நந்தன வருடமும் இனிஷியலும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

திவாகர்


எம். ஜி. ராமச்சந்திரன் என்பதை எம்.ஜி.ஆர் என்று அழைப்பது நமக்குப் பிடித்தமான ஒன்று. சாதாரணமாகப் பேசினாலும், அல்லது கட்டுரையில் நல்ல தமிழில் எழுதினாலும் எம்.ஜி. ராமச்சந்திரன் என நீட்டி முழக்கிக் கூப்பிடுவதில்லை. சுருக்கமாக எம். ஜி.ஆர் என்றே அழைக்கிறோம். இந்த இனிஷியல் வைத்துக் கூப்பிடுவது என்பது உலகம் முழுவதும் இப்போது பரவலாகிவிட்டது. இப்படி நமக்குத் தெரிந்த நண்பர்களைக்கூட இனிஷியல் வைத்து மட்டும் கூப்பிடுவது என்பது எப்போது ஆரம்பித்திருக்கும். இந்த இங்கிலீஷ்காரன் வந்ததிலிருந்துதான் நாம் அதிகம் இனிஷியல் போட்டுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோமோ.. அதற்கு முன்னால் அதாவது 200 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக அறிமுகமாகும்போது எப்படி கூப்பிட்டிருப்பார்கள்.. நடராஜன் மகன் சுப்பிரமணியன் என்று நீட்டி முழக்கிக் கூப்பிட்டிருப்பார்களா.. நடராஜன் சுப்பிரமணியன் என்றால் கூட பரவாயில்லை.. சில பெயர்கள் மிகப்பெரிய பெயராக இருந்தால் எப்படி கூப்பிடமுடியும். உதாரணத்துக்கு வீர வேங்கட லஷ்மி சத்யநாராயணன் (என் நண்பர்கள் மூவருக்கு இந்தப் பெயர் இப்போதும் உண்டு) என்றால் எப்படி கூப்பிடுவார்கள்.


தாம் யார் என சுய விவரம் தெரிவிக்கும் விதமாக தன் பெயரைத் தெரிவிக்குமுன், தம் முன்னோர், கோத்திரம், தனக்கு வைக்கப்பட்ட பெயர் என்று எல்லாவற்றையும் தம் பேரில் சேர்த்துக்கொண்டு ‘அபிவாதயே’ மூலம் பெரியவர்களுக்கு நமஸ்கரிக்கும்போது சொல்வதை அந்தணர்கள் வழக்கத்தில் கொண்டிருந்தனர். ஆனால் இவையும் இன்று வழக்கத்திலிருந்து மாறி வருகின்றது.. எது எது நமக்கு எளிதாக இருக்கின்றதோ அதையெல்லாம் நாம் காலா காலமாக கையாண்டு வருகிறோம் என்ற யதார்த்தத்தைதான் இங்கு நாம் உணரவேண்டும். சரி, மறுபடியும் இந்த இனிஷியல் விஷயத்துக்கு வருவோம்.


இந்த பெயர் சுருக்கி கூப்பிடும் வழக்கம் ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்படவில்லை என்பதோடு ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளாகவே இது பழக்கத்தில் உள்ளது என்பது ஆச்சரியமான செய்தியாகத்தானே இருக்கும்!.


