நவகிரஹத்தலங்கள் --சூரியனார் கோவில்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சூரியனார் கோயில்

 இறைவன் திருப்பெயர்:சிவசூர்யன்

 இறைவிய‌ர்:: உஷாதேவி, பிரத்யுஷா தேவி

ஸ்தல விருக்ஷ‌ம்: வெள்ளெருக்கு

தீர்த்தம்: சூரிய புஷ்கரணி

நவக்கிரகங்களில் நடுநாயகமாக விளங்கும் சூரிய பகவானுக்குரிய திருத்தலமாக அறியப்படுவது ஆடுதுறைக்கருகில் அமைந்துள்ள 'சூரியனார் கோயில்'.. இங்கு சூரியபகவானே 'சிவசூரியன்' என்ற திருப்பெயரில் கோயில் கொண்டருளுகிறார். அவரே  மூலவர்..
முற்காலத்தில், திருமங்கலக்குடி திருக்கோயிலும், இந்தத் திருக்கோயிலும் ஒரே பகுதியில் அமைந்திருந்ததாகவும், பின்னர் காடுகள் திருத்தப்படும் போது, ஸ்ரீபிராணநாதேஸ்வரர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் திருமங்கலக்குடி என்றும், சூரியபகவான் உள்ளிட்ட நவக்கிரகங்கள் எழுந்தருளியிருக்கும் இந்தத் திருக்கோயில், சூரியனார் கோயில் என்றும் பிரிக்கப்பட்டதாகக் கூறுகின்றார்கள். அதனால் இன்றும் இந்தத் திருத்தலத்தில் வந்து தரிசனம் செய்பவர்கள், திருமங்கலக்குடி பிராணநாத ஸ்வாமியையும் தரிசித்தாலே முழுப்பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

தல புராணம்:

முற்காலத்தில், காலவ முனிவரின் தொழுநோய் நீங்க நவக்கிரகங்கள் அருளியதாகவும், அதனால் பிரம்ம தேவர் சினம் கொண்டு, படைப்பின் விதியை மீறியதற்காக, நவக்கிரகங்களுக்கு தொழு நோய் உண்டாகுமாறு சபித்ததாகவும் புராணம்..அந்த சாபத்திலிருந்து விடுபடுவதற்காக, நவக்கிரகங்கள் தவம் புரிந்த திருத்தலம் இது..


அக்காலத்தில், வெள்ளெருக்கு வனமாக இருந்த இத்திருத்தலத்தில், முதலில் 'கோள்தீர்த்த விநாயகரை' பிரதிஷ்ட செய்து வழிபட்ட நவக்கிரகங்கள், பின்னர், ஒன்பது தீர்த்தங்களை உண்டாக்கி, அவற்றில் நீராடி, தவம் செய்தனர்.. அவற்றுள் சூரிய பகவான் உருவாக்கிய தீர்த்தமே 'சூரிய புஷ்கரணி'... அதுவே இந்தத் திருத்தலத்துக்குரிய தீர்த்தமாக விளங்குகிறது.

இங்கு வந்து வழிபட்ட பின், நவக்கிரகங்களின் தொழுநோய் நீங்கியது.. வெள்ளிருக்கு, மருத்துவ குணங்கள் கொண்டது.. மூலிகை மருத்துவத்தில், வெள்ளெருக்கு இலையில், தயிர் சாதம் சாப்பிடுவதால் தொழு நோய் குணமாகுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளெருக்கு வனமாக இருந்த இந்தத் தலத்தை, தவம் செய்ய ஏற்ற இடமாக,  நவக்கிரகங்கள் தேர்ந்தெடுத்ததையும், இந்தத் திருத்தலத்தின் ஸ்தல விருக்ஷமாக, வெள்ளெருக்கு அமைந்திருப்பதையும் இங்கு நாம் ஒப்பு நோக்கலாம்.
இந்தத் திருத்தலத்தில்,  சூரிய பகவானே மூலவராக விளங்குகிறார். அவரைச் சுற்றிலும், மற்ற நவக்கிரகங்கள், தனித்தனி சிறு கோயில்களில் அருளுகின்றார்கள்.. மற்ற எல்லாத் திருத்தலங்களிலும், நவக்கிரகங்கள் பரிவாரங்களாக கோயில் கொண்டிருக்க, இந்தத் திருத்தலத்தில் மட்டும் இவ்வாறு விளங்குவது ஒரு தனிச் சிறப்பாகும். நவக்கிரகங்கள், தத்தம் ஆயுதங்கள், வாகனங்கள் இல்லாமல், அனுக்கிரக மூர்த்திகளாக அருளுகிறார்கள்.

