தேசம் என்றால் வெறும் மண்ணல்ல, தேசமென்றால் மனிதம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

தெலுங்கு இலக்கிய உலகின் பாரதி: குருஜாடா அப்பாராவ்

திவாகர்பகுதி 1

சென்ற ஞாயிறன்று தெலுங்கு இலக்கிய உலகின் பாரதியான குருஜாடா வெங்கட அப்பாராவ் அவர்களின் 150 ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிறுகதை தொகுப்பு ஒன்று குறித்து பேசுவதற்காக அடியேனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். நல்ல கூட்டம். ஒருநாள் முன்பே கொஞ்சம் ஏற்பாடு செய்துகொண்டும், எதைப் பேசவேண்டும் என திட்டமிட்டுக் கொண்டு சென்றதால் நம் பேச்சுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தெலுங்கு தினப் பத்திரிகைகளிலெல்லாம் போட்டோவுடன் செய்தி போட்டு தூள் கிளப்பி விட்டார்கள். இந்தச் செய்தியுடன் என் தற்பெருமையையும் நிறுத்திக் கொண்டு ‘மரபு விக்கிக்காக' உருப்படியாக ஒரு நல்ல கட்டுரை தர முயற்சிக்கிறேன்.

Guru.jpg

அத்துடன் அவரது ஒரு சிறுகதையையும் மொழி பெயர்த்து வெளியிடலாம் என நினைக்கிறேன். சிறுகதையில் தமிழ்நாட்டினரின் பங்கும் உண்டு என்பதாலும், பொதுவாக நல்ல சிந்தனையாளர் ஒருவரின் இலக்கியத்தை தமிழர்களும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும் இக்கட்டுரையை எழுதிட முன் வந்துள்ளேன். கட்டுரையோடு இயைந்த கருத்துகளை தாராளமாக இங்கே பின்னூட்டம் இடலாம். கட்டுரையைக் கடுமையாக விமரிசிப்பவர் யாரேனும் இருந்தால் அவர்கள் தனியாக ஒரு இழையில் தாராளமாகத் தொடரலாம். தேவைப்படும்போது நானும் அங்கே உங்களுடன் சேர்ந்துகொள்கிறேன். முதலில் குருஜாடா பற்றி சில விவரங்கள்.குருஜாடா அப்பாராவ் 1862ஆம் வருடம் இங்குள்ள (ஆந்திராவின் வடகோடி) விஜயநகரத்தில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்தப் பகுதியில் எல்லாம் ஊருக்கு ஊர் ராஜாக்கள் என்றிருந்த காலம் அது. விஜயநகர ராஜாவான பசுபாடி அனந்த கஜபதி ராஜு (இதே பெயரில் இவரது பேரன் இன்று இருக்கிறார்) இவரைப் பிரத்தியேகமாகக் கவனித்து நன்றாகப் படிக்க வைத்தார். F.A. வும் B.A வும் முடித்த இவரை ராஜா தன் பெயரில் உள்ள பள்ளியும் கல்லூரியும் சேர்ந்த கல்விக்கூடத்தில் ஆசிரியராக வேலைக்கு அமர்த்திக் கொண்டதோடு தனது தனிப்பட்ட செயலாளராகவும் பொறுப்பு கொடுத்து ஒரு நல்ல அந்தஸ்த்தினைக் கொடுத்தார். (ராஜா காலமானதும் ரானியின் தனிப்பட்ட செயலாளராக்வும் பொறுப்பேற்றுக் கொண்டார்) குருஜாடா.தனது 30 ஆவது வயதில் அதாவது 1892 ஆம் ஆண்டில் ‘கன்யாசுல்கம்’ என்ற நீண்ட நாடகத்தை எழுதி அதை மேடையேற்றியவர். தெலுங்கு இலக்கிய உலகில் முதல் நாடக இலக்கியத்தைப் படைத்தவர் இவர்தான். கன்யாசுல்கம் என்றால் ’காசு பெற்று கன்னியைக் கொடுப்பது’ என்று பொருள். பெண்கள் விடுதலை என்பதெல்லாம் கனவு என்கிற காலத்தில் எழுதப்பட்ட ஒரு புரட்சிக் கருத்துகள் கொண்ட நாடகம் இது பற்றி பின்னர் எழுதுகிறேன். இந்த நாடகம், சாதாரண ஆசிரியாராக எம்.ஆர் பள்ளியில் பணி செய்து கொண்டிருந்த குருஜாடா அப்பாராவ் அவர்களை எங்கேயோ உயரத்தில் தூக்கி வைத்து விட்டது.


இந்த நாடகத்தைத் தொடர்ந்து பல்வேறு கவிதைகள் கதைகள் என எழுதினார் குருஜாடா.


’தேசமண்டே மட்டி காதோயி, தேசமண்டே மனுஷோயி’ - என்ற இவரது கவிதை வரிகள் காலா காலத்துக்கும் தெலுங்கு மக்கள் சொல்லக்கூடிய மந்திரச் சொல்லாக மாறியது.

’தேசம் என்பது வெறும் மண்ணென நினைத்தாயோ,
தேசமென்றால் வெறும் மண்ணல்லடா, அது மனிதம்’


என்ற உன்னதமான வார்த்தையைக் கொடுத்தவர். இவரது நாடகமாகட்டும், கவிதையோ அல்லது கதைகளோ ஆகட்டும் எல்லாமே பேச்சுத் தெலுங்கில் எல்லோருக்கும் புரியக் கூடிய எளிய வகையில் எழுதினார் என்பது முக்கியமான விஷயமாகும். அதுநாள் வரை தெலுங்குப் புத்தகமோ, இலக்கிய எழுத்துக்களோ சாஹித்ய தெலுங்கில் எழுதுவது என்பது கற்றறிந்த தெலுங்கு சான்றோர்களின் பணியாகவே கிருந்து வந்தது. அதற்குக் காரணமும் உண்டு.


பகுதி 2

தெலுங்கு மொழியின் ஆதிகவியாக நன்னயா மகாபாரதத்தை தெலுங்கில் பாடியதுதான் தெலுங்கு மொழிக்காக எழுத்துபூர்வ ஆதாரமாக முதல் நூலாகப் பெயரெடுத்துள்ளது. 1052 ஆம் ஆண்டில் வேங்கிராஜபுரத்தில் ராஜராஜ நரேந்திரன் (சோழ சக்கரவர்த்தியான ராஜேந்திர சோழனின் மருமகன், அம்மங்காதேவியின் கணவன்) அரசவையில் இந்த தெலுங்கு நூல் ஆந்திர மாஹாபாரதம் எனும் பெயரால் நன்னய்யாவினால் அரங்கேற்றப்பட்டது.


ராஜராஜநரேந்திரனையும் ஒரு பாட்டின் மூலம் சரித்திரத்தில் நிலையாக இடம் பெற வைத்தவர் நன்னயா. அதே போல டிக்கனா, யர்ரப்ரகடா, இந்த இருவரும் நன்னயா எழுதி ஆரம்பித்த மகாபர்ரத நூலை முழுமையாக தெலுங்கு மொழியில் மாற்றம் செய்தனர். ஏறக்குறைய எல்லா தெலுங்குப் புலவர்களுமே புராண இதிகாசக் கதைகளை தெலுங்கில் எழுதினர். 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுமதிசதகம் (சுமதிநூறு) மட்டும் நம் நாலடியார் போல நீதி சாஸ்திரத்தைப் போதிப்பது. இந்த நூறு பாடலை எழுதியவர் பெத்தன்னா பூபாலுடு என்பவர். ஸ்ரீநாத எனும் பெரும் புலவர் சரித்திரம் மற்றும் புராணங்களைக் கவிதையாகப் படைத்தார். இவர் ஒருவரே தெலுங்கில் கவிச்சக்கரவர்த்தி எனும் பெயர் பெற்றவர். பல்நாட்டி சரித்ரா எனும் சரித்திர நிகழ்வு கூட இவரால் எழுதப்பட்டது என்பர் சிலர். பின்னர் வேமனா, அன்னமய்யா போன்றோர் தெலுங்கு மொழியில் அதிகமான அளவில் கவிதைகள் இயற்றியவர்களாவர்.


ஆனால் தெலுங்கு மொழி மிகப் பிரபலமாக இருந்த காலம் என்பது விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் பேரரசராக வீற்றிருந்த காலத்தில்தான். அஷ்டதிக்கஜங்கள் என்று சொல்லப்பட்ட எட்டு மகாகவிகள் (அல்லசானி பெத்தன்னா தலைமைப் புலவர், தெனாலி ராமனும் இவர்களில் ஒருவர்தான்) தெலுங்கில் மிக உயர்நிலையில் வைத்திருந்தனர். சிருங்காரமும், ஆட்சி இயலும், பக்தியும், புராணங்களும் அதிகம் தெலுங்கில் எழுதப்பட்ட காலமும் இதுதான்/ ஸ்ரீகிருஷ்ணதேவராயர், தான் துளு மொழிக்காரராய் பிறந்தாலும், தன் ஆட்சி மொழி கன்னடமாகவே இருந்தாலும் ‘ஆமுக்த மால்யதா’ எனும் தமிழுக்கான கவிதை மாலையை தானே இயற்றி அரங்கேற்றினார். உண்மையான திராவிடனாக ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் இருந்தது என்பது இந்த ஒன்றே சாட்சியாகும். கி.பி. 1500 - 1550 ஆண்டுகள் தெலுங்கு மொழியின் பொற்காலம் கூட. குறிப்பாக தூர்ஜதி எழுதிய ஸ்ரீகாளஹஸ்தி சதகம் என்பது நம் திருவாசகத்துக்கிணையாகப் போற்றப்படும் பாடல்கள் ஆகும்.