அன்னமய்யா எனும் பெரும் பாகவதர், தெலுங்குப்புலவர், திருவேங்கடவனையே பரப்பிரும்மமாக நினைத்து அவர் மீது ஆயிரக்கணக்கான தெலுங்கு கீதங்கள் பாடிய இந்த பரமபக்தரை உங்களில் பலருக்குத் தெரியும் என்றே நினைக்கின்றேன். இவர் மீது திரைப்படம் கூட வந்தது. அன்னமய்யாவின் மகன் பெயர் பெத்த திம்மய்யா அய்யங்கார், இவரும் பாடல்களை இயற்றியவர்தான். பெத்த திம்மய்யா அய்யங்காரின் நூல்கள் செப்புப்பட்டயத்தில் எழுதப்பட்டவையாகும் (அன்னமய்யாவைப் போலவே) அந்த நூல்களை பொறித்தபிறகு தம் பெயரை ‘பெ.தி.அ’ என தன் முதல் எழுத்துக்களை மட்டும் பொறித்து ‘முதன் முதலாக’ அல்லது அதிகாரபூர்வமாக இனிஷியல் வைத்துக் கொண்டு பெயர் சொல்வதை ஆரம்பித்து வைத்தார். இதற்கான செப்புப்பட்டயம் சக ஆண்டு 1454 ’நந்தன’ வருடம் மேஷ மாதத்தில், (ஏப்ரல் 1532 கி.பி) திருவேங்கடத்தானுக்கு அமுது படையலுக்கான நன்கொடை விவரத்தோடு தொடங்குகிறது.. ஆக ’பெ. தி. அ’ என்கிற பெத்த திம்மையா அய்யங்கார்தான் சரித்திரத்தில் இனிஷியல் வைத்து எழுதி முதல் சாதனை படைத்தவராக இருக்கவேண்டும்.
இந்த செப்புப் பட்டயங்கள் தெலுங்கு மொழியில் இன்னமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரிடம் இருக்கின்றன. இந்த பெத்த திம்மய்யா அய்யங்காரரின் குமாரர் சின்ன திம்மையா கூட பெரிய புலவரே.. அன்னமய்யாவில் பேரர் இவர். சின்ன திம்மய்யா;வின் ஒரு தெலுங்கு செப்புப் பட்டயம் இவ்வாறு கூறுகிறது.


”பாட்டனார் தாள்ப்பாக்கம் அன்னமாசாரியாரின் சொற்கள் சரஸ்வதியின் வீணா கானத்தைப் போல இனிமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும். என் தந்தை திம்மய்யாவின் சொற்கள் ஆதிசேடனின் ஆயிரம் நாவிலிருந்து எழும்பும் பேச்சாக இருக்கும்.”


என்பதோடு, தன்னுடைய தெலுங்கு, வடமொழி மற்றும் ஆறு வகையான ப்ராக்ருத மொழிகள் ஞானத்தை விளக்கி ஒரு நூல் செய்ததாகவும், இந்த நூலின் பெயர் ‘அஷ்ட பாஷா தண்டகம்’ எழுதியது ‘சி.தி’ என தன் பெயரான ‘சின்ன திம்மய்யா’ வை சுருக்கி இனிஷியலாகத் தந்திருக்கிறார். இந்த செப்புப் பட்டயம் பொறிக்கப்பட்ட தேதியை சக ஆண்டு 1459, ஹேவிளம்பி வருடம், வளர்பிறை ஐந்தாம் நாள் புதன்கிழமை – (கி.பி. 7-11-1537) அந்தப் பட்டயத்திலேயே பொறித்துள்ளார். சின்ன திம்மய்யாவை சுருக்கி சி. தி என இவர் தந்திருப்பது தன் தகப்பனார் வழியைத் தானும் கடைப்பிடிப்பது போல இருந்தாலும், எளிமையான வழியைத் தேர்ந்தெடுக்க முயல்வதாகத்தான் படுகின்றது.


ஆண்டாள், நம்மாழ்வார், ஞான சம்பந்தர் போன்ற தெய்வத் தோன்றல்கள் தங்கள் பெயர்களை பலச்ருதியில் எழுதும்போது கூட முழுமையான பெயர்களாகத்தான் எழுதிவைத்தார்கள். ராஜ ராஜ சோழன் காலத்திலிருந்து ஏராளமான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. ஆனால் இவற்றில் எங்காவது ரா. ரா. சோ என்றோ கு. சோ (குலோத்துங்க சோழன்) என்றோ வரையப்பட்டதில்லை. இன்னமும் சொல்லப்போனால் அவர்களது மெய்க்கீர்த்திப் பெயர்கள் முழுமையான அளவில் ஏராளமாக இருக்கும். ஆனால் காலம் மாறும் போக்கை 15ஆம் நூற்றாண்டில் ஒரு ஆதாரப்பூர்வ விஷயமாகப் பார்க்கையில் நாம் இந்த இனிஷியல் விஷயத்தில் இங்கிலீஷ்க்காரர்களைப் பார்த்து காப்பி அடிக்கவில்லை என்ற ஆறுதல் கிடைக்கிறது. அதுவும் ஒரு நந்தன வருடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்பதை நினைத்துப் பார்க்கும்போது, புதுமைகள் அரங்கேறும் வருடமாக இந்த நந்தன வருடம் இம்முறையும் திகழட்டும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.


நல்லதுதானே!

--Ksubashini 17:00, 22 ஏப்ரல் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2012, 18:02 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,486 முறைகள் அணுகப்பட்டது.