நவகிரஹத்தலங்கள் --கீழப்பெரும்பள்ளம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
நவக்கிரகத் திருத்தலங்கள்=== கீழப்பெரும்பள்ளம்( கேது பகவானுக்குரிய திருத்தலம்)

​பரிகாரத் திருத்தலங்கள்:கீழப்பெரும்பள்ளம்(கேது பகவான்)

இறைவன் திருப்பெயர்: நாகநாதர்.

இறைவி திருப்பெயர்: சௌந்தரிய நாயகி.

ஸ்தல விருக்ஷம்: மூங்கில்.

தீர்த்தம்: நாக தீர்த்தம்.

வழிபட்டோர்: வாசுகி, கேது பகவான்.

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோயில், நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய பரிகாரத் திருத்தலமாகத் திகழ்கிறது.

நாகப்பட்டினத்திற்கருகில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது..நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்துகள் மூலம் செல்லலாம். கும்பகோணத்தில் இருந்தும் செல்லலாம்.

தல புராணம்:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, வாசுகி என்னும் பெயருடைய நாகத்தை, கயிறாகப் பயன்படுத்தினர்..தொடர்ந்து கடைந்ததால், வாசுகி அயர்வடைந்து, விஷத்தை உமிழ்ந்தது.. அதனை உலக நன்மைக்காக சிவபிரான் அருந்தினார்.. தன் விஷத்தை எம்பிரான் உண்ணும் நிலை ஏற்பட்டமை கண்டு வருந்திய வாசுகி,  பின்னொரு நாள், சிவபிரான் அருள் வேண்டி தவமிருந்தது.. வாசுகி தவமிருந்த இடமே கீழப்பெரும்பள்ளம்.. 

வாசுகியின் தவத்தை மெச்சிய சிவபிரான், அதற்குக் காட்சி கொடுத்ததோடு, அதற்கு வரங்களும் அருளினார்.. வாசுகியின் விருப்பத்திற்கிணங்க, 'நாக நாதர்' என்னும் திருநாமத்தோடு, இத்திருத்தலத்தில் அமர்ந்தருளுகிறார். 

கேது பகவானும் இத்திருத்தல இறைவனை வழிபட்டு, அருள் பெற்றார்.. எம்பிரான் ஆணைப்படி, இத்திருத்தலத்தில் அமர்ந்து, நாகதோஷங்களை நீக்கியருள்கிறார்.

இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக, ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில், வாசுகி உற்சவம் நடக்கிறது.. விழாவின் மூன்றாம் நாள், கேது பகவானுக்கு இறைவன் திருக்காட்சி தந்த நிகழ்வு நடைபெறுகிறது.. அன்றைக்கும், ராகு, கேது பெயர்ச்சி தினத்தன்றும் கேது பகவானின் திருவீதி உலா நிகழ்வு நடைபெறுகிறது.

திருத்தலத்தின் சிறப்பு:

இத்திருக்கோயிலில் அருள் புரியும் விநாயகர், 'அனுக்கிரக விநாயகர்' என்று அழைக்கப்படுகின்றார்.. முழுமுதற் கடவுளான‌  விநாயகரை வழிபடுவோருக்கு, ஞானகாரகரான‌ கேது பகவான் நன்மைகள் செய்வார் என்பதால் இந்தத் திருத்தல விநாயகர் இவ்வாறு அழைக்கப்படுகின்றார்.

விநாயகரை வழிபட்ட பின், நாகநாத ஸ்வாமியையும் அம்பிகையையும் வழிபட வேண்டும்.. இங்கு நவக்கிரக சன்னிதி தனியாகக் கிடையாது.. கேது பகவான், தனி சன்னிதியில், எம்பிரானை நோக்கிக் கூப்பிய திருக்கரங்களுடன்  கோயில் கொண்டருளுகின்றார்.. அவர் எழுந்தருளியிருக்கும் பீடம் 'சிம்ம பீடம்' என்று அழைக்கப்படுகின்றது. கேது பகவானின் திருத்தலம் என்பதால், இங்கு கேது பகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருளுகின்றார்.

கேது பகவானின் சன்னிதிக்கருகில், இரண்டு சூரிய பகவான் திருவுருவச் சிலைகளும், சனீஸ்வர பகவான் சன்னிதியும் இருக்கின்றன. உத்தராயண புண்யகாலத்தில், ஒரு சூரியனுக்கும், தக்ஷிணாயனத்தில் மற்றொரு சூரியனுக்கும் வழிபாடுகள் செய்வதாகச் சொல்கிறார்கள். இந்தத் திருத்தலத்தில், காமிக ஆகமப் பிராகரம், பூஜைகள் நடைபெறுகின்றன.

கேது பகவான்:

கேது பகவான், சாயா(நிழல்) கிரகங்களில் ஒருவர்.. ஞான காரகர், மோக்ஷகாரகர் என்றும் போற்றித் துதிக்கப்படுகின்றார்.. வேத வேதாந்தங்களின் நுட்பங்களை அறியும் திறன், அதீதமான தவம், வேள்விகள் இவற்றில் ஈடுபடுதல், பிரச்னைகளிலிருந்து விடுபடும் திறன் முதலியவற்றை எல்லாம் அருளுபவர் கேது பகவான். சிவபக்தியில் பிரியமுடையவர்..  

மஹா கேது, சர்வ கேது என்ற திருநாமங்களை உடையவர்.. பாப கிரகங்களுள் ஒருவர் என்று அறியப்பட்டாலும், பாவங்களைப் போக்கி, பிறவாப் பெருநிலை அருளும் வல்லமை மிக்கவர்.