பின்னர் 1650 இல் எழுதப்பட்ட ராமதாச கீர்த்தனைகளாகட்டும், தியாகையா எழுதிய ராமநாம கீர்த்தனைகளாகட்டும் போத்தனா எனும் புலவர் நாவுக்கு மிக இனிமையாகவும் பொருள் செறிந்து எழுதிய தெலுங்கு-பாகவதம் ஆகட்டும், தெலுங்குக் கவிதை என்பது சாதாரண மக்கள்: படிக்கும் அளவுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. மிகவும் கற்றறிந்த சான்றோர் துணை கொண்டே எந்தக் கவிதையும் படிக்கவேண்டிய நிலை. திராவிட மொழிக் குடும்பத்தில் இருந்துதான் தெலுங்கு வந்தது என்றாலும் வடமொழி சற்று அளவுக்கதிகமா தெலுங்குக் கவியாக்கத்தில் கலந்து போனது ஒருவிதத்தில் பாலோடு தேன் சேர்ந்ததாக இருந்தாலும், இந்த இனிக்கும் மொழியை சான்றோர்களால் மட்டுமே மிகவும் ரசித்து சுவைக்கவேண்டியதாயிற்று என்பது உண்மை. அத்துடன் இவையனைத்தும் வடமொழிக் கவிதைக்கான இலக்கண மரபு மாறாமல் எழுதப்பட்டதையும் நோக்கவேண்டும்.


தெலுங்கு மொழி பேசும் நாட்டில் ஆதிகாலத்திலிருந்தே படித்தவர் என்போர் உயர்குலம் என்பதாக சொல்லப்பட்ட நால்வகை வர்ணத்திலேதான் அதிகம் இருந்தது. தெலுங்கு நாடு நல்ல ஆறுகளாலும், மலைவளத்தாலும் சூழப்பட்ட நாடு. வனங்களும், சுரங்கங்களும் அதே சமயத்தில் பாறைகளும் இயற்கையாகவே அதிகம் அமையப்பெற்ற நாடு இது. ஆகையினால் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்நாளும் வேலையும் வேலைக்கேற்ற ஊதியமும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் அதிகம் இருந்ததால் ஏட்டுப்படிப்பறிவு என்பது தேவையான ஒன்று என்பதை அவர்கள் அறியவில்லை என்றே சொல்லலாம். உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் ஆதிக்க வர்க்கத்தினர் பிடியில் இருந்தனர் என இக்கால வழக்கச் சொல்படி ஏற்றுக் கொண்டாலும் இதனால் இவர்கள் துன்பங்களை அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மை. இத்தகைய நிலை ஆங்கிலேயர் ஆட்சியைக் கையில் எடுக்கும் வரை நீடித்தது. ஆங்கிலேயர் காலம் முதற்கொண்டுதான் வேலைகளுக்கு வரைமுறை, அடக்குமுறை, அதிக வரி வசூல், சாதிகளுக்கிடையே ஏற்றதாழ்வுகளைப் பயன்படுத்தி அதனால் பயன் அடைவது போன்றவை அதிக அளவில் வெளியே தெரியவந்தன. இந்த ஏற்றதாழ்வுகளும் அதனால் ஏற்படும் துன்பங்களும் ஒரு சிலரை உண்மையாகவே காயப்படுத்தியதால் எவரெவர் துன்பத்துக்கு ஆளானவரோ அவர்களை ஆறுதல்படுத்தும் விதமாக உழைக்க ஆரம்பித்தனர்.


இப்படித்தான் குருஜாடா அப்பாராவின் சமூகப் பணியும் தொடர்ந்தது. இவரது நற்பணிகள் அறியப்பட்டு பிற்காலத்தில் மிகப் பெரிய சமூகசீர்திருத்தவாதி என்றும் அழைக்கப்பட்டார். சமூகத்தில் இழைக்கப்படும் அநியாயங்களை தனக்கே உரிய பாணியில் எகத்தாளமாகவும், சாஸ்திரத்தைப் பயன்படுத்தி இழைக்கப்படும் அவமானங்களையும், பெண்களுக்கான இழிநிலையையும் எதிர்த்து எழுத ஆரம்பித்தார். இதற்கு அவர் வெளியே உள்ள ஆதிக்க சாதியைச் சாடவில்லை. முதலில் தன் சாதியிலிருந்தே தொடங்கினார்.

பதிவு 3

1892 இல் குருஜாடா ‘கன்யாசுல்கம்’ எனும் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். இந்த நாடகம் ஏறத்தாழ 8 மணிநேர அளவுக்கான நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடகம் வி

Kd1.jpg
                                                                                                                            தாசி மதுரவாணியின் நாட்டிய பயிற்சி

ஜயநகர ராஜாவின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்தைப் பற்றி அறிந்தோமானால், நம்மால் அக்கால கட்டத்தில் நமது சமூகங்கள் எப்படியிருந்தன என்பது நன்றாகத் தெரியும். சமூகக் கட்டமைப்பு, சாத்திரங்களைக் காட்டி பயமுறுத்துதல், நிலச்சுவான் தார்களின் காமக் கிழத்திகளும், காம விளையாட்டுகளும், தீண்டாமையும் எப்படியெல்லாம் நம் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருந்தன என்பதும் தெரியும். அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குதல், ஒருவர் மீதான பகைமையை தம் சுயநலத்துக்காகத் தூண்டுதல், உழைப்பாளிகளின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துக் கொள்வது, தீண்டாமை போன்ற ச்மூகத்தின் அத்தனை கெடுதல்களையும் குருஜாடா தைரியமாக எழுதி தவறுகளை வெட்ட வெளிச்சமாகக் காண்பித்தார்.

Kd2.jpg
                                                                                  கிரியீசனிமிருந்து மதுரவாணியைப் பிரிக்க அவளைப் பணத்தால் மயக்கும் கர்ணம்


குருஜாடாவுக்கு பெண் விடுதலை, விதவா விவாகம், பெண்கள் கல்வி கற்று முன்னேறுதல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதே போல தாசிகளின் வாழ்க்கையும் மேம்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் இருந்தது. இவை இவர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கவேண்டும். இந்த வேட்கை அவர் எழுதிய கன்யாசுல்கம் நாடகத்தில் மட்டுமல்ல, பல சிறுகதைகளிலும், கவிதைகளிலும் தென்பட்டது. 


கன்யாசுல்கம் நாடகம் சமூக அலங்கோலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு கோர்வையான உரையாடல் தொகுப்பு என்றுதான் சொல்லவேண்டும். அக்ரஹாரத்தில் அன்றைய காலத்திலிருந்த அவலங்களை வெளிச்சமாக்கிய கதைத் தொகுப்புதான் இது. அக்னிஹோத்ரவதானிலு எனும் பிராம்மணர் குடும்பத்தை மையமாக வைத்து சித்தரித்தாலும், ஊரில் உள்ள பிற சமுதாயத் தவறுகளையும், சாஸ்திரங்களைக் காட்டி தன் சொந்தங்களைத் தாமே அழித்துக் கொள்வதையும் விவரமாகக் காட்டும் நாடகம்.

Kd3.jpg
                              கர்ணத்தின் மனைவிகள் மதுரவாணிக்கு வீட்டுக்கு கர்ணத்தைப் பிடிக்கவரும்போது கர்ணமும் கிரியீசமும் கட்டிலுக்கடியில் ஒளிந்த கோலம்

அக்னிஹோத்ரம் தன் இளைய பெண் சுப்பம்மாவை காசு பெற்றுக்கொண்டு ஒரு கிழவருக்குக் கலியாணம் செய்து கொடுக்க முன்வருகிறார். அந்த சிறு பெண் இன்னமும் பூப்படையாத சிறு பெண். ஏற்கனவே இப்படித்தான் தன் முதல் பெண்ணைக்கலியாணம் செய்து கொடுத்து, மருமகனையும் சாவுக்குப் பலிகொடுத்து விதவையாகத் தன் வீட்டிலேயே வைத்துப் போஷித்து வருபவர். இந்த சிறு பெண்ணைஇரண்டாம் தாரமாக மணக்க முன்வரும் கிழவர் வீட்டிலும் இதே போல ஒரு சூழ்நிலைதான். அந்தக் கிழவருக்கு ஒரு வளர்ப்பு மகனாக கிரியீசன் என்பவன் இளைஞன், நாலும் தெரிந்தவன், இவன் ஒரு சமயத்தில் மிக நல்லவனாகவும் சில சமயங்களில் கெட்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறான்.


