நவகிரஹத்தலங்கள் --திங்களூர்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
 திங்களூர்(சந்திரபகவானுக்குரிய திருத்தலம்)

இறைவன் திருப்பெயர்: கைலாசநாதர். 
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி.
வழிபட்டோர்: சந்திரன்.
தல மரம்:  வில்வ மரம்(வாழை என்றும் கூறுகிறார்கள்)
தீர்த்தம்: சந்திர தீர்த்தம்.

வைப்புத்தலப் பாடல்கள்: அப்பர் –
தேரூரார் மாவூரார் திங்க ளூரார் 
திகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற் 
கண்ணார்ந்த மாடங் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலா மொப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே.

சுந்தரர் ‍  
திங்களூர் திருவா திரையான் பட்டினமூர்
நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்
தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல
எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.

நவக்கிரகங்களில் சந்திரனுக்குரிய திருத்தலமாக அறியப்படுவது.. திங்களூர்.. 'திங்கள்' என்றால் சந்திரன்.. இவ்வூரின் பெயரிலிருந்தே இது, சந்திர பகவானுக்குரிய பரிகாரத் தலம் என்பதை அறியலாம். சந்திரன் இத்திருத்தலத்து இறைவனை வணங்கி, அருள் பெற்றதாலேயே, இத்திருத்தலம் 'திங்களூர்' எனப் பெயர் பெற்றது.

திருக்கோயில் அமைப்பு:

இத்திருக்கோயில், 'இராஜசிம்ம பல்லவன்' என்னும் மன்னனால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சந்திர கிரணங்கள், இத்திருத்தலத்து இறைவன் மேல் விழுமாறு கட்டப்பட்டிருக்கிறது. அதிலும் பங்குனி உத்திரம், பௌர்ணமி, அதற்கு முன் தினம், மறு தினம் ஆகிய நாட்களில் காலையில் சூரிய கிரணங்களும், மாலையில் சந்திர கிரணங்களும் அருள்மிகு கைலாசநாதர் மேல் படரும் விதமாக திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.  
திருத்தலச் சிறப்பு:

'திங்களூர்' என்றாலே நினைவுக்கு வருபவர், நாயன்மார்களில் ஒருவரான, 'அப்பூதி அடிகள்'. திருநாவுக்கரசர் மீது பேரன்பு பூண்ட இவர், அவரது திருப்பெயராலேயே திருப்பணிகள் பல செய்து வந்தார். தமது இரு மகன்களும் அவரது பெயரையே 'மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு' என்று இட்டார். ஒரு முறை நாவுக்கரசர் பெருமான், திங்களூர் வந்த போது, அவரை வணங்கி, உணவருந்த அழைத்தார் அப்பூதியார்.. சோதனை போல், அன்றைய தினம், வாழை இலை பறிக்கச் சென்ற அவரது மகனை அரவம் தீண்டியது...அவன் அக்கணமே மாண்டான்.. நாவுக்கரசருக்கு அமுது படைப்பது தடைப்படுமோ என்று எண்ணிய அப்பூதியார், தமது மகனது உடலை வாழை இலை கொண்டு மறைத்து வைத்தார். இதை அறிந்த திருநாவுக்கரசர், அப்பூதியார் மகனது உடலை, திருக்கோயிலுக்குக் கொண்டு வந்து, 'ஒன்று கொலாம்' எனத் தொடங்கும் ‘விடம் தீர்த்த பதிகம்’ பாடி, அவனை உயிர்ப்பித்தார்.. 

அதனால்,இத்திருத்தலத்தில் யாரும் விஷமேறி மரிப்பதில்லை என்கிறார்கள். அப்பூதி அடிகள், அவரது மனைவியார், இரு மகன்கள் ஆகியோரது சிலைகள் திருக்கோயிலினுள் இருக்கின்றன.