வழிபடும் முறை:

ஆலயத்தின் அருகில் உள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி, அல்லது தீர்த்தத்தை, தலையில் தெளித்துக் கொண்டு, கோயிலுக்குள் செல்ல வேண்டும்..கோள் தீர்த்த விநாயகரை வணங்கி வழிபட்டு, நவக்கிரக உற்சவ மூர்த்திகளை தரிசிக்க வேண்டும்.. 
அதன் பின் ஸ்தபன மண்டபத்தில் கோயில் கொண்டருளும், ஸ்ரீவிசாலாக்ஷி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் சன்னிதிகளை வணங்கிய பின், கருவறையில், சிவசூரிய பகவானைத் தரிசித்து வழிபட வேண்டும்.. சூரிய பகவான், தம் மனைவியரான உஷா, பிரத்யுஷா தேவியருடன் அருளுகின்றார்.

சூரியபகவானை வழிபட்ட பின், மகா மண்டபத்தில், சூரியபகவானின் உக்கிரத்தைத் தணிக்கும் முகமாக, சூரியனை நோக்கியபடி, கிழக்கு நோக்கிக் கோயில் கொண்டருளும் குரு பகவானைத் தரிசிக்க வேண்டும்..
கருவறைக்கு வெளியே, தென்மேற்கில் சனீஸ்வர பகவானும்,தெற்கில் புதனும்,  வடகிழக்கில் கேதுவும், வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும்,தென் கிழக்கில் அங்காரகனும் (செவ்வாய்), கிழக்கில் சந்திரனும் கோயில் கொண்டருளுகிறார்கள்.. அதாவது, சூரியபகவானுக்கு எட்டுத் திக்கிலும், மற்ற எட்டு நவக்கிரகங்களும் கோயில் கொண்டிருக்கிறார்கள்.. அந்த சன்னிதிகளை எல்லாம் தரிசிக்க வேண்டும்..

பிரகாரத்தை ஒன்பது முறை வலம் வந்து வணங்கி வழிபடுவது சிறப்பு.. கொடி மரத்தின் அருகில் வீழ்ந்து வணங்கி, பின், சற்று நேரம் சிவத்தியானம் செய்து, வழிபாட்டை நிறைவு செய்தல் வேண்டும்.

சூரிய பகவான்:

நவக்கிரகங்களுள் முதன்மையானவர் சூரிய பகவான். கார்த்திகை, உத்திரம், உத்திராட நக்ஷத்திரங்களின் அதிபதி.. சிம்ம ராசியின் அதிபதி..ஆத்மகாரகர். பித்ருகாரகர்  என்றும் அறியப்படுகின்றார்.

இவருக்கு உகந்த நிறம் சிவப்பு.. ரத்தினம்‍‍.. மாணிக்கம், தானியம்.. கோதுமை, மலர்..வெண்தாமரை, எருக்கு.

ஜாதகத்தில் சூரிய பகவானின் ஸ்தான பலம் சரியாக அமையப் பெறாதவர்கள், சூரியனார் கோயில் வந்து, முறையாக வழிபட்டு பலன் பெறலாம்.. சூரிய பகவானுக்கும், நவக்கிரகங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, வஸ்திரங்கள் சாற்றி பூஜித்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, பிரசாதத்தை விநியோகிக்க நலமுண்டாகும்.

பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகள் வரை(சுமார் மூன்று மாதங்கள்), இந்தத் திருத்தலத்தில் ஸ்தல வாசம் செய்வது விசேஷமான பரிகாரம். 

சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுவது விசேஷம்.. ஆகவே, ஒற்றைப்படை எண்ணிக்கையில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

தைப்பொங்கல் தினத்திலும், ரத சப்தமி தினத்திலும் விசேஷ வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ரத சப்தமி திருவிழாவே 10 நாட்கள் நடைபெறுகிறது. இதுவே இங்கு பிரம்மோற்சவம்.

 ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிறன்று, விசேஷ வழிபாடுகள் உண்டு.. ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 5.30  மணி முதல், பிற்பகல், 1.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல், இரவு 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்...மற்ற தினங்களில் காலை 7.30 மணி முதல், 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்..

இத்திருக்கோயிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.


எழுதியவர் திருமதி பார்வதி ராமச்சந்திரன்
<div
</div>
--Geetha Sambasivam (பேச்சு) 11:54, 4 ஜூன் 2014 (GMT)


பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜூன் 2014, 11:56 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,566 முறைகள் அணுகப்பட்டது.