கிரியீசனுக்கும் ஊரில் உள்ள தாசியான மதுரவாணிக்கும் ’சிநேகிதம்’ உண்டு. அதனால் சில முறைகள் ஊரில் இகழ்ச்சிகளுக்கும் ஆளாகிறான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மதுரவாணி தர்மநியாயம் தெரிந்தவள். அதர்மச் செயலுக்குத் துணை போகமாட்டாள். அப்படி யாராவது போனாலும் அவர்களை தைரியமாகக் கண்டிப்பவள் கூட. மதுரவாணிதான் முதன் முதலாக பூப்ப்டையாத பெண்ணை கிரியீசன் வளர்ப்புத் தந்தை காசு கொடுத்து மணம் செய்வதை எதிர்த்தவள். இந்த எதிர்ப்பில் கிரியீசனும் கலந்து கொள்கிறான். இது சிறிது சிறிதாக இரண்டு வீட்டிலும் இந்த எதிர்ப்பு பரவிப் பெரிதாகி ஊரையே ஒரு கலக்கு கலக்குகிறது.மாப்பிள்ளைப் பேச்சைக் கேட்டு நீதி செய்கிறேன் பேர்வழி என அந்த அழகான மதுரவாணியையும் கிரியீசனையும் பிரிக்க முன்வருகிறார் அந்த ஊர் கர்ணம் ராமப்ப பந்துலு. அதற்கு விலையாக அந்தப் பந்துலு வேறு வழியில்லாமல் மதுரவாணி வீட்டிலேயே இருக்க நேரிடுவது தனிக்க்கதை (ஏற்கனவே சொன்னேனே,மதுரவாணி தர்மநியாயம் தெரிந்த தாசி என்று!).நாடகம் முழுவதும் சமூகத்தின் அவலங்களை நையாண்டியாகப் பேசப்படுவதால் நாடகத்தில் எங்குமே அலுப்புத் தட்டாது. குருஜாடாவுக்கு பாமரர்களின் மனநிலையையும், நடுத்தரவர்க்கத்தாரில் மனநிலையும் நன்றாகத் தெரிந்துவைத்துக் கொண்டு அவர்கள் மனதில் தம் கருத்துகள் ஆழமாக மனதில் பதியும் வண்ணம் உரையாடலை எழுதியுள்ளார். அதனாலேயே பல ஆண்டுகள் இந்த நாடகம் ஆந்திராவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 

அரங்கேறியது, 1909 ஆம் ஆண்டில் குருஜாட உடல்நிலை காரணமாக நீண்டநாள் ஓய்வாக உதகமண்டலத்தில்தங்கியிருந்த காலத்தில் இந்த கன்யாசுல்கம் நாடகத்தை மேலும் பொலிவு பெறச் செய்தார். நகைச்சுவையை மேலும் மெருகுபடுத்தப்பட்டதால் அவரது நாடகம்நூறாண்டைக் கடந்தும் இன்னமும் பாமர மக்களிடையே பேசப்படுகிறது.


கன்யாசுல்கம் 1955 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது. தாசி மதுரவாணியாக சாவித்திரியும், கிரியீசமாக என்.டி.ராமாரவும் நடித்தனர். இந்தப் படம் வெற்றிப் படமாக இருந்ததால் இந்தக் கதையும் நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைக்க வழி வகுத்தது.


கன்யாசுல்கம் நாடகத்தை மனதில் வாங்கிக்கொண்டு ஓவியர் திரு சூர்யாராவ் கன்யாசுல்கம் படங்கள் என்ற ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினார். அதிலுள்ள படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.Kd4.jpg

                                                                                சோறு போட்ட விதவை மகளை கோபத்தால் சோற்று இலையோடு அடிக்க வரும் தந்தை.


குருஜாடா சிறுகதைகள் பற்றிய விவரம் பார்ப்போம்.


மாதில்தா

மதராஸ்பட்டினத்தில் தாவர இயல் உயர்படிப்புக்காகக் குடியேறியபோது இது நடந்தது. மதராஸ் என்றால் நான் பொதுவாக நான் மயிலாப்பூரில் உள்ள ஒரு மான்சனில்தான் தங்குவது வழக்கம். அங்கு எங்கள் ஊரைச் சேர்ந்த பத்து பன்னிரெண்டு மாணவர்களும் இருந்ததனால் சொந்த ஊர் வாசத்தின் வாசனையும் மணக்கும், பொழுது போவதும் தெரியாது என்பதும் ஒரு காரணம்.


வந்த மூன்றாம் நாள்தான் நண்பன் ராமாராவ் காதில் கிசுகிசுத்தான். “அடேய்.. மாதில்தாவைப் பார்த்தாயா? அதோ எதிரிவீட்டில்தான்..”


பார்த்தேன்.. பார்த்துக்கொண்டே இருந்தேன்.. “அடேய் சாதாரணமாகப் பார்ப்பது போல பாரடா. சரி, சரி.. உற்றுப்பார்க்காதே! போதும் போதும்.. வா”


என்னை இழுத்தது கூட அவ்வளவாக நான் அறியவில்லைதான். எப்படி சடக்கென இப்படிப்பட்ட அழகியைப் பார்த்துவிட்டு உடனடியாக அங்கிருந்து அகலமுடியும்? கடவுள் கொடுத்த கண்ணுக்கான விருந்தை யாராவது ரசிக்காமல் நகரமுடியுமா..கடவுள் அத்தனை அழகையும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து ஒருங்கே வைத்துக்கொண்டு அந்த அத்தனையையும் இந்தப் பெண்ணுக்கே கொடுத்துவிட்டார்.. ஆனாலும் மனதில் வக்கிரம் இல்லாதபோது அழகான பெண்ணை ரசிப்பதில் என்ன தவறு?

”அடேய்.. நீ புதுசுன்னுதான் ஒரேயொரு முறை உன்னைப் பாக்கச் சொன்னேன்.. சரி சரி,, இனியொரு முறை அவளைப் பார்க்கும் பிரயத்தனம் கூட செய்யாதே.. நீ இனிமே அந்தப் பக்கம் பார்ப்பதோ இல்லே அவள் வீட்டுக்கு போகணும்னு நினைப்பதோ கூட உனக்கு நல்லது இல்லை” எச்சரிக்கை செய்தான் ராமாராவ்.

“ஏன் இப்படியெல்லாம் பேசறே.. ஒருவேளை அவள் நல்லவள் இல்லையோ”

“அவ நல்லவளானாலும் கெட்டவளானாலும் உனக்கோ எனக்கோ என்ன ஆகப் போகுது.. நீ அவளை இன்னொருதடவை பாக்காதேன்னு சொல்றேன்.. என்னையும் மீறினேன்னா நம்ம சிநேகிதம் பங்கப்பட்டா மாதிரிதான்” ராமாராவி மறுபடியும் எச்சரித்துவிட்டு அகன்றுவிட்டான்.

அவன் போனால் போகட்டும், ஆனால் அவள் நினைவு மட்டும் அகலமாட்டேனென்ன்று பிடிவாதம் பிடித்தது. ராமாராவ் போனபின்னும் எதிர்வீட்டு மேல் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த தேவதையை மறுபடியும் ஒரு முறை பார்த்தேன்.. குறுகிய தெரு என்பதால் கிட்டத்தில் தெரிந்தாள். அவள் துணி உலர்த்திக் கொண்ட கோலத்தையே ஒரு கவிதையாக வடிக்கலாம். அப்போதுதான் குளித்திருந்ததால் உடல் முழுதும் மஞ்சள் பூசியிருந்ததால் ஏற்பட்டிருந்த மெருகும் அந்தக் காலை சூரிய ஒளியில் பளிச்சிட்டதும் எப்படி வர்ணிக்கமுடியும்.. சட்டென கீழே இறங்கிப் போனாள். அங்கே கீழே இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போதுதான் அவள் பார்வை என் மீதும் பட்டிருக்கவேண்டும், ஆனால் அவள் ஒன்றும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவள் சாதாரணமாக தண்ணீரை இறைத்துக் குடத்தில் நிரப்பி நிதானமாக எடுத்துச் சென்றதிலேயே தெரிந்தது. அப்படிப் போகும்போது திரும்பி வேண்டுமென்றே என்னை பார்த்தாளே ஒரு பார்வை..

ஆகா.. பெண்ணின் பார்வைக்கு இவ்வளவு சக்தியா.. அந்தக் கண்களில் ஒருவேளை மாயப்பொடி கலந்து செய்த மையைப் பூசிக் கொள்வார்களோ.. என்னால் மறக்கமுடியாது இனிமேல்.. ராமாராவ் கிடக்கிறான்.. பொறாமை பிடித்தவன் மாதிரி பேசுகிறானோ என்னவோ

ஆனாலும் ராமாராவ் இல்லாத சமயங்களில்தான் இந்த பத்து நாட்களாக அவளைப் பார்த்து மகிழ்கிறேன் என்பதையும் சொல்லி விடுகிறேன். கையில் சும்மாவானும் ஏதாவது புத்தகத்தைக் கையில் வைத்துக் கொள்வது, அதை படிப்பது போலே பாவனை செய்வது, அவள் மாடியிலோ தோட்டத்திலோ வரும்போதெல்லாம் ரசித்துக் கவனிப்பதே என் வேலையாகிவிட்டது இப்போதெல்லாம். சில சமயம் அடிக்கடி வருவாள். சிலசமயம் வரவே மாட்டாள். ஆனாலும் நான் விடுவதாயில்லை.

