தேசிய நூலகவாரம் – நவம்பர் 7 – 14

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முனைவர் தி.க.திருவேங்கடமணி


அறிவுச் சுரங்கம் - கல்விக் களஞ்சியம் – தகவல் சமுத்திரம் என்று பலவாரும் அழைக்கப்படும் நூலகங்களைக் கொஞ்சமேனும் மறவாமல் இருக்கவோ என்னவோ, ஆண்டுதோறும் நவம்பர் 7 முதல் 14 வரை தேசிய நூலகவாரம் என்று கொண்டாடப் படுகிறது.


சாதாரணமாக தெரிந்தோ தெரியாமலோ மறக்கடிக்கப்படும் இவ்வாரம் இவ்வருடம் கொஞ்சம் விமரிசையாகவே பரவலாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. நூலகத்தந்தை என்று உலகம் போற்றும் முனைவர் சீயாழி ராமாம்ருத ரங்கநாதன் நம் தமிழ்நாட்டுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 12 ஐ , நூலகர் தினமாகக் கொண்டாடத் தவறியவர்கள் கூட இந்த வாரத்தை இம்முறை நினைவு கூரந்தமை பாராட்டற்குரியது. இந்நூலக வாரத்தில் நூலகவியல் என்ற ஒன்றை உருவாக்கித் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த அப்பெரியாரையும் நினைவு கூர்வோமாக.


அப்படி என்ன இவர் நூலகர்களுக்காகவும் நூலகங்களுக்காகவும் செய்துவிட்டார் என்ற கேள்வி எழுவது இயற்கையே. கணிதவியல் அறிஞரான இவர் நூல்கள் மீதும் நூலகங்கள் மீதும் கொண்ட அக்கறையின் காரணமாகப் பல புதிய முயற்சிகள் செய்து பல சீரிய முன்னேற்றங்களை இத்துறையில் கொண்டு வந்தார்.


பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களானாலும் அல்லது வேறெந்த ஆராய்ச்சி நிறுவனங்களானாலும் நூலகம் என்னும் இன்றைய “தகவல் மையம்” இன்றியமையாத இதயம் போன்றது. இன்னும் அறிவுப் பூர்வமாக நவில வேண்டின் நூலகம் என்பது “கோர்வைப் படுத்தப்பட்ட அறிவுக் களஞ்சியத்தை அடைய அணுகும் இடம்” என்று சொல்லலாம்.


அறிவே ஆற்றலாகவும், அற்றம் காக்கும் கருவியாகவும் ஆகிப்போய்விட்ட இந்தக் காலத்தில், அறிவுக் களஞ்சியத்தை ஆக்கி, காத்து, வாசகரை ஊக்கி உதவும் நூலகரின் சேவைப் புனிதமானது; புகழவும் வேண்டியது.


நூலகத் தந்தை என்று அழைக்கப்படும் சீயாழி ராமாம்ருத ரங்கநாதன் அவர்கள் நம் நாட்டில் நூலகங்களின் நிலைமையை மேன்மையுறச் செய்து அவற்றை சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாக நிலைநாட்டினார். அவற்றை அறிவுக் கோயிலாகவே பாவித்தார். நூலக சேவையைப்பற்றி பல புத்தகங்கள் எழுதினார். அவர் எழுதிய கோலன் பகுப்புமுறை வெளிநாட்டவர்களாலும் போற்றிப் புகழப்படுகிறது. கணிதவியல் அறிஞரான இவரது அடிப்படை அறிவு இப்பகுப்பு முறையை இவர் உருவாக்கப் பெரிதும் துணை நின்றது. இம்முறையின் மூலம் அறிவுலகில் உள்ள அனைத்துப் பாடப் பிரிவுகளும் ஆங்கில அச்சரங்களான A முதல் Z வரை குறியிடப்பட்டு அதன் உட்பிரிவுகள் பலவாறு ஆராயப்பட்டு அவற்றுக்கான சிறப்புக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை கோலன் குறியீட்டால் இணைக்கப்பட்டு ஒவ்வொரு நூலுக்கும் அழைப்பு எண் வழங்கப் படுவதால் இப்பகுப்பு முறை கோலன் பகுப்பு முறை என்று அழைக்கப்படுகிறது. நூல்களை இப்படிப் பாடவாரியாகவும் தகவல் வாரியாகவும் பகுத்து அடுக்கி வைப்பதால் ஒரு துறையைச் சார்ந்த நூல்களும் அது தொடர்பான பிற நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இது பயனாளர்களின் தேடும் நேரத்தை வெகுவாகக் குறைக்கிறது.

இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் நூலகர் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே சென்னைப் பல்கலைக்கழகம் இந்திய நூலகவியலின் தாயகம் என்று போற்றப்படுகிறது. 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்நூலகத்தின் நூற்றாண்டு விழா வரும் ஜனவரியில் இவர் நினைவாகக் கொண்டாட அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் நிர்ணயித்த ”ஐந்து நூலக விதிகள்” காலங்களைக் கடந்து இன்றும் ஒரு காவியமாகவே நிலைத்து நிற்கிறது. நூலகங்களில் இன்றுவரை நிகழும் அத்தனை மாற்றங்களும் அவ்விதிகளுக்குள் அடங்கியே போகின்றன என்பது அதிசயமான உண்மை. நூல்களை அடுக்கிவைக்கவும் நூலகங்களின் நிர்வாகத்தைச் சீர்படுத்தவும் சிறப்புமிகு சேவையாற்றிய இவர் இந்தியத் திருநாட்டில் நூலகத்துறை உருவாகவும் பெரிதும் காரணமாக இருந்தார்.


1948 ல் திருமிகு அவினாசிலிங்கம் செட்டியார் சென்னை மாகாணத்தின் கல்வி அமைச்சராக இருந்தபோது அவர் துணையோடு நூலகச்சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் நூலகவரி நிர்ணயிக்கப்பட்டு நூலகங்களுக்கான நிதி உருவாக்கப்பட்டது. அவர் ஆரம்பித்து வைத்த இந்த இந்திய நூலகப் புரட்சி தற்போது நம் நாட்டில் எந்த அளவில் இருக்கிறது, அதில் இருக்கும் பிரச்சனைகள் யாவை, அவற்றை தீர்க்க வழிகள் என்ன, நூலக நிர்வாகத்தை மேன்மையுறச் செய்யும் உத்திகள் என்னென்ன என்பவற்றைக் காணலாம்.


1948 ல் இயற்றப்பட்ட நூலகச்சட்டத்தின் வாயிலாக பொது நூலகத்துறை எனும் அமைப்பு 1972 ல் பள்ளிக்கல்வித் துறையினின்று பிரித்து உருவாக்கப்பட்டது. 1974 ல் நூலகத்துறையில் மேல்படிப்பு பெற்ற திரு. தில்லைநாயகம் பொது நூலகத்துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் நற்பணியாற்றினார். ஆனால் அதற்குப் பின்னால் மீண்டும் நூலகப்பட்டறிவோ அல்லது உயர்கல்விக் கழகங்களில் நூலகர்களாகப் பணியாற்றிய அனுபவமோ இல்லாதவர்களே தொடர்ந்து பொது நூலகத்துறையின் தலைமைப் பொறுப்புக்கு அமர்த்தப்படுவது நூலகத்துறையின் தொய்வுக்கு ஒரு காரணமாகிறது என நூலக அறிஞர் பலர் கருதுகிறார்கள்.


முனைவர் சீயாழி ராமாம்ருத ரங்கநாதன் அவர்கள் வழிவகுத்துத் தந்த பெருமுயற்சியால் இன்று தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் வட்டார நூலகங்களும், மாவட்டங்களில் மாவட்ட நூலகங்களும், மற்ற இடங்களில் கிளை நூலகங்களாகவும் சுமார் 5000க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் அவற்றின் நிலை இன்னமும் உயர்த்தப்பட வேண்டியே உள்ளது. சென்னை நகரில் மட்டும் உள்ள 134 கிளை நூலகங்களில் கிட்டத்தட்ட 60 இடங்களில் நிரந்தர நூலகர் இல்லை என அறிகிறோம். பலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுகிறது. நாளொன்றுக்கு ரூ.150 என்ற தினக்கூலி அடிப்படையில் தற்காலிக நூலகர்கள் இருக்கிறார்கள். நிறைய பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், உயர்கல்வி நிலையங்களிலும் கூட பல நூலகர் பதவிகள் காலியாகவே உள்ளன. தமிழ்நாட்டில் பல நூலகர்களுக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி உயர்வு கிடைக்காத நிலை இருக்கிறது.