இவருக்கு உரிய ரத்தினம் வைடூரியம், வஸ்திரம் பலநிற வஸ்திரம், உகந்த தானியம் கொள்ளு(நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு கேது பகவான் காரகத்துவம் வகிக்கிறார்.. உணவில் கொள்ளு சேர்த்து கொள்வது, நரம்பு சம்பந்தமான கோளாறுகள் நீங்க வகை செய்கிறது.)..மலர் செவ்வல்லி..  !.. 

அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களின் ஆதிபத்தியம் உள்ளவர்...தமது தசாபுத்தி காலங்களில், ஜாதகத்தில் தாம் அமர்ந்திருக்கும் நிலைக்கேற்ப பலன்களைத் தருபவர்.. தலை சிறந்த ஞானியரின் ஜாதங்களில் கேது பகவான், பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பலம் பெற்று அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர், கேது பகவானைத் துதிக்கும் தமது நவக்கிரக கீர்த்தனையில், கேது பகவானின் சிறப்புக்கள் அனைத்தையும் போற்றித் துதிக்கிறார்.

பல்லவி
மஹாஸூரம் கேதும் அஹம் பஜாமி சாயக்ரஹவரம் (மஹா)

அனு பல்லவி
மஹா விசித்ர மகுடதரம் மங்கள வஸ்த்ராதி தரம்
நரபீடஸ்திகம் ஸூகம் நவக்ரஹயுதம் ஸகம் ( மஹா)

சரணம்
கேதும் க்ருண்வந் மந்த்ரிணம் க்ரோதநிதி ஜைமிநம் 
குளுத்தாதி பக்ஷணம் கோணத்வஜ பதாகிநம்
குருகுஹ சாமர பரணம் குணதோஷ ஜிதாபரணம்
க்ரஹணாதி கார்ய காரணம் க்ரஹ அபஸவ்ய ஸஞ்சாரிணம்

'மஹாஸூரம் கேதும் அஹம் பஜாமி..' என்று துவங்கும் இந்தக் கீர்த்தனையின் பொருள் சுருக்கமாக...

"அசுரர்களில் உயர்ந்தவரே!, சாயா கிரகங்களுள் சிறந்தவரே!, மிக விசித்திரமான மகுடம் தரித்தவரே!, மங்களமான வஸ்திரம்(பலநிறம்)அணிந்தவரே!.. நர(மனித) பீடத்தில்  வீற்றிருப்பவரே!..'கேதும் க்ருண்வந்' என்று துவங்கும் மந்திரத்தால் பூஜிக்கப்படுபவரே!..அளவுக்கதிகமான கோபம் உடையவரே(க்ரோத நிதி) ஜைமினி கோத்திரத்தில் தோன்றியவரே!...கொள்ளு தானியத்தால் செய்யப்பட்ட நிவேதனங்களை விரும்பி ஏற்பவரே!..முக்கோண வடிவக் கொடியை உடையவரே... குருகுகனுக்கு சாமரம் வீசுபவரே!...குணம், குற்றங்களை வென்ற ஞானியருக்கு ஆபரணம் போன்றவரே!...கிரஹணங்களுக்கு காரிய காரணம் ஆனவரே!...அப்பிரதட்சணமான சஞ்சாரம் உடையவரே.. உம்மை வணங்குகின்றேன்!..


கேது பகவானின் தசாபுத்தி நடப்பவர்கள், கீழப்பெரும்பள்ளம், கேது பகவானின் சன்னிதியில், பால் அபிஷேகம் செய்து, பல நிறங்கள் சேர்ந்த வஸ்திரம் சாற்றி,  செவ்வல்லி மலர்கள் சமர்ப்பித்து, ஏழு நெய் தீபங்கள் ஏற்றி  வழிபட நலமுண்டாகும். கொள்ளு சாதம் நிவேதனம் செய்வது விசேஷம்... நிவேதனம் செய்த பிரசாதத்தை அங்கேயே  விநியோகித்து விட வேண்டும்.

ஜாதகத்தில், கேது பகவான் அமர்ந்திருக்கும் ஸ்தான பலம் சரியாக அமையப் பெறாதவர்கள், இத்திருக்கோயிலில், ராகு கால/ எமகண்ட நேரத்தில் அபிஷேகங்கள் செய்யலாம்.. திருக்கோயிலில் தொகை செலுத்த, செய்து தருவார்கள்..16 வித அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.. சனி, திங்கள், மற்றும் ஜென்ம நட்சத்திர தினங்களில், ஹோமம் செய்து வழிபடலாம்.. ஹோமத்திற்கும் திருக்கோயிலில் முன்கூட்டியே தொகை செலுத்தி ஏற்பாடு செய்து கொண்டால், செய்து தருகிறார்கள்..

கேது தசை நடப்பவர்கள், வால்மீகி இராமாயணம், அயோத்தியா காண்டம்,50 வது சர்கம் பாராயணம் செய்வதும், சிவ பஞ்சாக்ஷரி ஸ்தோத்திரம், ஸ்ரீகணேச பஞ்சரத்னம் முதலியவற்றைப் பாராயணம் செய்வதும் நற்பலன்களைத் தரும்.

நவக்கிரகங்கள், இறைவனுக்குக் கட்டுப்பட்டவை.. நவக்கிரகத் திருத்தலங்களைத் தரிசித்து வழிபட, இறையருளால், நம் வாழ்வின் அனைத்து இன்னல்களும் நீங்கி, பேரானந்த நிலையடையலாம்!.

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.


எழுதியவர் பார்வதி ராமச்சந்திரன்

 

--Geetha Sambasivam (பேச்சு) 09:05, 24 ஆகஸ்ட் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 ஆகஸ்ட் 2014, 09:06 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,455 முறைகள் அணுகப்பட்டது.