கல்லூரி செல்லும்போது மாடிப்படிகளில் மான்சன் இறங்கும்போதெல்லாம் வேண்டுமென்றே அவள் வீட்டருகே ஏதோ புத்தகத்தைப் புரட்டி தேடுவது போலே பாசாங்கு செய்து எதிர்வீட்டில் அவள் தென்படுகிறாளா என்றெல்லாம் நாடகம் போல செய்து கொண்டிருப்பேன். பல சமயங்கள் அதிர்ஷ்டம் அடிக்கும்.. தேவதை கண்ணில் படும், கண்களால் பார்க்கும், நான் நாள் முழுதும் கற்பனையில் மிதக்கும் உணர்ச்சியைக் கொடுக்கும்.

அவளைப் பற்றி விவரங்கள் யாருக்கும் தெரியாமல் சேகரிக்க ஆரம்பித்தேன்.. முதல் அதிர்ச்சி அவள் கல்யாணமானவள் என்பதும் இரண்டாவது அதிர்ச்சி அவள் கணவனுக்கு ஐம்பத்து ஐந்து வயது என்பதும் மூன்றாவது அதிர்ச்சி அவன் முரடன், மூடன், பெண்டாட்டியை எப்போதும் சந்தேகக் கண்ணோடுப் பார்த்து அவ்வபோது அடித்துத் தொல்லையும் செய்வான் என்பதும் தெரிந்தது. வீட்டுக்குள் உறவுக்காரர் முதற்கொண்டு யாரையும் நெருங்கவிடுவதில்லை என்றும், எல்லோரும் இவனுக்குப் பயந்து இந்த வீட்டுப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை என்றும் சில ஹேஷ்யங்கள் அவன் காதுக்கு எட்டின. அவள் துன்பப்படுவதைப் பார்த்து ரசிக்கும் இந்தக் கணவன் கூட பார்ப்பதற்கு நல்ல ஆண் பிள்ளையாகக் கூட இல்லை.. நரைத்த மீசையும், அவன் மனசைப் போலக் குறுகிய கண்களும்.. மேலும் எங்கள் மான்சன் பையன்கள் யாருமே அவன் வம்புக்கே போவதில்லை என்பதும், இவர்கள் மத்தியில் அவன் ரத்தத்தையும் சதையையும் குடிக்கும் புலியாக தெரிகிறான் என்றும் தெரிந்தது. இப்படிப்பட்டவனுக்கு இப்படி ஒரு அழகான தேவதை மனையாளாக வாய்ப்பதா.. ஒருவேளை கடவுளுக்குக் கண்ணில்லையோ, விதி செய்யும் மாய விளையாட்டோ, இல்லை, ஆகாயத் தேவதையாக இருந்து ஏதோ செய்த தவறினால் பூலோகம் வந்து இவனிடம் தண்டனை பெற்று சாபத்தைக் கழிக்கிறாளோ..

நிச்சயம் அப்படித்தான் இருக்கவேண்டும்.. மாதில்தா தேவதைதான்.. அவளுக்கு சாபம் கொடுக்கப்பட்டிருக்கிறது.. இப்போது சாபத்தை அனுபவிக்கிறாள்.. பாவம்.. எப்போது இவளுக்கு இந்தக் கொடுமையிலிருந்தும் இந்த வேட்டைப் புலியிடமிருந்தும் விடிவுகாலமோ..

எனக்கு அவள் வெளியே வரும்போதெல்லாம் அந்த அழகு முகத்தில் உள்ள சோகக் கீற்று அப்படியே அப்பட்டமாகத் தெரிந்தது. நான் என்ன செய்தால் அவள் துன்பத்தைப் போக்கமுடியும், எனக்குப் புரியவில்லை.. ஆனால் மனதுக்குள் ஏதோ ஒன்று அவள் துன்பத்தை என்னால்தான் பரிபூர்ணமாக தீர்க்கமுடியும் என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

ஒருநாள் குளித்து முடித்து தலையை அழகாக சீவிக்கொண்டு முகத்துக்கும் ரெமி பவுடர் போட்டுக் கொண்டு கொஞ்சம் தடபுடலாக வெளியே வந்தேன். கல்லூரிக்குச் செல்லும் அவசரம்தான் என்றாலும் மாதில்தா’வை ஒருமுறையாவது பார்க்காமல் சென்றால் அந்த நாளும் நல்ல நாளோ.. அவள் வீட்டை தைரியமாகப் பார்த்து அவளுக்காகத் தேடினேன். ஆனால் அவள் வரவில்லை. உள்ளேயிருந்து அவன் வந்தான்.. என்னைப் பார்த்துக் கையை சொடுக்கி அருகில் வருமாறு கூப்பிட்டான்.

என் உடம்பில் திடீரென ஒரு திகில் புகுந்து முதலில் சூட்டைக் கிளப்பி, ஆவியாகிக் குளிர்ந்து போய் அதனால் ஒரு நடுக்கத்தையும் கொடுத்தது. ஓடிவிடலாமா எங்காவது.. இல்லை.. இவன் அவன் வீட்டுக்குள்ளேதான் கூப்பிடுகிறான்.. என்ன நடக்கிறதுதான் பார்ப்போமே.. ஒருவேளை நம் உள்மனது சொல்வதுபோல நம்மால் ஏதாவது ஒரு விடிவுகாலம் அவளுக்குப் பிறக்கலாம். அத்தோடு அவளை அருகில் பார்க்க ஒரு அரிய சந்தர்ப்பம்.. அந்தச் சந்தர்ப்பத்துக்காக இவன் கொடுமையான சொல் ஏதேனும் சொன்னால் கூட நாம் தாங்கித்தான் ஆகவேண்டும்.. நான் மெதுவாக வீதியைக் கடந்து அவன் இல்லம் சென்றேன். உள்ளேயும் சென்று வராண்டா அருகில் நின்றேன்.

குகைக்குள்ளே இருந்து வெளியே வந்த அந்த வன்புலி என்னை அந்தக் குகைக்குள்ளேயே நுழையும்படி கத்தியது.

“வா உள்ளே..”

போனேன்..

“ஏய்.. நீ என் மனைவியை அடிக்கடி நோட்டம் விடுகிறாய்தானே”

உள்ளே நுழைந்தவுடன் அவன் இப்படி கேட்பான் என எதிர்ப்பார்க்கவில்லை. இருந்தாலும் சமாளித்துக் கொண்டேன்.

“அதாவது எங்கள் மாடியிலிருந்து உங்கள் ஜன்னல் வழியே தெரியும் புத்தகங்கள் மீது கொஞ்சம் ஆசை.. அலமாரி நிறைய புத்தகங்கள் வைத்துள்ளீர்களே.. நீங்கள் எப்படிப்பட்டவர்களோ என்று யோசிப்பதால் அடிக்கடி பார்ப்பதுண்டு”

“அப்போ நீ என் மனைவியை பார்ப்பதில்லை.. இல்லையா?”

“உங்கள் மனைவியையும் பார்ப்பதுண்டு.. அந்த ஜன்னல் அருகே என் பார்வை செல்லும்போதெல்லாம் எப்போதாவது தென்படுவது சகஜம்தானே.. அவ்வளவுதான்”

“ஓ.. அவ்வளவுதானா.. வேறு ஒன்றும் இல்லையா” என்று உள்ளே பார்த்துக் கத்தினான். அவள் பக்கத்து அறையில் நின்றிருக்கவேண்டும்.. ஆனால் நாங்கள் இருக்கும் அறைக்கு வரவில்லைதான்.

“ஏய்.. நாடகக்காரி, வெளியே வருகிறாயா.. அங்கேயே நின்று என்ன வேடிக்கை.. இங்கே உன்னைப் பற்றிதானே பேச்சு” என்று மறுபடியும் அவளைப் பார்த்துக் கத்த, அந்த தேவதை துடிதுடித்துப் போய் தலையைக் கவிழ்த்துக் கொண்டு எங்களருகே வந்தது. எனக்கோ கண்ணில் நீர் எட்டிப் பார்க்க விரும்பியது போல கலங்கியது. உள்ளமும் அதிர்ந்தது. இருந்தாலும் அவளைப் பார்க்காமல் அந்த வேட்டைக்கார புலியைத்தான் பார்த்தேன்.

“பாரடா பரதேசி.. இந்த அழகான முகத்தைத்தான் பார்க்கவேண்டும் என்று தினம் தினம் தவிக்கிறாய்.. நன்றாகப் பாரடா.. என்னை ஏன் பார்க்கிறாய்.. அவளை விட என் முகம் அழகாக இப்போது உனக்குப் படுகிறதோ..”

இனியும் நின்றால் எனக்கு அழுகை பீறிட்டு வந்துவிடும் எனத் தோன்றியது. மெல்லத் திரும்பி வெளியே போக எத்தனித்தேன்.

