நற்றிணை - தேய்புரி பழங்கயிறு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முனைவர் கி.சுப்பிரமணியன்பல நாள்கள் ஆகிவிட்டன. அந்த வழியில் அடிக்கடி போய்வந்தவர் தான் புலவர். அந்தக் கோயில், குளம், கோபுரம், தேர் எல்லாம் பழக்கமானவை தாம். தேரடியில் ஒரு மூலையில் சுருட்டிப் படுக்க வைக்கப்பட்டிருந்த தேர்வடமும் பழக்கமானது தான். சிறிய கயிறுகள் மூன்று சேர்த்து திரிக்கப்பட்ட ஒரு கயிறு. அதுபோல ஏழோ ஒன்பதோ கயிறுகள் சேர்ந்த பெருங்கயிறுகள் முறுக்கப்பட்டு, இறுகப் பிணைந்த வடம்.முதன்முதலில் தேர்வடம் செய்யப்பட்டபோது, நார்கள் புதியனவாகவும், மினுமினுப்புடனும் உறுதியாக இருந்தன. அதனால் அவை - ஒன்று சேர்ந்ததால் - தேரையும் இழுக்கும் வலிமை பெற்றது. திருவிழாக் காலத்தில் அதைத் தூக்கி வந்து வெளியே வைத்து விரித்து நீட்டித் தேரின் முன் வளையத்தில் கட்டிப் பொருத்துவதற்கே பல ஆடவர்களின் உதவி தேவையாக இருந்தது.அது ஒரு காலம். விழா முடிந்த பிறகு மீண்டும் அந்தக் கயிற்றைச் சுருட்டி உருட்டி அதனுடைய இடத்தில் மீண்டும் வைத்து விடுவார்கள்.

புலவர் இந்த நினைவுகளுடன், அந்த வழியில் போய்க்கொண்டிருந்தார். கோயில், குளம், தேர், தேரடி எல்லாம் இருந்தன. அந்தக் "கயிறும்" இருந்தது. ஆனால் முன்னர் பார்த்த பழைய பொலிவைக் காணோம். வடத்தின் புரிகள் தேய்ந்து மண்படிந்து கிடந்தன. அதில் சிறுசிறு வெடிப்புகளும் காணப்பட்டன. பழைய உறுதியும் இல்லை; மினுமினுப்பும் இல்லை. புலவர் நெஞ்சுள் ஒரு வேதனை.


ஏன் இப்படி? புரிகள் தேய்ந்த பழங்கயிறாக ஆகிவிட்டதே!
புலவர் மேலும் நடந்தார்.


அந்த இளைஞனைப் பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டன. புலவருக்கு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வீட்டின் - குடும்பத்தின் - நல்ல மகன் அவன். அவர் அடிக்கடி அங்கு போய் வருவது உண்டு. அப்படிப் போகும் போதெல்லாம் இளைஞனின் உடல்கட்டைப் பார்த்துப் பாராட்டுவார். இளமை கொலுவிருக்கும் பொலிவு; திண்மை; வலிமை; அழகு எல்லாமாக ஒன்று திரண்டு "ஆடவர் கண்டு அவாவும்" தோளுடையவனாக அவன் இருந்தான்.

அந்த நினைவில் புலவர் பயணம் தொடர்ந்தது. ஒரு காட்டைக் கடந்து அவர் போய்க்கொண்டிருந்தார். ஒரு பாழடைந்த மண்டபத்தின் முன் வாயிலில் தூணைச் சார்ந்து ஓர் உருவம் தென்பட்டது. அருகில் சென்று பார்த்தார் புலவர். அவன் தான். யாரை இவர் தேடிப் போனாரோ, அவன் தான்.


"உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி வாடி இருக்கிறாய்? உன்னுடைய உடம்பு இப்படித் தேய்ந்து மெலிந்து போய் விட்டதே ஏன்?"

அடுக்கடுக்காகப் புலவர் கேட்டார்.