வழிபடும் முறை:

முதலில், சந்திர பகவான் உருவாக்கிய சந்திர புஷ்கரணியில் நீராட வேண்டும் அல்லது தலையில் தீர்த்தத்தைத் தெளித்துக் கொள்ள வேண்டும்..தென்புற வாயில் வழியாக திருக்கோயில் உள்ளே சென்று, முதலில் விநாயகரை வழிபட்ட பின், கைலாசநாத ஸ்வாமியையும், பெரிய நாயகி அம்மனையும் வழிபட வேண்டும். பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தியை வழிபட்ட பின் கீழ்ப்புறமாக, மேற்கு நோக்கி அருளும் சந்திர பகவானின் தனி சன்னிதியை வணங்க வேண்டும்.
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை ஆகிய தினங்களில் இங்கு விழாக்கள் நடைபெறுகின்றன.
இத்திருத்தலத்தில், குழந்தைக்கு அன்னப்பிராசனம்(முதன் முதலில் அன்னம் ஊட்டுதல்) செய்வது மிக விசேஷமாகக் கருதப்படுகின்றது.. குழந்தைக்கு, உகந்த நக்ஷத்திர நாட்களில், சந்திர ஹோரையில், சந்திரனையும் பசுவையும் காட்டி, வெள்ளிக் கிண்ணத்தில் அன்னம் ஊட்டுவது வழக்கம். இவ்வாறு செய்வதால், குழந்தையை நோய்கள் அண்டாது என்பது நம்பிக்கை..

சந்திர பகவான்

சந்திர பகவானே மனோகாரகன், மாத்ருகாரகன் என்றெல்லாம் போற்றப்படுகின்றார். ஒரு ஜாதகரது ராசி, அவரது ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடமே ஆகும்.. சந்திர பகவான் பலம் பெற்று அமர்ந்திருக்கும் ஜாதகர், அசாத்தியமான மனோதிடம், கலைகளில் ஆர்வம், அழகுணர்ச்சி, சாந்தமான சுபாவம் முதலியவை பெற்றுத் திகழ்வார்...

சந்திர பகவான், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நக்ஷத்திரங்களின் அதிபதி.. கடக ராசிக்கு அதிபதி.. ரிஷபத்தில் உச்சம் பெறுவார்.. உகந்த ரத்தினம்.. முத்து, நிறம்.. வெண்மை, தானியம்..நெல், உலோகம்..வெள்ளி..

ஜாதகத்தில் சந்திரனின் ஸ்தான பலம் சரியாக அமையப் பெறாதவர்கள், திங்களூர் வந்து, பிறைமதி சூடிய கைலாசநாத ஸ்வாமியையும், பெரிய நாயகி அம்மனையும் வணங்கி வழிபட்டால் நலமுண்டாகும். இயன்றவர்கள், அபிஷேக ஆராதனைகள் செய்து, சந்திர பகவானுக்கு வெண்பட்டு வஸ்திரம் சாற்றி, வெண் பொங்கல் நிவேதனம் செய்து விநியோகிக்கலாம்..

திங்கட்கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் தவறாது சிவாலய வழிபாடு, தேவி வழிபாடு செய்து வர, சந்திர பகவானின் அருளால் அனைத்து நலன்களும் பெறலாம்.

திருக்கோயில் அமைவிடம்:

தஞ்சையிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து திங்களூர் செல்லலாம் அல்லது கும்ப கோணத்தில் இருந்து சுவாமி மலை, கபிஸ்தலம், கணபதி அக்ரஹார‌ம் வழியாகச் செல்லலாம். தஞ்சாவூரில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவையாறுக்கு அருகில் உள்ள திருப்பழனம் சென்று அங்கிருந்தும் செல்லலாம்.

எழுதியவர் : திருமதி பார்வதி ராமச்சந்திரன்

--Geetha Sambasivam (பேச்சு) 12:08, 4 ஜூலை 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜூலை 2014, 12:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,313 முறைகள் அணுகப்பட்டது.