‘நில்லு’ என்றான் அந்தக் கொடுங்கோலன். வேறு வழியில்லாமல் நின்றேன்.. அவன் குரலில் ஏதோ உறுதி தெரிந்தது போல பட்டது.

”ஏய் சின்னப்பயலே! எப்போதாவது யாராவது உனக்கு உண்மையே பேசவேண்டும் என்று போதித்திருக்கிறார்களா?

எனக்கு என் பெற்றோர் நினைவு ஏனோ அப்போது வந்தது. “எனக்கு பிறப்பிலிருந்தே சத்தியம் மட்டுமே பேசவேண்டுமென்றுதான் தெரியும்.. அப்படித்தான் வளர்ந்தேன்..”

“ஓஹோ.. உன் சத்தியம் எத்தனை நேர்மையானது என்றுதான் பார்ப்போமே.. இப்போது சொல்லேன் பார்ப்போம். என் மனைவி அழகானவள்தானா?”

“அவர்கள் அழகானவர் என்றுதான் நான் நினைக்கிறேன்”

“அவள் அழகில் உனக்கு ஏதேனும் சந்தேகமா?”

“நிச்சயமாக இல்லை”

“அப்படியானால் அந்த அழகை ரசிப்பதற்கு மட்டும்தானே தினம் இங்கே வேடிக்கை பார்க்கிறாய்? அதுவும் ஒருமுறையேனும் அவளைக் காணவேண்டுமெனத் துடிக்கிறாய்?”

“நான் உண்மையையே பேசவேண்டும் என நானும் நீங்களும் விரும்புவதால் சொல்கிறேன்..ஆமாம்.. உங்கள் மனைவியின் அழகு தெய்வீகமானதுதான்.. ஆனால் என் மனதில் வேறெந்த தீய எண்ணங்களும் இல்லை என்பதை அந்தத் தெய்வம்தான் அறியும்!!”

“அந்த தீய எண்ணத்தைப் பற்றி விடு.. நான் கேட்பதற்கு உண்டு அல்லது இல்லை என நேரடியாகச் சொல்லு! நீ என் மனைவியைப் பார்க்கும்போதெல்லாம் உன் மனதில் உனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.. உண்மையா? சொல்!!

“உண்மைதான்”

“சரி, அப்படியானால் ஒன்று செய்.. இவளை உன்னுடன் அழைத்துக் கொண்டு செல்.. நான் இந்த பாவியை உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடுகிறேன்.. என்னுடைய துரதிருஷ்டமும் என்னை விட்டு விலகும்!”

நான் ஒன்றும் பேசவில்லை.. எனக்குள் அழுகை வந்தது. அவர்களுக்கு அதைக் காண்பிக்காமல் வெளியே சத்தம் போடாமல் வந்தேன். அக்கம்பக்கம் யாரும் பார்க்கவில்லைதான்.. அடச்சே என்ன வாழ்க்கையடா இது.. யாருக்குமே இந்த நிலை வரக்கூடாதுதான்..

வேண்டாம்.. இனியொரு முறை என்னால் இவளுக்கு எந்தவொரு கஷ்டமும் வேண்டாம்.. இவன் வார்த்தைகளுக்கெல்லாம் எப்படியெல்லாம் தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருந்தாள். எத்தனை அவமானப்பட்டிருப்பாளோ.. இனி இவள் கண்ணில் நாம் படவேண்டாம்.. இந்த வீட்டை விட்டு, வேண்டாம், இந்தப் பகுதியை விட்டே வேறு எங்காவது போய்விடவேண்டும்!!

அவள் குனிந்த தலையும், பூமியில் அப்படியே தாரை போல வழிந்த கண்ணீரும் என் நினைவை அலைக்கழித்தன. எனக்கு நிச்சயம் ஒன்று புரிந்தது.. இத்தகைய நிலையில் உள்ள அந்த அழகு தேவதையின் கதையை எந்தக் கவிஞனாவது உணர்ந்தால் அவனிடமிருந்து உணர்ச்சிக் காவியமே பிறந்திருக்கும். இவள் துன்பத்தை யாரால் துடைக்கமுடியும்.. ஒரு உயர்ந்த பெண்மணிக்கு இப்படிப்பட்ட துன்பமா..

அவள் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பேன். அவன் வீட்டு வேலைக்காரி ஒரு நாயைக் கூப்பிடுவது போல என்னைக் கூப்பிட்டு ஒரு காகிதத்தை என் கையில் திணித்து விட்டு ஓடிப் போய்விட்டாள். கசங்கிய காகிதமாக இருந்தது.

”நான் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் என்ன துரோகம் செய்தேன்? என்னை நிம்மதியாக இந்த மனிதருடன் வாழ விடமாட்டீர்களா.. இதுதான் என் தலைவிதியென்றால் நான் அனுபவித்துவிட்டுப் போகிறேன் - மாதில்தா”

அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் என்னுள் ஏதோ ஒளி பிறந்திருக்கவேண்டும்.. நான் இந்த இடத்தை விட்டுப் போகத்தான் இருந்தேன்.. ஆனால் இல்லை.. போகக்கூடாது.. ஒரு உயரிய பெண்ணுக்கு ஒரு பெருந்துன்பம் இழைக்கப்பட்டு வருகிறது. அவள் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தவிக்கிறாள். நானும் இங்கிருந்து போய்விட்டால் அந்தப் பெண்ணின் துயரக் கடலில் ஒரு சிறு அங்கமாகத்தான் இருப்பேனே தவிர வேறு என்ன செய்து அவளை கரையேற்றப்போகிறேன்? இல்லை.. எனக்கு மட்டும் ஒரு ராஜ்ஜியம் இருந்தால் இவளுக்கே பட்டம் கட்டி மகாராணியாக்கி ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு மகிழ்ந்திருப்பேன் என்றெலலாம் நான் நினைத்தது வெறும் கனவா.. ஆனால் நான் என்ன செய்தால் இவள் துன்பத்தைப் போக்க முடியும்?

ராமாராவ் நல்ல அனுபவசாலி.. அவன் அப்போதே எச்சரித்தான்.. அவனுக்கு எல்லாம் தெரியும் என்பதை மறந்துவிட்டு இப்போது இவள் கவலையில் நாமும் பங்கு பெற்று விட்டோம்.. இருக்கட்டும், என்னை முதன்முதலில் ’அவளைப் பாரடா’ எனப் பார்க்க வைத்தவன் ராமாராவ்.. அவனே இந்தத் தொல்லை தீரப் பதில் சொல்லவேண்டும்.. பார்ப்போம்..

ராமாராவின் அறைக்குப் போனேன்.. என் நல்ல காலம் அவன் தனியாகத்தான் இருந்தான். அவனிடம் அப்படியே அனைத்தையும் கொட்டிவிட்டேன்.. அவள் காப்பாற்றப்படவேண்டும் என்பதில் உள்ள என் ஆர்வத்தை அவனிடம் தெரிவித்தேன்.

“மடையா! அப்படியெல்லாம் இவள் காப்பாற்றப்படவேண்டும் என்ற வழி தெரிந்தால் நானே எப்போதே அதைச் செய்திருப்பேனே.. எல்லா நண்பர்களும் அவளைப் பார்த்திருக்கிறார்கள். அவள் கணவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். எல்லோருமே எச்சரிக்கையாக இருக்கிறோம்.. ஆனால் நீ புதியவன்.. உனக்கும் இவள் கதை தெரிந்திருந்தால் இவர்கள் வழிக்கு நீ போகமாட்டாய் என்றுதான் அவளை ஒரு பார்வை பார்த்துகொள், அதற்கு மேல் அவள் விஷயத்தில் தலையிடாதே என்று எச்சரிக்கை செய்தேன்.. அதையும் மீறினாய்.. பார் இப்போது தேவையில்லாமல் அவளுக்கு எத்தனை துன்பம் உன்னால்?”

“சரிதான்.. நீ சொல்வது உண்மைதான்.. ஆனால் அந்தப் பெண்ணின் துயரமான முகத்தைப் பார்த்தும் என்னால் தாங்க முடியவில்லையே!”

