தும் நோக்கமோ என்ற சந்தேகம் கூட வெடிக்க ஆரம்பித்துள்ளது.

‘யதா ராஜா ததா ப்ரஜா என்ற காலம் போய் யதா ப்ரஜா ததா ராஜா’ என்ற ஓட்டு வாங்கிப் பிழைக்கும் கட்டத்தில் இருக்கும் மத்திய அரசாங்கம் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்ற கவலையும் கூடவே சேர்ந்து வருகிறது. இதுதான் இன்றைய சாதாரண ஆந்திர-தெலுங்கானா பிரஜையின் கவலையும் கூட..

பங்களிப்பாளர்கள்

Dhivakar மற்றும் Vinodh

இப்பக்கம் கடைசியாக 7 ஜூன் 2010, 17:31 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,680 முறைகள் அணுகப்பட்டது.