நூலகர் நியமனங்களிலும் தொய்வுநிலை காணப்படுகின்றது. உயர்கல்வி மையங்களான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நூலகராக நியமனம் செய்யப் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெருதல் வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. நம் மாநிலத்தில் அந்நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. முனைவர் பட்ட ஆய்வுக்குப் போதுமான நெறியாளர்கள் தமிழ்நாட்டில் இல்லை. இந்நிலையும் மாற்றப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி மையங்களும் நூலகவியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கச் செய்ய வேண்டும்.


எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் – பதிப்பகத்தார் பதிப்பிக்கிறார்கள். இவ்வாறு எழுதிப் பதிப்பிக்கப்படும் தொழிலே அரசு பொது நூலகத்துறை அவற்றைத் தங்கள் நூலகங்களுக்கு வாங்குவதன் மூலம் தான் வளர்ச்சி காண்கின்றது. இன்றோ 2009 ல் வெளியிடப்பட்டு மாதிரி கொடுக்கப்பட்டு விண்ணப்பிக்கப்பட்ட நூல்களுக்கே இன்னும் ‘வாங்குதல் ஆணை’ பொது நூலகங்களிடமிருந்து வரவில்லை. 2010 ல் பிரசுரிக்கப்பட்ட நூல்களுக்கான மாதிரியும் விண்ணப்பமுமே இன்னமும் கோரப்படவில்லை. இப்படிப் போனால், மூன்றாண்டுகளுக்கு முந்தைய புத்தகங்களே பொது நூலகங்களில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நிலை வந்துவிடும். புதிய புத்தகங்களை அவர்கள் பார்க்கவே முடியாமல் போகும். இது வாசகர்களுக்கு ஒரு பின்னடைவாகும். பொது நூலக ஆணைகளையே பெரிதும் நம்பியுள்ள நூல் பதிப்புத் தொழிலும் தமிழ்நாட்டில் நசிந்து போகும் நிலை ஏற்படக்கூடும்.


நூலகச்சட்டத்தின் படி சொத்து வரியில் 10% நூலகவரியாக வசூலிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 150 கோடியாகும். சென்ற ஆண்டு மட்டும் சென்னை மாநகரில் 35 கோடி நூலகவரியாக வசூலாகியிருப்பதாகக் கணக்கெடுப்பு சொல்கிறது. ஆக நூலகத்துறைக்கு பணம் பற்றாக்குறை என்று சொல்ல முடியாது. அப்படியே இருந்தாலும் அரசு அதை ஈடு செய்ய எப்போதும் தயாராக இருக்கும் என நம்பலாம். வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இணையாக வேகமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நூலகத்துறையும் நூலகர்களும் உள்ளனர். ஏற்கனவே அதிக வேலைச்சுமையுள்ள பள்ளிக் கல்வி அமைச்சகத்திடமிருந்து நூலகத்துறையை விடுவித்து, தனியே ஒரு நூலகத்துறை உருவாக்கப்பட்டு அதற்கென ஒரு அமைச்சரும், செயலரும் நியமிக்கப்பட்டுச் செயல்படுவது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத தாகின்றது.


ஒருநாட்டின் உயர்வு அந்த நாட்டின் கல்வித்தரத்தால் நிர்ணயிக்கப்படும் இந்நாளில், தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த, நிறைய நூல்களைப் படித்து அறிவில் முதிர்ந்த ஒருவர் முதல்வராகியிருக்கும் இச்சூழலில், நூலகங்களின் உயர்வு இன்றியமையாதது எனத் தெளிந்து அதற்கான தொடர் நடவடிக்கைகளை நம் அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை, நூலகர் வாரமான இந்நேரத்தில் நூலகர் மனங்களில் சுடர் விடுகிறது.
கட்டுரையாளர்: முனைவர் தி.க.திருவேங்கடமணி, சென்னைப் பல்கலைக் கழக சேக்கிழார் வளாக நூலகர், சென்னை – 600 113.


--Ksubashini 15:09, 17 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 17 நவம்பர் 2011, 15:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,762 முறைகள் அணுகப்பட்டது.