”அடேய்! நம் பெரியவர்கள் ஒன்றும் முட்டாளில்லை.. அதனால்தான் அடிக்கடி சொல்வார்கள். பிறன் வீட்டு மனை விஷயத்தில் தலையிடாதே என்பார்கள். கணவன்-மனைவி சண்டை, சச்சரவு எல்லாவற்றையும் அவர்களே தீர்த்துக் கொள்ளவேண்டும்.. நம்மால் அந்தச் சண்டை சச்சரவுக்கு தீர்வே காண முடியாது. ஒன்று நன்றாக நினைத்துப் பார்.. நாம்தான் நமக்குள் இவன் புலி, வேட்டைப் புலி என்றெல்லாம் முடிவு செய்து இவன் அவளை அடித்து உதைக்கிறான் என்று ஏதோ நாம் நேரில் பார்த்தது போலப் பேசிக்கொள்கிறோமே தவிர என்றாவது ஒருநாளாவது நாம் அதைக் கண்ணாரக் கண்டோமா? இரண்டாவது, ஒரு கல்யாணமான பெண்ணுக்கு எத்தனைதான் ஆனாலும், பாதுகாப்பும், இருக்க இடமும், கவனிப்பதற்கு ஒரு ஆண் துணையும் கட்டாயம் வேண்டும். இது அவளுக்கு இத்தனை நாள் வரை கிடைத்திருக்கிறது - நீ பார்க்க ஆரம்பிக்கும் வரை சொல்கிறேன்.
அடுத்த மூன்றாவது விஷயம் நன்றாகக் கேட்டுக்கொள்! உன்னுடைய மனது என்னவோ அவள் துயரப்படுகிறாள் என்று நினைத்து நினைத்து அவள் வசம் போய்விட்டது என்பது உண்மைதானே..ஆண் பெண் உறவு அதுவும் மணவாழ்க்கையில் உள்ள பெண்ணின் உறவு என்பது கூரான கத்தியின் மேல் நடப்பது போன்றது..
நீ என்னைக் கேட்கலாம்.. என் மனதில் கள்ளம் கபடம் போன்ற தீய எண்ணங்கள் ஏதுமில்லையே என்று’ ஆனால், ஒன்றை நன்றாக சிந்தித்துக் கொள்! தீய எண்ணமானது மனிதரான நம் மனதில் ஏதோ ஓர் மூலையில் எப்போதுமே ஒளிந்து கொண்டே இருக்கும். அது சந்தர்ப்பத்தை நோக்கிக் காத்திருக்கும்.. ஒரு சின்ன ஊசிமுனை அளவு இடைவெளி கிடைத்தாலும் போதும் அது உடனே நம் மனதை ஆக்கிரமித்து விடும்.. ஒரு விஷயம் தெரியுமா, நாமே இம்மாதிரி சந்தர்ப்பங்களை விரும்பி தீய எண்ணங்களின் வரவுக்கு வழி வகுப்போம்.. சந்தர்ப்பத்தையும் நாமே ஏற்படுத்தித் தருவோம்.. நல்ல சிந்தனையும் புத்தியுமுள்ள மனிதன் எந்த சமயத்திலேயும் இத்தகைய சந்தர்ப்பத்துக்கு வழி வகுக்க சந்தர்ப்பமே கொடுக்கமாட்டான்..”

என் மனதில் ராமாராவின் வார்த்தைகள் நன்றாகவே பதிந்தன.. ஆமாம்.. கள்ளம் என்பது இப்போது இல்லைதான்.. அவள் மீது அன்பும், பாசமும், அவள் நன்றாக இருக்கவேண்டுமே என்ற எண்ணமும் இருக்கின்றனதாம்.. ராமாராவ் சொல்படி நான் ஏன் புத்திசாலித்தனமான மனிதனாக இருக்கக்கூடாது!! என் மனது சற்று எளிதாகிப் போனது போல உணர்ந்தேன்..

அடுத்த நாள் காலை நான் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தேன்.. மனம் நிம்மதியாக இருந்ததால் கீழே அடாவடியாகப் போகவேண்டும், மாதில்தா பார்வையில் விழவேண்டும் என்றெல்லாம் ஆசைகள் இப்போது இல்லை.. மெதுவாகச் செல்லலாம்.. கல்லூரியில் நிறைய வேலை இருக்கிறது.. அதைப் பார்ப்போம்.. கொஞ்சம் சோம்பல் முறித்துக் கொண்டேன்.. எனக்கே என் சோம்பல் ஆச்சரியமாக இருந்தது. காலை எழுந்தவுடன் மாதில்தா நினைவிலேயே சுறுசுறுப்பாகவே இருந்திருக்கிறேன்.. கொஞ்சம் தெளிவு கிடைத்ததும் இந்த சோம்பலும் துணைக்கு வந்துவிட்டது.. பெண்ணின் சக்தி பெரியதுதான்.. படபடவென கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. மான்சனின் வேலைக்காரப் பையன்..

“அண்ணா! எதிர்வீட்டுப் புலி உங்களை கல்லூரிக்குச் செல்லும்போது ஒருமுறை வீட்டுக்கு வந்து விட்டுப் போகச் சொன்னது.. என்னவோ பெரிய பலி காத்திருக்கப்போகிறது, ஜாக்கிரதை!”

அய்யோ.. என நினைத்துக் கொண்டு, சாதாரணமாக முகம் கழுவிக்கொண்டு சட்டையைப் போட்டுக் கொண்டு எதிர் வீட்டுக்கு ஓடினேன்.. மனதில் பல நினைவுகள்.. நான் இன்னும் இடத்தை விட்டுப் போகவில்லையென அவள் ஏதேனும் விஷத்தை முழுங்கிவிட்டாளோ.. இருக்காதே.. கல்லூரி செல்லும்போதுதானே புலி நம்மை வரச்சொன்னது..

“வா தம்பி.. இப்படி உட்கார்..” என்றது புலி.. அட என்ன இது, புலி பூனையாயிற்றோ.. உள்ளே குரல் கொடுத்தது.

“மாதில்.. தம்பி வந்திருக்கு.. கொஞ்சம் காபி கொண்டு வருகிறாயா” என்று மிக மிருதுவான குரலில் கேட்டது. பசுத்தோல் போர்த்திய புலியோ.. எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

“தம்பி! நீங்களெல்லாம் நினைப்பது போல நானும் என் மனைவியும் எலியும் பூனையும் இல்லை. நாங்கள் அன்னியோன்ய தம்பதிகள். நான் அவளுக்கு தினமும் ஒரு நூலை வாசித்துக் காண்பிப்பதும் அதைப் பற்றி விவாதிப்பதுமாக எங்கள் காலம் கழியும். ஆனால் இந்த ஒருவாரகாலமாக ஒரு சின்ன மாற்றம். நீ அங்கே நிற்பதும் எங்கள் வீட்டையே பார்ப்பதும் கவனித்துக் கொண்டேதான் இருந்தோம். ‘அவன் உன்னைத்தான் கவனிக்கிறான் என்று அவளைக் குற்றம் சொன்னதுக்கு, அவள் ‘அப்படிப் பார்த்தால் பார்க்கட்டுமே’ என்று இளக்கரமாகப் பதில் சொல்வது போல பட்டது. இவளுக்குத் தன் அழகின் மேல் கர்வம் என அவளைத் திட்டி தீர்த்தேன். ஒரு வாரகாலமாக நான் தவித்த தவிப்பும் என்னிடம் என் மனைவி பட்ட பாடும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் உன்னை இங்கே நேற்று தருவித்தேன். அது நல்லதாகப் போய்விட்டது. நீ உண்மையைச் சொன்னதும் அந்த சத்தியத்தை நான் அலட்சியப்படுத்தியதும் எனக்குப் புரிந்தது.. மாதில்தாவை அழைத்துப் போ என்றதும் கண்களில் நீர் தளும்ப நீ திரும்பிப் போனதையும் கவனித்தேன்.. மாதில்தாவும் அழுதாள். நான் அவளிடம் மெய்யாகவே சொன்னேன்.. எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை.. நீ அவனுடன் போவதால் இருந்து போய்விடு, என்றேன். அவள் அழுதாள். இபபடிப் பேச எப்படி மனசு வந்தது என்று என்னைத் திரும்பக் கேட்டாள். அழகாய் இருப்பது ஒரு குற்றமா என்று திருப்பிக் கேட்டாள். அழுதுகொண்டே ஒன்றைச் சொன்னாள் தம்பி!

’அழகு அழகு என்கிறீர்களே, இந்த உடல் சௌந்தரியம் வயதாக வயதாகத் தேய்ந்து கொண்டே போகும். உள்ளம் எப்போதும் அழகாக இருக்கவேண்டும்.. உள்ளத்தில் அழகு இருந்தால் போதாதா.. பாருங்கள் அந்தத் தம்பி உண்மையையே பேசியது.. அது உள்ளத்தின் அழகு.. தப்பான எண்ணமுள்ளவராக இருந்தால் நீங்கள் சொன்னவுடன் என்னை இழுத்துக் கொண்டு ஓடி விடாதா.. அழகெல்லாம் போனவுடன் என்னையும் இக்கட்டில் எங்காவது மாட்டிவிட்டு ஓடிவிடாதா.. இனி ஒரு முறை என்னைப் பற்றித் தவறாகப் பேசினீர்கள் என்றால் என் பிணம்தான் இங்கு கிடக்கும். அவ்வளவுதான்’..

ஆகா.. அந்தத் தேவதை நேற்றுதான் என அகக் கண்களைத் திறந்து விட்டாள். தம்பி! இனி நீ அடிக்கடி வா.. என் புத்தக அலமாரியில் உனக்குத் தேவையான புத்தகங்களை எடுத்து இங்கேயே படி.. முடிந்தால் நாங்களும் உனக்கு உதவி புரிகிறோம்.. .என் மனைவிக்கு இங்குள்ள அத்தனைப் புத்தகங்களும் அத்துப்படி! என்ன மாதில்..”