"புலவர் பெருமானே! நீங்கள் என்னைப் பலமுறை என் வீட்டில் கண்டவர். திருமணம் ஆகும் வரை நன்றாகவே இருந்தேன்; கவலையற்றுத் திரியும் கன்று போலக் காலம் கழித்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இல்லறம் தொடங்கினேன். அதிலும் சிக்கல் ஏதும் இல்லை. அழகும் பண்பும் கொண்ட மனைவியே வாய்த்தாள். அது நான் செய்த தவம். அவளுடைய கூந்தல் முதுகுப் புறத்தில் இறங்கி இடுப்புவரை தவழ்ந்து கருமையாகப் பொலியும். மலரின் மெல்லிய இதழ்களைப் போன்ற நிறத்தையும் குளிர்ச்சியையும் ஒளியையும் பெற்ற அவளது கண்கள் எப்போதும் மைதீட்டப்பட்டு மணியாய் மிளிரும். எனக்காகவே வாழ்பவள். அவளைப் பிரிந்து பொருள்தேடி அடிக்கடி பிரிய வேண்டி வருகிறது. அப்போதெல்லாம் என் நெஞ்சம், "போதும் பொருள் ஈட்டியது. உன்னுடைய பிரிவை எண்ணி எண்ணித் தலைவி வருந்துவாளே! அவள் வருத்தத்தைத் தீர்க்க வேண்டாமா? வா வீட்டுக்குப் போகலாம்" என்று வற்புறுத்துகிறது. நெஞ்சம் சொல்வது சரிதான் என்று வீட்டுக்கே திரும்பலாம் என முடிவு செய்தபோது, உடனே என் உள்ளிருந்து இன்னொரு குரல் பேசியது. அது அறிவு.

"நம்பீ! என்ன முடிவு எடுக்கிறாய்? சற்று எண்ணிப்பார். அவசரப்படாதே.


ஒரு செயலைச் செய்துவிட வேண்டும் என எண்ணி முன் வந்தாயிற்று. அதனால் வருவது இன்பம் தானே?


இடையே துன்பம் வரத்தான் செய்யும். பிரிவுத் துன்பத்தைத் தாங்கும் ஆற்றல் அந்தத் தலைவிக்கு இருக்கிறது. இவனுக்கு இல்லை போலும் என்று ஊரார் தூற்றுவார்கள். கொஞ்சம் எண்ணிப்பார். காலம் தாழ்த்தாதே விரைந்து போ" இப்படிச் சொல்லிற்று அறிவு.

புலவரே! என் நிலை இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நீங்கள் முன்பு பார்த்த என்னுடைய வலிய உடம்பு இப்படித் தளர்ந்து போகக் காரணம் இதுதான். நீண்ட தந்தங்களை உடைய பெரிய, வலிமையான யானைகள். அவை ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு எதிர் எதிர் திசையில் நின்று ஒரு கயிற்றை இழுக்கின்றன. அந்தக் கயிறு திண்மையும், பொலிவும் உடைய புதிய கயிறு அன்று. புரிகள் எல்லாம் தேய்ந்து போன பழங்கயிறு. என் உடம்பின் இப்போதைய நிலையும் அதுபோன்றது தான். வருத்தத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் உடம்பு அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன் என்றான்.

தலைவனின் நீண்ட விளக்கத்தைப் புலவர் நற்றிணையில் 284வது பாட்டில் குறிப்பாக இதைப் பதிவு செய்துவிட்டார்.

பாலைத் திணையில் அமைந்த அற்புதமான பாடல். ஆனால் அதைப் பாடிய புலவர் யார்?அவர் பெயர் என்ன என்பது தெரியவில்லை.நூல் தொகுத்தவர்கள் அவர் பெயரைத் "தேய்புரி பழங்கயிற்றினார்" எனக் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தினர்.ஒரு கயிறு ஏற்படுத்திய அரிய எண்ண ஓட்டங்களை நற்றிணைப் பாடல் வரிகளிலேயே படித்து மகிழ்வோம்.


அப்பாடல் வருமாறு:-

"புறம் தாழ்பு இருண்ட கூந்தல்; போதின்
நிறம் பெறும் ஈரிதழ்ப் பொலிந்த உண்கண்;
உள்ளம் பிணிக்கொண்டோள் வயின், நெஞ்சம்
"செல்லல் தீர்கம்; செல்வாம்" என்னும்,
"செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத் தரும்" என
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே
"சிறிது நனி விரையில்" என்னும்; ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவதுகொல் என வருந்திய உடம்பே?" (நற்றிணை: 284)


நன்றி:- தினமணி

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2010, 17:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,891 முறைகள் அணுகப்பட்டது.