அப்போதுதான் அங்கு காபிக் கிண்ணத்துடன் வந்த மாதில்தா தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிய கணவனைப் பார்த்துக் கொண்டே தலையசைத்துச் சிரித்தாள்.

நான் வியந்து போனேன்.. நேற்று ராமாராவ் கூட என் அகக் கண்களைத் திறந்தானோ..
இந்தக் கதையில் மாற்றான் மனைவி விஷயத்தை எந்தவித விகல்பமும் எவர் மனதிலும் தோன்றாதவாறு எழுதிய குருஜாடா அப்பாராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.. அதுவும் கதை எழுதிய காலத்தையும் நாம் நோக்கவேண்டும். 1910 ஆம் ஆண்டில் ‘ஆந்திர பாரதி’ எனும் இதழுக்காக எழுதிய சிறுகதை இது.


முடிவுப்பகுதி

குருஜாடாவின் இன்னொரு கதையில் நம் தமிழர்களும் பங்கு பெறுவர். ஆனால் நகைச்சுவையாக எழுதப்பட்டதால் சில ஏளனவகைப் படைப்பு கூட நகைச்சுவை உணர்ச்சியோடுதான் பார்க்கவேண்டும்.


உன் பெயர் என்ன

‘உன் பெயர் என்ன’ எனும் ஒரு கதையில் சைவ வைணவர்களின் அந்தக் காலப் போக்கும், அந்தப் பிரிவைச்ச் சார்ந்தவர்கள் மக்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் நோக்கத்தையும் ஏளனமாகக் கண்டிக்கிறார் குருஜாடா அப்பாராவ், கதையை அப்படியே தமிழாக்கம் செய்யாமல் கதைச் சுருக்கத்தை மட்டுமே இங்கு அளிக்கிறேன்.

விஜயநகரம் அருகே உள்ள ஒரு ஊரில் வைணவ பிராமணக் குடும்பம் ஒன்று ராமர் கோவில் பூஜை செய்விப்பதற்காக தமிழகத்திலிருந்து தருவிக்கப்படுகிறது. ஊருக்கு வந்த வைணவர் பரம சாது. ஆனால் வடமொழி தென்மொழிகளில் பரம ஞானி. வந்தவுடன் தன் வேலையைப் பார்த்துக்கொண்டும் பூசைகளைக் கவனித்துக் கொண்டும், ஊருக்குத் தேவைப்படும்போது வேதத்தில் சொல்லப்பட்ட நல் உபதேசங்களைச் சொல்லிக்கொண்டும்தான் காலம் கழிக்கிறார். இவர் மகனுக்கும் காலா காலத்தில் திருவரங்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கலியாணம் செய்து வைத்துத் தன்னுடன் இருத்திக் கொள்கிறார். மகனுக்கு தந்தையளவு ஞானம் இல்லையென்றாலும் சாதுவாக இருப்பவர், ஆனால் கொண்டு வந்த மருமகளுக்கு நல்ல ஞானமும் நல்ல கல்யாணகுணங்களும் உண்டு. இந்தக் கலியாணத் தம்பதியருடனே திருவரங்கத்திலிருந்து வந்த மணவாளன் எனும் வைணவர்தான் இனிமேல் இந்தக் கதைக்கு பலம் சேர்க்கப்போகிறார்.

ஊரில் இரு பெரிய குடும்பங்கள். நாயுடு ஜாதியைச் சேர்ந்தவர்கள். பெரிய நாயுடு சொல்தான் ஊரில் அம்பலமேறும். சின்ன நாயுடு கொஞ்சம் முரடன். ஆனால் வயதான காலத்தில் ஊர் நிர்வாகத்தை சின்ன நாயுடு கையில் கொடுத்து விட்டு ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். பெரிய நாயுடு. இவர்களுக்கு இதுவரை வைணவம் சைவம் என்றெல்லாம் ஏதும் தெரியாது. ஊரில் உள்ள சிவன் கோயில் ராமர் கோயில் இரண்டுமே நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றன.

இந்தச் சமயத்தில்தான் ஒரு வைணவஜீயர் இந்த ஊருக்கு வருகிறார். பெரிய நாயுடுவும் தடபுடலாக வரவேற்பு கொடுக்கிறார். தன்னை உபசரித்த பெரிய நாயுடுவிடம் ’உயிர் போனபின்பு ஆத்மா ஆங்காங்கே அலைந்து பயனென்ன, பெருமாளைச் சரணடைந்தால் வைகுண்டப் பிராப்தி கிடைத்து நிம்மதி அடையுமே’ என்று கூற வயதான பெரிய நாயுடுவும் உடனடியாக வைணவத்தை மேற்கொள்கிறார். அவர் சொல்படி ஊரில் உள்ள மக்கள் பலர் வைணவராகி விடுகின்றனர். அப்போது மணவாளன் நடுவில் புகுந்து ஊர் முன்சீப் சின்ன நாயுடு வைணவனானால் ஊருக்கு நல்லது என்கிறான். இதற்கு முரடனான சின்ன நாயுடி தயக்கம் காட்டுகிறான். எதற்கு தனியாக இப்படி நாமம் போட்டுக் கொண்டு அலையவேண்டும் என்பதே அவன் கேள்வி. மணவாளனுக்கு அவனுடைய பலவீனங்கள் தெரியும். அவனுக்குப் பிடித்த புளியோதரையில் அவன் ரசித்து சுவைத்துக் கொண்டிக்கும்போதே வைணவத்தின் குறிக்கோள் பாதி சொல்லப்பட்டு, மீதி மயக்கத்திலேயே அவன் ஒப்புக் கொள்கிறான். அடிக்கடி புளியோதரை கிடைக்குமா என்ற அவன் கேள்விக்குப் பதிலாக துவாதசி நாளில் மாதத்துக்கு இருமுறை பெருமாளுக்குக் கண்டிப்பாக புளியோதரைதான் நைவேத்தியம் என்று உறுதி அளிக்கப்பட்டவுடன் அவன் தன் நெற்றியில் போடப்பட்ட நாமத்தைப் பெருமையாகப் போற்றுகிறான்.

இப்படி ஏறத்தாழ ஊரில் பாதிக்கும் மேலோர் வைணவத்தில் மாறிப்போனது ஹைதராபாத் அருகே உள்ள வீரசைவர்களுக்குத் தெரிய வருவதால் அவர்களும் ஒரு கால கட்டத்தில் அந்த ஊரில் டேரா போட்டு நள்ளிரவில் மேள சத்தத்தோடு சிவபூஜை செய்வதாக ஊரையே நடுங்க வைத்தனர். சிவபூஜையின் கடைசி நாளன்று அவர்கள் அனைவரும் அக்னி வளர்த்து அக்னியில் நடப்பதாகவும் ஊருக்குப் பெரியவரான பெரிய நாயுடுவும் முன்சீப் சின்ன நாயுடுவும் அந்த விழாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இப்படிச் செய்வதால் நாளை பெரிய நாயுடுவும் ஊரும் சைவப் பிரிவுக்கு மாறிவிடும் என்று அஞ்சிய மணவாள்னுக்கு ஒரு திட்டம் தோன்றுகிறது. ஹாயாக தன் நண்பர்களுடம் அளவளாவிக் கொண்டிருந்த சின்ன நாயுடுவிடம் வைணவத்துக்கு வந்து பேராபத்தைச் சொல்கிறார். சைவர்கள் அக்னியில் நடந்தால் ஊரே இனி சைவம்தான் என்றும் துவாதசி புளியோதரையும் கூட இனிக் கிடைக்காது என்கிறார். அவன் கவலை அதிகமாக நண்பர்களிடம் உதவி கேட்கிறான். அவர்கள் இதுபற்றியெல்லாம் ஒன்றும் அறியாதவர்களாதலால் உதட்டைப் பிதுக்க மணவாளனையே ஆலோசனை கொடுக்கும்படி சொல்கிறார்.

“நாமும் இதைப் போல ஒரு அக்னிப் பரிட்சை அடுத்த வாரம் வைத்து விடலாமே.. உங்களுக்கு தெரிந்த சிலருக்குக் கள்ளை நன்றாக ஊற்றி விட்டு, ராமர் கோயில் உற்சவ சிலையையும் தலையில் ஏற்றி அக்னியை மிதிக்கச் செய்தால் வைணவம் இங்கு நிலைக்கும் என்ன சொல்கிறீர்கள்..’

‘ஓ செய்யலாமே.. அடுத்த வாரம் எதற்கு, இதற்கெல்லாம் முகூர்த்தம் பார்க்கவேண்டாம்.. இன்றிரவே செய்து விடலாம். ஏன் நீரே முதலில் அக்னியில் இறங்கும்.. நீரே உற்சவ விக்ரஹத்தையும் தலையில் வைத்துக் கொள்ளும், உம்மைத் தொடர்ந்து என் நண்பர்கள் சிலரை கள்ளைக் குடித்து விட்டு இறங்கச் சொல்கிறேன்”

மணவாளனுக்கு பயம் வந்துவிட்டது. அவர் எதிர்பார்த்தது அந்த முரட்டு நண்பர்கள் கள்ளின் போதையில் வலி தெரியாமல் எளிதாக இறங்குவார்கள் என்றுதான். ஆனால் இது தன் தலைக்கே வினையாகப் போனதால் கவலை வந்து விட்டது. உடனடியாக மணவாளன் சமாளித்தார்.

“ஐய்யய்யோ.. நான் சரிவரமாட்டேன்.. ஒன்று செய்யலாமே.. நம்ம ராமர் கோவில் பந்துலுவே முன் வந்து அக்னி மிதிக்கட்டுமே.. சாஸ்திரம் அறிந்தவர், அவர் செய்தால் மேலும் நமக்கு நன்மைதானே” என்று தனக்கு குருவுக்கு சமமான ராமர் கோவில் ஆச்சாரியரையே பழியில் மாட்டிவிட்டார். ஆனால் தள்ளாடும் வயதில் உள்ள அந்த ஆச்சாரியார் இந்தக் கதையைக் கேட்டு விட்டு சிரித்து விட்டு தான் இதையெல்லாம் நம்பாதவன் என்றும், சாஸ்திரங்களில் இப்படிப்பட்டது இல்லை என்றும் அத்தோடு இங்குள்ள ஜனங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தாலும் ராமர் கோவிலுக்கு வரத்தான் செய்வார்கள் என்றும் சிவன் கோயில்காரர்கள் செய்வதால் நீங்களும் செய்யவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்” என்று சொல்லிவிட்டார். ஆனாலும் மணவாளன் விடவில்லை. அவரையே அக்னி மிதிக்கும்படி கூட்டத்தில் கோள் சொல்லி மூட்டிவிட்டுக் கொண்டிருந்தான். பெரியவரோ முடியாது, தனக்குச் சம்மதமில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இந்தச் சமயத்தில்தான் அவர் மருமகள் அங்கு வருகிறாள். சான்றோரான மாமனார் திண்டாடும் நிலையில் இருப்பதைப் பார்த்து கூட்டத்தை அமைதிப்படுத்துகிறாள். வைணவர்கள் அக்னிபரீட்சைக்கு உள்ளாகும்படி முதலில் கருத்துச் சொன்னவர் யார் என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறாள். சின்ன நாயுடு மணவாளனைக் காண்பித்து ‘இவர்தான்’ என்கிறார். அவளின் குரலின் தோரணை, கேள்வியில் உள்ள கண்டிப்பு எல்லோரையும் கொஞ்சம் ஸ்தம்பிக்க வைத்ததுதான். அவள் அறிவுள்ள பெண் என ஏற்கனவே தெரிந்திருந்ததால் ஊரார் சற்று மரியாதையுடனே பேசினர். அவள் மணவாளனைப் பார்த்தாள்

“மணவாளரே.. ஏன் நீங்களே அக்னியில் இறங்கிப் பார்த்து விடவேண்டியதுதானே.. நீங்களும் நல்ல வைணவர்தானே?”

“ஐயய்ய, அப்படி இல்லைம்மா, நான் வைணவனே ஆனாலும் ஜாதியில் தாழ்ந்தவன்.. அதனால்தான் இறங்கக்கூடாது என்று கட்டுப்பாட்டுடன் சொன்னேன்.. என்னை விடுங்களம்மா.. நீங்க ஆணை போட்டால் ஸ்ரீரங்கத்துகே வேணும்னா ஓடி விடுகிறேன்...”

“சரி, உங்களுக்கு பயம் என்று தெரிகிறது.. ஊரை மூட்டி விட்டு நீங்கள் குளிர் காய்ந்தால் எப்படி?”

“வேண்டுமானால் நான் அக்னியில் இரங்கட்டுமா?” என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறாள். அதே சமயத்தில் மணவாளரும் கூட்டத்தின் பின்னால் ஒதுங்கி ஓடுகிறார்.

கூட்டம் வேண்டாம் என்கிறது. “அப்போது ஒன்று செய்யலாம். நம் துணிகளைத் தைத்துத் தரும் பீர் சாஹிப்பைக் கூப்பிடுங்கள்.. அவர் கபீர்தாசரின் பக்தர்.. நான் சொன்னால் கேட்பார்..”

அவள் குரல் கேட்டதும் ஊர் தையல்காரரான பீர் சாஹிப் கூட்டத்தின் மத்தியிலேயிருந்து வருகிறார். “நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்’மா.. எனக்கு பயம் இல்லே”

”பீர் சாஹிப் இன்றிரவு அக்னியில் நடந்துவிட்டாரானால் நீங்களனைவரும் முஸ்லீம் மதத்துக்கு மாறிவிடவேண்டுமே.. என்ன செய்வது”

இவள் இப்படிச் சொன்னதும் ஊர்க்கூட்டம் திகைக்கிறது.. உடனே அவள் “இதோ பாருங்கள்! அக்னி மிதித்தால்தான் கடவுள் அருள் புரிவார், அப்படி இப்படியெல்லாம் என்பது எந்த மதத்திலும் இல்லை. என்னுடைய அன்பான வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பீர்சாஹிப் முன் வந்தார் பார்த்தீர்களா.. இதுதான் கடவுள். அன்புதான் கடவுள்.. இந்த அன்பை முன் வைத்து யார் வேண்டுமானாலும் நெருப்பை மிதிக்கலாம்.. அன்பு எனும் பெரு வெள்ளம் நெருப்பை மிக வேகமாக அணைத்துவிடும்” என்கிறாள்.

மருமகளின் வார்த்தை அன்றைக்கு இரவு மெய்யானது.. ஊரில் பலரும் ஒருவரையொருவர் சந்தோஷத்துடன் கைப்பிடித்துக் கொண்டு தீமிதியில் கலந்துகொண்டு அதை சைவ விழாவிலிருந்து பொது விழாவாக ஆக்கிக் கொண்டாடினர். மிதித்தவர்களில் பீர் சாஹிப்பும் சின்ன நாயுடுவும் உண்டு என்பதையும் இங்கு சொல்லி விடுவோம்.
குருஜாடா இந்தக் கதையில் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கிறார். தெய்வம் ஒன்று என்பதை பல்வேறு கட்டங்களில் சொன்னாலும், சமூக அவலங்கள் எப்படியெல்லாம் இருந்தன என்பதையும் விவரிக்கும்போது கூடவே பெண் கல்வியையும் முன் நிறுத்துகிறார். அறிவாளியான பெண் தன் திறமையினால் எப்படி இக்கட்டுகளை சமாளிக்கிறாள் என்பதை மருமகள் பாத்திரத்திலிருந்து வெளிப்படுத்துவது அருமை.

நம்மில் பலருக்கு பி.டி.ஸ்ரீநிவாச ஐயங்காரைத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். சரித்திரப் பேராசிரியர், ஆராய்ச்சியாளர், தத்துவ ஞானி, இவை எல்லாவற்றையும் விட மற்றவர்களை எப்போதும் கை தூக்கிவிடுவதில் இவருக்கு நிகர் இவர்தான். இவர் 1928 இல் எழுதிய தமிழர் வரலாறு எனும் ஆங்கிலப் புத்தகம் எனக்கு இன்னமும் பல சேதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

பி.டி.எஸ் ஐயங்கார்தான் குருஜாடாவின் வழிகாட்டி என்று சொன்னால் மிகையாகாது. ஐயங்கார் இங்கு விசாகப்பட்டினத்தில் ஏ.வி.என் காலேஜில் சரித்திரப் பேராசிரியராகப் பொறுப்பேற்று பல மாணவர்களை ஊக்குவித்தவர். குருஜாடாவின் எழுத்து ஞானம் இவரைக் கவர்ந்திருக்கிறது. ஆனால் இலக்கியத் தெலுங்கில் எழுதப்படும் விஷயங்கள் சான்றோரிடமே தங்கிவிடும் எனும் உண்மையை குருஜாடாவுக்கு உணர்த்தியவர் இந்த வழிகாட்டிதான். குருஜாடாவின் கன்யா சுல்கம் முதலில் இலக்கியத் தெலுங்கில் எழுதப்பட்டு ஸ்ரீநிவாச ஐயங்காரின் உத்தரவால் சாமான்யவர்களின் பாஷைக்கு மாற்றப்பட்டதாகச் சொல்வர். குருஜாடாவை சாமான்யர்கள் மத்தியில் பேசவைத்த பெருமை ஐயங்காருக்குதான் உண்டு என்று சொல்பவரும் உண்டு.

குருஜாடா கடைசி கால கட்டத்தில் உடல் நலக்குறைவினால் மிகவும் கஷ்டப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள். தன்னைப் போஷித்து வந்த விஜயநகர ராணியும் இறந்த பின்னால் அடுத்த மூன்றாண்டுகள் சிறிது கஷ்டத்தை அனுபவித்தார் என்று சொல்வாரும் உண்டு. ஆனாலும் என்ன, மனுஷன் இறந்து போனால் என்ன, அவன் எழுத்தும், கருத்துகளும் என்றைக்கும் இறந்து போகாதுதானே.


--Ksubashini 07:48, 6 அக்டோபர் 2012 (UTC)


பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2012, 08:00 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,351 முறைகள் அணுகப்பட்டது.